சீதையின் குரலைக் கேட்ட கழுகு அரசனான ஜடாயு சீதையை யாரோ தூக்கிச் செல்கின்றார்கள் என்று உணர்ந்து கொண்டான். வேகமாக பறந்து சென்று ரதத்தின் முன்பாக நின்று ராவணனை தடுத்தான் ஜாடாயு. இதனை கண்ட சீதை ஜடாயுவை பார்த்து இவன் ராட்சசர்களுக்கு தலைவன் இலங்கை அரசன் ராவணன் ஆயுதங்கள் பல வைத்திருக்கின்றான். நீங்கள் எதிர்த்தால் உங்களை கொன்று விடுவான். உங்களால் என்னை மீட்க முடியாது. ராமர் இங்கு வந்ததும் அவரிடம் இந்த செய்தியை சொல்லி விடுங்கள் என்று கதறியபடியே கூறினாள். ராவணன் ஜடாயுவை பார்த்து யார் நீ சிறிய பறவையான நீ என்னை தடுக்கின்றாய் தூரமாக விலகிப்போ என்று விரட்டினான்.
ஜடாயு ராவணனிடம் எனது பெயர் ஜடாயு கழுகு ராஜன். நீண்ட நாள் உன்னைப் போல் ஒரு நாட்டின் அரசனாக வாழ்ந்தவன். பெண்களை காப்பது அரசனுடைய கடமை. அதற்கு மாறாக அரசனாகிய நீ இத்தகைய கீழ்தரமான காரியங்களை செய்யக்கூடாது. சீதை யார் உன்று உனக்கு தெரியுமா? ஒரு ராஜ குமாரியை அவளது துணைவன் இல்லாத போது இப்படி தூக்கிச் செல்லக்கூடாது. உடனே அவளை விட்டுவிட்டுப் போ இல்லை என்றால் அழிந்து போவாய். ராமர் மீது உனக்கு பகை இருந்தால் அவருடன் யுத்தம் செய். அதை விட்டு ராமர் இல்லாத சமயத்தில் வந்து சீதையை தூக்கிச் செல்கிறாய். இது தான் உன்னுடைய வீரமா? ராமருடன் யுத்தம் செய்ய உனக்கு தைரியம் இல்லை என்று எனக்கு தெரிந்து விட்டது. ராமருடன் நீ யுத்தம் செய்தால் ஏற்கனவே ராமரின் கைகளால் அழிந்த உனது சேனைப் படைகளாக இருந்த ராட்சசர்களுக்கு நிகழ்ந்த கொடுரமான மரணம் தான் உனக்கு நிகழும். யமனுடைய பாசக்கயிறு உன் கழுத்தின் மேல் விழுந்து உன்னை இழுத்துச் செல்ல தயாராக இருப்பதை நீ அறியாமல் இருக்கிறாய். நான் மிகவும் வயதான முதியவன். ஆயுதம் எதும் இன்றி இருக்கிறேன். நீயோ சிறுவன் கவசம் பூண்டு வில் அம்பு ஆயுதங்களுடன் இருக்கிறாய். சீதையுடன் நீ இங்கிருந்து செல்ல நான் உன்னை விட மாட்டேன். என்னை மீறி சீதையை தூக்கிச் செல்ல உன்னால் முடியாது. கோழையே இதோ உன் முன் நிற்கின்றேன். தைரியம் இருந்தால் என்னுடன் யுத்தம் செய். நான் உயிரோடு இருக்கும் வரையில் உன்னால் சீதையை தூக்கிச்செல்ல முடியாது. எனக்கு பயந்து ஓடாதே நில் என்று கர்ஜித்தான் ஜடாயு.
ஜடாயுவின் பேச்சைக் கேட்ட ராவணன் கோபத்தில் ஜடாயுவை தாக்க ஆரம்பித்தான். கூரிய அஸ்திரங்களை ஜடாயு மீது விடுத்தான் ராவணன். சிறகால் செய்யப்பட்ட மலை போல் நின்ற ஜடாயு தனது கூரிய நகங்களால் அனைத்தையும் தடுத்து ராவணனின் வில்லை உடைத்து ராவணனை தாக்க ஆரம்பித்தான். மிகவும் முதியவனான ஜடாயு ராவணனின் எதிர் தாக்குதலை சமாளிக்க முடியாமல் விரைவில் சோர்ந்து போனான். அழுத முகத்துடன் இருந்த சீதையை கண்டதும் மீண்டும் புத்துயிர் பெற்றது போல் எழுந்த ஜடாயு மீண்டும் ராவணனை ஆக்ரோசமாக தாக்க ஆரம்பித்தான். ராவணனின் கைகளை ஒவ்வொன்றாக தனது அழகால் கொத்தி துண்டாக்கி வீசி எறிந்தான் ஜடாயு. ராவணனுக்கு புதிது புதிதாக கைகள் முளைத்துக் கொண்டே இருந்தது. வெகு நேரம் நடந்த யுத்தத்தில் ராவணனின் கை ஓங்கியது. மிகவும் சோர்வடைந்திருந்த ஜடாயுவின் இறகுகளையும் கால்களையும் வெட்டி எறிந்தான் ராவணன். இறகுகளும் கால்களும் இழந்த ஜடாயு ராவணனை எதிர்க்க இயலாமல் கீழே விழுந்தான். ஜடாயுவை கண்ட சீதை என் கணவருக்கு இன்னோரு தந்தையாக வந்தீர்களே. தசரதர் மீண்டும் உயிர் பெற்று வந்ததை போல் யுத்தம் செய்து இப்போது எனக்காக உயிரை விடப் போகின்றீர்களே ராமா எங்கிருக்கின்றார்கள். லட்சுமணா எங்கிருக்கிறாய் காப்பாற்றுங்கள் என்று கதறியபடியே இருந்தாள். ஜடாயு பறவை நிற்க கூட முடியாமல் விழுந்து கிடப்பதை கண்டு திருப்தி அடைந்த ராவணன் சீதையுடன் ஆகாய மார்க்கமாக சென்றான்.