ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 20

ராமருடைய பராக்ரமத்தை அறிந்திருந்த மாரீசன் ராவணனுடைய தீர்மானத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தான். சீதையை தூக்கிச் செல்வதிலேயே ராவணன் குறியாக இருக்கின்றான் என்பதை புரிந்து கொண்டான். விதி ராவணனை கயிறு கட்டி இழுக்கின்றது. ராவணன் தன் புத்தியை இழந்து விட்டான். இனி ராவணனின் அழிவை தடுக்க முடியாது என்று உணர ஆரம்பித்து ராவணனிடம் பேச ஆரம்பித்தான் மாரீசன். ராட்சச அரசரே நீங்கள் சொல்வதை கேட்டதும் எனக்கு எல்லையற்ற துக்கம் உண்டாகிவிட்டது. ஒருவரின் கருத்துக்கு ஆதரவான கருத்தை மற்றவர் சொல்லும் போது அதனை கேட்பவருக்கு இனிமையாக இருக்கும். ஆனால் எதிரான கருத்தை சொல்லும் போது அதனை கேட்க முன் வர மாட்டார்கள். ஆனாலும் உங்கள் கருத்துக்கு எதிரான கருத்துக்களை சொல்லி உங்களுக்கு நன்மையை சொல்ல விரும்புகின்றேன். உங்கள் கருத்துக்கு ஏற்ப இனிமையாக பேசி உங்களை திருப்தி செய்து உங்களை அபாயத்தில் தள்ளி விடுவதில் எனக்கு விருப்பம் இல்லை.

ராமரை பற்றி ஏற்கனவே நான் உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். உங்களிடம் சொல்லியவர்கள் ராமரை பற்றிய உண்மையை சரியாக சொல்லவில்லை. ராமரை பற்றி அறியாத அவர்களின் பேச்சை கேட்டு ஏமாந்து போகாதீர்கள். ராமர் உத்தம குணங்கள் நிறைந்த மாவீரன். அவருடைய கோபத்தை சம்பாதித்து இலங்கையின் அழிவுக்கு நீயே காரணமாகி விடாதே. நீ ராமரை பற்றி சொன்னதில் உண்மை எதுவும் இல்லை. தசரதர் ராமரிடம் குற்றம் கண்டு தண்டனை கொடுப்பதற்காக அவரை காட்டிற்கு அனுப்பவில்லை. ராமர் தனது தந்தை தாயிடம் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்காக காட்டிற்கு வனவாசம் செய்ய வந்திருக்கிறார். தனது ராஜ்யத்தையும் அதிலுள்ள சுகங்கள் அனைத்தையும் துறந்து காட்டில் யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் தவஸ்வியை போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தேவர்களில் முதன்மையானவன் இந்திரன் அது போல் இந்த மானிட உலகத்தில் முதன்மையானவர் ராமர். அவரின் மனைவியை நீ அபகரிக்க நினைக்கிறாய். சூரியனைப் போன்ற ராமரை ஏமாற்றி சூரியனுடைய ஒளியை போல் இருக்கும் சீதையை நீ திருட முடியாது. தந்திரமாக ஏதேனும் செய்து சீதையை நீ அபகரித்து சென்று அவளை தீண்டினால் நீ எரிந்து போவாய். ஒன்று ராமனின் அம்பால் அழிந்து போவாய். இல்லையென்றால் சீதையின் தொட்ட அடுத்த கணம் அழிந்து போவாய். உன்னுடைய சர்வ நாசத்துக்கும் நீயே வழி தேடிக்கொள்ளாதே.

ராமர் சிறு வயதில் யுத்தம் செய்யும் போதே நான் பார்த்திருக்கின்றேன். பல காலங்களுக்கு முன்பு என்னுடைய உடல் பலத்தின் மீது இருந்த அகங்காரத்தினால் முனிவர்கள் ரிஷிகள் செய்த வேள்விகளை தடுத்து அவர்களை கொன்று தின்று அழித்துக் கொண்டிருந்தேன். ஒரு முறை விஸ்வாமித்ரர் செய்த வேள்வியை தடுத்து அழிக்க சென்றிருந்தேன். விஸ்வாமித்ரர் தன் வேள்வியை காக்க தசரதரிடம் அனுமதி பெற்று ராமரை அழைத்து வந்திருந்தார். நான் வேள்வியை அழிக்க அங்கு சென்ற போது ராமர் விட்ட அம்பு என்னை அங்கிருந்து பல காததூரம் தள்ளி கொண்டு போய் கடற்கரையில் போட்டது. நீண்ட நேரம் சுயநினைவு இல்லாமல் இருந்தேன். மீண்டும் எழுந்து ராமரை கொல்லும் நோக்கத்தில் சென்றேன். ராமர் என்னை நோக்கி மூன்று அம்புகளை ஒரே நேரத்தில் விடுத்தார். அந்த மூன்று மகா பயங்கராமான அம்புகளிடமும் நான் பெரும் துன்பத்தை அனுபவித்தேன். எப்படியோ தப்பித்து நல்லொழுக்கம் கொண்டவனாக தவம் செய்து தவஸ்விகளை போல் தவவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்று மாரீசன் ராவணனிடம் தொடர்ந்து பேசினான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.