தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் #4 திருக்கழிப்பாலை

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 4 வது தேவாரத்தலம் திருக்கழிப்பாலை. மூலவர் பால்வண்ணநாதர். மூலவர் பெயருக்கேற்ப வெண்ணிறமாக சுயம்பு மூர்த்தியாக மிகச் சிறிய பாணத்துடன் காட்சியளிக்கிறார். ஆகையால் இறைவன் பால்வண்ண நாதேஸ்வரர் என்ற திருநாமத்தை பெற்றார். அம்பாள் வேதநாயகி. தலமரம் வில்வம். தீர்த்தம் கொள்ளிடம். புராண பெயர் காரைமேடு. இன்று சிவபுரி எனப்படுகிறது. குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜை நடக்கிறது. மேற்புறம் சதுரமாக வழித்தெடுத்தாற்போல் நடுவில் பள்ளத்துடன் அதிசயமான அமைப்புடன் லிங்கத் திருமேனி காட்சி தருகின்றது. அபிஷேகத்தின்போது பால் மட்டும்தான் இப்பள்ளத்தில் தேங்கும். மற்ற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்குத்தான் நடைபெறுகிறது. குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜை நடக்கிறது. லிங்கத்திற்கு பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் உள்ளனர்.

கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரம். உள்பிரகார நுழைவு வாசலின் இருபுறமும் அதிகார நந்தியர் தமது துணைவியருடன் உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், கஜலட்சுமி, விஷ்ணு, பிரம்மா, அகோர மூர்த்தி, முயலகன் மாறிய நிலையில் தட்சிணாமூர்த்தி, கிராதமூர்த்தி, நாயன்மார்கள், சதுரா துர்க்கை, புவனேஸ்வரி ஆகியோர் உள்ளனர். இங்குள்ள பைரவர் காசியில் உள்ளது போல நாய் வாகனம் இல்லாமல் 27 மண்டை ஓட்டுடன் பூணூல் அணிந்து சர்ப்பத்தை அரைஞான அணிந்து ஜடாமுடி சிங்கப்பல்லுடன் தனிக்கோயிலில் அருளுகிறார். காசியில் பைரவரை வடிவமைத்த சிற்பியே இங்குள்ள பைரவரையும் வடிவமைத்துள்ளார். இத்தல பைரவரை வணங்கினால் காசி பைரவரை வணங்கிய பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. அகத்தியருக்கு காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று. வால்மீகி முனிவர் இங்கு வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. அருணகிரிநாதர் இத்தல முருகன் மீது திருப்புகழ் பாடியுள்ளார். இங்குள்ள நடராஜர் சடைமுடி அள்ளி முடிந்த கோலத்தில் உள்ளார். அருகில் சிவகாமியம்மன் தன் தோழிகளான விஜயா சரஸ்வதியுடன் உள்ளார்.

கபிலமுனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து வரும் போது வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் தங்கி சிவபூஜை செய்ய நினைத்தார். இப்பகுதியில் பசுக்கள் தானாக பால்சுரந்து வந்த காரணத்தினால் மணல் முழுவதும் வெண்ணிறமாக காட்சியளித்தது. முனிவர் இந்த வெண்ணிற மணலை எடுத்து லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். ஒருமுறை அந்த வழியாக வந்த மன்னனது குதிரையின் கால் குளம்பு மணல் லிங்கத்தின்மீது பட்டு லிங்கம் பிளந்து விடுகிறது. வருந்திய முனிவர் பிளவுபட்ட லிங்கத்தை எடுத்துவிட்டு வேறு லிங்கம் பிரதிஷ்டை செய்ய நினைத்த போது இறைவன் பார்வதி சமேதராக காட்சி தந்து முனிவரே பசுவின் பால் கலந்த வெண்ணிற மணலில் செய்த லிங்கம் பிளவு பட்டிருந்தாலும் அதை அப்படியே பிரதிஷ்டை செய்து விடுங்கள். காமதேனுவே பசுவடிவில் இங்கு வந்து பால் சொறிந்துள்ளது. எனவே இந்த லிங்கத்தை வழிபடுபவர்கள் சகல செல்வங்களும் அடைவார்கள் என்றார். கோவில் முன்பு கொள்ளிட வடகரையில் காரைமேடு என்ற இடத்தில் இருந்தது. கொள்ளிட ஆற்றின் வெள்ளப்பெருக்கால் கோயில் முழுவதும் சிதலமடைந்து விட்டது. திரு. பழநியப்ப முதலியார் என்பவர் சிவபுரிக்குத் தெற்கில் தற்போது இருக்கும் இடத்தில் கோவில் கட்டினார். சோழர் காலக் கல்வெட்டுகள் நான்கு எடுக்கப்பட்டுள்ளன. வால்மீகி முனிவர் வழிபட்டுள்ளார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் 1 பாடல் பாடியுள்ளார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.