ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 31

ராமர் சிறிது நேரம் செயல்பட முடியாமல் தவித்தார். லட்சுமணா சீதையை ராட்சசர்கள் கொன்று தின்றிருப்பார்கள். சீதையை இழந்து விட்டேன். என்னை நம்பி வந்தவளை பாதுகாக்காமல் விட்டுவிட்டேன். என்னை போல் ஒரு பாவி உலகத்தில் இல்லை. இனி என் உயிர் எனக்கு வேண்டியதில்லை. வனத்திற்கு சீதையுடன் சென்றவன் ராட்சசர்களுக்கு சீதையை உணவாக கொடுத்து விட்டு தனியாக வந்திருக்கின்றான் என்று மக்கள் பேசுவார்கள். அவர்களுக்கு சமாதானம் சொல்ல என்னால் முடியாது. இனி அயோத்திக்கு தான் போக முடியாது. நீ அயோத்திக்கு சென்று நமது தாயார்களை பார்த்துக்கொள். பரதனிடம் அயோத்திக்கு இனி நீயே அரசன் என்று நான் உத்தரவிட்டதாக சொல்லிவிடு என்று அழது கொண்டே கூறினார்.

ராமருக்கு லட்சுமணன் தொடர்ந்து தைரியம் சொல்லிக் கொண்டே இருந்தான். மனநிலை தெளிவில்லாமல் தைரியம் இழந்தவர்கள் ஒரு செயலையும் செய்ய முடியாது. துக்கத்தை அடக்கிக் கொண்டு மனதை ஒரு நிலைப்படுத்திக் கொள்ளுங்கள். நாம் இந்த காடு மலை குகைகள் என்று அனைத்து திசைகளிலும் தேடுவோம். மகாவிஷ்ணு பலிச்சக்கரவர்த்தியை அடக்கி மூவுலகையும் அடைந்தது போல் நீங்களும் சீதையை நிச்சயம் அடைவீர்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தான். இருவரும் சீதையை தேடிக்கொண்டே இருந்தார்கள். அப்போது மான் கூட்டம் ஒன்றின் சகுனங்களை பார்த்த லட்சுமணன் தெற்கு திசை நோக்கி சென்று தேடலாம் வாருங்கள் என்று ராமரை அழைத்துச் சென்றான். வழியில் ஓரிடத்தில் பூக்கள் சிதறிக் கிடந்தது. பூக்களை கண்ட ராமர் இதோ நான் சீதைக்கு கொடுத்த பூக்கள் இங்கே சிதறிக்கிடக்கிறது என்று அழுதுகொண்டே சீதையை தேடி ஓட ஆரம்பித்தார். பூக்கள் இருக்கும் காட்டை சுற்றி தேடிப்பார்த்தார்கள். அங்கு ராட்சசனின் காலடித் தடங்களும் சீதையின் காலடித் தடங்களும் இருந்தன அருகில் சீதை அணிந்திருந்த மணிகள் சிதறிக் கிடந்தது. இதனை கண்ட ராமர் பார்த்தாயா லட்சுமணா சீதையை மிகவும் துன்புறுத்தி இருக்கிறான் ராட்சசன் என்று புலம்ப ஆரம்பித்தார்.

ராமரும் லட்சுமணனும் அந்த இடத்தை சுற்றி ஏதேனும் தடயங்கள் கிடைக்கின்றதா என்று பார்த்தார்கள். அருகில் தேரின் உடைந்த பாகங்களும் தேர் ஓட்டும் ராட்சச சாரதி ஒருவன் இறந்து கிடந்ததையும் கண்டார்கள். இரண்டு ராட்சசர்கள் சீதையை திண்பதற்காக சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள் பெரிய சண்டை ஒன்று இங்கு நடந்திருக்கின்றது. இந்த நேரத்தில் ஒரு தெய்வம் கூட சீதையை காப்பாற்ற வரவில்லை. இந்த கொடுமையான உலகத்தை என்னுடைய அஸ்திரங்களால் அழித்து விடுவதே சரியாக இருக்கும் நான் கற்ற அஸ்திரங்கள் பயன்படாமல் போகுமா பார்க்கலாம் என்று ராமர் லட்சுமணனிடம் புலம்பிக்கொண்டே கூறினார். லட்சுமணன் ராமரிடம் பேச ஆரம்பித்தான். உங்களுடைய பெரும் துயரத்தினால் உங்களுடைய இயற்கையான குணங்களை விட்டு விடாதீர்கள். ஒருவன் செய்த துஷ்ட செயலால் உலகத்தை வெறுக்கவோ கோபிக்கவோ தேவையில்லை. நம்முடைய எதிரி யார் என்று முதலில் தெரிந்து கொள்வோம். பிறகு செய்ய வேண்டியதை பற்றி யோசித்து செயல்படுவோம் என்று தைரியம் சொல்லிக்கொண்டே வந்தான். சிறிது தூரத்தில் பறவை ஒன்று சிறகு வெட்டப்பட்ட நிலையில் இரத்ததுடன் துடித்துக்கொண்டிருப்பதை கண்டார்கள்.

குறிப்பு:

ராமாயணம் புராணத்தில் ஆரண்ய காண்டம் பகுதியில் சீதையை இழந்த ராமர் புலம்பி அழுவதை படிக்கும் பலர் விஷ்ணுவின் அவதாரமாக இருக்கும் ராமர் ஏன் அழ வேண்டும். இறைவன் ஏன் துன்பப்படுகின்றார் என்று சந்தேகங்கள் கேட்பதுண்டு. அதற்கான பதில்

சீதை ராமரிடம் சரணடைந்திருப்பதை போல் இறைவனை சரணடைந்திருக்கும் பக்தன் சிறு தவறு செய்து இறைவனை சென்றடையும் பாதையை விட்டு வழி தவறிப் போனால் இறைவனின் திருவுள்ளம் துன்பப்படுகின்றது என்ற கருத்து இந்த இடத்தில் சித்தரிக்கப் பட்டிருக்கின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.