12. உக்கிர குமாரனுக்கு வேல்வலை செண்டு கொடுத்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் உக்கிர குமாரனுக்கு வேல்வலை செண்டு கொடுத்த படலம் நூலின் பன்னிரண்டாவது படலமாகும்.

உக்கிரவர்மனின் திருமணத்திற்காக பெண் தேடுதல் நடைபெற்றது. மதுரையை அடுத்த மணவூரில் இருக்கும் அரசனான சோமசேகரனின் மகளான காந்திமதியை உக்கிரவர்மனுக்கு மணமகளாகத் தேர்வு செய்து திருமணம் முடிக்க இறைவனான சுந்தர பாண்டியரும் தடாகையும் கருதினர்கள். அன்றிரவு சோமசேகரனின் கனவில் தோன்றிய சொக்கநாதர் மதுரையை ஆண்டு வரும் சுந்தரபாண்டியனாரின் திருமகனான முருகனைப் போல் இருக்கும் உக்கிரவர்மனுக்கு உன் பெண்ணை மணம் முடிப்பாயாக என்று கூறினார். இதனைக் கேட்ட சோமசேகரன் விழித்து எழுந்தான். இறைவனின் ஆணையை நிறைவேற்ற விடியலுக்காக காத்திருந்தான். பின் விடிந்ததும் நித்திய கடமைகளை முடித்து தன் சுற்றத்தார் மற்றும் மகளுடன் மதுரையை நோக்கிச் சென்றான். முந்தைய நாளில் முடிவு செய்தபடி அமைச்சர்கள் சுந்தரபாண்டியரின் உறவினர்களோடு மதுரையிலிருந்து மணவூரை நோக்கிப் புறப்பட்டனர். வழியில் எதிர்ப்பட்ட சோமசேகரனைக் கண்டு உன்னுடைய புதல்வியை முருகக்கடவுளைப் போன்ற உக்கிரவர்மனுக்கு மணம் முடித்துக் கொடுப்பாயாக என்று கேட்டனர். சோமசேகரனும் சொக்கநாதரின் கட்டளையும் அதுவே. ஆகையால்தான் என்னுடைய மகளையும் அழைத்துக் கொண்டு மதுரையை நோக்கி வருகிறேன் என்று திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தான். அமைச்சர்கள் திருமணத்திற்கான சோமசேகரனின் சம்மதத்தை சுந்தரபாண்டியனாருக்கு தெரிவித்தனர்.

சோமசேகர மன்னன் காந்திமதி மற்றும் சுற்றத்தாரை அழைத்துக் கொண்டு சுந்தரபாண்டியனாரின் அமைச்சர்கள் மதுரையை அடைந்தனர். சோமசுந்தரரும் பெண் வீட்டாரை எதிர்கொண்டு அழைத்து அரண்மனை ஒன்றில் தங்க வைத்தார். பின்னர் அமைச்சர்கள் அனைவரும் கூடி திருமணநாளை நிச்சயித்தனர். மற்ற அரசர்களுக்கு திருமண ஓலையை அனுப்பினர். மதுரை மக்களுக்கு திருமண முரசினை அறிவித்து திருமணச் சேதியை அறிவித்தனர். மதுரை மக்கள் உக்கிரவர்மனின் திருமணத்திற்காக வாழை மரங்கள் மற்றும் கமுகு மரங்களைக் கொண்டு தோரணங்கள் கட்டி தங்கள் வீட்டினையும் மதுரை நகரினையும் அழகுபடுத்தினர். உக்கிரவர்மனின் திருமணத்திற்கு மன்னர்கள் தேவர்கள் முனிவர்கள் தவசிகள் உள்ளிட்டோர் மதுரைக்கு வருகை தந்தனர். தேவர்களின் குருவான வியாழபகவானும் காந்திமதி சமுத்திரிகா லட்சணம் நிறைந்த‌ பெண் என்று பெருமையாகக் கூறினார். உக்கிரவர்மன் திருமண நாளன்று வைகை ஆற்றின் நீரில் நீராடி மணமகனாக அலங்காரம் செய்து கொண்டு மணமேடையை அடைந்தார். காந்திமதியையும் மணப்பெண்ணாக அலங்கரித்து உக்கிரவர்மனின் அருகில் அமரச் செய்தனர். சோமசேகரப் பாண்டியன் தனது பெண்ணை உக்கிரவர்மனுக்கு தாரை வார்த்து கொடுத்து பல பரிசுப் பொருட்களையும் வழங்கினான். இவ்வாறாக உக்கிரவர்மன் காந்திமதி திருமணம் இனிது நடைபெற்றது. அறுசுவை உணவுகள் திருமணத்திற்கு வருகை புரிந்தோர்களுக்கு திருமண விருந்தாக வழங்கப்பட்டது. திருமணத்திற்கு வருகை புரிந்தவர்கள் சுந்தரபாண்டியனாரையும் தடாதகையையும் வணங்கி விடைபெற்றனர்.

