நம்பிக்கையான பக்தி

சிவலிங்கம் ஒன்றை வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி தோண்டும்போது கண்டெடுத்தான். அதை அரசனிடம் எடுத்துச் சென்றபோது சுடுகாட்டில் கிடைத்ததை நீயே வைத்துக்கொள் சுடுகாட்டுச் சாம்பலை வைத்து அபிஷேகம் செய் என்று ஏளனமாக அரசன் கூறிவிட்டான். இறை வழிபாடு என்றால் என்ன என்று தெரியாத வெட்டியானும் அரசனது வார்த்தைகள் ஏளனமானவை என்பதை அறியாமல் பிணம் எரித்த சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான். ஒருநாள் திடீரெனப் பெய்த மழையினால் சுடுகாட்டில் இருந்த சாம்பல் முழுவதும் கரைந்து விட்டது. சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய சாம்பல் இல்லையே என வருந்திய அவனும் விராட்டிகளை அடுக்கி தீயை மூட்டிவிட்டு தனது மனைவியிடம் நான் இந்த தீயில் விழுகிறேன். என் உடல் எரிந்து கிடைக்கும் சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய் என்று கூறினான். ஆனால் மனைவியோ நீங்கள் அப்படி இறந்து விட்டால் இங்கு வரும் பிணங்கள் சீரழிந்துவிடும் நானே தீயில் குதிக்கின்றேன் என்று கூறிக்கொண்டே தீயில் வீழ்ந்தாள். இருவரது பக்தியிலும் திளைத்த சிவபெருமான் பார்வதியுடன் பிரத்தியட்சமாகி மனைவியைஉயிர்ப்பித்து இருவருக்கும் முக்தி கொடுத்து அருளினார். இந்த தகவலை அறிந்த அரசனும் தங்கத்தால் ஆன சிவலிங்கத்திற்குப் பன்னீர் பஞ்சாமிர்தம் என்றும் வாசனைத் திரவியங்களாலும் அபிஷேகம் செய்த எனக்கு காட்சிதராத இறைவன் சுடுகாட்டுச்சாம்பலையும் பழைய சோற்றையும் கொடுத்தவனுக்கு மோட்சம் அளித்துள்ளாரே என்று வருந்தினாலும் பக்தி என்பது ஆடம்பரத்தில் இல்லை அன்பினால் மட்டுமே மலரக்கூடியது என்பதை உணர்ந்து கொண்டான்.

பக்தர்களிடம் சிவபெருமான் எதிர்பார்ப்பது அன்பு மற்றும் தூய்மையான திடமான நம்பிக்கையான பக்தி மட்டுமே தான்.

நைவேத்தியம்

குரு பல சீடர்களை வைத்து குருகுலம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். அதிகாலையில் குரு தனது நித்ய கடமைகளை முடித்து விட்டு இறைவனுக்கு நைவேத்யம் படைத்து பூஜையை முடித்தார். இதைப் பார்த்துக் கொண்டு இருந்த ஒரு சீடன் குருவே நாம் படைக்கும் நைவேத்தியம் இறைவன் சாப்பிடுகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவனுக்கு நாம் படையல் இடும் நைவேத்யத்தை அவர் சாப்பிட்டு விட்டால் அதை நாம் பக்தர்களுக்கு எப்படி பிரசாதமாக தர முடியும்? என்று கேட்டான். சீடனின் கேள்வி குருவுக்கு புரிந்து விட்டது. கேள்விக்கு வெறுமனே பதில் சொல்லாமல் சீடனுக்கு புரியும்படி விளக்கம் தர முடிவு செய்தார். அவனுக்கு பதில் எதுவும் சொல்லாமல் அவனை பார்த்து நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன் என்றார். சீடனுக்கு குரு தன் கேள்விக்கு பதில் சொல்லாதது ஏமாற்றம் தந்தாலும் குருவின் கட்டளைக்கு பணிந்து வகுப்பறையை தயார் செய்தான். அன்றைய வகுப்பில் அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட பூர்ணமிதம் எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு.

குரு சொல்லிக் கொடுத்தபடி அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர். சிறிது நேரத்திற்கு பிறகு கேள்வி கேட்ட சீடனை தன்னருகில் அழைத்தார் குரு. குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான். மந்திரத்தை மனதில் ஏற்றிக் கொண்டாயா? என்றார். முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே என்றான் சீடன். எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம் என்றார் குரு. கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் மந்திரத்தை சொல்லி முடித்தான் சீடன். மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார். உனது சுவடியில் உள்ளதை நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லையே என்றார் குரு. பதட்டம் அடைந்த சீடன் தனது சுவடியை காண்பித்து குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன் என்றான். இந்த சுவடியில் உள்ளதைப் படித்துத்தான் மனதில் உள்வாங்கினாயா? இதிலிருந்து தான் உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே? நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் சுவடியில் இருக்க கூடாதல்லவா? என்றார்.

சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை குழப்பத்துடன் குருவைப் பார்த்தான். குரு தொடர்ந்தார் சுவடியில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். ஸ்தூல வடிவில் இருக்கும் மந்திர எழுத்துக்களை சூட்சும நிலையில் இருக்கும் மனமானது சூட்சுமமாகவே எடுத்துக் கொண்டு நினைவில் வைத்துக் கொள்கிறது. அது போலவே இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கும் நைவேத்யம் ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான். சுவடியில் இருக்கும் எழுத்துக்களை நீ உள் வாங்கிய பின் சுவடியில் இருக்கும் மந்திரம் தனது அளவில் குறைந்து விட்டதா? அது போலதான் இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம். ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும் சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்தியம் உட்கொள்கிறோம் என்று விளக்கினார்.

புண்ணியம்

ஒரு காட்டில் சுதீவர் என்ற முனிவர் கடுந்தவம் செய்து வந்தார். அந்தப் பக்கம் வந்த இரு காட்டுவாசிகளில் ஒருவன் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்து விட்டான். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த மற்றொருவன் தவத்திலிருந்த முனிவரை எழுப்பி உதவி கேட்டான். தன் தவம் கலைந்த கோபத்தினால் முனிவர் காட்டுவாசியை சாம்பலாகப் போகும்படி சபித்தார். அந்தக் கணமே அந்தக் காட்டுவாசி எரிந்து சாம்பலாக மயக்கம் தெளிந்து எழுந்த மற்றொருவன் தனது சகாவின் நிலையைக் கண்டு கதறி அழுதான். இதற்குள் கோபம் தணிந்த முனிவரிடம் மற்றொரு ஆள் சாபத்தை நீக்குமாறு வேண்டினான். அதற்கு முனிவர் எனக்கு சாபம் கொடுக்கத் தெரியுமே தவிர சாபத்திலிருந்து மீட்கத் தெரியாது. நான் என் குரு சுசாந்தரிடம் அதைக் கற்று வருகிறேன். நீ அதுவரை உன் நண்பனின் சாம்பலை பத்திரமாகப் பாதுகாத்து வா என்று சொல்லிவிட்டு தன் குரு சுசாந்த முனிவரைத் தேடிச் சென்று நடந்தவற்றை விளக்கி பரிகாரம் கேட்டார். மனிதனின் முதல் விரோதி அவனது கோபம்தான். நீ கொடுக்கும் சாபத்தினால் உன் தவவலிமை குறைந்து விடும். உன் தவவலிமை முழுதும் தியாகம் செய்தால் உன் சாபத்தைத் திரும்பப் பெறலாம் என்றார். அதற்கு இணங்காமல் வேறு யோசனை சொல்லும்படிக் கேட்டார் சுதீவர்.

குரு சுதீவரிடம் விஷ்ணுபுரத்தில் மாதவன் என்ற புண்ணியாத்மா இருக்கிறான். அவன் இல்லறத்தில் இருப்பவன். அவனிடம் சென்று அவன் புண்ணியத்தில் ஒரு பகுதியை தானமாகப் பெற்றுக்கொள். அதைக் கொண்டு அந்தக் காட்டுவாசியை உயிர்ப்பிக்கலாம் என்றார். சுதீவர் அந்த மாதவனைத் தேடிச் சென்றார். செல்லும் வழியில் மிக அழகான ஒரு இளம் பெண் தென்பட்டாள். அவள் அழகில் மயங்கிய சுதீவர் அவளையே உற்றுப் பார்த்தார். அதனால் கோபமடைந்த அந்தப் பெண் முனிவரான நீ என் போன்ற பெண்ணை இப்படி உற்றுப் பார்க்கலாமா? உனக்கு வெட்கமாக இல்லையா? என்று கேட்டாள் சுதீவருக்குக் கடுங்கோபம் உண்டாயிற்று. அடி பெண்ணே உன் அழகினால் தானே உனக்கு இவ்வளவு கர்வம்? நீ அழகற்ற அவலட்சணமான பெண்ணாக மாறுவாய் என்று சபிக்க அந்தப் பெண்ணும் அவ்வாறே மாறிவிட்டாள். பிறகு சுதீவர் விஷ்ணுபுரத்தை அடைந்தார். வழியில் ஒரு இளைஞனிடம் மாதவனது வீட்டுக்கு வழி கேட்டார். அதறகு அந்த இளைஞன் மாதவனுடைய பெண் மிக அழகானவள் அதனால்தான் அவன் வீட்டுக்கு வழி கேட்கிறாயா? உன்னைப் போன்ற முனிவருக்கு இது தேவையா? என்று திமிராகக் கேட்டான். அவனை ஊமையாக வேண்டும் என்று சுதீவர் சபித்துவிட்டு ஒருவாறு மாதவனின் வீட்டைக் கண்டு பிடித்து அங்கு சென்றார் சுதீவர்.

