ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 314

கேள்வி: எண் ஜோதிடம் நாம ஜோதிடம் – சேர்ந்து பார்க்க வேண்டுமா? தனித் தனியாக பார்க்க வேண்டுமா?

ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு வாய்ப்பு மறுக்கப்படும் பொழுது மாற்று வாய்ப்பு இறைவனால் சுட்டிக் காட்டப்படுகிறது. எனவே ஜாதகம் என்ற ஒன்று இருக்கிறது. அந்த ஜாதகத்திலும் பல்வேறு குழப்பங்கள் நிலவுகிறது. சரியாக கடிகையைக் (Time) குறிக்க முடியாமல் தவறான ஜாதகம். கடிகை (நேரம்) சரியாகக் குறிக்கப்பட்டால் சரியான குறிப்புள்ள பஞ்சாங்கம் கிடைப்பதில்லை. இரண்டும் கிடைத்தால் சரியான ஜோதிடன் கிடைப்பதில்லை. எல்லாம் கிடைத்தாலும் வேறு எங்காவது ஒரு பிழை நிகழ்ந்து விடுகிறது. அதைத் தாண்டி ரேகை சாஸ்திரம் இருக்கிறது. ரேகையை யாராலும் மாற்ற முடியாது. என்றாலும் கூட ரேகை சாஸ்திரத்தை முற்றாக கற்று வந்த மனிதர்கள் மிக மிக குறைவு. கற்றவர்கள் வாய் திறப்பதில்லை. அடுத்ததாக இன்னவன் கூறியது போல எண் ஜோதிடம் அல்லது இலக்க ஜோதிடம். இன்னொன்று நிமித்தங்கள் சகுனங்கள் என்று எத்தனையோ இருக்கிறது. எல்லாவற்றையும் சேர்த்து மன சிந்தனையிலே தடுமாற்றம் அடைவதை விட யாருக்கு எது வாய்ப்பாக இருக்கிறதோ அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எண் போன்ற இலக்க ஜோதிடத்திலே மனிதன் ஒன்றை கவனிக்க வேண்டும். அவரவர்களுக்குத் தெரிந்த அஃதாெப்ப தினத்தையெல்லாம் எடுத்துக் கொள்ளும் பொழுது இங்குள்ளவர்கள் தமிழ் மண்ணில் உள்ளவர்கள் தமிழ் தினத்தை கவனிக்காது விட்டு விடுகிறார்கள். அதனையும் கருத்தில் எடுத்துக் கொண்டு பார்ப்பதே சிறப்பாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 313

கேள்வி: செரிமான மண்டல பிரச்சனை கொண்ட மனிதர்களுக்கான தீர்வு என்ன?

இறைவனின் கருணையாலே ஒரு உறுத்தலான குடல் பிணி என்றும் அதனால் மனிதன் அடிக்கடி ஒதுங்க வேண்டிய நிலை இருப்பதும் இவ்வாறு மருத்துவத்தால் அழைக்கப்படுகிறது. இதுவும் ஒருவகையான கர்மப் பிணிதான். இதுபோல் நிலையிலே 100 அல்லது 100 க்கு மேற்பட்ட அகவை (வயது) உடைய ஸ்தல விருட்சங்களில் இருந்து இயல்பாக கீழே விழுந்த இலைகளை எடுத்து நிழலில் உலர்த்தி பொடித்து அதிகாலையில் சூன்ய அகத்திலே (வெறும் வயிற்றில்) உண்ணலாம். அல்லது நீர் விட்டு காய்ச்சி கஷாயமாகவும் ஏற்று வரலாம். இதிலே வேம்பு பிரதானம் பெறுகிறது. இதுபோல் வன்னி மரத்து இலையும் பிரதானம் பெறுகிறது. ஆனாலும் கூட இந்த ஒன்றே போதுமானது என்று நாங்கள் கூறவில்லை. இதோடு மேலும் முன்னர் கூறிய வழி முறைகளை குறிப்பாக பிணி நீக்கும் ஆலயங்கள் என்று மனிதர்களால் கருதப்படுகின்ற ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்வதும் இதுபோல் நல்விதமாய் அது தொடர்பான பிணிகள் கொண்ட ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்வதும் தொடர்ந்து உயர் உயர் உயர் உயர் உயர்வான அன்ன சேவைகளை செய்வதும் இந்தப் பிணியிலிருந்து வெளியே வருவதற்கு தக்க வாய்ப்பாக இருக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 312

