பாரிஜாத மலர்

தேவேந்திரன் ஆட்சி செய்யும் தேவலோகத்தில் இருக்கும் சிறப்புமிக்க மலர்களில் ஒன்று பாரிஜாதம். இதனை பவளமல்லி என்றும் அழைப்பார்கள். இந்த மரத்தில் இருந்து கிடைத்த ஒரு மலரை நாரதர் எடுத்துக் கொண்டு கிருஷ்ணரைப் பார்ப்பதற்காக துவாரகைக்கு வந்தார். அங்கு ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த கிருஷ்ணரிடம் தான் கொண்டு வந்த பாரிஜாத மலரைக் கொடுத்தார் நாரதர். அதனை பெற்றுக் கொண்ட கிருஷ்ணர் அந்த மலரை தன்னுடைய மனைவியரில் ஒருவரான சத்தியபாமா கேட்டுக் கொண்டதினால் அவரிடம் அளித்தார். இதைக் கண்ட நாரதர் உடனடியாக அரண்மனையின் மற்றொரு பாகத்தில் இருந்த ருக்மணியிடம் சென்று சத்தியபாமாவிற்கு தேவலோக மலரான பாரிஜாதத்தை கிருஷ்ணர் கொடுத்த விவரத்தை சொன்னார். இதனால் கோபம் கொண்ட ருக்மணி அரண்மனை காவலர்கள் மூலமாக தன்னை வந்து சந்திக்கும்படி கிருஷ்ணருக்கு தகவல் அனுப்பினார். ருக்மணி இருக்கும் இடத்திற்கு வந்த கிருஷ்ணரிடம் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார் ருக்மணி.

நாரதர் கொண்டு வந்த பாரிஜாத மலரால் தனக்கு ஏற்பட்ட பிரச்சினையை எண்ணி வருந்தினார். கிருஷ்ணர். அவர் எவ்வளவு சமாதானம் செய்தும் ருக்மணி கோபம் குறைய வில்லை. சத்தியபாமாவிற்கு பாரிஜாத மலரைக் கொடுத்தீர்கள். எனக்கு அந்த மரமே வேண்டும் என்று கேட்டாள். இதையடுத்து பாரிஜாத மரத்தை கிருஷ்ணர் இந்திரனிடம் கேட்டார். ஆனால் இந்திரன் தரவில்லை. இதனால் போர் புரிந்து பாரிஜாத மரத்தை துவாரகைக்கு கொண்டு வந்தார் கிருஷ்ணர். பின்னர் அந்த மரத்தை ருக்மணியின் இல்லத்தின் நட்டுவைத்தார். ஆனால் அந்த மரத்தில் பூத்த பூக்கள் அனைத்தும் அருகில் இருந்த சத்தியபாமாவின் வீட்டிற்குள்தான் உதிர்ந்து விழுந்தன. இதனைக் கண்ட ருக்மணி கிருஷ்ணரிடம் பூ ஏன் இங்கு விழவில்லை என்று காரணம் கேட்டார். அதற்கு கிருஷ்ணர் நீ கேட்டது பாரிஜாத மரத்தைத்தான். பூக்களை அல்ல. சத்தியபாமா கேட்டது பூ மட்டும் தான். பூ கேட்ட அவளுக்கு பூவும் மரம் கேட்ட உனக்கு மரமும் கிடைத்தது என்றார்.

பாரிஜாத மரத்தின் கீழ் கிருஷ்ணரும் சத்தியபாமாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்வு சிற்பம் தாய்லாந்தில் உள்ள சத்திய சரணாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சிம்மவாகினி

பாலா வம்சத்தைச் சேர்ந்த துர்காதேவி சிம்மவாகினியாக அருள்பாலிக்கும் கற்சிலை தற்போது நேபாளத்தில் உள்ள காத்மாண்டில் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது.

அருள்மிகு போர்மன்னலிங்கேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் போர்மன்ன லிங்கேஸ்வரர். இங்கு மூலவரே உற்சவராகவும் கருவறையில் 21 அடி உயரத்தில் தேரின் மீது நின்று இறைவன் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். போர் மன்னலிங்கேஸ்வரர் போத்துராஜா எனும் பெயரிலும் அழைக்கப்படுகிறார். போர்மன்னலிங்கேஸ்வரர் ஊரின் பெயரைப் போலவே மங்கலத்துடனும் பெயரைப் போலவே போர் உக்கிரத்துடனும் காட்சி தருகிறார். ஊர் போத்துராஜ மங்கலம். போர்மன்னலிங்கேஸ்வரர் ஆண்டு முழுவதும் கருவரையில் தேரில் அமர்ந்திருக்கிறார்.

துவாபரயுகத்தில் பரமேஸ்வரனும் பார்வதியும் பூலோகத்தை சுற்றி வந்தனர். வன்னி மரங்கள் நிறைந்த பகுதியில் பார்வதி தேவியார் மணலால் கோட்டையையும் கொத்தளங்களையும் விளையாட்டுப் போக்கில் வடிவமைத்தார். அதன் அழகில் ரசித்த ஈஸ்வரன் அந்த மணல் கோட்டையை மையமாக்கி சிவானந்தபுரி என்ற அழகிய நகரத்தை உருவாக்கினார். பார்வதி தேவியார் உருவாக்கிய மணல் கோட்டையை பாதுகாக்க யாக குண்டத்தில் இருந்து ஈஸ்வரனால் உருவானவர் ஸ்ரீபோர்மன்னன். வீரசாட்டை மல்லரி கொந்தம்  கொடிசிலை போன்ற ஆயுதங்களுடன் காவல் பணிபுரிகிறவராக நாட்டை காக்க இறைப் பணியாற்றினார் போர்மன்னன்.

