ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 4

ராமரிடம் இருந்த சீதையை பிரித்து இங்கு கொண்டு வந்ததில் இருந்து இலங்கை நகரத்தில் அபசகுனங்கள் நிறைய தெரிகிறது. ஹோமங்கள் செய்யும் போது எரியும் அக்னி எரிய வேண்டிய முறையில் எரியவில்லை. சரியான மந்திரங்களை சொல்லி ஆகுதிகளையும் நெய்யையும் அக்னியில் போட்டாலும் அக்னி எரிவதில்லை. பூஜை செய்யும் இடங்களில் பாம்புகள் நிறைய காணப்படுகிறது. இறைவனுக்கு படைக்க செய்யும் உணவுகளை இறைவனுக்கு படைக்கும் முன்பாகவே அதில் எறும்புகள் வந்து மொய்க்கிறது. பசுக்கள் சரியாக பால் கரப்பது இல்லை. நமது அரண்மணையில் உள்ள யானைகள் குதிரைகள் கோவேறு கழுதைகள் என அனைத்து விலங்குகளும் ஆரோக்கியம் இல்லாமல் கிடக்கின்றது. சரியாக உண்ணாமல் விபரீதமாக நடந்து கொள்கின்றன. விலங்குகளுக்கு செய்யும் வைத்தியங்கள் எதுவும் பலன் அளிக்கவில்லை. காக்கைகள் நகரத்தின் உயரமான இடங்களின் மேல் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து விபரீதமாக கத்துகின்றன. கழுகுகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. நரிகள் ஊருக்குள் புகுந்து ஊளையிடுகின்றன. காட்டு மிருகங்கள் நகரத்திற்குள் நடமாடுகின்றன. சகுனம் சொல்லும் அறிஞர்கள் இந்த அபசகுனங்களின் அறிகுறிகளை பார்த்து அதற்கு அர்த்தம் சொல்வது அனைவருக்கும் கவலையை உண்டாக்கி இருக்கின்றது. இவையெல்லாம் நமக்கு மிகப்பெரிய அபாயத்தையும் நஷ்டத்தையும் குறிக்கின்றது. இதை நாம் அலட்சியம் செய்யக்கூடாது. சீதையைத் திருப்பி அனுப்பிவிடுங்கள். அவளை இங்கு கொண்டு வந்தது முதல் இந்த அறிகுறிகள் காணப்படுகின்றன. நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால் மற்றவர்களையும் விசாரித்து கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். நான் சொன்னதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் என் மீது கோபித்துக் கொள்ளாதீர்கள்.

ராமரை பகைத்துக் கொள்வதினால் நமக்கு லாபம் ஒன்றும் இல்லை. சீதையை திருப்பி அனுப்பிவிட்டு நாம் சுகமாக வாழ்வோம் என்று மிகப் பணிவுடன் விபீஷணன் ராவணனிடம் கூறினான். அதற்கு ராவணன் சீதையைத் திருப்பி தரும் பேச்சுக்களை இங்கு பேச வேண்டாம். அது ஒரு நாளும் முடியாது. ராமரை நான் ஒரு எதிரியாகவே காணவில்லை. ராமரின் மேல் எனக்கு ஒரு பயமும் இல்லை நீ போகலாம் என்றான். ராவணன் சீதையை திருப்பி அனுப்பக் கூடாது என்று பிடிவாதமாக இருந்தாலும் தன்னுடைய ஆசை நிறைவேறவில்லையே என்று மிகவும் வருந்தினான். தான் செய்யும் காரியத்திற்கு தன்னுடைய உறவினர்களும் தவறாக பேசுகின்றார்களே என்று தனது மன அமைதியை இழந்தான் ராவணன். அதனை யாரிடமும் காட்டிக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் சபையை கூட்டி ஆலோசனை செய்தான். இழந்த மன அமைதியை மீண்டும் பெறுவதற்காக சபையை கூட்டி ஆலோசனை என்ற பெயரில் தன்னை மற்றவர்கள் பெருமையாக பேசுவதை கேட்டு ஆறுதல் அடைந்தான் ராவணன். தனது அகங்காரத்தால் சிறிய காரியத்துக்கு கூட சரியான யோசனை செய்ய இயலாமல் முடிவெடுக்க முடியாமல் திணறினான் ராவணன்.

ராமரை பற்றி விவாதிக்க மீண்டும் தனது மந்திரி சபையை கூட்டினான். இந்த முறை நகரத்தில் உள்ள அனைத்து ராட்சச குழுக்களின் தலைவர்களும் வர வேண்டும் என்று கட்டளையிட்டான். அரண்மனையில் ராட்சச தலைவர்களால் நிரம்பியது. ராவணன் பேச ஆரம்பித்தான். எல்லா விதத்திலும் நீங்கள் திறமைசாலிகள். இந்த மந்திரி சபையில் உள்ளவர்கள் எந்த விதமான சிக்கலான காரியத்திற்கும் சரியான யோசனை சொல்லும் சக்தி வாய்ந்தவர்கள் நீங்கள். இதுவரை நீங்கள் ஆலோசித்து சொன்ன அனைத்தும் நமக்கு நன்மையை அளித்திருக்கிறது. இதுவரையில் நாம் செய்த யுத்தங்களும் அதற்கு நீங்கள் சொன்ன அனைத்து ஆலோசனைகளும் நமக்கு பல வெற்றிகளை கொடுத்திருக்கிறது. நாம் இது வரையில் தோல்விகளை கண்டதில்லை. இப்பொழுது உங்களிடம் நான் ஒன்று கேட்கிறேன்.

நாயன்மார் – 8. இயற்பகை நாயனார்

காவிரிபூம்பட்டினத்தில் கடற்கரை பகுதியில் வசித்தவர் இயற்பகையார். வணிகரான இவர் பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தார். சிறுவயது முதலே ஈசனின் மீதும் அவர்கள் அடியார்கள் மீதும் அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். சிவனடியார்கள் யார் எது கேட்டாலும் இல்லை என்று கூறாமல் தன்னிடம் இருக்கும் அனைத்தையும் கொடுக்கும் அளவுக்கு சிவனின் சிறப்பு மிக்க அடியவராக திகழ்ந்தார். இயற்பகையாரின் பக்தியை உலகுக்கு உணர்த்த சிவபெருமான் சித்தம் கொண்டு தன் பக்தனை சோதிக்க எண்ணிய சிவபெருமான் அடியவர் வேடத்தில் இயற்பகையாரின் மாளிகை முன்பாக வந்து நின்றார். அவரைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தார் இயற்பகையார். அடியவர் தன் வாசல் தேடி வந்தது நான் செய்த பாக்கியம் என்று கூறி அவரை உள்ளே அழைத்துச் சென்றார். பின்னர் உயர்வான ஒரு ஆசனத்தில் அமரச் செய்தார். பின்னர் அடியவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். நீங்கள் இறைவனின் அடியவர்கள் என்ன கேட்டாலும் இல்லை என்று கூறாமல் வழங்குகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். அதனால் உங்கள் இருப்பிடம் தேடி வந்தேன் என்றார். அதற்கு இயற்பகையார் ஐயனே எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். என்னிடம் இருக்கும் பொருள் எதுவுமே எனக்கு சொந்தமானது இல்லை. எல்லாம் ஈசன் தந்தது. ஆகையால் அதனை இறைவனின் அடியவர்களுக்கே கொடுத்து ஆனந்தம் கொள்கிறேன் உங்களின் தேவையை சொல்லுங்கள் என்றார்.

