ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 16

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 16

ராமர் மிகவும் பராக்கிரமசாலி. உலகில் உள்ள வில்லாளிகளில் தலை சிறந்தவற் போல் காணப்படுகிறார். தெய்வீக அஸ்திரங்களை செலுத்தும் திறமை பெற்றிருக்கிறார். அவரது வில்லில் இருந்து கிளம்பிய அம்புகள் ஐந்து தலை பாம்புகள் போல் ராட்சசர்களை ஓட ஓட துரத்தியது. ராட்சசர்கள் எங்கே ஒளிந்தாலும் தேடிப்போய் அவர்களை கொன்றது என்று ராமர் தனது வில்லில் இருந்து செலுத்திய அம்பின் வேகத்தையும் அபார திறமையையும் விவரித்துச் சொன்னான். அனைத்தையும் கேட்ட ராவணன் அந்த இரண்டு மனித பூச்சிகளை இப்போதே கொன்று விட்டு திரும்புகின்றேன் என்று கர்ஜனையுடன் ராவணன் எழுந்தான். அகம்பனன் ராவணனை தடுத்து நிறுத்தினான்.

ராமரின் பாராக்ரமத்தை நேரில் பார்த்தவன் என்ற முறையில் சொல்கின்றேன் கேளுங்கள் என்று அகம்பனன் ராவணனிடம் பேச ஆரம்பித்தான். நான் சொல்வதை கேளுங்கள். ராமர் சர்வ வல்லமை படைத்தவராக இருக்கின்றார். இந்த உலகத்தில் உள்ள ராட்சசர்கள் அனைவரும் ஒன்று சேர்த்து ராமரை எதிர்த்து யுத்தம் செய்தாலும் அவரை வெற்றி பெற முடியாது. அவரை கொல்ல எனக்கு தெரிந்த ஓர் உபாயத்தை சொல்கின்றேன். தங்களுக்கு விருப்பம் இருந்தால் செயல் படுத்துங்கள் என்றான் அகம்பனன். உனது உபாயத்தை கூறு என்று ராவணன் அகம்பனனுக்கு கட்டளையிட்டான்.

ராமருடைய மனைவி சீதை இருக்கிறாள். பெண்களில் ரத்தினம் போன்ற பேரழகுடையவள். மூவுலகத்தில் தேடினாலும் அவளின் அழகுக்கு இணையாக யாரையும் பார்க்க முடியாது. அந்த பெரிய காட்டில் ராமரின் பாதுகாப்பில் இருக்கும் சீதையை யாருக்கும் தெரியாமல் வஞ்சகமான உபாயத்தை கையாண்டு கவர்ந்து கொண்டு வந்துவிடுங்கள். மனைவியின் மேல் பேரன்பு வைத்திருக்கும் ராமர் அவளின் பிரிவைத் தாங்காமல் உயிரை விட்டுவிடுவார் என்று சொல்லி முடித்தான். ராவணன் நீண்ட நேரம் யோசித்து அகம்பனனுடைய யோசனை சரியானதாக இருக்கின்றது என்று அத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தான். அடுத்த நாள் காலையில் தனது தேரோட்டியுடன் தான் மட்டும் தனியாக பறக்கும் தேரில் கிளம்பி தாடகையின் புதல்வனான மாரீசனின் ஆசிரமம் சென்று சேர்ந்தான் ராவணன்.

மாரீசன் பல வகையான உபசரணைகள் செய்து ராவணனை வரவேற்று பின்பு பேச ஆரம்பித்தான். ராட்சசர்களின் தலைவரே தங்கள் நாட்டில் அனைவரும் நலமாக இருக்கின்றார்களா நீங்கள் விரைவாக வந்திருப்பதை பார்த்தால் மனம் வருந்தும்படி ஏதோ தங்களுக்கு நடந்திருக்கின்றது என்று எண்ணுகின்றேன். என்ன செய்தி சொல்லுங்கள் என்று மாரீசன் ராவணனிடம் கேட்டான். எனது ராஜ்யத்திற்கு உட்பட்ட காட்டில் உள்ள எனது அழிக்க முடியாத படைகள் அனைத்தையும் தசரதரின் புதல்வன் ராமன் அழித்து எனக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தி விட்டான். இந்த அவமானம் போக அவனது மனைவி சீதையை கவர்ந்து செல்லவேண்டும் என்று முடிவு செய்து திட்டம் திட்டி இருக்கின்றேன். அதற்கு நீ எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று ராவணன் மாரீசனிடம் சொன்னான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.