மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -1

பாண்டவர்கள் யார் கண்ணிலும் படாமல் ஒருவருடம் அக்ஞாத வாசத்தை எப்படி பூர்த்தி செய்வது என்று தங்களுக்குள் ஆலோசனை செய்தார்கள். சிறிது நேரத்திற்கு பிறகு அவர்கள் ஒரு முடிவு எடுத்தனர். விராட வேந்தன் ஆண்டு வந்த மத்சிய நாட்டுக்குச் சென்று அங்குள்ள விராட நகரில் அரண்மனையில் மாறுவேடம் பூண்டு வாழ்ந்திருக்க அவர்கள் தீர்மானித்தார்கள் அந்நாடு செழிப்புடனும் ஆரவாரம் ஏதும் இன்றியும் அமைதியாக இருந்தது. அந்நாட்டு மன்னனும் அறிவு மிக படைத்தவன். பாண்டவர்களை அவன் மிகவும் நேசித்தான். கௌரவர்கள் மீது அவனுக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. ஆகையால் அவனுடைய நாடு பாண்டவர்கள் மறைந்து இருப்பதற்கு பொருத்தமானது என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள்.

அர்ஜுனன் தனக்கு தோன்றிய ஒரு அபிப்பிராயத்தை தெரிவித்தான். சகோதரர்கள் நால்வரும் எந்த ஒரு கீழ்த்தரமான பணிவிடைகளை செய்யும் சூழ்நிலை வந்தாலும் செய்யலாம். யுதிஷ்டிரன் மட்டும் தகுதிவாய்ந்த மேலான பதவி ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். ராஜசூய யாக்ஞம் செய்து வேந்தர்களுக்கெல்லாம் வேந்தனான யுதிஷ்டிரன் எந்த நெருக்கடியை முன்னிட்டும் தன்னுடைய தகைமைக்கு கீழான பணிகள் எதையும் செய்யலாகாது என்றான் அனைவரும் அர்ஜூனனின் கருத்தை ஏற்றுக்கொண்டனர். திரௌபதியை பற்றிய விஷயமோ மிகக் கடினமானது. அழகு வாய்ந்த இளம் மாது ஒருத்தி அரண்மனை ஒன்றில் வேலைக்காரியாக அமர்கின்ற பொழுது நினைக்க முடியாத சில நெருக்கடிகளை அவள் சந்திக்கக்கூடும். ஆகையால் ரகசியமாக பீமனும் அர்ஜுனனும் அவளை பாதுகாத்து வரவேண்டும் என தீர்மானித்தார்கள். பிறகு யார் கண்ணுக்கும் புலப்படாமல் பெரும்பாலும் இரவில் அவர்கள் பயணம் செய்து விராட நாட்டு எல்லையை அடைந்தார்கள்.

விராட நகரத்தின் எல்லைப்பகுதியில் இடுகாடு ஒன்று இருந்தது. அங்கு பாண்டவர்கள் போக்குவரத்து இல்லாத இடம் ஒன்றில் தென்பட்ட பழுத்த மரத்தின் மேல்பகுதியில் ஒரு பொந்தை கண்டார்கள். தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் பாண்டவ சகோதரர்கள் அப்பொந்தில் ஒளித்து வைத்தார்கள். பிறகு அம்மரத்தின் மீது பிணம் ஒன்று தொங்க விட்டனர். அதைப் பார்ப்பவர்களுக்கு அங்கு செல்ல பயமும் அருவருப்பும் அடைந்து மரத்தின் அருகில் யாரும் வரக்கூடாது என்று இந்த ஏற்பாட்டை செய்தனர். அதன்பிறகு அவர்கள் தனித்தனியாக பிரிந்து சென்றனர். ஒவ்வொருவரும் தனித்தனியாக அரண்மனைக்குச் சென்று வெவ்வேறு பணிவிடைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டனர். முதலில் யுதிஷ்டிரன் அரண்மனை நோக்கி சென்றான். நடந்து போய்க் கொண்டிருந்த போது தங்களை பாதுகாக்க வேண்டும் என்று துர்காதேவியை பிரார்த்தனை பண்ணி கொண்டான். அவனுடைய பிரார்த்தனைக்கு இணங்கி துர்காதேவி யுதிஷ்டிரனுக்கு காட்சி கொடுத்தாள். ஒரு வருடத்தின் அக்ஞாத வாசத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்வீர்கள் என்றும் பிறகு யுத்தத்தில் வெற்றி பெறுவீர்கள் என்றும் ஆசிர்வாதம் செய்தாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.