சிவனடியார் வேடத்தில் இருந்த இறைவன் உன்னுடைய அழகிய மனைவி எனக்கு வேண்டும். அவளை என்னுடன் அனுப்பி வை என்றார். சாதாரண ஒரு மனிதனாக இருந்தால் இந்த இடத்தில் நடக்கும் செயல் வேறுமாதிரியானதாக இருந்திருக்கும். ஆனால் இறைவனின் சித்தத்தை உணர்ந்த இயற்பகையார் சிவனடியாருக்கு வேண்டியதைத் தருவதாக ஒப்புக் கொண்டார். ஐயனே தாங்கள் என்னிடம் இல்லாத பொருளைக் கேட்டு என்னை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விடுவீர்களோ என்று கவலை கொண்டிருந்தேன். ஆனால் அப்படி எதுவும் நடைபெற வில்லை. ஆகையால் என் மனம் இப்போது மகிழ்ச்சியில் திளைக்கிறது. தங்கள் விருப்பப்படி இதோ என் மனைவியை உங்களுடன் அனுப்பி வைக்கிறேன் என்று கூறியவர் தன் மனைவியிடம் நடந்த விவரங்களை கூறினார். இயற்பகையாரின் இயல்பை நன்றாக அறிந்து வைத்திருந்த அவரது உத்தம மனைவி கணவனின் பேச்சுக்கு மறுபேச்சின்றி அவர் கட்டளையை ஏற்றுக் கொண்டாள். தான் சிவனடியாருடன் செல்வதாக ஒப்புக் கொண்டாள். இதையடுத்து இயற்பகையார் மனைவியை சிவனடியார் முன் நிறுத்தி அழைத்துச் செல்லும்படி கூறினார். வேடதாரியான சிவபெருமான் அங்கிருந்து சென்றார். அவர் பின்னே இயற்பகையாரின் மனைவியும் புறப்பட்டார். வீட்டின் வெளியே சென்ற பின் சிவனடியார் ஏதோ ஒரு யோசனையில் அப்படியே நின்றார். என்ன என்று அறியாததால் பதறிப்போய் ஓடி வந்த இயற்பகையார் ஐயனே ஏன் நின்று விட்டீர்கள் வேறு ஏதாவது வேண்டுமா என்று கேட்டார். அதற்கு அடியவர் ஒன்றுமில்லை. இந்த ஊரில் உனது உறவினர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். மேலும் நான் உன் மனைவியை அழைத்துச் செல்வது தெரிந்தால் அவர்களுடன் சேர்ந்து ஊர் பொதுமக்களும் எனக்கு இடையூறு செய்யக்கூடும். எனவே ஊர் எல்லை வரை நீ எனக்குத் துணையாக வந்தால் நலம் என்று நினைக்கிறேன் என்றார். ஐயனே இது நானே உணர்ந்து செய்திருக்க வேண்டிய காரியம். ஆனால் தவறிவிட்டேன். நீங்கள் நினைத்தது சரிதான். நான் உங்களுடன் வருகிறேன். எதிர்ப்பவர் எவராக இருப்பினும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியபடி வீட்டிற்குள் சென்று ஒரு வாளும் கேடயமும் எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

சிவனடியார் முன் நடக்க அவரைத் தொடர்ந்து இயற்பகையாரின் மனைவியும் பின் இயற்பகையாரும் சென்றனர். இதற்கிடையில் நடந்த சம்பவங்களை கேள்விப்பட்டு அவர்கள் செல்லும் வழியில் இயற்பகையாரின் உறவினர்களும் ஊர் பொதுமக்களும் கூடினர். அவர்கள் மூவரையும் தடுத்து நிறுத்தினார்கள். அடே மூடனே எவரும் செய்யத் துணியாத காரியத்தை செய்து ஊருக்கும் உறவினர்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறாய். உன் அறிவு இப்படியா மழுங்கிப் போகும். இப்போதே உன் மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டுச் செல் என்று அனைவரும் இயற்பகையாரை எச்சரித்தனர். ஆனால் அவர் தன் அடியவரை தடுக்கும் உங்களை கொன்று அழிக்கவும் தயங்க மாட்டேன் என்று கூறி எதிர்ப்பவர்கள் அனைவரையும் வாளால் வெட்டி வீழ்த்தினார். தப்பி ஓடியவர்கள் உயிர் பிழைத்தனர். எதிர்த்தவர்கள் இயற்பகையாரின் வாளுக்கு பலியாகினர். உறவினர்கள் அழுதனர். மூர்க்கத்தனமான அவரது வாள் வீச்சை எதிர்க்கும் சக்தி அவர்களில் யாருக்குமில்லை. சிவவேதியர் ஊர் எல்லைக்கு வந்து விட்டார். அவர்களை எதிர்த்து அங்கு யாரும் வரவில்லை. ஆகவே இயற்பகையாரை ஊருக்குத் திரும்புமாறு சிவவேதியர் கட்டளையிட்டார். அதை வேதவாக்காக கருதிய இயற்பகையார் சிவனடியாரை வணங்கி விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். அவர் தனது மனைவியை சற்றும் சலனமில்லாமல் திரும்பிப் பார்க்காமல் சென்றார்.

இயற்பகையனாரின் செயலைப் பார்த்து சிவனடியார் உருவில் இருந்த சிவபெருமான் மனம் மகிழ்ந்தார். அவரது பக்தியின் உயர்வைக் கண்டு இன்புற்றார். சிறிது தூரம்தான் சென்ற இயற்பகையனாருக்கு சிவனடியாரின் காப்பாற்றுங்கள் இயற்பகையாரே காப்பாற்றுங்கள் என்ற ஓலக்குரல் கேட்டது. பதறிப்போன இயற்பகையார் குரல் வந்த திசை நோக்கி ஓடினார். ஐயனே உங்களுக்கு தீங்கிழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கொன்று அழிப்பேன் என்று எண்ணியபடி சென்றார். ஆனால் அங்கு சிவனடியாரைக் காணவில்லை. தன் மனைவி மட்டும் தனியாக நிற்பதைக் கண்டார். சற்றே குழப்பத்தில் ஆழ்ந்தார். அப்போது ஒரு பேரொளி விண்ணில் எழுந்தது. அந்த ஒளியில் இருந்து அசரீரியாக சிவவேதியரின் குரல் ஒலித்தது. இயற்பகையாரே உங்களை சோதிக்க யாமே வந்தோம். ஊரார் என்னை காமாந்தகாரன் என்று வசைபாடினர். நீரோ உலக மாந்தரின் இயல்பான சுபாவங்களை எல்லாம் உதறி எறிந்து உங்களது கொள்கையில் உறுதியாக நின்றீர்கள். சிவனடியாரே உபசரிக்கும் உங்களது பண்பு இந்த உலகம் கண்டு வியக்கக்கூடியது. அதை அனைவருக்கும் உணர்த்தவே உங்களை இவ்வாறு சோதித்தோம். சிவலோகம் உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது என்றார் இறைவன். இயற்பகையார் மெய் சிலிர்த்து நின்றார். அவர் மீதும் அவர் மனைவி மீதும் விண்ணவர்கள் பூமாரி பொழிந்தனர். சிவனடி சேர்ந்து அவ்விருவரும் அரிதிலும் அரிதான பாக்கியம் பெற்றனர். அவர்களுடன் இயற்பகையாரின் வாளுக்கு பலியானவர்களும் சிவலோகம் சென்றனர்.

