ராமரைப் பற்றி காஞ்சி மகா பெரியவர் அருளியது

ராமன் என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம் மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம். எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும் அதனால் மனம் சலனம் அடையாமல் ஆனந்தமாக தர்மத்தையே அனுசரித்துக் கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால் அது ராமர்தான். வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும் உள்ளுக்குள்ளே ஆனந்தமாகவே இருந்தான். சுக துக்கங்களில் சலனமடையாமல் தான் ஆனந்தமாக இருந்து கொண்டு மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவதுதான் யோகம். அப்படியிருப்பவனே யோகி. இவ்வாறு மனசு அலையாமல் கட்டிப் போடுவதற்குச் சாமானிய மனிதர்களுக்கான வழி வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு கட்டுப்பாட்டோடு பின்பற்றி வாழ்வதுதான்.

மக்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக வேத தர்மங்களை அப்படியே அனுசரித்து வாழ்ந்து காட்டுவதற்காக ஸ்ரீமந்நாராயணனே ராமராக வந்தார். ராம வாக்கியத்தை எங்கே பார்த்தாலும் இது என் அபிப்பிராயம் என்று சொல்லவே மாட்டார். ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள் சாஸ்திரம் இப்படிச்சொல்கிறது என்றே அடக்கமாகச் சொல்வார். சகலவேதங்களின் பயனாக அறியப்பட வேண்டிய பரமபுருஷன் எவனோ அவனே அந்த வேததர்மத்துக்கு முழுக்க முழுக்கக் கட்டுப்பட்டு வாழ்ந்தான். அப்படிக் கட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று காட்டிக் கொண்டு ராமர் என்னும் வேடத்தில் ஸ்ரீமந்நாராயணன் வாழ்ந்தான்.

துளசிதாசர்

துளசிதாசர் காசியில் கங்கையில் நீராடி விட்டு விஸ்வநாதரை தரிசிப்பார். எப்போதும் ராமநாம செபம் செய்த படி இருப்பார். இரவில் அசுவமேத கட்டிடத்தின் படிக்கட்டில் உட்கார்ந்து ராமாயணம் கதாகாலட்சேபம் சொல்வார். ஒவ்வொரு நாளும் அவர் படகில் ஏறி அக்கரைக்கு சென்று கங்கையில் நீர் எடுத்துக் கொண்டு வெகுதூரம் சென்று ஒரு காட்டில் காலைக் கடன்களை கழிப்பார். பின் உடம்பை சுத்தம் செய்து கொண்டு மீதியுள்ள தண்ணீரை ராம நாமத்தை சொல்லி ஒரு ஆலமரத்தில் கொட்டி விடுவார். அந்த ஆலமரத்தில் துர்மரணம் அடைந்த ஆவி ஒன்று வசித்து வந்தது. அது அந்த ராம நாம நீரை குடித்ததும் தாகம் அடங்கி அதற்கு அமைதி கிடைத்தது. இதன் பயனாக விவேகம் வந்தது. இவர் ஒரு பெரிய மகான் என்று தெரிந்து கொண்டது. அந்த ஆவி ஒரு நாள் துளசிதாசர் திரும்பிப் போகும் வழியில் மறைந்து நின்றது. துளசிதாசரின் நடை தடைப்பட்டது. உரக்க ராமா ராமா என்று சத்தமிட்டு கூவினார். அப்போது அந்த ஆவி கூறியது. பெரியவரே பயப்பட வேண்டாம். நான் ஒரு பாவியின் ஆவி. நீங்கள் வார்த்த நீரைக் குடித்து புனிதமானேன். உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்புகிறேன் சொல்லுங்கள் என கேட்டது.

துளசிதாசருக்கு மனதில் ஒரே எண்ணம் தானே. ராம தரிசனத்தை காண வேண்டும் என்ற எண்ணத்தில் எனக்கு ராம தரிசனம் கிடைக்க வேண்டும் என்றார். அதற்கு ஆவி இது உங்களுக்கு வெகு சுலபமாயிற்றே என்றது. திகைத்த துளசிதாசர் எப்படி என கேட்டார். அதற்கு ஆவி உங்களிடம் தான் ராமாயணம் கேட்க தினமும் அனுமன் வருகிறாரே என்றது. அவரிடம் கேட்டால் ராம தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வார் என்றது. மேலும் திகைத்த துளசிதாசர் அனுமன் வருகிறாரா எனக்கு தெரியாதே என்றார் துளசிதாசர். ஆமாம் நீங்கள் நாளும் ராமாயணம் கதாகலட்சேபம் செய்யும் போது ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நேரே மக்களுக்கு பின்னால் உட்கார்ந்திருப்பார். நீங்கள் அங்கு வருவதற்கு முன்பே வந்து விடுவார். பிரசங்கம் முடிந்து மக்கள் திரும்பும் போது ஒவ்வொரு வரையும் விழுந்து வணங்கி விட்டு கடைசியில் தான் அவர் செல்வார் என்றது ஆவி. துளசிதாசருக்கு ஆர்வம் மேலிட்டது. அவர் எப்படி இருப்பார் என்று கேட்டார் துளசிதாசர். உடம்பெல்லாம் வெண் குஷ்டம். அசிங்கமாக இருப்பார். யாரும் தன்னை தொந்தரவு செய்யக் கூடாது. ஒதுக்க வேண்டும் என்பதற்காகவே அப்படி வருவார். அவர் கால்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு ஆவி சென்றது.

துளசிதாசர் அன்று இரவு சொற்பொழிவின் ஆரம்பத்திலேயே அனுமனை கவனித்து விட்டார். தன் கண்ணெதிரே ஆனால் சற்று தள்ளி தலையில் முக்காடிட்டுக் கொண்டிருந்தார். அன்று பிரசங்கத்தில் சபரியின் கதை. சபரி ராமன் எப்போது வருவாரோ என்று வழிமேல் வழி வைத்து காத்திருக்கிறாள். வழியிலே போவோர் வருவோரை எல்லாம் கேட்கிறாள் புலம்புகிறாள். ராமா என்னை ஏமாற்றி விடாதே. எனக்கு நீ தான் கதி. எனக்கு வேறு எதிலும் நாட்டமில்லை. எங்கே சுற்றுகிறாயோ? உனக்கு யாராவது வழிகாட்ட மாட்டார்களா? நீ இங்கு வரமாட்டாயா? உன்னைத் தேடி நான் அலைய வேண்டும். ஆனால் என்னைத் தேடி நீ வர வேண்டும் என நினைக்கிறேனே? நான் உன்னை தேடி வர முடியாதே? யாராவது அழைத்து வர மாட்டார்களா? ராமனை நான் தரிசனம் செய்வேனா? எனக்கு அந்த பாக்கியம் உண்டா? என்று சபரியின் கதையை கூறி விட்டு மயக்கம் அடைந்து விட்டார் துளசிதாசர். சபை முழுவதும் கண்ணீர் விட்டு கதறியது. எங்கும் ராம நாம கோஷம். பின் வெகு நேரம் ஆகியும் துளசிதாசருக்கு மயக்கம் தெளியவில்லை. சிலர் நெருங்கி வந்து மயக்கம் தெளிய உதவி செய்தனர். அத்துடன் சபை கலைந்து விட்டது. பின் வெகுநேரம் கழித்து கண் திறந்து பார்த்தார் துளசி தாசர். எதிரே குஷ்டரோகி வடிவில் அனுமர் நின்று கொண்டிருந்தார். பிரபோ அஞ்சன புத்ரா என்று கதறி அழுது அவருடைய கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அனுமன் கால்களை விடுவித்துக் கொண்டார். பின் தாசரை தோளில் சுமந்து கொண்டு விடுவிடுவென்று நடந்தார். பொழுது விடிந்து விட்டது.

