ராமர் விட்ட அம்பு மாரீசனை கொன்று விட்டது. மாரீசன் தன் குரலைப்போலவே எழுப்பிய சத்தத்தில் சீதை பயந்துவிடுவாளே என்று எண்ணிய ராமர் லட்சுமணன் அருகில் இருக்கின்றானே என்று தன்னை சமாதானம் செய்து கொண்டு அங்கிருந்து தன் குடிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
ராமரின் குரலைக் கேட்ட சீதை ராமருக்கு ஏதோ ஆபத்து நிகழ்ந்து விட்டது. ராமருக்கு உதவி தேவைப்படுகிறது என்று பதைபதைத்தாள். லட்சுமணனிடம் உனது அண்ணனின் அபயக் குரல் கேட்கிறது. உனக்கு கேட்கவில்லையா? நிற்காதே போ போ சீக்கிரம் ஓடிச் சென்று அண்ணனுக்கு உதவி செய் என்று கதற ஆரம்பித்தாள். ராமர் சீதைக்கு துணையாக இங்கேயே இரு. எச்சரிக்கையுடன் சீதையை பார்த்துக்கொள் என்ற அண்ணனின் ஆணையை ஏற்று லட்சுமணன் அசையாமல் நின்றான். சீதை மீண்டும் லட்சுமணனை பார்த்து கத்த ஆரம்பித்தாள். ராட்சசனிடம் உன் அண்ணன் அகப்பட்டு அபயக் குரலில் கதறுகிறார். ஒரே பாய்ச்சலில் சென்று அவரை நீ காப்பாற்ற வேண்டாமா? மரம் போல் அசையாமல் நின்கின்றாயே ஓடு ஓடு என்று விரட்டினாள். அப்போதும் அசையாமல் நின்றான் லட்சுமணன். சீதைக்கு லட்சுமணனின் மேல் கோபம் அதிகரித்தது. ராமரின் மேல் உள்ள அன்பும் ஆபத்தில் இருக்கும் ராமருக்கு உதவி செய்ய செல்லாமல் அசையாமல் நின்ற லட்சுமணனின் மேல் உள்ள கோபமும் என்ன பேசுகின்றோம் என்று தெரியாமல் தன் சுய புத்தியை இழந்த சீதை கோபத்தில் கத்த ஆரம்பித்தாள்.
சுமத்ரையின் மகனே நீ இப்போது ராமருக்கு எதிரியாகி விட்டாய். இவ்வளவு நாளும் நல்லவன் போல் வேடமணிந்து எங்களுடன் இருந்திருக்கிறாய். ராமரின் மரணத்திற்கான இவ்வளவு நாள் காத்திருந்தாயா? அவர் இறந்தால் அதன் பிறகு என்னை அடைந்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தாயா? துஷ்டனே ராமர் அபயக் குரலில் கதறி அழைத்தும் போகாமல் இங்கேயே நிற்கின்றாயே அண்ணனிடம் நீ காட்டிய அன்பெல்லாம் வெறும் நடிப்பா சூழ்ச்சிக்காரனே நயவஞ்சகனே என்று திட்டிக்கொண்டே தன் இரு கைகளாலும் தன்னையே அடித்துக் கொண்டு கதறி அழுதாள். லட்சுமணன் தன் கண்ணில் நீர் தனது வழிய காதுகளை மூடிக்கொண்டான்.
லட்சுமணன் மெதுவாக சீதையிடம் பேச ஆரம்பித்தான். சிறு வயதில் இருந்து அண்ணனுடன் பல யுத்தங்களை பார்த்திருக்கின்றேன். அண்ணனின் பலம் எனக்கு தெரியும். அவரை யாராலும் ஒன்றும் செய்து விட முடியாது. காட்டில் நம்மை எதிர்த்த ஆயிரக்கணக்கான ராட்சசர்களை அண்ணன் தனி ஒருவராக நின்று யுத்தம் செய்து அனைவரையும் அழித்தார். அவரின் பராக்ரமத்தை தாங்களும் பார்த்தீர்கள். தேவர்கள் கந்தர்வர்கள் அசுரர்கள் ராட்சசர்கள் அரசர்கள் மானுடர்கள் மிருகங்கள் என அண்ணனை எவர் எதிர்த்தாலும் அவர்களை அண்ணன் தனி ஒருவராக நின்று அனைவரையும் அழித்து விடுவார். அந்த வல்லமை அவருக்கு உண்டு. இது நிச்சயமான உண்மை பயப்படாதீர்கள். உங்கள் மனைதை சாந்தப்படுத்திக் கொள்ளுங்கள். அந்த மான் உருவில் வந்த ராட்சசனை அழித்து விட்டு தாங்கள் விரும்பிய மான் உடலுடன் அண்ணன் சிறிது நேரத்தில் வந்து விடுவார். அதனை நீங்கள் பார்ப்பீர்கள் என்று உங்களுக்கு நான் உறுதி அளிக்கின்றேன். உங்கள் புத்தியை நிலையாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சீதையிடம் லட்சுமணன் கூறினான்.