ஓடக்காரன்

ராமர் லட்சுமணனை தனது யாகத்தை பாதுகாக்க அழைத்துச் சென்ற விஸ்வாமித்திரர் பல இடங்களுக்கு ராமரை அழைத்துச் சென்றார். கல்லாக இருந்த அகலிகையை ராமரின் பாதத்தில் படச்செய்து அவளுக்கு விமோசனம் அளித்தார். ஒரு நதியை கடந்து அக்கரைக்கு செல்ல வேண்டி ராமர் லட்சுமணர் விஸ்வாமித்திரர் மூவரும் நதிக்கரையில் இருக்கும் ஓடக்காரனிடம் சென்றார்கள். ஓடக்காரனிடம் சென்ற விஸ்வாமித்ரர் நாங்கள் அக்கறைக்கு போக வேண்டும். நீ ஓடம் செலுத்துபவனா? இந்த ஓடத்தில் இப்போது நாம் அக்கரைக்கு செல்லலாமா? இந்த ஓடத்தில் எத்தனை பேர் செல்லலாம் எனக் கேட்டார். அதற்கு ஓடக்காரன் நான் பரம்பரையாக ஓடம் செலுத்துபவன். உங்களை நான் அழைத்துச் செல்கிறேன். இந்த ஓடத்தில் அறுபது நபர்கள் போகலாம் என்றான். நாங்கள் மூவர் தான் வந்து இருக்கிறோம். அப்பயென்றால் மீதம் 57 நபர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டுமா என்று கேட்டார் விஸ்வாமித்திரர். அதற்கு ஓடக்காரன் நீங்கள் இந்த உலகத்தை காக்கும் தெய்வம். உங்களை நான் ஒரு போதும் காக்க வைக்கமாட்டேன். ஓடத்தில் ஏறுங்கள் வாருங்கள் போகலாம் என்றான். விசுவாமித்திரர் ஓடத்தில் ஏறினார்.

ராமர் ஓடத்தில் ஏறும் பொழுது ஓடக்காரன் பச்சை பச்சை ஓடத்தில் ஏறாதே என்றான் இதனை கேட்ட ராமர் தூக்கிய காலை கீழே வைத்துவிட்டார். லட்சுமணருக்கு பெரும் கோபம் உண்டானது. லட்சுமணனின் கோபத்தை கண்ட ராமர் லட்சுமணனிடம் பேச ஆரம்பித்தார். அவன் பரம்பரையாக ஓடம் செலுத்துபவன். பச்சையாக இருக்கும் என்னைப் பச்சை என்று அழைத்ததால் ஒன்றும் பிரச்சணை இல்லை. இந்த ஓடம் அவனுக்கு சொந்தமானது. அவனுக்கு சொந்தமான ஓடத்தில் கால் வைக்காதே என்று சொல்லுவதற்கு அவனுக்கு உரிமை உண்டு என்று லட்சுமணனை சமாதானப் படுத்தினார். பின்பு ஓடக்காரனை பார்த்து நான் ஏன் ஓடத்தில் ஏறக்கூடாது என்று கேட்டார். அதற்கு ஓடக்காரன் என் மேல் கோபத்தில் இருக்கும் உங்களது தம்பியை கூட நான் அழைத்துச் செல்வேன் ஆனால் உங்களை அழைத்துச் செல்ல மாட்டேன் என்றான். அதற்கு லட்சுமணன் நாங்கள் அயோத்தியை ஆளும் தசரத சக்ரவர்த்தியின் மக்கள் ராமர் லட்சுமணன் என்றான். இதைக்கேட்டவுடன் ஓடக்காரன் கண்ணீர் மல்க வணங்கி என்னை மன்னித்தருள வேண்டும். தாங்கள் பிறந்த அன்று எங்களுக்கு உணவும் ஆடையும் வழங்கினார்கள். தங்களுக்கு ஒரு கோடி வணக்கங்களை நான் செலுத்துகிறேன். ஆனால் தாங்கள் மட்டும் ஓடத்தில் கால் வைக்கவேண்டாம் என்றான்.