துளசிதாசரை கீழே கிடத்தினார் அனுமன். துளசி தாசரும் கண் விழித்து நான் எங்கிருக்கிறேன் என்று வினவினார். இது தான் சித்ர கூடம் இந்த இடத்திற்கு ராமகிரி என்று பெயர். ராமன் முதன் முதலில் வனவாசம் செய்த இடம். இங்கே அமர்ந்து ராம நாமத்தை செபியுங்கள் செய்யும். ராம தரிசனம் கிடைக்கும் என்று கூறினார் அனுமன். அதற்கு துளசி தாசர் நீங்கள் கூட இருக்க வேண்டும் என்றார். நீங்கள் ராம நாமத்தை சொன்னால் உங்களுடன் நான் இருப்பேன் என்று கூறிய அனுமன் அங்கிருந்து மறைந்து விட்டார். துளசிதாசரும் ராமஜபம் செய்தார். ராமன் வருவாரா? எப்படி வருவார்? லட்சுமணன் கண்டிப்பாக வருவாரா? எப்படி இருப்பார்? தலையில் ஜடா முடியுடன் வருவாரா? அல்லது வைரக் கிரீடம் அணிந்து வருவாரா? மரவுரி தரித்து வருவாரா? பட்டு பீதாம்பரம் அணிந்து வருவாரா? ரதத்தில் வருவாரா? நடந்து வருவாரா? என்றவாரு இடுப்பில் இருந்த துணியை வரிந்து கட்டிக்கொண்டார். கண் கொட்டாமல் இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டிருந்தார். மலைப்பாதை. ஒற்றையடிப் பாதை. இருபுறமும் புதர். அப்பால் ஒரு பாறாங்கல். அதன் மேல் நின்ற கொண்டு ராம ராம என்று நர்த்தனமாடினார். மலை உச்சியிலிருந்து வேகமாக இரண்டு குதிரைகள் ஓடி வந்தன. அவற்றின் மீது இரண்டு ராஜாக்கள் வந்தார்கள். இவர்களை பார்த்த துளசிதாசருக்கு சந்தேகம் வந்தது. வந்தவர்களின் தலையில் தலைப்பாகை. அதைச் சுற்றி முத்துச் சரங்கள். கொண்டை மீது வெண் புறா இறகுகள். வேகமாக குதிரை மீது வந்தவர்கள் துளசிதாசரைப் பார்த்து சிரித்துக் கொண்டே சென்றார்கள். இவர்களை பார்த்த துளசிதாசர் இவர்கள் பெரிய வீரர்கள் என்றாலும் என் ராம லட்சுமணனுக்கு ஈடாவார்களா? தலையில் ரத்ன கிரீடமும் மார்பில் தங்க கவசமும் தங்க ஹாரமும் கையில் வில்லும் இடுப்பில் அம்புராத் தூளியும் கையில் ஒரு அம்பைச் சுற்றிக்கொண்டே என்ன அழகாக இருப்பார்கள் என்று ராமனை தியானித்தவாறே ராம நாமம் சொன்னார்.

துளசிதாசரிடம் சிறிது நேரம் கழித்து வந்த அனுமன் ராம லட்சுமணர்களை பார்த்தீர்களா என்று கேட்டார். திடுக்கிட்ட துளசிதாசர் பார்க்கவில்லையே என்றார். அதற்கு அனுமன் இந்தப் பக்கமாகதானே குதிரையில் சவாரி செய்து கொண்டு வந்தார்கள் என்றார். வந்தது ராம லட்சுமணர்களா ஏமாந்து போனேனே என்று அலறினார் துளசி தாசர். அதற்கு அனுமன் ராமர் உங்கள் விருப்பப்படி தான் வர வேண்டுமா? அவரின் விருப்பப்படி வர கூடாதா? என்று கேட்டார். உடனே துளசிதாசர் சுவாமி மன்னிக்க வேண்டும். ஒன்றும் அறியாதவன் நான். ஏதோ கற்பனை செய்து கொண்டு வந்தவர்களை அலட்சியம் செய்து விட்டேன். இன்னும் ஒருமுறை தயவு செய்யுங்கள். அவர்கள் எந்த வடிவில் வந்தாலும் பார்த்து விடுகிறேன் என்றார். சரி நீங்கள் அருகில் இருக்கும் மந்தாகினி நதியில் இறங்கி நீராடி ஜபம் செய்யுங்கள். ராமரின் தரிசனம் கிடைக்கும் என்றார். துளசிதாசரும் மந்தாகினிக்கு ஓடி நீராடி ராம நாம செபம் செய்தார். வால்மீகியின் ராமாயணத்தை ஒப்புவித்தார். நதியில் நீராடுதல் இதனிடையே இரண்டு நாட்கள் ஆகி விட்டது. ராமாயணத்தில் பரதன் சித்ர கூடத்திற்கு வரும் முன்னால் ராம லட்சுமணர்கள் சித்ர கூடத்தில் வசித்துக் கொண்டு காலையில் மந்தாகினியில் நீராடுகிறார்கள் என்கிற கட்டத்தை படித்துக் கொண்டிருந்தார். எதிரே மந்தாகினியில் குளித்து விட்டு இரண்டு இளைஞர்கள் கரை ஏறி தாசரிடம் வந்தனர். ஒருவன் நல்ல கருப்பு நிறம். மற்றவன் தங்க நிறம். முகத்தில் பத்து பதினைந்து நாள் வளர்ந்த தாடி. சுவாமி கோபி சந்தனம் தங்களிடம் இருக்கிறதா என்று அவர்கள் கேட்டனர். இருக்கிறது தருகிறேன் என்று சந்தனத்தை எடுத்தார். சந்தனம் கேட்டவர்கள்எங்களிடம் கண்ணாடி இல்லை. நீங்களே எங்கள் நெற்றியில் இட்டு விடுங்கள் என்றார்கள்.

துளசிதாசரும் அதற்கென்ன நாமம் போட்டு விடுகிறேன் என்று இடது கையில் நீர் விட்டுக் கொண்டே கோபி சந்தனத்தை குழைத்தார். அந்த கருப்புப் பையன் எதிரே உட்கார்ந்து முகத்தை காட்டினான். துளசிதாசர் இளைஞனின் முகத்தைப் பார்த்ததும் அவனது கண்கள் குருகுருவென்று இவரைப் பார்த்தது. பார்த்தவுடன் மெய் மறந்து சிலை போல் இருந்தார் துளசிதாசர். அந்தப் இளைஞன் இவருடைய கையில் இருந்த கோபி சந்தனத்தை தன் கட்டை விரலில் எடுத்து தன் நெற்றியில் வைத்துக் கொண்டு அவருடைய நெற்றியிலும் வைத்தான். தன்னுடன் வந்தவனுக்கும் வைத்தான். அப்போது அவர்கள் உட்கார்ந்திருந்திருந்த படித்துறைக்கு அருகே இருந்த மாமரத்தில் ஒரு கிளி கூவியது.

