கிருஷ்ணர் ஏன் கீதையை அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தார்

அர்ஜுனனுக்கு ஏற்பட்ட எண்ணற்ற சந்தேகங்களுக்கு பகவான் கண்ணன் கூறிய விளக்கங்கள் கீதை என்ற புனித நூலாக மனித சமுதாயத்திற்குக் கிடைத்திருக்கிறது. கிருஷ்ணர் அந்த கீதையை உபதேசித்தது பற்றிய ஒரு சந்தேகத்தை அர்ஜுனன் கிருஷ்ணரிடம் எழுப்பினான். மனிதகுலம் முழுவதற்குமான மாபெரும் தத்துவச் சுரங்கமாக கீதையை சொல்ல ஏன் என்னை தேர்ந்தெடுத்தாய். பிதாமகர் பீஷ்மரிடம் சொல்லி இருக்கலாம். தத்துவ உபதேசங்களுக்குத் தகுதி வாய்ந்தவர் அவர். அண்ணன் யுதிஷ்டிரர் இருக்கிறார். ஐவரில் மூத்தவர் தர்ம நீதிகளை உணர்ந்தவர். அண்ணன் பீமன் மிகச் சிறந்த பக்திமான் பூஜா நியமங்களை ஒழுங்காகச் செய்து வருபவர். இவர்களை விட்டு என்னை புனித உபதேசங்களைக் கேட்கத் தகுதி உள்ளவனாக தேர்ந்தேடுத்தது ஏன் என்று அர்ஜுனன் கிருஷ்ணரிடம் கேட்டன்.

அர்ஜுனா நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால் நான் உனக்கு கீதையைச் சொல்லவில்லை. பீஷ்மர் அறங்கள் சாஸ்திரங்கள் அனைத்தும் உணர்ந்தவர். சாஸ்திரங்கள் உணர்வதால் மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது கடைப்பிடித்தால் தான் சிறப்பு. கௌரவர்கள் அதர்மம் புரிகிறார்கள் என்று தெரிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார். அதேசமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும் போது தர்மம் வெல்ல ஆசிர்வதிப்பதாகவும் கூறுகிறார். இது இரட்டை வேடம். எண்ணம் சொல் செயல் இவை ஒன்றாக எவனிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன். பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை. யுதிஷ்டிரர் கீதை கேட்கத் தகுதியானவர் என்பது உன் எண்ணம். அவர் நல்லவர் தான். ஆனால் முன்யோசனை இல்லாதவர். தவறு செய்துவிட்டுப் பிறகு வருந்திக்கொண்டிருப்பது அவர் இயல்பு. யுதிஷ்டிரர் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை. பீமன் அளவற்ற பலசாலி. பக்திமானும் கூட ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை வீண் கோபத்தில் அவன் விளைவித்த விபரீதங்கள் அதிகம்.

அர்ஜுனா நீ இவர்களைப் போன்றவனல்ல மகாவீரன். அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தை பல கற்றவன் என்ற போதும்கூட நீ முன் யோசனை உள்ளவனாய் இருக்கிறாய். அதுதான் உன் தனிச்சிறப்பு. உன்னைவிட வயதான அறிவிலும் பெரியவர்களான பலரையும் மதித்து அவர்களுக்காக நீ என்னிடம் வாதிடுகிறாய். போர்க்களத்திலே நின்றபோதும் உற்றார் உறவினர் மதிப்பிற்குரிய பெரியோர்களையெல்லாம் எப்படிக் கொல்வது தேவைதானா இந்த யுத்தமும் இழப்பும் என்றெல்லாம் நீ யோசித்தாய். அத்தனை பேரையும் இழந்து அரசாட்சியைப் பெறுவதால் என்ன பெருமை இருக்க முடியும் என்று கலங்கினாய். பிச்சை எடுத்து வாழவும் நான் தயார் என்று என்னிடம் கூறினாய். நீ பதவி வெறியனல்ல. பழைய விரோதங்களுக்குப் பழி வாங்க வேண்டுமென்று முன்பு நினைத்திருந்தபோதும் களத்தில் அவர்களை மன்னித்து போரே வேண்டாம் என்று எண்ணுகிற உள்ளம் உன்னிடம் இருக்கிறது. ஓரளவு நீதி எது அநீதி எது என்று சிந்திக்கிறனாகவே நீ எந்த தருணத்திலும் இருந்திருக்கிறாய். நீதியான வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்ய மனவலிமை தேவை. தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனுக்குத்தான் கீதை கேட்கும் தகுதி உண்டு. இதெல்லாம் தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள் தனிச்சலுகை எதுவுமில்லை என்றார் கிருஷ்ணர். அர்ஜுனன் அகந்தை எதுவுமற்றவனாய் அடக்கத்தோடு ஸ்ரீகிருஷ்ணரை நோக்கி வணங்கி நின்றான்.

பரமாத்மா

அந்தக் காலத்தில் புனித யாத்திரையாக கங்கையிலிருந்து காவடியில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு வந்து ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாதருக்கு அபிஷேகம் செய்வார்கள். பின் ராமநாதபுரத்தின் கடற்கரை மண்ணை எடுத்துக் கொண்டு போய் காசியில் சேர்ப்பார்கள். ஏகநாதர் சில பிராமணர்களுடன் கங்கா ஜலத்தைக் காவடியில் எடுத்துக்கொண்டு ராமநாதபுர மாவட்டத்தை நோக்கி இரண்டாயிரம் மைல் வரை வந்து விட்டார். ராமநாதபுரம் இன்று மாதிரியே அந்த காலத்திலும் தண்ணீரில்லாமல் வெறும் மணல்வெளியாக பாலைவனமாகத்தான் இருந்தது. அங்கே ஒரு கழுதை வெயில் தாங்க முடியாமல் தண்ணீர் தாகத்துடன் தண்ணீருக்காக வாயை ஆ வென்று திறந்து கொண்டு மணலில் புரண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