கேள்வி: எங்கள் வழிபாட்டை மிகவும் நேர்மையாகவும் மிகவும் சரியாகவும் செய்ய நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

இறைவன் கருணையைக் கொண்டு செயலை விட செயலற்ற தன்மைதான் மனிதர்களுக்கு என்றுமே ஏற்றதாகும். மௌனமும் செயலற்ற தன்மையும் என்றுமே தன்னை உணர வைக்கும். தன்னை நன்றாக உணர்ந்த பிறகு தன்னை உயர்த்திக் கொள்ளவும் தன்னை இன்னும் மேம்பாடு செய்து கொள்ளவும் யாது செய்ய வேண்டும்? என்பதை அந்த மெளன நிலையிலேயே பரம்பொருள் உணர்த்தி உணர்த்தி மெல்ல மெல்ல ஆத்மாவை மேலே சேர்க்கும். எனவே அதனால்தான் யாம் அடிக்கடி கூறுவது மௌனம் பழகு மௌனம் பழகு மௌனம் பழகு. அந்த மெளனத்திலிருந்து அனைத்துமே ஒரு மனிதனுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. வாய் பேசாதது மெளனமல்ல. மனம் பேசாமல் இருப்பதுதானப்பா மெளனம். அதையேதான் ஒட்டுமொத்த இவன் வினாவிற்கும் விடையாகக் கூறுகிறோம்.

கேள்வி: குரு தீட்சையின்றி மந்திரம் உருவேற்றலாமா?

தீட்சை என்றால் என்ன? என்பதை மனிதர்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். தீ ஆகிய அக்னியிலே மனிதர்களின் கர்மாக்களையெல்லாம் எரித்து இறைவனிடம் அழைத்துச் செல்லக்கூடிய சக்தி யாருக்கு இருக்கிறதோ அவனை குரு எனலாம். ஆனால் தீட்சை என்ற வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு மனிதன் இன்னொரு மனிதனை தூக்கி விடுவது என்பது குருடும் குருடும் சேர்ந்து கை தூக்கி விடுவது போலத்தான். எனவே மானசீகமான அன்பிற்கும் உண்மையான இறை பக்திக்கும் நடுவில் எந்தத் தரகும் தேவையில்லை என்பதே எமது (அகத்திய மாமுனிவர்) வாக்காகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 311

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

காலம் மாற மாற மனிதன் பயன்படுத்தக்கூடிய பொருள்கள் மாறும். பொருள்கள் மாற மாற அந்த பொருள்களின் தன்மைக்கு ஏற்ப பயன்படுத்தக் கூடிய மனிதனின் வாழ்க்கை மாறும். வாழ்க்கை முறை மாற மாற அவன் எண்ணங்களும் அதை ஒட்டி செயல்படும். எண்ணங்கள் அப்படி செயல்பட செயல்பட அதன் விளைவுகள் பெரும்பாலும் அவனுக்கு எதிராக தான் இருக்கும். அதன் அடிப்படையில் ஆசைகள் பல கிளை விட்டு பரவிக் கொண்டே இருக்கும். அந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள மனம் துடிக்கும். அப்படி துடித்து அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள செயல்படும் தருணம் அதற்கு எதிராக வரும் தடைகள் அனைத்தையும் மனம் வெறுக்கும் தடைகள் ஏற்படுத்துகின்ற மனிதர்களை வெறுக்கும். அதனாலும் பாவம் சேரும். எனவே நீக்கமற நிறைந்திருக்கின்ற பரம்பொருளை எல்லாம் இறைவா பாவம் போக்கத்தான் அருள வேண்டும். உனது திருவடியை பற்றிக்கொண்டு இந்த சிறிய ஆன்மா இந்த கூட்டுக்குள் அடைபட்டு கிடக்கிறது. இந்த கூட்டையை தான் என்று எண்ணுகிறது. இந்த கூடு வேறு இந்த கூட்டுக்கு மேல் மனிதன் ஆடையை அணிந்து கொள்கிறான் மானம் காக்க என்று என்றாவது ஆடை சேதம் அடைந்து விட்டால் நான் சேதம் அடைந்து விட்டேன் என்று கூறுவானா? என் ஆடை தான் சேதம் அடைந்து விட்டது இனி புதிய ஆடையை போட்டுக்கொள்ள வேண்டும் என்றுதான் கூறுவான். ஏனென்றால் தன்னுடைய தேகம் வேறு தன்னுடைய தேகத்தையும் மறைத்திருக்க கூடிய ஆடை வேறு என்பது அவனுக்கு வெளிப்படையாக தெரிகிறது.

