16. வேதத்திற்கு பொருள் அருளிச் செய்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் வேதத்திற்கு பொருள் அருளிச் செய்த படலம் நூலின் பதினாறாவது படலமாகும்.

ஒரு சமயம் ஊழிக் காலம் உண்டானது. அதனால் பதினான்கு உலகங்களும் அடங்கின. மறைகள் ஒடுங்கின. பின்னர் சிவந்த கதிர்களை உடைய சூரியனின் முன்னால் மலரும் தாமரை மலர் போல சிவபெருமானின் முன் மீண்டும் அனைத்தும் தோன்றின. அப்போது இறைவனின் திருவாக்கில் இருந்து ஓம் என்னும் பிரணவம் தோன்றியது. அப்பிரணவத்திலிருந்து வேதங்கள் தோன்றின. நைமிசாரணியத்தில் இருந்த கண்ணுவர் கருக்கர் உள்ளிட்ட முனிவர்கள் வேதங்களை பயின்றனர். ஆனாலும் அவ்வேதங்களின் உட்பொருளை உணராது மனம் கலங்கி முகம் வாடி இருந்தனர். அப்போது அங்கே ஆணவ மலத்தை வென்ற அரபத்தர் என்ற முனிவர் வந்தார். முகம் வாடியிருந்த முனிவர்களை நோக்கிய அரபத்தர் நீங்கள் பாசம் நீக்கப்பட்டு விருப்பு வெறுப்பற்ற தன்மையை உடையவராய் இருந்தும் மனம் வேறுபட்டு முகம் வாடியிருக்க காரணம் என்ன? என்று கேட்டார். அதற்கு அம்முனிவர்கள் ஐயனே மும்மலங்களையும் இயல்பாகவே நீக்கக் கூடிய இறைவன் அருளிய வேதத்தின் பொருளை அறிய இயலாமல் அஞ்ஞான மனத்தினை உடையவர்களாய் இருக்கின்றோம். ஆகையால் நாங்கள் தெளிவடைய ஆலோசனை சொல்லுங்கள் என்று கேட்டார்கள். அதற்கு அரபத்தர் வேதத்தினை அருளிய சிவபெருமானால் மட்டுமே அதற்குரிய விளக்கத்தினைத் தெரிவிக்க இயலும். ஆகையால் நீங்கள் சிவபெருமானை நோக்கி தவம் இருந்து வேதத்தின் பொருளினை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் தவம் இயற்றுவதற்கு சொக்கநாதர் குடிகொண்டிருக்கும் மதுரை சிறந்த இடம் என்று முனிவர்களுக்கு வழிகாட்டினார்.

அரபத்தரின் வழிகாட்டுதலின்படி கண்ணுவர் உள்ளிட்டோர் வேதத்தின் பொருளினை அறியும் பொருட்டு மதுரை சென்று அடைந்தனர். பொற்றாமரைக் குளத்தில் நீராடி முறைப்படி சொக்கநாதரையும் மீனாட்சி அம்மனையும் வழிபட்டார்கள். பின்னர் கல்லா மரத்தின் (கல் ஆகி விட்ட ஆலமரம்) கீழ் குருவாகிய தென்முகக் கடவுளை வணங்கி தங்களுக்கு குருவாகி வேதத்தின் பொருளினை எடுத்துரைக்குமாறு வேண்டினர். இவ்வாறு அவர்கள் ஒரு வருடக் காலம் முறைப்படி வழிபட்டனர். ஒருநாள் இறைவன் பதினாறு வயது நிரம்பிய சர்வ லட்சணங்கள் பொருந்திய வேதிய இளைஞனாக முனிவர்களின் முன்னர் தோன்றினார்.

முனிவர்களிடம் குற்றமற்ற தவத்தினை உடையவர்களே உங்கள் விருப்பம் என்ன? என்று இறைவனார் கேட்டார். அதற்கு அம்முனிவர்கள் ஒப்பற்ற சிறப்பினை உடைய வேதங்களின் பொருளினை அருள வேண்டும் என்று விண்ணபித்துக் கேட்டுக் கொண்டனர். அதற்கு இறைவனார் பதில் சொல்ல ஆரம்பித்தார். லிங்கத்தின் முன் சென்று வேதங்களின் பொருளினை அறிதலே இம்மையின் போக பேற்றிற்கும் பாச பந்தத்தை அறுக்கும் வீடுபேற்றிற்கும் கருவி ஆகும். இச்சிவலிங்கமும் வேதமும் ஒன்றே. இந்த சிவலிங்கபூஜை செய்வதால் வேதங்களில் கூறப்பட்ட கருமங்கள் எல்லாம் செய்த பலன் கிடைக்கும். வேதாந்த அறிவால் பெறப்படும் பயனை இந்த சொக்கலிங்கத்தை வணங்கி வழிபடுதலால் அடையலாம். ஆதியாகி அந்தமாகி என்றும் குன்றாத ஒளிவடிவாய் இருப்பவர் இச்சொக்கலிங்கம். ஜோதிர்மயமான இந்த லிங்கத்திற்கு முதலும் முடிவும் கிடையாது. அதற்கு பிரம்மம் என்று பெயர்.  படைத்தல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழிலுக்காக பிரம்மம் மூன்றாகப் பிரிந்து பிரம்மன் விஷ்ணு ருத்திரன் எனப் பெயர் பெற்றது.

இறைவனின் திருவாக்கிலிருந்து உருவாகிய ஓம் என்னும் பிரணவத்திலிருந்து விரும்பிய பொருளை அடைவதற்குரிய காயத்ரி தோன்றியது. இந்த காயத்ரியானது சொக்கலிங்கரின் திருவருளால் நான்கு வேதங்களைத் தந்தன. பின்னர் இறையருளால் நான்கு வேதங்களும் அளவற்றனவாய் விரிந்தன. சொக்கநாதரின் நடுமுகத்தில் இருந்து சிவாகம நூல் தோன்றியது. தற்புருட முகத்திலிருந்து இருபத்தொரு சாகைகளோடு இருக்கு வேதம் தோன்றியது. அகோர முகத்திலிருந்து நூறு சாகைகளோடு யசுர் வேதம் தோன்றியது. வாமதேவ முகத்தில் ஆயிரம் சாகைகளோடு சாமவேதம் தோன்றியது. சத்தியோசாத முகத்தில் நாட்டப்பட்ட ஒன்பது சாகைகளோடு அதர்வண வேதம் தோன்றியது.

