ஜ்வாலாமுகி – இமாச்சலப் பிரதேசம்

சக்தி பீடம் கோயில்களைப் பற்றி பல நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. எத்தனை சக்தி பீடங்கள் உள்ளன என்பதில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளது போலவே எது சக்தி பீடம் என்பதிலும் பல்வேறு கருத்து வேறுபாடுகளும் சந்தேகங்களும் உள்ளன. அவற்றில் ஒரு கோயில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள காங்க்ரா பள்ளத்தாக்கில் இருந்து தெற்கே 35 கிமீ தொலைவில் தௌலாதர் மலைத்தொடரில் உள்ள மலைகளுக்கு மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது. 51 சக்தி பீடங்களில் தேவியின் நாக்குப் பகுதி விழுந்த சக்தி பீடமாகும். இக்கோயில் ஜ்வாலாமுகி சக்தி பீடமாகும். கோவிலில் உள்ள பாறை இடுக்குகளின் இடையில் இயற்கையாக நீல நிறத்தில் ஒரு ஜோதியானது பல நூற்றாண்டுகளாக எரிந்து கொண்டிருக்கிறது. எண்ணெய் திரி எதுவும் இல்லாமல் பழமையான பாறை இடுக்குகளில் இருந்து வெளிப்படும் நீலநிற ஜ்வாலை இங்கு அன்னையின் வடிவமாக வழிபடப்படுகிறது. இக்கோயிலில் மூல தெய்வமாக ஜ்வாலாமுகி தேவி ஜோதி வடிவமாக இருக்கிறாள். ஜ்வாலாமுகி தேவியின் அம்சமாக இந்த நீல நிற ஜோதி வழிபடப்படுகிறது. இவள் மகாகாளி, அன்னபூர்ணா, சண்டி, ஹிங்லாஜ், வித்யா, பஸ்னி, மஹா லக்ஷ்மி, சரஸ்வதி, அம்பிகா மற்றும் அஞ்சி தேவி என்ற வேறு பெயரிலும் அழைக்கப் படுகிறாள். ஒளியின் தெய்வம் என்றும் இவள் அழைக்கப்படுகிறாள். சதாசர்வகாலமும் எரியும் பிரதான நீல நிற ஜோதியானது ஒரு சதுர மைய குழியில் வைக்கப்பட்டுள்ளது. இக்குழி தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜோதிக்கு முன் ஒரு ஸ்ரீயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அது சால்வைகள் மற்றும் ஆபரணங்களால் மூடப்பட்டிருக்கும். இங்கு ஜ்வாலாமுகி சக்தியாகவும் உன்மத்த பைரவர் சிவனாகவும் உள்ளார்கள்.

காங்க்ரா என்ற இந்த பகுதியை ஆண்ட ராஜா பூமிசந்த்கடோச் என்பவரின் கனவில் தோன்றிய தேவி இந்த இடத்தைப் பற்றியும் அதன் புனிதத்தைப் பற்றியும் அருளி இங்கு கோயில் எழுப்புமாறு கூறினாள். தேவியின் சொல்படி அந்த இடத்தைக் கண்டுபிடித்த ராஜா அந்த இடத்தில் கோயிலை எழுப்பினார். கோவில் நவீன வடிவமைப்பில் கட்டப்பட்டது. மகாராஜா ரஞ்சித் சிங் 1815 இல் கோயிலுக்கு விஜயம் செய்தார். கோயிலின் குவிமாடம் அவரால் தங்க முலாம் பூசப்பட்டது. கோயிலில் கதவுகள் வெள்ளித் தகடுகளால் செய்யப்பட்டுள்ளது. ஜ்வாலாமுகி கோவிலுக்கு சில அடிகள் மேலே சுமார் மூன்றடி சுற்றளவுடன் ஆறடி ஆழமான குழி உள்ளது. இந்தக் குழியின் அடியில் ஒன்றரை அடி ஆழமுள்ள மற்றொரு சிறிய குழியில் எப்போதும் வெந்நீர் கொப்பளித்துக்கொண்டே இருக்கும்.

சிவபெருமானால் நசுக்கப்பட்ட அரக்கன் ஜலந்தராவின் வாயிலிருந்து இந்த நெருப்பானது வருகிறது என்று புராண கதைகள் மூலம் சொல்லப்படுகிறது. கோயிலின் பெரிய மண்டபத்திற்கு முன் ஒரு சிறிய தளம் உள்ளது. அங்கு ஒரு பெரிய பித்தளை மணி உள்ளது. இந்த மணி நேபாள மன்னரால் கொடுக்கப்பட்டது. இமாச்சலப் பிரதேசத்தின் ஜ்வாலாமுகி கோயிலில் பல புராண பதிவேடுகள் வைக்கப்பட்டுள்ளன. பாண்டவர்கள் இந்த புனித தலத்திற்கு வந்து வழிபட்டிருக்கிறார்கள் என்பதை இந்த பதிவுகளின் மூலம் அறிந்து கொள்ளலாம். இங்கு பிரசாதமாக ரப்ரி அல்லது கெட்டியான பாலால் செய்யப்பட்ட இனிப்பு அல்லது பழங்கள் மற்றும் பால் ஆகியவற்றால் செய்யப்பட்ட ஒரு வகையான இனிப்புகள் கொடுக்கப்படுகிறது.

முகலாயப் பேரரசரான அக்பர் இக்கோயிலின் புராணக் கதையைப் பற்றி அறிந்து கொண்டு அதன் உண்மை தன்மையை சோதிப்பதற்காக கோயிலுக்குச் சென்றார். நீரினால் ஜோதியை அணைக்க முயன்றார். எவ்வளவு நீர் ஊற்றினாலும் அணைக்க முடியாத ஜோதியானது நீர் ஊற்ற ஊற்ற மேலும் பெரும் சக்தியுடன் எரிய ஆரம்பித்தது. ஜ்வாலா தேவியின் சக்தியை அறிந்த அக்பர் தனது ஜ்வாலாமுகி தேவிக்கு ஒரு தங்கக் குடையை வழங்கினார். ஆனால் ஜோதி எரியும் குவி மாடத்தில் தங்க குடையை வைத்ததும் அந்த தங்கமானது தாமிர உலோகமாக மாறியது. இதனால் ஜ்வாலாமுகி தேவி தனது காணிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று உணர்ந்த அக்பர் மிகுந்த பணிவுடன் தேவியின் தீவிர பக்தரானார். பிரூஸ் ஷா துக்ளக் என்ற சுல்தான் இந்த கோவிலின் நூலகத்திலிருந்து 1300 சமஸ்கிருத கையெழுத்துப் பிரதிகளை சேகரித்து அவற்றை பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார் இத்தகைய மொழி பெயர்ப்பைச் செய்த முதல் சுல்தான் இவராவார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.