குருபூஜை: இயற்பகை நாயனாரின் குருபூஜை மாதம் மார்கழி உத்திரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 3

ராமரைப் பற்றி அறிந்த நான் பேசுகிறேன் என்று ராவணனின் தம்பி விபீஷணன் எழுந்தான். இங்கிருக்கும் அனைவரும் தங்களின் பெருமைகளை பேசுவதிலும் உங்களை புகழ்வதிலுமே குறியாக இருக்கிறார்கள். இவர்களின் யோசனைகள் தங்களுக்கு இனிமையாக இருந்தாலும் நமது நாட்டிற்கும் நமது குலத்திற்கும் இது சரியானதல்ல. நீதி தர்மத்திற்கு எதிராக ஒரு காரியத்தை செய்தால் அதன் எதிர் விளைவுகள் கடுமையானதாக கண்டிப்பாக வரும். அதுவே இப்போது வந்திருக்கிறது. இதற்கு முதலில் அமைதியான பேச்சுக்கள் வழியாகவும் அறிவுப்பூர்வமாகவும் தீர்வுகளை தேட வேண்டும். அது முடியாவிட்டால் அதன் பிறகு யுத்தத்தை செயல்படுத்த வேண்டும். இவர்கள் சொல்வது போல் நீங்கள் முதலில் யுத்தத்தை ஆரம்பித்தால் இலங்கையும் நமது குலமும் முற்றிலும் அழிந்து போகும். தருமத்தை சிந்தித்து எது சரியானதோ அதனை முதலில் செய்யுங்கள்.

ராமருடைய மனைவி சீதையை நீங்கள் தூங்கி வந்தது பாவகரமான காரியமாகும். அந்த பாவத்தை தீர்த்துக் கொள்ள முதலில் அதற்கான வழியை தேடுங்கள். ராமர் நமக்கு என்ன தீங்கு செய்தார். தனது தந்தையின் சத்தியத்தை காப்பாற்ற தண்டகாருண்ய காட்டில் தனது மனைவியுடனும் தனது தம்பியுடனும் யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல் அமைதியாகவே வாழ்ந்து வந்தார். அங்கு அவரிடம் சரணடைந்தவர்களையும் தன்னை சார்ந்தவர்களையும் காப்பாற்றிக் கொள்வதற்காக தன்னை எதிர்த்து வந்த ராட்சசர்களை யுத்தம் செய்து அழித்தார். ராமரின் மேல் கோபம் இருந்தால் நீங்கள் ராமரை எதிர்த்து யுத்தம் செய்திருக்க வேண்டும் அதைவிட்டு அவர்களை வஞ்சகமாக ஏமாற்றி அவரது மனைவியை தூக்கி வந்து விட்டீர்கள். இது மிகப்பெரிய பாவமாகும். நம் பெயரில் குற்றத்தை வைத்துக் கொண்டு யுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்வது சரியானதல்ல.

ராமருடைய பலத்தை முதலில் சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். அவரின் தூதுவனாக வந்த அனுமனின் பலத்தையும் சாமர்த்தியத்தையும் நாம் அனைவரும் கண்டோம். இவ்வளவு பெரிய கடலை ஒரே தாவலில் தாவ யாராலும் முடியாது ஆனால் அனுமன் தாண்டினான். அனுமானம் செய்ய முடியாத அளவிற்கு அனுமனின் வீரம் உள்ளது. ராமரைப் பற்றியும் அனுமனைப் பற்றியும் இங்கிருப்பவர்கள் அலட்சியமாக பேசுவதில் பயனில்லை. நம்முடைய பலம் பெரிதாக இருந்தாலும் எதிரியின் பலத்தையும் பார்த்து யுத்தத்தை தீர்மானிக்க வேண்டும். சீதையை முதலில் ராமரிடம் ஒப்படைத்து விட்டால் யுத்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ராமரும் லட்சுமணனும் இங்கு வருவதற்குள் சீதையை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். உங்களின் கருத்துக்கு எதிரான கருத்தை சொல்கிறேன் என்று என்மீது கோபம் கொள்ள வேண்டாம். உங்களின் நன்மைக்காக சொல்கிறேன் என்று ராவணனிடம் விபீஷணன் அமைதியுடன் கூறினான். தன்னுடைய மந்திரிகள் சேனாதிபதிகளின் வீரப்பேச்சுக்களை மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்த ராவணனுடைய மனதில் இருந்த சந்தேகம் அதிகமானது. நாளை மீண்டும் இதை பற்றி விவாதிக்கலாம் என்ற ராவணன் அவையை ஒத்தி வைத்து விட்டு அந்தப்புரம் சென்று விட்டான்.

ராமரைப் பற்றியே இரவு முழுவதும் சிந்தித்துக் கொண்டே இருந்தான் ராவணன். அதிகாலையில் வாத்தியங்கள் வேதங்கள் முழங்க மங்கள இசைகளுடன் இருந்த ராவணனது அந்தப்புரத்திற்கு விபீஷணன் சென்றான். ராவணனை வணங்கிய விபீஷணனை பார்த்ததும் அங்கிருக்கும் அனைவரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு விபீஷணனிடம் என்ன செய்தி என்று கேட்டான் ராவணன். அதற்கு விபிஷணன் அண்ணா நான் சொல்வதில் தவறு இருந்தால் மன்னிக்க வேண்டும். என்னுடைய லாபத்திற்காக நான் எதுவும் பேசவில்லை. என்னுடைய அண்ணன் என்ற பாசத்தில் உங்களின் நலன் கருதியே பேசுகிறேன். நீங்கள் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

நாயன்மார் – 7. இடங்கழி நாயனார்

சோழநாட்டின் சிறிய நாடான கோனேட்டில் கொடும்பாளூர் என்னும் ஊரை இடங்கழி நாயனார் ஆண்டு வந்தார். சிவ வழிபாட்டினை போற்றி வந்தவர் இவர். இவரது காலத்தில் தான் சிவாலயங்கள் அதிகம் எழுப்பப்பட்டதாக வரலாறு கூறுகிறது. பேரும் புகழும் பெற்ற இக் குறுநில மன்னர் கோயில்களில் நடக்கும் சிவாகம வழிபாட்டிற்குத் தேவையான நெல்லையும் பொன்னையும் வாரி வாரி வழங்கினார். ஆகமத்திலுள்ள சைவ நெறியையும் வேதத்திலுள்ள தர்ம நெறியையும் பாதுகாத்து வந்த இவர் காலத்தில் சைவம் தழைத்தோங்கியது. சிவபெருமானுக்குத் திருத்தொண்டுகள் புரியும் அடியவர்களுக்கு கணக்கற்ற உதவிகளைச் செய்து வந்தார். அவரது நாட்டில் அடியார்கள் பலரும் இவருடன் சேர்ந்து சிவனடியார்களுக்கு உணவளித்து அருந்தவப் பணிகளை செய்து கொண்டு வந்தனர்.

