அனுமனின் ராம நாமம்

குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம் நகரில் அழகிய ரம்யமான சூழ்நிலையில் ரன்பால் ஏரி அமைந்துள்ளது. இங்குள்ளவர்களால் லக்கோடா ஏரி என்று அழைக்கப்படும் இந்த ஏரிக்கரையில் அனுமனுக்கு கோயில் உள்ளது. மூலவராக வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் செந்தூரம் பூசப்பட்ட திருக்கோலத்துடன் காட்சி தருகிறார். பிரேம் பீகுஜி மகராஜ் என்பவரால் 1961ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோயிலில் தினமும் நடைபெற்று வரும் ராம் தூன் என்ற நாம சங்கீர்த்தனம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 1964ம் ஆண்டு முதல் இந்த ராம பஜனை தொடர்ந்து இடைவெளி இல்லாமல் 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது.

ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம என்ற பதிமூன்று எழுத்துக்கள் கொண்ட ராம மந்திரம் இங்கே இடைவிடாமல் 24 மணி நேரமும் ஜபிக்கப்பட்டு வருகிறது.

இந்த ராம நாம சங்கீர்த்தனத்தில் பக்தர்கள் பங்கேற்க விரும்பினால் இரண்டு நாட்களுக்கு முன்பே திருக்கோயில் நிர்வாகத்திடம் முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் நிர்வாகம் திருக்கோயில் அறவிப்பு பலகையில் அறிவித்துள்ள கால நேரப்படி முன்னரே பதிவு செய்து கொண்ட பக்தர்கள் தவறாமல் வந்து பஜனையில் பங்கேற்க வேண்டும். இந்த ஜப சேவையில் சிறியவர் பெரியவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற எந்த வேறுபாடுமின்றி அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொள்கிறார்கள். இப்படி ராம் தூன் பஜனை தொடர்ந்து இடைவிடாமல் நடைபெற ஆலய நிர்வாகம் எல்லாவிதமான முன்னேற்பாடுகளையும் செய்கிறது. முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் உரிய காலத்தில் வராத பட்சத்தில் நான்கு பேர் அடங்கிய ஒரு பஜனைக் குழுவினை எந்நேரமும் எந்தவிதமான சூழ்நிலையிலும் எதிர்கொண்டு பஜனை செய்திடத் தயாராக வைத்திருக்கிறார்கள்.

அகண்ட நாம சங்கீர்த்தனம் என்ற இந்தத் தொடர் பஜனையை கின்னஸ் உலக சாதனையாக 1984ல் உலக சாதனைப் பட்டியலில் சேர்த்துக் கௌரவித்துள்ளார்கள். கடந்த 2001ம் ஆண்டில் குஜராத்தில் ஏற்பட்ட பங்கர நிலநடுக்கத்தின் போதும் இந்த அனுமன் கோயிலுக்க எந்தவிதச் சேதமும் ஏற்படவில்லை. ராமநாம பஜனும் எந்தவிதமான தடங்களும் இன்றி தொடர்ந்து நடந்த வண்ணமிருந்தது என்பதே இத்தலத்து அனுமனின் ஆற்றலுக்குச் சான்றாக உள்ளது.

ராமர் விட்ட கொட்டாவியும் அனுமன் போட்ட‍ சொடுக்கும்

ராமர் வனவாசம் முடிந்து அயோத்திக்குத் திரும்பி அரசாட்சி செய்தபோது அனுமனும் அங்கேயே தங்கினார். ராமர் காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை அவருக்கு வேண்டிய அத்தனை சேவைகளையும் அவரது குறிப்பறிந்து அனுமன் செய்து வந்தார். ராமருடன் இருந்த சீதாதேவி பரதன் லட்சுமணன் சத்ருக்னன் ஆகியோரும் அனுமனின் சேவையை எண்ணி வியந்தனர். ஒரு நாள் ராமர் அனுமனின் சேவைகளைப் பாராட்டினார். அதைக் கவனித்த சீதையும் ராமரின் தம்பிகளும் அனுமனைப் போல் நாமும் ஒரு நாளாவது ராமருக்கு சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர். இந்த விருப்பத்தை ராமரிடம் தெரிவித்தனர். உங்களுக்குரிய சேவைகளை அனுமன் ஒருவரே செய்கிறார். நாளை ஒரு நாள் மட்டும் அந்தச் சேவைகளை நாங்கள் செய்யத் தங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டனர். அதற்கு ராமரும் அனுமதி வழங்கினார்.

ராமர் காலையில் கண் விழிப்பது முதல் இரவு உறங்கச் செல்வது வரையிலான சேவைகளைப் பட்டியலிட்டு அவற்றை யார் யார் செய்வது என்றும் தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர். அந்தப் பட்டியலை ராமபிரானிடம் காட்டி ஒப்புதல் பெறச் சென்றனர். ராமபிரான் அவர்களிடம் இதில் அனுமன் பெயரைக் குறிப்பிடவில்லையே என்றார். நாங்களே அனைத்துச் சேவைகளையும் செய்கிறோம் என்று பதிலளித்தார்கள். எல்லாச் சேவைகளையும் பட்டியலிட்டு விட்டீர்களா என்று கேட்டார் ராமர். அவர்களும் ஆம் என்றார்கள். ராமர் புன்னகைத்து இதில் ஏதாவது ஒரு சேவை விடுபட்டிருந்தால் அதை அனுமன் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு அப்படி ஒரு நிலை வராமால் நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்றார்கள். நடந்தவைகளை ராமர் அனுமனிடம் தெரிவித்து ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொள்ளுமாற் கேட்டுக் கொண்டார். மறுநாள் காலையில் ராமர் எழுந்தது முதல் செய்ய வேண்டிய சேவைகளை சீதையும் ராமரின் தம்பிகளும் செய்தனர். அவர்களுக்கு வாழ்வில் இரட்டிப்புச் சந்தோஷம். ஒன்று ராமபிரானின் அருகில் இருப்பது மற்றொன்று அவருக்கு சேவை செய்வது.

