மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -41

பாண்டவர்கள் ஐந்து சகோதரர்களும் மணமகள் திரௌபதியை தங்களுடன் அழைத்துக் கொண்டு தாங்கள் குடியிருந்த குடிசைக்கு அழைத்து வந்தனர். இவர்களின் பின்னே பாண்டவர்களுக்கு தெரியாமல் இந்த பிராமணன் யார் என்று அறிந்து கொள்ள திரௌபதியின் அண்ணன் திருஷ்டத்யும்னன் பின் தொடர்ந்து வந்தான். குடிசைக்கு வெளியே இருந்து அவர்கள் உரத்த குரலில் அம்மா என்று நாங்கள் ஒரு நூதானமான பிட்சை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறோம் என்று கூறினார்கள். வீட்டுக்குள் இருந்த குந்திதேவி என்ன பிட்சை கொண்டு வந்திருக்கின்றார்கள் என்று பார்க்காமல் ஐந்து பேரும் உங்களுக்குள் பங்கிட்டு கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு வெளியே வந்து பார்த்தார். அர்ஜூனனுடன் திரௌபதி நின்று கொண்டு இருந்தார். நடந்தவைகள் அனைத்தையும் யுதிஷ்டிரன் குந்திதேவியிடம் விளக்கமாக சொன்னான். அனைத்தையும் கேட்ட குந்திதேவி குழம்பிப்போனாள்.

குந்திதேவி தன் குழப்பத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் திரௌபதியை கட்டித் தழுவிக் கொண்டாள். திரௌபதியும் தனக்கு புதிதாக வாய்த்த மாமியார் குந்திதேவி பாதங்களைத் தொட்டு வணங்கினாள். பிறகு மூத்தவனாகிய யுதிஷ்டிரனிடம் குந்திதேவி தனது மனக் கவலையை வெளியிட்டார். உண்மைக்கு மாறானது எதையும் என் வாழ்நாளில் நான் சொன்னது கிடையாது. நீங்கள் கொண்டு வந்த பிட்சையை ஐந்து பேரும் பங்கீட்டு கொள்ளுங்கள் என்று எண்ணிப் பார்க்காது நான் சொல்லிவிட்டேன். திரௌபதி தான் அந்த பிட்சை என்பது இப்போது எனக்கு விளங்குகின்றது. நான் அப்படி சொல்லியபடியால் என்ன நிகழப்போகிறது என்று தெரியவில்லை என்று தனது கவலையை வெளிப்படுத்தினாள். சிறிது நேரம் தாயும் பிள்ளைகளும் சிந்தனையில் மூழ்கி இருந்தனர் அதன் பிறகு யுதிஷ்டிரன் தாயே தாங்கள் தயங்க வேண்டாம். பொல்லாங்கு ஏதும் நிகழாது என்று சொல்லிவிட்டு அர்ஜுனா நீ திரௌபதியை மணந்து கொள் என்று கூறினான் அதற்கு அர்ஜுனன் மூத்தவர் தாங்கள் இருக்கும் போது தங்களுக்கு திருமணம் ஆகாமல் நான் எப்படித் திருமணம் செய்து கொள்வது இது பொருந்தாது. தங்களின் திருமணத்திற்கு பிறகு நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினான்.

பாண்டவர்களும் குந்திதேவியும் இந்த சிக்கலை எப்படி சரி செய்வது என்ற குழப்பத்தில் இருந்தனர். அப்போது வியாசபகவான் இங்கு தோன்றினார். உங்களிடம் இருந்த குழப்பத்தை ஞானதிருஷ்டியில் அறிந்தேன். ஆகவே தர்மத்தின் போக்கை தெளிவுபடுத்த இங்கு வந்தேன் என்றார். பாண்டவர்களும் குந்திதேவியும் திரௌபதியும் வியாசபகவானை வரவேற்று வணங்கினார்கள். வியாசபகவான் அனைவரிடமும்
திரௌபதி பூர்வ ஜென்மத்தில் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தாள். அவளுக்கு தரிசனம் கொடுத்த சிவபெருமான் என்ற வரம் வேண்டும் என்று கேட்க அதற்கு திரௌபதி தர்மத்தை கடைபிடிக்கும் நல்ல கணவன் வேண்டும் என்று இறைவனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் ஐந்து முறை மீண்டும் மீண்டும் கூறினாள். ஆகையால் இறைவனின் வரத்தின் படி அவளின் வினைபயனால் ஐந்து தர்மத்தை கடைபிடிக்கும் கணவன்மார்கள் அமைந்தாக வேண்டும். அந்த அமைப்பு பாண்டவர்களாகிய உங்களைக் கொண்டு நிகழ்கிறது. ஏனெனில் உங்கள் ஐவருக்கும் எதைக்கொண்டும் கருத்து வேறுபாடு கிடையாது. திரௌபதியின் வினைப்பயன் தங்கள் தாயின் சொல்வழியாக ஐவரும் திருமணம் செய்ய தூண்டுகிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.