பாரத யுத்தத்தில் கொல்லப்பட்ட மிகமிக நல்லவன்

பதினெட்டு நாட்கள் நடைபெற்றது குருக்ஷேத்திரப் போர். பதினான்காவது நாளில் இன்று அதிக எண்ணிக்கையில் கௌரவர்களைக் கொன்று குவிப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டபின் பாண்டவர்கள் பாசறையை விட்டு வெளியே வந்தனர். அவர்களை வீரத் திலகமிட்டு வழியனுப்பி வைத்தாள் திரோபதி அவரவர் தேரில் அமர்ந்து போர்க்களம் நோக்கிப் புறப்பட்டார்கள். அந்தத் தருணத்தில் திரோபதியிடமிருந்து அந்த விசித்திரமான வினா கிருஷ்ணனை நோக்கிப் புறப்பட்டது கிருஷ்ணா எல்லாம் தெரிந்த எம்பெருமானே இந்த யுத்தம் முழுவதையும் நீயே நடத்துகிறாய் என்பதை நான் அறிவேன். கொல்பவனும் நீ. கொல்லப்படுபவனும் நீ. வெல்பவனும் நீ. வெல்லப்படுபவனும் நீ. சொல். இன்று யார் யாரால் கொல்லப்படுவார்கள் என்று கேட்டாள். திரோபதியின் இந்தக் கேள்வியைக் கேட்டதும் பாண்டவர்கள் அனைவரும் கிருஷ்ணரின் முகத்தை ஆவலோடு நோக்கினார்கள். இன்றைய போரின் நிலவரத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் ஆர்வம் அனைவரிடமும் இருந்தது. எதனாலும் எவ்விதத்திலும் பாதிக்கப்படாத கிருஷ்ணன் நகைத்தவாறே சொன்னான். திரோபதி உனக்கு எல்லாவற்றையும் முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் உள்ளது. சொல்கிறேன் கேள். இன்று இரு தரப்பினராகப் பிரிந்து போரிடும் அனைவரிலும் மிகமிக நல்லவன் ஒருவன் கொல்லப்படுவான். இப்போது உலகில் வாழ்பவர்களில் அவனைவிட நல்லவர்கள் யாருமில்லை. அவன் இறக்கவிருப்பதை எண்ணி என் மனம் இப்போதே வருந்துகிறது என்றார். இந்த பதிலால் கடும் அதிர்ச்சியடைந்த அர்ஜூனன், பீமன், நகுலன், சகாதேவன் நால்வரும் தங்கள் அண்ணனான யுதிஷ்டிரரைக் கவலையோடு பார்த்தார்கள். யுதிஷ்டிரரரை விட நல்லவர்கள் யாரிருக்க முடியும் என்று அனைவரும் எண்ணினர்.

திரோபதி கண்களில் நீர்வழிய யுதிஷ்டிரரைப் பார்த்தாள். இதயத்தைப் பிடித்துக்கொண்டு அப்படியே தரையில் அமர்ந்தாள். பாண்டவர்கள் ஐவரும் போர் முடிந்து நல்லபடியாகத் திரும்ப வேண்டும் இன்று மாலை ஐவரும் திரும்புவார்களா இல்லை நால்வர் மட்டும் தானா என்று கவலையுடன் இருந்தாள். கிருஷ்ணன் தன் பதிலால் ஏற்பட்ட பின்விளைவு எதையும் பொருட்படுத்தாமல் போர்க்களம் நோக்கிப் சென்றார். யுதிஷ்டிரர் தேர் மற்றும் அனைவரின் தேர்களுக்கும் அடுத்து அடுத்து நகர்ந்தது.