ராமரின் உத்தரவுப்படி அனுமன் அவரது அறை வாசலில் அமர்ந்து ராம நாமத்தை செபித்துக் கொண்டிருந்தார். ராம சேவைகள் நன்றாக நடந்து வருகிறதா என்றும் கவனித்தார். பகல் பொழுது எந்த சேவையும் குறைவின்றிப் போனது. இரவில் ராமர் படுக்கச் சென்றார். தாம்பூலத்துடன் சீதாப்பிராட்டி வந்தார். ராமபிரான் வாய் திறந்தார். திறந்த அவரது வாய் மூடவே இல்லை. பேச்சோ அசைவோ இல்லை. ராமருக்கு ஏதோ ஆகிவிட்டது என்று சீதை பயந்தாள். பரதன் லட்சுமணன் சத்ருக்னன் என்று எல்லோரையும் கூப்பிட்டாள். அவர்கள் ஓடி வந்தார்கள். அண்ணா அண்ணா என்று அழைத்தனர். அரண்மனை மருத்துவர் வரவழைக்கப்பட்டார். அவர் பரிசோதித்து விட்டு எந்த நோயும் இல்லை என்று கிளம்பிவிட்டார். அவர்களுக்கு அனுமனிடம் கேட்கலாமா என்று முதலில் தோன்றியது. பிறகு வசிஷ்டர் குலகுரு ஆயிற்றே. அவரிடம் கேட்கலாம் என்று அவரை அழைத்து வந்தனர். அவரும் தன் பங்குக்கு ஏதேதோ செய்து பார்த்தார். ராமர் அசையாமல் இருந்தார். சிறிது நேரம் தியானம் செய்த வசிஷ்டர் அனுமனால் தான் இதற்கு பதில் சொல்ல முடியும் என்றார். அனுமனிடம் அனைவரும் வந்து ராமரைப் பார்க்கும்படி சொல்ல துள்ளிக் குதித்து வந்த அனுமன் கை விரலால் ராமரன் வாய்க்கு நேராகச் சொடக்குப் போட்டதும் அவருடைய வாய் தானாகவே மூடிக் கொண்டது. இதைப் பார்த்த பிறகுதான் அனைவருக்கும் நிம்மதி பிறந்தது. ராமர் பேச ஆரம்பித்தார். எனக்குக் கொட்டாவி வந்தால் அனுமன் தான் சொடக்குப் போடுவார். உங்களுக்கு இது தெரியவில்லை என்றார். அனைவரும் தலை குனிந்தனர். பக்தி சேவையில் அனுமனுக்கு நிகர் அனுமனே என்பதை புரிந்துகொண்ட அவர்கள் அனுமனை மனதார பாராட்டினர்.

ராமாயணத்தில் ராமர் மீது அனுமன் கொண்ட பக்தியை உலகிற்க்கு எடுத்துக் காட்ட ராமர் செய்த திருவிளையாடல்

சுந்தரகாண்டம்

ராமாயணத்தை எழுதி முடித்த வால்மீகி முனிவர் ஒவ்வொரு காண்டத்திற்கும் ஒவ்வொரு பெயர் சூட்டினார். அப்போது சுந்தர காண்டத்திற்கு அனுமன் என்று பெயரை சூட்டினார். அதற்கு அனுமன் தன் பெயரை சூட்ட வேண்டாம் என்று உறுதியாக சொல்லிவிட்டார். வால்மீகி முனிவர் தனது சமயோசிதத்தால் சுந்தர காண்டம் என்று பெயர் சூட்டினார். அனுமன் அருமை என்று பாராட்டி இது நம் பெயர் இல்லையே என்று அங்கிருந்து கிளம்பி தன் அன்னை அஞ்சனா தேவியை பார்க்கச் சென்றார். தன் மகன் அனுமனின் வரவால் மகிழ்ச்சி அடைந்த அஞ்சனை வா சுந்தரா வா என்று அழைத்தாள். அனுமானுக்கு தூக்கி வாரி போட்டது. தாயே தாங்கள் என்னை என்ன பெயர் சொல்லி அழைத்தீர்கள் என்று கேட்டார். அதற்கு அஞ்சனா தேவி உனது உனது பால்ய பருவத்து பெயர் சுந்தரன் தானை மறந்து விட்டாயா என்று சொல்லி பலகாரம் செய்ய செல்கிறேன் என்று உள்ளே சென்று விட்டார். தன் பெயரை வால்மீகி எனக்கே தெரியாமல் வைத்துவிட்டாரே என்று அப்போது தான் அனுமானுக்கு புரிந்தது.

சுந்தரகாண்டம் படிப்பவர்கள் எண்ணற்ற பலன்களை அடைவார்கள் என்று பல மகான்கள் அருளியுள்ளார்கள்.

சாப்பாட்டு ராமன் என்ற பெயர் எப்படி வந்தது?

இலங்கையில் போர் முடிந்த பின் ராமர் சீதை லட்சுமணன் சுக்ரீவன் விபீஷணன் மற்றும் வானரப்படைகள் அனைவரும் அயோத்திக்குத் திரும்பிக் கொண்டிருக்கையில் அயோத்திக்கு செல்லு முன்பாக பரதவாஜ முனிவரை தரிசிக்க ராமர் விரும்பினார். ஆனால் பதினான்கு ஆண்டுகள் முடிந்த உடனேயே ராமர் அயோத்திக்கு திரும்பி வராவிட்டால் தான் தீயில் விழுந்து மாண்டு விடுவதாக பரதன் ராமரிடம் சொல்லி இருந்தான். இதனை ராமர் நினைத்துப் பார்த்தார். பரதன் சொன்னதை செய்யக்கூடியவன் என ராமர் நன்கு அறிவார். பதினான்கு வருடங்களுக்கு முன்பு வனவாசத்தை பரதவாஜ முனிவரிடம் ஆசிர்வாதம் பெற்ற பின் ராமர் கிளம்பினார் அதன் காரணமாக மீண்டும் பரதவாஜ முனிவரிடம் ஆசி பெற்று அயோத்தி திரும்பி செல்ல ராமர் முடிவு செய்தார்.

பரத்வாஜ முனிவர் ராமர் சீதையையும் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்து வரவேற்றார். இன்று இரவு இங்கே தங்கி நடக்கும் உணவு உண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ராமரால் முனிவரின் வேண்டுகோளை நிராகரிக்க முடியவில்லை. ஆனால் அதே நேரம் தன் வருகை தாமதமானால் தம்பி உயிர் துறப்பான் என்றும் அஞ்சினார். ஆகவே அனுமனை அழைத்தார். எனக்காக நீ பரதனிடம் சென்று நான் அனைவருடனும் வந்து கொண்டிருப்பதை சொல்லி விட்டுவா என்று கேட்டுக் கொண்டார். ராமரின் உத்தரவை நிறைவேற்ற அங்கிருந்து விரைவாக சென்ற அனுமன் திரும்பி வருவார் என்று பரதவாஜ முனிவர் எண்ணவில்லை. அதனால் வந்திருக்கும் அனைவருக்கும் சாப்பிட இலை ஏற்பாடு செய்த பரதவாஜ முனிவர் அனுமனுக்கு தனியாக உணவு சாப்பிட இலை ஏற்பாடு செய்யவில்லை. அனைவரும் சாப்பிட ஆரம்பிக்கும் நேரம் சரியாக அனுமன் வந்து விட்டார். இதனைக் கண்ட ராமர் தனது இலையின் மேல்பக்கம் அனுமன் சாப்பிடட்டும் என்று சொல்லி தனக்கு எதிர்பக்கம் அனுமனை அமரச் செய்தார். அனுமன் காய் பழங்களைத் தான் விரும்பி உண்பார் என ராமருக்குத் தெரியும். ஆகவே பரிமாறுபவர்களிடம் தனது இலையின் மேல்பக்கத்தில் காய் பழங்களை பரிமாரச் சொன்னார். அரிசி சாதம் மற்ற உணவு வகைகளைத் தன் பக்கம் வைக்கச் சொன்னார். இருவரும் ஒரே இலையில் சாப்பிட்டு முடித்தார்கள். தான் உடனடியாகப் போகாவிட்டால் பரதனின் உயிர் சென்றுவிடும் என்று தெரிந்தும் பரதனிடம் தான் வந்து கொண்டிருப்பதாக அனுமனை தூது போகச் சொல்லி விட்டு பரதவாஜ முனிவரின் விருந்தில் ராமர் கலந்து கொண்டது. மேலும் தனது இலையில் அனுமனுக்கு பழங்கள் காய்களிகளை மட்டும் வைக்கச் சொல்லி தான் சாப்பாட்டை சாப்பிட்டதாலும் ராமர் சாப்பாட்டு ராமர் ஆனார். அதுவே காலபோக்கில் சாப்பாட்டில் விருப்பம் உடையவர்களை இப்படிப் பெயரிட்டு அழைப்பது வழக்கமாகிவிட்டது.