ராமர் ஏன் நான் ஏறக்கூடாது சரியான காரணத்தை சொல் தவறு இருந்தால் நான் திருத்திக் கொள்கிறேன் என்றார். அதற்கு ஓடக்காரம் நாங்கள் இளமையில் ஒரு பாறையில் சருக்கி விளையாடுவோம். அந்தக் கல்லில் தங்கள் கால் பட்டவுடனே அது பெண்ணாக மாறிவிட்டது. இந்த ஓடத்திலும் தாங்கள் கால் வைத்தவுடன் இந்த ஓடம் பெண்ணாக மாறிவிட்டால் என்னுடைய பிழைப்புக்கு நான் என்ன செய்வது அதனால் உங்களை ஏற்றிக் கொள்ள மறுக்கிறேன் என்றான். இதனைக் கண்டு சிரித்த ராமர் நான் கால் வைத்தால் ஓடம் பெண்ணாகாது என்றார். அதற்கு ஓடக்காரன் தாங்கள் சொல்வது உண்மை என்றால் உங்களை ஏற்றிக் கொள்கிறன் ஆனால் தாங்கள் நதியில் இறங்கி உங்களின் கால்களை சுத்தமாக கழுவிவிட்டு ஏறுங்கள் என்றான். ராமர் நதியில் இறங்கிக் கால் கழுவச் சென்றார். அப்போது ஓடக்காரன் கால் கழுவும் பணியை எனக்கு கொடுங்கள். நான் சுத்தமாய் தேய்த்து விடுகிறேன் என்று கூறி ராமருடைய பாதங்களை செம்பு தாம்பாளத்தில் வைத்து ராம ராம என்று அபிஷேகம் செய்தான். காட்டு மலர்களை கொண்டு அர்ச்சனை செய்தான். உங்களின் பாத பூஜைக்காக மகரிஷிகள் பல காலம் தவம் இருக்க தவம் செய்யாத இந்த அடியேனுக்கு பாத பூஜை கிடைத்தது என்று துதி பாடி வழிபாடு செய்தான். உங்களது பாதத்தை சுத்தம் செய்த இந்த நீரை கீழே விட்டால் நீர் பட்ட கற்களெல்லாம் பெண்களாகி விடும். அதனால் என் மனமாகிய கல் பெண்ணாகட்டும் என்று கூறி தலையில் ஊற்றிக்கொண்டான்.

ராமர் அவனது செய்கையை லட்சுமணனிடம் காட்டி என்னுடைய பாத பூஜைக்காக தான் இவன் இவ்வாறு செய்திருக்கிறான் என்றார். பிறகு மூவரும் ஓடத்தில் ஏறினார்கள். அவன் பகவானுடைய கீதத்தைச் சொல்லியபடியே ஓடத்தை செலுத்தினான். மூவரும் ஓடத்தை விட்டு இறங்கிய பின் ராமர் தன் கையிலிருந்த நவரத்தின மோதிரத்தை பரிசாக தந்தார். மீனவன் அதை வாங்க மறுத்தவிட்டான். நீங்களும் ஓடக்காரன் நானும் ஓடக்காரன். ஒரு தொழிலாளி மற்றொரு தொழிலாளியிடம் எதுவும் வாங்க கூடாது. நான் இந்த நதிக்கு ஓடம் விடுபவன். தாங்கள் பிறவிப் பெருங்கடலுக்கு திருவடி ஆகிய ஓடத்தை விடுபவர் என்று கூறி ராமரின் முன்பாக வீழ்ந்து வணங்கினான். ஓடக்காரனின் அன்பைக் கண்டு ராமர் உள்ளம் உருகினார். பிறகு மூவரும் மிதிலையை நோக்கி புறப்பட்டார்கள்.

லட்சுமணன் ஊர்மிளை

ராமரும் சீதையும் வனவாசத்துக்குக் கிளம்பினார்கள். அவர்களுக்குச் சேவை செய்ய லட்மணனும் கிளம்பினான். தன் மனைவி ஊர்மிளையிடம் விடை பெற்றுக் கொள்ள அவளது அந்தப்புரத்துக்கு வந்தான் லட்சுமணன். தன் மீது தன் கணவர் கொண்ட பிரியம் ஊர்மிளைக்குத் தெரியும் ஆகையால் இதே பிரியத்துடன் அவர் கானகம் சென்றால் தன் நினைவும் விரகதாபமும் அவரை சரி வர அவர் கடமையைச் செய்ய விடாது அலைக்கழிக்கும் என அவள் வருந்தினாள். ஆகவே அவர் தன்னை வெறுக்கும்படி தான் நடந்து கொள்ளவேண்டும் என நிச்சயித்தாள் ஊர்மிளை. தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு லட்சுமணனை வரவேற்கத் தயாரானாள். லட்சுமணன் கானகம் செல்வதைப் பற்றி கூறியவுடன் தந்தை காட்டுக்குப் போகச் சொன்னது உங்கள் அண்ணனையேத் தவிர உங்களை அல்ல நீங்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும் அண்ணி தான் அண்ணனை மணந்த பாபத்துக்கு அவர் பின்னால் போகிறாள். நானாக இருந்தால் அது கூட போகமாட்டேன். வாருங்கள் என்னுடன் நாம் மிதிலைக்குப் போய் மகிழ்ச்சியாக வாழலாம் என்றாள். லட்சுமணன் கோபத்துடன் நீ இவ்வளவு மோசமானவளா நீ என்னுடன் வர வேண்டாம் என் முகத்திலும் இனி விழிக்க வேண்டாம். இங்கேயே சுகமாகப் படுத்து தூங்கு என் அண்ணனுடனும் அண்ணியுடனும் நான் போகிறேன் என்றான். உங்கள் தூக்கத்தையும் சேர்த்துக் கொடுத்தாலும் நிம்மதியாகத் தூங்குவேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் ஊர்மிளை. அப்படியே ஆகட்டும். எனக் கூறிச்சென்ற லட்சுமணன் ஊர்மிளைக்குத் தன் தூக்கத்தைத் தந்துவிட்ட காரணத்தால் பதினான்கு ஆண்டுகளும் தூங்காமல் ராமனுக்குச் சேவை செய்தான். ஊர்மிளை செய்த தியாகத்தினால் அவளுடைய நினைவும் லட்சுமணனை வாட்டவில்லை. ராம பட்டாபிஷேகம் முடிந்த பிறகு சீதையின் வாயினால் உண்மையை அறிந்த லட்சுமணன் அவளின் தியாக மனமறிந்து ஊர்மிளையை முன்பை விடவும் அதிகமாக நேசித்தான்.