தேகத்தை சேதப்படுத்தினால் அவனுக்கு உணரக்கூடிய தன்மையாக இருக்கிறது. ஆனால் அவன் ஆடைக்கு சேதம் ஏற்பட்டால் அதனால் என் உடலுக்கு ஒன்றும் இல்லையே என்பான். ஆனால் ஆன்மாவின் மேல் படிந்து உள்ள இந்த தேகம் எனும் ஆடை அது விலங்கு ஆடையோ பட்சி (பறவை) ஆடையோ விருக்ஷ (மரம்) ஆடையோ எல்லாவற்றுக்குள்ளும் ஒரு உயிர் ஒளிந்து கொண்டு இருக்கிறது. சிறைபட்டு கிடைக்கிறது. இந்த தேகத்தை வருத்தினால் ஏதாவது ஆபத்துக்கு ஆளாக்கினால் சட்டை பழுதடைந்தால் தானே பழுதடைந்து விட்டதை போல புலம்புவதை போல மனிதன் புலம்புகிறான். அது எப்படி சட்டையை காயப்படுத்தினால் எனக்கு வலிக்கவில்லை ஆனால் தேகத்தை காயப்படுத்தினால் எனக்கு வலிக்கிறதே காரணம் என்ன?

விளாம் கனி இன்னும் பழுக்கவில்லை. பழுத்து விட்டால் ஓட்டை விட்டு விலகி அது உள்ளே தனியாக ஆட துவங்கும். எனவே அஞ்ஞானம் எங்கிருந்து வந்தாலும் அதனை தவிர்க்க வேண்டும். கூறுவது அன்புள்ள தாயே ஆகினும் மனைவியே ஆகினும் தந்தையே ஆகினும் சகோதரன் ஆகினும் பிரிய நண்பன் ஆகினும் அல்லது பிள்ளைகள் ஆகினும் கூறுவது மெய்யான மெய்யான மெய்யான ஞான வாழ்வுக்கு ஆதரவான கருத்தா அல்லது வெறும் உலகியல் கருத்தா என்று பார்த்து அப்படி இல்லை என்றால் அந்த கருத்தை புறக்கணித்து நான் இவ்வழி வரமாட்டேன் எவ்வழி மெய் வழியோ அவ்வழியே வருவேன் என்று திடம்பட மனதிற்கு கூறி வர வேண்டும். இது போல கருத்தினை மனதிலே அசைபோட அசைபோட வாழ்வியல் துன்பங்கள் என்பது மனிதனை என்றுமே வாட்டிக்கொண்டே இராது(இருக்காது).

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 310

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

கோடிக்கணக்கான பிறவிகள் கோடிக்கணக்கான உயிர்கள் பாவங்களை செய்து செய்து எகுதாவது ஒரு பிறவியிலே பாவங்கள் அற்ற நிலையை நோக்கி செல்ல வேண்டும் என்று இறைவனால் அருள் ஆசி வழங்கப் பெற்று அந்த எண்ணம் உதிக்கும் வண்ணம் கிரக நிலை இருக்கும் வண்ணம் ஒரு பிறவி கொடுக்கப்படும் தருணம் அதே விதி அந்த மனிதனை மேலும் குழப்ப துவங்குகிறது. எப்படி?