மந்திரம்

ராமர் தனது அயோத்தி மக்களுக்கு இறைவனின் மீதான பக்குவம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள எண்ணினார். அனுமனை நன்றாக புரிந்து வைத்திருந்த ராமர் அவரை வரவழைத்தார். அபூர்வமான மந்திரம் ஒன்றை அனுமனுக்கு உபதேசித்தார். இது மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் எல்லாருக்கும் சொல்லி விடாதே பக்குவம் உள்ளவர்களுக்கு மட்டுமே இதை உபதேசிக்க வேண்டும். ஆகையால் இதை மனதிற்குள் உருவேற்று பக்குவம் இல்லாதவர்களுக்கு இதனை சொல்லாதே என்றார். மறு நாள் ஏதோ பறை ஒலிக்கும் சத்தம் கேட்டு உப்பரிகைக்கு சென்று வீதியை பார்த்த ராமர் திடுக்கிட்டார். காரணம் அங்கே ராமர் ரகசியமாய் உபதேசித்த மந்திரத்தை பறை அறிவித்து வீதி வீதியாய் சொல்லிக் கொண்டிருந்தார் அனுமன். ராமர் அனுமனை வரவழைத்து என்ன காரியம் செய்கிறாய் பக்குவம் உள்ளோருக்கு சொல்ல வேண்டிய மந்திரத்தை பறை அறிவித்து சொல்கிறாயே என்றார். அமைதியாக ராமரை நமஸ்கரித்து அடியேன் பக்குவம் உள்ளோருக்கு மட்டுமே உபதேசம் செய்திருக்கிறேன் தங்கள் உத்தரவை மீறவேயில்லை. வேண்டுமானால் அடியேன் அறிவிப்பை கேட்டவர்களில் சிலரை அழைத்து தாங்களே விசாரிக்கலாம் என்றார் அனுமன். சிலரை வரவழைத்து அனுமன் சொன்னது உங்களுக்கு ஏதாவது புரிந்ததா? எனக் கேட்டார் ராமர்.

ராமர் கேட்ட கேள்வி ஒன்றுதான் ஆனால் பதில்கள் பலவிதமாக வந்தன. புரியவில்லை என்று சிலர் கூறினார்கள். அனுமன் ஏதோ மனம்போன போக்கில் உளறிக் கொண்டு சென்றார் என்று சிலர் கூறினார்கள். இன்னும் சிலரோ அனுமன் பேசியது புரியாவிட்டாலும் நகைச்சுவையாக இருந்தது என்று சிலர் கூறினார்கள். இவ்வாறு பலரும் பலவிதமாக கூற பக்குவமான ஞானவான்கள் சிலர் மட்டும் அனுமன் உபதேசித்தது சாதாரண மந்திரமா பிறவிப் பிணியையே தீர்க்கக் கூடிய மந்திரமாயிற்றே என்று சொல்லி மெய் சிலிர்த்தார்கள். மக்களின் பக்குவத்தை ராமர் புரிந்து கொண்டார்.

விதை ஒன்று தான் நிலத்திற்கு தகுந்தாற் போல் தானே விளைகிறது. நிலம் நன்றாக இருந்தால் கூட அவ்வப்போது நீர் உரம் இட்டு பத்திரமாக பாதுகாத்தால் தானே நன்றாக விளைச்சல் காணும். அதுபோல குரு உபதேசிக்கும் மந்திரத்தை எல்லாரும் பெற்றுக் கொண்டாலும் அது பக்குவப்பட்டோரின் உள்ளங்களில் மட்டுமே பதிந்து வெளிப்படத் துவங்குகிறது.

அனுமனை பிடித்த சனீஸ்வரர்

ராமர் ராவணனை அழிக்க வானர சேனைகளுடன் இலங்கை செல்வதற்காக கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார். இந்த பணியில் சுக்ரீவன் அங்கதன் அனுமன் மற்றும் வானர சேனைகளும் ஈடுபட்டிருந்தன. அனுமனும் பாறைகளை பெயர்த்தெடுத்து அவற்றின் மீது ஜெய் ஸ்ரீராம் என்று செதுக்கி கடலில் எறிந்து கொண்டிருந்தார். அப்போது அங்கே சனீஸ்வர பகவான் தோன்றி ராமரை வணங்கி அனுமனுக்கு ஏழரைச் சனி பிடிக்கும் காலம் தொடங்குகிறது. என்னை தவறாக எண்ணாதீர்கள். என் கடமையை செய்ய அனுமதி தாருங்கள் என்று வேண்டினார். எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அது போல் உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். முடிந்தால் அனுமனை பிடித்து பாருங்கள் என்றார் ராமர். உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி அனுமனே நான் சனீஸ்வரன் இப்போது உனக்கு ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. உன்னை பிடித்து ஆட்டிப்படைக்க உன் உடலில் ஓர் இடம் கொடு என்றார்.
சனீஸ்வரா ராவணனின் சிறையில் இருக்கும் சீதையை மீட்க நாங்கள் இலங்கை நோக்கி செல்ல இருக்கிறோம். அதற்காகத்தான் இந்த சேதுபால பணியை ராம சேவையாக ஏற்று தொண்டாற்றி கொண்டிருக்கிறோம். இந்த பணி முடிந்ததும் நானே தங்களிடம் வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமே தாங்கள் வியாபித்து என்னை ஆட்கொள்ளலாம். அனுமனே காலதேவன் நிர்ணயித்த கால அளவை நான் மீற முடியாது நீயும் மீறக்கூடாது. உன்னை நான் பிடிக்கும் நேரம் நெருங்கிவிட்டது. உடனடியாக சொல் உன் உடலின் எந்த பாகத்தில் நான் அமரலாம் என்று கேட்டான்.