லட்சுமணனின் குணந்தை ஊர்மிளை அறிந்து கொள்ள சீதை ஒரு வழி செய்தாள். பட்டாபிஷேகத்துக்குப் பிறகு ஒரு நாள் தன் கால் கொலுசுகளை ஊர்மிளைக்குப் பரிசாக அளித்தாள் சீதை. அன்றிரவு அவளின் அந்தப்புரத்துக்கு வந்த லட்சுமணனின் பார்வையில் அந்தக் கொலுசுகள் தான் முதலில் பட்டன. தினமும் சீதையின் கால்களை மட்டுமே வணங்கி வந்துள்ள லட்சுமணன் சீதை தன்முன் நிற்பதாகக் கருதி அவள் கால்களில் விழுந்து வணங்கினான். துணுக்குற்றுப் பின்வாங்கிய ஊர்மிளை உண்மையைக் கூற அவளைக் கடிந்து அந்தக் கொலுசுகளை உடனே அண்ணிக்குத் திருப்பித்தர உத்தரவிட்டான் லட்சுமணன். ஊர்மிளையிடம் கொலுசைப் பெற்றுக் கொண்ட சீதை உயர்ந்த கொலுசை அவளுக்குப் பரிசளித்து லட்சுமணன் தன்னிடம் கொண்ட பக்தியை உனக்கு புரிய வைப்பதற்காகவே அவ்வாறு செய்தேன் என்று ஊர்மிளையிடம் கூறினாள்.

ராமரின் பாதுகை

ராமர் சீதையை திருமணம் செய்து கொண்டு அயோத்திக்குத் திரும்பினார். நாட்டு மக்கள் அனைவரும் ராமரை வாழ்த்தி விதவிதமான பரிசுகளை அளித்துக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் மித்ரபந்து என்ற செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவனும் இருந்தான். அவன் கைகளில் ராமனுக்கே அளவெடுத்துத் தைத்தது போன்ற அழகான இரு பாதுகைகள் இருந்தன. வரிசையாக ஒவ்வொருவரும் தாங்கள் எடுத்து வந்த பரிசுப் பொருட்களை தந்துகொண்டிருந்தார்கள். அனைத்தையும் பார்த்த மித்ரபந்துவுக்கு வருத்தம் நேரிட்டது. அனைவரும் விலை உயர்ந்த பரிசுகளைத் தரும் போது நாம் மட்டும் அற்ப காலணிகளையா தருவது என நினைத்தவன் ராமரைப் பார்க்கப் போகாமல் திரும்ப சென்று விடலாம் என்று நினைத்து திரும்பினான். அதனை கவனித்து விட்ட ராமபிரான் அவனை அருகே அழைத்தார். உண்மையான உழைப்பில் உருவான உன் பரிசு தான் இங்கே இருக்கும் அனைத்தையும் விட உயர்ந்தது. எனக்குப் பிரியமானதும் இதுவே என்று ராமர் சொல்ல அவரது அன்பில் நெகிழ்ந்து போனான் மித்ரபந்து. ராமர் வனவாசம் செல்லப் புறப்பட்ட போது வனவாசம் செல்லும் போது எதையுமே எடுத்துச் செல்வது கூடாது. இருப்பினும் இந்தப் பாதுகைகளை அணிந்து செல்ல எனக்கு அனுமதியுங்கள் என்று கேட்டு அனுமதி வாங்கி தன்னுடன் எடுத்துச் சென்றார் ராமர். கூட்டத்தில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்த மித்ரபந்துவை நோக்கி விலை உயர்ந்த எந்தப் பரிசும் எனக்குப் பயன்படவில்லை. நீ அளித்த காலணிகள் தான் என் கால்களைக் காக்கப் போகின்றன என்றார். உண்மை அன்பின் அடையாளமான அந்தப் பாதுகைகளே பின்னர் பரதனால் கொண்டு செல்லப்பட்டு அயோத்தியின் அரியணையில் அமர்ந்து பதினான்கு ஆண்டுகள் ஆட்சியும் செய்தன.