ஒரு நாள் சுந்தரபாண்டியனார் உக்கிரவர்மனை அழைத்து மகனே உனக்கு இந்திரனும் கடல் அரசனும் பெரும் பகைவர்களாக வருவார்கள். இந்திரனால் ஆபத்து வரும்போது அவனுடைய முடி சிதறும் வண்ணம் இந்த வளையினைக் கொண்டு எறிவாயாக. கடலரசன் மதுரையை அழிக்க வரும் போது இந்த வேலை எறிந்து அவனைத் தடுப்பாயாக. மேருவின் செருக்கினை அழிக்க இந்த செண்டினால் அடிப்பாயாக என்று கூறி மூன்று படைக் கருவிகளை உக்கிரவர்மனுக்கு அருளினார். உக்கிரவர்மனும் தன் தந்தையை வணங்கி அப்படைக்கலன்களைப் பெற்றுக் கொண்டான். பின்னர் உக்கிரவர்மனுக்கு அரசனாக முடிசூட்டிய சுந்தரபாண்டியனார் வாய்மை வழியே நின்று சிறப்பான முறையில் ஆட்சி செய் என்று கூறி ஆட்சிப் பொறுப்பை அவனிடம் ஒப்படைந்தார். அன்றிலிருந்து உக்கிரவர்மன் உக்கிரபாண்டியன் என்று அழைக்கப்பட்டான். பின்னர் சுந்தரபாண்டியனார் தன்னைச் சுற்றி இருந்த சிவகணங்களுக்கு முந்தைய வடிவத்தினைக் கொடுத்து தடாதகையுடன் மதுரை திருக்கோயிலினுள் சென்று சுந்தரேஸ்வரராகவும் மீனாட்சி அம்மனாகவும் எழுந்தருளினார்கள். உக்கிரபாண்டியனார் சிறப்புடன் ஆட்சி புரிந்து வந்தார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

பிள்ளைகளைப் பெற்று நல்வழியில் வளர்த்து நல்ல குணங்களை கற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்க்கைக்கு வேண்டிய பொருளாதாரத்தை நல்வழியில் ஈட்டச் செய்து நல்ல மண வாழ்க்கையையும் அமைத்து தருவது பெற்றோரின் கடமை என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 430

தேவராய ஸ்வாமிகள் இயற்றிய சத்ருசம்ஹார வேல் பதிகம் பற்றி:

இறைவனின் கருணையாலே சத்ரு சம்ஹார த்ரிசதியை ஓது என்று யாங்கள் கூறுவோம். பலமான எதிர்ப்புகளும் எதிரிகளின் தொல்லையும் எங்கிருந்து வருகிறது? இவன் பாவ கர்மாவில் இருந்துதானே வருகிறது. எனவே பாவங்களை குறைத்துக் கொள்ள கூறப்படுகின்ற வழிபாடுகளில் இதும் ஒன்று. அதைப் போல இன்னவன் வினவிட்ட அன்னவன் (தேவராய ஸ்வாமிகள்) கூறிய அதும் நல்விதமான மாற்றத்தை மனித மனதிலே ஏற்படுத்தும். எதிர்ப்பு வெளியில் இருந்து வந்தாலும் இவன் மனம் பக்குவம் அடைந்து விட்டால் எதிர்ப்புகள் குறைந்து விடும். அதற்கு முதலில் இந்த வழிபாடு உதவும். மனம் சாந்தமடையத்தான் இந்த வழிபாடுகள். இதைப்போல சுதர்சன வழிபாட்டையும் செய்யலாம்.