ராம வேலையில் என் கைகள் ஈடுபட்டுள்ளன. அதனால் அங்கே இடம் தர முடியாது. என் கால்களில் உங்களுக்கு இடம் தந்தால் அது உங்களுக்கு நான் தரும் அவமரியாதையாகும். எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம். எனவே நீங்கள் என் தலை மீது அமர்ந்து தங்கள் கடமையைச் செய்யுங்கள் என்று சனிஸ்வரரை தலை வணங்கி நின்றார் அனுமன். அவரின் தலை மீது அமர்ந்து கொண்டார் சனீஸ்வரன். இதுவரை சிறிய சிறிய பாறைகளை தூக்கி வந்த அனுமன் சனீஸ்வரன் தன் தலை மீது அமர்ந்த பின்பு மிகப்பெரிய பாறைகளை பெயர்த்து எடுத்து தலை மீது வைத்துக்கொண்டு கடலை நோக்கி நடந்து பாறைகளை கடலில் வீசினார். பெரிய பெரிய பாறைகளின் பாரத்தை அனுமனுக்கு பதிலாக அவர் தலை மீது அமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்க வேண்டியதாயிற்று. அதனால் சனீஸ்வரனுக்கே கொஞ்சம் பயம் வந்துவிட்டது. தனக்கே ஏழரைச் சனி பிடித்துவிட்டதா என்று சிந்தித்தார். அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல் அவரது தலையில் இருந்து கீழே குதித்தார். சனீஸ்வரா ஏழரை ஆண்டுகள் என்னை பிடிக்க வேண்டிய தாங்கள் ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டீர்கள் என்று கேட்டார் அனுமன். அதற்கு சனீஸ்வரன் உன்னை ஒரு சில விநாடிகள் பிடித்ததால் நானும் பாறைகளை சுமந்து சேது பாலப்பணியில் ஈடுபட்டு புண்ணியம் பெற்றேன். சிவனின் அம்சம் தாங்கள். முந்தைய யுகத்தில் தங்களை நான் பிடிக்க முயன்று வெற்றி பெற்றேன். இப்போது தோல்வி அடைந்து விட்டேன் என்றார் சனீஸ்வரன். அதற்கு அனுமன் இல்லை இல்லை இப்போதும் தாங்களே வென்றீர்கள். ஏழரை ஆண்டுகளுக்குப் பதில் ஏழரை விநாடிகளாவது என்னை பிடித்துவிட்டீர்கள் என்றார் அனுமன். அதைக்கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன் அனுமனே உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள் என்றார். ராம நாமத்தை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்பவர்களை உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்களே காத்தருள வேண்டும் என வரம் கேட்டார் அனுமன். சனி பகவானும் அந்த வரத்தை தந்து அருளினார். ராமநாமம் சொல்லி அனுமனை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் துன்பத்தில் இருந்த நம்மை காத்துக் கொள்ளலாம்.

ராமருடன் அனுமன் புரிந்த போர்

ராமர் ராவண வதமெல்லாம் முடிந்து அயோத்தி திரும்பினார். ராமருக்கு பட்டாபிஷேகமும் விமரிசையாக நடைபெற்றது. யாகம் ஒன்றை செய்ய வசிஷ்டர் விஸ்வாமித்திரர் போன்ற பல மகரிஷிகள் முன்னிலையில் யாகம் ஒன்றை செய்ய முடிவு செய்த ராமர் அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆணையிட்டார். அயோத்தி நகருக்கு வெளியே ஒரு பரந்து விரிந்த இடம் தேர்வு செய்யப்பட்டு யாகம் விமரிசையாக துவங்கியது. அப்போது ராமனின் ஆளுகைக்கு உட்பட்ட தேசம் ஒன்றை ஆண்டு வந்த சகுந்தன் என்கிற அரசன் வந்தான். யாகம் ஒன்று மிகப் பெரிய ரிஷிகளை கொண்டு நடத்தப்பட்டு வருவதை பார்த்து வியந்தவன் உள்ளே சென்று அவர்களிடம் ஆசி பெற தீர்மானித்தான். ஆனால் வேட்டையாடி விட்டு திரும்பிக் கொண்டிருந்த காரணத்தால் அப்படியே யாகசாலைக்குள் செல்ல விருப்பமின்றி வெளியே நின்றபடி உள்ள இருந்த ரிஷிகளை பார்த்து வசிஷ்டாதி முனிவர்களுக்கு என் வணக்கங்கள் என்று கூறி விட்டுச் சென்றான். இதை நாரதர் கவனித்துவிட்டார். நேராக விஸ்வாமித்திரரிடம் சென்று விஸ்வாமித்ர மகாமுனிவரே ராமனின் ஆளுகைக்குட்பட்ட ஒரு நாட்டின் சிற்றரசன் சகுந்தன். அவன் இந்த யாகசாலை முன்பு நின்று வசிஷ்டாதி முனிவர் யாவருக்கும் என் வணக்கங்கள் என்று கூறி விட்டுப் போகிறான். வசிஷ்டரைப் போன்று தாங்களும் ராமருக்குக் குருதானே? தாங்களும் தானே முக்கியப் பொறுப்பேற்று இந்த யாகத்தை நடத்துகிறீர்கள்? தங்கள் பெயரையும் சொல்லிச் சகுந்தன் வணக்கத்தைத் தெரிவித்திருக்க வேண்டாமா? வேண்டுமென்றே விஷமத்தனமாகத் தங்களை இந்தச் சிற்றரசன் அவமானப்படுத்தியிருப்பது எனக்கு வேதனையாக இருக்கிறது என்று தன் கலகத்தை ஆரம்பித்தார். இதனைக் கேட்ட விஸ்வாமித்திரர் கோபம் கொண்டார். என்ன ஆணவம் அவனுக்கு அவனை இப்போதே என்று சபிக்க எத்தனித்தார். உடனே இதனை தடுத்த நாரதர் குறுக்கிட்டு விஸ்வாமித்திரரே சற்றுபொறுங்கள். சகுந்தனை சபித்து தங்கள் தவவலிமையை ஏன் குறைத்துக் கொள்கிறீர்கள் ராமனை அழைத்து சகுந்தனை தண்டிக்கும் பொறுப்பை அவரிடம் விட்டுவிடுங்கள் என்றார். நாரதரின் கருத்தை ஏற்றுக் கொண்டார் விஸ்வாமித்திரர்.