மகாபாரத யுத்தத்தின் சமயம் பாண்டவப் படைக்கு அதிகமான ஆயுதங்கள் தேவைப்பட்டது. போர்மன்னரிடம் வித்தியாசமான ஆயுதங்கள் நிறைய இருந்தது. இந்த ஆயுதங்களை பெற்றுக் கொள்ளவும் பார்வையாலேயே எதிரிகளை வீழ்த்தும் வல்லமை படைத்த போர்மன்னனை போரில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கிருஷ்ணர் முடிவு செய்தார். எனவே போர்மன்னனை சந்திக்க கிருஷ்ணன் அர்ஜூனன் பீமன் மூவரும் சிவநந்தாபுரி என்ற ஊருக்கு வந்தனர். போத்துலிங்க மன்னரை அவ்வளவு எளிதில் யாராலும் நெருங்க முடியாது. அதிலும் பெண்ணாக இருந்தால் அதற்கு துளியும் சாத்தியமில்லை. ஏனெனில் அவர் இது வரை எந்த பெண்ணையும் ஏரெடுத்துப் பார்ப்பதில்லை.

கிருஷ்ண லீலை தொடங்கியது. கிருஷ்ணன் தாதிக்கிழவியாகவும் அர்ஜூனன் அழகிய பெண்ணாகவும் பீமன் விறகு வெட்டியாகவும் வேடமிட்டுக் கிளம்பினர். பீமன் விறகுக்கட்டு ஒன்றை அரண்மனை மதில் சுவற்றில் வைக்க அதன் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. பீமன் சிறையில் அடைக்கப்பட்டான். அவனை விடுவிக்க வேண்டி மன்னரைச் சந்திக்க காவலாளியிடம் அனுமதி கேட்டனர் கிருஷ்ணனும் அர்ஜூனனும். மன்னரின் அனுமதி கிடைக்கவே அரசவைக்குள் அழைத்து வரப்பட்டனர். அர்ஜூனனைக் கண்டதும் மன்னருக்கு சிலிர்ப்பு. முதல் முறையாக பெண்ணை பார்ப்பதாலா இல்லை அர்ஜூனனின் வேஷத்தினாலா ஒன்றும் புரியவில்லை. ஆனால் மன்னர் அர்ஜூனனிடம் மயங்கி விட்டார் என்பது மட்டும் தெளிவாய்த் தெரிந்தது. ஒருவாறாக சமாளித்துக் கொண்டு நீங்கள் யார்? உங்களுக்கு என்ன பிரச்னை? என்று கேட்டார். மன்னா நாங்கள் ஊருக்கு புதிதாய் வந்திருக்கிறோம். எனக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். என் மகனைத்தான்  காவலாளிகள் சிறையில் அடைத்துள்ளனர். அவன் மிகவும் அப்பாவி தெரியாமல் தவறு செய்து விட்டான். அவனை மன்னித்து விடுவியுங்கள் என்றாள் தாதிக்கிழவி வேடத்தில் இருந்த கிருஷ்ணன். சரி அவனை விடுவிக்கிறேன். அதற்கு பலனாக உன் மகளை எனக்கு மணமுடித்து தர வேண்டும் என்று கேட்டான் அரசன். அதற்கு தாதிக்கிழவி எனக்கு தங்களிடம் ஒரு உதவியாக உங்களிடமுள்ள ஆயுதங்கள் வேண்டும் அதனை தர தாங்கள் சம்மதித்தால் திருமணம் செய்து கொடுக்கிறேன் என்றாள். அர்ஜூனன் மீதுள்ள மோகத்தால் யோசிக்காமல் ஒப்புக் கொண்டு ஆயுதங்களை அளித்தான் அரசன்.

திருமண ஏற்பாடுகளை தொடங்குவதற்கு முன் நாங்கள் வெளியில் உள்ள குளத்தில் குளித்து விட்டு வருகிறோம் என்று சொல்லிவிட்டு மூவரும் வெளியே வந்து அங்கிருந்து கிளம்பினார்கள். விஷயம் மன்னருக்கு தெரிந்து கடும் கோபம் கொண்டார். அவர்களைப் பிடித்துக் கொல்ல உத்தரவிட்டார். மன்னரின் கோபத்தை கேள்விப்பட்ட கிருஷ்ணன் உண்மையை விளக்கி பாரதப் போரிலும் அவரை பங்கேற்க வைத்தான் கிருஷ்ணன். மகாபாரதப்போர் வெற்றியில் பங்கேற்ற பெருமையுடன் வந்த போத்துலிங்க மன்னருக்கு கோயில் எழுப்பப்பட்ட இடமே போத்துராஜா மங்கலம். இந்த ஊரில் இருந்து 2 கிமீயில் உள்ள பசு மலையில் மன்னரின் உடல் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரீபாஞ்சாலி மகாமித்யம் என்ற நுாலில் இந்த வரலாறு உள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 505

கேள்வி: ஒரு கோவிலில் உள்ள சுந்தர மகாலட்சுமி தாயாருக்கு ஆறு விரல்கள் இருப்பதன் காரணம்:

இறைவன் அருளாலே முன்பே கூறியது போல இதுபோல் விஷயத்திலே ஒரு மனிதன் தன்னுடைய மன கற்பனைக்கு ஏற்ப அல்லது அப்போது அவனுக்கு உரைக்கப்பட்ட சில கருத்துக்களுக்கு ஏற்ப செயல்பட்டதால் வந்த விளைவுதான் என்று யாங்கள் கூறுகிறோம். இப்படி இருப்பதால் தோஷம் குறை என்று எண்ணவேண்டாம். இதனால் நன்மைதான் என்று எடுத்துக் கொண்டு இதுபோல் அந்த விசித்திரமான மாற்றத்தைக் கூட இறைவனின் கருணை என்றும் லீலை என்றும் எடுத்துக் கொண்டால் கட்டாயம் நன்மையே நடக்கும்.

மேலும் இக்கோயிலைப் பற்றி அறிந்த கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

சுந்தர மகாலட்சுமி

அரசர் கோயில் எனும் இடத்தில் ஆலயம் கொண்டுள்ள சுந்தர மகாலட்சுமியின் வலது பாதத்தில் ஆறு விரல்கள் இருப்பது தனி அதிசயமாகக் கொண்டாடப்படுகிறது. இக்கோயில் செங்கல்பட்டுக்கு அருகில் உள்ளது. கோயில் முகப்பை தாண்டி உள்ளே நுழைந்தால் பலிபீடம். அடுத்து கருடாழ்வார் மண்டபம். அதற்கு நேரே பெருமாள். வலது புறம் தாயார் தனிக் கோயில் கொண்டருள்கிறாள். இத்தல சம்பிரதாயப்படி முதலில் தாயாரையே தரிசிக்க வேண்டும். கிழக்குப் பார்த்த சன்னிதியில் வீற்றிருக்கிறாள் லட்சுமி. மேலிரு கரங்கள் தாமரை மலர்களை ஏந்தியிருக்க கீழிரு கரங்கள் அபய வரத முத்திரைகள் காட்ட பத்மாசனத்தில் பரப்பிரம்ம ஸ்வரூபிணியாக அமர்ந்திருக்கிறாள். இடது கரத்துக்குக் கீழே பத்மாசனமாக மடித்து வைத்த நிலையில் இருக்கிறது வலது பாதம். அதில் சுண்டு விரலை அடுத்து அழகான ஆறாவது விரல். இந்த ஆறுவிரல்கள் உள்ள பாதத்தை தரிசிப்பவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி அள்ளித் தருகிறாள் மகாலட்சுமி என்பது ஐதீகம். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் விசேஷ திருமஞ்சனம் மகாலட்சுமிக்கு செய்யப்படுகிறது. வரலட்சுமி விரதத்தன்றும் அட்சய திருதியையன்றும் இக்கோயில் விழாக்கோலம் கொள்கிறது. மண்டபத்தின் முன் ஒரு இசை மண்டபம் உள்ளது. ஒவ்வொரு தூணும் விரலால் சுண்ட ஒவ்வொரு ஸ்வரத்தை எழுப்புகிறது. நான்கு வேதங்களைக் குறிக்கும் விதமாக இங்குள்ள ஒரு சிறு துளையில் குச்சி ஒன்றை உள்ளே செருகினால் அது மறு பக்கம் வெளி வரும் போது நான்கு பாகங்களாகப் பிளந்து வருகிறது.

இந்த மண்டபத்திற்கு வெளியே வலதுபுறம் அட்சய கணபதி வைணவ தும்பிக்கை ஆழ்வாராக அருட்கோலம் காட்டுகிறார். அனுமன் ஒரு முறை விநாயகரிடம் இந்த அரசர்கோயில் நிவேதனங்களை தானே செய்ய அட்சய பாத்திரம் கேட்டார். அனுமனின் விருப்பத்தை மகாலட்சுமி அறிந்து விநாயகர் மூலம் அனுமனுக்கு அதை அளித்தாள். எனவே இந்த விநாயகர் அட்சய கணபதி என்று அழைக்கப்படுகிறார். இந்த ஆலய பிரசாதங்கள் அனுமனின் மேற்பார்வையில் தயாரிக்கப்படுவதாக ஐதீகம். சுந்தரமகாலட்சுமியின் சன்னிதிக்கு வெளியில் இடப்புறம் தலையில் பலாப்பழம் ஏந்திய பலாப்பழ சித்தர் ஒருவரின் சிற்பம் உள்ளது. இந்த சுந்தரமகாலட்சுமி தேவிக்கு அந்த சித்தர் தினமும் அதனை அன்னைக்குப் படைப்பார். இன்றும் அபிஷேக சமயங்களில் அன்னையைப் பலாச் சுளைகளால் அபிஷேகம் செய்து பின் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. தாயாரின் கருவறை கோஷ்டங்களில் யோகநரசிம்மமூர்த்தி குபேரன் காளிங்கநர்த்தன கண்ணன் பரமபதநாதர் திரிவிக்ரமர் ஆகிய பெருமாளின் அம்சங்களே தேவிக்கு காவலாக அருள்புரிகின்றனர். இந்த மூர்த்திகள் திருப்பணி செய்ய பூமியை தோண்டியபோது கிடைத்தவை.