சித்ர கூடகே காடபரே பகி ஸந்தந கீ பீர
துளசிதாஸகே சந்தந கிஸே திலக தேத ரகுபீர

பொருள்: சித்ரக் கூடத்துக் கரையில் சாதுக்கள் கூட்டம். துளசிதாசர் சந்தனம் குழைக்கிறார். ராமன் திலகமிடுகிறார்.

துளசிதாசர் கிளியின் சத்தத்தின் பொருளை உணர்ந்து திடுக்கிட்டு சுயநினைவுக்கு வந்தார். துளசிதாசரை என் நெற்றியில் நாமம் சரியாக இருக்கிறதா என்று கேட்டான் அந்த கருப்பு இளைஞன். ராமா உனக்கு இதை விட பொருத்தமான நாமம் ஏது என்று கதறிக் கொண்டே அந்த இரண்டு இளைஞர்களையும் கட்டி அணைத்துக் கொண்டார் துளசி தாசர். மறுகணம் ராம லட்சுமணர்கள் மறைந்தார்கள்.

குளிகை

ராவணனின் மனைவியான மண்டோதரி கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அச்சமயத்தில் எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என இருக்க இலங்கை வேந்தன் தனது குலகுருவான சுக்கிராச்சார்யாரைச் சந்தித்து யாராலும் வெல்ல முடியாத வீரமும் மிகுந்த அழகும் நிறைந்த அறிவும் கொண்ட மகன் தனக்குப் பிறக்க வேண்டும் என்று குலகுருவிடம் வேண்டுகோள் விடுத்து அதற்கான வழிமுறைகளையும் அவரிடம் கேட்டான். அதற்கு சுக்கிராச்சாரியார் கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும் என்று யோசனை கூறினார். உடனடியாக நவக்கிரகங்கள் அனைத்தையும் சிறைப்பிடித்து ஒன்றாக அடைத்து விட்டான் ராவணன். ஒரே அறையில் இருந்த நவக்கிரகங்கள் தவித்துப் போனார்கள். இந்த யோசனையைச் சொன்ன சுக்கிராச்சாரியாரைக் கடிந்தும் கொண்டனர். தாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருப்பதால் நடக்கப் போகும் தீமைகளை எண்ணிக் கவலை கொண்டார்கள். அதே நேரத்தில் குழந்தை பிறக்க முடியாமல் மண்டோதரி பெருமளவு தவித்தாள். வலி அதிகம் இருந்த போதிலும் குழந்தை பிறக்கவே இல்லை. இந்தச் செய்தி நவக்கிரகங்களை எட்டியதும் அதற்கும் தாங்கள் தான் காரணம் என்று ராவணன் தண்டிப்பானோ என்று அச்சம் கொண்டு அது குறித்து சுக்கிராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டார்கள். இந்தச் சிக்கலில் இருந்து விடுபட வேண்டுமானால் உங்கள் ஒன்பது பேரைத் தவிர நல்ல செயல் புரியவென்றே இன்னொரு புதியவன் ஒருவனை சிருஷ்டித்து ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக் கொடுத்தால் உங்களுக்கு நன்மை உண்டாகும். அவனை சிருஷ்டிக்கும் அதே வேளையிலேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் உண்டாகும். நீங்களும் ராவணின் சிறையிலிருந்து விடுதலை பெறலாம் என்றார்.

சுக்கிராச்சாரியாரின் வாக்கின்படி சனீஸ்வர பகவான் சிறையில் இருந்தபடியே தனது சக்தியால் தனது மனைவி ஜேஷ்டாதேவிக்கு ஒரு மகன் பிறக்கும்படி செய்தார். சனீஸ்வரன் ஜேஷ்டாதேவி தம்பதியின் புதல்வனுக்கு குளிகன் என்று பெயரிடப்பட்டது. குளிகன் (மாந்தன் எனவும் அழைப்பர்) பிறந்த அதே நேரம் மண்டோதரிக்கும் அழகான ஒரு மகன் பிறந்தான். குழந்தை பிறந்து முதன் முதலில் அழுதவுடன் ஒரு மாபெரும் வீரன் பிறந்துள்ளதைக் குறிக்கும் வகையில் இடி மின்னலுடன் அடர்மழை பெய்தது. அதனால் மேகநாதன் என்று பெயரிடப்பட்டான். அவன் கடும் தவம் செய்து பிரம்மாவிடமிருந்து பல அபூர்வமான அஸ்திரங்களைப் பெற்று இந்திரனை வென்று இந்திரஜித் என்று அழைக்கப்பட்டான். இந்திரஜித் என்ற மேகநாதன் பிறந்த நேரம் தான் குளிகை நேரம் எனப்படுகிறது. தான் பிறக்கும் போதே நல்லதை நடத்தி வைத்ததால் குளிகன் நவக்கிரகங்களால் பாராட்டப்பட்டார். குளிகை நேரம் என்றே தினமும் பகலிலும் இரவிலும் ஒரு நாழிகை நேரம் குளிகனுக்காக வழங்கப்பட்டது. குளிகை நேரத்தை காரிய விருத்தி நேரம் என்று ஆசீர்வதித்தார் சுக்கிராச்சாரியார். அதனாலேயே குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் தொடர்ந்து நடைபெற்று அந்தக் குடும்பமே செழிக்கும் என்றும் கூறப்படுகிறது.

மிதக்கும் பாறைகள்

விஸ்வகர்மாவின் மகனாகிய நளன் ஒரு சமயம் கங்கைக் கரையில் மரங்களின் கனிகளைப் பறித்துத் தின்பதும் மரக்கிளையில் தாவித் திரிவதுமாக இருந்தான். அப்போது சற்று தூரத்தில் ஒரு அந்தணர் சாளக்கிராமத்தை வைத்துப் பூஜை செய்து கொண்டிருப்பது அவன் கண்களில் பட்டது. மெதுவாகச் சென்று விளையாட்டுத்தனமாக அந்தச் சாளக்கிராமத்தை எடுத்துக் கங்கை நீரில் வீசி எறிந்து விட்டான். கோபம் கொண்ட அந்தணர் நீ தண்ணீரில் எதை எறிந்தாலும் அது மூழ்காமல் மிதக்கட்டும் என்று சாபமிட்டார். அதனால்தான் கடலில் நளன் வைத்த கற்கள் மூழ்கிவிடாமல் நின்றன.

தனுஷ்கோடியில் இருந்த ராமர் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த ராமர் சீதை லட்சுமணர் ஆகியோரது சிலைகளுடன் ராமர் பயன்படுத்திய பாறைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. பூரி ஜெகநாதர் கோவில் குஜராத் துவாரகா கிருஷ்ணர் கோவில் மற்றும் ரிஷிகேஷ் பத்திரிநாத் அலகாபாத் திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களில் காணப்படும் மிதக்கும் பாறைகள் ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டவை. புதுச்சேரியில் உள்ள அனுமன் கோவிலிலும் இந்த மிதக்கும் பாறைகளை காணலாம்.