வேதங்களைக் கருமகாண்டம் ஞானகாண்டம் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஞானகாண்டமானது உண்மை அறிவு பகவானின் அருள் வடிவத்தை விவரிக்கின்றன.  கருமகாண்டமானது பூஜை வகைகள் ஆசிரம விதிகளை விவரிக்கின்றன. அக்கினி ஹோத்திரம் முதல் அசுவமேதம் வரை எல்லா யாகங்கள் நித்திய நைமித்திக காமிய கர்மாக்கள் எல்லாம் ஈசுவரனையே சேரும். நீங்கள் கருமகாண்டத்தில் கூறியபடி இச்சிவலிங்கத்தை வழிபட்டு ஞானகாண்டத்தின் வழிகாட்டுதலின்படி இறைவனின் உண்மை வடித்தை உணர்ந்து தெளியுங்கள். வைதிகத்துள் சுத்த சன்மார்க்கமாகிய வைதிகம் சைவம். அதனை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். யாம் கூறிய இப்பொருள்கள் அனைத்தும் உங்களின் மயக்கத்தினை தீர்ப்பதாக அமையும் என்று கூறி முனிவர்களின் இதயத்தை தமது திருக்கரத்தால் தடவிக் கொடுத்து சிவலிங்கத்துள் சென்று மறைந்தார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

ஊழிக்காலத்திற்கு பிறகு உலகம் தோன்றிய விதத்தையும் காயத்திரி மந்திரம் தோன்றிய விதத்தையும் வேதங்கள் தோன்றிய விதத்தையும் வேதமும் சிவலிங்கமும் ஒன்றே என்பதை அனைவரும் அறிந்து கொள்ளவும் மேலும் வேதங்களின் பொருளை அறிந்து கொள்ள முடியாமல் இருந்த முனிவர்கள் பிரார்த்தனை செய்ததும் அவர்களின் கவலைப் போக்கியது போல் பிரார்த்தனை செய்தால் வேண்டியதை இறைவன் கொடுப்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 436

கேள்வி: ஸ்ரீ ருத்ரத்தில் க்ரம பாட என்ற பகுதி எதற்காக ஓதப்படுகிறது?

ருத்ரம் ஓதுவது நல்லது என்ற அளவில் நாங்கள் கூறுகிறோம். அதற்குள் உள்ள பொருளை வெளிப்படையாக பார்த்தால் குழப்பமாகவும் மிகவும் சிறு பிள்ளைத் தனமாகவும் இருக்கும். சகல சக்திகளும் ஆற்றலும் பெற்ற பரம்பொருளே உன்னை ருத்ர வடிவில் வணங்குகிறேன். நீ படைத்த இந்த பொருளையெல்லாம் உனக்கு தருகிறேன். நீ எனக்கு இதனைக் கொடு என்பதெல்லாம் அதில் வந்துகொண்டிருக்கும். ஆனால் கவனிக்க வேண்டும். முக்கண்ணனாகிய பரம்பொருளை அல்லது ஏதோ தெய்வத்தின் வடிவை வணங்கும் பொழுது யாராவது அழியக் கூடிய பொருளை கேட்பார்களா? அப்படி கேட்கக் கூடிய ஒரு நிலையை பிரசித்தி பெற்ற துதியாக மாற்றுவார்களா? எனவே மேலெழுந்தவாரியாக பார்த்தால் வெறும் உலகியல் ஆதாயத்திற்காக கூறப்படும் பாடல் போல் தோன்றினாலும் கூட இதையெல்லாம் தாண்டி பரிபூரண ஞானத்தைக் கொடு என்பதுதான் அதன் ஒட்டுமொத்த பொருளாகும். மற்ற உலகியல் விஷயங்களையெல்லாம் அருளியல் விஷயங்களாக பார்க்க மனிதன் முயற்சி எடுத்து பழக வேண்டும்.

15. மேருவை செண்டால் அடித்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் மேருவை செண்டால் அடித்த படலம் நூலின் பதினைந்தாவது படலமாகும்.

உக்கிரபாண்டியன் அகத்தியர் கூறிய முறைப்படி சோமவார விரதமுறையைப் பின்பற்றி மதுரையை நல்வழியில் ஆட்சி செய்து வந்தான். சோமவார விரதத்தின் பயனாக உக்கிரபாண்டியனுக்கு அழகான மகன் பிறந்தான். அவனுக்கு வீரபாண்டியன் என்று பெயரிட்டனர். சோமவார விரதத்தின் பயனாக வீரபாண்டியன் இயற்கையிலேயே அழகும் அறிவும் நிரம்பியவனாக இருந்தான். பல கலைகளிலும் தேர்ச்சி பெற்று அவன் விளங்கினான். அப்போது ஒரு சமயம் மதுரையில் மழை வளம் குன்றி பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் அரசுக்கு வரி செலுத்த முடியாமல் திணறினர். தம்மக்களின் குறைகளைப் போக்க எண்ணிய உக்கிரபாண்டியன் நேரே திருக்கோவிலை அடைந்து சொக்கநாதரையும் மீனாட்சி அம்மையும் வணங்கி மக்களின் துயர் போக்க வழியினை வேண்டி வழிபாடு நடத்தினான். அன்றைய இரவில் உக்கிரபாண்டியனின் கனவில் சொக்கநாதர் சித்தர் வடிவில் தோன்றி இமயத்தை தாண்டி இருக்கும் மேருமலையின் அரசன் ஏராளமான பொன் மற்றும் பொருள்களை தன்னகத்தே கொண்டுள்ளான். தற்போது செல்வச் செழிப்பினால் மேரு மலையானது செருக்கு கொண்டுள்ளது. நீ அந்த மலையை சுந்தரபாண்டியனார் கொடுத்த செண்டினால் அடித்து அதன் செருக்கை அழித்து அதனிடமிருந்து பொருளைப் பெற்று உன் நாட்டு மக்களின் துயரத்தைப் போக்கு. உனக்கு தேவையான பொருளினைப் பெற்றவுடன் அதன் மீது பாண்டிய நாட்டின் சின்னத்தைப் பொறித்துவிடு. அதே நேரத்தில் மேருமலையை அடைவதற்கு நீ நீண்ட கடினமான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கூறிஅருளினார்.