வினைகளை முற்றிலும் களைந்து பாவங்களே செய்யாத ஒரு நிலையை நோக்கி சென்று தெய்வீக விழிப்புணர்வு பெற்ற ஞானத்தை நோக்கி செல்ல வேண்டும் என்று அவனுக்குள் இருக்கும் சிற்றறிவு நினைக்கும் பொழுதே அந்த அறிவை ஆட்சி செய்யும் விதி இப்படி எல்லாம் வாழ்ந்தால் எப்படியப்பா இந்த உலகில் வாழ முடியும். இந்த உலகில் வாழ்வதற்கு செல்வம் வேண்டாமா செல்வம் இல்லாதவர்கள் இந்த உலகில் எப்படி கடினப்படுகிறார்கள்? கையில் கிடைத்ததை நீயெல்லாம் தர்மம் செய்து விடாதே வேறு எந்த நல்ல செயலுக்கும் அதை பயன்படுத்தாதே உனக்கென்று அதை வைத்துக்கொள். உன்னுடைய அதிர்ஷ்டம் காரணமாக உனக்கு கிடைத்து இருக்கிறது. முன்பெல்லாம் வறுமையின் போது நீ எப்படி வேதனை பட்டாய். இனி உனக்கு வறுமை வந்தால் யாரும் உனக்கு உதவ மாட்டார்கள். எனவே இதை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் என்று விதியே அவன் மூலையில் அமர்ந்து கூட சொல்லி விடும். நிறைய தர்மம் செய்த மனிதர்கள் அந்திம (கடைசி) காலத்தில் நிறைய சிரமப்பட்டு இறந்து போய் இருக்கிறார்கள். எனவே இப்படி தர்மம் செய்வதால் பெரிய பலன் ஒன்றும் இதனால் இருக்க போவது இல்லை. அடுத்த ஜென்மம் என்ற ஒன்றை நம்மால் உணர முடியாது புரிந்து கொள்ள முடியாது. எனவே நடப்பு ஜென்மமே மெய் இந்த ஜென்மத்திற்கு உண்டான செயலை மட்டுமே செய் என்று விதியே சூழ்ச்சியாக சொல்லித் தருமப்பா.

எனவே இந்த மாயா வாதங்களை எல்லாம் விட்டு விலகி அருள் ஞான கருத்துக்களை மீண்டும் மீண்டும் மனதிலே அசை போட்டு தெளிந்த நீரோடை போன்ற தெய்வீக ஞானத்தை அடைதல் மட்டுமே மனிதன் நிரந்தர நிம்மதியும் நிரந்தர சந்தோஷமும் பெற்று வாழக்கூடிய நிலையாகும். இல்லை என்றால் காலம் மாற மாற மனிதன் பயன்படுத்த கூடிய பொருள்கள் மாறும். பொருள்கள் மாற மாற அந்த பொருள்களின் தன்மைக்கு ஏற்ப பயன்படுத்தக் கூடிய மனிதனின் வாழ்க்கை மாறும். வாழ்க்கை முறை மாற மாற அவன் எண்ணங்களும் அதை ஒட்டி செயல்படும்.