பெருமாள் சன்னிதியில் ஸ்ரீதேவி பூதேவியோடு கமல வரதராஜராக நின்ற திருக்கோலத்தில் தரிசனமளிக்கிறார். மூலவர் சாளக்ராமத்தால் ஆனவர். விஷ்வக்சேனர் மணவாள மாமுனிகள் தேசிகர் ஆகியோரும் உள்ளார்கள். ஜனக மகாராஜாவும் பெருமாளும் இத்தலத்தில் ஒன்றாக இருந்தபடியால் இத்தலம் அரசர்கோயில் என்று பெயர் ஏற்பட்டது.

நான்முகனுக்கு ஒரு முறை சாபம் ஏற்பட்டது. நான்முகன் சாப விமோசனத்தை நாடி முனிவர்களிடம் ஆலோசனை கேட்ட போது மண்ணாளும் வேந்தனும் விண்ணாளும் விஷ்ணுவும் சேர்ந்து எந்த இடத்தில் காட்சி தருகிறார்களோ அங்குதான் உங்களுக்கு சாப விமோசனம் கிடைக்கும். உடனே பூலோகத்திற்குச் செல்லுங்கள் என்றனர் முனிவர்கள். அதன்படி மண்ணுலகம் வந்தார் நான்முகன். நான்முகனுக்கு சாப விமோசனம் அருள வேண்டும் என்று விஷ்ணு ஏற்கெனவே  தீர்மானித்து இந்த அரசர் கோயில் இருக்கும் இடத்தில் எழுந்தருளினார். அதேசமயம் புனித யாத்திரையாக பூவுலகம் முழுவதும் சென்று கொண்டிருந்த ஜனக மகாராஜாவும் இத்தலத்தின் வழியாக வந்து கொண்டிருந்தார். விஷ்ணு எழுந்தருளிய தகவலைக் கேள்விப்பட்டு அவர் பெருமாளை தரிசிக்க சென்றார். இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட நான்முகன் இப்பகுதிக்கு வந்து தன் தவத்தைத் தொடங்கி விஷ்ணுவின் ஆசியைப் பெற்றார். ஜனக மன்னனையும் பெருமாளையும் ஒன்றாக தரிசித்து சாப விமோசனம் பெற்றார். அந்த மகிழ்ச்சியில் அங்கேயே சிறிது காலம் தங்கி பெருமாளை ஆராதித்தார். தினமும் வந்து பெருமாளை தரிசித்து பூஜிப்பதை ஜனக மகாராஜாவும் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் ஜனகர் வராததால் பெருமாள் ஜனகர் தங்கியிருந்த இடத்திற்கே புறப்பட்டு வந்தார். அந்த வேளையில் ஜனகர் அங்கு இல்லை. தானே ஜனகர் அமரும்  சிம்மாசனத்தில் அமர்ந்து ஜனகர் தனக்குச் செய்வது போன்றே பூஜைகளை தாமே செய்து கொண்டார். பிறகு ஜனகர் செய்ய வேண்டிய பூஜைகள் இன்று நடந்து விட்டன என காவலாளிகளிடம் சொல்லிவிட்டு பெருமாள் புறப்பட்டார்.

அரசு பணியாக வெளியே சென்றிருந்த ஜனகர் திரும்பி வந்து தன் சிம்மாசனத்திற்கு அருகே பெருமாளுக்கு தான் செய்தது போன்றே பூஜைகள் நடைபெற்றிருந்ததைப் பார்த்து காவலாளிகளிடம் கேட்டார். நடந்ததை அறிந்து சிலிர்த்தார். தன் நித்ய கர்மாவிலிருந்து தான் தவறி விட்டதற்குப் பிராயச்சித்தமாக பெருமாளுக்கு ஆலயம் எழுப்ப விண்ணப்பித்தார். பெருமாளோ தேவலோக விஸ்வகர்மாவினால் மட்டுமே இங்கு ஆலயம் எழுப்ப முடியும் என்று கூறி தேவலோக விஸ்வகர்மாவை வரவழைத்தார். ஆலயம் எழுப்ப தேவலோக விஸ்மகர்மாவிடம் கேட்டுக் கொண்டார். அதன்படி எழுப்பப்பட்ட ஆலயம்தான் இந்த அரசர்கோயில்.

நித்யகர்மா செய்ய ஜனகர் வராததால் பெருமாளே அவர் இருப்பிடம் நோக்கிச் சென்ற விவகாரத்தில் மகாலட்சுமி மனம் வருந்தினாள். பரந்தாமனை நோக்கி பக்தன் வரலாம். பக்தனை நோக்கி பரந்தாமன் செல்லலாமா? அவன் அவ்வளவு பெரிய பக்தனா? கோபம் கொண்டாள் லட்சுமி. இதனைக் கண்ட விஷ்ணு இங்கு எழும் ஆலயத்தில் உனக்கே முதல் மரியாதை கேட்ட வரங்களை கேட்டவாறே அருளும் மகத்தான சக்தியையும் உனக்கு அருள்கிறேன். இத்தலத்தில் உன்னை தரிசித்து உன் அருள் பெற்றவர்கள் சகல சௌபாக்கியங்களுடன் வாழ்வார்கள்’ என்று சொல்லி மகாலட்சுமியின் கோபம் தீர்த்து அவளை மகிழ்வித்தார். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமி தாமரையில் வசிக்கும் தன் சார்பாக எப்போதும் பெருமாள் தம்முடைய கரத்தில் ஒரு தாமரை மொக்கை வைத்துக் கொண்டு அருள்பாலிக்குமாறு கேட்டுக் கொண்டாள். அதன்படியே பெருமாளும் தன் கரத்தில் தாமரை மொக்கை ஏந்தி கமலவரதராஜப் பெருமானாக கோயில் கொண்டார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 504