ஏகநாதர் தன்னுடைய காவடியில் இருக்கிற கங்கா ஜலத்தை எடுத்து அந்தக் கழுதையின் வாயில் ஊற்றி கழுதையின் தாகத்தை தீர்த்து அதனை காப்பாற்றினார். அவருடன் வந்தவர்கள் நீ மகாபாவி எங்களுடைய கூட்டத்திலிருந்து உன்னை விலக்கப் போகிறோம். ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்ய அவ்வளவு தூரத்திலிருந்து கொண்டு வந்த தீர்த்தத்தை ஒரு கழுதைக்குக் கொடுத்து விட்டாயே என்று திட்டினார்கள். அதற்கு ஏகநாதர் உங்களுக்கு இன்னும் அஞ்ஞானம் போகவில்லை. நான் எந்த ராமநாதேஸ்வரரைத் தேடி வந்தேனோ அவர் நான்கு மைல் முன்னாலேயே வந்து என்னிடம் இருக்கிற கங்கைத் தீர்த்தத்தை வாங்கிக் குடித்தார் கடவுள் இல்லாத வஸ்து உலகத்தில் எதுவுமே இல்லை. உலகத்தில் உள்ள எல்லாமும் எல்லோரும் பரமாத்மாதான் என்றார்.

கிருஷ்ணர் கொடுத்த குறிப்பு

மகாபாரதப் போரில் பாண்டவர்கள் பக்கம் சில அரசர்களும் கௌரவர்கள் பக்கம் சில அரசர்களும் தத்தம் படைகளோடு இணைந்து போரிட்டனர். ஆனால் உடுப்பி அரசர் யார் பக்கமும் சேராமல் இரு படைகளுக்கும் உணவு அளிக்கும் பொறுப்பை ஏற்றார். இருபக்கப் படைகளுக்கும் உணவு தயாரித்துக் கொடுத்த உடுப்பி அரசர் கிருஷ்ணர் சாப்பிடும் போது மட்டும் அருகில் இருந்து கவனிப்பார். தினமும் பாயாசம் வழங்குவார். கிருஷ்ணரோடு யுதிஷ்டிரரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது வழக்கம். ஒருவருக்கு கூட சாப்பாடு இல்லாமல் ஒருநாளும் இருந்ததில்லை. எல்லா நாட்களும் உணவு சரியாக இருந்தது.

தினமும் எப்படி சரியாகக் கணித்து சமைக்கிறார் என நினைத்த யுதிஷ்டிரர் சமையர்காரர்களிடம் சென்று தன் சந்தேகத்தைக் கேட்டார். அதற்கு அவர்கள் எத்தனை பேருக்கு சமைக்க வேண்டும் என எங்கள் அரசர் தினமும் சொல்வார். அதன்படிதான் சமைப்போம் என்றனர். உடனே உடுப்பி அரசரிடம் சென்று யுதிஷ்டிரர் கேட்டார். அதற்கு அவர் நான் தினமும் கிருஷ்ணருக்கு பாயாசம் வழங்கும் போது அதில் உள்ள முந்திரிப் பருப்பில் எத்தனை சாப்பிடுகிறார் என கவனிப்பேன். அதனை கணக்கில் கொண்டு அத்தனை வீரர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு சமைக்கச் சொல்வேன். ஒவ்வொரு முந்திரி பருப்பிற்கும் ஆயிரம் வீரர்கள் என கணக்கிடுவேன். சில நேரம் கிருஷ்ணர் பாதிப் பங்கு கால் பங்கு முந்திரிப் பருப்பு கூட சாப்பிடுவது உண்டு என்றார். கிருஷ்ணர் தினமும் கொடுக்கும் குறிப்பையும் அதை உடுப்பி அரசர் கவனிக்கும் விதத்தையும் கேட்ட யுதிஷ்டிரர் தான் ஒரு நாள் கூட இதைக் கவனிக்கவில்லையே என நினைத்துக்கொண்டார்.

நீதி : கடவுள் ஒவ்வொரு நொடியும் குறிப்பு கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார். அதனை உணரும் போது வாழ்வின் காரியம் சாத்தியமாகும்.

மகாபாரதம் 18. சுவர்க்க ஆரோஹன பருவம் பகுதி -2

யுதிஷ்டிரன் தன் போக்கில் பேச்சை முடித்தவுடன் தர்மராஜன் யுதிஷ்டிரன் முன்னிலையில் தோன்றினார். யுதிஷ்டிரனுடைய தெய்விக தந்தையாகிய தர்மராஜார் வேண்டுமென்றே மூன்றாவது தடவையாக யுதிஷ்டிரனை பரிசோதனை செய்திருந்தார். அதிலும் யுதிஷ்டிரன் வெற்றி பெற்றான். தர்மராஜன் தோன்றியதும் அங்கு இருந்த காட்சி திடீரென்று மறைந்து நரகம் சொர்க்கமாக மாறியது. இது யுதிஷ்டிரனுக்காக வேண்டுமென்றே தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த வெறும் தோற்றம் ஆகும் தர்ம மார்க்கத்தில் இருந்து இம்மியளவும் பிசகாது இருந்த யுதிஷ்டிரனுக்கு இந்த கொடிய காட்சியானது சிறிது நேரத்திற்கு வேண்டுமென்றே காண்பிக்கப்பட்டது. நரக வேதனை என்ன என்பதை அறியாது இருந்தால் யுதிஷ்டிரன் வாழ்க்கையை பற்றிய அனுபவங்கள் பூர்த்தியடையாது. தான் வேண்டுமென்று செய்யாமலேயே துரோணருக்கு போர்க்களத்தில் சிறிது குழப்பத்தை உண்டு பண்ணி துரோணர் இறப்பதற்கு யுதிஷ்டிரனும் ஒரு காரணமாக இருந்தான். அறியாமல் செய்த குற்றத்திற்கு சிறிது நேரம் நரகத்தில் இருக்க வேண்டும் என்ற சிறு தண்டனை அவனுக்கு அளிக்கப்பட்டது.