தசரதர் 60000 பெண்களை திருமணம் செய்தது ஏன்?

வேத காலத்தில் காட்டில் ஆசிரமத்தில் தங்கியிருந்த ஜமதக்னி முனிவர் சிறந்த தவ ஆற்றல் கொண்டவராக இருந்தார். அந்த ஆற்றலின் மூலமாக சொர்க்கலோக பசுவான காமதேனுவை தனது ஆசிரமத்தில் வளர்த்து வந்தார். அதை கண்ட கார்த்தவீர்யாஜுனன் என்ற அரசன் அந்த காமதேனுவை தனக்கு தருமாறும் அதற்கு இணையான செல்வத்தை தான் தருவதாகவும் ஜமதக்னி முனிவரிடம் கூறினான். அதற்கு ஜமதக்னி முனிவர் மறுப்பு தெரிவிக்க அதை அவரிடமிருந்து பறித்து சென்றான் கார்த்தவீர்யாஜுனன். இதைக் கேள்விப்பட்ட ஜமதக்னியின் புதல்வர் பரசுராமர் கார்த்தவீர்யார்ஜுனனுடன் போரிட்டு அவனை கொன்று அந்த காமதேனு பசுவை மீட்டு வந்து தனது தந்தை ஜமதக்னியிடம் ஒப்படைத்தார். கார்த்தவீர்யாஜுனன் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக அவனது மூன்று புதல்வர்கள் பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவரை 21 முறை வாளால் வெட்டிக்கொன்றார்கள். இதனால் கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற பரசுராமர் அந்த மூன்று மகன்களையும் மற்றும் அவனது படைகளையும் சிவ பெருமான் தனக்கு அளித்த கோடரி மூலம் வெட்டி வீழ்த்தினார். மேலும் தனது தந்தை ஜமதக்னி முனிவரை கொடூரமாக கொன்ற சத்திரியர்களான அரசர்கள் மீது பரசுராமருக்கு மிகுந்த வெறுப்பு ஏற்பட்டது. எனவே இந்த நாட்டின் எந்த ஒரு சத்ரிய பரம்பரையின் 21 தலைமுறையினரையும் தான் வெட்டி வீழ்த்தப்போவதாக சபதம் ஏற்று அப்படியே செய்து வந்தார்.

அயோத்திய நகரை அப்போது ஆண்டு வந்த சத்ரிய குலத்தில் உதித்த தசரத சக்ரவத்தி தனது நாட்டை தர்மத்தின் படி ஆட்சி புரிந்து வந்தார். பல போர்களில் வெற்றி பெற்றிருந்த வீரராக தசரதர் இருந்தாலும் பரசுராமரின் போர்திறன் தவசக்தி மற்றும் சிவ பெருமானிடம் அவர் தவமிருந்து பெற்ற கோடரி போன்றவை அவரிடம் இருக்கும் வரை இந்த பூமியில் தான் உட்பட எந்த சத்ரியனும் அவரை வெல்ல முடியாது என்று அறிந்து வைத்திருந்தார். இந்த இக்கட்டான சூழ்நிலையை தீர்க்க வழி தேடினார். புதிதாக திருமணம் புரிந்திருக்கும் எந்த ஒரு அரசனையும் போருக்கு அழைக்காமல் அவனை ஆசிர்வதித்து செல்லும் பரசுராமரின் குணம் பற்றி அறிந்தார் தசரதர். பரசுராமரின் பலவீனத்தை தெரிந்து கொண்ட தசரதர் ஒவ்வொரு முறை பரசுராமர் தன்னை போருக்கு அழைக்க நேரில் வரும் போதும் புதிதாக ஒரு பெண்ணை திருமணம் புரிந்து பரசுராமரின் முன்பு தோன்றினார். பரசுராமர் அவரை போருக்கு அழைக்காமல் அவரையும் அவரது புது மனைவியையும் ஆசிர்வதித்து விட்டுச் சென்றார். இப்படி ஒவ்வொரு முறையும் யுத்தம் நடக்காமல் இருக்க பரசுராமர் பார்வையில் படும் போதெல்லாம் ஒரு பெண்ணை புதிதாக திருமணம் செய்து கொண்டு அவர் முன் தோன்றினார். தனது நாட்டு மக்களுக்கு அரசனாக சேவை செய்யும் பொருட்டு தான் உயிருடன் இருக்க வேண்டிய அவசியத்திலேயே தசரதசக்கரவர்த்தி இத்தனை திருமணம் புரிந்தார்.