அக்னி தீர்த்தம்

ராமர் சீதையின் புனிதத்தை உலகிற்கு காட்டுவதற்காக அவளை அக்னி பிரவேசம் செய்யச் செய்தார். சீதையின் புனிதத்தில் அக்னி மிகவும் வெப்பமடைந்து தாங்க முடியாத வேதனையை அனுபவித்தான். அக்னியைப் பார்த்த ராமர் நீ இந்த சமுத்திரத்தில் மூழ்கி உன்னுடைய வேதனையைக் குறைத்துக்கொள் என்றார். அக்னிபகவான் அந்தப் பகுதி கடலில் மூழ்கினார். அவர் மூழ்கிய இடம் அக்னி தீர்த்தம். இந்த தீர்த்தத்தில் மூழ்குகிறவர்களுக்கு சகல பாபங்களும் தீரும். இங்கு அமர்ந்து பித்ருக்களுக்கு நீர் வார்ப்பவர்களுக்கு பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். அந்த பித்ருக்களின் தாகம் தணியும் என்று ராமர் ஆசிர்வதித்தார்.

முற்காலத்தில் தனுஷ்கோடியில் நீராடி அதன் பின்பு ராமேஸ்வரம் வந்து தீர்த்தமாடும் வழக்கம் இருந்தது. ராமர் தனுஷ்கோடி வழியாக இலங்கை சென்றதன் நினைவாக தனுஷ்கோடியில் ராமர் கோவில் ஒன்று இருந்தது. 1964ல் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடியே சின்னாபின்னாமான போது இந்த கோவிலும் சிதைந்து போனது. அந்த புயலுக்கு பின்னர் அங்கிருந்த ராமர் சீதை லட்சுமணர் ஆகியோரது சிலைகள் ராமேஸ்வரம் கொண்டு வரப்பட்டன. தனுஷ்கோடி அழிந்த பிறகு ராமேஸ்வரம் ராமநாதர் கோயில் முன்புள்ள அக்னி தீர்த்தக்கடலில் நீராடும் வழக்கம் ஏற்பட்டது.

ஜனாபாய்

ராமயணத்தில் கைகேயிடம் பணியாளாக இருந்தவள் கூனி. கைகேயியை ராமனுக்கு எதிராகத் தூண்டி பாவத்தை சேர்த்துக் கொண்டவள். இவளே கிருஷ்ணரின் அவதாரத்தில் கம்சனுக்கு சந்தனம் பூசி விடும் பணி செய்தாள். கம்சனின் நாட்டுக்கு வந்த கிருஷ்ணனை பார்த்து மெய் மறந்து அவனுக்கும் சந்தனம் பூசினாள். அதன் பலனாக அவளது கூனை கிருஷ்ணன் நிமிர்த்தினான். அடுத்த பிறவியில் பாண்டுரங்க பக்தையான ஜனாபாய் என்ற பெயரில் பிறந்தாள்.

பண்டரிபுரம் கோவிலில் கார்த்திகை மாத ஏகாதசி திருவிழாவில் ஏகப்பட்ட கூட்டம் பாண்டுரங்கன் சன்னிதியில் பத்து வயது பெண் குழந்தை இனிய குரலில் பாடிக் கொண்டிருந்தாள். பக்தர்கள் அனைவரும் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர். பாட்டு முடிந்ததும் அவள் தன் பெற்றோருடன் ஊர் திரும்பவில்லை. பாண்டுரங்கனே தனக்கு அன்னையும் தந்தையுமாக இருக்கிறார் என்று சொல்லி கோவிலிலேயே தங்கி விட்டாள். அந்த தெய்வக் குழந்தை தான் ஜனாபாய். அங்கு வந்த நாமதேவர் என்ற ஞானி ஜனாபாயிடம் பேசி அவளது மனநிலையை அறிந்தார். கடவுளின் திருவருளால் குழந்தைக்கு இளம் வயதிலேயே பக்தி ஏற்பட்டிருப்பதை எண்ணி வியந்தார். அவளிடம் பக்குவமாகப் பேசி தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பாண்டுரங்கனின் சிறந்த பக்தரான நாமதேவர் சிறுவயதிலேயே சிறந்த ஞானியாக விளங்கியவர். நூறு கோடி பாடல்கள் பாடி இறைவனுக்கே உணவளித்த பாக்கியம் பெற்றவர். தன் தாய் குனாயி அம்மையாரிடம் ஜனாபாயை ஒப்படைத்து பார்த்துக் கொள்ளுமாறு கூறினார்

நாமதேவரின் வீட்டில் எல்லா வேலைகளையும் செய்ததோடு கோவிலிலும் பஜனை செய்து கொண்டு காலத்தை கழித்தாள். சிறு பெண்ணாக இருந்த அவள் மங்கைப்பருவம் அடைந்தாள். ஒருநாள் இரவு கடும் காற்றுடன் மழை பெய்ததால் நாமதேவரின் வீட்டுச் சுவர் ஈரம் தாங்காமல் கீழே விழுந்தது. இதைக் கண்ட பாண்டுரங்கன் தன் பக்தனின் துன்பத்தை துடைக்க தானே நேரில் வந்து மண்ணைப் பிசைந்து சுவர் எழுப்பினார். பாண்டுரங்கனைக் கண்ட நாமதேவரும் ஜனாபாயும் அவரது திருவடியில் விழுந்து வணங்கினர். பகவானுக்கு சேவை செய்யும் பாக்கியம் ஜனாபாய்க்கு கிடைத்தது. வேகமாக வெந்நீர் தயார் செய்து சேறாகி இருந்த அவரது பட்டு பீதாம்பரத்தை வாங்கி துவைத்து உலர வைத்தாள். அதுவரை பாண்டுரங்கன் ஜனாபாயின் கந்தல் துணியை உடுத்திக் கொண்டார். அது அவரது திருமேனிக்குப் பொருத்தமாகவும் இருந்தது. பீதாம்பரம் உலரும் வரை பாண்டுரங்கன் சிறிது நேரம் கண்ணயர விரும்பினார். அவர் படுத்துக் கொள்வதற்கு வசதியாக தன் அறையில் இருந்த பழைய துணிகளையும் சாக்கு பைகளையும் ஜனாபாய் விரித்தாள். பகவானின் பாதங்களை மெதுவாகப் பிடித்து விட்டாள். ஆதிசேஷனின் மலர்ப்படுக்கையில் அயர்ந்து உறங்கும் பாண்டுரங்கன் வைகுண்டத்தை விட இங்கு சுகமாக தூக்கம் வருகிறதே என்று அழுக்குத் துணியிலேயே நன்றாகத் தூங்கி எழுந்தார். பிறகு ஜனாபாய் உடவு பரிமாற நாமதேவர் குடும்பத்தாருடன் பாண்டுரங்கன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்.

நாமதேவர் பாண்டுரங்கனுக்கு தன் கையால் சோற்றை ஊட்டி விட அதை புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டார். இதைப் பார்த்த ஜனாபாய் தனக்கும் அது போல் பாக்கியம் கிடைக்கவில்லையே என வருத்தப்பட்டாள். இதை அறிந்த பாண்டுரங்கன் அவளது அறைக்கு சென்றார். அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜனாபாயிடம் எனக்கும் ஒரு கவளம் ஊட்டி விடு தாயே என்று கேட்டுக் கொண்டார். ஆனந்தக் கண்ணீர் வழிய அவள் பாண்டுரங்கனுக்கு ஊட்டி விட்டாள். நிஜபக்தி ஒன்றுக்கே கட்டுப்படும் பாண்டுரங்கன், ஜனாபாயின் மடியிலேயே தலை வைத்து படுத்து விட்டார். பிறகு அவள் பகவானின் தசாவதார லீலைகளைப் பாடலாகப் பாடியபோது ரசித்து மகிழ்ந்தார். ஜனாபாய் உரலில் மாவு அரைத்தபோது தானியத்தை தன் கையால் தள்ளி விட்டு உதவியும் செய்தார்.