ஒருவன் எவ்வளவு தான் தர்மத்தை கடைபிடித்து வாழ்ந்தாலும் அவர்கள் சிறிதேனும் ஏதோ ஒரு வகையில் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்திருப்பார்கள். இந்த வகையில் பீஷ்மர் கர்ணன் பீமன் அர்ஜுனன் நகுலன் சகாதேவன் திரௌபதி யுதிஷ்டிரனும் சிறிது நேரம் தண்டனையை அனுபவித்தார்கள். சிறிது நேர நரக தண்டனை முடிந்ததும் இப்போது அவர்கள் இருந்த இடம் சொர்க்கமாக மாறி பேரின்பத்தில் வாழ்வார்கள். ஒருவன் எவ்வளவு தவறு செய்தாலும் அவன் சிறிது நன்மை செய்திருப்பான் அதன்படி துரியோதனன் செய்த சிறிது நன்மைக்காக சிறிது நேரம் சொர்கத்தில் வாழ்ந்தான். செய்த நன்மைக்கான பலன் சொர்க்கத்தில் முடிவடைந்ததும் அவன் இருந்த இடம் நரகமாக மாறியது. இப்போது அவன் செய்த தவறுக்கு நரகத்தில் அதற்கான தண்டனை அனுபவிப்பான்.

மண்ணுலகில் தர்மத்தை கடைபிடித்து தர்மன் என்று பெயர் பெற்ற யுதிஷ்டிரன் விண்ணகத்திலும் தர்மத்தை கடைபிடித்து தர்மராஜன் பெற்ற மகனாக விளங்கினார். யுதிஷ்டிரன் கடைபிடித்து வந்த தர்மத்தை சொர்க்கபதவியை காட்டியும் நரக வேதனை காட்டியும் அவனை கடைபிடிக்காமல் செய்ய இயலவில்லை. அனைத்து சோதனைகளிலும் அவன் வெற்றி பெற்று விண்ணுலகிலும் தர்மன் என்னும் பெயர் பெற்றான்.

யுதிஷ்டிரன் தேவலோகத்தில் இருந்த கங்கா நதியில் நீராடினான் அதன் விளைவாகத் விண்ணுலகிற்கு உரியவனான். அதன் பிறகு அவன் தனது சகோதரர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டான். அவன் உடன் பிறந்தவர்கள் திரௌபதியும் ஏற்கனவே விண்ணுலக வாசிகளான அவர்களோடு சேர்ந்த அவனது பேரானந்தம் பன்மடங்கு அதிகரித்தது. நெடுநாள் சொர்க்க பதவியை அனுபவித்தை பிறகு சிலர் பரம்பொருளில் இரண்டறக் கலந்தனர். வேறு சிலர் தங்கள் புண்ணிய கர்மாக்களை முடித்துக் கொள்ளுதல் பொருட்டு மீண்டும் மண்ணுலகில் பிறந்தனர்.

மகாபாரதம் முற்றியது.

அமைதி

பாண்டுரங்கனின் பக்தரான ஏகநாதர் ஒரு நாள் கங்கையில் நீராடி கரைக்கு வந்தார். அவர் மீது வெறுப்பு கொண்ட முரடன் ஒருவன் வம்புக்கு இழுக்க எண்ணினான். ஏகநாதர் மீது வெற்றிலை எச்சிலை உமிழ்ந்தான். ஆனால் ஏக நாதர் கோபம் கொள்ளவில்லை. விட்டல விட்டல என்று பாண்டுரங்கனின் நாமத்தை ஜெபித்தபடி கங்கையில் மீண்டும் நீராடச் சென்றார். இப்படி ஒரு முறை இரு முறை அல்ல. கணக்கு வழக்கில்லாமல் தொடர்ந்து செய்தான். ஆனால் ஏகநாதர் திரும்ப திரும்ப குளிக்கவே கங்கையில் இறங்கினார். ஒரு கட்டத்தில் அவரது பொறுமை கண்டு மனம் திருந்தி சுவாமி என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லி காலில் விழுந்தான். அதற்கு ஏகநாதர் நான் ஏன் உன்னை மன்னிக்க வேண்டும் கங்கையில் பல முறை நீராடும் வாய்ப்பு உன்னால் அல்லவா கிடைத்தது. அதனால் உனக்கு நான் தான் நன்றி சொல்வேன் என்று பதிலளித்தார். இதனை கவனித்து வந்த ஒரு மனிதர் ஏகநாதரிடம் சென்று சுவாமி உங்களால் எப்படி இப்படி அமைதியாக எதிலும் பாதிக்கப்படாமல் இருக்க முடிகிறது இதன் ரகசியம் என்ன என்று கேட்டார்.