இறைவனின் திருவாக்கினைக் கேட்ட உக்கிரபாண்டியன் அதிகாலையில் விரைந்து எழுந்து நித்திய கடன்களை முடித்து பெரும் படையைத் திரட்டி மேருமலையை நோக்கி பயணம் ஆவதற்கு தயார் ஆனான். காலையில் சொக்கநாதரையும் மீனாட்சி அன்னையையும் வழிபட்டு தன்னுடைய படைகளுடன்  மேருமலையை நோக்கிய பயணத்தைத் தொடங்கினான். அவன் காசியை அடைந்து விஸ்வநாதரையும் விசாலாட்சியையும் வணங்கி தனது பயணத்தைத் தொடர்ந்தான். பின் இமயத்தைக் கடந்து பொன்போல் ஒளி வீசும் மேருமலையை அடைந்தான். உக்கிரபாண்டியன் மேருமலையை நோக்கி மலைகளுக்கு எல்லாம் அரசனே எம் தந்தையாகிய சிவபெருமானின் கையில் உள்ள வில்லே நிலவுலகின் ஆதாரமே வானத்தில் உள்ள தேவர்கள் எல்லோரும் வசிக்கும் கோவிலே நீ விரைந்து வருவாயாக என்று கூவி அழைத்தான். உக்கிரபாண்டியன் அழைத்தும் வராததால் கோபம் கொண்டு சுந்தரபாண்டியனார் கொடுத்த செண்டு எனப்படும் பொன் பந்தினால் மேருவின் சிகரத்தில் ஓங்கி அடித்தான். செண்டினால் அடிபட்ட மேருமலை வலியால் துடித்தது. அம்மலையை சுற்றியுள்ள அனைத்தும் நடு நடுங்கின. பின் மேருமலையானது நான்கு தலைகளும் எட்டு தோள்களும் வெண்ணிற குடையையும் தாங்கியவாறு உக்கிரபாண்டியனின் முன்னால் வந்து நின்றது.

உக்கிரபாண்டியனும் கோபம் தணிந்து நீ காலம் தாழ்த்தி வந்ததற்கு காரணம் யாது? என்று கேட்டான். அதற்கு அம்மலை எனக்கு அசையும் உருவம் அசையா உருவம்  இரண்டும் உண்டு.  அசையும் வடிவத்தில் நான் தினந் தோறும் சென்று சோமசுந்தரக் கடவுளையும் மீனாட்சி அம்மனையும் ஆகாய மார்க்கமாக சென்று வழிபட்டு வந்தேன். ஆனால் ஒரு பெண்ணின்பால் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக நான் பறக்கும் சக்தியை இழந்ததோடு அறிவு மயக்கத்தில் சோமசுந்தரரையும் வழிபட மறந்திருந்தேன். செல்வம் என்னிடம் அத்திகமாக இருக்கிறது என்ற ஆணவத்தில் காலம் தாழ்த்தி வந்தேன். அதன் காரணமாக தங்களிடம் இறைவன் கொடுத்த பந்தினால் அடியும் பட்டேன். என்னை மன்னித்தருளுங்கள். தாங்கள் இங்கே வந்த காரணம் யாது? என்று கேட்டது. உடனே பாண்டியனும் நான் என் மக்களின் துயரினைப் போக்க பொருளினை விரும்பி இவ்விடத்திற்கு வந்தேன் என்றான். அதற்கு மேருமலை உக்கிரபாண்டியரே என் உடலாகவே உள்ள இந்த மலையில் மாசுள்ள இடம் மாசற்ற இடம் என இரண்டு பகுதி உள்ளது. மாசற்ற இடத்தில் சூரிய ஒளிபோல் மிகத் தூயதான ஒரு பாகம் உண்டு. நீங்கள் விரும்பிய பொன்னானது அந்த தூய்மையான பாகத்தில் பாறையால் மூடி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்று கூறி பொருள்கள் இருக்கும் அறையை தன் கையினால் சுட்டிக் காட்டியது மேருமலை. உக்கிரபாண்டியன் அப்பொன்னறையின் அருகே சென்றான். மூடிய பாறையை நீக்கி வேண்டிய அளவு பொன்னை எடுத்துக் கொண்டு ஏற்கனவே இருந்தபடி மூடி வைத்தான். பின்னர் தான் எடுத்துக் கொண்ட பொருளின் மீது பாண்டிய நாட்டின் சின்னத்தைப் பொறித்து தன் படைகளோடு புறப்பட்டு மதுரையை அடைந்தான்.

மதுரையை அடைந்த உக்கிரபாண்டியன் சோமசுந்தரக் கடவுளையும் மீனாட்சியையும் வணங்கினான். பின் அரண்மனையை அடைந்து தான்கொண்டு வந்த பொன் பொருட்களைக் கொண்டு தன்னுடைய குடிமக்களின் பசித் துன்பத்தை நீக்கினான். சிவபெருமானின் திருவருளால் மீண்டும் பாண்டிய நாட்டில் மழை பெய்து வளங்கள் பெருகின. நீதிதவறாமல் அரசாண்ட உக்கிரபாண்டியன் தன்மகனான வீரபாண்டியனுக்கு அரசுரிமையை அளித்தான். பின் சொக்கநாதரின் திருவடியில் இரண்டறக் கலந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

செல்வ செருக்கும் முறையற்ற பெண்ணாசையும் ஒருவனை தன்னுடைய நிலையில் இருந்து கீழ் நிலைக்கு கொண்டு சென்று விடும் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 435

கேள்வி: இறைவன் மேல் அணிவித்த மாலையை பிரசாதமாக ஏற்ற பிறகு நாங்கள் எப்படி பராமரிப்பது?