ராமனை தன்னை வந்து சந்திக்கும்படி பணித்தார். இராமனும் விஸ்வாமித்திரரை வந்து சந்தித்தார். நடந்தவற்றை அவரிடம் விளக்கிய விஸ்வாமித்திரர் உன் குருவை அவமதித்தவனுக்கு என்ன தண்டனை தரப்போகிறாய் என்று கேட்டார். நீங்கள் என்ன சொன்னாலும் அதை நிறைவேற்ற தயாராக இருக்கிறேன் என்றார் ராமர். இன்று மாலை சூரியன் மறைவதற்குள் சகுந்தனின் தலை என் காலடியில் கிடக்கவேண்டும் என்கிறார் விஸ்வாமித்திரர். சகுந்தனை தேடி புறப்பட்டார் ராமர். நாரதர் உடனே சகுந்தனிடம் ஓடிச்சென்று நடந்தவற்றை சொல்லி உன்னை தண்டிக்க ராமரிடம் சொல்லியிருக்கிறார் விஸ்வாமித்தரர். உன் தலையை துண்டிக்க ராமர் வந்து கொண்டிருக்கிறார் என்றார். இதனை கேட்டு திடுக்கிட்ட சகுந்தன் ராமரை எதிர்க்க என்னால் முடியாது ஆகையால் என் தலையை நீங்களே துண்டித்து ராமரிடம் கொடுத்து விடுங்கள் என்று உடைவாளை நாரதர் கைகளில் கொடுத்தான். இதனை கேட்ட நாரதர் உன் மீது எந்த தவறும் இல்லை எனும் போது நீ ஏன் வீணாக உயிர்த்தியாகம் செய்யவேண்டும்? நீ மாண்டுவிட்டால் உன் மனைவி மக்களுக்கு குடிகளுக்கு யார் இருக்கிறார்கள் என்றார். அதற்கு சகுந்தன் இதிலிருந்து தப்பிக்க நீங்கள் தான் ஒரு வழி சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டான். உனது நாட்டின் எல்லையில் இருக்கும் கானகத்தில் உள்ள மலைப் பகுதியில் தான் அனுமனின் தாய் அஞ்சனா தேவி வசிக்கிறாள். அவளிடம் சென்று அவரனடைந்து விடு. அவள் ஒருவளால் தான் உன்னை காப்பாற்ற முடியும் என்றார். சகுந்தனும் உடனே அஞ்சனா தேவி வசிக்கும் கானகத்திற்கு சென்று அவளை தேடினான். நேரம் கடந்து சென்று கொண்டிருந்தது. அஞ்சனா தேவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் தீ மூட்டி அஞ்சனா தேவி சரணம் என்று கூறியபடி அதில் குதித்து உயிர்த் தியாக செய்ய முயன்றான் சகுந்தன். அப்போது அஞ்சனாதேவி அவன் முன் வந்து எதற்காக என்னை தேடிக்கொண்டிருந்தாய்? தற்போது உயிரையும் அதற்காக தியாகம் செய்ய துணிந்து விட்டாய் என்று கேட்டாள். அதற்கு சகுந்தன் எனக்கு அடைக்கலம் கொடுங்கள் அது உங்களால் மட்டும் தான் இப்போது முடியும் என்றான். அதற்கு அந்தனாதேவி என்ன விபரம் என்று சொல் என்று கேட்டாள். எனக்கு அடைக்கலம் கொடுப்பதாக முதலில் வாக்கு கொடுங்கள் அதன் பிறகு சொல்கிறேன் என்று சகுந்தன் பிடிவாதமாக நிற்றான். வேறு வழியில்லாமல் அஞ்சனா தேவி உனக்கு அபயமளிக்கிறேன் கவலைப்படாதே இப்போது விவரத்தை சொல் என்றாள்.

ராமர் என்னுடன் யுத்தம் செய்து தனது தலையை எடுக்க வந்து கொண்டிருக்கிறார் என்று நடந்தவைகள் அனைத்தையும் விவரமாக சொன்னான் சகுந்தன். அனைத்தையும் கேட்ட அஞ்சனா தேவி திடுக்கிட்டாள். இருப்பினும் கொடுத்த வாக்கின்படி சகுந்தனை காப்பது தன் கடமை என்பதால் அனுமனை தன் முன் வரும்படி நினைத்தாள். தாய் அஞ்சனாதேவி நினைத்த அடுத்த நொடி அனுமன் அங்கே தோன்றினான். என்னை அழைத்த காரணத்தை சொல்லுங்கள் தங்கள் கட்டளைக்கு காத்திருக்கிறேன் என்றார் அனுமன். அஞ்சனா தேவி அனைத்தையும் சொல்லி என்னிடம் சரணடைந்தவனை காப்பாற்ற வேண்டியது உன்கடமை என்று கூறி சகுந்தனை ராமனின் அஸ்திரத்திடமிருந்து காக்கும் பொறுப்பை அனுமனிடம் ஒப்படைத்தாள் அஞ்சனாதேவி. இக்கட்டான சூழ்நிலை தனக்கு ஏற்பட்டதை எண்ணி வருந்தினான் அனுமன். இருப்பினும் தாய் சொல்லை காப்பாற்ற வேண்டியது தன் கடமே என்று எண்ணிய அனுமன் உயிரினும் மேலான தனது ராமரையே எதிர்க்க துணிந்தான். தனது வாலால் ஒரு பெரிய கோட்டையை எழுப்பி அதனுன் சகுந்தனை அமரச் செய்து செய்து அதன் மேல் தான் உட்கார்ந்து கொண்டார் அனுமன். சகுந்தனை தேடி அந்தப் பகுதிக்கு வந்த ராமர் அவனை கண்டுபிடிக்க இயலாமல் சகுந்தனின் தலையை கொய்து வாரும் அஸ்திரத்தில் மந்திரத்தை செபித்து எய்தினார் அம்பை எய்தினார். ராமர் எய்த அஸ்திரம் மீண்டும் அவரது காலடியிலேயே வந்து வீழ்ந்தன. சக்தி மிக்க ராம பாணத்தை எய்தார் கூட தோற்று விட்டது. ராம பாணமும் திரும்பி அவரது காலடியில் விழுந்தது. ராமருக்கு ஒன்றும் புரியவில்லை. ராம பாணம் தோற்றதாக சரித்திரமேயில்லையே என்ன காரணம் என்று புரியாமல் யோசித்த படி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த நாரதர் ராமா உனது எதிர்பக்கம் உற்றுக் கவனி காரணத்தை நீயே அறிவாய் என்றார். ராமர் எதிர் பக்கம் உற்று கவனித்தார்.

ராமரின் காதில் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் என்று ராம நாமம் ஒலிப்பது கேட்டது. இது அனுமனின் குரலாயிற்றே அவன் ஒருவனால் தான் இத்தனை பக்தியுடனும் தீர்க்க்கத்துடனும் ராம நாமத்தை கூற முடியும் என்று தீர்மானித்தார். ராமா நீ நினைப்பது சரிதான். அனுமன் அங்கே இராம நாமம் ஜபித்து கொண்டிருக்கிறான். உன்னை விட உன் நாமத்திற்கு சக்தி அதிகம். உன் நாமத்தை அனுமன் இதயப்பூர்வமாக செபித்துக் கொண்டிருக்கும்போது அவனைமீறி அவன் காவல் காத்துக்கொண்டிருக்கும் சகுந்தனை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது ராமபாணம் மட்டுமல்ல பிரம்மாஸ்திரம் கூட இதன் முன் பலிக்காது என்றார். இதற்குள் சினம் தணிந்த விஸ்வாமித்திரர் தன்னால் ஒரு நிரபராதியின் உயிர் போய் விடக்கூடாதே என்று அங்கு ஓடி வந்தார். ராமா நிறுத்து நிறுத்து சகுந்தனை ஒன்றும் செய்துவிடாதே என்றார். அதற்கு ராமர் குருநாதா என்னை மன்னிக்க வேண்டும். நீங்கள் சொன்னதை நான் இப்போது நிறைவேற்றா விட்டார் நான் வாக்கு தவறினான் ஆவேன். அதனால் உங்களின் கட்டளைப்படி சகுந்தனின் தலையை சூரிய அஸ்தமனத்திற்குள் தங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன் என்றார். தான் போட்ட முடிச்சை தானே அவிழ்க்க விரும்பிய நாரதர் சகுந்தனை வெளியே வரும்படி அழைத்து விஸ்வாமித்திரரின் பாதங்களில் அவன் தலைபடும் படி வீழ்ந்து வணங்கச் சொன்னார். இப்போது ராமரிடம் திரும்பிய நாரதர் ராமா விஸ்வாமித்திரரிடம் நீ கொடுத்த வாக்குப் படி இப்போது சகுந்தனின் தலை அவரது பாதத்தில் வீழ்ந்து கிடக்கிறது உன் வாக்கு பொய்க்கவில்லை. உனது ராம மந்திரத்தின் பெருமையை உலகிற்கு காட்டுவதற்காகவே இந்த லீலையை செய்ததாக நாரதர் கூறினார்.