நாமதேவரின் பக்தியையும் ஜனாபாயின் பக்தியையும் உலகிற்கு தெரிவிக்க திருவுள்ளம் கொண்டார் பாண்டுரங்கன். தன் பட்டு பீதாம்பரம் ஜனாபாய் வீட்டுக் கொடியில் காய்ந்து கொண்டிருக்க அவளின் கந்தல் புடவையை உடுத்திக் கொண்டு மறைந்து போனார். கோவிலின் கதவை மாலை நேர வழிபாட்டிற்காக திறந்த அர்ச்சகர்கள் அதிர்ந்தனர். பாண்டுரங்கன் அணிந்திருந்த அருமையான காசி பட்டும் ஆபரணங்களும் காணாமல் போயிருந்தன. ஒரு கந்தல் துணி சிலையில் சுற்றப்பட்டிருந்தது. ஜனாபாயின் குடும்பத்திற்கு மிகவும் பழக்கமான அர்ச்சகர் இது ஜனாபாயின் துணி போல இருக்கிறதே என்று சொல்ல எல்லாரும் நாமதேவரின் வீட்டுக்கு வந்தனர். அங்கு கொடியில் காய்ந்து கொண்டிருந்த பட்டு பீதாம்பரத்தைப் பார்த்து இவள் தான் பாண்டுரங்கனின் பீதாம்பரத்தையும் ஆபரணங்களையும் திருடிக் கொண்டு வந்திருக்கிறாள் என்று சொல்லி வீட்டில் சோதனை செய்யத் தொடங்கினர். அவளது படுக்கை அறையில் ஆபரணங்கள் இருந்தன. அவளிடம் நகைகளை எப்போது திருடினாய்? பாண்டுரங்கன் கட்டியிருந்த வஸ்திரத்தைக் கூட விட்டு வைக்காமல் எடுத்து வந்து விட்டாயே? என்று விசாரித்தனர். ஜனாபாய் இதற்கெல்லாம் கலங்கவில்லை. நான் தவறு செய்யாதவள். அப்படி தவறு செய்ததாக நீங்கள் கருதினால் என்ன தண்டனை வேண்டுமானாலும் தாருங்கள் எனக் கூறி நெஞ்சு நிமிர்த்தி நின்றாள். அவள் பொய் சொல்வதாக நினைத்த அர்ச்சகர்கள் அரசனிடம் புகார் கூறினர். அவளை பொதுவீதியில் கழுவேற்றும்படி தீர்ப்பளிக்கப்பட்டது. ஜனாபாயை கழுமர மைதானத்திற்கு அழைத்து வந்தனர்.

ஜனாபாய் கழுமரத்தைப் பார்த்து கைகூப்பி விட்டல விட்டல ஜெய ஜய விட்டல என்று பாடினாள். கழுமரம் தீப்பற்றி எரிந்தது. பாண்டுரங்கன் ஓடி வந்து ஜனாபாயைத் தழுவிக் கொண்டு உன் நிஜபக்தியை உலகிற்குத் தெரிவிக்கவே இவ்வாறு செய்தேன் என்று சொல்ல ஜனாபாய் அவரது திருவடியில் விழுந்து வணங்கினாள். ஜனாபாயின் புகழும் அவளது கீதங்களின் உயர்வும் நாடெங்கும் பரவியது. பாண்டுரங்கனே நேரில் வந்து ஜனாபாய் மற்றும் நாமதேவரின் பாடல்களை எழுதி தொகுத்தும் கொடுத்தார். அமுதமயமான அந்த பாடல்களே இன்றும் பண்டரிபுரத்தில் பக்தர்களால் பாடப்பட்டு வருகின்றன.

ராமரின் ரகுவம்சம்

ராமருக்கு அகஸ்தியர் முனிவர் பரிசாக கொடுத்த விலைமதிப்பற்ற கற்களை கொடுத்தார். அது குசாவிடம் இருந்தது. அந்த கற்களை நாகர்கள் திருடி சென்ற காரணத்தால் குசா அவர்களை கொலை செய்ய முயற்சித்தார். அப்போது துர்ஜயா எனும் அரக்கனுடன் போரிடும் போது குசா இறந்தான். குசாவின் மரணத்திற்கு பிறகு குசா மற்றும் கும்தவதி என்பவளுக்கும் பிறந்த அதிதி மன்னராக பதிவு ஏற்றுள்ளார். அதிதி தனது முன்னோர்கள் போல சிறந்த மன்னராகவும் தலைசிறந்த போர் வீரனாகவும் திகழ்ந்துள்ளார். அதிதி வசிஷ்டர் முனிவரின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின் படி வாழ்ந்ததாக அறியப்படுகிறது. அதிதியின் மரணத்திற்கு பிறகு அவரது மகன் நிஷதா மன்னர் பதவி வகித்தார். தனது தந்தை அதிதியை போலவே நிஷத்தும் சிறந்த போர் வீரராக திகழ்ந்தார். இவருக்கு பிறகு நலா எனும் மிகச்சிறந்த போர்வீரன் மன்னர் பதவி வகித்தார். இவர் முனிவர்களுடன் காடுகளில் சென்று வாழ திட்டமிட்டு தனது மகன் நபாவை அரசராக்கி செல்கிறார். நபா கோசல தேசத்தை ஆண்டு வந்தார். இவரை எதிர்த்து புந்தரிகா போரிட்டார். இதன் பிறகு புந்தரிகாவின் மகன் க்ஷீமா எனும் போர் வீரன் பதிவியேற்றான். இவர் தேவா எனும் படைக்கு தலைவனாக இருந்த காரணத்தால் தேவநீகன் என்றும் அழைக்கப்பட்டார். இவரது மகன் அகிநாகு என்பவர் உலகியே ஆண்டதாகவும் புகழ் பாடப்பட்டுள்ளது. இவரை எதிரிகளும் கூட விரும்பினார்கள் என்றும் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிறகு நபியின் மகன் வஜ்ரானபா. வஜ்ரானபாவின் மகன் சங்கத். சங்கத்திற்கு பிறகு ஹரிதஷ்வா. இவர்களை பின்தொடர்ந்து விஷ்வா சஹா, ஹிரண்ய நபா, கௌசல்யா, பிரமிஷ்தா, புத்ரா, புஷ்யா, துர்வ சந்திசுதர்ஷனா மற்றும் அக்னி வர்ணா போன்றவர்கள் அரசராக திகழ்ந்துள்ளனர். இவர்களுடன் ரகுவம்சம் முடிவுற்றது.