இறைவனின் கருணையால் யாங்கள் கூறவருவது யாதென்றால் இதுபோல் சுவாமியின் திருமேனியில் உள்ள மாலையை அதுபோல் பிரசாதமாக ஏற்பதும் பய பக்தியாக வழிபாடு செய்வதும் தவறல்ல. என்றாலும் கூட நன்றாக கவனிக்க வேண்டும். தெரிந்தும் தெரியாமலும் அந்த பிரசாத பூக்கள் எங்கும் சிதறாமல் பாதுகாக்க வேண்டும். அப்படி பாதுகாக்க முடியவில்லை என்றால் அதை அங்கேயே ஸ்தல விருட்சத்தின் அடியில் வைத்து விடலாம். அல்லது அது இறைவனிடமே இருக்கட்டும் ஒரு மலரை மட்டும் கொடுங்கள் என்று பவ்யமாக கேட்டுக் கொள்ளலாம். அதைவிட்டு அதை வாகனத்தில் மாட்டுவது அனாச்சாரமாகும். அதை யாங்கள் ஒருபொழுதும் ஏற்பதில்லை. மலர்கள் அனைத்துமே இறைவனுக்கும் இறைவனுக்கு சமமான மகான்களுக்கு மட்டுமே உரியது. அதை அனாச்சாரமான காரியங்களுக்கு பயன்படுத்துவதை யாங்கள் ஒருபொழுதும் ஏற்பதில்லை. பாவப்பட்ட மனிதனின் மேல் மலர்கள் இருக்கும் பொழுது கண்ணீர் விட்டுக் கதறி இறைவனிடம் கேட்கும். என்ன பாவம் செய்தேன் இறைவா இவன் மேனியில் நான் கிடக்கிறேனே? என்னை மன்னிக்கக் கூடாதா? உன் மேனிக்காக மலர்ந்த எனக்கு இவன் மேனியில் இடம் வந்திருக்கிறதே? இது நியாயமா? என் மீது இரக்கமில்லையா இறைவா? என்று ஒவ்வொரு மலரும் கண்ணீர் விடுகிறது. எனவே மலர்களை கழுத்திலே சூடிக்கொள்ளும் முன்னால் மனிதன் சிந்திக்க வேண்டும். அடுத்த வார்த்தை கேட்பார்கள். பெண்கள் தலையில் சூடுகிறார்களே? என்று. இதிலே பெண்களுக்கு சில விதி விலக்குகளை இறைவன் தந்திருக்கிறார். அதிக அளவு இல்லாமல் சிறிய அளவிலே நறுமணமிக்க மலர் மாலையை மலர் சரத்தை பெண்கள் சூடிக் கொள்ளலாம். அதற்கு காரண காரியங்கள் வேறு. அதை நன்றாக சிந்தித்துப் பார்த்தால் ஆண்களும் பெண்களும் புரிந்து கொள்ளலாம்.

14. இந்திரன் முடிமேல் வாளை எறிந்த படலம்

திருவிளையாடல் புராணம் 14. இந்திரன் முடிமேல் வாளை எறிந்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம் நூலின் பதினான்காவது படலமாகும்.

உக்கிரபாண்டியன் நீதிநெறி தவறாமல் மதுரையை ஆட்சி செய்து வந்தான். அப்பொழுது ஒரு சமயம் மழையானது மூவேந்தர்கள் ஆட்சி செய்யும் தமிழ் நாட்டில் பொய்த்தது. ஆகையால் தமிழ் நாட்டில் நீர் வளமின்றி பஞ்சம் உண்டானது. நாட்டு மக்களின் துயர் தீர்க்க எண்ணிய மூவேந்தர்களும் பொதிகை மலையில் வசித்த அகத்தியரின் உதவியை நாடிச் சென்றார்கள். அகத்தியரும் கோள்களின் நிலையையும் கால நிலையையும் ஆராய்ந்து மூவேந்தர்களிடமும் அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு மழை பெய்யாது. ஆதலால் நீங்கள் மழைக் கடவுள் வருணனுக்கு தலைவனான இந்திரனிடம் மழையைப் பெய்யச் செய்யுமாறு கேளுங்கள் என்று கூறினார். மூவேந்தரும் அகத்தியரிடம் நாங்கள் இந்திரனை சந்திக்க வேண்டுமென்றால் இந்திர லோகம் செல்ல வேண்டும் நாங்கள் எப்படி இந்திலோகத்திற்கு செல்வது என்று கேட்டார்கள். அதற்கு அகத்தியர் நீங்கள் மூவரும் சோம வார விரத வழிபாட்டினைப் பின்பற்றி சிவபெருமானின் திருவருளைப் பெற்று இந்திரலோகத்தை அடையுங்கள் என்று கூறினார். தமிழ் மூவேந்தரும் சோமவார விரத முறையை விளக்குமாறு அகத்தியரிடம் கேட்டுக்க கொண்டார்கள்.