ஏகநாதர் அவரையே உற்றுப் பார்த்து விட்டு நீ உன் கையைக் காட்டு என்றார். அந்த மனிதரும் தன் கையை நீட்டினார். அவரது ரேகைகளை ஆராய்ந்த ஏகநாதர் உனக்கு இன்னும் ஏழு நாட்கள் ஆயுள் தான் பாக்கி இருக்கிறது பின்பு இறந்து விடுவாய் என்றார். அந்த மனிதருக்கு அதிர்ச்சி மனம் நொந்தார். ஏகநாதரின் அமைதியின் ரகசியம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை விட அதிகமாய் உயிர்பயம் அவருக்குள் வந்தது. ஞானிகள் எக்காலத்தையும் அறிய வல்லவர்கள் என்பதால் அவருக்கு ஏகநாதர் சொன்னதில் எந்த சந்தேகமும் இல்லை. அவசரமாக வீட்டுக்குச் சென்றார். மனைவி மக்களிடம் தகவலைச் சொன்னார். குடும்பம் அழுதது. அவரும் வருத்ததில் ஆழ்ந்தார். ஆனால் அழுது புலம்பி எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்த அந்த மனிதர் வருத்தத்தை எல்லாம் சீக்கிரமே மூட்டை கட்டி வைத்து விட்டு சாவதற்குள் செய்து முடிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்ய ஆரம்பித்தார்.

ஏகநாதர் சரியாக ஒரு வாரம் கழித்து அந்த மனிதரை அவர் வீட்டில் சந்தித்தார். அந்த மனிதர் மிகுந்த அமைதியுடன் இருந்தார். நான் செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டு மரணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார் அவர். ஏகநாதர் சொன்னார். நீ இப்போது எந்த மனநிலையில் இருக்கிறாயோ அதே மனநிலையில் நான் எப்போதும் இருக்கிறேன். மரணம் வரும் எல்லாம் முடிந்து போகும் என்ற உண்மையை உணர்வதால் கிடைக்கும் அமைதியே அலாதியானது. அதற்கு பிறகு எதுவும் பெரிய விஷயமாகத் தோன்றுவதில்லை. எதுவும் அதிகமாக பாதிப்பதில்லை. இதைச் சொன்னால் புரியாது அனுபவத்தில் மட்டுமே உணர முடியும் என்பதற்காகத் தான் நான் உன் கேள்விக்குப் பதிலாக உன்னிடம் ஏழுநாட்கள் மட்டுமே ஆயுள் பாக்கி உள்ளது என்றேன். உண்மையில் உனக்கு தீர்க்காயுள் இருக்கிறது. நீ நீண்ட காலம் வாழ்வாய் என்று சொல்லி விட்டு வாழ்த்தி விட்டு சென்றார்.

மகாபாரதம் 18. சுவர்க்க ஆரோஹன பருவம் பகுதி -1

இந்திரனுடைய விமானத்தில் சொர்க்கத்திற்குள் சென்ற யுதிஷ்டிரன் அங்கு பெரும் கும்பலாக கூடி இருந்தவர்களில் தன் சகோதரர்களை தேடினான். சகோதரர்கள் யாரும் அவன் கண்ணுக்கு தென்படவில்லை. அங்கு இருந்தவர்களில் அவனுடைய கவனத்தில் தெரிந்தவன் துரியோதனன். இது யுதிஷ்டிரனுக்கு சிறிது மனகலக்கத்தை உண்டு பண்ணியது. தன் குடும்பத்தை சேர்ந்தவன். ஆனால் பேராசை பிடித்தவன். தர்மத்திலிருந்து பெரிதும் பிசகியவன். யுத்த நெறியிலிருந்து பிசகிய பொல்லாதவன். அவன் புரிந்த பெரும் பாவச் செயல்களுக்கு மன்னிப்பு ஏதுமில்லை. யுத்தகுற்றவாளி என துரியோதனனே நரகத்தில் போட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக அவன் இந்திரனுக்கு நிகரான பதவியை அங்கு பெற்றிருந்தான். அவனுடைய உள்ளத்தில் உதித்த அந்த எண்ணத்தை நாரதர் அறிந்து கொண்டார். உடனே யுதிஷ்டிரனிடம் சென்ற நாரதர் துரியோதனன் அடைந்திருப்பது வீர சொர்க்கம் என்று விளக்கம் கொடுத்தார். போர்க்களத்தில் மனம் தளராமல் போர்புரிந்து உடலை விடுவது க்ஷத்திரியர்களுக்கு உண்டான தகுதி எனவே துரியோதனனுக்கு சொர்க்கம் வாய்த்தது என்று விளக்கினார்.

யுதிஷ்டிரன் துரியோதனனை பற்றிய ஆராய்ச்சி எதையும் செய்யவில்லை. தன் சகோதரர்களை காண ஆவல் கொண்டிருந்தார். சகோதரர்கள் இருக்கும் இடத்திற்கு செல்லவேண்டும் என்று இந்திரனிடம் கேட்டுக்கொண்டான். அவர்கள் இருந்த இடத்திற்கு யுதிஷ்டிரனை அழைத்துச்செல்ல தேவதூதன் ஒருவன் அவனுடன் அனுப்பப்பட்டான். இவரும் நடந்து செல்ல செல்ல பாதை மேலும் மேலும் இருள் சூழ்ந்ததாக மாறியது. சூழ்நிலை அருவறுப்புக்குப்புக்கு உரியதாக இருந்தது. சகிக்க முடியாத துர்நாற்றம் வீசியது. மலம் நிறைந்ததாக அந்த இடம் அமைந்திருந்தது. நிலத்தில் ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. தாங்க முடியாதவாறு அனல் காற்று வீசியது. தரையில் முட்கள் கிடந்தன. தனக்கு சிறிதும் பொருத்தமற்ற இந்த இடத்தைப் பற்றிய விவரங்களை தன்னுடன் வந்த தேவதூதனிடம் கேட்டான். அது நரகத்தின் ஒரு பகுதி என்றும் இனி தாங்கள் திரும்பிப் போகலாம் என்றும் உடன் வந்தவன் விளக்கினான்.

