தேவாரம் பாடல்கள் முன்னுரை

தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் னைுதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த ஏழு திருமுறைகளை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் பாடல்கள் பாடியுள்ளார்கள். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார் இருவரும் கிபி 7ஆம் நூற்றாண்டிலும், சுந்தரமூர்த்தி நாயனார் கிபி 8ஆம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது. 7ஆம் நூற்றாண்டு தமிழ்நாட்டிலே பல்லவர் ஆட்சி பலம் பெற்றிருந்த காலமாகும். மிகவும் செல்வாக்குடனிருந்த பௌத்தம் சமணம் ஆகிய மதங்களுக்கெதிராகச் சைவ சமயம் மலர்ச்சி பெற திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் போன்றோர் தோன்றி ஊர்ரூராகச் சென்று சமயப்பிரசாரம் செய்தனர். சென்ற இடங்களிலெல்லாம் இருந்த கோயில்கள் மீது தேவாரங்களைப் பாடினர்.

திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் தேவாரங்களைப் பாடத்தொடங்கினார். இவர் தனது சொந்த ஊரான சீர்காழியிலுள்ள தோணியப்பர் மீது தோடுடைய செவியன் என்று தொடங்கும் அவரது முதற் பதிகத்தைப் பாடினார். தெய்வங்கள் மீது பாடப்பட்ட பாமாலைகள் ஆரம் என்பதால் தேவாரம் என்று பெயர்பெற்றது. 10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும் வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை நம்பியாண்டார் நம்பி என்பவர் பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுத்தார். தேவார ஆசிரியர் மூவருள் இயலிசைத் தமிழாகிய திருப்பதிகங்களை முதன்முதல் அருளிச் செய்தவர் திருஞானசம்பந்தர் ஆகையால் அவர் அருளிய திருப்பதிகங்கள் முதல் மூன்று திருமுறைகளாகவும் அவரது நண்பர் திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்கள் நான்காம் திருமுறை மற்றும் ஐந்தாம் திருமுறை ஆறாம்திருமுறை என மூன்று திருமுறைகளாகவும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருப்பதிகங்கள் ஏழாம் திருமுறையாகவும் தொகுக்கப்பட்டன.

பெரியபுராணத்தில் மூவரின் வரலாற்றை சேக்கிழார் கூறிவரும் போது இன்ன பதிகம் இந்த ஊர் எல்லையில் இறைவன் திருமுன் வலம் வரும்போது பாடப்பெற்றது என்று கூறுகிறார். அதன்படி தேவாரம் பாடப்பெற்ற காலமுறைப்படி ஒரு தொகுப்பு இருந்தது என்று உறுதி செய்யலாம். சோழர் வரலாற்றில் அக்குறிப்பு உள்ளது. அதற்கு பாடியவாறு என்று பெயர். மூர்த்தி தலம் திர்த்தம் என்பவற்றை முறையே கண்டு வழிபடும் விருப்புடைய சிவநேசச்செல்வர்கள் தாம் வழிபட விரும்பிய ஒவ்வொரு தலத்திற்கும் அமைந்த தேவாரத் திருப்பதிகங்கள் முழுவதையும் நாள்தோறும் முறையே பாராயணம் செய்தற்கு ஏற்ற வண்ணம் முறைப்படுத்தப்பெற்றதே இத்தலமுறைப் பகுப்பாகும். இப்பகுப்பு தில்லை சிதம்பரம் பெருங்கோயிலை முதன்மைத் திருத்தலமாகக் கொண்டு அமைந்திருக்கின்றது.

இது சிவத்தலங்களெல்லாவற்றிற்கும் முதலில் வைத்துப் போற்றத்தகும் சிறப்புடைய திருத்தலம் என்ற நோக்கத்துடன் தில்லைப் பெருங்கோயிலைப் பற்றி மூவரும் பாடிய திருப்பாடல் குறிப்புகளால் நன்கு உணரலாம். தேவார பாடல்கள் மொத்தம் 38000 ஆனால் நமக்கு கிடைத்தது 8227 பாடல்கள் மட்டுமே. தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் 274. முதலாம் திருமுறை திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் 1469. இரண்டாம் திருமுறை திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் 1,331. மூன்றாம் திருமுறை திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் 1358. நான்காம் திருமுறை திருநாவுக்கரசு நாயனார் 1070. ஐந்தாம் திருமுறை திருநாவுக்கரசு நாயனார் 1015 ஆறாம் திருமுறை திருநாவுக்கரசு நாயனார் 981. ஏழாம் திருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் 1026 = மொத்தம் – 8227.

2 thoughts on “தேவாரம் பாடல்கள் முன்னுரை

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.