ராவணன் கேட்ட தட்சணை

ராமர் சேது பாலத்தை கட்டும் பணியை துவக்கி வைக்க சிவ பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் வேண்டியனவற்றை தயார் செய்யுங்கள் என்று பணித்தார். ராமனின் விருப்பமறிந்த ஜாம்பவான் இத்தகைய சேதுவை துவக்கி சிவ பூஜை செய்து வைக்க மிகச்சிறந்த பண்டிதர் அவசியம் என்றுரைத்தார். அது போல் பண்டிதர்கள் யாராவது அருகே உள்ளனரா என்ற ராமனின் கேள்விக்கு இந்த சிவ பூஜையை செய்வதில் சிறந்த பண்டிதன் என்றால் அது ராவணன் ஒருவனே என்று தயக்கத்துடன் பதிலளித்தார் ஜாம்பவான். பதிலைக் கேட்ட ராமனின் பிறகென்ன நமது வேண்டுகோளுடன் அனுமனை அனுப்புங்கள். இப்பூஜையை சிறப்புற நடத்தி தர அப்பண்டிதரையே வேண்டி வரவழைத்து வாருங்கள். விரோதியின் தேசத்தை அடையும் வழிக்கு அவனை வைத்தே பூஜையா? இது நடக்குமா? சுக்ரீவனும் அவனின் சேனைகளும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

ராமனின் விருப்பமறிந்த அனுமன் இமைப்பொழுதில் இலங்கை அரண்மனையில் நின்றார். ராட்சசர்கள் அனுமனை சூழ்ந்தார்கள். ராட்சசர்களிடம் அனுமன் பேச ஆரம்பித்தார். நான் உங்களுடன் சண்டையிட வரவில்லை. நான் சிவ பூஜை செய்து வைக்க உத்தமமான சிவ பக்தன் ராவணனை நாடி வந்துள்ளேன். தன் முன்னால் நிற்கும் அனுமனின் கோரிக்கையை கேட்டு ராவணனின் சபையினர்கள் வியந்தார்கள். ராவணன் ஆச்சரியத்தோடு பார்த்தான் அனுமனை. சபையில் உள்ளவர்கள் இது ராமரின் சூழ்ச்சி என்றார்கள். அதற்கு அனுமன் சூழ்ச்சியால் தங்களை வெல்ல இயலுமா? தயவு கூர்ந்து எங்கள் வேண்டுகோளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றார் அனுமன். அச்சமும் ஆவேசமும் திகைப்பும் கூடி எழுந்து நின்று அனுமனை நோக்கி கூச்சலிட்டவர்களை கையமரச்செய்த ராவணன் இந்த வேள்வியை நடத்தித் தர ஒப்புக் கொண்டு ராமர் இருக்குமிடத்திற்கு வந்தான் சிவ பக்தனான ராவணன்.

ராமருக்கு பூஜை நடத்தி தர வந்த ராவணன் ராமரைப் பார்த்து சங்கு சக்கரங்கள் மட்டும் இவரது கரங்களில் இருந்தால் விஷ்ணுவாகத்தான் இவர் தோன்றுவான் என ராவணன் எண்ணினான். பூஜை ஏற்பாட்டில் ஏதேனும் குறை இருந்தால் கூறுங்கள் என்றார் ராமர் அதற்கு ராவணன் தசரத மைந்தா பூஜைக்கான ஏற்பாடுகள் நேர்த்தியாக உள்ளது. ஆனால் திருமணம் ஆனவன் தனது துணைவியில்லாமல் செய்யும் எந்தக் காரியத்தையும் சாஸ்திரங்கள் அங்கீகரிப்பதில்லை அதனால் இந்த பூஜை செய்தும் உபயோகம் இல்லை என்று பதிலளித்தான் ராவணன். தாங்கள் தான் வேள்வியை சிறிதும் குறைவின்றி நடத்தி தர வேண்டும் என்றார் ராமர். சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்த ராவணன் ராமரிடம் ஒரு நிபந்தனை விதித்தான். பூஜைக்காக சீதையை சிறிது நேரம் அழைத்து வருகிறேன். பூஜை முடியும் வரை உங்கள் இருவருக்கும் இடையே எந்த பேச்சுவார்த்தையும் கூடாது மேலும் பூஜை முடிந்த மறுகணமே சீதையை அழைத்து சென்று விடுவேன் என்றான். நிபந்தனையை ஏற்றுக் கொண்டார் ராமர் இப்பூஜையை நடத்திக் கொடுத்தற்காக தட்சணையை தயவு கூர்ந்து தாங்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று கைக்கூப்பிய வண்ணம் பண்டிதரான ராவணனிடம் கேட்டார் ராமர். அதற்கு ராவணன் மெதுவான குரலில் ராமனுக்கு மட்டுமே கேட்கும் படி பதில் அளித்தான். என்னை பண்டிதராய் மதித்து சிவ பூஜை செய்ததற்கு நன்றி மேலும் சிவ பூஜைக்கு நான் தட்சணை வாங்குவதில்லை. தட்சணை தராததால் பலன் கிட்டாது என்று நீ எண்ணக்கூடும். யுத்தத்தில் ஒருவேளை நான் தோல்வியுற்று என் உயிர் பிரிய நேர்ந்தால் அத்தருணத்தில் நீ என் அருகில் இருக்க வேண்டும். இது மட்டும் தான் நான் எதிர்பார்க்கும் தட்சணை என்றான் சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்த ராவணன். ராமரும் சம்மதிக்க சிவ பூஜை சிறப்பாக நடைபெற்றது. ராவணனின் எண்ணப்படி அவன் உயிர் பிரிந்திடும் சமயத்தில் போர்க்களத்தில் ராவணனின் அருகிலிருந்து ராமர் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் அருகிலிருந்து ஆசிர்வதி்த்தார். மன்னிக்க முடியாத சீதை அபகரணத்திற்காக வதம் செய்யப்பட்ட ராவணனுக்கு அவனுடைய உயர்ந்த வேத பண்டிதனுக்கான குரு தட்சிணை அவன் மரணத்தின் போது கிட்டியது.

