ராமரைப்பற்றி மாரீசன் நீண்ட நேரம் பேசி ராவணனுக்கு புத்தி கூறினான். மாரீசன் பேசியது எதுவும் ராவணனுக்கு பிடிக்கவில்லை. ராவணன் பேச ஆரம்பித்தான். மாரீசா நீ சொல்வது எதுவும் சரியில்லை. நீ சொல்வதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ராட்சச அரசன் நான். இதனை நீ மனதில் வைத்துக் கொள். உன்னிடம் சீதை தூக்கிச் செல்லலாமா வேண்டாமா என்று உனது கருத்தை கேட்க நான் இங்கு வரவில்லை. நீண்ட யோசனைக்கு பிறகு சீதை தூக்கிச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டே இங்கு வந்திருக்கின்றேன். என் முடிவில் இனி மாற்றம் இல்லை. ஒரு பெண்ணின் சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டு ராஜ்யத்தை இழந்து ஊரில் இருந்து துரத்தப்பட்டவன் அந்த ராமன். ராட்சச அரசனன நான் இந்த சாதாரண மனிதனுடன் சமமாக நின்று யுத்தம் செய்ய மாட்டேன். சீதையை தூக்கி சென்று ராமனை அவமானப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன். இதற்கு நான் கேட்கும் உதவியை நீ செய்ய வேண்டும் என்று அரசனாக உனக்கு உத்தரவிடுகின்றேன். நீ என்னுடைய உத்தரவை செயல்படுத்த வேண்டும் இல்லை என்றால் உன்னை நான் இங்கு இப்போதே கொன்று விடுவேன் என்று ராவணன் சொல்லி முடித்தான்.
ராமனின் பகையை சம்பாதித்து விரைவில் நீ யமனிடம் செல்ல ஆசைப்படுகின்றாய். இலங்கை எரிந்து அழிந்து போவது. நீயும் உனது சகோதரர்கள் உட்பட உனது ராட்சச படைகள் அனைத்தும் ராமனால் அழிக்கப்படுவது இப்பொதே என் கண்களுக்கு தெரிகிறது. உன் உத்தரவை செயல் படுத்தாமல் உனது கையால் மரணிப்பதை விட ராமரின் கையால் நான் மரணமடைவது மேல் என்று எண்ணுகின்றேன். தண்டகாருண்யம் காட்டிற்கு செல்லலாம் வா என்று கிளம்பினான் மாரீசன். பழைய மாரீசனை கண்டுவிட்டேன் என்று ராவணன் மாரீசனை கட்டி அணைத்து செய்ய வேண்டிய காரியத்தை சொல்ல ஆரம்பித்தான் ராவணன். ஏற்கனவே சொன்னபடி மான் உருவம் எடுத்து நீ ராமரை தூரமான இடத்திற்கு அழைத்துச் செல். பின்பு லட்சுமணா காப்பாற்று என்று ராமரின் குரலில் கத்து. லட்சுமணன் சீதையை தனியாக விட்டு வருவான் அந்த நேரம் நான் சீதையை தூக்கிச்சென்று விடுவேன் என்று ராவணன் சொல்லி முடித்தான்.
தண்டகாரண்ய காட்டில் ராமனுடைய குடிலுக்கு அருகில் இருவரும் வந்து சேர்ந்தார்கள். குடிலின் தூரத்தில் நின்ற மாரீசனின் கையை பிடித்த ராவணன் அதோ பார் ராமனின் குடில் உள்ளது. என் திட்டப்படி அனைத்தையும் சிறப்பாக செய்து முடி என்று அனுப்பினான் ராவணன். மாரீசன் அழகிய பொன் மான் வேடத்திற்கு உருமாறினான். மானின் உடலில் ஒவ்வொரு அங்கமும் விசித்திர அழகில் வைர வைடூரியங்கள் ரத்ன கற்கள் பதித்த தங்க மான் போல் ஒளி வீசியது. மான் குடிலை சுற்றி சுற்றி வந்தது. மற்ற மான்கள் இதன் அருகில் வந்ததும் தன் இனம் இல்லை என்று சந்தேகத்துடன் விலகி சென்றது.
சீதை குடிலுக்கு அருகே பூக்களை பறித்துக்கொண்டிருந்தாள். மான் சீதைக்கு முன்பாக ஓடி துள்ளிக் குதித்தது. சீதை மானின் அழகை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த பூக்களுக்கு நடுவில் ஓடிய மான் காட்டிற்கே புது அழகு தந்தது. ராமரும் லட்சுமணனும் இந்த அழகை காண வேண்டும் என்று எண்ணிய சீதை ஓடி வாருங்கள் ஓடி வாருங்கள் இந்த அழகிய மானை பாருங்கள் என்று கத்த ஆரம்பித்தாள்.