அந்த ஊரில் இருந்த சிவனடியார் ஒருவர் சிவனுக்காகவே தான் வாழ்வு என்று வாழ்ந்து வந்தார். அடியவர்களுக்கு அன்னதானம் வழங்குவதைத் தவிர வேறு எந்த பணிகளையும் செய்யாமல் வாழ்ந்து வந்தார். சிவ நாமம் சொல்லி வரும் அடியார்கள் அனைவரும் இறைவனே என்று எண்ணினார். அவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்து அவர்களுக்கு உணவு அளித்து வந்தார். சிவனின் மீது எவ்வளவு பக்தி இருந்தால் இத்தகைய பணி விடையை அவர் செய்வார் என்று மகிழ்ந்த சிவனடியார்கள் இவரது அன்பில் செல்லும் இடமெல்லாம் இவரது புகழை பரப்பினார்கள். இதனால் அந்த ஊருக்கு வரும் அனைத்து சிவனடியார்களும் இந்த அடியாரின் வீட்டில் உணவு உண்பதை பெரும்பேறாக கருதினார்கள். சிவனடியார்களின் வருகையால் மூட்டிய அடுப்பு அணையாமலேயே உணவுகள் தயாரித்து கொண்டிருந்தார். அவரிடம் இருந்த செல்வம் சிறிது சிறிதாக கரைந்தது. ஆனாலும் மூட்டிய நெருப்பு அணையாமல் பார்த்துக் கொண்டார். செல்வம் முற்றிலும் கரைந்தது. அடியார்களுக்கு உணவு அளிப்பதை எக்காலத்திலும் நிறுத்தக்கூடாது அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்த சிவனடியார் அந்நாட்டின் அரண்மனை கருவூலத்துக்குள் திருட்டுத்தனமாக நுழைந்தார். நெல்மணிகள் ஆபரணங்கள் தங்கக்காசுகள் என்று கையில் பட்டதை மூட்டை கட்டி எடுத்து வந்தார். அதனால் அன்னதானமும் குறைவின்றி தொடர்ந்து வந்தது. சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்குவதை இலட்சியமாக கொண்டு வாழ்ந்தவருக்கு தன்னுடைய இலட்சியத்தில் குறையில்லாமல் அன்னதானம் நடக்கிறதே என்ற திருப்தி ஏற்பட்டது.

அரண்மனையில் பொக்கிஷங்களிலிருந்து பணமும் பொருளும் குறைகிறது என்று அரசர் இடங்கழியாரிடம் புகார் சென்றது. அரசர் காவலை பலப்படுத்தினார். ஒருநாள் பொருளை கொண்டு வரும்போது சிவனடியார் கையும் களவாக பிடிபட்டார். இடங்கழி நாயனாரிடம் அழைத்து சென்றார்கள். காவலர்கள் செய்தியை சொல்ல அடியவர் சிவக்கோலத்தில் நெற்றி நிறைய விபூதியுடன் தெய்வீக முகத்தை கண்ட இடங்கழி நாயனார் திகைத்தார். சிவக்கோலம் தாங்கியுள்ள நீங்கள் இத்தகைய இழிவான தொழிலைச் செய்யக் காரணம் என்ன என்று கேட்டார். சோழப் பெருந்தகையே சிவனடியார்களுக்கு உணவு கொடுப்பதை பல வருடங்களாக தவறாமல் செய்து வந்தேன். இப்போது இந்த சிறந்த சிவப்பணிக்கு சிக்கல் ஏற்பட்டது. அதனால் அரண்மனைக் களஞ்சியத்தில் உள்ள நெல்லைக் எடுத்து செல்லலாம் என்ற முடிவிற்கு வந்தேன் என்றார். அடியவர் சொன்னதை கேட்ட இடங்கழி நாயனார் அவரை காவலிலிருந்து விடுவித்தார். சிவனை வணங்கும் நான் கூட அடியார்களுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. இவ்வளவு செல்வம் என்னிடமிருந்து என்ன பயன். என்னிடமுள்ள அனைத்து செல்வங்களும் சிவபக்தரில் சிறந்தவரான உங்களிடம் தான் இருக்க வேண்டும் என்று தன்னிடமிருந்த செல்வத்தை அடியாருக்கு வழங்கி அவரை வணங்கினார். அத்துடன் தமது நாட்டிலுள்ள சிவனடியார்களுக்கு தேவையான நெற்குவியல்களை அவர்களே எடுத்துச் செல்லட்டும் என்று பறைசாற்றுங்கள் என்று கட்டளை இட்டு மன நிறைவு பெற்றார் இடங்கழி நாயனார். இடங்கழியாரின் வள்ளல் குணத்தைக் கண்ட சிவபெருமான் அவருக்கு காட்சி தந்து அருளினார். அருள் வேந்தராகிய அரசர் நெடுங்காலம் அரசு புரிந்திருந்து சிவபதம் அடைந்தார்.

குருபூஜை: இடங்கழியார் நாயனாரின் குருபூஜை ஐப்பசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

நாயன்மார் – 6. இசைஞானியார்

திருவாரூர் என்னும் வளம் நிறைந்த ஊரில் ஆருர் என்னும் கமலாபுரத்தில் ஆதி சைவ குலத்தில் கௌதம கோத்திரத்தில் பிறந்தவர் ஞானசிவாச்சாரியார் என்பவர். அவருக்குத் திருமகளாக அவதரித்தவர் இசைஞானியார். சிறுவயது முதலே சிவபெருமானின் மீது மிகுந்த அன்புடனும் பக்தியுடனும் சிறந்த சிவபக்தையாக வளர்ந்து திருவாரூர் இறைவரது திருவடிகளை என்றும் மறக்காமல் வாழ்ந்து வந்தார். குழந்தைப் பருவம் முடிந்து திருமணப் பருவத்தை அடைந்ததும் ஞான சிவாச்சாரியார் தனது மகளை சடைய நாயனாருக்கு திருமணம் செய்து வைத்தார். சடைய நாயனாரோடு இல்வாழ்க்கையில் ஈடுபட்ட போதும் சிவபெருமானின் மீது கொண்ட பக்தியிலும் அவரை வழிபடுவதிலும் எவ்விதமான குறைகள் இன்றி வாழ்ந்து வந்தனர். இசைஞானியார் பக்தியில் மகிழ்ந்த சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாரை புத்திரனாகப் பெறும் பேறு பாக்கியத்தை இசைஞானிப் பிராட்டியாருக்கு அருளினார். தனக்கு பிறக்கும் குழந்தை தர்ம வழியில் வாழ வேண்டும் என்பதற்காக குழந்தையை கருவில் சுமக்கும்போதே சிவமந்திரங்கள் மற்றும் சிவபோற்றிகளை கற்பித்தார். இவருக்கு பிறந்த சுந்தரமூர்த்தி நாயனார் சமயக்குரவர்களில் ஒருவராவர். இத்தம்பதிகளின் மகனான சுந்தரமூர்த்தியை அந்நாட்டு மன்னன் நரசிங்க முனையார் தம்மோடு அழைத்துப் போக எண்ணியபோது இவர் மன்னரது அன்பிற்குக் கட்டுப்பட்டு ஒன்றும் பேசாமல் குழந்தையை அனுப்பி வைத்தார்.

சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்றமைக்காகவும் சைவநெறியில் நின்றமைக்காகவும் அவரது பெற்றோர்கள் இருவரையுமே நாயன்மார்கள் பட்டியலில் சேக்கிழார் இணைத்துள்ளார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தாம் பாடியருளிய திருத்தொண்டத் தொகையில் பல இடங்களில் தம் பெற்றோர்களைப் பற்றிச் சிறப்பித்துக் கூறியுள்ளார். திருதொண்டத்தொகை பாடி உலகையெல்லாம் உய்வித்த தெய்வ புதல்வனை ஈன்ற சடைய நாயனாரும் இசைஞானியாரும் இறைவன் திருவடி நிழலை அடைந்து இன்புற்றனர்.

