ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 30

ராமர் லட்சுமணனிடம் பேசிக்கொண்டே நடந்தார். மாரீசன் போட்ட சத்தத்தை என்னுடைய சத்தம் என்று நம்பி விட்டீர்களே. நான் இப்போது என்ன செய்வேன். உன்னை நம்பி சீதையை ஒப்படைத்து விட்டு வந்தேன். நீ ஏன் அவளை தனியாக விட்டு வந்தாய். ராட்சசர்கள் நம் மீது வைத்திருந்த பகையை சீதை மீது காண்பித்து அவளை கொன்றிருப்பார்கள். சீதை குடிலில் இல்லையென்றால் லட்சுமணா என் உடலில் உயிர் இருக்காது. லட்சுமணா நீ அயோத்திக்கு சென்று செய்தியை சொல்லிவிடு. இந்த துக்கத்தை கௌசலையால் பொறுக்க முடியாது. கைகையி தான் விரும்பியதை அடைவாள். நான் என்ன செய்வேன் என்று சொல்லிக் கொண்டே குடிலுக்கு ஓடு லட்சுமணா ஓடு என்று ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தார்.

லட்சுமணன் கண்ணீர் மல்க ராமரிடம் பேச ஆரம்பித்தான். அண்ணா நான் என்ன செய்வேன். உங்கள் குரலைப் போன்ற சத்தம் வந்ததும் சீதைக்கு பெரும் பயம் வந்து விட்டது. நடுங்கிப் போனார். ஓடு லட்சுமணா ஓடு போ போ என்று என்னை துரத்தினாள். வந்தது உங்கள் குரல் அல்ல அது ராட்சசனின் ஏமாற்று வேலை உங்களை எந்த ராட்சசனும் எதிர்த்து வெற்றி பெற முடியாது என்று எவ்வளவு சொல்லியும் சீதை கேட்கவில்லை. மனம் வருந்தும் படியான வார்த்தைகளை சொல்லி நீ செல்லவில்லை என்றால் இப்போதே இறந்து விடுவேன் என்று சொல்லி ஆற்றில் விழுந்து போவதற்கும் துணிந்து விட்டார்கள். பேசக்கூடாத வார்த்தைகளை சொல்லி என்னை மிகவும் துன்புறுத்தி துரத்தினார்கள். நான் வேறு வழி இல்லாமல் வந்தேன் என்று லட்சுமணன் சொல்லி முடித்தான். ராமர் பேச ஆரம்பித்தார். நீ சொல்லும் சமாதானத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்ணாய் பிறந்தவள் பயத்தால் சில நேரம் ஏதேதோ பேசுவாள். அது போல் பெண்ணான சீதையும் பயத்தால் வந்த அஞ்ஞானத்தால் பேசியிருக்கிறாள். அதனை நீ பொறுத்திருக்க வேண்டும். அவளை தனியாக விட்டு நீ எப்படி வரலாம். நீ செய்தது தவறு. சீதையை இனி நான் காணப்போவதில்லை என்று லட்சுமனணிடம் கோபத்தில் பேசிக்கொண்டே ஓடினார். வரும் வழி எங்கும் அபசகுனங்கள் தென்பட்டன. குடிலுக்கு இருவரும் வந்து விட்டார்கள்.

சீதை இல்லாத குடில் சூன்யமாக தென்பட்டது. சீதையை காணாமல் ராமரின் இதயம் உடைந்து அங்கேயே விழுந்தார். மான் தோலும் தர்ப்பையும் சிதறிக்கிடந்தது. தண்ணீர் எடுக்க ஆற்றுக்கு போயிருப்பாளோ என்று ஆற்றுக்கு அருகில் ஓடினார். தோட்டம் செடி கொடிகள் என்று குடிலை சுற்றி சீதையை தேடி ஓடினார். சீதை எங்கும் காணவில்லை. சீதையை எங்கு கொண்டு போனார்களோ? என்ன செய்தார்களோ? எவ்வளவு பயந்து போயிருப்பாள். என்று கண்ணில் நீர் வழிய தன் சுய சிந்தனையை இழந்து சீதை சீதை என்று காட்டில் அங்கும் இங்கும் தேடி பிதற்றிக்கொண்டே ஓடினார் ராமர். எங்கும் சீதையை காணவில்லை. லட்சுமணா சீதையை ராட்சசர்கள் கொன்று தின்றிருப்பார்கள். இனி என் உடலில் உயிர் இருக்காது. தந்தை ஜனகர் இருக்குமிடம் நான் சென்று விடுவேன். நான் இட்ட ஆணையை நிறைவேற்றாமல் இங்கு வந்துவிட்டாயே என்று தந்தை என்னிடம் கோபம் கொள்வார் என்று அழ ஆரம்பித்தார் ராமர். அண்ணா தங்களின் மேன்மைக்கு நீங்கள் இப்படி அழுவது தகாது. இருவரும் காடு முழுவதும் தேடிப்பார்ப்போம். குகைகளிலும் காட்டிற்குள் செல்வதும் ஆற்றில் குளிப்பதும் விளையாடுவதும் தோட்டத்தில் பூக்களுடன் இருப்பதும் சீதைக்கு பிடித்தமான செயல். எங்காவது அருகில் விளையாடிக் கொண்டிருப்பார். நம்மை சோதிக்க இப்படி விளையாடுகிறாள் என்று எண்ணுகிறேன். வாருங்கள் இருவரும் சென்று தேடுவோம் என்றான். இருவரும் காடு மலை ஆறு என்று காடு முழுவதும் தேடினார்கள். சீதை எங்கும் காணவில்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.