பாம்பன் ஸ்வாமிகளின் இதுபோல் நல்விதமாய் பகை கடிதலையும் ஓதலாம். இவை அனைத்துமே மனித மனதை பக்குவப்படுத்தவும் மனம் பக்குவமடைய பக்குவமடைய அவனுக்கு வரும் எதிர்ப்பை மிக லாவகமாக எப்படி கையாள்வது? என்ற அறிவையும் இந்த வழிபாடு அவனுக்கு சொல்லித்தரும். எனவேதான் இந்த வழிபாட்டை யாங்கள் கூறுகிறோம். சிலர் எண்ணுவதுபோல இந்த வழிபாடுகளையெல்லாம் கூறினால் எதிரிகள் ஒழிந்து விடுவார்கள். எதிரிகள் தோற்று ஓடி விடுவார்கள். எதிரிகள் எங்கோ பதுங்கி விடுவார்கள் என்றெல்லாம் கற்பனை செய்ய வேண்டாம். ஒரு நல்ல மனிதனுக்கு முன்வினையின் பயனாக எதிரிகளும் எதிர்ப்பும் வந்தால் அதனை அந்த வினைகள் வழியாக சென்று தீர்த்துக் கொள்ள உதவக் கூடிய வழி முறைகளில் இதும் ஒன்று.

11. உக்கிரபாண்டியன் திருவவதாரப் படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் உக்கிரபாண்டியன் திருவவதாரப் படலம் நூலின் பதினொன்றாவது படலமாகும்.

இறைவனான சுந்தரபாண்டியனார் காஞ்சன மாலை மற்றும் மலயத்துவசனுக்கு வீடுபேற்றினை அளித்தார். இறைவியான தடாதகை பாண்டியவ வம்சத்தை தழைக்கச் செய்ய மகவு ஒன்றினை பெற விரும்பினார். இதனை அறிந்த சுந்தர பாண்டியனார் தமிழ் கடவுளான முருகப் பெருமானை தடாகையின் வயிற்றில் தோன்றச் செய்தார். அம்மையாரும் கர்ப்பவதியானார். தடாகையின் கர்ப்பம் குறித்து அறிந்த மதுரை மக்கள் தங்களின் எதிர்கால மன்னனின் வரவை எண்ணி பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். தடாகை கர்ப்பவதியானதைக் கொண்டாட மதுரை நகரமே திருவிழா பூண்டது. கர்ப்பவதியான தடாகைக்கு குங்குமப்பூ கலந்த பால் பழங்கள் உள்ளிட்ட அவர் விரும்பிய பொருட்களை எல்லாம் உண்ணக் கொடுத்தனர். ஆன்மீகக் கதைகள் பாடல்கள் போதனைகள் தத்துவங்கள் உள்ளிட்ட இறைசிந்தனை மிக்கவற்றை தடாகையைக் கேட்கச் செய்தனர். கர்ப்பிணிப் பெண்களுக்கான வளைகாப்பு விழாவும் தடாகைக்கு நடத்தப்பட்டது.

கர்ப்பவதியான தடாகைக்கு திங்கட்கிழமையும் திருவாதிரை நட்சத்திரமும் கூடிய நாள் ஒன்றில் ஆண்மகவினைப் பெற்றெடுத்தாள். குழந்தை பிறந்ததும் சுந்தரப்பாண்டியர் பொன்னும் மணியும் ஆடை ஆபரணங்களை நாட்டு மக்கள் அனைவருக்கும் அள்ளி வழங்கினார். தடாகையின் குழந்தையைப் பார்க்க திருமால் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் மதுரைக்கு வந்து வாழ்த்துக்களை வணங்கினர். மதுரை மாநகர மக்கள் தங்களின் இளவரசரின் வரவினை எண்ணி மகிழ்ந்தனர். வீடுகள் தெருக்கள் உள்ளிட்டவைகளை அலங்கரித்து விழாக்கள் கொண்டாடினர். பின்னர் அக்குழந்தைக்கு உக்கிரவர்மன் எனப் பெயரிட்டனர். நான்காம் மாதத்தில் குழந்தையை கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். ஆறாம் மாதத்தில் குழந்தைக்கு அன்னம் ஊட்டினர். பதின்மூன்றாம் மாதத்தில் மயிர்வினை முடித்தனர். தேவகுருவாகிய வியாழ பகவான் வேதம் முதலிய கலைகளையும் வில் பயிற்சியையும் வாள் பயிற்சியையும் யானை ஏற்றம் குதிரை ஏற்றம் முதலியவற்றை உக்கிரவர்மனுக்கு கற்பித்தார். பாசுபதப் படைப்பயிற்சி இறைவனான சுந்தர பாண்டியரே உக்கிரவர்மனுக்கு கற்றுக் கொடுத்தார். பல விதமான படைப் பயிற்சியையும் வீர விளையாட்டுகளையும் கற்றுத் தேர்ந்த உக்கிரவர்மன் காளைப்பருவத்தை அடைந்தார்.

