ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 15

ராமரின் மேல் தேவர்கள் பூ மாரி பொழிந்தனர். சீதையும் லட்சுமணனும் மலை குகையில் இருந்து திரும்பி வந்தார்கள். பகைவர்களை கொன்று அழித்து முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் நன்மையை செய்த ராமரை பார்த்து மகிழ்ந்த சீதை அவருடைய நெற்றியில் இருந்த வியர்வையை துடைத்து இவ்வளவு பெரிய யுத்தத்தில் ராமருக்கு ஒன்றும் ஆகவில்லை என்று ஆனந்தப்பட்டாள். ஒற்றை ஆளாக இருந்து அனைவரையும் அழித்த ராமரை பெருமையுடன் பார்த்த லட்சுமணன் அவரை அணைத்துக்கொண்டான். முனிவர்களும் ரிஷிகளும் ராமருக்கு தங்களது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார்கள்.

ராமருடன் நடந்த இந்த யுத்தத்தில் அகம்பனன் என்ற ஒரு ராட்சசன் மட்டும் பெண் உருவத்திற்கு மாறி ராமரின் அம்பிலிருந்து தப்பி நடந்தவற்றை ராவணனிடம் சொல்வதற்கு இலங்கைக்கு சென்றான். அரசவைக்குள் நடுநடுங்கியபடியே சென்ற அவன் ராவணனின் அருகில் சென்று பேச ஆரம்பித்தான். அரசரே தங்களின் ஆளுகைக்கு உட்பட்ட காட்டின் அரசனான கரனும் சேனாதிபதி தூஷணன் உட்பட நமது ராட்சச குலத்தவர்கள் அனைவரும் அழிந்து விட்டார்கள். நான் ஒருவன் மட்டும் தப்பி தங்களிடம் இந்த செய்தியைச் சொல்ல வந்திருக்கின்றேன் என்றான். கண்கள் சிவக்க கோபத்தில் பேச ஆரம்பித்தான் ராவணன். என் அழகான காட்டை அழித்தவன் எனக்கு பயந்து இந்த உலகத்தின் எந்த பகுதியிலும் தங்க இடம் கிடைக்காமல் அலைந்து கொண்டிருப்பான். அவனை இந்த உலகத்தின் எந்த மூலையில் ஒளிந்திருந்தாலும் அவனை விட்டு வைக்க மாட்டேன். எனக்கு கெடுதலைச் செய்தவன் இந்திரன் குபேரன் யமன் விஷ்ணு என்று யாராக இருந்தாலும் நிம்மதியாக இருக்க முடியாது. நான் யமனுக்கு யமன். சூரியனின் அக்னியையும் எரிப்பேன். நடந்தவற்றை முழுமையாக சொல் என்று கர்ஜனையுடன் கத்திக்கொண்டே அகம்பனனை நோக்கி வந்தான் ராவணன். அருகில் வரும் ராவணனை பார்த்து பயந்த அகம்பன் நடுங்கியபடியே தாங்கள் எனக்கு அபயம் அளித்தால் சொல்கின்றேன் என்றான். அபயம் அளிக்கின்றேன் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன் நடந்தவற்றை அப்படியே சொல் என்றான் ராவணன். அகம்பனன் பேச ஆரம்பித்தான்.

தசரதரின் புத்திரர் ராமர். அவர் தனது மனைவியுடனும் தனது சகோதரன் லட்சுமணனுடனும் அக்காட்டில் தவஸ்விகளை போல் வேடம் தரித்து வாழ்ந்து வருகின்றார்கள். ராமர் சிங்கம் போன்ற உடலமைப்பும் காளையைப் போன்ற தோள்களையும் உருண்டு திரண்ட அழகான கைகளையும் ஒப்பில்லாத உடல் பலத்துடன் இருக்கிறார். அவரது சகோதரன் லட்சுமணன் சூர்ப்பனகையின் காதுகளையும் மூக்கையும் வெட்டி விட்டான். சூர்ப்பனகை கரனிடம் தெரிவித்தாள். கரன் உத்தரவின் பேரில் ராமரை அழிக்க தூஷணன் தலைமையில் சென்ற பதினான்காயிரம் ராட்சசர்களையும் கரனையும் கொன்று விட்டார் ராமர். அவரால் அங்கிருந்த நமது குலத்தவர்கள் அனைவரும் அழிந்து விட்டனர் என்றான் அகம்பனன். அகம்பனுடைய பேச்சை கேட்ட ராவணன் இந்த ராமர் என்பவன் தேவேந்திரனோடும் அனைத்து தேவர்களோடும் காட்டிற்குள் வந்து யுத்தம் செய்தானா வேறு யார் யார் ராமனுக்கு இந்த யுத்தத்தில் உதவி செய்தார்கள் அனைவரையும் அழித்து விடுகின்றேன் என்று கர்ஜித்தான் ராவணன். ராமருடைய பேராற்றலை மேலும் சொல்ல ஆரம்பித்தான் அகம்பன்.

தொடரும்………

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.