ராமர் சரபங்க முனிவரின் ஆசிரமத்திற்கு வரும் முன்னதாகவே இந்திரன் தனது தேவகணங்களுடன் வந்து சரபங்க முனிவருடன் பேசிக்கொண்டிருந்தான். ராமர் ஆசிரமத்திற்குள் நுழைவதை அறிந்த இந்திரன் தன் பேச்சை விரைவாக முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றான். சரபங்க மகரிஷியின் பாதங்களில் விழுந்து ராமர் சீதை லட்சுமணன் மூவரும் வணங்கி வழிபாடு செய்தார்கள். மூவரையும் பார்த்து மகிழ்ந்த சரபங்க மகரிஷி ராமா உங்களை பார்ப்பதில் பேரானந்தம் அடைகின்றேன். உனக்காகத் தான் காத்துக் கொண்டிருக்கின்றேன் ராமா. என்னுடைய உலக வாழ்க்கை வினைகள் எல்லாம் முடிந்து மேலுலகம் செல்லும் காலம் வந்து விட்டது. என்னை மேலுலகம் அழைத்துச் செல்ல சிறிது நேரத்திற்கு முன்பு இந்திரன் வந்திருந்தான். உன்னை காணாமல் மேலுலகம் செல்ல விரும்பவில்லை எனவே இந்திரனிடம் ராமனை காண ஆவலாய் இருக்கின்றேன் ராமரை கண்ட பின்பு வருகிறேன். சிறிது நேரம் காத்திருக்குமாறு இந்திரனிடம் கூறினேன். ராமரை நான் இன்னும் சந்திப்பதற்கான காலம் வரவில்லை. தற்போது ராமரை காண காத்திருப்பது சரியாக இருக்காது என்று நான் மேலுலகம் செல்ல உடலை விடும் வழிகளை சொல்லி விட்டு இந்திரன் சென்று விட்டான். நீ மண்ணுலகில் நிறைவேற்றுவதற்கான அரிய பெரிய செயல்களை செய்து முடித்த பின்பு இந்திரனே உன்னை வந்து சந்திப்பான். பகவானே இப்போது என்னுடைய புண்ணிய பலன்கள் எல்லாம் உங்களிடம் தந்தேன் பெற்றுக்கொள்ளுங்கள் சரபங்க முனிவர்.
ராமர் சரபங்க முனிவரிடம் நான் சத்ரிய குலத்தில் பிறந்தவன். என்னுடைய குல தர்மப்படி என்னிடம் கேட்பவர்களிடம் நான் தான் கொடுக்க வேண்டும். யாரிடமும் எதுவும் பெற்றுக்கொள்ள கூடாது. தாங்கள் குறிப்பிட்ட நல் புண்ணியங்களை நல் கார்மாக்கள் செய்து என்னால் பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே தாங்கள் கொடுக்கும் புண்ய பலன்களை என்னால் பெற்றுக்கொள்ள இயலாது. நாடு நகரம் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு தபஸ்வியாய் காட்டில் வாழ வந்திருக்கின்றேன். இக்காட்டில் வசிக்க எங்களுக்கு ஒரு நல்ல இடத்தை தேர்ந்தேடுத்து சொல்லுங்கள் என்றார்.
இக்காட்டில் சுதீட்சணர் என்ற ரிஷி இருக்கிறார். அவர் முக்காலமும் அறிந்தவர். இந்த மந்தாகினி நதியின் எதிர் திசையில் இருக்கும் புனிதமான இடத்தில் அவர் தவம் செய்து கொண்டிருக்கின்றார். அவரிடம் சென்று இந்த வனத்தில் எங்கே வசிக்க வேண்டும் என்று கேட்டு தெரிந்து கொள். உன்னை சந்தித்ததில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன் உன்னை சந்திக்கும் என்னுடைய ஆசை தீர்ந்தது. சிறிது நேரம் இங்கே இருப்பாயாக. நான் மேலுலகம் செல்லும் நேரம் வந்து விட்டது என்று சொல்லி பெரிய நெருப்பை வளர்த்து அதனுள் நுழைந்தார் சரபங்க முனிவர். நெருப்பில் இருந்து ஒரு திவ்யமான ஒளி உருவமாக தோன்றி பிரம்பலோகத்தை அடைந்தார் சரபங்க முனிவர்.
விராதன் ராட்சசன் ராமரால் கொல்லப்பட்டதை அறிந்த காட்டிலிருக்கும் முனிவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ராமரை காண அனைவரும் முடிவு செய்து ராமரை காண கூட்டமாக புறப்பட்டார்கள்.