தொண்டு

ஒரு பெரிய அரசர் இருந்தார். அவருக்கு ஆன்மிகத்தில் மிகவும் ஈடுபாடு ஆகையால் தினந்தோறும் கோவிலுக்கு செல்வார். வழக்கம் போல ஒரு நாள் கோவிலுக்கு சென்று திரும்பி வந்து கொண்டிருந்தார். கோவிலுக்கு வெளியில் ஒரு சந்நியாசி தியானத்தில் அமர்ந்திருந்தார். இதனைக் கண்ட அரசர் அவரிடம் சென்று வணங்கி நின்றார். சந்நியாசியும் ஆசிர்வாதம் செய்தார். அரசர் தன்னிடம் இருந்த விலை உயர்ந்த சால்வை ஒன்றை சன்னியாசிக்கு கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார். மறுநாள் காலையில் அரசர் அரண்மனையின் மேல் மாடத்தில் நின்றிருந்தார். அப்போது தெருவில் ஒரு பிச்சைக்காரன் சென்று கொண்டிருந்தான். அவனை பார்த்த அரசர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் சன்யாசியிடம் கொடுத்த அந்த விலை உயர்ந்த சால்வையை இப்போது அந்த பிச்சைகாரன் வைத்திருந்தான். அரசர் உடனே காவலர்களை அனுப்பி அந்த பிச்சைக்காரனை அழைத்து வரச் சொன்னார். அவனிடம் இந்த போர்வை எப்படி வந்தது என்று விசாரிச்சார். கோவில் வாசலிலே தனக்கு ஒரு சன்யாசி கொடுத்தார் என்று சொன்னான். உடனே அந்த சன்யாசியை அழைத்து வர உத்தர விட்டார். சன்யாசியிடம் ஏன் பிச்சைக்காரனிடம் இந்த சால்வையை கொடுத்தீர்கள் என்று கேட்டார். அதற்கு சன்யாசி இவன் இரவில் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான். அவனது உடையும் கிழிந்திருந்தது. ஆகவே எனக்கு தேவைப்படுவதை விட இவனுக்குத்தான் தேவை என்று கொடுத்து விட்டேன் என்றார். இந்த பதிலைக் கேட்ட பிச்சைக்காரன் சன்யாசியின் அன்பில் பூரித்து மகிழ்ச்சியில் சிரித்தான். இதனைக் கண்ட அரசர் கோபமடைந்து இது மிகவும் விலை உயர்ந்த சால்வை அரசர்களுக்கு என்றே விசேசமாக தயாரிக்கப்பட்டது. அதை உங்களுக்கு கொடுத்தேன். இந்த சால்வையை அவனிடம் கொடுத்தது என்னை அவமதிப்பு செய்வது போல் உள்ளது. ஆகவே உங்களையும் உங்களுடன் இந்த பிச்சைக்காரனையும் சிறையில் அடைக்க உத்தர விடுகிறேன் என்று சொல்லி விட்டு அரண்மனைக்குள் சென்று விட்டார். காவலாளிகள் இருவரையும் சிறையில் அடைத்தார்கள்.

அன்றிரவு அரசர் தூக்கத்தில் ஒரு கனவு கண்டார். அந்த கனவில் மன்னர் அந்த கோவிலுக்கு போகிறார். ஆண்டவன் சந்நிதியில் போய் நிக்கிறார். அங்கே கடவுள் குளிரால் நடுங்கி கொண்டிருக்கிறார். அரசர் கடவுளே என்ன ஆச்சு உனக்கு என்றார்? அதற்கு கடவுள் குளிர் அதிகமாக இருக்கிறது என்றார். உடனே அரசர் தன்னிடமிருந்த விலை உயர்ந்த சால்வையை எடுத்துக் கொண்டு கடவுளை நெருங்கினார். கடவுள் பயத்தில் கத்தினார் என்ன அது? உன்னுடைய சால்வையா? வேண்டாம் வேண்டாம் என்றார். அரசர் கடவுளே இதை ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள்? நான் என்ன பாவம் செய்தேன்? என்று பயத்துடன் நின்றார். அதற்கு கடவுள் நேற்று ஒரு சால்வையை எனக்கு கொடுத்தனுப்பினாய். அதை கொண்டு வந்தவனையும் பெற்றுக் கொண்டவனையும் சிறையில் அடைத்து விட்டாய். இப்போது எனக்கும் சால்வை கொடுக்கிறாய். நாளை என்னையும் சிறையில் அடைத்து விடுவாய் ஆகவே வேண்டாம் என்றார். அரசர் அதிர்ச்சியில் விழித்து கொண்டார் அவருக்கு எல்லாம் புரிந்தது. ஓடிப்போய் அவரே சிறையின் கதவுகளை திறந்து விட்டார். சன்யாசியின் கால்களில் விழுந்தார். சுவாமி நான் அறியாமல் செய்து விட்டேன் தாங்கள் ஒரு மகான் என்னை மன்னித்து விடுங்கள் என்றார். அரசரே துன்பப் படுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான் கடவுளுக்கு செய்கிற தொண்டு அதை புரிந்து கொள் என்று சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தார் சன்யாசி.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 309

கேள்வி: காஞ்சிபுரம் அத்திவரதர் பற்றி

நீர் தொடர்பான கண்டங்கள் விலகி விடும். சந்திர தோஷங்கள் இருந்தால் விலகிவிடும். மேலும் சந்திரனின் பரிபூரண ஆசி கிடைக்கும்.