அவர் காளைப்பருவத்தில் முப்பத்திரெண்டு இலட்சணங்களும் பொருந்தி சிறந்த நற்குணம் உடையவராக திகழ்ந்தார். மகனுடைய போர் திறனும் சாதுர்யத்தையும் கண்ட சுந்தரபாண்டியனார் இவன் பூமண்டலம் முழுவதும் அரசாள‌ வல்லவன் என்று எண்ணினார். உக்கிரவர்மனுக்கு திருமுடி சூட்டுவதா? மணம் முடிப்பதா? என தடாதகை பிராட்டியாரும் சுந்தரபாண்டியனாரும் மற்றவர்களுடன் கலந்து ஆலோசித்து திருமணம் செய்வது என்று முடிவு செய்து திருமணத்திற்கு பெண் பார்க்கத் தொடங்கினர்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

பெண்கள் தங்களின் கர்ப்ப காலத்தில் நல்லவைகளை பார்க்க வேண்டும் நல்லவைகளை கேட்க வேண்டும் அப்போது நல்ல குழந்தைகளைப் பெறலாம் என்பதே அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 429

அகத்திய மாமுனிவர் அருளிய பொது வாக்கு:

ஆழ்வார்களின் பாடல்கள் அனைத்துமே உயர்ந்ததப்பா. அத்தனையும் தீந்தமிழ் சுவை. ஆண்டாளின் அத்தனை பாடல்களுமே சிறப்பு அப்பா. அதிலே ஒன்றில்

வியாழன் உறங்கி வெள்ளி முளைத்தது என்ற சொற்றொடர் வரும்.

யோசித்து பார்க்க வேண்டும். குரு அஸ்தமனமானால் அங்கே சுக்கிரன் உதிக்கும். ஆக உலக ஞானம் தலை தூக்கி விட்டால் பர ஞானம் என்பது மறைந்து விடும். ஞானகுரு மறைந்த இடத்திலே உலக இச்சைகள் தலை தூக்கும் என்ற பொருளும் அதுபோல் குருவாகிய கிரகம் மறைய சுக்கிரன் மேலே எழுந்தது என்ற ஒரு பொருளும் உண்டு. குரு மறைய சுக்கிரன் தோன்ற வேண்டுமென்றால் எத்தனையோ நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடக்கும். இதை ஜோதிட கலைஞர்கள் கணித்துப் பார்த்தால் ஆண்டாளின் காலம் என்ன? என்பதை கண்டுபிடித்து விடலாம்.

10. மலையத்துவசன் அழைத்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் மலையத்துவசன் அழைத்த படலம் நூலின் பத்தாவது படலமாகும்.