சோமாவார விரத முறையை பின்பற்ற விரும்புபவர்கள் கார்த்திகை மார்கழி மாதங்கள் மற்றும் இரண்டு அமாவாசை சேர்ந்து வரும் மாதங்களைத் தவிர ஏனைய மாதங்களில் திங்கள் கிழமைகளில் இவ்விரதத்தை துவக்கலாம். இதற்காக விரதம் தொடங்கும் திங்கள் கிழமைக்கு முந்தைய ஞாயிற்று கிழமைகளில் இரவில் உணவு உண்ணாமல் நிலத்தில் படுத்து உறங்க வேண்டும். திங்கள் கிழமை அதிகாலையில் எழுந்து சொக்கநாதரை மனதில் நினைத்து அன்றைய கடன்களை முடித்து பொற்றாமரைக் குளத்தில் நீராடி வெண்ணீறு அணிந்து கொள்ள வேண்டும். மந்தாரை முல்லை இருவாட்சி சாதி மல்லிகை மலர்களால் விநாயகரை வழிபட்டு பின் சொக்கநாதரை முறைப்படி வழிபட வேண்டும். பின் பஞ்சாமிர்தம் பஞ்சகவ்வியம் நறுங்கனித்தேன் சந்தனக்குழம்பு குளிர்ந்த தூய நீர் ஆகியவற்றால் இறைவனுக்கு அபிசேகம் செய்ய வேண்டும். அழகிய வெண்பட்டு பச்சைக் கற்பூர சுண்ணம் சந்தனம் மல்லிகை உள்ளிட்ட மணமுள்ள மாலை ஆகியவற்றை அணிவிக்க வேண்டும். பொன்னாலான அணிகலன்களை இறைவனுக்கு அணிவிக்க வேண்டும். பல வித பலகாரம் பானகம் மணம் மிக்க தாம்பூலம் ஆகியவற்றைப் படைத்து தீபதூப ஆராதனைகள் செய்து வில்வத்தால் அர்ச்சித்து மனமுருக வழிபாடு நடத்த வேண்டும். பின் தானங்கள் பலவற்றைக் கொடுக்க வேண்டும். இவ்வாறு வழிபட்டால் நல்ல திருமணப்பேறு நன்மக்கட்பேறு நல்லவாக்கு கல்வி பொருள் இனியபோகம் பகைவரை வெற்றி கொள்ளும் தன்மை இப்பிறவியிலேயே அரசுரிமை பிறநலன்கள் ஆகியவை கிடைக்கும். மேலும் முந்தைய பிறவிகளில் செய்த தீவினைகள் நீங்கப் பெற்று இப்பிறவியில் வீடுபேறு அடைவர். தேவருலகில் பதினான்கு இந்திரப் பட்டம் பெற்று அவன் பக்கத்தில் வாழ்வர்கள் என்று சோமவாரத்தின் விரதமுறை மற்றும் பலன்களை அகத்தியர் விளக்கிக் கூறினார்.

அகத்தியர் கூறிய விதிமுறைப்படி மூவேந்தர்கள் மூவரும் சோமவார விரதத்தைப் பின்பற்றி சிவபெருமானின் திருவருளைப் பெற்று இந்திரலோகத்தைச் சென்று அடைந்தனர். மூவேந்தரும் வருவதை அறிந்த இந்திரன் மூவேந்தர்கள் அமருவதற்காக தன்னை விட தாழ்ந்த நிலையில் உள்ள சிம்மாசனத்தை அமைத்தான். இந்திரோலகத்தை அடைந்த மூவேந்தர்களில் சேரனும் சோழனும் இந்திரனின் காட்டிய சிம்மாசனத்தில் அமர்ந்தனர். உக்கிரபாண்டியன் மட்டும் இந்திரனுக்கு சமமாக அவனுடைய சிம்மாசனத்தில் இந்திரனோடு அமர்ந்தான். இதனால் இந்திரன் உக்கிரபாண்டியனின் மீது கடும் கோபம் கொண்டான். இந்திரன் சேர சோழர்களைப் பார்த்து நீங்கள் வந்த காரியம் யாது? என்று கேட்டான். அவர்கள் இந்திரனிடம் மழைக்கு அதிபதியே எங்கள் நாட்டில் மழை பெய்யவில்லை. அதனைப் பெற வேண்டி இங்கே வந்தோம் என்று கூறினார்கள். அதனைக் கேட்ட இந்திரன் அவர்களுக்கு பொன்னாடை மற்றும் இரத்தின ஆபரங்கள் கொடுத்து அவ்விருவர் நாடுகளிலும் மழை பெய்ய செய்யவதாக வாக்கு கொடுத்து அவர்களை வழி அனுப்பினான்.

தனக்கு இணையாக அமர்ந்திருந்த உக்கிரபாண்டியனை நோக்கிய இந்திரன் அவனை அவமானப்படுத்த எண்ணி ஒரு சூழ்ச்சியைச் செய்தான். பல பேர் சேர்ந்து தூக்கி வரும் எடை அதிகமாக உள்ள முத்து மாலையை உக்கிரபாண்டியனுக்கு பரிசளிக்க எண்ணினான். அவனின் ஆணையின்படி பல பேர் சேர்ந்து முத்து மாலையைத் தூக்கி வந்து உக்கிரபாண்டியனிடம் நீட்டினர். உக்கிரபாண்டியன் முத்து மாலையை தூக்கத் திணருவதைப் பார்த்து கைகொட்டி சிரிக்க இந்திரன் எண்ணியிருந்தான். ஆனால் உக்கிரபாண்டியன் முத்து மாலையை எளிதாக தூக்கி கழுத்தில் அணிந்து கொண்டான். இதனைப் பார்த்த இந்திரன் அதிர்ச்சியடைந்தான். பின் உக்கிரபாண்டியனிடம் இன்று முதல் நீ ஆரம் தாண்டிய பாண்டியன் என்று அழைக்கப்படுவாய் என்று கூறினான். ஆனால் உக்கிரபாண்டியன் அதனைப் பொருட்படுத்தாது இந்திரனிடம் ஏதும் கேட்காது மதுரை நகர் திரும்பினான். சேர சோழ நாடுகளில் இந்திரன் மழையைப் பெய்வித்தான். பாண்டிய நாட்டில் மட்டும் மழை பெய்யவில்லை. ஒருநாள் உக்கிரபாண்டியன் மரங்கள் அடர்ந்த பொதிகை மலைச்சாரலில் வேட்டையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது புட்கலாவருத்தம் சங்காரித்தம் துரோணம் காளமுகி என்னும் நான்கு மேகங்கள் பொதிகை மலைச்சாரலில் மேய்ந்து கொண்டிருந்தன. அதனைக் கண்ட உக்கிரபாண்டியன் அவற்றைப் பிடித்து சிறையில் அடைத்தான். இதனை அறிந்த இந்திரன் கடும் கோபம் கொண்டான். உக்கிரபாண்டியன்மீது போர் தொடுத்தான்.