கேள்வி: கோடி ஹத்தி பெருமாள் பற்றி (அருள்மிகு மகாலட்சுமி சமேத வான்முட்டி பெருமாள் திருக்கோயில் மயிலாடுதுறை.)

ஹத்தி தோஷம் நீக்கக்கூடிய ஸ்தலம். முற்பிறவியில் கொலை அல்லது கொலைக்கு சமமான பாவங்கள் செய்த மனிதர்கள் எல்லாம் இங்கு உழவார பணியும் மற்ற தொண்டுகளும் செய்தால் அந்த பாவங்கள் எல்லாம் விலகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 308

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

ஒருவனை பார்த்து எதிர் காலத்தில் உனக்கு இருதயத்தில் குறைபாடு வருமப்பா. எனவே இன்றில் இருந்தே தக்க உடற்பயிற்சி செய்து அன்ன ஆகாரத்தில் கவனமாக இருந்து நிறைய தர்மங்களை செய்து நிறைய பூஜைகளை செய்து வா என்றால் நல்ல வேளை கூறினார்களே என்று எடுத்துக் கொள்ளாமல் எனக்கு இருதயத்தில் பாதிப்பா? எனக்கு இருதயத்தில் பாதிப்பு வந்துவிடுமா என்று அவன் அன்றில் இருந்தே அச்சப்பட துவங்கினால் இது போன்ற வாக்கை ஏன் கூறினோம் என்றுதான் மகான்களுக்கும் இருக்கும். எனவே எதிர் காலத்தை தெரிந்து கொண்டு எதிர் காலத்தில் என்ன நடக்கும் என்று அறிந்து கொண்டு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் மனிதன் ஜோதிடம் அருள் வாக்கு போன்றவற்றை பார்க்கிறான். ஆனால் அவன் எதிர்காலம் அவன் எண்ணுவது போல் ஆக்கப்பூர்வமாக இருந்து விட்டால் பாதகம் இல்லை. ஆனால் பெரும்பான்மையான மனிதர்களுக்கு அப்படி இல்லாத போது எதை குறை கூறுவது. அப்படி எதிர்காலத்தை பற்றி கூறி அச்சுறுத்துவதை விட எதிர் காலத்தில் வரக்கூடிய விதி வழியாக எதிர் காலத்தில் வரக்கூடிய ஆபத்துக்களை எல்லாம் மாற்றுவதற்கு அல்லது அந்த துன்பங்களை எல்லாம் தாங்குவதற்கு மன வலிமை அதிகரிக்கும் வண்ணம் பிரார்த்தனைகளையும் தர்மங்களையும் எம்மை (அகத்திய மாமுனிவர்) நாடும் மனிதர்களுக்கு கூறினால் அதை அவன் கவனமாக பின்பற்றிக் கொண்டே வந்தால் கட்டாயம் எதிர்காலம் என்பது சிறப்பாகவே இருக்கும். எனவே யாம்(அகத்திய மாமுனிவர்) கூறுவது என்னவென்றால் எம்மை நாடும் தருணம் எது நடப்பினும் மனம் தளராமல் வந்தால் இறுதியில் இறைவன் அருளால் பரிபூரண வெற்றி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சுலோகம் -173

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-11

அர்ஜூனா எந்த பக்தர்கள் என்னை எவ்விதம் வழிபடுகிறார்களோ நானும் அவர்களை அதற்கேற்பவே அணுகுகிறேன். ஏனெனில் எல்லா மனிதர்களும் பல்வேறு விதங்களிலும் என்னுடைய வழியைப் பின்பற்றுகிறார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

அர்ஜூனா இந்த உலகத்தில் பிறந்த மனிதர்கள் ஏதெனும் ஒரு வகையில் என்னுடைய வழியை பின்பற்றுகிறார்கள். அப்படி பின்பற்றும் பக்தர்கள் இந்த உலகத்தில் உள்ள என்னுடைய பல ரூபங்களை தாயாக தந்தையாக குருவாக தெய்வமாக நண்பனாக காதலனாக குழந்தையாக என்று பல வகைகளிலும் பல்வேறு பாவனைகளிலும் என்னை வழிபடுகிறார்கள். அவர்களது சிரத்தைகளுக்கு ஏற்ப அவர்களது பாவனைகளுக்கு ஏற்ப அவர்களை அணுகி அவர்களுக்கு அருள்புரிகிறேன்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 307