அனந்தன்

ராமர் சிறுவயதில் வசிஷ்டரின் ஆசிரமத்தில் தனது சகோதரர்கள் லட்சுமணன் பரதன் மற்றும் சத்ருக்னனுடன் குருகுலத்தில் பாடம் கற்றுக் கொண்டிருந்தார். அப்போது அவனுக்கு உற்ற நண்பனாக இருந்தவன் பெயர் அனந்தன். பரம ஏழையான அவன் வசிஷ்டரின் ஆசிரமத்தில் குருவுக்கு சேவை செய்து கொண்டிருந்தான். குருகுலத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த ராமருக்குத் தொண்டு செய்வதில் அனந்தன் பேரானந்தம் கொண்டான். ராமரும் பதிலுக்கு அனந்தனிடம் பேரன்பு காட்டினார். இருவரும் சேர்ந்து குருகுலத்தில் சிறந்த நண்பர்களாக இருந்தார்கள். ராமனுக்கு ஏடுகளை எடுத்து வைத்தல் எழுத்தாணியைக் கூராக்குதல் வில்லைத் துடைத்தல் அஸ்திரங்களை எடுத்து வைத்தல் உணவு பரிமாறுதல் ஆகிய பணிகளை பெருமகிழ்ச்சியோடு செய்து வந்தான் அனந்தன். ராமரை ஒருநாள் காணவில்லை என்றாலும் அவன் மனம் ஏங்கித் தவிக்கும். ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் வனத்துக்குச் சென்று தர்ப்பைப் புல் பறித்து வரவேண்டியது அனந்தனின் கடமை. அதுபோல் ஒருமுறை அனந்தன் வனத்துக்குச் சென்றிருந்தான்.

ராமரின் குருகுலம் முடிந்து குருவிடம் விடைபெற்று சகோதரர்களுடன் அயோத்திக்குச் சென்றுவிட்டார். வனத்தில் இருந்து திரும்பி வந்த அனந்தன் விவரம் அறிந்து தாங்கமுடியாத வருத்தம் கொண்டான். உடனே ராமரைக் காண அவன் மனம் துடித்தது. உடனே புறப்பட்டு அயோத்தியில் உள்ள ராமரின் அரண்மனைக்குச் சென்றான். அங்கே ராமரும் லட்சுமணனும் விஸ்வாமித்திரரின் யாகத்தைக் காப்பதற்காக வனத்துக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்கள் என்ற செய்தி அனந்தனின் மனதை மேலும் வாட்டியது. ஒன்றும் அறியாத பாலகனான ராமர் கானகம் செல்ல நேர்ந்ததை எண்ணிக் கலங்கினான். ராமரைக் காட்டுக்கு அனுப்பிய தசரதனையும் அழைத்துச் சென்ற விஸ்வாமித்திரரையும் மனத்துக்குள் கடிந்து கொண்டான். ராமர் காட்டில் என்ன செய்வார்? அவருக்கு யார் உதவிகள் செய்வார்கள்? நித்திய கர்மங்களுக்கு தர்ப்பை சமித்து போன்றவற்றை யார் சேகரித்துத் தருவார்கள்? இப்படியெல்லாம் அனந்தனின் மனம் தவித்தது.

ராமரை எப்படியும் தேடிக் கண்டுபிடித்து அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று அனந்தன் முடிவு செய்தான். தன் குரு வசிஷ்டரிடம் கூடச் சொல்லாமல் நேராக காட்டிற்குள் சென்றான். அடர்ந்த காட்டில் ராமா ராமா என்று கதறிக் கொண்டு ராமரைத் தேடி அலைந்தான். காட்டில் வழி தவறி ஒரு இருண்ட பகுதிக்குள் அகப்பட்டுக்கொண்டான். அங்கே பல நாட்கள் ராமனைத் தேடியும் அவரைக் காணாமல் அனந்தனின் மனம் வாடியது. ராமரைக் காணாமல் ஊர் திரும்பவும் அவனுக்கு விருப்பமில்லை. ராமா ராமா என்று கூப்பிட்டுக் கொண்டே சென்ற அவன் ஒரு நேரத்தில் மிகவும் சோர்வடைந்து அமர்ந்தான். ராமா ராமா என்று செபித்துக் கொண்டு இருந்த அவன் தன்னை மறந்து அன்ன ஆகாரமின்றி அந்தக் காட்டிலேயே அமர்ந்தான். அவன் அமர்ந்த இடத்தில் அவனை மூடியவாறு புற்று வளர்ந்துவிட்டது. ஆனால் அவனது ராம செபம் மட்டும் நிற்கவில்லை. காலச் சக்கரம் வேகமாகச் சுழன்றது. ராமாயண சம்பவங்கள் அனைத்துமே நிகழ்ந்து முடிந்திருந்தன. ராவண வதத்திற்கு பிறகு அயோத்தி திரும்பிய ராமருக்கு பட்டாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. எதுவும் தெரியாமல் புற்றுக்குள் ராமா ராமா என்று தவமியற்றிக் கொண்டிருந்தான் அனந்தன்.

ராமரின் பட்டாபிஷேகத்தைக் காண பாரத தேசத்தின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் மக்களும் மன்னர்களும் மகரிஷிகளும் அயோத்திக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது காட்டு வழியே சென்று கொண்டிருந்த சில மகரிஷிகள் ராம நாமத்தைப் பாடிக்கொண்டே சென்றனர். அவர்களில் ஒருவரது கால் பட்டு அனந்தன் தவமியற்றிக் கொண்டிருந்த புற்று இடிந்தது. அனந்தன் தவம் கலைந்து எழுந்தான். ராமா ராமா எங்கிருக்கிறாய் என்று கதறினான். காலச் சுழற்சியினால் தனக்கு வயதாகியிருப்பதைக் கூட அவன் அறியவில்லை. பல ஆண்டுகள் முடிந்து போனதையும் அவன் உணரவில்லை. இன்னும் குழந்தை போல ராமரைத் தேடினான். அப்போது மகரிஷிகள் கூட்டத்தில் ராமர் வனவாசம் முடிந்து பட்டாபிஷேகம் செய்து கொள்ளப் போவதையும் அதற்காகவே அயோத்தி செல்வதையும் அனந்தனுக்குத் தெரிவித்தார். ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடக்கப் போகும் செய்தி அறிந்து அதைக் காண மகரிஷிகளுடன் அயோத்தி புறப்பட்டான் அனந்தன். அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று பட்டாபிஷேக நாள். எங்கும் வேத கோஷமும் மங்கல இசையும் முழங்கிக்கொண்டிருந்தன. குல குரு வசிஷ்டர் விஸ்வாமித்திரர் முதலானோர் பட்டாபிஷேக ஏற்பாடுகளை முன்னின்று செய்து கொண்டிருந்தனர்.