யுதிஷ்டிரன் அங்கிருந்து செல்ல திரும்பியதும் பரிதாபகரமான கூக்குரல்கள் கிளம்பின. திரும்பி போக வேண்டாமென்றும் மிகவும் புண்ணியவானான நீங்கள் வந்ததினால் தாங்கள் பட்ட வேதனை சிறிது தணிந்தது ஆகவே செல்லாதீர்கள் என்று மீண்டும் விண்ணப்பங்கள் செய்தனர். அன்னவர்கள் மீது கருணை கொண்ட யுதிஷ்டிரன் நின்றபடி அவர்களைப் பற்றி விசாரித்து அவர்களை பார்த்தான். அங்க விண்ணப்பித்தவர்கள் பீஷ்மர் கர்ணன் பீமன் அர்ஜுனன் நகுலன் சகாதேவன் திரௌபதி ஆகியோர் இருந்தனர். அவர்களை கண்டதும் யுதிஷ்டிரன் ஸ்தப்பித்து போனான். மீண்டும் சரியான மனநிலைக்கு வர அவனுக்கு சிறிது நேரம் பிடித்தது. அதன் பிறகு உடன் தேவதூதுவனிடம் யுதிஷ்டிரன் உறுதியாகக் கூறினான் தேவலோகத்துக்கு அதிபதியாய் இருக்கும் இந்திரனிடம் நீ போய் நான் சொல்லும் செய்தியை கூறுவாயாக. பொல்லாங்கே வடிவெடுத்து இருக்கும் துரியோதனன் இருக்கும் சொர்க்க வாழ்க்கையை தனக்கு வேண்டாம் என்றும் அறநெறி சிறிதேனும் பிறழாத என் சகோதரர்கள் இங்கே நரக வேதனையில் மூழ்கிக் கிடக்கின்றனர். சொர்க்கத்தில் இது தான் நீதி என்றால் நானும் என் தம்பிமார்களோடு இந்த நரகத்திலேயே மூழ்கி கிடப்பேன் என்று கூறினார்.

ஏகநாதர்

பானுதாசரின் மகன் சக்ரபாணி. பேரன் சூரிய நாராயணன் ருக்மிணி தம்பதிக்குப் பிறந்தவர் ஏகநாதர். இளமையிலேயே கல்வியிலும் பக்தியிலும் சிறந்து விளங்கினார். அதில் முழுமைபெற ஒரு குருவைத் தேடி ஏங்கினார். ஒருநாள் தியானத்தின்போது தேவ்கட்டில் உள்ள ஜனார்த்தனரை அணுகு என்று வாக்கு கேட்டது. அப்படியே தேடிச்சென்று அவர் பாதம் பணிந்தார். குரு ஜனார்த்தனர் தத்தாத்ரேய உபாசகர் தத்தாத்ரேயரின் தரிசனமும் பெற்றவர் வீரத்திலும் சிறந்தவர். தன் பாதம் பணிந்த ஏகநாதரின் தகுதியைப் புரிந்துகொண்ட ஜனார்த்தனர் அவரை பரிவுடன் சீடனாக ஏற்றுக்கொண்டார். அவரிடம் ஆறு ஆண்டுகள் தங்கி தன் பக்தி ஞானத்தை வளர்த்துக் கொண்டார் ஏகநாதர். குருவின் அருளால் தத்தாத்ரேயர் தரிசனமும் பெற்றார். குரு ஜனார்த்தனர், தத்தாத்ரேயர், பாண்டுரங்க விட்டலன் மூவரும் ஒருவரே என்றுணர்ந்தார் ஏகநாதர். மராட்டிய மொழியில் பாவார்த்த ராமாயணம், ஏகநாத் பாகவதம் போன்ற நூல்களை இயற்றினார்.

இவருக்கு முன்பு இப்பகுதியில் வாழ்ந்த மகான் ஞானேஸ்வரர். அவர் ஆலந்தி என்னுமிடத்தில் ஜீவசமாதி அடைந்தார். அவர் ஏகநாதரின் கனவில் தோன்றி மரத்தின் வேர் வளர்ந்து என் உடலில் குத்துகிறது. அதனை அப்புறப்படுத்து என்றார். விடிந்ததும் ஆலந்தி சென்ற ஏகநாதர் சமாதியைத் திறந்துபார்க்க மரத்தின் வேர் ஞானேஸ்வரரின் உடலில் குத்தியபடி இருந்தது. அதை அப்புறப்படுத்தி மீண்டும் சமாதியை மூடினார் ஏகநாதர்.

12 ஜோதிர்லிங்கத் தலங்கள், மதுரா, கோகுலம், பிருந்தாவனம் உள்ளிட்ட பல தலங்களையும் தரிசித்து வந்தார். அந்த நிலையில் குரு ஜனார்த்தனரின் ஆணைப்படி கிரிஜா எனும் பெண்ணை மணந்து கொண்டார். அவர்களுக்கு ஹரி என்ற மகனும் கங்கா, லீலா எனும் இரண்டு மகள்களும் பிறந்தனர். குடும்பமே பக்தியில் திளைத்தது. ஒருநாள் கண்டியா என்ற பெயருடைய சிறுவன் ஒருவன் ஏகநாதரின் வீட்டுக்கு வந்தான். அவன் ஏகநாதரை வணங்கி உங்களது பக்தி, பரோபகாரம், சாதிபேதம் பார்க்காமல் அனைவருக்கும் உதவும் தன்மை போன்ற உயர்குணங்களை அறிந்தேன். தங்களுக்குப் பணிவிடை செய்ய விரும்புகிறேன். எனக்கு உற்றார் உறவினர் எவருமில்லை. நான் செய்யும் பணிக்கு கூலி எதுவும் வேண்டாம். பசிக்கு அன்னமிட்டால் போதும் என்றான். சிறுவனின் வினயத்தைக் கண்டுவியந்த ஏகநாதர் அங்கேயே தங்கிக்கொள்ள அனுமதி தந்தார். சிறுவன் அங்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் உதவியாக இருந்தான் எதுவும் வேண்டுமென்று கேட்கவில்லை மனம் கோணவில்லை. அங்கு வரும் சாதுக்களும் அந்த சிறுவனின் தொண்டைக்கண்டு வியந்து அவன்மீது அன்பு செலுத்தினர் கண்டியா என்னும் அந்த சிறுவன் இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகள் பணி செய்தான்.