போர்க்களத்தில் கையில் கதாயுதத்தோடு களத்தில் இறங்கிய பீமன் தன்னுடன் போர்த் தொடுக்க முன்வந்து நின்ற விகர்ணனைப் பார்த்துக் கடுமையாக எச்சரித்தான். விகர்ணா என்முன் வராதே தள்ளிப் போ. நான் உன்னைக் கொல்வதற்காகக் களத்தில் இறங்கவில்லை. உன் இரு அண்ணன்களான துரியோதனன் துச்சாதனன் இருவரையும் வதம் செய்ய வந்திருக்கிறேன். அவர்கள் இருவரின் குருதியையும் கலந்து கூந்தலில் பூசிக் குளிப்பேன் எனச் சபதம் செய்திருக்கிறாள் திரோபதி. மேகம் போல் அடர்ந்த அவள் கூந்தல் முடியப்படாமல் இருப்பதை எத்தனை நாட்கள் நான் பார்த்துக் கொண்டிருப்பது இன்று என் கையில் உள்ள கதையால் உன் அண்ணன்கள் இருவரின் கதை முடியவேண்டும். திரோபதி தன் கூந்தலை முடியவேண்டும். குறுக்கே வராதே வழிவிடு என்றான். பீமனின் வீராவேசப் பேச்சைக் கேட்டு விகர்ணன் பீமா என்னை வென்றுவிட்டு அவர்களை உன்னால் வெல்ல இயலாதா என்னை வெல்ல முடியாதென்ற பயமா என்றார். கௌரவர்கள் நூறு பேரில் நீ மட்டும் தப்பிப் பிறந்தவன். அன்று கௌரவர் சபையில் திரோபதியை உன் அண்ணன் துச்சாதனன் துகிலுரிய எத்தனித்தானே அப்போது மெய்ஞ்ஞானியான பீஷ்மர் கூட வாய்மூடி மௌனியாக இருந்தார். அதர்மம் தலைவிரித்தாடிய அந்த சந்தர்ப்பத்தில் தர்மத்தின் பக்கம் நின்று குரல்கொடுத்தவன் நீ மட்டும்தான். அநியாயம் நடக்கிறது நிறுத்துங்கள் என்று அறைகூவியவன் நீ ஒருவன்தான். உன்னுடைய குரல் உன் அண்ணன் துரியோதனனுக்கு பிடிக்காது என்பதையும் நீ யோசிக்கவில்லை. அறத்தின் பக்கமே நின்றது உன் மனம். உன்மேல் கொண்ட அன்பால் உன்னைக் கொல்ல என் கதாயுதம் விரும்பவில்லை நான் உன்னைக் கொல்ல முயன்றாலும் கூட என் கதாயுதம் என்னைத் தடுத்துவிடுமோ எனத்தான் அஞ்சுகிறேன். உன்மேல் அன்பும் மரியாதையும் உண்டு. தப்பிப் பிழைத்துப் போ என்றார் பீமன்.

விகர்ணா நீ எங்களுடன் சேர்ந்துவிடு. பாண்டவர்கள் உன்னையும் சேர்த்து ஆறுபேராக இருப்போம். உனக்கும் அரசு வழங்கி முடி சூட்டுகிறோம். திரௌபதியின் மானத்தைக் காக்கக் குரல்கொடுத்த உன் தலையில் முடிசூட்டிப் பார்க்க என் மனம் ஆசைப்படுகிறது. என் விருப்பத்தை நிறைவேற்று என்றார் பீமன். பீமா நான் அற வழியில் நிற்பவன் என்று சொன்னாயே அது உண்மைதான். அன்று பெண்ணின் மானம் சூறையாடப்படும் நிலையில் அதன் பொருட்டு எதிர்த்துக் குரல் கொடுப்பது அறம். எனவே எதிர்த்துக் குரல் கொடுத்தேன். இன்று யார் தரப்பில் நியாயம் இருந்தாலும் நான் சார்ந்திருக்கும் என் அண்ணண் தரப்புக்காக நான் போரிடுவதே நியாயம். வெறும் மகுட ஆசைக்காக என் அண்ணனை விட்டு விலகி விடுவேன் என்றா நினைத்தாய் என்னைத் தாண்டித்தான் நீ துரியோதனனை அடைய முடியும். இயலுமானால் என்னை வெற்றி பெற்று துரியோதனனிடம் செல் என்றான். விகர்ணனின் பேச்சு பீமனுக்குக் கோபத்தை விளைவித்தது. தேரிலிருந்து குதித்துப் பாய்ந்து சென்று விகர்ணனை தனது கதையால் தாக்கினான் பீமன். உக்கிரமான போர் நெடுநேரம் நடைபெற்றது. ஒரு மாபெரும் வீரனுடன் போர் புரிகிறோம் என்பதை பீமனின் மனம் உணர்ந்தது. மேலும் அறத்தின் வழியே வாழ்பவர்களை வெல்வது சுலபமல்ல என்பதையும் அவன் மனம் புரிந்துகொண்டது. மனமே இல்லாமல் தன் கதாயுதத்தால் ஓங்கி விகர்ணனை அறைந்தான் பீமன். தர்மத்தின் வழியிலேயே நின்ற அவன் முகத்தில் புன்முறுவல் படர்வதையும் சிரித்துக் கொண்டே அவன் மரணத்தை வரவேற்பதையும் பார்த்து வியந்தது பீமன் மனம். விகர்ணனின் உயிர்ப் பறவை விண்ணில் பறந்தபோது பீமன் உள்ளம் இனம் தெரியாத சோகத்தில் ஆழ்ந்தது. மாலை சூரியாஸ்தமனத்திற்குப் பிறகு யுத்தம் நிறுத்தப்பட்டது.