ராமர் ஆடை அணிகலன்கள் அணிந்து தாயார் மூவரையும் வணங்கி கொலு மண்டபம் நோக்கி கம்பீரமாக நடந்து வந்தான். அப்போது எல்லோரும் அதிர்ச்சி அடையும் வகையில் உரத்த குரலில் அடே ராமா இத்தனை காலம் எங்கிருந்தாயடா? உன்னை எத்தனை காலமாய் தேடுகிறேனடா என்று குரல் கொடுத்தபடியே ராமரை நோக்கி ஓடி வந்தான் அனந்தன். ராமனை இறுகத் தழுவிக் கொண்டான். கந்தல் உடையில் ஜடா முடியுடன் பரதேசிக் கோலத்தில் பாமரன் ஒருவன் அடே ராமா என்று கூவி அழைத்தது கண்டு அவையினர் அதிர்ச்சி அடைந்தார்கள். மனநிலை பாதிக்கப்பட்டவன் இவ்வாறு செய்கிறான் என்று கோபத்துடன் காவலர்கள் அனந்தனைப் பிடித்திழுக்க விரைந்த போது ராமர் அனந்தனை நெஞ்சாறத் தழுவி அவன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து என்னை மன்னித்துவிடு அனந்தா என்று உணர்ச்சி பொங்கக் கூறினான். உன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் குருகுலத்தில் இருந்து வந்துவிட்டேன். என் பிரிவினால் நீ எவ்வளவு துயரம் அடைந்திருப்பாய் என்பதை நான் அறிவேன். என் தவற்றை மன்னித்துவிடு என்று மீண்டும் சமாதானம் செய்தார் ராமர். தன்னைப் போலவே தன் ராமரிடம் பக்தி செலுத்தும் மற்றொரு பக்தன் இருக்கிறான் என்றெண்ணிப் பூரித்த அனுமனின் கண்களிலும் நீர் சுரந்தது. அப்போது ராமர் இவன் என் பள்ளித் தோழன். குருகுலத்தில் எனக்கு சேவை செய்தவன். இத்தனை பெரிய அவையில் எல்லோரும் என்னைப் பிரபு என்றும் மகாராஜா என்றும் தான் அழைக்கிறார்கள். என்னை அடே ராமா என்று அழைக்க என் தந்தை தசரதன் இல்லையே என ஏங்கினேன். அந்தக் குறையைத் தீர்த்து வைத்ததன் மூலம் என் தந்தைக்கு நிகரானவன் ஆகிவிட்டான் இந்த அனந்தன் என்று கூறினார் ராமர். அனைவரது கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்.

ராம நாமத்தை இத்தனை நாட்கள் எனக்காகத் தவமிருந்து இடைவிடாமல் செபித்து என்னைத் தேடி வந்த இவனுக்கு நான் இந்த அவையில் மரியாதை செய்யக் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறிய ராமர் அனுமனை நோக்கி உன்னைப் போலவே என்னை நேசிக்கும் இவனுக்கு என்ன கௌரவம் தரலாம் என்று கேட்டார் ராமர். அதற்கு அனுமன் தங்கள் தந்தைக்குச் சமமானவர் இவர் என்று சொல்லி வீட்டீர்கள். எனவே தாங்கள் சிம்மாசனத்தில் அமரும் முன்பு இவரை அதில் அமர்த்தி மரியாதை செய்வது நம் அனைவருக்குமே பெருமை என்று கூறினார் அனுமன். அனைவரும் இதனை ஆமோதித்தார்கள். இத்தனை பெரிய மரியாதைக்குத் தான் தகுதியானவனா என்றெண்ணிக் கூனிக் குறுகினான் அனந்தன். வேண்டாம் வேண்டாம் என்று தடுத்தும் கேளாமல் அவனைச் சிம்மாசனத்தில் அமர்த்தி மாலை அணிவித்து மரியாதை செய்து பாதபூஜையும் செய்தார் ராமர். அதன் பின்பே ராமருக்கு பட்டாபிஷேகம் ஆரம்பமானது.

சமர்த்த ராமதாசர்

சத்ரபதி சிவாஜி வீர சிவாஜி என்றெல்லாம் பேரும் புகழும் பெற்ற சிவாஜி மகாராஷ்டிரத்தை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. நதியில் இறங்கி சிவாஜி தன் கை கால்களைத் தூய்மை செய்து கொண்டிருந்த போது ஆற்று நீரில் பல ஓலைச் சுவடிகள் மிதந்து வந்ததைப் பார்த்தார். ஓர் ஓலைச்சுவடியை எடுத்துப் பார்த்த போது அதில் மஹாராஷ்டிர மொழியில் எழுதப்பட்டிருந்த அற்புதமான கவிதைகள் இருந்தன. மனம் வியந்த சிவாஜி ஓலைச் சுவடிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு ஆற்று நீர் வந்த திசையை நோக்கிக் குதிரையைச் செலுத்தினார். அங்கே ஓரிடத்தில் சிவாஜி கண்ட காட்சி அவரை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அங்கே மர நிழலில் ஒரு பாறையின் மீது இருந்தபடி ஞானி ஒருவர் இனிய குரலில் ராம நாமத்தைப் பாடிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி காட்டில் இருந்த கொடிய விலங்குகள் எல்லாம் அமர்ந்திருந்தன. அந்தக் கொடிய விலங்குகளிடம் பயப்பட வேண்டிய பசுக்களும் மான்களும் அவற்றின் அருகிலேயே எந்த விதமான பயமும் இல்லாமல் அவரைச் சுற்றி அமர்ந்து கொண்டு கண்களிலிருந்து நீர் வழிய அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தன. ஞானியின் வாக்கிலிருந்து வெளிப்பட்ட ராம மந்திர இசை ஓசையில் தாம் ஒரு மன்னர் என்பதையே மறந்தார். அது வரை சிவாஜி அப்படிப்பட்ட இசையைக் கேட்டதே இல்லை. அங்கிருந்த ஒரு மரத்தின் நிழலில் அப்படியே அமர்ந்து தன்னிலை மறந்தார். அன்று முதல் அந்த ஞானியை தம் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டார் சிவாஜி.

ராம நாம மந்திரத்தை சொல்லியபடி ஞானி ஒரு நாள் தனிமையில் இருந்தார். விலங்குகள் எதுவும் அருகில் இல்லை. சிவாஜிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அவர் உடனே ஞானியை நெருங்கி அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினார். குருநாதா அடியேனுக்கு ஞான உபதேசம் செய்யுங்கள் என வேண்டினார். அப்போது தான் அந்த ஞானியின் பெயர் சமர்த்த ராமதாசர் என்பதை சிவாஜி அறிந்து கொண்டார். சமர்த்த ராமதாசர் சிவாஜிக்கு ராம மந்திர உபதேசம் செய்து அவரைத் தம் சீடராக ஏற்றுக் கொண்டார். குருநாதரை வணங்கிய சிவாஜி அவரிடம் ராம மந்திரத்தை இனிய இசையுடன் பாடக் கற்றுக் கொண்டார். ஒரு நாள் சிவாஜி சிறிதளவு படையுடன் சமர்த்த ராமதாசர் தங்கியிருந்த மாவுலி என்ற நகரத்திற்குப் போய்க் கொண்டிருந்தார். அந்தத் தகவலை அறிந்த முகலாய மன்னன் ஔரங்கசீப் சிவாஜியைச் சிறைப் பிடிக்க ஒரு பெரும் படையை அனுப்பி வைத்தான். இரவு நேரம் நெருங்கியது. பயணம் செய்து கொண்டிருந்த சிவாஜி காட்டிலேயே ஓரிடத்தில் முகாம் போட்டுத் தங்கிவிட்டுக் காலையில் பயணத்தைத் தொடரலாம் எனத் திட்டமிட்டார். அதன்படியே காட்டில் ஆங்காங்கு கூடாரமிட்டுப் படைவீரர்கள் தங்கினார்கள். சிவாஜி மட்டும் தனிமையை விரும்பிச் சற்றுத் தள்ளியே கூடாரத்தை அமைத்து அதில் தங்கியிருந்தார்.