இந்த நிலையில் துவாரகையில் மதன் என்பவர் துவாரகா கண்ணனை மிகுந்த பக்தியோடு வணங்கிவந்தார். கண்ணனின் தரிசனம் காண பலவாறு இறைஞ்சி வந்தார். ஒருநாள் அவர் கனவில் தோன்றிய கண்ணன் நான் பைதானில் ஏகநாதர் எனும் பக்தன் வீட்டில் கண்டியா என்னும் பெயரில் இருக்கிறேன். அங்கு சென்றால் என்னை தரிசிக்கலாம் என்றருளினார். பிரமித்த மதன் உடனே புறப்பட்டு பைதான் வந்தார். கோதாவரியில் நீராடினார். அப்போது ஆற்றில் நீர் எடுப்பதற்காக காவடிபோல் இரு குடங்களை தோளில் வைத்துக்கொண்டு வந்த ஒரு சிறுவனைப் பார்த்தார். அவனை அழைத்து ஏகநாதர் வீடு எங்கே என்று கேட்க அவன் நீர் எடுத்துக்கொண்டு அவரையும் அழைத்துச் சென்று ஏகநாதரின் இல்லத்தைக் காட்டினான். பின்னர் நீரை உள்ளே கொண்டு சென்றான்.

ஏகநாதரைப் பார்த்ததும் மதனின் மேனி சிலிர்த்தது. இவர் வீட்டிலல்லவா கண்ணன் இருக்கிறான். எத்தனை பாக்கியம் செய்தவர் என்று நெகிழந்து சுவாமி நான் துவாரகையிலிருந்து வருகிறேன். கண்ணன் கண்டியா எனும் பெயரில் தங்கள் வீட்டில் இருப்பதாக என் கனவில் வந்து கூறினார். அந்த கண்டியாவை தரிசிக்க எனக்கு அனுமதியளிக்க வேண்டும் என்றார். அதைக்கேட்ட ஏகநாதரின் மயிர்க்கால்கள் சிலிர்த்தன. துவாரகைக் கண்ணன் இங்குதான் இருக்கிறானா இந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நான் அவனை அறிந்துகொள்ளவில்லையே என்று உருக அங்கே சிறுவன் அவ்விருவருக்கும் கண்ணனாகக் காட்சிதந்தான். பின் ஏகநாதரின் பூஜையறையில் சென்று மறைந்தான். இந்த சம்பவம் பலரும் எழுதியுள்ள ஏகநாதர் சரித்திரத்திலும் ஏகநாதர் பாடல்களிலும் விவரிக்கப்பட்டுள்ளது.

மகாபாரதம் 17. மகாபிரஸ்தானிக பருவம் பகுதி -3

யுதிஷ்டிரன் மேரு மலையின் உச்சியை அடைந்தான். அவனுடன் வந்த நாயும் அவன் பின்னே வந்து சேர்ந்தது. அப்போது இந்திரன் தன்னுடைய விமானத்தில் யுதிஷ்டிரனை அழைத்து செல்ல யுதிஷ்டிரன் முன்னிலையில் வந்து இறங்கினான். இந்திரன் யுதிஷ்டிரனை பார்த்து தங்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கின்றேன். தாங்கள் விமானத்தில் ஏறுங்கள் என்று கேட்டுக்கொண்டான். அதற்கு யுதிஷ்டிரர் வழியில் வீழ்ந்து மடிந்து போன தன்னுடைய சகோதரர்களும் திரௌபதியும் என்ன கதியை அடைந்தார்கள் என்று நான் தெரிந்து கொள்ளவேண்டும். அதை தெரிந்து கொள்வதற்கு முன்பு சொர்க்கலோகம் வரமாட்டேன் என்று கூறினான். அதற்கு இந்திரன் அவர்கள் ஒவ்வொருவராக வீழ்ந்த போது நீ ஏன் அவர்களை திரும்பிப் பார்க்கவில்லை என்று கேட்டார். அதற்கு யுதிஷ்டிரன் அவர்களை திரும்பி பார்த்திருந்தால் நானும் வீழ்ந்திருப்பேன். மேலான லட்சியத்தை நாடிச் செல்லும் ஒருவன் பந்த பாசத்தை முன்னிட்டோ அல்லது வேறு காரணத்தினாலோ திரும்பிப் பார்ப்பானாகில் அவன் மேற்கொண்டு முன்னேற்றம் அடையமாட்டான். இது வாழ்வைப் பற்றிய கோட்பாடு ஆகும். மேலான சொர்க்கத்திற்கு செல்லும் லட்சியத்தை நாடிச் சென்று கொண்டிருந்தேன். ஆகையால் திரும்பிப் பார்க்கவில்லை என்று கூறினான்.