பாண்டியனின் படைகளும் இந்திரனின் படைகளும் நேருக்கு நேராக நின்று போரிட்டனர். போரின் போது உக்கிரபாண்டியன் இறைவனான சுந்தரபாண்டியன் அளித்த வாளை இந்திரனை நோக்கி வீசினான். வாள் இந்திரன் அணிந்திருந்த கிரீடத்தைச் சிதைத்தது. அதனைக் கண்ட இந்திரன் நான் முன்னர் சோமசுந்தரரை வழிபட்டதின் பலனாக என்னுடைய தலை இன்று தப்பியது என்று எண்ணி போர் களத்தைவிட்டு வெளியேறி தேவலோகத்தை அடைந்தான். பின்னர் உனது நாட்டில் மழையைப் பொழிவிக்கிறேன். நீ என்னுடைய மேகங்களைத் திருப்பித் தருவாயாக என்று ஓலை ஒன்றை அனுப்பினான். இந்திரன் அனுப்பிய ஓலையை நம்பாததால் மேகங்களின் விடுவிக்க உக்கிரபாண்டியன் மறுத்து விட்டான். பாண்டிய நாட்டு வேளாளன் ஒருவன் அரசே இந்திரனின் செய்திக்கு நான் பிணை. இந்திரன் என்னை நன்கு அறிவான். ஆதலால் நீங்கள் மேகங்களை விடுதலை செய்யுங்கள் என்று கூறினான். உக்கிரபாண்டியனும் மேகங்களை விடுவித்தான். பின்னர் இந்திரன் பாண்டிய நாட்டில் மழையை பெய்யச் செய்து நாட்டை வளமாக்கினான். மழையால் பாண்டிய நாடு செழித்து பொலிவு பெற்றது.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில் சிவபெருமானை வழிபடும் முறை மற்றும் அதற்கான பலன்களை அருளினார். மேலும் வலிமை மிக்கவர்கள் தங்களை விட வலிமை குறைந்தவர்களை துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டால் இறைவனின் அருளால் வலிமை மிக்கவர் தண்டிக்கப்படுவர்கள் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 434

அகத்திய மாமுனிவர் அருளிய பொது வாக்கு:

தீபம் ஏற்ற ஏற்ற பாவம் குறையும் என்பது ஒரு உண்மையாகும். எனவே இருள் என்பது துன்பமும் பாவமும் ஆகும். ஒளி என்பது அதற்கு எதிராக இருந்து பாவத்தை துன்பத்தை நீக்குவதாகும். இருள் அகற்றி மாந்தனின் மனதிலே உள்ள இருள் அகற்றி சுற்று புறத்தில் உள்ள இருளையும் அகற்றி பாவம் என்னும் இருளையும் அகற்றி சோதனை கஷ்டங்கள் வேதனை என்ற இருளையும் அகற்றி ஒளி வளரட்டும் ஒளி பரவட்டும் என்பதின் ஆத்மார்த்தமான தத்துவமே தீபமாகும். இருந்தாலும் கூட உயர் தரமான நெய்யினை கொண்டு நல்விதமாக தீபத்தை ஏற்றும் பொழுது அந்த நெய் ஏற்றுகின்ற இடத்தையும் ஏற்றுகின்ற மனதையும் சுத்த படுத்துகின்றது என்பதை புரிந்து கொண்டு வெறும் எந்திரம் போல் தீபத்தை ஏற்றாமல் ஆத்மார்த்தமான பிரார்த்தனை செய்து கொண்டே தீபத்தை ஏற்ற ஏற்ற ஏற்ற எற்றுபவனுக்கு ஏற்ற படும் இடத்தில் அதிலே சுற்றி இருந்து பங்கு பெரும் மனிதனுக்கு பாவ வினைகள் படி படியாக குறைந்து நல் வினைகள் கூடி அவன் எதிர்பார்க்ககூடிய நல்ல காரியங்கள் எல்லாம் இறைவன் அருளால் நடக்கும் என்பது தீபத்தின் விளக்கம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 433

கேள்வி: நடக்க முடியாதவர்கள் வீட்டில் பூஜை செய்தால் பலன் உண்டா?

இறைவனின் அருளாணைப்படி நடக்க முடியாதவர்கள் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள். சித்தர்களின் அருளாணைப்படி வாக்குப்படி நடக்க முடியாதவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள். எனவே நடப்பது என்பது கால்களால் மட்டுமல்ல.

நாமேல் நடப்பீர் நாமேல் நடப்பீர் என்று அதுபோல் நாவுக்கரசர் கூறியிருக்கிறார்.

நாவால் நடப்பது நல்ல வார்த்தைகளால் நல்ல நல்ல சிந்தனைகளால் ஒருவன் நடக்க வேண்டும். அதுதான் உண்மையான நடப்பு. எனவே வெறும் பாதங்களால் நடப்பது நடப்பல்ல. அப்படி உடல்ரீதியான பிரச்சினை உள்ளவர்கள் அவர்களால் இயன்ற பூஜையை எங்கு செய்தாலும் எப்படி செய்தாலும் உள்ளன்போடு செய்தால் இறைவன் ஏற்றுக் கொள்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 432

கேள்வி: பிள்ளையார்பட்டியில் உள்ள விநாயகர் வலக்கையில் சிவலிங்கம் வைத்திருப்பதின் தாத்பர்யம் என்ன?

