புலிக்கால் முனிவர் என்பவர் மத்யந்தனர் என்பவரின் மகனும் சிறந்த சிவ பக்தரும் ஆவார். இவருடைய இயற்பெயர் மழன் என்பதாகும். இவர் வியாக்ரபாதர் என்றும் அழைக்கப் படுகிறார் .மத்யந்தனர் என்ற முனிவருக்கு மகனாகப் பிறந்த மழன் தனது தந்தையிடமே வேதங்களைக் கற்றுக் கொண்டான். அவன் ஒரு நாள் தந்தையிடம் மனிதனாகப் பிறந்தவர்கள் இறைவனை அடையத் தவம் செய்தால் மட்டும் போதுமா? என்று கேட்டான். அதற்கு அவர் தவம் செய்தால் சொர்க்கம் மட்டுமே கிடைக்கும். சிவ வழிபாடு செய்பவர்கள் தான் மறுபிறவி இல்லாத உயர்ந்த நிலையை அடைவார்கள். நீ சிவனை வழிபட்டுச் சிறந்த நிலையைப் பெற முயற்சி செய் என்றார். அதன் பிறகு மழன் சிவ வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டினான். அவனுடைய பக்தி மிகுந்த சிவ வழிபாட்டைக் கண்ட முனிவர்கள் பலரும் அவனை மழமுனிவர் என்று அழைக்கத் தொடங்கினர். இதையடுத்து மழமுனிவர் பிற இடங்களுக்கும் சென்று சிவ வழிபாடு செய்வது என்று முடிவு செய்தார்.
அவருடைய வழிபாட்டுப் பயணத்தில் தில்லைவனம் எனும் பகுதிக்கு வந்து சேர்ந்தார். அந்தப் பகுதியில் உயரமாக வளர்ந்திருந்த மரங்களில் பூத்துக் கிடந்த பூக்கள், அவரை மிகவும் கவர்ந்தன. தான் வழிபட இருக்கும் சிவலிங்கத்தை அந்த அழகிய பூக்களைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். சிவ வழிபாட்டிற்காக பறிக்கும் பூக்கள் தேன் குடிக்க வரும் வண்டுகளால் எச்சில்பட்டு விடக்கூடாது என்பதற்காக அதிகாலை நேரத்திலேயே அந்த மரங்களில் ஏறி பூக்களைப் பறித்துக் கொண்டு வந்தார். மரம் ஏறுவதில் அனுபவமில்லாத அவருக்குக் கைகளிலும் கால்களிலும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டன. அந்தக் காயங்களிலிருந்து வழிந்த இரத்தத் துளிகள் அவர் பறித்து வந்த சில பூக்களில் ஒட்டிக் கொண்டிருந்தன. அது மட்டுமில்லாமல் சூரிய வெளிச்சமில்லாமல் இருட்டாக இருந்த அதிகாலை நேரத்தில் பூக்களைப் பறித்து வந்திருந்ததால் அவர் பறித்து வந்த பூக்களில் சில அழுகிய பூக்களும் இருந்தன. இதனால் வருத்தமடைந்த அவர் எளிதில் மரம் ஏறுவதற்கு வசதியாகப் புலியின் கால்களும் இருட்டிலும் தெளிவாகக் காணும் நல்ல பார்வையும் வேண்டுமென்று நினைத்தார். அவர் இறைவன் சிவபெருமானை நினைத்துத் தனக்குப் புலியின் கால்களும் தெளிவான பார்வையும் தந்தருளும்படி வேண்டினார். அவரின் வேண்டுதலைக் கேட்ட சிவபெருமான் அவருக்கு நேரில் காட்சியளித்து வேண்டிய வரத்தை வழங்கினார். அதன்பிறகு முனிவரின் கால்கள் புலிக்கால்களாக மாற்றமடைந்தன. கைகளும் புலியின் கால்களைப் போன்று மாறின. அவருக்கு இருட்டிலும் தெளிவாகக் காணும் பார்வையும் கிடைத்தது. சமஸ்கிருதத்தில் வியாக்ரம் என்பது புலியைக் குறிப்பதனால் வியாக்ரபாதர் என்று அழைக்கப்பட்டார். இதற்குப் புலிக்கால்களை உடையவர் என்று பொருளாகும். தமிழில் புலிக்கால் முனிவர் என்றும் அறியப்படுகிறார்.
