ராமரும் லட்சுமணனும் மாற்றி மாற்றி பேசி தன்னிடம் விளையாடுகின்றார்கள் என்பதை அறிந்த சூர்ப்பனகைக்கு சீதையின் மீது கோபம் வந்தது. சூர்ப்பனகை ராமரிடம் வந்து வயிறு ஒட்டி ஒல்லியாக இருக்கும் சீதையின் மீது உனக்கு காதல் இருப்பதால் தானே என்னுடன் வர மறுக்கிறாய். நீ இல்லாமல் நான் உயிருடன் இருக்க முடியாது. உன்னை விட மாட்டேன். உன்னை அடைந்தே தீருவேன். இப்போதே இந்த சீதையை தின்று விடுகின்றேன். அப்போது நீ என்னை திருமணம் செய்து கொள்வாய். நாம் மகிழ்ச்சியுடன் இருக்கலாம் என்று சீதையின் மீது பாய்ந்தாள் சூர்ப்பனகை. ராமர் சீதையின் அருகே சூர்ப்பனகை வர முடியாமல் நில் என்று அவளை தடுத்தார். விளையாட்டு பெரியதாயிற்று என்று எண்ணிய ராமர் லட்சுமணனிடம் சீதைக்கு ஒன்றும் இல்லை. இந்த ராட்சச பெண்ணுக்கு நல்ல பாடம் கற்பித்து விடு. அவலட்சணமான இந்த ராட்சச பெண்ணின் உடலில் ஒரு குறையை உண்டாக்கிவிடு என்றார். ராமரின் சொல்லுக்காக காத்திருந்த லட்சுமணன் கோபத்துடன் தன் கத்தையை எடுத்து ராட்சசியின் காதையும் மூக்கையும் அறுத்து விட்டான். அகோரமான உருவத்துடன் இருந்த ராட்சசி மேலும் அவலட்சணமாகி வலி பொருக்க முடியாமல் கதறிக்கொண்டே காட்டிற்குள் ஒடி மறைந்தாள்.
அந்த காட்டின் ராட்சச அரசனாக இருக்கும் தனது சகோதரன் கரனிடம் அலறி அடித்து ஒடிச்சென்று கதறினாள் சூர்ப்பனகை. அவளின் நிலையை பார்த்து கோபம் கொண்ட கரன் என்ன ஆயிற்று உடனே சொல். உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை இப்போதே கழுகிற்கும் காக்கைக்கும் இரையாக்குகின்றேன் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு விசாரித்தான். அதற்கு சூர்ப்பனகை அயோத்தியின் மன்னரான தசரதரின் அழகிய குமாரர்கள் இரண்டு பேர் ஒரு பெண்ணுடன் காட்டிற்குள் தபஸ்விகள் வேடத்தில் வந்திருக்கின்றார்கள். அந்த பெண்ணை காரணமாக வைத்துக்கொண்டு என்னை தாக்கி இந்த அக்கிரம காரிந்த்தை செய்துவிட்டார்கள். அவர்களின் ரத்தத்தை குடிக்க ஆசைப்படுகிறேன். இப்போது நீ பார்த்துக்கொண்டிருக்கும் வேலைகளே அப்படியே வைத்து விட்டு முதல் வேலையாக அவர்களை உடனே கொன்று விட்டு அடுத்த வேலையை பார் என்று கதறி அழுதாள்.
காட்டில் இருக்கும் ராஜகுமாரர்களை இருவரையும் கொன்று விட்டு அவர்களின் உடலை இங்கே உடனே கொண்டு வாருங்கள். அவர்களுடன் இருக்கும் பெண்ணையும் கட்டி இங்கே அழைத்து வாருங்கள். தாமதம் வேண்டாம் உடனே கிளம்புங்கள் என்று கரன் தனது ராட்சச சேனாதிபதிகளுக்கு உத்தரவிட்டான். பதினான்கு சேனாதிபதிகள் தங்கள் படை பரிவாரங்களுடன் கிளம்பினார்கள். அவர்களுக்கு ராமர் இருக்கும் இடத்தை காட்டி ராஜகுமாரர்களின் ரத்தத்தை குடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சூர்ப்பனகையும் அவர்களுடனேயே வந்தாள். தூரத்தில் ராம லட்சுமணர்களை கண்டதும் அதோ பாருங்கள் என்னை துன்புறுத்தியவர்கள் அங்கே இருக்கின்றார்கள் அவர்களை உடனே கொன்று விடுங்கள் என்று சூர்ப்பனகை கத்தினாள். சூர்ப்பனகை கத்திய சத்தத்தில் ராட்சச கூட்டம் ஒன்று தங்களை நோக்கி வந்து கொண்டிருப்பதை ராமர் அறிந்து கொண்டார்.