சுந்தர பாண்டியனார் காஞ்சன மாலைக்காக ஏழு கடல்களை மதுரைக்கு வருவித்து கிணற்றில் இருக்கச் செய்தார். இச்செய்தியை இறைவியான தடாகை காஞ்சன மாலையிடம் தெரிவித்து அவரை கிணற்றில் இருக்கும் கடல் நீரில் நீராட அழைத்தார். தடாகையும் சுந்தர பாண்டியனாரும் கடல் நீர் இருக்கும் கிணற்றின் அருகே வந்து அமந்தனர். தடாகையின் அழைப்பினை ஏற்று காஞ்சன மாலை நீராட கிணற்றின் அருகே வந்து அங்கு கூடியிருந்த முனிவர்களிடம் கடலில் நீராடுவதற்கு ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா? என்று கேட்டார். அதற்கு அவர்கள் காஞ்சன மாலையே கணவனுடைய கை மகனுடைய கை பசுவினது கன்றின் வால் இம்மூன்றில் ஏதேனும் ஒன்றினை கையினால் பற்றிக் கொண்டு தீர்த்தத்தில் நீராடுதலே முறை என்று கூறினர். முனிவர்கள் கூறியதைக் கேட்ட காஞ்சன மாலை எனக்கு தற்போது கணவனும் இல்லை. மகனும் இல்லை. நான் கன்றின் வாலினைப் பிடித்து கடலில் நீராடுவேன் என்று மனதிற்குள் எண்ணி வருத்தம் கொண்டாள். பின் தன்னுடைய மன வருத்தத்தினை தடாகையிடம் தெரிவித்து கன்றின் வாலினைப் பற்றிக் கொண்டு நீராடப் போவதைத் தெரிவித்தாள். தாயின் மன வருத்தத்தைக் கேட்ட தடாகை சுந்தர பாண்டியனாரிடம் சென்று நீங்கள் என் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற ஏழு கடல்களையும் மதுரைக்கு வரவழைத்தீர்கள். தற்போது கடலில் நீராட கணவனும் மகனும் இல்லாத என் தாய் கன்றின் வாலினைப் பற்றி நீராடப் போவதாக கூறுகிறாள். தாங்கள் இதில் ஏதேனும் அவளுக்கு உதவ முடியுமா? என்று வருத்தத்துடன் கேட்டாள்.

தடாகை கூறியதைக் கேட்ட சுந்தரபாண்டியனார் மலயத்துவசனை மனதில் நினைத்தார். மலயத்துவசனும் அவ்விடத்திற்கு வருகை புரிந்தான். பின் பெண் பிள்ளையைப் பெற்றதால் நான் பெற்ற பயன் இது என்று கூறி உலகத்திற்கு இறைவனான சுந்தர பாண்டியனாரை வணங்க முற்பட்டான். இதனைக் கண்ட சுந்தர பாண்டியனார் தங்களுடைய மகளை மணந்ததால் நீங்கள் எனக்கு மாமன் முறை. மாமன் என்பவர் தந்தைக்கு சமமானவர். ஆதலால் என்னை நீங்கள் வணங்குதல் சரியில்லை. அன்பு நிறைந்த மனைவியோடு தீர்த்தத்தில் ஆழ்ந்து நீராடுங்கள் என்று கூறி மலயத்துவசனை ஆரத் தழுவினார். தன் தந்தையைக் கண்டு அன்பு கொண்ட தடாகை அன்பினால் மலயத்துவசனை கட்டி அணைத்துக் கொண்டாள். மலயத்துவசன் உன்னுடைய திருமணத்தை நான் காண இயலவில்லை. ஆனால் இன்று உங்களிருவரையும் கண்டு என் உள்ளம் பேரானந்தத்தில் திளைக்கிறது என்று கூறினான். காஞ்சன மாலையும் தன்னுடைய கணவனுக்கு அருகில் சென்று வணங்கி மலயத்துவசனின் கையினை பற்றிக் கொண்டு நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தை உச்சரித்தபடி கடலில் நீராடினாள். கடலில் நீராடி கரையேறிய காஞ்சன மாலையும் மலயத்துவசனும் இறைவனின் திருவருளால் பந்த பாசம் ஒழித்து மீண்டும் பிறவாமை என்னும் வீடுபேற்றினைப் பெற்றனர்.