புலியின் கால்களைக் கொண்டவர் என்பதால் அவர் வியாக்ரபாத முனிவர் என்று அழைக்கப்பட்டார்.
தன்னுடைய வழிபாட்டை மேலும் சிறப்பாக செய்ய நினைத்த வியாக்ரபாத முனிவர் துர்வாச முனிவரிடம் சீடராகச் சேர்ந்தார். துர்வாச முனிவர் வியாக்ரபாதருக்கு சிவ வழிபாடு மட்டுமின்றி விஷ்ணு வழிபாடு அம்பாள் வழிபாடு பிரம்மன் வழிபாடு உள்ளிட்ட பல்வேறு இறை வழிபாடுகளையும் அதற்கான வழிபாட்டு முறைகளையும் கற்றுக் கொடுத்தார். திருப்பிடவூர் என்ற தலத்தில் அருள்பாலித்து வந்த இறைவனை பூஜித்து வந்தார் புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர். ஒரு முறை இத்தலத்தில் இருந்த நீர்நிலை வறண்டு போனது. இதனால் இறைவனை அபிஷேகம் செய்து வழிபட நீரின்றி தவித்தார் புலிக்கால் முனிவர். அந்த சமயத்தில் இந்திரன் தனது வெள்ளை யானையுடன் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று கொண்டிருந்தான். கயிலாயத்திலிருந்து வெள்ளை யானையில் நீர் எடுத்து வந்து ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று அபிஷேகம் செய்து வழிபடுவது இந்திரனின் தினசரி வழக்கம். அதற்காகத்தான் வான்வழியாக இந்திரன் சென்று கொண்டிருந்தான். வெள்ளை யானையின் மீது அமர்ந்து இந்திரன் தீர்த்தத்துடன் செல்வதைக் கண்ட வியாக்ரபாதர் வெள்ளை யானையிடம் சிவனுக்கு பூஜை செய்ய கொஞ்சம் தீர்த்தம் கொடு என்று கேட்டார். அதற்கு வெள்ளை யானை என்னால் தீர்த்தம் தர முடியாது என்று கூறி மறுத்துவிட்டது. இதைக் கேட்ட முனிவருக்கோ கோபம் தலைக்கு ஏறியது. தனது புலிக்கால் நகங்களால் தரையைத் தோண்டினார். உடனே சிவபெருமானின் தலையில் இருந்த கங்கை கீழே இறங்கி வந்தது. ஊற்று உற்பத்தியாகி தண்ணீர் பெருகியது. அந்த நீரைக் கொண்டு முனிவர் சிவபூஜையைச் செய்தார். அந்த நீர் ஊற்று திருக்குளமாக மாறி அதுவே புலிபாய்ச்சி தீர்த்தம் என்று தற்போது அழைக்கப்படுகிறது.
முனிவரிடம் தர்க்கத்தில் ஈடுபட்டதால் வெள்ளை யானை திருவானைக்காவலுக்கு தாமதமாக வந்தது. தாமதத்திற்கு என்ன காரணம் என்று ஜம்புகேஸ்வரர் வினவ முனிவர் தண்ணீர் கேட்ட விவரத்தையும் தான் அவருக்கு தண்ணீர் தர மறுத்த விவரத்தையும் இறைவனிடம் கூறியது வெள்ளை யானை. உடனே முனிவருக்கு தண்ணீர் கொடுத்து விட்டு வரும்படி ஜம்புகேஸ்வரர் பணிக்க வெள்ளை யானை மீண்டும் திருப்பிடவூர் திரும்பி தீர்த்தம் எடுத்துக் கொள்ளும்படி முனிவரிடம் கூறியது. ஆனால் கோபத்துடன் இருந்த முனிவர் வேண்டாம் என மறுத்து விட்டார். வெள்ளை யானை தன்னிடமிருந்த தீர்த்தத்தை சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தது.
