ராமர் லட்சுமணனுடன் வந்து விடுவார் என்று காத்திருந்த சீதை தனது குடிலில் முன் வந்திருக்கும் தபஸ்வி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலாமா வேண்டாமா என்று குழப்பத்துடன் யோசித்தாள். பதில் ஏதும் சொல்லவில்லை என்றால் கோபத்தில் அவர் சாபம் ஏதும் விட்டு விடுவாரோ என்ற பயத்தில் அழுத முகத்தை துடைத்துக்கொண்டு முறைப்படி வரவேற்று உபசாரம் செய்தாள். ராவணன் கேட்ட கேள்விகளுக்கு நடந்தவற்றை பதிலாக சொல்லிக்கொண்டே ராமர் வந்து விட்டாரா என்று வாசலை பார்த்துக் கொண்டே இருந்தாள். ராவணன் ராட்சச குலத்தின் பெருமைகளை சொல்லியும் ராமனை இகழ்ந்தும் பேசினான். இலங்கையின் பெருமைகளை சொல்லியும் தனது அரண்மனையின் பெருமைகளையும் சொன்னான். நான் ஆகாயத்தில் நின்று இந்த மண்ணுலகை இரு கைகளாலும் தூக்குவேன். யமனுடன் யுத்தம் செய்து யமனையும் கொல்வேன். கூரிய அம்புகளை விட்டு சூரியனின் கதிர்கள் இங்கு வருவதையும் தடுப்பேன். விருப்பப்படி எனது உருவத்தை என்னால் மாற்றிக்கொள்ளும் சக்தி படைத்தவன் நான். காட்டில் சுற்றி திரியும் ராமனை விட்டு என்னுடன் வந்து விடு. உன்னை என்னுடைய அரண்மனைக்கு பட்டத்து அரசியாக்கி விடுகிறேன். தேவலோகத்தில் உள்ள தேவர்களும் தேவதைகளும் உனக்கு அடிமையாக இருப்பார்கள். ஈரேழு பதினான்கு உலகத்திற்கும் நீ அரசியாக இருப்பாய் என்று ஆசை காட்டினான் ராவணன்.
சீதை கோபத்தில் கத்த ஆரம்பித்தாள். மாமலையைப் போல அசைக்க முடியாதவர் என் கணவர். அனைவராலும் விரும்பப்படும் சத்தியம் தவறாதவர். ஐந்து புலன்களையும் வென்ற கருணை உள்ளம் கொண்டவர். ஆண் சிங்கம் போன்ற அவரிடம் பெண் சிங்கம் போன்று இருக்கும் என்னை அடைய முயலும் குள்ள நரியே சூரியனின் கதிர்களை எவராலும் தொட முடியாது. அது போல் உன்னால் என்னை தொட கூட முடியாது. உனது ஆயுளை சீக்கிரமாக முடித்துக்கொள்ள முடிவெடுத்து விட்டாய் என்று நினைக்கிறேன். எனது கணவர் இங்கு வருவதற்குள் ஓடிவிடு. இல்லையேல் அவரின் அம்புக்கு நீ இரையாவாய். இந்த குடிலை விட்டு வெளியே போ என்று கத்தினாள்.
சீதையின் பேச்சைக் கேட்ட ராவணன் தனது ராட்சச உருவத்தை அடைந்தான். எனது பெருமைகளையும் வீரப்பிராதபங்களை கூறினேன். அனைத்தையும் கேட்ட நீ நான் சொல்வதற்கு உடன் படவில்லை என்றால் நீ மிகவும் கர்வம் கொண்டவள் என்று நினைக்கிறேன். உன்னை நான் இங்கிருந்து தூக்கிச் செல்கிறேன். உன் ராமன் உன்னை எப்படி வந்து காப்பாற்றுகிறான் என்று நான் பார்க்கிறேன் என்றான். சீதை இருக்கும் குடிலை சுற்றி லட்சுமணன் வரைந்த கோடு மீறி சீதை வெளியே வந்தால் தான் அவளை தூக்கிசெல்ல முடியும். விருப்பமில்லாத பெண்ணை தொட்டால் தன் தலை வெடித்து விடும் என்ற தன் முன்வினையால் பெற்ற சாபத்தினால் சீதையை தொடாமல் தூக்க வேண்டும் என்பதால் அந்த குடில் இருக்கும் பூமியை அப்படியே தன் மந்திர சக்தியால் தூக்கி தனது ரதத்தில் வைத்து ரதத்தை செலுத்த கட்டளையிட்டான் ராவணன்.
சீதை கதற ஆரம்பித்தாள். ராமா எங்கு சென்றீர்கள்? என்னை காப்பாற்ற வாருங்கள். லட்சுமணா அண்ணனின் தலை சிறந்த பக்தனே உன்னை தகாத வார்த்தைகளின் திட்டி உன் பேச்சை கேட்காமல் உன்னை துரத்தினேனே. மரங்களே செடிகளே என்னை இந்த ராட்சசன் தூக்கிச் செல்வதை ராமர் வந்ததும் சொல்லுங்கள் என்று சத்தமாக கதறிக்கொண்டே இருந்தாள்.