உனது சகோதரர்களும் திரௌபதியும் வீழ்ந்த போது பீமனிடம் அதற்கான சரியான காரணத்தை சொன்னாய். அந்த காரணங்களை முன்னிட்டு அவர்கள் உடலோடு சொர்க்கத்திற்குப் வர தகுதியற்றவர்கள் ஆனார்கள். சூட்சும உடலோடு அவர்கள் ஏற்கனவே சொர்க்கத்திற்கு வந்திருக்கின்றார்கள். நீ அறநெறி பிறழாது இருந்த காரணத்தினால் உடலுடன் சொர்க்கம் வர தகுதி உடையவனாக இருக்கிறாய். ஆகையால் நீ விமானத்தில் ஏறுவாயாக என்று இந்திரன் கூறினான். யுதிஷடிரன் விமானத்தில் ஏற முயன்ற பொழுது யுதிஷ்டிரனுடன் வந்த நாய் விமானத்தில் ஏற முயன்றது. அப்போது இந்திரன் இந்த நாய்க்கு சொர்க்கத்தில் இடமில்லை என்று தடுத்தான். இதைப்பார்த்த யுதிஷ்டிரன் என்னை நம்பி இந்த நாய் வந்திருக்கின்றது. இதற்கு அனுமதி இல்லையென்றால் என்னை நம்பி வந்த இந்த நாயை புறக்கணித்துவிட்டு நான் வரமாட்டேன் என்று கூறினான். அதற்கு இந்திரன் இந்த நாயோடு இந்த உலகத்தில் இருக்க விரும்புகிறாயா அல்லது ஏற்கனவே அங்கு சென்றுள்ள உன் சகோதரர்களுடன் சொர்க்கத்தில் இருக்க விரும்புகின்றாயா என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் அனைத்து விலங்குகளையும் தெய்வீகம் வாய்ந்தவைகளாகவே தான் கருதுகிறேன். என்னை நம்பி வந்த நாயை புறக்கணிப்பது தர்மமாகாது. தர்மத்தின் படி நடக்க என்னுடன் பிறந்தவர்களையும் சொர்கத்தையும் துறக்க நான் தயாராக இருக்கின்றேன். என்னை நம்பி வந்த நாயை விட்டு வரமாட்டேன் என்று உறுதியுடன் கூறினான்.

யுதிஷ்டிரன் இவ்வாறு கூறியதும் நாய் எழில் நிறைந்த தர்மதேவதையாக மாறியது. மகனே உன்னை நான் பெரிதும் பாராட்டுகிறேன் முன்பு ஒரு தடவை நச்சுப்பொய்கை கரையில் உன்னை நான் சோதித்தேன். சொந்த சகோதரர்களுக்கும் மாற்றாந்தாய் சகோதரர்களுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லாமல் நடந்து கொண்டாய். இப்பொழுது விலங்குகள் மேல் வைத்திருக்கும் கருணையை நான் ஆராய்ந்தேன். உன்னுடைய பரந்த மனப்பான்மையை முற்றிலும் நான் பாராட்டுகின்றேன். நீ இந்திரனோடும் என்னோடும் சொர்க்கலோகம் வருவாயாக இந்த உடலோடு வரும் தகுதி உனக்கு உண்டு என்று விமானத்திற்குள் வரவேற்றார். இந்த அதிசயத்தை காண விண்ணவர்கள் அங்கு ஏராளமானவர்கள் கூடினார்கள். யுதிஷ்டிரன் அவர்களை கண்ணெடுத்தும் பார்க்கவில்லை.

மகாபிரஸ்தானிக பருவம் முற்றியது அடுத்து சுவர்க்க ஆரோஹன பருவம்.

பானுதாச ருக்வேதி

பானுதாச ருக்வேதி என்பவர் மகாராஷ்டிர அந்தணர். ஔரங்காபாத் அருகேயுள்ள பைதான் என்னுமிடத்தில் பிறந்தவர். வேத சாஸ்திர இதிகாச புராணங்களில் தேர்ச்சிபெற்றவர்கள் வசித்த இடம். பானுதாசர் சிறுவயதில் படிப்பில் மிக மந்தமாக இருந்தார் எனவே தந்தையின் ஏச்சுக்கு அடிக்கடி ஆளாக வேண்டியிருந்தது. ஒருநாள் மனம் வெறுத்து அருகேயிருந்த சூரிய நாராயணன் கோயிலில் அன்ன ஆகாரமின்றி இரண்டு நாட்கள் அமர்ந்து விட்டார். மூன்றாம் நாள் ஒளிப்பிரகாசமாக வந்த ஒரு பெரியவர் சிறுவனிடம் பாலைக் கொடுத்து அருந்தச் சொன்னார். அவ்வாறு ஐந்து நாட்கள் பாலருந்தியவர் ஞானசூரியனாக வெளியே வந்தார். பகவத்பக்தி பஜனை என்று நாட்கள் நகர்ந்தன.

இளைஞனானதும் ஆடைகள் விற்கும் தொழில் புரிந்தார். நியாயமாக விற்றதால் நன்கு வியாபாரமானது. ஒருநாள் வாரச்சந்தையில் விற்பனையை முடித்து விட்டுத் திரும்பிய அவர் அன்றிரவு ஒரு சத்திரத்தில் தங்கினார். அப்போது பஜனை சத்தம் கேட்கவே சக வியாபாரிகளிடம் உடமைகளைப் பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு அங்கு சென்று விட்டார். அவர்கள் பானுதாசர் மீது பொறாமை கொண்டவர்கள். எனவே அவரது குதிரையை அவிழ்த்துவிட்டனர். ஆடைப்பொதியை வேறிடத்தில் ஒளித்து வைத்தனர். பணத்தை தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு படுத்துவிட்டனர். அப்போது அங்குவந்த கொள்ளைக்கூட்டத்தினர். அவர்களை அடித்து இருந்த பொருட்கள் அனைத்தையும் பறித்துச் சென்றுவிட்டனர். பஜனை முடிந்து பானுதாசர் திரும்பிவர எதிரில் வந்த ஒருவர் உன் குதிரையும் பணமும் வைத்துக்கொள் என்று ஒப்படைத்துவிட்டு துணிப்பொதி மறைத்து வைக்கப்பட்ட இடத்தையும் காட்டிவிட்டுச் சென்றுவிட்டார். பானுதாசருக்கு எதுவும் புரியவில்லை. அவர் சத்திரத்துக்கு வந்ததும் சக வியாபாரிகள் நடந்ததையெல்லாம் கூற இறைவனே வந்தார் என்பதை அறிந்து மெய்சிலிர்த்துப் போனார்.

விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் பண்டரிபுரத்திலுள்ள விட்டலன் சன்னதிக்கு வந்தபோது விட்டலனின் அழகில் மயங்கினார். அவரை எடுத்துச்சென்று தமது பிரதேசத்தில் அனகோந்தி என்னுமிடத்தில் (தற்போதைய ஹம்பி) பிரதிஷ்டை செய்துவிட்டார். பண்டரிபுரத்தில் உள்ளவர்கள் பானுதாசரிடம் விட்டலன் இல்லாக்குறையைச் சொல்லி மனம் வருந்தினார்கள். பானுதாசர் ஹம்பி சென்றார். ஒரு திருவிளையாடல் மூலம் இறைவன் பானுதாசரின் பெருமையை அரசனுக்கு உணர்த்த நெகிழ்ந்த கிருஷ்ணதேவராயர் விட்டலன் விக்ரகத்தை திரும்பக் கொடுத்ததோடு பிரதிஷ்டை வைபவத்திலும் கலந்து கொணடார். இன்றைக்கு பண்டரிபுரத்திலுள்ள விட்டலன் பானுதாசரால் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டவரே.

மகாபாரதம் 17. மகாபிரஸ்தானிக பருவம் பகுதி -2

பாண்டவர்கள் இருந்த மணல் திட்டு எல்லா பக்கங்களிலும் விரிவடைந்திருந்தது. அதற்கு வடக்கே பர்வதராஜன் என்று அழைக்கப்பட்ட மேருமலை இருந்தது. அந்த மேரு மலையிலிருந்து சொர்க்கத்திற்கு மேல் நோக்கிப் போவது அவர்கள் போட்டிருந்த திட்டம். அந்த மணல் திட்டை தாண்டியதும் துரௌபதி தரையில் வீழ்ந்து மடிந்து போனாள். இதனை கண்ட பீமன் யுதிஷ்டிரனிடம் துரோபதி வீழ்ந்து விட்டாள் அதற்கு காரணம் என்ன என்று கேட்டான். திரௌபதி அனைவரிடத்திலும் அன்பு வைத்திருந்தாள். எனினும் அவளுடைய ஆழ்ந்த அன்பு அலாதியாக அர்ஜுனன் மேல் வைத்திருந்தாள். இந்த பாரபட்சத்தை முன்னிட்டே அவள் வீழ்ந்து மடிந்தாள் என்று திரும்பி பார்க்காமல் பதில் அளித்து விட்டு மேலே நடந்து போய்க் கொண்டிருந்தான்.

சிறிது தூரம் சென்ற பிறகு சகாதேவன் வீழ்ந்து மடிந்து போனான். சகாதேவனின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்று பீமன் யுதிஷ்டிரனிடம் கேட்டான். சாஸ்திர ஞானத்தில் தனக்கு நிகரானவர் யாருமில்லை என்ற கல்விச் செருக்கு சகாதேவனிடத்தில் இருந்தது. அந்த செருக்கினால் மடிந்து போனான் என்று திரும்பி பார்க்காமல் பதில் அளித்து விட்டு மேலே நடந்து போய்க் கொண்டிருந்தான்.

சிறிது தூரம் சென்ற பிறகு நகுலன் வீழ்ந்து மடிந்து போனான். நகுலன் வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்று பீமன் யுதிஷ்டிரனிடம் கேட்டான். தன் மேனி அழகை பற்றிய செருக்கு அவனிடத்தில் அதிகம் இருந்தது. அந்த செருக்கினால் மடிந்து போனான் என்று திரும்பி பார்க்காமல் பதில் அளித்து விட்டு மேலே நடந்து போய்க் கொண்டிருந்தான்.

சிறிது தூரம் சென்ற பிறகு அர்ஜுனன் வீழ்ந்து மடிந்து போனான். அர்ஜுனன் வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்று பீமன் யுதிஷ்டிரனிடம் கேட்டான். நிகழ்ந்த குருஷேத்திர போரில் போர் வீரர்கள் அனைவருக்கும் கடமைகள் இருந்தன. ஆனால் அர்ஜுனன் தன்னுடைய காண்டிபத்தின் மேல் இருந்த பற்றினாலும் நம்பிக்கையினாலும் ஒற்றை ஆளாக இருந்து கொண்டு எதிரிகள் அனைவரையும் தானே அழிக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்திருந்தான். அந்த எண்ணத்தினால் மடிந்து போனான் என்று திரும்பி பார்க்காமல் பதில் அளித்து விட்டு மேலே நடந்து போய்க் கொண்டிருந்தான்.

சிறிது தூரம் சென்ற பிறகு பீமன் விழுந்தான். எனக்கு அழிவு காலம் வந்து விட்டது நான் என்ன குற்றம் செய்தேன் என்று பீமன் யுதிஷ்டிரனிடம் கேட்டான். உன்னுடைய உடல் பலத்தை குறித்து நீ படைத்திருந்த செருக்கே உன்னுடைய வீழ்ச்சிக்குக் காரணம் என்று திரும்பி பார்க்காமல் பதில் சொல்லிவிட்டு மேலே நடந்து போய்க் கொண்டிருந்தான். பீமனும் உயிர் நீத்தான். இப்பொழுது யுதிஷ்டிரன் மட்டும் தனியாக மேல் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தான் இத்தனை நேரம் இவர்கள் பின்னே வந்து கொண்டிருந்த நாயும் யுதிஷ்டிரனை பின்தொடர்ந்து சென்றது