இறைவனின் கருணையாலே இதுபோல் நல்விதமாய் இதற்கு பல காரணங்களை கூறலாம். இன்னொன்று தெரியுமா? யாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே பல்வேறு தருணங்களில் பல்வேறு ஆலயங்கள் கட்டப்படும் பொழுது சிற்பிகள் சில தவறுகள் செய்து விடுவார்கள். அதைவிட அந்த ஆலயத்தை கட்டுகின்ற ஆகம வல்லுனன் சில தவறுகளை செய்து விடுவான். உதாரணமாக காலம் காலமாக கிழக்கு நோக்கியபடி இறை ரூபம் வைக்கப்பட வேண்டுமென்றால் ஏதோ ஒரு சிந்தனையில் (இறை ரூபத்தை) தெற்கு நோக்கி வைத்து விடுவார்கள். பிறகு இப்படி இருப்பதுதான் சிறப்பு எங்கும் இல்லாத வழிமுறை அவர்களாகவே ஒரு கற்பனை கலந்த கதையை கூறிவிடுவார்கள். பரவாயில்லை இறை பக்தியால் இதை செய்வதால் யாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அந்த வகையிலே தன் தந்தையை கையில் வைத்து முழுமையாக ஆராதனை செய்து முக்கண்ணனாகிய அந்த சிவனை பரம்பொருளை சிவபெருமானாக உள்ளுக்குள் உணர்ந்து அந்த சிவனை மனதில் வரித்து சிவனோடு ஐக்கியமாக வேண்டுமென்று பலர் தவம் செய்கிறார்கள். அப்படி நேரடியாக தவம் செய்து சிவனை அடைவது என்பது சிவன் செய்கின்ற சோதனையை தாங்குகின்ற வல்லமை உள்ளவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும். மற்ற மனிதர்கள் சிவனின் சோதனையை இறைவனின் சோதனையை தாங்குவது கடினம்.

அதே இறைவன் விநாயகப் பெருமான் வடிவம் எடுக்கும் பொழுது எளிமையாக மிகவும் சாதாரண நிலையில் அருளைத் தருவதாக ஒரு வைராக்யம் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இதோ இந்த சிவனை தேடித்தானே போக வேண்டும். இந்த சிவனுக்குள்தானே ஒடுங்க வேண்டும் என்று எண்ணுகிறாய். என்னிடம் வா என் மூலம் சிவனில் ஒடுங்கலாம் என்று கூறாமல் கூறுகிறார். தானும் தன்னுடைய இன்னொரு வடிவமான சிவத்தை நினைத்து தவத்தை செய்து கொண்டிருக்கிறார். அங்கு சென்று வழிபட ஒரே சமயத்தில் பரம்பொருளின் இரண்டு தெய்வீக வடிவத்தையும் வணங்கிய பலன் உண்டு.

13. கடல் சுவற வேல் விட்ட படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் கடல் சுவற வேல் விட்ட படலம் நூலின் பதிமூன்றாவது படலமாகும்.

சுந்தரபாண்டியனார் தடாதகை ஆகியோரின் குமரனான முருக்கடவுளை ஒத்த உக்கிரபாண்டியன் மதுரையை சிறப்புற ஆட்சி செய்தார். மதுரையின் வளம் குன்றாது இருக்க உக்கிரபாண்டியன் 96 வேள்விகளைச் செய்து முடித்தார். இன்னும் நான்கு வேள்விகளைச் குறைவின்றி செய்து முடித்தால் உக்கிரபாண்டியனுக்கு இந்திரப்பதவி கிடைத்து விடும் என்று எண்ணி தேவர்களின் தலைவனான இந்திரன் உக்கிரபாண்டியனின் மீது பொறாமை கொண்டான். இந்திரனின் பொறாமையால் அவனுடைய மனதில் சூழ்ச்சி ஒன்று உருவானது. அதன்படி அவன் கடலரசனை அழைத்து மதுரையை அழிக்கும்படி கூறினான். கடலரசனும் இந்திரனின் பேச்சுக்கு உடன்பட்டு மதுரையை அழிப்பதாக இந்திரனுக்கு வாக்குறுதி அளித்தான். கடலரசன் இந்திரனுக்கு அளித்த வாக்குறுதிப்படி மதுரை அழிப்பதற்காக பெரும் சீற்றத்துடன் ஊழிக் காலத்தினை ஒத்த அழிவினை மதுரையில் உண்டாக்குவதற்காக பொங்கி எழுந்து மதுரையை நோக்கி வந்தான். கடலரசன் நள்ளிரவில் மதுரையின் கிழக்குப் பகுதியை அடைந்த போது சொக்கநாதர் உக்கிரபாண்டியனின் கனவில் சித்தர் வடிவில் தோன்றினார். பாண்டியனே உன்னுடைய மதுரை நகரினை அழிக்கும் பொருட்டு கடலானது பொங்கி எழுந்து வருகிறது. நீ உன்னுடைய வேல்படையை கடலின் மீது ஏவி அதனை வெற்றி பெற்று மதுரையைக் காப்பாயாக என்று எச்சரிக்கை வார்த்ததை கூறி மறைந்தார்.

சித்தரின் எச்சரிக்கை வார்த்தை கேட்டு கண் விழித்த உக்கிரபாண்டியன் தனது அமைச்சர்களோடு கலந்து ஆலோசித்து விரைந்து சென்று பேரொலியோடு வருகின்றன கடலினைப் பார்த்து வியந்து நின்றான். அப்போது பாண்டியனின் கனவில் வந்த சித்தமூர்த்தி நேரில் அவ்விடத்திற்கு வந்தார். பின் உக்கிரபாண்டியனை நோக்கி பாண்டியனே இனியும் காலம் தாழ்த்தாது உன்னிடம் உள்ள வேல் படையைக் கொண்டு பொங்கிவரும் கடலினை வெற்றி கொண்டு மதுரையை விரைந்து காப்பாய் என்று கூறினார். சித்தரின் வார்த்தைகளைக் கேட்டவுடன் உக்கிரபாண்டியன் தன்னிடம் இருந்த வேல் படையின் கூரியமுனை கடலில் படுமாறு வலஞ்சுழித்து வீசி எறிந்தான். கூரிய வேலின் நுனி கடலில் பட்டவுடன் கடலானது பேரோலியுடன் வற்றி வலிமை இழந்தது. உக்கிரபாண்டியனின் கணுக்கால் அளவுக்கு கடல் நீர் குறைந்தது. மதுரைக்கு கடலினால் வந்த பெரும் ஆபத்து விலகியது. உக்கிரபாண்டியனின் அருகில் நின்றிருந்த சித்தர் வைகைக் கரையில் கடைச்சங்கத்தை நிறுவி தமிழ் வளர்ப்பாய் என்று அருளினார். பின் வானத்தில் உமையம்மையோடு இடப வாகனத்தில் காட்சியருளினார். உக்கிரபாண்டியன் அவரைத் துதித்துப் போற்றினான். இறைவனார் திருக்கோவிலுள் ஜோதி வடிவில் புகுந்தருளினார். உக்கிரபாண்டியனும் இறைவனாரை திருகோவிலினுள் சென்று வழிபாடு செய்தான். பல விளை நிலங்களை திருகோவிலுக்கு சொந்தமாக்கிய உக்கிரபாண்டியன் மதுரையை இனிது ஆட்சி புரிந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தமிழுக்கு கடைச் சங்கத்தை ஏற்படுத்தி அருளினார். மேலும் வஞ்சனை எண்ணம் கொண்டவர்களோடு சேர்ந்து மற்றவர்களுக்கு தீயது செய்தால் தீய செயலில் ஈடுபடுபவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவர் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 431