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

எம்மை நாடுகின்ற ஒரு மனிதன் சரியான பணி இல்லை என்று வருவதாக கொள்வோம். அவனுக்கு நாங்கள் இன்னும் நூறு தினங்களில் அல்லது இந்த பௌர்ணமிக்கு பின் பணி அமைந்து விடும் என்று கூறுவதாகக் கொள்வோம். இங்கே சித்தர் கூறிய வாக்கு பொய்க்க கூடாது என்று தான் கேட்பவனும் சுற்றி உள்ளவர்களும் எண்ணுவார்கள். உண்மைதான் சித்தன் வாக்கு பொய்க்காது என்பது உண்மைதான். ஆனால் அங்கே நாங்கள் கூறுகின்ற வாக்கின் தன்மை கூறிய வாக்கின் பின்னர் உள்ள கர்ம வினைகளின் தன்மை கூறப்பட்ட மனிதனின் கர்ம வினைகளின் தன்மை நடப்புகால பிறவியில் அவன் நடந்து கொள்கின்ற விதம் இவற்றையெல்லாம் அனுசரித்து பார்க்கும் போது விதி என்பது எந்த அளவிற்கு நெகிழ்ந்து தரும் என்று கூறி விடலாம்.

ஒரு மாணவன் நல்ல மதிப்பெண் பெற்று ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவிலே சேர்ந்து பயில வேண்டும் என்று எண்ணுகிறான். அவனுக்கு அந்த தகுதி இருக்கிறது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அவனால் அதை கற்க முடியாமல் போகும் பொழுது இன்னொரு மனிதன் அவனுக்கு பொறுப்பு எடுத்துக் கொண்டு நீ விரும்பும் கல்வி நிறுவனத்தில் நான் உன்னை சேர்த்து விடுகிறேன் என்று கூறும் பொழுது அந்த கல்வி நிறுவனம் எந்த விதமான எதிர்ப்பும் இன்றி அவனை சேர்த்துக் கொள்கிறது. காரணம் முற்றிலும் தகுதியான ஒருவனுக்கு தான் அந்த மனிதன் சிபாரிசு செய்திருக்கிறான் என்ற அளவிலே. ஆனால் தேர்விலே வெற்றி பெறாத ஒருவனோ அல்லது தேர்விலே குறைவான மதிப்பெண் பெற்ற ஒருவனோ இப்படி ஆசை பட்டால் என்ன செய்ய இயலும்? முயற்சி செய்கிறேன் சொல்லி இருக்கிறேன் முயற்சி செய்கிறேன் என்று அவனுக்கு ஆறுதல் கூறலாமே அல்லாமல் அவன் விரும்புகின்ற வழியிலே கல்வி கற்பது என்பது இயலாது. இங்கே அந்தப் பொறுப்பு எடுத்துக் கொண்ட மனிதன் ஆரம்பத்தில் பொறுமையாய் இரு சொல்லி இருக்கிறேன் பார்க்கலாம் என்று கூறி கூறி பின்னர் ஒரு தருணத்தில் இல்லையப்பா நீ விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காது வேறு ஒரு பிரிவு கிடைக்கும் அதிலே உன் கவனத்தை செலுத்து என்று கூறுவதை போலத்தான் நாங்களும் பல்வேறு தருணங்களில் உரைக்க வேண்டி இருக்கிறது. இந்த வித்தியாசத்தையும் நாங்கள் கூறுகின்ற வாக்கின் தன்மையையும் ஆய்ந்து பகுத்து புரிந்து ஏற்றுக் கொள்வது என்பதும் ஒரு மனிதனின் பக்குவம் மனோபலம் கர்ம வினைகள் தான் தீர்மானிக்கிறது. அது நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது மனிதர்களுக்கு இல்லை என்பதால் தான் யாமும் பொட்டில் அடித்தாற்போல் கூறாமல் மேலெழுந்த வாரியாகவே கூறிக்கொண்டு செல்கிறோம்.