ராம நாம மந்திரத்தை அப்போது சிவாஜி இனிய இசையுடன் பாடிக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து ஔரங்கசீப்பின் பெரும் படை சிவாஜியையும் சிவாஜியின் படையையும் சுற்றி வளைத்து முற்றுகையிட்டது. அது எதுவும் தெரியாத சிவாஜி மன்னரோ தன்னை மறந்த நிலையில் பக்திப் பரவசத்தோடு ராம மந்திரத்தைப் பாடிக் கொண்டிருந்தார். எந்த நேரமும் சிவாஜியும் அவரது படையும் கைது செய்யப்படலாம் என்ற அந்தச் சூழ்நிலையில் அந்த இரவு நேரத்தில் காட்டிலிருந்த குரங்குக் கூட்டங்கள் சிவாஜி மன்னரின் படைகளுக்கு உதவியாக முகலாயப் பெருஞ்சேனையின் மீது பாய்ந்தன. முகலாயப் படை திகைத்தது. இவ்வளவு பெரிய வானரக் கூட்டம் எங்கிருந்து வந்தது என்ற அதிர்ச்சியில் முகலாயப் படை சிதறிப் போய் சின்னாபின்னமாகி ஓடியது. சிவாஜிக்கு விவரம் தெரிந்தது. அனுமன் வந்து தம்மைக் காப்பாற்றியிருக்கிறார் என உணர்ந்தார். அதனால் விடிந்ததும் புறப்பட்ட சிவாஜி நேரே போய் சமர்த்த ராமதாசரைத் தரிசித்து வணங்கி நடந்ததையெல்லாம் அவரிடம் கூறி ராமர் தனக்கு அருளியதை எண்ணி பெரு மகிழ்ச்சியில் இருந்தார்.

ராம நாம மந்திரத்தை சொல்லிக் கொண்டிருந்த சிவாஜியைப் பார்ப்பதற்காக சமர்த்த ராமதாசர் ஒரு நாள் அரண்மனைக்கு வந்தார். அந்த நேரத்தில் சமர்த்த ராமதாசரின் தலைமைச் சீடரான உத்தமர் என்பவர் அரண்மனை நந்தவனத்தில் இருந்த பழங்களைப் பறிப்பதற்காக சமர்த்த ராமதாசரிடம் அனுமதி கேட்டார். அதற்கு நானே பறித்துத் தருகிறேன் என்று சொல்லி கீழே கிடந்த கல்லை எடுத்துக் கனிகளின் மீது வீசினார் சமர்த்த ராமதாசர். அந்தக் கல் தவறுதலாக ஒரு பறவை மீது பட்டு பறவை துடிதுடித்துக் கீழே விழுந்து இறந்தது. அதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் கல்லை எடுத்து அடித்துப் பறவையைப் பரலோகம் அனுப்பிவிட்டாரே இந்த ஞானி என்று பரவலாகப் பேசினார்கள். அதைக்கேட்ட சமர்த்த ராமதாசர் ராம மந்திரத்தின் மகிமையை விளக்கும் ஒரு பாடலை பாடினார். பாடலைப் பாடிய படியே கீழே இறந்து கிடந்த பறவையை எடுத்து ஆகாயத்தில் வீசினார். அந்தப் பறவை உயிர் பெற்று அப்படியே பறந்து ஓடியது. சமர்த்த ராமதாசர் இறந்து போன பறவையை உயிருடன் எழுப்பிய தகவல் ஊரெங்கும் பரவியது. அப்போது மாவுலி நகரத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த முகலாய மன்னனுக்கும் தகவல் தெரிந்தது. அவன் மனைவிக்கு சித்தப் பிரமை உண்டாகியிருந்தது. அந்த முகலாய மன்னன் மாவுலி நகர ஹிந்துக்கள் அனைவரையும் இஸ்லாம் மதத்தைச் சாரும்படி கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தான். அப்படிப்பட்ட அந்த மன்னன் தான் சமர்த்த ராமதாசரைப் பணிந்து என் மனைவியின் சித்தப் பிரமையைத் தீர்த்து வையுங்கள் என வேண்டினான். சமர்த்த ராமதாசரும் பார்த்தார். இந்த மன்னனை நல்வழிப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பு என்று எண்ணிய அவர் மன்னனின் மனைவி முன்னால் மூன்று மணிநேரம் ராம பஜனை செய்தார். மூன்றாவது மணியில் மன்னனின் மனைவி சித்தப் பிரமை நீங்கித் தெளிந்து எழுந்தாள். அவளையும் தன்னுடன் சேர்ந்து பாடச் செய்தார் சமர்த்த ராமதாசர். இந்துக்களுக்குத் தான் இழைத்த அநீதிக்கு ஏதாவது பரிகாரம் செய்ய எண்ணி சமர்த்த ராமதாசரிடம் வழி கேட்டான். அதற்கு ராமதாசர் மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்போது ராம் ராம் என்று சொல்லிக் கொள்ள வேண்டும் எனக் கேட்டார். அன்று முதல் மஹாராஷ்டிர மாநிலம் மாவுலி நகரம் முதலான வட தேசங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் ராம் ராம் எனச் சொல்லிக் கொள்ள அரசன் உத்தரவிட்டான்.

லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை

ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த ராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது. அப்போது ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார். லட்சுமணன் பவ்யமாக ராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்துவிடக்கூடாது. நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம் அதை இந்த உலகம் அறிந்து பயன் பெறும் எனவே எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான். லட்சுமணனை சிரித்துக் கொண்டே வரவேற்ற ராவணன் ராமர் தன்னிடத்தில் வைத்திருக்கும் மதிப்பு அறிந்து மகிழ்வுடன் தன் அறிவுரைகளைச் சொன்னான். லட்சுமணா ஒரு காலத்தில் சர்வ வல்லமை படைத்தவனாக நான் இருந்தேன். நவக்கிரகங்களும் எமனும் இந்திரனும் கூட எனக்குக் கீழ்ப்படிந்தனர். அப்போது நான் எண்ணியது என்ன தெரியுமா? நாட்டில் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும். நரகம் யாருக்கும் இல்லையென உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஒரு பறக்கும் ஏணி அனைவரையும் ஏற்றிச் செல்ல எமனைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும் என்பதே. ஆனால் இந்த நல்ல எண்ணத்தைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போட்டேன். அதன் விளைவாகவே இன்று நான் அவதிப்பட்டேன். சூர்ப்பனகை வந்து சீதாதேவி அழகின் சிகரம். அவள் உனக்கு ஏற்றவள் என்று கூறியதும் உடனே அந்தச் செயலை தள்ளிப் போடாமல் புறப்பட்டேன். விளைவு அனைவருக்கும் நாசம். அதனால் நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது.

  1. நல்ல செயலை உடனடியாக செய்து முடி அது பலன் தரும்.
  2. தீய செயலைத் தள்ளிப் போடு தள்ளிப்போடுவதால் அந்த தீய செயல் நடைபெறாமல் இருக்க வாய்ப்புண்டு.
  3. உன் சாரதியிடமோ வாயிற்காப்போனிடமோ சகோதரனிடமோ பகை கொள்ளாதே உடனிருந்தே கொல்வார்கள்.
  4. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே.
  5. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.
  6. நான் அனுமனை சிறியவன் என்று எடை போட்டது போல் எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டுவிடாதே.
  7. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே. அவை நம் வழிகாட்டிகள் என்று ராவணன் சொல்லி முடித்தான்.
  8. பொறுமையைவிட மேலான தவமுமில்லை.
  9. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.
  10. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.
  11. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை என்று சொல்லி முடித்தான் ராவணன்.

லட்சுமணன் ராவணனை வணங்கி உபதேசங்களை பெற்றுக் கொண்டான்.