குருபூஜை: இசைஞானியார் நாயனாரின் குருபூஜை சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 2

ராமரைப் பற்றியும் அனுமன் வந்து சென்றது பற்றியும் ராவணன் பேசியதை கேட்ட அவனது சபையில் உள்ள ஒரு ராட்சசன் தனது கருத்தை சொல்ல ஆரம்பித்தான். நம்முடைய சேனை பலமும் ஆயுத பலமும் இந்த உலகத்தில் மிகப் பெரியதாகவும் வலிமை உள்ளதாகவும் இருக்கும் போது நீங்கள் ஏன் கவலைப் படுகின்றீர்கள். நமது கோட்டையை எந்த எதிரிகளாலும் வெற்றி பெற முடியாது. தேவலோகம் சென்று இந்திரனை வெற்றி பெற்றிருக்கிறீர்கள். யாராலும் வெற்றி பெற முடியாத தானவர்களுடன் தங்களின் தவ பலத்தால் ஒரு வருடம் யுத்தம் செய்து வெற்றி பெற்றிருக்கிறீர்கள். போகவதி நகரத்திற்கு சென்று நாகராஜனை எதிர்த்து தாங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். குபேரனை தோற்கடித்து அவனுடைய புஷ்பக விமானத்தை தாங்கள் பெற்றிருக்கிறீர்கள். தங்களுக்கு பயந்து மயன் தங்களுடன் நட்பு கொண்டு அவனது மகள் மண்டோதரியை உங்களுக்கு மணம் முடித்து கொடுத்திருக்கிறான். பாதாளத்தில் உள்ள பல நகரங்களையும் காளகேயர்களையும் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். வருணனுடைய மகன்களையும் யமனையும் கூட தங்கள் முன்பு மண்டியிட வைத்து விட்டீர்கள். இவ்வளவு பல சாலியான உங்களுக்கு ராமர் ஒரு எதிரியே அல்ல. தங்களுடைய பலம் எதிரிக்கு தெரிந்திருக்கும். தங்களை எதிர்க்க இங்கு யாரும் வரமாட்டார்கள். மீறி வந்தால் அவர்களை சமாளிக்க தங்களின் புதல்வனான இந்திரஜித் ஒருவனே போதும். எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் இந்திரஜித்தை நீங்கள் அனுப்பி வைத்தால் அத்தனை பேரையும் அழித்து வெற்றி பெறுவான். காரியம் முடிந்தது கவலைப்படாதீர்கள் என்று ராவணனை புகழ்ந்து சொல்லி அமர்ந்தான். ராவணனின் சேனாதிபதி மகாசுரன் எழுந்து தனது கருத்தை சொல்ல ஆரம்பித்தான்.

அனுமன் இலங்கைக்கு வந்த போது சிறிது அஜாக்கிரதையாக இருந்து விட்டோம். நமது அஜாக்கிரதையை பயன்படுத்தி அந்த வானரம் தனது வலிமையை காட்டி நம்மை எல்லாம் அவமானப்படுத்தி விட்டு சென்று விட்டது. இது போல் மீண்டும் நடக்க விட மாட்டேன். மறுபடி அந்த வானரம் இங்கே வந்தால் நான் பார்த்துக் கொள்கிறேன். எத்தனை வானரங்கள் வந்தாலும் அத்தனை பேரையும் அழித்து விடுவேன். ஒரு தவறு நடந்து விட்டதால் அதை தொடர்ந்து அபாயம் வரும் என்று கவலைப்பட வேண்டியதில்லை. தேவர்கள் கந்தர்வர்கள் தானவர்கள் என அனைவரையும் எதிர்த்து வெற்றி பெற்ற தாங்கள் ராமரைப் பற்றி கவலை கொள்ளாதீர்கள் என்று சொல்லி முடித்தான். துர்முகன் என்ற ராட்சசன் எழுந்து எனக்கு உத்தரவு கொடுங்கள். நம்மை எல்லாம் அவமதிப்பு செய்த அந்த வானரத்தையும் அவனது கூட்டத்தையும் இப்போதே சென்று அழித்து விட்டு திரும்புகிறேன் என்று கர்ஜனை செய்தான்.

ராமரும் லட்சுமணன் இருவர் மட்டுமே இப்போது நமது எதிரிகளாக இருக்கிறார்கள். சாதாரண வானரத்தை பற்றி ஏன் பேச வேண்டும். எனக்கு உத்தரவு கொடுங்கள் அவர்களை நான் ஒருவனே சென்று அழித்துவிட்டு வருகிறேன் என்று வஜ்ர தம்ரஷ்டிரன் என்ற ராட்சசன் தனது பரிகை என்ற உலக்கை ஆயுதத்தை காண்பித்தான். கும்ப கர்ணனின் மகன் நிகும்பன் எழுந்தான். நீங்கள் அனைவரும் இங்கே இருங்கள் யாரும் வர வேண்டாம் நான் ஒருவனே கடலின் அக்கரையில் அவர்கள் இருக்கும் இடம் சென்று அவர்களை தின்று விட்டு உங்களுக்கு செய்தியை சொல்கிறேன் என்றான். ஒரு ராட்சசன் எழுந்து நாம் சூழ்ச்சி மூலமாக இவர்கள் அனைவரையும் அழித்து விடலாம். அதற்கான திட்டத்தை சொல்கிறேன் என பேச ஆரம்பித்தான். பல ராட்சசர்களை மனித வேடம் அணியச் செய்து ராமரிடம் அனுப்புவோம். பரதன் எங்களை அனுப்பியிருக்கிறான். நான்கு வகை பெரும் படை ஒன்று பின்னால் வருகிறது சிறிது நாள் காத்திருங்கள் என்று சொல்லுவோம் அவர்கள் கடற்கரையிலேயே ஓய்வு எடுத்துக் கொண்டு காத்திருப்பார்கள். நமது சூழ்ச்சி வலையில் விழுந்த அவர்களை நாம் வான் வழியாக சென்று அவர்களை முதலில் சூழ்ந்து கொண்டு நான்கு பக்கமும் இருந்து தாக்கி அழித்துவிடலாம் என்றான். அனைவரும் தங்களது ஆயுதங்களை காட்டி ஆர்ப்பரித்தார்கள். இப்படி ஒருவர் பின் ஒருவராக ராவணனை பெருமையுடன் பேசி திருப்திப் படுத்தினார்கள். அனைவரது பேச்சு ராவணனுக்கு திருப்தியை கொடுத்தாலும் அவனது மனதில் ஏதோ நெருடிக் கொண்டே இருந்தது.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 1

ராமர் தலைமையில் லட்சுமணன் சுக்ரீவன் அனுமன் உட்பட அனைவரும் தென்திசை கடலை நோக்கி கிளம்பினார்கள். செல்லும் வழியில் இருக்கும் மக்களுக்கும் சிறு உயிர்களுக்கும் எந்த விதமான தொந்தரவும் தரக்கூடாது என்று ராமர் கட்டளையிட்டார். பத்து கோடி எண்ணிக்கையுடைய வானரப் படைகளை சதபலி என்ற வானரத் தலைவன் தலைமை தாங்கி வழி நடத்திச் சென்றான். வழி தெரிந்த வானரங்கள் வழிகாட்ட அவர்களை நோக்கி அனைவரும் சென்றார்கள். நீலனும் குமுதனும் முன் பகுதியில் சரியான பாதையில் செல்கிறோமா என்பதை உறுதிபடுத்திக் கொண்டே வந்தார்கள். பின் பகுதியில் எண்ணிக்கையில் இடங்காத கரடிகள் கூட்டம் ஜாம்பவான் தலைமையில் வந்தார்கள். ராமரையும் லட்சுமணனையும் மத்திய பாகத்தில் வானரங்கள் தூக்கிக்கொண்டு சென்றார்கள். சுக்ரீவன் உட்பட பெரிய வீரர்கள் ராமருடன் வந்தார்கள். வேகமாக மலைகளையும் காடுகளையும் தாண்டிச் சென்றார்கள். உணவும் தண்ணீரும் கிடைக்கும் வழியாக பார்த்துக் கொண்டே சென்றார்கள். வானரக்கூட்டம் வெற்றி பெருவோம் என்ற முழக்கத்தை கூச்சலிட்டுக் கொண்டே சென்ற சத்தம் எட்டு திசைகளிலும் எதிரோலித்தது. செல்லும் வழிகளில் எல்லாம் வானரக் கூட்டத்தினால் எழுந்த புழுதி வானத்தை மறைத்தது. ராம காரியமாக செல்வதால் எங்கும் யாரும் ஒய்வெடுக்கவில்லை. நிற்காமல் சென்று கொண்டே இருந்தார்கள். ராவணனை நானே கொல்வேன் நானே கொல்வேன் என்று வானர கூட்டம் பேசிக்கொண்டே சென்றதை பார்த்த ராமர் உற்சாகமடைந்து லட்சுமணனிடம் நாம் புறப்பட்டு விட்டோம் என்பதை சீதை அறிந்தால் தைரியம் அடைந்து மகிழ்ச்சி அடைவாள் என்றார்.

