அரண்மனைக்கு சென்ற யுதிஷ்டிரன் தன்னுடைய பெயர் கணகன் என்று சொல்லி விராட நகர மன்னனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். தான் ஒரு பாண்டித்தியம் பெற்ற பிராமணன் என்றும் பகடை விளையாட்டில் வல்லவன் என்றும் தன்னைப் பற்றி கூறிக்கொண்டு தனக்கு ஏதேனும் வேலை வேண்டும் என்று கேட்டான். அதற்கு மன்னன் உன்னுடைய நடை உடை பாவனை ஆகியவை நீ ஒரு மேன்மகன் என்பதைத் தெரிவிக்கின்றன. நீ கற்றறிந்தவனாகவே தென்படுகிறாய். ஆகவே என்னுடைய தோழனாக உன்னை என்னோடு வைத்துக் கொள்கின்றேன். அரிய பெரிய விஷயங்களை நீ எனக்கு தெரிவிப்பாய். ஓய்வு வேளைகளில் நீ என்னோடு பகடை விளையாடு என்றான்.
சில நாட்கள் கழித்து பீமன் விராட மன்னனின் முன் தோன்றி தன்னுடைய பெயர் வல்லாளன் என்றும் தனக்கு சமையல் தொழில் நன்கு தெரியும் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். தன்னுடைய தொழிலுக்கு அறிகுறியாக தன் கையில் அவன் கரண்டி ஒன்றை வைத்திருந்தான். விதமான பட்சணங்கள் சமைத்து மன்னரை திருப்திப்படுத்த முடியும் என்று அவன் உறுதி கூறினான். மற்றும் நன்றாக மற்போர் புரிந்து மன்னனை மகிழ்விக்க முடியுமென்றும் தெரிவித்து தனக்கு வேலை வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். புதிதாக வந்தவனுடைய கம்பீரமான உடல் அமைப்பை பார்த்து மன்னன் வியப்பு அடைந்தான். இவன் சேனைப்படை ஒன்றுக்கு தலைமை வகிக்கும் தகுதி வாய்ந்தவன் என்று அரசன் எண்ணினான். அரண்மனை மடைப்பள்ளியில் தலைமை சமையல்காரனாக நியமிக்கப்பட்டான்.
தாறுமாறாக உடை அணிந்த பேடு ஒருத்தி அங்கு நின்று கொண்டிருந்தவர்களை ஒதுக்கி தள்ளிவிட்டு விராட மன்னன் முன்னிலையில் வந்தாள். பிருஹன் நளா தனது பெயர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். இந்திர லோகத்தில் வசித்த பொழுது அர்ஜுனன் ஒர் வருட காலம் பேடுவாக இருக்கவேண்டுமென்று ஊர்வசி சாபமிட்டாள். அந்த சாபத்தை ஒரு வருட காலம் மறைந்திருந்து வாழும் காலத்தில் பயன்படுத்திக் கொண்டான் அர்ஜுனன். தான் பாடல்கள் பாடுவதிலும் நாட்டியத்திலும் இசைக்கருவிகள் மீட்டுவதிலும் வல்லவள் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். உத்திரை என்பவள் விராட மன்னனின் மகளாவாள். அந்த ராஜகுமாரிக்கு லலித கலைகளையும் சொல்லித்தருவதாக கூறினான். சாபத்தினால் பேடு வேடத்தில் இருக்கும் அர்ஜுனனை கண்ட மன்னன் ஆண்மையோடு கூடிய ஆற்றல் மிகப் படைத்தவளாக இவள் தென்படுகிறாள். ஆகையால் இவளை மிகவும் ஜாக்கிரதையாக கவனித்துப் பார்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அவள் கேட்ட உத்தியோகத்தை அவளுக்கு அளித்தான்.
விராட மன்னன் தன் அரண்மனை லாயத்திலிருந்த குதிரைகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அழகு வாய்ந்த மனிதன் ஒருவன் தன் பெயர் தமக்ரந்தி என்றும் தான் குதிரைகளை பழக்குவதில் மிக வல்லவன் என்று தன்னை அறிமுகப் படுத்தினார். தனக்கு உணவும் உடையும் தங்க இடமும் கொடுத்தால் போதும் என்றும் குதிரையை பார்த்துக்கொள்ளும் வேலை வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான். வந்தவனின் நேர்த்தியான பாங்கை பார்த்து மன்னன் அவன் கேட்ட வேலையில் அமர்த்திக் கொண்டான். குதிரை லாயத்தில் வேலைக்கு சேர்ந்தவன் நகுலன்.