ஸ்ரீமன் நாராயணர்

அந்தணர் ஒருவர் கலகை என்பவளுடன் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் சாந்த குணமுடையவர். கலகை அந்தணருக்கு எதிர்மறையாக இருந்தார். இவள் கணவர் வேண்டாம் என்பதை வேண்டும் என்று செய்வாள். இதனால் வெறுப்படைந்த அந்தணர் வீட்டை விட்டு வெளியில் கிளம்பிச் சென்றார். அவ்வாறு செல்லும்போது வழியில் அந்தணரை பார்த்து ஐயா எங்கே போகிறீர்? ஒருவர் என்று கேட்டார். மனைவியின் துன்பம் என்னால் தாங்க முடியவில்லை. அதனால் வீட்டைவிட்டு வெளியேறி போகின்றேன் என்றார். வேண்டாம் என்பதை வேண்டும் என்று செய்கிறாள். வேண்டும் என்பதை வேண்டாம் என்று செய்கிறாள். அன்பரே நான் சொல்லும்படி கடைப்பிடியுங்கள். உங்களுக்கு வேண்டாம் என்பதை வேண்டும் என்று சொல்லுங்கள் என்றார். இதைக் கேட்டு மகிழ்ந்த அந்தணர் வீட்டுக்குச் சென்று கலகை இன்று நான் சாப்பிடமாட்டேன் என்றார். சாப்பிடு என்று உணவை கோபத்துடன் கொடுத்தாள். இவ்வாறு அந்தணர் கலகையிடம் வேண்டும் என்பதை வேண்டாம் என்று கூறியும் வேண்டாம் என்பதை வேண்டும் என்று கூறியும் சுகமாக வாழ்ந்து வாழ்ந்தார். ஒருநாள் அந்தணர் மனைவியிடம் கலகை நாளை என் தந்தையாருடைய சிரார்த்தம். வீடு வாசல் மெழுகாதே. நீராடாதே. சமைக்காதே என்ற கூறினார். அவள் எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்து வைத்தாள். பிண்டப் பிரசாதத்தை ஜலதாரையில் கொட்டுமாற சொல்லியருக்க வேண்டும். அவர் சற்றுக் கவனக்குறைவாக பிதுர் பிரசாதத்தைச் சுத்தமான நீரில் கொட்டுமாறு கூறிவிட்டார். அவள் அதைக் கொண்டு போய் அசுத்தமான தண்ணீரில் கொட்டிவிட்டாள். அந்தணர் கோபத்தில் எனக்கு ஆயிரமாயிரம் குற்றங்கள் செய்தும் அத்தனையும் பொறுத்துக்கொண்டேன். பிதுர்களின் தூய பிரசாதத்தை ஜலதாரை தண்ணீரில் கொட்டினாயே இது எவ்வளவு பெரிய பாவம் கலகை. அதனால் கலகை என பெயர் பெற்ற நீ அலகையாகப் (பேய்) போகக் கடவது என்று சாபமிட்டார். அந்த சாபத்தால் அவள் பெண் பேயாக மாறினாள். அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து வேதனைப்பட்டாள்.

தர்மாங்கதர் என்ற ஓர் முனிவர் கங்கைக்கரையில் ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை செபித்துக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்தார்.
கங்கைக் கரையில் ஜபம் செய்து கொண்டிருந்த தர்மாங்கதரை இந்த பெண் பேய் பிடிக்கச் சென்றது. அப்போது முனிவர் கமண்டலத் தண்ணீரை ஓம் நமோ நாராயணாய என்று தெளித்தார். அந்த மந்திர நீரால் அவளது பாவமும் சாபமும் விலகிவிட்டன. அவள் அவருடைய அடிமலர் மீது வீழ்ந்து தொழுது தர்மாங்கதரே நான் கலகை என்ற பெயருள்ள பெண். கணவனுக்கு குற்றங்கள் செய்த பாவத்தால் அவருடைய சாபத்தால் பேயாக அலைந்து திரிந்து பல துன்பங்களை அனுபவித்தேன் என்று அழுதாள். அதற்கு தர்மாங்கத முனிவர் அழாதே. நான் தோன்றிய நாள் முதல் இன்று வரை செய்த தவத்தில் பாதி உனக்கு தருகிறேன் இதன் பலனாக இனி நீ பல இன்பங்களை அனுபவிப்பாய் என்று அருளினார். உடனே வைகுண்டத்திலிருந்து வந்த பொன்மணி விமானம் இருவரையும் வைகுண்டத்துக்கு அழைத்து சென்றது.