சிவலோகத்தில் இருந்து வந்த தேவ விமானத்தில் அவ்விருவரும் ஏறினர். அங்கிருந்தோர் அரஅர என்று துதிக்க தேவ விமானம் மேலெழும்பி சிவலோகத்தை நோக்கிச் சென்றது. இதனைக் கண்ட தடாதகை சுந்தர பாண்டியனாரிடம் சென்று என்னுடைய தாய் ஒரு கடல் நீரில் நீராட விரும்பினார். ஆனால் தாங்கள் ஏழு கடலையும் மதுரைக்கு வரவழைத்தீர்கள். பின் தந்தையையும் வரழைத்து தாய் தந்தையரை நீராடச் செய்து இறுதியில் சிவலோகப் பதவியையும் அளித்தீர்கள். இனி எனக்கு எந்தவித துன்பமும் ஏற்படப்போவதில்லை என்று கூறினார். சுந்தர பாண்டியனாரும் மீனாட்சியின் கருத்தினைக் கேட்டு மகிழ்ந்தார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஏழு கடல் பொய்கை தீர்த்தத்தில் நீராடுபவர்களுக்கு பிறவி இல்லை என்பதை அனைவருக்கும் உணர்த்தினார். மேலும் மனைவியின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றுவது கணவனின் கடமை என்பதை அனைவரும் உணர இந்த திருவிளையாடலை புரிந்து அனைவரும் அறியச் செய்தார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 428

கேள்வி: பெண் சித்தர்கள் குறைவாக இருப்பதன் காரணம் என்ன? குறிப்பாக ஆழ்வார்கள் நாயன்மார்களில் கூட பெண் சித்தர்கள் அதிகமாக இல்லையே?

இறைவனின் கருணையாலே கூறுகிறோம். பல பல பல லகரம் கோடி ஆண் சித்தர்களுக்கு ஒரேயொரு பெண் சித்தரே சமம். அப்படி எடுத்துக் கொள்ளலாமே? ஏன் எண்ணிக்கையில் அதிகம் குறைவு என பார்க்க வேண்டும்? ஏனென்றால் எல்லா ஆண் சித்தர்களையும் பெற்றுத் தருவது பெண்மைதானே? எனவே எல்லா நிலைகளிலும் இங்கே பெண் சித்தர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் மனித பார்வையில் குறைவு போல் தோன்றுகிறது. வேறு வகையில் கூறப்போனால் சித்தர்களை உருவாக்குவதே பெண்கள்தான் அதாவது சக்திதான். எனவே இன்னொரு வகையில் கூறப்போனால் ஒரு துலாக்கோலிலே ஒரு பக்கம் அதிக அளவு பஞ்சினை பருத்தியினை வைப்போம். இன்னொரு பக்கம் நிறை கல்லை வைப்போம். எது அதிகமாக இருக்கும்? அங்கே பருத்தி எனப்படும் பஞ்சு மூட்டை மூட்டையாக இருக்கும். இந்த அளவு மூட்டைக்கு அதே அளவா எடை கல்லை வைப்பார்கள்? ஆனால் எடை கல் அளவில் சிறியதாக இருந்தாலும் அந்த பஞ்சு மூட்டையின் அளவை அது தீர்மானிக்கிறது அல்லவா? அதைப்போல ஒரேயொரு ஆண்டாள் போதும் அத்தனை ஆண் சித்தர்களையும் சமமாக கருதுவதற்கு. அதைப்போல் ஒரேயொரு ஔவையார் போதும் அனைத்து ஆண் சித்தர்களுக்கும் சமமாக. எனவே பெண் சித்தர்கள் இல்லையென்று கூறவே வேண்டாம்.

பல குடும்பங்களில் நடக்கின்ற கொடுமைகளை பார்க்கும் பொழுது இல்லற பெண் சித்தர்களே அதிகமாக இருக்கிறார்கள். ஏதோ சித்தர்கள் என்றால் சித்து வேலையும் அதிசயங்களையும் செய்தால்தான் சித்தர்கள் என்பது அல்ல. தன் குடும்பத்திற்காக தன்னை சேர்ந்தவர்களுக்காக ஏன்? பொது நலத்திற்காக அனைத்தையும் சகித்துக் கொண்டு யார் இருந்தாலும் சித்தர்களே. எனவே அப்படி நயத்தகு நாகரீகமாக நல்ல எண்ணங்களோடு வாழ்கின்ற பல பெண் சித்தர்கள் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல ஆண் சித்தர்களில் மனிதர்கள் அறிந்த சித்தர்கள் இந்த அளவு. அறியாத சித்தர்கள் கோடி கோடி என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.