ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 18

ராமன் தண்டகாருண்ய காட்டின் அரசனான கரனையும் சேனாதிபதியான தூஷணனையும் சில கணங்களில் கொன்றுவிட்டான் என்று கோபத்தில் பேசிக் கொண்டிருந்த சூர்ப்பனகை இப்போது ராவணனிடம் சாந்தமாக பேச ஆரம்பித்தாள். ராமனுக்கு சீதை என்ற மனைவி இருக்கிறாள். ராமனோடு தனியாக இருக்கிறாள். அவளின் அழகை என்னவென்று சொல்வேன். தேவர்கள் கந்தர்வர்கள் உலகங்கள் உட்பட ஈரேழு பதினான்கு உலகங்கள் முழுவதும் தேடினாலும் அவளைப் போன்ற அழகியை நீ பார்க்க முடியாது. அவளைக் கண்டதும் அவள் உனக்குரியவள் உன்னிடம் இருக்க வேண்டியவள் என்று நினைத்தேன் அதற்கான செயலிலும் இறங்கி உனக்காக அவளை தூக்கி வர முயற்சி செய்தேன். அப்போது ராமனின் தம்பி லட்சுமணன் தடுத்து ராட்சசியாக இருந்தாலும் பெண் என்பதால் உன்னை உயிரோடு விடுகின்றேன் என்று சொல்லி என் காது மூக்கை அறுத்து அவமானப்படுத்தி விட்டான். உனக்காக செயல்படப் போய் நான் இந்த கோரமான முகத்தையும் அவமானத்தையும் பெற்றுவிட்டேன். இதற்கு பழிக்குப்பழி வாங்க வேண்டும். இப்பழியை தீர்த்து உன் குலத்தின் மானத்தைக் காப்பாற்ற உனக்கு ஆசையிருந்தால் உடனே தண்டகாருண்ய காட்டிற்கு புறப்படு.

சீதை போன்ற பேரழகி ராட்சச குலத்தின் அரசனான உன் அருகில் தான் இருக்க வேண்டும். சாதரண மானிதனுடன் காட்டில் இருக்கக் கூடாது. அவளை தூக்கி வந்து உனக்கு அருகில் வைத்துக்கொள். உன் சகோதரியாகிய எனக்கு கிடைத்த அவமானம் உனக்கு கிடைத்த அவமானம் ஆகும். ராமனை வெற்றி கொண்டோ அல்லது தந்திரமாகவோ சீதையை நீ தூக்கி வந்து ராமனை நீ அவமானப்படுத்தினால் போர்க்களத்தில் ராமனால் இறந்த உனது வீரர்கள் திருப்தி அடைவார்கள். நமது குலத்திற்கு ஏற்பட்ட அவமானம் தீர்க்கப்படும். இதனை மனதில் வைத்து சீக்கிரம் உனது குலத்தின் கௌரவத்தை காப்பாற்றிக்கொள் என்று ராவணனுக்கு சீதை மீது ஆசை ஏற்படும்படியும் ராமரின் மேல் கோபம் வரும் படியும் தூண்டிவிட்டு தனது பேச்சை முடித்தாள் சூர்ப்பனகை.

சீதையின் அழகை பற்றிய பேச்சில் மயங்கிய ராவணன் மந்திரிகளிடம் சபை முடிந்தது அனைவரும் செல்லலாம் என்று சபையை முடித்து அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு யோசிக்க ஆரம்பித்தான். சீதையை தூக்கிவர வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் மாரீசன் ராமரைப்பற்றி சொல்லிய எச்சரிக்கை அவனது மனதில் தோன்றியது. சூர்ப்பனகையிடம் ராமன் என்பவன் யார்? அவன் எதற்காக தண்டகாருண்ய காட்டிற்கு வந்திருக்கின்றான்? அவனது உருவம் எப்படிப்பட்டது? ராமன் வைத்திருக்கும் ஆயுதங்கள் என்ன? அவன் தனியாக என்னென்ன போர் தந்திரங்களை கையாண்டு நமது குலத்தவர்களை அழித்தான் என்று ராமரைப்பற்றிய அனைத்தையும் சொல் என்று கேட்டுக்கொண்டான். சூர்ப்பனகை ராமர் அயோத்தியை சேர்ந்த ராஜகுமரன் என்று ஆரம்பித்து காட்டில் யுத்தம் முடிந்தது வரை ராமரைப் பற்றி தனக்குத் தெரிந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள். அனைத்தையும் கேட்ட ராவணன் நீண்ட யோசனைக்குப் பிறகு ஓர் முடிவுக்கு வந்தான். தனது பறக்கும் ரதத்தில் ஏறி மாரீசனை காணச் சென்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.