ராமர் கடற்கரையின் அருகில் இருக்கும் மகேந்திரகிரி மலையை பார்த்ததும் கடற்கரைக்கு வந்து விட்டோம் என்பதை உணர்ந்தார். மலைமீது ஏறி கடலை பார்த்தார். அனைத்து சேனைகளுடன் எப்படி இந்த கடலை தாண்டுவது என்று தீர்மானிக்க வேண்டும் அதுவரையில் அனைவரும் இங்கே ஒய்வெடுத்து தங்கலாம் என்று சுக்ரீவனுக்கு ராமர் உத்தரவிட்டார். சுக்ரீவனும் அவ்வாரே தனது படை வீரர்களுக்கு உத்தரவிட்டான். தங்கியிருக்கும் சேனைப் படைகளுக்கு எதிரிகளால் எந்த ஆபத்தும் வராத வகையில் நான்கு பக்கமும் பாதுகாப்பு செய்யப்பட்டது. அனைவருக்கும் அனைத்து விதமான சௌகர்யங்களும் இருக்கிறதா என்று ராமரும் லட்சுமணனும் பார்த்து திருப்தி அடைந்த பின் தனியாக சென்று அமர்ந்தார்கள். கடலை எப்படி தாண்டுவது என்பதை குறித்து சுக்ரீவன் ராமர் லட்சுமணனுடன் ஆலோசனை செய்தான்.

அனுமன் இலங்கையை எரித்து நாசம் செய்தது பற்றி விவாதிக்க ராவணன் தனது அரசவையை கூட்டி பேச ஆரம்பித்தான். இது வரையில் பகைவர்கள் யாரும் நமது நகரத்திற்குள் நுழைந்தது இல்லை. ராமனின் தூதுவனாக வந்த வானரம் சீதையை இரண்டு முறை பார்த்து பேசியிருக்கிறான். எனது மகன் உட்பட நமது பல வீரர்களை கொன்றிருக்கிறான். நகரத்தில் உள்ள அனைத்து மாட மாளிகைகளையும் எரித்து விட்டான். யாருக்கும் பயப்படாத நமது மக்களை பயத்தால் நடுங்கச் செய்து விட்டு இங்கிருந்து சென்றுவிட்டான். இத்துடன் இந்த பிரச்சனை முடிவுக்கு வராது. அந்த வானரம் தன்னுடைய கூட்டத்தை விரைவில் இங்கு அழைத்து வருவான். அப்போது இன்னும் பிரச்சனை வரும் அது பற்றி நாம் ஆலோசிக்க வேண்டும் என்று ராவணன் தலை குனிந்தபடியே பேசினான். ராமன் நமக்கு பகைவனாகி விட்டான். அவனை என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்ய வேண்டும். ராமன் மிகவும் பலமானவன். அவனது படையும் மிக பலமானது. அவர்கள் இலங்கையை தாக்குவது நிச்சயம் என்று தெரிந்து விட்டது. கடல் அரண் போல் நம்மை பாதுகாக்கிறது என்று எண்ணி நாம் சும்மா இருக்க முடியாது. இலங்கையை சுற்றி இருக்கும் கடலை எப்படியாவது தந்திரம் செய்து அவர்கள் தாண்டி இங்கு வந்து விடுவார்கள். நம்முடைய நகரத்தை எப்படி பாதுகாப்பது என்றும் நமது சேனைகளின் பலத்தை எப்படி அதிகரிக்கலாம் என்றும் நம் மக்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்றும் உங்களைடைய ஆலோசனைகளை சொல்லுங்கள் என்று ராவணன் அனைவரிடமும் பேசி முடித்தான்.

ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 21

ராமர் அனுமனை கட்டியணைத்து பரவசப்படுத்தினார். ராமர் வந்தவர்களிடம் பேச ஆரம்பித்தார். சீதையை எங்கே கண்டீர்கள் எப்படி இருக்கிறாள் பார்த்தவற்றை விவரமாக சொல்லுங்கள் என்னால் பொறுக்க முடியவில்லை சீக்கிரம் என்று அவசரப்படுத்தினார் ராமர். ஜாம்பவான் அனுமனிடம் நடந்தவற்றை நீயை முழுமையாக சொல் என்றார். அனுமன் பேச ஆரம்பித்தார். நூறு யோசனை தூரத்தில் உள்ள இலங்கையில் உள்ள அசோக வனத்தில் ராட்சசிகள் சுற்றிலும் காவலுக்கு நிற்க சீதை ராமா ராமா என்று உச்சரித்தபடி இருக்கிறாள். கொடூர ராட்சசிகள் வார்த்தைகளால் சீதையை பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். தரையில் படுத்து ஒளி இழந்து கவலை படர்ந்த முகத்துடன் துக்கத்துடன் இருக்கிறாள் சீதை என்று கடற்கரையில் கிளம்பியதில் ஆரம்பித்து இலங்கையை எரித்தது வரை அனைத்தையும் விவரமாக கூறினார். சீதை ராமருக்கு சொன்ன செய்தியை சொல்லி அவள் கொடுத்த சூடாமணியை ராமரிடம் கொடுத்தார் அனுமன். சீதையிடம் விரைவாக தங்களுடன் வருவேன் என்று சமாதானம் சொல்லி விட்டு வந்திருக்கிறேன் என்று சொல்லி முடித்தார் அனுமன்.

ராமர் சூடாமணியை பார்த்து மகிழச்சியில் பரவசமடைந்தார். சுக்ரீவனிடம் பேச ஆரம்பித்தார் ராமர். யாராலும் செய்ய முடியாத காரியத்தை அனுமன் செய்து முடித்திருக்கின்றான். சீதைக்கு ஆறுதல் சொல்லி அவளின் உயிரை காப்பாற்றி விட்டு வந்திருக்கின்றான். இங்கே அவள் உயிருடன் இருக்கிறாள் என்ற செய்தியை என்னிடம் சொல்லி என் உயிரை காப்பாற்றி இருக்கின்றான். இதற்கு பிரதிபலனாக அனுமனுக்கு நான் என்ன செய்து திருப்திப்படுத்த முடியும் என்று தெரியவில்லை என்று சொல்லி ஆனந்த கண்ணீர் விட்டார் ராமர். ராவணனையும் அவனது ராட்சச கூட்டத்தையும் அழிக்க கடலைத் தாண்டி செல்ல வேண்டும். இது ஒர் பெரும் காரியம். இந்த கடலை எப்படி தாண்டப் போகிறோம். உன்னுடைய சேனைகள் எப்படி கடலைத் தாண்டும் என்று கவலையில் மூழ்கினார் ராமர்.