ஸ்ரீமன் நாராயணர் தர்மாங்கதரைப் பார்த்து நீங்கள் பூவுலகில் ஆதித்தர் குலத்தில் பிறந்து தசரதன் என்ற பெயர் பெற்று அறுபதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்வீர்களாக. உனக்கு நான் மகனாகப் பிறந்து ராமன் என்ற பெயருடன் விளங்கி ராவணனை வதம் செய்து நாட்டுக்கு நலம் செய்வேன். கலகை நீ கேகய நாட்டில் அசுவபதி என்ற மன்னனுக்கு மகளாகப் பிறந்து கைகேயி என்ற பெயருடன் வளர்வாய். தர்மாங்கதருடைய தவத்தில் பாதி பெற்றதனால் கௌசலை வயிற்றில் நான் பிறந்தாலும் என்னை நீ அன்பு மகனாக வளர்ப்பாயாக. சமயம் வரும்பொழுது ராவண வதத்திற்காக என்னைக் கானகம் போகச் செய்வாய் என்றார். திருமாலுடைய சக்கரம் பரதனாகவும் சங்கு சத்துருக்கனாகவும் ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பிறக்குமாறு ஸ்ரீமன் நாராயணர் கட்டளை இட்டருளினார்.

ராம நாமத்தின் மகிமை

ராமா நாம சங்கீர்த்தனம் பாடியபடி வீதியில் பஜனை கோஷ்டி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதை அலட்சியம் செய்த ஒருவனுக்கு ராம நாமத்தை உபதேசித்த ஞானி ஒருவர் இதை ஒரு போதும் விற்காதே ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார் என்றார். அவனும் அப்படியே செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் இறந்து போனான். அவன் ஆத்மாவை இழுத்துப் போய் எமதர்மராஜன் முன் நிறுத்தினார்கள். அவரும் அவனுடைய பாப புண்ணிய கணக்கை பரிசீலித்து ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய் அதற்காக என்ன வேண்டுமோ கேள் என்றார். ராம நாமத்தை உபதேசித்த ஞானி அதை விற்காதே என்று கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. அதனால் அதற்கு விலை கூற மறுத்து ராம நாமத்திற்கு நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ அதைத் தாருங்கள் என்றான். திகைத்த எமதர்ம ராஜா ராம நாமத்திற்கு நாம் எப்படி மதிப்பு போடுவது என்று எண்ணி இந்திரன் தான் இதை தீர்மானிக்க வேண்டும் வா இந்திரனிடம் போகலாம் என்றார். நான் வருவதென்றால் பல்லக்கில் தான் வருவேன் அத்துடன் பல்லக்குத் தூக்குபவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும் சம்மதமா என்றான். இவன் நம்மையும் பல்லக்கு தூக்கச் சொல்கிறான் என்றால் ராம நாமம் மிகுந்த மகிமை உடையதாகத் தான் இருக்க வேண்டும் அதனால் தான் இப்படி எல்லாம் பேசுகிறான் என்று எண்ணிய எமதர்ம ராஜா அதற்கு சம்மதித்து அவனை பல்லக்கில் உட்கார வைத்து சுமந்து கொண்டு இந்திரனிடம் சென்றார். இந்திரனோ ராம நாமத்தை என்னால் எடை போட முடியாது பிரம்மதேவரிடம் கேட்போம் வாருங்கள் என்றார். எமதர்மனோடு இந்திரனும் சேர்ந்து பல்லக்கு தூக்கினால் தான் வருவேன் என்று மீண்டும் அவன் நிபந்தனை விதித்தான். அதற்கு இந்திரனும் ஒப்புக் கொண்டான். பல்லக்கை சுமந்து கொண்டு பிரம்மாவிடம் சென்றனர். அவரும் ராம நாம மகிமை சொல்ல என்னால் ஆகாது வைகுண்டம் போய் அந்த பரம்பொருளையே கேட்கலாம் வாருங்கள் என்று சொல்ல அவரும் பல்லக்கு சுமக்கும்படியாக ஆயிற்று.

மகா விஷ்ணுவிடம் சென்ற அவர்கள் இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா ஒருமுறை ராம நாமத்தை சொல்லியிருக்கிறது அதற்காக இவனுக்கு என்ன புண்ணியம் என்பதை தாங்கள் தான் கூற வேண்டும். எங்களால் முடியவில்லை என்றனர். இந்த ஜீவனைப் பல்லக்கில் வைத்து நீங்கள் எல்லாரும் சுமந்து வருகிறீர்களே இதிலிருந்தே ராம நாம மகிமை தெரியவில்லையா என்று சொல்லி பல்லக்கில் வந்த ஆன்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் பகவான்.