பாண்டவர்கள் பாசறைக்குத் திரும்பினார்கள். அனைவரிலும் நல்லவன் அன்று கொல்லப்படுவான் என்று கிருஷ்ணன் சொன்னானே பதற்றத்தோடு காத்திருந்த திரௌபதி யுதிஷ்டிரர் உள்ளிட்ட எல்லோரும் நலமாகத் திரும்பி வருவதைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். திரௌபதி கிருஷ்ணனிடம் கேட்டாள். அனைவரிலும் நல்லவன் இன்று மரணமடைவான் என்றாயே இறந்தது யார்? என் கணவர் ஐவரிலும் மூத்தவரைத் தானே உலகம் மிக நல்லவர் எனப் புகழ்கிறது. அவரின் நலத்திற்காக நான் இன்று முழுவதும் உன்னைப் பிரார்த்தித்தவாறே காலம் கழித்தேன். அவரை விடவும் நல்லவர்கள் உண்டா என்று கேட்டாள்.

திரௌபதி நல்லவர்களிடையே நல்லவனாக இருப்பதில் சிரமம் ஒன்றும் இல்லை. ஆனால் விகர்ணன் கெட்டவர்களிடையே நல்லவனாக இருந்தான். உன் மானத்தைக் காப்பதற்காக எதிரணியில் இருந்து குரல்கொடுத்தான். இப்போது தன் அண்ணன் கெட்டவனே ஆனாலும் தன் அண்ணனுக்காக உயிரையே கொடுத்திருக்கிறான். மகுட ஆசை கூட அவன் மனத்தை மாற்ற முடியவில்லை. தான் இறப்போம் என்று தெரிந்தே இறந்திருக்கிறான். தர்மம் எந்த அணியில் இருக்கிறதோ அந்த அணியில் தான் கிருஷ்ணர் இருப்பார் என்பதும் நான் இருக்கும் அணிதான் வெல்லும் என்பதும் அவன் அறிந்தவை தான். ஆனாலும் தன் உயிர் போவதை அவன் ஒரு பொருட்டாய்க் கருதவில்லை. தனது அண்ணனுக்காக உயிரை விடுவதே தனது தர்மம் எனக் கருதியிருக்கிறான். அவன் இருந்தவரை கௌரவர்கள் அத்தனை பேரையும் அந்த நல்லவனின் தர்மசக்தி கவசமாய்க் காத்திருந்தது. அவன் இருக்கும்வரை கௌரவர்களை அழிப்பது இயலாத செயல். இன்று பீமன் அந்த நல்லவனை வதம் செய்துவிட்டான். இனி கெட்டவர்களான மற்ற கௌரவர்களை அழிப்பது கடினமல்ல என்றார். இதற்கு யுதிஷ்டிரர் என்னை நல்லவன் என்கிறார்கள். அது உண்மையோ இல்லையோ விகர்ணன் என்னை விடவும் நல்லவன் என்பது மட்டும் உண்மை. இந்தப் பாழும் போரால் அந்த உத்தமனையும் கொல்ல நேர்ந்ததே என்று அனைவரும் அவனுக்காக வருத்தப்பட்டனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.