ராமரின் கவலையை பார்த்த சுக்ரீவன் பேச ஆரம்பித்தார். நீங்கள் மனத்தளர்ச்சி அடையாதீர்கள். சோகத்தை மறந்து சத்ரியனுக்குரிய தைரியத்துடன் இருங்கள். உங்களுக்கு ஏன் சந்தேகம் எனது வலிமை மிக்க வீரர்கள் இருக்கிறார்கள். உங்களுக்காக மகிழ்ச்சியுடன் உயிரையும் கொடுக்க காத்திருக்கிறார்கள். மனக்கவலையை தள்ளி வைத்து விட்டு வானர வீரர்களின் சக்தியை வைத்து எப்படி கடலை தாண்டலாம் என்று உங்களின் நுண்ணறிவை பயன்படுத்தி ஆராய்ந்து சொல்லுங்கள். உங்கள் உத்தரவு எதுவாக இருந்தாலும் அதனை சிற்ப்பாக செய்து முடிக்கிறோம். உங்களையும் லட்சுமனணையும் கடலைத் தாண்டி இலங்கை கொண்டு போய் சேர்ப்பது எங்களுடைய காரியம் அதனை சிறப்பாக செய்து முடிப்போம். நீங்கள் இலங்கை சென்று ராவணனை வென்று சீதையுடன் திரும்பி வருவீர்கள் இதனை உறுதியாக நம்புங்கள் என்று ராமரை உற்சாகப்படுத்தினான் சுக்ரீவன்.

ராமர் அனுமனிடம் இலங்கையின் அமைப்பையும் அங்கு உள்ள பாதுகாப்பு அமைப்பையும் சொல்லுமாறு கேட்டார். அதற்கு அனுமன் கடலை தாண்டி செல்லும் வழி, இலங்கை நகரத்தின் அமைப்பு, ராவணின் கோட்டையை சுற்றி இருக்கும் அகழியின் பாதுகாப்பு அமைப்பு, மக்கள் ராவணனின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, அவர்களின் செல்வம், அங்கு உள்ள ராட்சசர்களின் வலிமை, சேனைகளின் பலம், இலங்கையின் பாதுகாப்புக்கு நிற்கும் ராட்சசர்கள் மற்றும் இலங்கை எதிரிகள் எளிதில் நுழைய முடியாதபடி அரண் அமைத்து ராவணன் பாதுகாத்துக் கொண்டிருக்கிறான் என்று அனைத்தையும் அனுமன் விவரமாக ராமரிடம் கூறினார். இவ்வளவு பெரிய பாதுகாப்பு அரணை அழித்து உள்ளே செல்லும் வல்லமை பெற்ற அங்கதன் ஜாம்பவான் பனஸன் நீலன் நளன் போன்ற நிகரற்ற வீரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கடலைத் தாண்டி அங்கு செல்லும் வல்லமை பெற்றவர்கள். பெரும் வானர படையும் தயாராக இருக்கிறது. தாங்கள் உத்தவு கொடுங்கள் அனைத்தையும் அழித்து நாசம் செய்து விடுகிறோம் என்றார் அனுமன். ராமர் சுக்ரீவனுடன் ஆலோசித்து யுத்தத்தில் வெற்றி தரும் முகுர்த்தமான உத்தர பங்குனி நட்சத்திரத்தன்று கடற்கரை நோக்கி அனைவரும் புறப்பட முடிவு செய்தார்கள்.

ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 20

அனுமன் தொடர்ந்து பேசினார். இப்போதே நாம் அனைவரும் இலங்கை சென்று ராவணனையும் அவனது ராட்சச கூட்டத்தையும் அழித்து விட்டு சீதையை மீட்டு ராமரிடம் கொண்டு போய் சேர்த்து விடாலாமா என்று உங்களது யோசனையை சொல்லுங்கள். இதனை செய்ய நமக்கு வலிமையும் சக்தியும் இருக்கிறது. ஜாம்பவானாகிய உங்கள் ஒருவரின் வலிமையே போதும் ராட்சச கூட்டத்தை அழிக்க இதற்கு மேல் வாலியின் குமாரன் அங்கதன் இருக்கிறான். மிகவும் பராக்கிரம சாலிகளான பனஸன் நீலன் இருவர் இருக்கிறார்கள். பிரம்மாவிடம் வரங்களை பெற்ற அசுவினி குமாரர்கள் மயிந்தன் த்விவிதன் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தனியாகவே சென்று ராட்சசர்களை அழிக்கும் திறமை பெற்றவர்கள். இப்போது அனைவரும் ஒன்று கூடி இருக்கின்றோம். நாம் அனைவரும் சென்று சீதையை மீட்டு ராமரிடம் சேர்த்து அவர்களை இருவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவோம். இப்போது நாம் என்ன செய்யலாம் நீங்கள் சொல்லுங்கள் என்று அனுமன் பேசி முடித்தார். இதைக் கேட்ட அங்கதன் கோபத்துடன் கொதித்தெழுந்தான். நான் ஒருவனே போதும் ராவணனையும் இந்த ராட்சசர்கள் கூட்டத்தையும் அழித்து விடுவேன். அப்படியிருக்க நாம் இத்தனை வீரர்களும் இருக்கின்றோம். இத்தனை நாட்கள் கழித்து சீதையை அழைத்துப் போகாமல் ராமரிடம் வெறும் கையுடன் திரும்பிச் செல்வது சரியில்லை. இலங்கை சென்று எதிர்ப்பவர்களை அழித்து விட்டு சீதையை மீட்டுச் செல்வோம் என்று அங்கதன் கூறினான். அதற்கு ஜாம்பவான் அன்புக்குரிய யுவராஜனே இது சரியில்லை நாம் ராமரிடம் சென்று நடந்தது அனைத்தையும் சொல்லுவோம். பின்பு அவரின் உத்தரவுப்படி செய்வோம் என்றார். இதனைக் கேட்ட அங்கதன் அனுமன் உட்பட அனைவரும் ஜாம்பவான் மிகவும் அறிவும் அனுபவமும் உள்ளவர் அவர் சொன்னால் அது சரியாக இருக்கும் என்று அவரின் கூற்றை ஆமோதித்து கிஷ்கிந்தைக்கு விரைந்து கிளம்பினார்கள்.

அனுமன் உட்பட அனைத்து வானர கூட்டமும் கிஷ்கிந்தைக்கு வந்து சேர்ந்தார்கள். அரண்மனைக்கு செல்லும் வழியில் சுக்ரீவனின் நந்தவனம் இருந்தது. இதனை கண்ட வானரக் கூட்டம் பல நாள் கழித்து நாம் நாட்டிற்கு வெற்றியுடன் திரும்பி வந்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில் நந்தவனத்தில் புகுந்து அங்கிருந்த தேனையும் பழத்தையும் சாப்பிட்டு வெற்றிக் களிப்புடன் கூத்தாடினார்கள். அங்கிருந்த காவலர்கள் எவ்வளவு தடுத்தும் அவர்கள் கேட்காமல் தங்கள் விருப்பப்படி வெற்றி கொண்டாட்டத்தை தொடர்ந்து செய்தார்கள். சிலர் மகிழ்ச்சியில் தோட்டத்தை நாசம் செய்தார்கள். இவர்கள் செய்த ஆட்டத்தை பார்த்த ததிமுகன் என்ற காவலாளி சுக்ரீவனிடம் சென்று நந்தவனத்தில் நடப்பவற்றை கூறினான். தெற்கே சென்ற வானர கூட்டம் திரும்பி வந்து விட்டார்கள். நமது தோட்டத்தை நாசம் செய்து அக்கிரமாக நடந்து கொள்கின்றார்கள். எவ்வளவு தடுத்தும் கேட்கவில்லை. காவல் காக்கும் வானரங்களை உதாசீனப்படுத்தி செடி கொடிகளை நாசமாக்கி விட்டார்கள். அவர்களை உடனே தாங்கள் தண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். செய்தியை கேட்ட சுக்ரீவன் அங்கதன் தலைமையில் சென்ற வானர கூட்டம் காரிய சித்தி அடைந்து விட்டார்கள் அதனாலேயே வெற்றி களிப்பில் இப்படி செய்கிறார்கள் என்பதை உணர்ந்து அனுமனையும் அங்கதனையும் உடனே ராமர் இருக்கும் இடத்திற்கு அழைத்து வாருங்கள் என்று உத்தவிட்டான் சுக்ரீவன். சீதை இருக்குமிடம் தெரிந்து விட்டது என்று லட்சுமணனுக்கு செய்தியை சொல்லி அனுப்பினான் சுக்ரீவன்.