தசரதரின் நான்கு பிள்ளைகள்

தசரதன் ஒரு பிள்ளையை வேண்டினார். ஆனால் அவருக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தன. நான்கு பிள்ளைகளும் நான்கு தர்மத்தை கடைபிடித்து வாழ்ந்தார்கள் தர்மம் நான்கு வகைப்படும். அவை 1.சாமான்ய தர்மம் 2. சேஷ தர்மம் 3. விசேஷ தர்மம் 4. விசேஷதர தர்மம்

  1. சாமான்ய தர்மம் – பிள்ளைகள் பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? சீடன் குருவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? கணவன் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? இத்தகைய சாமான்ய தர்மங்களைத் தானே பின்பற்றி எடுத்துக் காட்டினான் ராமர்.
  2. சேஷ தர்மம் – சாமானிய தர்மங்களை ஒழுங்காகச் செய்து கொண்டு வந்தால் கடைசியில் ஒரு நிலை வரும். அந்த நிலையில் பகவானுடைய பாதங்களைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்ற நினைப்பு ஏற்படும். இத்தகைய தர்மத்துக்கு சேஷ தர்மம் என்று பெயர். இதைப் பின்பற்றிக் காட்டினான் லட்சுமணன்.
  3. விசேஷ தர்மம் – தூரத்தில் இருந்து கொண்டே எப்போதும் பகவானின் சிந்தனையாகவே இருப்பது விசேஷ தர்மம். இது சேஷ தர்மத்தைக் காட்டிலும் கடினமானது. இதைக் கடைப்பிடித்துக் காட்டியவன் பரதன்.
  4. விசேஷதர தர்மம் – பகவானை விட அவருடைய அடியார்களுக்குத் தொண்டு செய்வதே முக்கியம் எனக் கருதுவது விசேஷதர தர்மம். சத்ருக்னன் பாகவத உத்தமனாகிய பரதனுக்குத் தொண்டு செய்தே கரையேறி விட்டான். ஆக இந்த நான்கு தர்மங்களையும் ராமாவதாரத்தில் நான்கு புத்திரர்கள் மூலம் உலகுக்கு எடுத்துக் காட்டவே தசரதருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன.

நாயாகப் பிறவி எடுப்பது ஏன்?

ராமர் தனது அரசவையில் அமர்ந்திருந்தார். அப்போது வெளியே நாய் ஒன்று பெருங்குரலில் குரைத்துக் கொண்டிருந்தது. என்னவென்று தெரிந்து வருமாறு ஒரு காவலனை அனுப்பினார். அவன் அந்த நாயைத் துரத்திவிட்டு ராமரிடம் வந்து காரணமின்றிக் குரைத்த அந்த நாயை இந்தப் பகுதியை விட்டே துரத்தி விட்டேன் என்றான். சற்று நேரம் கழித்து மீண்டும் அந்த நாய் குரைக்க அதே காவலன் விரைந்து சென்று அதைத் துரத்தினான். இந்த நிகழ்வானது தொடர்ந்து நடந்தது. இதனை சிந்தித்த ராமர் லட்சுமணனிடம் அந்த நாய் தொடர்ந்து குரைக்கிறது. நீ போய் காரணம் என்ன வென்று தெரிந்து கொண்டு வா என்று அனுப்பினார். லட்சுமணன் குரைக்கும் நாயை நெருங்கி உன் துயரத்துக்குக் காரணம் என்ன சொல் என்று கேட்டான். அதற்கு அந்த நாய் ஈனஸ்வரக் குரலில் பேசத் தொடங்கியது ராமரை வரச் சொல்லுங்கள் எனக்கு நீதி வேண்டும் என்றது. இதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த லட்சுமணன் நாய் சொன்னதை அப்படியே ராமரிடம் கூறினான். உடனே ராமர் வெளியே வந்தார். எனது ராஜ்யத்தில் காரணமின்றி எவரும் துயரப்படக் கூடாது. ஆகவே நீ எவ்விதத் தயக்கமும் இன்றி உன் துயரத்தை என்னிடம் சொல் என்றார். அந்த நாய் பணிவுடன் அவரை வணங்கி பேசத் தொடங்கியது. என்னை சன்யாசி ஒருவர் கல்லால் அடித்துக் காலை உடைத்து விட்டார். அதை முறையிடவே இங்கு வந்தேன் எனக்கு நீதி வேண்டும் என்று வேதனையுடன் கூறியது. ராமர் கனிவான குரலில் வருந்தாதே. நான் இப்போதே அந்த சன்யாசியிடம் விசாரிக்கிறேன் என்று சன்யாசியை அழைத்து வர உத்தரவிட்டார். சற்று நேரத்துக்குள் அந்த சன்யாசி அங்கு வந்து ராமரை வணங்கி நின்றார்.