கேள்வி: கோயம்பேட்டில் இருக்கும் ஈஸ்வரர் ஆலயத்தைப் பற்றி:

தச பாவம் சரியில்லாத மாந்தர்கள் தொழில் யோகம் வேண்டி எங்கெல்லாம் சென்றும் நற்பலன் இல்லையே? என்று ஏங்கக் கூடியவர்கள் அந்த தோஷம் நீங்கி நல்விதமாய் தொழில் அமைய வழிபட வேண்டிய ஆலயங்களில் இதுவும் ஒன்று. இதனை விட கடல் தாண்டி செல்ல வேண்டும் கடல் தாண்டி நல்ல நல்ல தேசங்களில் பணியாற்றி திரைகடல் ஓடி திரவியம் தேட வேண்டும் என்று ஆசைப்படும் மனிதர்கள் சென்று வணங்க வேண்டிய ஆலயங்களில் இதுவும் ஒன்று.

இக்கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும் புகைப்படங்களை பார்க்கவும் கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில்

மூலவர் குறுங்காலீஸ்வரர் குசலவபுரீஸ்வரர். அம்பாள் தர்மசம்வர்த்தினி மற்றும் அறம் வளர்த்த நாயகி. இறைவனும் இறைவனுக்கு வலப்புறமுள்ள அம்பாளும் வடக்கு நோக்கி அருள் பாலிக்கிறார்கள். அம்பாள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி தன்னை வேண்டும் பக்தர்களுக்கு விரைந்து வந்து அருள் செய்கிறார். தீர்த்தம் குசலவ தீர்த்தம். தல விருட்சம் பலா. இடம் சென்னை அருகில் உள்ள கோயம்பேடு. இக்கோயில் வடக்கு நோக்கியிருப்பதால் மோட்ச தலமாக கருதப்படுகிறது. லவ குசர்கள் கோ எனப்படும் அரசனாகிய ராமனின் குதிரைகளை அயம் என்னும் இரும்பு வேலியால் கட்டி வைத்த தலமென்பதால் இத்தலம் கோயம் பேடு என பெயர் பெற்றது. பேடு என்றால் வேலி எனப் பொருள். அருணகிரியார் இத்தலத்து முருகனைத் திருப்புகழில் பாடும் போது கோசைநகர் என்று குறிப்பிட்டுள்ளார். இக்கோவில் சுமார் 25200 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது. இடைக்காலச் சோழர்கள் காலத்தைச் சேர்ந்த பெரிய குளம் உள்ளது. இந்தத் தலம் காசிக்கு இணையான தலம் என்ற பெருமை உடையது. கோவிலுக்கு அருகில் வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது.

ஒரு காலத்தில் இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் மணலால் மூடிவிட்டது. சோழ மன்னன் ஒருவன் இவ்வழியே தேரில் சென்ற போது சக்கரம் லிங்கம் மீது ஏறி ரத்தம் வெளிப்பட்டது. பயந்த மன்னன் பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு கோயில் எழுப்பினான். சிவன் குறுகியவராக (குள்ளமானவராக) காட்சி தருகிறார். இதனால் சுவாமிக்கு குறுங்காலீஸ்வரர் என்ற பெயர் உண்டானது. குசலவம் என்றால் குள்ளம் என்றும் பொருள் உண்டு. இதன் அடிப்படையில் இவர் குசலவபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

மூன்று நிலைகளுடன் இராஜ கோபுரம் உள்ளது. அம்பாள் சன்னதிக்கு முன்புறம் நவக்கிரக சன்னதி தாமரைபீடத்தின் மீது அமைந்துள்ளது. நவக்கிரக மண்டபத்தில் ஏழு குதிரை பூட்டிய தேரை அவரது சாரதியான அருணன் ஓட்ட மனைவியருடன் சூரியபகவான் அருள் பாலிக்கிறார். நவக்கிரக சன்னதியின் தரைப் பகுதி மஞ்சள் கீழ்பீடம் வெள்ளை தாமரை பீடம் சிவப்பு ரதம் கருப்பு தெய்வங்கள் பச்சை என பஞ்ச நிறத்தில் இருக்கிறது. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி சுவாமி சன்னதியின் பின்புறத்தில் லிங்கோத்பவரின் இடத்தில் இருக்கிறார். பிரகாரத்தில் ஜுரகேஸ்வரர் லிங்க வடிவத்தில் இருக்கிறார். சாஸ்தா லட்சுமி ஞானசரஸ்வதி நாகர் ஆகியோரும் இருக்கின்றனர். கோபுரத்திற்கு கீழே கபால பைரவர் வீரபத்திரர் இருக்கின்றனர். அதிகார நந்தி காலபைரவர் வீரபத்திரர் விநாயகர் பிரம்மன் சுப்பிரமணியர் ஆகிய தெய்வ சன்னதிகள் உள்ளன. மகாவிஷ்ணு மற்றும் துர்க்கை கருவறையின் மேற்குப்புற கோட்டங்களில் உள்ளனர். திருச்சுற்றில் நடராசர் மற்றும் நாயன்மார்களுக்கான சன்னதிகள் உள்ளன. கோவில் முன் 16 கால் மண்டபம் உள்ளது. மண்டபத் தூண்களில் இராமாயணக் காட்சிகள் குறுஞ்சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு வெளியே உள்ள ஒரு தூணில் சரபேஸ்வரரின் சிற்பம் இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இவருக்கு பூஜை நடக்கிறது.

