ராமரை புகழ்ந்து பேசியும் தன்னை அவமானப்படுத்தியும் பேசிய சூர்ப்பனகையின் வார்த்தைகள் கரனின் உள்ளத்தில் சூலம் போல் பாய்ந்து கோபத்தை உண்டு பண்ணியது. சூர்ப்பனகையிடம் ஒரு அற்பனைக்கண்டு நீ இவ்வளவு பயப்படக்கூடாது. அவனை நான் சிறிது நேரத்தில் கொன்று விடுவேன். அவனின் ரத்தத்தை நீ குடிப்பாய். அது வரை காத்திரு என்று யுத்தத்திற்கு கிளம்பினான் கரன். கரனின் வார்த்தைகளால் மகிழ்ச்சி அடைந்த சூர்ப்பனகை நீ தனியாக போக வேண்டாம். உன்னால் முடிந்த வரை படைகளை திரட்டிக்கொண்டு போ என்று கரனிடம் கேட்டுக்கொண்டாள். கரனும் தன்னுடைய படைகள் அனைத்தையும் ஆயுதங்களுடன் போருக்கு செல்ல உத்தரவிட்டான். கரனின் படைத் தலைவனான தூஷணன் தலைமையில் அனைத்து படைகளும் கொடூர ஆயுதங்களுடன் காட்டிற்கு சென்றது. உற்சாகத்துடன் ஓடிய படைகளின் பின்னே கரன் சென்றான்.
ராமரை அழித்தே தீர வேண்டும் என்ற உற்சாகமாக கிளம்பிய ராட்சசர்கள் அனைவருக்கும் செல்லும் வழி எங்கும் அபசகுனங்கள் தென்பட்டது. குதிரைகள் காரணமில்லாமல் நிலை தடுமாறி விழுந்தது. சூரியனை சுற்றி கரிய வட்டம் தோன்றியது. அரசனின் தேரில் மாமிச பட்சியான கழுகு வந்து அமர்ந்து கூச்சல் போட்டது. நரிகள் ஊளையிட்டு பயங்கரமாக கத்தியது. பெரிய உடல் கொண்ட நாரைகள் வானத்தை மறைக்கும் அளவிற்கு கூட்டமாக சென்றது. மேலும் பல அபசகுனங்களை கண்ட ராட்சச படையினர் உற்சாகம் இழந்தனர். கரன் அனைவரையும் உற்சாகப்படுத்தினான். அபசகுனங்களை கவனிக்காதீர்கள். நாம் இதுவரையில் செய்த எந்த யுத்தத்திலும் தோற்றதில்லை. துஷ்டர்களாகிய அந்த மானிட பூச்சிகளை அழித்து விட்டு வெகு சீக்கிரம் நாம் திரும்பி விடுவோம் என்று கர்ஜனை செய்தான். பயத்திலிருந்த சேனை படைகள் மீண்டும் உற்சாகமடைந்து கூக்குரலிட்டு காட்டிற்குள் சென்றார்கள்.
ராமரும் லட்சுமணனும் ராட்சச படையின் கூக்குரலை கேட்டு யுத்தத்துக்கு தயாரானார்கள். ராமர் லட்சுமணனிடம் வருகின்ற ராட்சசர்கள் அனைவரும் இன்று அழிந்து போவது நிச்சயம். நீ சீதையை மலைக்குகையில் பாதுகாப்பாக வைத்துவிட்டு அவளுக்கு காவலாக இரு. வருகின்ற ராட்சச படைகளை நான் ஒருவனே பார்த்துக்கொள்கின்றேன் தற்போது எனக்கு துணையாக நீ தேவையில்லை. விரைவாக சீதையை அழைத்துச் செல் என்று கட்டளையிட்டார் ராமர். லட்சுமணன் சீதையை அழைத்துக்கொண்டு மலைக்குகைக்குள் சென்றான். ராமர் தனியாக யுத்தம் செய்வதை பார்க்க தேவர்களும் கந்தர்வர்களும் ஆகாயத்தில் காத்திருந்தார்கள். ராமர் ஒருவராக இருந்து இவ்வளவு பெரிய ராட்சச சேனையை எப்படி வெற்றி அடையப்போகிறார் என்று ரிஷிகளும் முனிவர்களும் கவலை அடைந்தார்கள். ராமர் வில்லின் அம்புடன் தயாராக காத்திருந்தார். ராட்சச படைகளின் சிம்ம நாதமும் பைரிகை நாதமும் கர்ஜனைகளும் காட்டை நிறப்பி இருந்தது. விலங்குகள் சத்தத்தில் அங்கும் இங்கும் சிதறி ஓடியது. ஆகாயத்தில் மேகக்கூட்டங்கள் சூழ்வது போல் ராமரை ராட்சச படைகள் சூழ்ந்து கொண்டது.