சீதையின் ஆசிர்வாதம் பெற்ற ஆலமரம்

ராமர் வன வாசம் செய்த போது பித்ருக்களுக்கான சிரார்த்த தினம் வந்தது. உணவு தயாரிக்க உணவுப் பொருட்களை எடுக்க லட்சுமணர் காட்டிற்குள் சென்றான். லட்சுமணன் வருவதற்கு வெகு நேரமானது. ராமர் லட்சுமணனைத் தேடி காட்டிற்குள் கிளம்பினார். சிரார்த்த காலம் நெருங்கி விட்டது சீதை தவித்தாள். சிரார்த்தகாலம் தாண்டி விட்டால் பித்ருக்கள் சபிப்பார்களே என்று வருந்தினாள். அருகில் கிடைத்த சில பழங்களை பறித்து அக்கினியில் வேக வைத்தாள். அதைப் பிசைந்து பிண்டம் தயாரித்தாள். அப்போது அவள் முன்பு தேஜோ மயமாக பிதுர்க்கள் தோன்றினர். சீதை பிண்டத்தை எங்களுக்கு சமர்ப்பிக்கலாம். மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறோம் என்றார்கள். உங்கள் வம்சத்தினர் சமர்ப்பிக்க வேண்டியதை நான் செய்யலாமா என்று சீதை தயங்கினாள் நின்றாள். சிரார்த்த காலம் தவறி அசுர காலம் வந்து விடும். எனவே சாட்சி வைத்துக் கொண்டு கொடு தவறில்லை என்றார்கள் பித்ருக்கள். சரி என்று சீதையும் அங்கிருந்த பல்குனிநதி ஒரு பசு துளசிச்செடி மற்றும் ஆலமரம் ஆகியவற்றை சாட்சியாக வைத்துக்கொண்டு பிதுர்க்களுக்கு பிண்டம் தருகிறேன். என் கணவரிடம் இந்த நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டு பிண்டம் கொடுத்தாள். பிதுர்க்கள் பிண்டத்தை மகிழ்ச்சியோடு ஏற்று மறைந்தார்கள். ராம லட்சுமணர்கள் சிறிது நேரத்தில் தானியங்களோடு வந்தார்கள். சீதை சீக்கிரம் சமையல் செய்’ என்றார் ராமர். சீதை நடந்ததைக் கூறினாள். ராமர் திகைப்புடன் சாஸ்திரமாக சிரார்த்தம் நடத்தும் எங்கள் முன் வராத பிதுர்க்கள் உன் முன்தோன்றி நேரில் பிண்டம் வாங்கினர் என்பது கற்பனை’ என்றார். நான் உண்மையைத் தான் சொல்கிறேன் பல்குனி நதி பசு துளசிச்செடி மற்றும் ஆலமரம் ஆகியவற்றை சாட்சி வைத்துக் கொண்டேன். அவற்றிடம் விசாரித்துக் கொள்ளுங்கள் என்றாள் சீதை.

ராமர் சீதை சொல்வது போல் பிதுர்க்கள் நேரில் வந்து பிண்டம் வாங்கினாரா என்று கேட்டார். ஆலமரம் தவிர மற்றவர்கள் எங்களுக்கு தெரியாது என்று சொல்லி விட்டன. ராமர் வருவதற்குள் சீதை சிரார்த்த காரியத்தை முடித்ததற்குத் தாங்கள் உடந்தையாக இருந்தோம் என்று ராமர் கோபிப்பாரோ என அவைகள் பயந்து தெரியாது என்று சொல்லி விட்டன. ராமரும் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு சமையலை முடி நாங்கள் நீராடி வருகிறோம் என்று கூறிச்சென்றார். சீதை தன்னைக் கணவர் நம்பாததை எண்ணி துக்கத்தோடு சமையல் செய்தாள். ராமர் நீராடி வந்து சங்கல்பம் செய்து கொண்டு பிதுர்க்களை சிரார்த்த சாமான்களில் ஆவாஹனம் செய்யும் போது வானிலிருந்து அசரீரி ஒலித்தது. ராமா ஏன் இரண்டாம் முறையாக திதி கொடுக்க எங்களை அழைக்கிறாய்? சீதை கையால் பிண்டம் வாங்கி நாங்கள் திருப்தியுள்ளோம் என்றது அசரீரி. அதன் பின் ராமர் சமாதானமானார். அதன் பின் சாட்சி சொல்லாதவர்களை பார்த்த சீதை பல்குனி நதியே உன்னிடம் எந்தக் காலத்தும் வெள்ளம் தோன்றாது. தண்ணீர் வற்றியே காணப்படும் என்றாள். பசுவே உன் முகத்தில் வாசம் செய்த நான் இன்று முதல் உன் பின்பக்கத்துக்குப் போய் விடுவேன் என்றாள். இந்த கயாவில் எங்கும் துளசி வளராது போகட்டும் என்ற சீதை சாட்சி சொல்லாதவர்களுக்கு சாபமிட்டாள். ஆலமரம் தனக்கு சாட்சியாக நின்றதற்கு மகிழ்ந்து யுக யுகாந்திரங்கள் நீடுடி வாழ வாழ்த்தி யுக முடிவின் போது பிரளயத்தின் போது உனது இலையிலேயே பரமாத்மா குழந்தை வடிவில் தோன்றுவார். அவரது திருவடிகளில் உலகங்கள் அனைத்தும் லயமாகும் என்று அருளினாள். மேலும் கயாவில் சிரார்த்தம் செய்ய வருபவர்கள் ஆலமரத்தின் அடியில் பிண்டங்களை அர்ப்பணம் செய்வார்கள் அப்போது தான் கயாவில் சிரார்த்தம் செய்வதன் பலன் கிடைக்கும் என்றும் ஆசிர்வதித்தாள். இந்த சாபத்தின் விளைவால்தான் கயாவில் துளசி வளருவதே கிடையாது. மேலும் பல்குனி நதியும் வற்றிபோய் காட்சியளிக்கிறது.