அயோத்தியில் ராமபிரான் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு சீதையின் கற்பிற்கு களங்கம் உண்டாகும்படி சிலர் பேசினர். சீதையின் கற்பை நிரூபிக்க ராமர் அவளை வனத்திற்கு அனுப்பினார். வால்மீகி ஆசிரமத்தில் தங்கிய அவள் லவன் குசன் என்னும் 2 மகன்களை பெற்றெடுத்தாள். ராமர் தனது தந்தை என தெரியாமலேயே லவ குசர் வளர்ந்தனர். இந்நேரத்தில் ராமர் அயோத்தியில் அஸ்வமேத யாகம் நடத்தினார். அங்கு வால்மீகி முனிவரின் உத்தரவின் பேரில் லவ குசர் இருவரும் சென்றார்கள். மனைவி இல்லாமல் அஸ்வமேத யாகம் நடத்துவது சாஸ்திர விரோதம் என்பதாலும் சீதாவை காட்டுக்கு அனுப்பி விட்டதை அறிந்தும் ராமர் மீது கோபமடைந்த லவ குசர் இருவரும் தாங்கள் வசித்த வனத்துக்கே திரும்பி விட்டனர். அப்போது அஸ்வமேத யாகக் குதிரை லவ குசர் வசித்த பகுதிக்கு வந்தது. அவர்கள் அவற்றை கட்டிப் போட்டனர். அங்கு வந்த சத்ருக்கனன் குதிரையை விடுவிக்கச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. அவனுடன் போரிட்டு வென்றதோடு குதிரையை மீட்க வந்த லட்சுமணருடனும் போரிட்டு வென்றனர். இவர்களைத் தேடி ராமனும் இங்கு வந்தார். இதையறிந்த வால்மீகி லவ குசர்களிடம் ராமர் அவர்களது தந்தை என்பதையும் அவர்களது அன்னையே சீதை என்பதையும் எந்தச் சூழ்நிலையில் சீதாதேவியை ராமர் காட்டுக்கு அனுப்பினார் என்பதையும் விளக்கினார். இருப்பினும் தந்தையை எதிர்த்ததால் லவ குசருக்கு பித்ரு தோஷம் பிடித்தது. வால்மீகியின் ஆலோசனைப்படி இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்து தோஷம் நீங்கப் பெற்றனர். இதனால் சுவாமிக்கு குசலவபுரீஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்டது.

கோயம்பேடு என்ற ஊரும் இல்லை
குறுங்காலீஸ்வரர் என்ற பேரும் இல்லை
வடக்குப் பார்த்த சிவனும் இல்லை
மடக்குப் போன்ற லிங்கமும் இல்லை – என்பார்கள்.

இதற்கு விளக்கம் உலகத்தில் கோயம்பேடு என்ற பெயர் கொண்ட ஊர் வேறு இல்லை. இங்கு மட்டும் தான் உள்ளது. பொதுவாக ஒரு ஊரில் சிவபெருமானுக்கு இருக்கின்ற பெயர் இன்னொரு ஊரில் சிவபெருமானுக்கு இருக்கும். ஆனால் இந்த ஈஸ்வரனுடைய பெயர் வேறு எங்கும் இல்லை. வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ள மூலவராக ஈஸ்வரன் இருப்பது இங்குதான். மடக்குப் போன்ற லிங்கம் என்பது இங்குள்ள ஈஸ்வரனின் லிங்க பாணம் ஒரு மடக்கையை அதாவது பானை மூடப் பயன்படும் மூடியை கவிழ்த்தது போல் இருக்கும். ஆகவே அவ்வாறு சொல்வார்கள்.

இக்கோவிலில் இந்திய தொல்பொருள் அளவீட்டுத் துறையினர் 14 கல்வெட்டுகளைக் கண்டறிந்துள்ளனர். இவை மூன்றாம் குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்தவை ஆகும். 12 நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டுகள் ஜெயம்கொண்ட சோழமண்டலம் மற்றும் மாங்காடு இப்பகுதியில் இடம் பெற்றிருந்ததை பதிவு செய்துள்ளன. கோயம்பேடு கிராமசபை மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் குறித்த செய்திகள் குறித்தும் இக் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன. வால்மீகி முனிவர் ராமரின் மகன்கள் லவன் குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணியஸ்தலமாக இந்த கோவில் விளங்கி வருகிறது. அருணகிரிநாதர் இக்கோவில் முருகரை தனது திருப்புகழில் பாடியுள்ளார்.

குறுங்காலீஸ்வரர்
தர்மசம்வர்த்தினி
நடராஜர்
பைரவர்
காபால பைரவர்
முருகர்
நவகிரகம்
தட்சணாமூர்த்தி

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 503

அகத்தியர் தனது பொது வாக்கில் ராம் என்ற ராமரின் மந்திரத்தை வைத்தே ராமரது வரலாற்றையும் ராமரது தத்துவத்தையும் சொல்லியிருக்கிறார்.

