ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 19

மாரீசனின் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்த ராவணனை தவ வாழ்க்கை வாழும் மாரீசன் முறைப்படி வரவேற்றான். இப்போது சில நாட்கள் முன்பு தானே வந்தீர்கள். மீண்டும் வந்திருக்கின்றீர்கள் என்றால் முக்கியமான செய்தியோடு வந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன் என்ன செய்தி சொல்லுங்கள் என்று மாரீசன் ராவணனிடம் கேட்டான். ராவணன் மாரீசனிடம் பேச ஆரம்பித்தான். என் சகோதரர்கள் கரனும் தூஷனனும் என் ஆளுகைக்கு உட்பட்ட தண்டகாருண்ய காட்டில் ஆட்சி செய்து கொண்டு வந்தார்கள். இது உனக்கு தெரியும். எனது சகோதரர்களையும் பதினான்காயிரம் படை வீர்களையும் ராமன் என்ற ஒருவன் தேர் இல்லாமல் பயங்கரமான ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் கீழே நின்று கொண்டே வெறும் வில்லையும் அம்பையும் மட்டும் வைத்துக்கொண்டு சர்வ சாதாரணமாக அனைவரையும் கொன்று விட்டான். இப்போது தண்டகாருண்ய காட்டில் ராட்சசர்கள் யாரும் இல்லை. ராட்சர்கள் என்கின்ற பயம் என்பதும் துளியும் இல்லை.

ரிஷிகளும் முனிவர்களும் பயம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருக்கின்றார்கள். ராமன் என்பவன் தந்தையால் காட்டிற்கு விரட்டப்பட்ட ஒரு நாடோடி. தன் மனைவி சீதையுடன் காடு காடாக சுற்றிக்கொண்டு நாடோடி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றான். தவஸ்வியைப் போல் வேடம் அணிந்து கொண்டு இந்திரனைப் போல் தன்னை எண்ணிக் கொண்டிருக்கின்றான். எந்த காரணமும் இல்லாமல் தன் பலத்தால் என் சகோதரியின் காதுகளையும் மூக்கையும் அறுத்து என் குலத்திற்கு அவமானத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றான். என் தங்கை என்னிடம் அழுது புலம்புகின்றாள். அரசன் என்கின்ற முறையிலும் தங்கைக்கு அண்ணன் என்ற முறையிலும் நான் ஏதாவது செய்தாக வேண்டும். நான் ஒன்றும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருந்தால் நான் ராட்சசர்களின் அரசன் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பயன் ஒன்றும் இல்லை. இதனால் நான் பெரும் துயரத்தில் சிக்கி துயரப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். இத்துயரத்தை உன்னால் தான் போக்க முடியும் அதனால் உன்னை தஞ்சமடைந்திருக்கிறேன்.

ராமனின் மனைவி சீதையை தூக்கிச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். ராமனை தண்டித்து அவமானப்படுத்துவது எனது குலத்திற்கு செய்யும் கடமையாக நினைக்கின்றேன். நீயும் எனது சகோதரர்கள் விபிஷணன் கும்பகர்ணன் இருக்க எனக்கு என்ன பயம். ஆகவே துணிந்து முடிவெடுத்து விட்டேன். அதற்கு உனது உதவி வேண்டும். உன்னுடைய யுக்தியும் உருவம் மாறும் திறமையும் உலகத்தில் வேறு யாரிடமும் இல்லை. அதனால் உன்னிடம் வந்திருக்கின்றேன். நான் சொல்லும் தந்திரத்தை நீ ஆமோதித்து செய்ய வேண்டும் மறுக்க கூடாது. நான் சொல்வதை கேள். தங்க புள்ளிகளும் வெள்ளி புள்ளிகளும் கலந்த பொன் மானாக உருவம் எடுத்து ராமர் வாழும் காட்டிற்கு சென்று சீதையின் முன்பாக நிற்க வேண்டும். பெண்களின் சுபாப்படி அழகானவற்றை பார்த்ததும் அதனை அடைய வேண்டும் என்று எண்ணம் கொள்வார்கள். ராமரிடமும் லட்சுமணனிடமும் அந்த மானை பிடித்து கொடுக்கச் சொல்லி வற்புறுத்துவாள். உன்னை பிடிக்க அவர்கள் வரும் போது மான் உருவத்தில் இருக்கும் நீ காட்டிற்குள் ஓட வேண்டும். உன்னை பின் தொடர்ந்து வருவார்கள். அப்போது சீதை தனியாக இருப்பாள். அவளை சுலபமாக நான் தூக்கிச் சென்று விடுவேன். சீதையை இழந்த ராமன் மனம் உடைந்து பலவீனமடைவான். அப்போது ராமனை தாக்கி பழிவாங்கி திருப்தி அடைவேன் என்று மாரீசனிடம் ராவணன் சொல்லி முடித்தான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.