ஓடக்காரன்

ராமர் லட்சுமணனை தனது யாகத்தை பாதுகாக்க அழைத்துச் சென்ற விஸ்வாமித்திரர் பல இடங்களுக்கு ராமரை அழைத்துச் சென்றார். கல்லாக இருந்த அகலிகையை ராமரின் பாதத்தில் படச்செய்து அவளுக்கு விமோசனம் அளித்தார். ஒரு நதியை கடந்து அக்கரைக்கு செல்ல வேண்டி ராமர் லட்சுமணர் விஸ்வாமித்திரர் மூவரும் நதிக்கரையில் இருக்கும் ஓடக்காரனிடம் சென்றார்கள். ஓடக்காரனிடம் சென்ற விஸ்வாமித்ரர் நாங்கள் அக்கறைக்கு போக வேண்டும். நீ ஓடம் செலுத்துபவனா? இந்த ஓடத்தில் இப்போது நாம் அக்கரைக்கு செல்லலாமா? இந்த ஓடத்தில் எத்தனை பேர் செல்லலாம் எனக் கேட்டார். அதற்கு ஓடக்காரன் நான் பரம்பரையாக ஓடம் செலுத்துபவன். உங்களை நான் அழைத்துச் செல்கிறேன். இந்த ஓடத்தில் அறுபது நபர்கள் போகலாம் என்றான். நாங்கள் மூவர் தான் வந்து இருக்கிறோம். அப்பயென்றால் மீதம் 57 நபர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டுமா என்று கேட்டார் விஸ்வாமித்திரர். அதற்கு ஓடக்காரன் நீங்கள் இந்த உலகத்தை காக்கும் தெய்வம். உங்களை நான் ஒரு போதும் காக்க வைக்கமாட்டேன். ஓடத்தில் ஏறுங்கள் வாருங்கள் போகலாம் என்றான். விசுவாமித்திரர் ஓடத்தில் ஏறினார்.

ராமர் ஓடத்தில் ஏறும் பொழுது ஓடக்காரன் பச்சை பச்சை ஓடத்தில் ஏறாதே என்றான் இதனை கேட்ட ராமர் தூக்கிய காலை கீழே வைத்துவிட்டார். லட்சுமணருக்கு பெரும் கோபம் உண்டானது. லட்சுமணனின் கோபத்தை கண்ட ராமர் லட்சுமணனிடம் பேச ஆரம்பித்தார். அவன் பரம்பரையாக ஓடம் செலுத்துபவன். பச்சையாக இருக்கும் என்னைப் பச்சை என்று அழைத்ததால் ஒன்றும் பிரச்சணை இல்லை. இந்த ஓடம் அவனுக்கு சொந்தமானது. அவனுக்கு சொந்தமான ஓடத்தில் கால் வைக்காதே என்று சொல்லுவதற்கு அவனுக்கு உரிமை உண்டு என்று லட்சுமணனை சமாதானப் படுத்தினார். பின்பு ஓடக்காரனை பார்த்து நான் ஏன் ஓடத்தில் ஏறக்கூடாது என்று கேட்டார். அதற்கு ஓடக்காரன் என் மேல் கோபத்தில் இருக்கும் உங்களது தம்பியை கூட நான் அழைத்துச் செல்வேன் ஆனால் உங்களை அழைத்துச் செல்ல மாட்டேன் என்றான். அதற்கு லட்சுமணன் நாங்கள் அயோத்தியை ஆளும் தசரத சக்ரவர்த்தியின் மக்கள் ராமர் லட்சுமணன் என்றான். இதைக்கேட்டவுடன் ஓடக்காரன் கண்ணீர் மல்க வணங்கி என்னை மன்னித்தருள வேண்டும். தாங்கள் பிறந்த அன்று எங்களுக்கு உணவும் ஆடையும் வழங்கினார்கள். தங்களுக்கு ஒரு கோடி வணக்கங்களை நான் செலுத்துகிறேன். ஆனால் தாங்கள் மட்டும் ஓடத்தில் கால் வைக்கவேண்டாம் என்றான்.

ராமர் ஏன் நான் ஏறக்கூடாது சரியான காரணத்தை சொல் தவறு இருந்தால் நான் திருத்திக் கொள்கிறேன் என்றார். அதற்கு ஓடக்காரம் நாங்கள் இளமையில் ஒரு பாறையில் சருக்கி விளையாடுவோம். அந்தக் கல்லில் தங்கள் கால் பட்டவுடனே அது பெண்ணாக மாறிவிட்டது. இந்த ஓடத்திலும் தாங்கள் கால் வைத்தவுடன் இந்த ஓடம் பெண்ணாக மாறிவிட்டால் என்னுடைய பிழைப்புக்கு நான் என்ன செய்வது அதனால் உங்களை ஏற்றிக் கொள்ள மறுக்கிறேன் என்றான். இதனைக் கண்டு சிரித்த ராமர் நான் கால் வைத்தால் ஓடம் பெண்ணாகாது என்றார். அதற்கு ஓடக்காரன் தாங்கள் சொல்வது உண்மை என்றால் உங்களை ஏற்றிக் கொள்கிறன் ஆனால் தாங்கள் நதியில் இறங்கி உங்களின் கால்களை சுத்தமாக கழுவிவிட்டு ஏறுங்கள் என்றான். ராமர் நதியில் இறங்கிக் கால் கழுவச் சென்றார். அப்போது ஓடக்காரன் கால் கழுவும் பணியை எனக்கு கொடுங்கள். நான் சுத்தமாய் தேய்த்து விடுகிறேன் என்று கூறி ராமருடைய பாதங்களை செம்பு தாம்பாளத்தில் வைத்து ராம ராம என்று அபிஷேகம் செய்தான். காட்டு மலர்களை கொண்டு அர்ச்சனை செய்தான். உங்களின் பாத பூஜைக்காக மகரிஷிகள் பல காலம் தவம் இருக்க தவம் செய்யாத இந்த அடியேனுக்கு பாத பூஜை கிடைத்தது என்று துதி பாடி வழிபாடு செய்தான். உங்களது பாதத்தை சுத்தம் செய்த இந்த நீரை கீழே விட்டால் நீர் பட்ட கற்களெல்லாம் பெண்களாகி விடும். அதனால் என் மனமாகிய கல் பெண்ணாகட்டும் என்று கூறி தலையில் ஊற்றிக்கொண்டான்.

ராமர் அவனது செய்கையை லட்சுமணனிடம் காட்டி என்னுடைய பாத பூஜைக்காக தான் இவன் இவ்வாறு செய்திருக்கிறான் என்றார். பிறகு மூவரும் ஓடத்தில் ஏறினார்கள். அவன் பகவானுடைய கீதத்தைச் சொல்லியபடியே ஓடத்தை செலுத்தினான். மூவரும் ஓடத்தை விட்டு இறங்கிய பின் ராமர் தன் கையிலிருந்த நவரத்தின மோதிரத்தை பரிசாக தந்தார். மீனவன் அதை வாங்க மறுத்தவிட்டான். நீங்களும் ஓடக்காரன் நானும் ஓடக்காரன். ஒரு தொழிலாளி மற்றொரு தொழிலாளியிடம் எதுவும் வாங்க கூடாது. நான் இந்த நதிக்கு ஓடம் விடுபவன். தாங்கள் பிறவிப் பெருங்கடலுக்கு திருவடி ஆகிய ஓடத்தை விடுபவர் என்று கூறி ராமரின் முன்பாக வீழ்ந்து வணங்கினான். ஓடக்காரனின் அன்பைக் கண்டு ராமர் உள்ளம் உருகினார். பிறகு மூவரும் மிதிலையை நோக்கி புறப்பட்டார்கள்.