இறைவன் கருணை காெண்டா ராம் அதனால் உலகை படைத்தா ராம்.
இறைவன் கருணை காெண்டா ராம் அதனால் உலகை படைத்தா ராம்.

இன்பம் இதுவே என காட்டி தந்தா ராம்.
இன்பம் இதுவே என காட்டி தந்தா ராம்.

ஈகை (தர்ம) குணம் வளர்த்தலே என்றும் உயர்வை தரும் என்றா ராம்.
இன்பம் இதுவே என காட்டித் தந்தா ராம்.

இறை கருணை காெண்டாராம் அதனால் உலகை படைத்தா ராம். இறை கருணை காெண்டா ராம்.
அது போலவே இறை கருணை காெண்டதனால் அது போலவே இறை கருணை காெண்டுள்ள அத்தன்மையை மீண்டும் உள் உணர்ந்து பார்க்க ஞானிகள் வந்தா ராம்.

இறை கருணை காெண்டா ராம். அது போலவே இறை கருணை காெண்டதனால் இது போலவே ஒவ்வாெரு கணமும் உயிர்கள் மீது அன்பு தந்தா ராம்.

இயம்புங்கால் (இதனை எடுத்து சொன்னால்) திருஷ்டியில் (ஞானப் பார்வையில்) அருளை தருவா ராம். துயரத்தில் தன்னை இணைத்துக் காெள்வா ராம். தாெல்லை வரும் பாெழுதெல்லாம் தன் பக்தருக்கு முன்னால் நடப்பா ராம். அவர் வருவா ராம் நடப்பா ராம் பாேவா ராம் இருப்பா ராம் என்றும் நல் அருளை தருவா ராம். ஆயினும் (ஆனாலும்) இதை உணர்வார் யார்? புரிந்தார் யார்?

இது போலவே இருக்கும் கருணை வெள்ளம் அனைத்தும் சாெந்தம் என காெண்டவ ராம். அது போலவே காெண்டவ ராம் தன்னை காெண்டவளே (அன்னை). காெண்டவ ராம் தன்னை காெண்டவளே (அன்னை).

இயம்புங்கால் (இதனை எடுத்து சொன்னால்) அவர் (அன்னை) என்றும் இருப்பா ராம். அவர் (அன்னையாக) இருந்து இருந்து உயிர்களை காப்பாராம். காத்து காத்து ரட்சித்து அருள்வா ராம். அவர் (அன்னை) என்றும் உயிர்களாேடு பரிவாய் உறுதுணையாய் இருப்பா ராம். அவர் பாேவாராம் வருவா ராம் என்று தாேன்றினாலும் அவர் என்றென்றும் இருப்பா ராம். அவர் பக்தர்கள் நெஞ்சில் கிடப்பா ராம். அவர் அன்புக்கு என்றும் அடிமையாய் இருப்பா ராம். இதை) உணர்ந்த உயிருக்குள் உயிராய் ஒளிர்வா ராம் (பிரகாசிப்பா ராம்). அவர் என்றும் உயர்ந்தா ராம். அவர் ஒரு பாெழுதும் தாழ்ந்தா ராம் என்று யாரும் கூற இயலாதாம் (முடியாதாம்). இது போலவே இறை கருணை காெண்டா ராம். அதன் தன்மையை புரிய புரிய ஒவ்வாெரு உள்ளமும் மகிழ்வில் ஆழுமாம் (ஆழ்ந்து இருக்குமாம்).

இறை கருணை காெண்டா ராம். இறை கருணை காெண்டா ராம். அதனால் அவர் (ராமர்) வந்தா ராம். அதனால் பிள்ளை என பிறந்தா ராம். அதுவும் நாடு ஆள்வது தாெல்லை என துறந்தா ராம். பிறகு வனம் சென்றா ராம். அது போலவே அங்கு சிலரை கண்டா ராம். அதன் மூலம் பக்தியை வெளிப்படுத்தினா ராம். அது போலவே அவர் தன் துணையை பிரிந்தா ராம். அங்கு அவர் கண்டா ராம். தன் துணைக்கு மேல் துணையாய் தன்னையே தனக்குள் அடிமைபடுத்தும் ஒரு துணையை. அது போலவே வாயுபுத்திரனை (ஆஞ்சநேயர்) அவர் கண்டா ராம். தாேழமை காெண்டா ராம். அது போலவே அவர் வாலியை ஒதுக்கி வைத்தா ராம். அவர் வாலியின் சாேதரனை (சகோதரனை) ஏற்றி வைத்தா ராம். அதனால் வாலியை மாேட்சத்தில் இறக்கி வைத்தா ராம். அது போலவே அவர் மனிதருக்கும் இறைக்கும் (இறைவனுக்கும்) பாலம் என இருந்தா ராம். அது போலவே) மனிதர் செய்யும் பாவமெல்லாம் களைய அவர் பாலம் என இருந்தா ராம். அது போலவே ஆழியை (கடல்) கடந்தா ராம். அது போலவே ஆழி (கடல்) தாண்டி ஆழி (கடல்) தாண்டி அது பிறவி பெருங்கடல் தாண்டும் வண்ணம் மனிதர் உணரும் வண்ணம் அவர் பாலம் அமைத்தா ராம். அது போலவே சென்றா ராம். அசுரர் தலை எடுத்தாராம். அது போலவே அங்கு தன் ஆத்மாவென விளங்கும் அன்னையை மீட்டா ராம். அது போலவே ஆத்மாவை அவர் மீண்டும் சாேதித்து பார்த்தா ராம். அது போலவே மாேட்சம் என்னும் தேசத்தில் அமர்ந்தா ராம். ஆட்சியை தாெடர்ந்தா ராம்.

