மகாபாரதம் 8. கர்ண பருவம் பகுதி -9

அர்ஜூனனுடன் வீராவேசமாக போர் புரிந்த கர்ணன் இத்தருணத்தில் இந்திரன் தனக்கு கொடுத்திருந்த சக்தி ஆயுதம் தன் கைவசம் இல்லையே என்று வருந்தினான். வேறு வழியில்லாமல் சக்தி ஆயுதம் துரியோதனனின் வேண்டுகோளின் படி கடோத்கஜன் மீது ஏவப்பட்டது. சக்தி ஆயுதத்திற்கு அடுத்தபடியாக நாகாஸ்திரம் மிக பயங்கரமான ஆயுதம் கர்ணன் அதை எடுத்தான். அர்ஜுனனுடைய கழுத்தை இலக்காக வைத்தான். கர்ணனின் குறியைக் கண்ட சல்லியன் கர்ணனிடம் அவன் கழுத்துக்கு குறி வைக்காதே. மார்புக்கு குறி வை என்றான். கர்ணன் அர்ஜுனன் மாபெரும் வீரன் அவன் உயிர் சில நிமிடங்கள் ஆனாலும் துடித்து இறப்பதை நான் விரும்பவில்லை. ஒரே நொடியில் வேதனை இன்றி அவன் இறக்கட்டும். இதோ அவன் கழுத்துக்கு குறி வைத்து எய்கிறேன் அம்பை என்றான்.

சல்லியன் மீண்டும் வலியுறுத்தினான். சொல்வதை கேள் கர்ணா அர்ஜுனனிடம் நாகாஸ்திரத்துக்கு தகுந்த பதில் அஸ்திரம் கிடையாது. எனவே கிருஷ்ணன் நிச்சயம் ஏதாவது சூழ்ச்சி செய்வான். எனவே நீ அவன் மார்புக்கு குறி வை என்றான். கர்ணன் கேட்கவில்லை நாகாஸ்திரம் நெருப்பைக் கக்கிக் கொண்டு அர்ஜுனனை நோக்கிப் பாய அர்ஜுனன் தன் முடிவு நெருங்கி விட்டது என கையைக் கட்டிக் கொண்டு காத்திருக்க அண்டசராசரங்கள் நடுநடுங்க போரை ஆவலாய் காணக் காத்திருந்த தேவர்கள் மனம் பதைபதைக்க நாகஸ்திரம் அர்ஜுனனை நெருங்கியது.

அந்த நேரத்தில் கிருஷ்ணன் தன் காலால் தேரை அழுத்த குதிரை மண்டியிட்டு அமர்ந்ததும் தேர் ஒன்னரை அடி மண்ணுக்குள் புதைந்தது. அர்ஜுனன் தலையைக் கொய்ய வந்த நாகாஸ்திரம் இந்திரனால் அர்ஜுனனுக்கு வழங்கப்பட்ட கிரீடத்தை சுக்குநூறாக உடைத்தது. அஸ்திரம் திரும்ப கர்ணனை வந்தடைந்தது. இந்த அதிசயத்தை கண்ட பாண்டவர்கள் கர்ஜித்து ஆரவாரம் செய்தார்கள். கோபம் கொண்ட சல்லியன் கர்ணனை மீண்டும் நாகாஸ்திரத்தை செலுத்துமாறு வற்புறுத்தினான். தான் குந்திக்கு செய்து கொடுத்த சத்தியத்தால் கர்ணன் அதை உபயோகிக்க மறுத்தான். சல்லியன் மீண்டும் மீண்டும் வற்புறுத்த கோபம் அடைந்த கர்ணன் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டாம். உங்கள் வேலை ரதம் ஓட்டுவது மட்டும் தான். அதை மட்டும் செய்யுங்கள் என்றான். இருவருக்கும் அபிப்பராய பேதம் உருவானது.

மீண்டும் இரு வீரர்களும் உயிரைப் பறிக்கும் அஸ்திரங்களை இருவரும் ஒருவர் மீது ஒருவர் எய்து கொண்டு போரிடுகிறார்கள். அர்ஜுனன் எய்த அம்புகள் கர்ணனைத் தாக்க கர்ணன் சோர்ந்து போகிறான். அப்போது அவன் முடிவு அவன் கண்களில் தெரிகிறது. மரணம் தன்னை நெருங்கி வந்ததை கர்ணன் உள்மனதில் அறிகிறான். காளதேவன் அசிரீரியாக கர்ணா பூமாதேவி உன் ரதத்தை தன்னுளே பிடித்து வைக்கப் போகிறாள் கவனம் என எச்சரிக்கிறார். அதை உணர்ந்து செயல்படும் முன்னரே தேர் சக்கரம் மண்ணில் புதைகிறது.

No photo description available.
This image has an empty alt attribute; its file name is image-31.png

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.