வசிஷ்டர் தன் குடும்பத்துடன் சிதம்பரம் திருக்களாஞ்செடிகள் சூழ்ந்த சிங்காரத்தோப்பில் தவம் செய்து கொண்டிருக்கின்றார். தம்மை வந்து தரிசித்த வியாக்ரபாத மகரிஷிகளைக் கண்டு மகிழ்ந்தார். வியாக்ரபாதரின் தவ சிரேஷ்டத்தைக் கண்டு வியப்புற்று தன்னுடைய தங்கை ஆத்ரேயினை வியாக்ரபாதருக்கு மணம் முடித்து வைத்தார். வசிஷ்டரின் தங்கையும், வியாக்ரபாதரும் தம்பதி சமேதராக நடராஜப் பெருமானை வழிபட்டுவந்தனர். இருவரின் குடும்ப வாழ்க்கைக்குச் சான்றாக சூரியனையொத்த பிரகாசத்துடன் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு உபமன்யு என்று பெயரிட்டனர். உபமன்யு வசிஷ்டரின் ஆசிரமத்தில் அருந்ததியின் அரவணைப்பில் தெய்வப்பசுவாகிய காமதேனுவின் பால் அருந்திக் கொண்டு வனப்புடன் வளர்ந்துவந்தான். சில காலம் சென்று உபமன்யுவையும் அவன் தாயையும் அருந்ததி வியாக்ரபாதரின் இல்லம் கொண்டு சேர்ப்பிக்கின்றாள். இங்கு வந்த குழைந்தைக்கு வியாக்ரபாதர் தனது ஆசிரமத்திலிருந்த பசுவின் பால் தர தெய்வப்பசுவாகிய காமதேனுவின் சுவைமிக்க பால் அருந்திய அந்த பாலகன் வியாக்ரபாதர் தந்த பாலைத் துப்பிவிட்டு காமதேனுவின் பால் தான் வேண்டும் என அடம்பிடித்து பசியால் துடிக்க செய்வதறியாது திகைத்த வியாக்ரபாதர் நடராஜரை வேண்ட தன் பக்தனின் துயர் துடைக்க குழந்தை குடிப்பதற்காக பால் அலையென அடித்துவரும் வகையில் பாற்கடலையே உண்டாக்கினார். அதை உண்ட உபமன்யு திருப்தியடைந்து தந்தையிடம் பாடங்கள் பயின்று பெரும் ஞானியானார். உபமன்யு கிருஷ்ணருக்கு பஞ்சாக்ஷர உபதேசம் செய்வித்து கிருஷ்ணருக்கு ஏற்பட்ட தோஷங்களை நீங்கச் செய்தார். இவரின் சரிதத்தை சிவரஹஸ்யம் மிக விரிவாக விளக்குகின்றது.
பாலுக்குப் பாலகன் வேண்டியதிடப் பாற்கடல் ஈந்த பிரான் என்று திருப்பல்லாண்டிலும், அப்பர் தேவாரத்திலும் இச்சம்பவம் இடம்பெறுகின்றது. இந்த வரலாறு நடந்த இடம் திருபட்டூர் என்ற தலம். ஊரின் புராணப் பெயர் திருப்பிடவூர் என்பதே. ஆனால் அதுவே காலப்போக்கில் திருப்பட்டூர் என்று மாறிவிட்டது. நடராஜரால் ஏற்படுத்தப்பட்ட திருப்பாற்கடல் கோயில் வடதிசையில் அமைந்திருக்கின்றது. புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்படும் வியாக்கரபாத முனிவரின் ஜீவசமாதி இங்கு உள்ளது.