வனத்தில் ராமரை சந்தித்த முனிவர்கள் கூட்டம் ராமரை வணங்கி ராட்சசர்களிடம் தாங்கள் அனுபவித்த துன்பங்களை எடுத்துக் கூறினார்கள். தாங்கள் இங்கே தங்கியிருப்பதனால் எங்களுடைய தவங்களும் விரதங்களும் இடையூறு இன்றி இனி நடைபெறும் இது நாங்கள் செய்த பாக்கியம். பம்பை நதிக்கரையிலும் மந்தாகினி நதிக்கரையிலும் உள்ள முனிவர்களும் ரிஷிகளும் ராட்சசர்களின் கொடுமையினால் துன்பப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். அரசனுடைய கடமை குடிமக்களைக் காப்பாற்றுவதாகும். அதை செய்யாத அரசன் அதர்மம் செய்தவனாகின்றான். குடும்பங்களில் இருப்பவர்கள் அரசுக்கு வரி செலுத்துவது போல முனிவர்களும் ரிஷிகளும் செய்யும் தவத்தின் பலனில் நான்கில் ஒரு பங்கு அரசனுக்கு சேர்ந்து விடுகின்றது. நாங்கள் படுக் கஷ்டங்கள் சொல்ல முடியாத அளவு உள்ளது. நீ இந்திரனுக்கு சமமானவனாக இருக்கின்றாய் உன்னையே சரணடைகிறோம் எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று வருந்திக் கேட்டுக்கொண்டார்கள்.
ராமர் முனிவர்களைப் பார்த்து முனிவர்களே ஏன் வருந்துகின்றீர்கள்? நீங்கள் இட்ட கட்டளையை ஏற்று செய்ய நான் கடமைப்பட்டவன் ஆவேன். அயோத்தியில் என் தந்தை இட்ட கட்டளைக்காகவே வனத்திற்கு வந்தேன். என் தந்தையில் ஆணைப்படி நடக்கும்போது உங்களுக்கும் நன்மை செய்வது எனக்கு கிடைத்த பாக்கியமே. நான் வனத்தில் இருந்து கொண்டு ராட்சசர்களை அழித்து உங்களின் துன்பங்களை நீக்குவேன். தைரியமாக இருங்கள் என்று ராமர் கூறினார். முனிவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். ராமர் லட்சுமணன் சீதை மூவரும் சுதீட்சணர் என்ற ரிஷியின் ஆசிரமத்தை நோக்கி சென்றார்கள்.
ராமர் சுதீட்சணரின் ஆசிரமத்திற்குள் சென்று அவரை சந்தித்து அவருக்கு வணக்கம் செலுத்தி எனது பெயர் ராமன் தங்களை தரிசிக்க வேண்டி வந்துள்ளேன் தாங்கள் எங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்றார். அதற்கு சுதீட்சணர் தர்மத்தைக் காப்பவனே உன்னை நான் வரவேற்கிறேன். நீ இந்த ஆசிரமத்திற்குள் வந்ததால் இந்த ஆசிரமம் ஒளிபெற்று விளங்குகின்றது. நீயே இதற்கு எஜமான். உன் வரவுக்காகவே நான் காத்திருந்தேன். இல்லையென்றால் இதற்கு முன்பே எனது உடலை விட்டுவிட்டு மேலுலகம் சென்றிருப்பேன். நீ இராஜ்ஜியத்திலிருந்து வெளியே வந்து சித்திரக்கூடம் வந்திருப்பதை நான் கேள்விப்பட்டேன். நான் சம்பாதித்திருக்கும் புண்ணியம் அனைத்தும் உன்னுடையதாகும். நீயும் உனது மனைவியும் லட்சுமணனும் அதைப் பெற்றுக் கொண்டு தர்மத்தைக் காக்க வேண்டும் என்றார்.