மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -6

சைரந்திரியின் ஓலத்தை கேட்ட விராட மன்னன் உங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் பிரச்சனை என்னவென்று எனக்குத் தெரியாது. உண்மையான காரணத்தை அறியாது நான் தீர்ப்பளிக்க முடியாது என்றும் சேனாதிபதிக்கும் வேலைக்காரிக்கும் இடையில் இருக்கும் இந்த சச்சரவு அந்தப்புரத்தில் துவங்கியதால் மகாராணி இதனை விசாரித்து வேண்டிய முடிவு எடுக்கட்டும் என்று மன்னன் கூறினான். சைரந்திரி கூறிய அனைத்தையும் அறிந்த சபை உறுப்பினர்கள் கீச்சகனை நிந்தித்தனர். கனகன் வேடத்தில் இருக்கும் யுதிஷ்டிரன் சைரந்திரியிடம் நீ இங்கே இருக்காதே உடனடியாக சுதேசனாவின் அறைக்குச் செல். உனது கந்தர்வக் கணவர்கள் இவ்வளவு பிரச்சனைக்குப் பிறகும் உனது உதவிக்கு விரைந்து வராததால் தங்கள் கோபத்தை அவர்கள் வெளிப்படுத்தும் நிலையில் இப்போது இல்லை என நான் நினைக்கிறேன். கந்தர்வர்கள் உனது துன்பத்தை கண்டு உனக்கு அநீதியிழைத்தவனின் உயிரை எடுப்பார்கள் என்றான்.

இந்தச் சொற்களைக் கேட்ட சைரந்திரி கலைந்த கேசத்துடன் கண்கள் சிவக்க சுதேசனாவின் அறையை நோக்கி ஓடினாள். அவளது நிலையைக் கண்ட சுதேசனா சைரந்திரி உன்னை யார் அவமதித்தது நீ ஏன் அழுகிறாய்? யாரால் உனக்கு இந்தத் துயரம் ஏற்பட்டது? எனக் கேட்டாள். நான் உங்களுக்காக மதுவைக் கொண்டு வரச் சென்றேன். என்னிடம் தவறாக நடந்து கொண்டு சபையில் மன்னரின் முன்னிலையிலேயே கீச்சகன் என்னை அடித்தான் என்றாள். இதைக் கேட்ட சுதேசனா நீ விரும்பினால் அவனைக் கொல்லச் செய்கிறேன் என்றாள். அதற்குத் சைரந்திரி கீச்சகன் யாருக்கு அநீதியிழைத்தானோ அவளை பாதுகாக்கும் கந்தர்வர்கள் அவனைக் கொல்வார்கள். இன்றே கீச்சகன் யமனின் வசிப்பிடம் செல்வான் என்பது உறுதி என்றாள்.

சைரந்திரி வல்லாளனை தனியாக சந்தித்து தன்னுடைய பரிதாபகரமான நிலையை தெரிவித்தாள். என்னை காப்பாற்றுங்கள். இல்லாவிடில் நான் தற்கொலை செய்து கொள்வேன். எனக்கு வேறு உபாயம் ஏதும் இல்லை என்றாள். பீமன் சிறிது நேரம் சிந்தித்தான். பிறகு சைரந்திரியிடம் கீச்சகனிடம் சமாதானமாக பேசுவதாக பாசாங்கு செய்து நள்ளிரவில் நாட்டிய மண்டபத்திற்கு தனித்து வந்து உன்னை சந்திக்கும் படி அவனிடம் கூறு. அவன் அங்கு வந்ததும் நான் மறைந்திருந்து மற்ற காரியங்களை பார்த்துக் கொள்கின்றேன் என்றான்.

இந்த திட்டத்தை சைரந்திரி ஏற்றுக்கொண்டு மிகத் திறமை வாய்ந்தவளாக கீச்சகனிடம் நடந்து கொண்டாள். அதன் விளைவாக கீச்சனுக்கு மட்டில்லா மகிழ்வு உண்டாயிற்று. ஆர்வத்துடன் நள்ளிரவில் நாட்டிய மண்டபத்திற்குள் அவன் நுழைந்தான். மங்கலான விளக்கொளியில் ஒரு கட்டிலின் மேல் மேனி முழுவதும் ஒரு போர்வையால் மூடப்பட்டு மானிட உருவம் ஒன்று தென்பட்டது. படுத்திருப்பது சைரந்தரி என்று எண்ணிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்த பேர்வழியை எழுப்பினான். எதிர்பார்த்ததற்கு மாறாக ராட்சசன் போன்ற ஒருவன் குதித்தெழுந்து வந்து கீச்சகனை தாக்கினான். வந்தவன் சைரந்திரியை பாதுகாக்கும் கந்தர்வர்களில் ஒருவனாக இருக்கும் என்று பயந்து போனான் கீச்சகன். இருவருக்கும் இடையில் மிக பயங்கரமான மற்போர் துவங்கியது. கீச்சகனை பீமன் கொன்றுவிட்டான். அவனுடைய உடலை ஒரு மாமிச குவியலை போன்று பிசைந்து விட்டான். எலும்புத்துண்டுகள் ஆங்காங்கு குவியலோடு கலந்து தென்பட்டன. பிறகு பீமன் நீராடி தன் மேனியில் சந்தனக் குழம்பைப் பூசி கொண்டு அயர்ந்து தூங்க சென்று விட்டான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.