ராமர் சீதை லட்சுமணன் மூவரும் அகத்தியர் சொன்ன வழியை பின்பற்றி பஞ்சவடி இடத்திற்கு சென்று கொண்டிருந்தார்கள். பஞ்சவடிக்கு அருகில் செல்லும் போது பெரிய கழுகைக் கண்டார்கள். அதன் வடிவத்தைக் கண்டு அது ராட்சசனாக இருக்க வேண்டும் என்று எண்ணி ஆயுங்களை எடுத்தார் ராமர். மூவரையும் பார்த்த கழுகு வந்திருப்பவர்கள் தசரதரின் சாயலாகத் தெரிகிறதே என்று எண்ணி யார் நீங்கள் என்று கேள்வி கேட்டது. அதற்கு ராமர் நாங்கள் அயோத்தி ராஜகுமாரர்கள். எங்கள் தந்தை பெயர் தசரதர். நாங்கள் அகத்தியரின் வழிகாட்டுதலின் பெயரில் பஞ்சவடியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். கழுகு வடிவத்தில் இருக்கும் நீ யார் என்றார். அதற்கு கழுகு கருட பகவானுடைய தம்பி அருணனின் மகன் நான். எனது பெயர் ஜடாயு. எனக்கு சம்பாதி என்ற தம்பி இருக்கின்றான். நான் உங்கள் தந்தை தசரதரின் நெருங்கிய நண்பர் என்றது ஜடாயு. தனது தந்தையின் நண்பர் என்ற சொல்லை கேட்ட ராமர் காட்டில் மிகப்பெரிய துணையாக ஜடாயு இருக்கிறார் என்று மகிழ்ச்சியடைந்து ஜடாயுவை கட்டி அணைத்தார்.
ஜடாயு ராமரிடம் எனது நண்பர் தசரச மன்னர் எப்படி இருக்கிறார் என்று விசாரித்தது. சத்திய நெறியை விட்டு தவறக்கூடாது என்கின்ற உறுதியில் மிகவும் துன்பத்தின் உச்சியில் எனது தந்தை சொர்க்கம் சென்று விட்டார் என்று வருத்ததுடன் கூறினார் ராமர். இதனைக் கேட்ட ஜடாயு கண்களில் நீர் வழிய துயரப்பட்டு ராமரின் அருகில் அமர்ந்தது. தசரதர் உடலாகவும் நான் உயிராகவும் இருந்தோம். யமன் என் உயிரை விட்டுவிட்டு தசரதரின் உயிரை எப்படி கொண்டு சென்றான்? என்று ராமர் தந்தை இழந்த துயரத்தை மறுபடியும் ஞாபகமூட்டும்படி பேச ஆரம்பித்தது ஜடாயு. உங்களை எனது தந்தையின் உருவில் உங்களை காண்கின்றோம் என்று ராம லட்சுமணர்கள் இருவரும் ஜடாயுவுக்கு மரியாதை செலுத்தினார்கள். தசரதர் மேலுலகம் சென்றதும் நீங்கள் அயோத்தையை ஆட்சி செய்யாமல் இங்கு என் தபஸ்விகளை போல் உடை அணிந்து கொண்டு இக்காட்டில் வந்து கொண்டிருக்கின்றீர்கள் யார் உங்களை அயோத்தியில் இருந்து காட்டிற்கு துரத்தியது சொல்லுங்கள் அவனை இப்போதே ஒழித்து தள்ளுகிறேன் என்றது ஜடாயு.
லட்சுமணன் நடந்த அனைத்தையும் விவரமாக சொன்னான். அனைத்தையும் கேட்ட ஜடாயு தந்தையின் சத்தியத்தை காப்பாற்ற இத்தனை வருடங்கள் காட்டில் தபஸ்விகளை போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். ராமா உன்னை சத்தியத்தின் உருவமாக காண்கின்றேன் என்று சொல்லிய ஜடாயு சீதையை பார்த்து யார் இந்த பெண் என்றது. இவள் ஜனகரின் மகள் பெயர் சீதை எனது மனைவி என்றார் ராமர். மகிழ்ந்த ஜடாயு பஞ்சவடியில் தங்கியிருக்கும் நீங்களும் லட்சுமணனும் காட்டிற்கு வேட்டைக்கு செல்லும் போது நான் சீதைக்கு துணையாக இருப்பேன் என்றது. ஜடாயுவிடம் விடைபெற்று மூவரும் அங்கிருந்து கிளம்பி பஞ்சவடி வந்து சேர்ந்தார்கள்.