ராமர் சுதீட்சண முனிவரிடம் என் புண்ணியத்தை நானே தவம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது எனது குலதர்மம். தங்களுடைய ஆசிர்வாதத்தால் அவ்வாறே செய்வேன். காட்டிலிருந்து வனவாசம் செய்ய விரும்புகின்றேன். சரபங்கர் முனிவரின் வழிகாட்டுதலின் படி வனத்தில் தங்கி வாழ்வதற்கு ஏற்ற இடத்தை தங்களின் ஆலோசனைகள் மூலம் கேட்டுப் பெற வந்தேன் என்றார். சுதீட்சணர் முனிவரின் முகம் மலர்ந்தது. இந்த ஆசிரமத்தையே உனது இருப்பிடமாக வைத்துக்கொள்ளலாம். ரிஷிகள் பலர் இங்கே தபஸ்விகளாய் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். ரிஷிகளின் தவத்திற்கு இடையூராக கொடூரமான விலங்குகள் மிகவும் தொந்தரவு கொடுக்கின்றன. விலங்குகளின் தொந்தரவை தவிர்த்து இங்கு வேறு எந்த குறையும் இல்லை என்று கூறினார். சுதீட்சணர் முனிவர் சொன்ன வார்த்தையின் பொருளை புரிந்து கொண்ட ராமர் தன்னுடைய வில்லின் நாணில் சத்தத்தை எழுப்பி இந்த காட்டில் தொந்தரவு கொடுக்கும் விலங்குளை ஒழிப்பது எனது பணியாக ஏற்றுக்கொள்கிறேன். தாங்கள் தங்கியிருக்கும் இடத்திலேயே நாங்களும் தங்கினால் அது தங்களின் தவத்திற்கு இடையூராக இருக்கும். ஆகவே இக்காட்டில் தனியாக குடில் அமைத்து தங்கிக்கொள்ள அனுமதி தாருங்கள் என்று ராமர் கேட்டுக்கொண்டார்.
சுதீட்சணர் முனிவர் ராமரிடம் அருகில் இருக்கும் தண்டகாரணியத்து ரிஷிகள் அனைவரும் தவம் செய்து சித்தி அடைந்தவர்கள். அவர்களை பார்த்து ஆசி பெற்றுக்கொள்ளுங்கள். அங்கு மிக ரம்யமான மலர்களும் தடாகங்களும் பறவைகளும் விலங்குகளும் இருக்கின்றது. அங்கு நீங்கள் தங்குவதற்கு குடில் அமைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பமான போது இங்கு வந்து தங்கிக்கொள்ளுங்கள் என்று ஆசிர்வதித்தார். சுதீட்சணர் முனிவரை மூவரும் வலம் வந்து வணங்கி அவரிடம் விடைபெற்றுச் சென்றார்கள்.
சீதை ராமரிடம் தனக்கு ஒரு சந்தேகம் அதனை தீர்த்து வைக்குமாறு கேட்டுக்கொண்டாள். நாதரே நான் தங்களை எதிர்த்து பேசுவதாக தாங்கள் எண்ண வேண்டாம். எனக்கு தோன்றுவதை சொல்கிறேன். எது தருமம் எது கடமை என்று தங்களுக்கு நன்றாக தெரியும். மக்கள் ஆசையினால் மூன்று பெரும் பாவங்களை செய்வார்கள் என்று பெரியவர்கள் சொல்வார்கள். 1. பொய் பேசுவது 2. தனக்கு சொந்தம் இல்லாத பெண்ணை தீண்டுவது 3. நம்மை எதிர்த்து தீங்கு செய்யாதவர்களை துன்புறுத்துவது. இந்த மூன்றில் பொய் என்ற ஒன்று தங்களிடம் இல்லவே இல்லை. மாற்ற பெண்களை மனதளவில் கூட நினைக்க மாட்டீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இப்பொது நான் பயப்படுவது மூன்றாவது விஷயத்தை பற்றியது. காட்டில் இருக்கும் அசுரர்களை கொல்வதாக முனிவர்களுக்கு வாக்கு கொடுத்து விட்டீர்கள். தீயவர்களை அழிப்பதும் மக்களை காப்பதும் சத்ரிய தருமம் தான். ஆனால் இப்போது நாம் தபஸ்விகளாய் இக்காட்டில் தவம் செய்ய வந்திருக்கின்றோம். தபஸ்விகளாய் இருக்கும் நம்மை எதிர்க்காத ஒருவனை நாம் ஏன் கொல்ல வேண்டும். அரச பதவிகளில் இருப்பவர்களின் கடமை அது. அக்கடமையை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னுடைய சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் என்று கேட்டாள் சீதை.