ராமர் சன்யாசியிடம் நீங்கள் எதற்காக இந்த நாயைக் கல்லால் அடித்தீர்கள் என்று விசாரித்தார். அதற்கு சன்யாசி நான் பிட்சை வாங்கி வரும்போது இந்த நாய் எனது பிட்சான்னத்தைத் தொட முயற்சி செய்தது. அப்போது நான் மிகவும் பசியுடன் இருந்ததால் இந்த நாய் மீது எனக்குக் கோபம் ஏற்பட்டது. எனவே அதன் மீது கல் எறிந்தேன் என்றார். ராமர் புன்னகை மாறாத முகத்துடன் அவரை நோக்கி இந்த நாய் ஐந்தறிவு படைத்த பிராணி. இதனால் தனக்கு தேவையான உணவே சமைக்கவோ உருவாக்குக் கொள்ளவோ தெரியாது. பார்க்கும் உணவே சாப்பிடவே தோன்றும் இது ஐந்தறிவு படைத்த பிராணிகளுக்கு உண்டான விதி. உங்களுக்கு பசி இருப்பது போல் இந்த நாயிற்கும் பசி எடுத்ததினால் உங்களது உணவை சாப்பிட முயற்சி செய்தது. இந்த நாயின் விதிப்படி இது தவறு அல்ல. பசியுடன் இருப்பவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்பது ஆறறிவு மனிதனுக்கு உண்டான தர்மம். நீங்கள் அந்த தர்மத்தை மீறியது மட்டுமல்லாமல் நாயை கல்லால் அடித்து காயப்படுத்தி தவறு செய்து விட்டீர்கள். உமது செயல் கண்டிப்பாகக் குற்றமே. எனவே நீங்கள் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்று கூறினார். நாயின் பக்கம் திரும்பிய ராமர் இந்த சன்யாசி உனக்கு கெடுதல் செய்திருப்பதால் இவரை தண்டிக்கும் பொறுப்பை உன்னிடமே ஒப்படைக்கிறேன். நீ என்ன சொன்னாலும் அதை நிறைவேற்றுகிறேன் என்றார். அதற்கு அந்த நாய் இவரை ஒரு சிவாலயத்தில் அதிகார வேலையில் அமர்த்துங்கள். இதுவே நான் அவருக்கு அளிக்கும் தண்டனை என்றது.

ராமர் அதற்குச் சம்மதித்து அதற்கான ஆணையை பிறப்பித்தார். தனக்குப் பெரிய பதவி கிடைத்த மகிழ்ச்சியில் சன்யாசியும் திருப்தியுடன் அங்கிருந்து வெளியேறினார். நாயும் மன நிறைவுடன் அகன்றது. இதை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் வியப்புடன் நின்றார்கள். அன்னத்துக்கு அலையும் அந்த சன்யாசிக்கு இது அதிர்ஷ்டமே அன்றி தண்டனையல்ல. இதனால் அவர் மேலும் சுகம் அடையப் போகிறார். இது எப்படி தண்டனை ஆகும் என்று மக்கள் ராமரிடம் கேட்டார்கள். அனைத்தும் அறிந்த ராமர் நாயிடமே இதனை கேட்டு தெரிந்து கொள்வோம் என்று அந்த நாயை அழைத்து வருமாறு தன் காவலரிடம் கூறினார். நாயும் வந்தது. இப்போது நாயிடம் அதே கேள்வியே மக்கள் கேட்டார்கள். அதற்கு அந்த நாய் சிவாலயத்தில் அதிகாரி வேலை என்று அந்த சன்யாசிக்கு நான் அளித்தது முள்ளின் மேல் நிற்கிற ஒரு பணி. சிவாலயம் மடம் கிராமம் போன்றவற்றில் தவறு செய்யும் அதிகாரிகள் பசு அந்தணர் அநாதை ஆகியோரின் செல்வத்தை அபகரிப்பவர்கள் அரசனது வீட்டில் இருந்து கொண்டு அங்கு வரும் யாசகர்களைத் தடுப்பவர்கள் அந்தணரின் உணவுப் பொருட்களை அபகரிப்பவர்கள் ஆகியோர் மறு ஜென்மத்தில் கண்டிப்பாக நாயாகப் பிறப்பார்கள். சென்ற பிறவியில் நான் தவறு இழைத்த ஒரு மடாதிபதியாக இருந்ததால் இப்போது நாயாகப் பிறவி எடுத்துள்ளேன். எனவே தான் சன்யாசிக்கு இப்படி ஒரு தீர்ப்பு சொன்னேன். இந்த ஜென்மத்தில் எனது பசிக்கு உணவு தராமல் தவறு செய்த சன்யாசி சிவாலயப் பணியில் இருந்து நல்ல விதமாக பணி செய்தால் என்னை அடித்த பாவம் தீர்ந்து நன்மை அடைவார். ஆசையின் காரணமாக ஏதேனும் தவறு செய்தால் மீண்டும் பாவம் செய்து நாயாகப் பிறப்பார் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பியது. அங்கு கூடியிருந்த அனைவரது சந்தேகமும் தீர்ந்தது.

கருத்து: சிவாலயம் மடம் அரசு நிர்வாகம் போன்ற பதவியில் இருப்பவர்கள் தவறு செய்யக்கூடாது. பசு அந்தணர் ஆதரவற்றோர் ஆகியோரின் செல்வத்தின் மேல் ஆசைப்படகூடாது. அரசனை காண வரும் யாசகர்களை தடுக்கக்கூடாது. உண்மையான அந்தணர்களின் பொருளை அபகரிக்ககூடாது.