கேள்வி: பாடல்பெற்ற ஸ்தலங்களில் ஐந்தினை மயான ஸ்தலங்கள் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இவற்றிற்கும் பொதுவாக வழிபடக்கூடிய ஸ்தலங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?

இறைவனின் கருணையாலே இதுபோல் மனிதர்கள் ஒருவகையில் அச்சப் படக்கூடிய இடம் விரும்பாத இடம் என்று மயானத்தை கூறலாம். ஆனால் மயான அமைதி என்ற வார்த்தையை மனிதனே கூறுவான். ஏனென்றால் அங்கு செல்லுகின்ற மனிதர்கள் இயக்கமற்ற நிலையிலே ஏதும் செய்ய இயலாத நிலையிலே அமைதியடைந்து விடுகிறார்கள். ஒரு மனித உடல் தேவையற்ற நிலைக்கு ஆளான பிறகு அதாவது ஆத்மாவை விட்ட பிறகு அந்த உடல் சென்று அடங்கக் கூடிய இடத்திற்கும் மனிதன் உயிரோடு சென்று வழிபடக் கூடிய ஆலயத்திற்கும் ஒரேவிதமான பொருள் வரக் கூடிய மயானம் என்ற வார்த்தையை எதற்காக வைத்தார்கள்? மனிதன் சிந்திக்க வேண்டும். உயிர் இல்லாத பொழுது இந்த உடல் அடக்கத்தோடு இருப்பதைவிட உயிர் இருக்கும் பொழுதே அடக்கமாக இருப்பதற்குண்டான வழிமுறையை கற்றுத் தரக் கூடிய ஆலயங்களில் ஒன்றுதான் அந்த ஆலயம். மயானத்தில் ஆடாது அசையாது ஒரு இருக்கும் மனிதன் அதன் பிறகு அவன் எந்த பாவமும் செய்வதில்லை. அவனால் செய்ய முடிவதில்லை. உடலோடு இருக்கும் பொழுது எத்தனையோ பாவங்களையும் அனாச்சாரங்களையும் செய்கிறான்.

நன்மைகளையும் செய்கிறான் இல்லையென்று கூறவில்லை. இங்கே ஒரு வேடிக்கை என்னவென்றால் அந்த இடத்தில் ஞானம் பெற வேண்டும் என்பதற்காகத்தான் மயானத்தோடு தன்னை தொடர்புபடுத்தி வைத்திருக்கிறார் முக்கண்ணன். ஒன்றுமில்லை எல்லாம் மாயை என்பதை மனிதன் உணர வேண்டும் என்று. ஆனால் மனிதன் என்ன செய்கிறான்? அங்கும் சென்று மனிதன் தன் ஆதிக்கத்தை காட்டி இறைவனை பின்னே தள்ளி விடுகிறான். இது இன்ன பிரிவில் பிறந்தவன் எரிக்கப்பட வேண்டிய மேடை. இது இன்ன ஜாதியில் பிறந்தவன் எரிக்கப்பட வேண்டிய மேடை என்றெல்லாம் பிரித்து வைக்கிறான். அதைத் தாண்டி இன்னொன்று செய்கிறான். ஒரு குழி தோண்டி இந்த உடலை மூடிவிட்டு ஒரு சிறு கட்டிடம் எழுப்பி அவன் படித்த பட்டங்களையெல்லாம் போட்டு வைக்கிறான். இதையெல்லாம் இறைவன் பார்த்து ஓ இவன் இந்தளவு படித்திருக்கிறானா? இவனை அழைத்து பக்கத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று சிந்திக்கப் போகிறாரா என்ன? மனிதனின் அறிவு வளரவே மறுக்கிறது என்பதுதான் எங்களின் ஆதங்கம். எத்தனை சொல்லித் தந்தாலும் நான் கீழேதான் இருப்பேன் என்பதுதான் மனிதனின் அறியாமை இருக்கட்டும்.

மனிதனின் அறியாமைதான் இந்த உலக இயக்கத்திற்கு அச்சாணியாக இருக்கிறது. இந்த உலகிலே அத்தனை பேரும் ஞானம் பெற்றுவிட்டால் இறைவனுக்கே அலுத்துவிடுமப்பா. மீண்டும் இன்னவனின் வினாவிற்கு வருகிறோம். அந்த மயானத்திலே ஒரு மனிதனுக்கு ஞானம் கிட்டும். நல்விதமான ஞானத்தை எத்தனையோ சித்தர்கள் மயானத்திலே அடைந்திருக்கிறார்கள். பிராந்தையார் எனும் சித்தனுக்கு ஞானம் மயானத்தில்தான் கிடைத்தது. மயானத்தில்தான் அவன் தவம் செய்து ஞானத்தை பெற்றான். அப்படியொரு ஞானம் மயானத்தில் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு சில ஜாதக விதிகள் வேண்டும். எல்லோரும் அதற்காக மயானம் சென்று உயிரோடு இருக்கும் பொழுதே தியானம் செய்ய வேண்டாம்.