அது போலவே பஞ்ச (ஐந்து) புலனெல்லாம் விதவிதமாய் அலை கழிக்க ஆத்மா தன்னை அது தாெலைக்க தாெலைந்ததை வைராக்கியம் என்னும் வாய்வு (காற்று) என்று தேட அது போலவே தேடி கண்டுபிடித்து அதை உறுதியோடு பிடித்துக் காெள்ள அந்த ஆத்மாவுக்குள் உள்ள ஆத்மஞானம் செல்ல அதுவே இது இதுவே அது என உணர்ந்தா ராம் உணர்ந்தா ராம். அவரெல்லாம் ராமர் வழி வந்தாராம் வந்தாராம். அது போலவே அப்படி வருவாேரெல்லாம் சிறந்தா ராம் சிறந்தா ராம். அது போலவே சிறந்தாேரெல்லாம் தாெடர்ந்து பிறவியற்ற நிலைக்கு உயர்ந்தா ராம் உயர்ந்தா ராம்.

இறை கருணை காெண்டா ராம். அதனால் உயிர்கள் மீது அன்பு பாெழிந்தா ராம். அவர் என்றென்றும் இருப்பா ராம். பக்தர்கள் உள்ளத்தில் கிடப்பா ராம். இதை உணர்ந்தாேரே உண்மையை உணர்ந்தாே ராம். ஏனையாேர் எல்லாம் தாழ்ந்தாே ராம். எனவே தாழ்ந்தாே ராம் என்கிற நிலை தாண்டி உயர்ந்தாே ராம் என்ற நிலைக்கு வர அன்றாடம் அவரவர் வாயும் (மூச்சுக் காற்றுடன்) ராம் ராம் ராம் என ஜபிக்க அவரவர் ஆத்மாவும் உயர்ந்தாே ராம் என்கிற நிலைக்கு வரும். இது போலவே யாம் இறை அருளால் உள்ளத்தில் கலந்து அன்பினால் உயர்ந்து வாழ இறை அருளால் நல்லாசி கூறுகிறாேம்.

வாலி வழிபட்ட ஆதிபுரீஸ்வரர்

கிஷ்கிந்தை எனும் நாட்டை அரசாண்டு வந்த வாலி வீடுபேறடைவதற்காக தினசரி 4 சமுத்திரத்தில் நீராடி விதிப்படி நித்யகருமம் முடித்து பின்பு கயிலை மலை சென்று முதலில் நந்தி தேவரை வழிபட்டு அவரிடம் அனுமதி பெற்று பார்வதி சமேதரான சிவபெருமனை வாக்கு காயங்களினால் வழிபட்டுப் பின் தன் நகரினை அடைந்து நீதியுடன் நல்லாட்சி புரிந்து வந்தார்.

ஒரு நாள் திக் விஜயம் செய்து வந்த இராவணன் வாலியைக் கண்டு குறும்பாக அவனை தன் கையை விட்டுப் பிடிக்க முற்படுகையில் வாலி தன் வாலினால் இராவணன் உடல் முழுவதையும் சுற்றி கட்டி விடுகிறார். பின்னர் அப்படியே சமுத்திரங்களில் நீராடி கயிலை மலை சென்று நந்தி தேவனை வணங்கி சிவனைக் காண அனுமதி கேட்டார். அதற்கு நந்தி தேவர் கைலாசபதியானவர் முப்பத்து முக்கோடி தேவர்களோடும் அதிகாபுரியை அடுத்த ஆதிபுரத்திற்கு சென்றுள்ளார் என்றார். உடனே சிவபெருமானை தரிசிக்க வேண்டி நந்திதேவரிடம் வாலி ஆதிபுரத்திற்கு வழி கேட்டார். நந்திதேவரோ உன் வாலினால் கட்டுண்டு கிடக்கும் இராவணன் அந்த ஆதிபுரத்தை அறிவான் என்று கூறுகிறார். (இராவணன் மிகச்சிறந்த சிவ பக்தன். சிவன் இருக்கும் இடம் எதுவாகினும் இராவணனிற்கு தெரியும்) உடனே வாலி இராவணனைப் பார்த்து ஆதிபுரத்திற்கு வழி சொன்னால் இந்த கட்டை தளர்த்தி உன்னை விடுவிப்பேன் என்கிறார். உடனே இராவணன் இந்த ஆதிபுர திருத்தலத்தை காட்டிட அங்கு திரிபுரசம்கார மூர்த்தியாய் உள்ள சிவபெருமானைக் கண்டு பேரானந்தம் அடைந்து வாலி வழிபட்ட பெருமைக்குரிய திருத்தலம் இந்த ஆதிபுரம்.

வாலியின் வாலினால் கட்டுண்டு இராவணன் விழிபிதுங்கி நிற்கும் காட்சி மூல விக்ரகம் உள்ள சுற்றுச்சுவரின் வெளிப்புறத்தில் தெற்கு திசையில் உள்ளது. இடம்: பத்மதளநாயகி உடனுறை ஸ்ரீஆதிபுரீஸ்வரர் திருக்கோவில் ஆதிபுரம் எனும் எய்தனூர் (நெல்லிக்குப்பம் அருகில்) கடலூர் மாவட்டம்.