ராமர் தனக்கு வந்த செய்தியை கேட்டதும் அவரது காதில் அமிர்தம் சுரப்பது போல் இருந்தது. ராமரும் லட்சுமணனும் இருக்கும் இடத்திற்கு சுக்ரீவன் வந்து சேர்ந்தான். அனுமன் அங்கதன் ஜாம்பவனும் ராமர் இருக்குமிடம் வந்தார்கள். இவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று அவர்களை பேசுவதை கேட்க ராமர் ஆர்வமாக இருந்தார். முதலில் ராமரை வணங்கிய அனுமன் உடனே தெற்குப் பக்கம் திரும்பி வணங்கி கண்டேன் சீதையை என்றார். அனுமனது இச்செயலானது முதலில் தெற்கே சீதை உயிருடன் நலமாக இருக்கிறாள் என்பதை சொல்லாலும் ராட்சசர்களிடம் அகப்பட்டு இத்தனை நாட்கள் கழித்தும் பதிவிரதையாக இருக்கிறாள் என்பதை சொல்லாமல் தனது செயலால் குறிப்பில் உணர்த்தியது அனுமனின் சாமர்த்தியத்தையும் அறிவுக் கூர்மையையும் ராமருக்கு உணர்த்தியது.

ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 19

அனுமன் அசோகவனத்தில் சிம்சுபா மரத்தடியில் சீதை அமர்ந்திருப்பதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். சீதையிடம் சென்று தனது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு தாயே தாங்கள் நலமாக இருப்பதை கண்டேன். இப்போது இலங்கையில் நடந்தது அனைத்தும் தாங்கள் அறிவீர்கள். அனைத்தும் தங்களின் சக்தியினால் என்பதை உணர்கிறேன். உங்களால் நெருப்பு சுடாமல் நான் காப்பற்றப்பட்டேன் இது எனது பாக்கியம் என்றார். அதற்கு சீதை உன்னால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை. சீக்கிரம் எனது ராமனை அழைத்து வர வேண்டும். இது உன் ஒருவனால் மட்டுமே செய்ய முடியும். என்றாள். விரைவில் சுக்ரீவன் தலைமையில் ஆயிரக்கணக்கான வானரத்துடன் ராமரும் லட்சுமணனும் விரைவில் வந்து சேருவார்கள். விரைவில் நீங்கள் அயோத்திக்கு திரும்பிச் செல்வீர்கள். நான் விரைவில் சென்று வருகிறேன் என்ற அனுமன் அங்கிருந்து கிளம்பினார்.

அனுமன் இலங்கை கடற்கரையின் மிகப்பெரிய மலை ஒன்றின் மீது ஏறி நின்று வில்லில் இருந்து செல்லும் அம்பு போல அங்கிருந்து ஆகாயத்திற்கு தாவினார் அனுமன். தூரத்தில் மகேந்திரகிரி மலை தெரிந்ததும் கடற்கரைக்கு அருகே வந்து விட்டோம் என்பதை உணர்ந்து வெற்றிக்காண கர்ஜனை செய்தார் அனுமன். ஆகாயத்தில் கருடன் பறந்து வருவதைப் போல கர்ஜனை செய்து கொண்டு அனுமன் வருவதைப் பார்த்த வானரங்கள் அனுமன் வந்து விட்டார் என்று ஆரவாரம் செய்தார்கள். இது வரையில் கவலையும் கண்ணீருமாக இருந்த வானரங்கள் அடங்காத மகிழ்ச்சியோடு குதித்தார்கள். அப்போது ஜாம்பவான் அனுமன் வெற்றியுடன் திரும்பி வருகிறான். அதனாலேயே இவ்வாறு கர்ஜனை செய்கின்றான் என்றார். அனைவரும் மரங்களிலும் குன்றுகளில் ஏறி அனுமன் ஆகாயத்தில் பறந்து வருவதைப் பார்த்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் நின்றார்கள். ஆகாயத்திலிருந்து கீழே பார்த்த அனுமன் மலைகள் குன்றுகள் மரங்கள் எல்லாம் வானரங்கள் நிறைந்து நிற்கும் காட்சியை பார்த்து மகிழ்ந்த அனுமன் கீழே இறங்கினார்.

அனுமனைப் பார்த்த மகிழ்ச்சியில் வானரங்கள் அனுமனை சுற்றி நின்று ஒன்றுகூடி ஆரவாரம் செய்தார்கள். ஜாம்பவான் அனுமனை வரவேற்றார். சீதை எப்படி இருக்கிறாள். அவளின் மனநிலை உடல் நிலை எப்படி இருக்கிறது. ராவணன் அவளிடம் எப்படி நடந்து கொள்கிறான். பார்த்தவற்றையும் நடந்தவற்றையும் அப்படியே சொல். சீதையை கண்ட மகிழ்ச்சியான செய்தியை அனைவரும் அனுபவிக்க காத்திருக்கிறோம். நீ சொல்பவற்றை வைத்து அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து முடிவு செய்யலாம் என்று ஜாம்பவான் அனுமனிடம் கூறினார். அதற்கு அனுமன் கிளம்பியதில் இருந்து கடலைத் தாண்டும் போது வந்த ஆபத்தில் இருந்து சொல்ல ஆரம்பித்து இலங்கையை எரித்தது வரை அனைத்தையும் கூறினார். தன் வாலில் ராட்சசர்கள் பற்ற வைத்த நெருப்பில் இருந்து சீதை தன்னை காப்பற்றியதை திகைப்புடன் சொன்ன அனுமன் சீதை தன்னிடம் சொன்ன வார்த்தைகளை சொல்லும் போது மட்டும் அனுமனின் கண்களில் நீர் வடிந்தது. ராவணனைப் பற்றி சொல் என்று ஜாம்பவன் கேட்டார்.

அனுமன் பேச ஆரம்பித்தார். நெருப்பே நெருங்க முடியாத சீதையை யாராவது தூக்கிச் செல்ல வேண்டும் என்று அருகில் சென்றிருந்தால் கூட அவர்கள் சாம்பலாகிப் போயிருப்பார்கள். ஆனால் ராவணன் சீதையை தூக்கிச் செல்லும் போது அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை. அவ்வளவு தவ பலனை வைத்திருக்கும் வலிமையானவன் அவன். சீதையை தூக்கிச் சென்றதில் ராவணனுடைய தவ பலன்கள் சற்று குறைந்தாலும் இன்னும் சிறிது தவ பலன் அவனை காத்துக் கொண்டிருக்கிறது. அதனால் வலிமையுடன் இருக்கின்றான். சீதை நினைத்தால் இந்த ராவணனை நெருப்பால் பொசுக்கி இருப்பாள். அப்படி செய்தால் ராமரின் மதிப்பு குறைந்துவிடும் என்றும் ராமர் தன்னுடைய வலிமையால் ராவணனை வென்று அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் நடப்பது அனைத்தையும் சகித்துக் கொண்டு அமைதியாக இருக்கிறாள் என்றார்.