மாதவன் சுதீவரை வரவேற்று அமரச் செய்தார். என் குருவான சுசாந்தர் தங்களை ஒரு புண்ணியவான் என்றார். நீங்கள் அப்படி என்ன தவம் செய்து என் குருவே புகழும்படி புண்ணியம் சம்பாதித்தீர்கள்? என்று கேட்டார். காலையில் எழுந்து என் நித்திய கடன்களை முடித்து விட்டு வீட்டு வேலைகளிலும் வெளி வேலைகளிலும் பங்கேற்கிறேன். எல்லாருக்கும் என்னாலான உதவிகளைச் செய்கிறேன். கோபம் பொறாமை ஆசை இவற்றை விட்டொழித்து மனதினாலும் வாக்கினாலும் உடலினாலும் பலருக்கும் நன்மை புரிகிறேன் என்றார் மாதவன். பூஜை புனஸ்காரம் தவம் இவை எதுவுமே செய்யாமல் இவனுக்கு எப்படி புண்ணியம் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் சுதீவர் நீங்கள் கடவுளை தியானம் செய்வது கிடையாதா? என்றார். கடவுள் என்னிலும் இருக்கிறார். மற்றவர்களிடமும் இருக்கிறார். சகல உயிர்களிலும் உறைகிறார். அவரைத் தனியாக பூஜையோ தியானமோ ஏன் செய்ய வேண்டும்? மற்றவர்களுக்கு உதவி செய்தாலே அது கடவுளுக்காக செய்யப்படும் பூஜை தியானம் தவம் அனைத்தும் ஆகும் என்றார் மாதவன்.

சுதீவருக்கு மாதவன் தன்னை ஏளனம் செய்கிறார் எனத் தோன்றியது. நான் செய்யும் தவமெல்லாம் வீண் வேலை என்று பொருட்படச் சொல்கிறீர்களா என்று கோபத்துடன் சுதீவர் கேட்டார். அதற்கு மாதவன் நான் உங்களைப் பற்றியோ உங்கள் தவத்தைப் பற்றியோ குறை கூறவில்லை. நான் என்னுடைய கருத்தைக் கூறுகிறேன் என்றார் பணிவுடன். கோபத்துடன் குதித்து எழுந்தார் சுதீவர். உன்னைப் போன்ற நாஸ்திகனை மன்னிக்கவே கூடாது. இந்த நிமிடத்திலிருந்து நீ கண்பார்வை இழந்து நடக்க முடியாமல் படுக்கையில் வீழ்வாய் என்று சாபமிட்டார். ஆனால் மாதவனுக்கு ஒன்றுமே ஆகவில்லை. மீண்டும் மாதவன் பணிவுடன் சுவாமி நீங்கள் சாந்தம் அடையுங்கள். உங்களைப் போன்ற மகான் கோபம் அடையும்படி நான் பேசியது தவறுதான் என்று மன்னிப்புக் கேட்டார். மாதவா என் சாபம் உனக்குப் பலிக்கவில்லை. நீ என்ன மகாத்மாவா என்றார் கோபத்துடன் சுதீவர். அப்படியில்லை சுவாமி காட்டுவாசி அழகான இளம்பெண் வழியில் கண்ட இளைஞன் ஆகியோருக்கு நீங்கள் சாபம் கொடுத்து தங்கள் தவவலியை இழந்து விட்டீர்கள். எனக்கு மட்டுமில்லை இனி நீங்கள் யாருக்கு சாபம் கொடுத்தாலும் அது பலிக்காது. போகட்டும் நீங்கள் என்னிடம் பெற வந்த புண்ணியத்தின் ஒரு பகுதியை உங்களுக்கு இப்போது நான் அளிக்கிறேன். அந்தப் புண்ணியத்தினால் நீங்கள் சாபமிட்டவர்கள் எல்லாருக்கும் இந்தக் கணத்திலிருந்து சாபம் நீங்கிவிடும். உங்கள் தவவலிமையை இந்த வினாடியிலிருந்து நீங்கள் மீண்டும் பெற்று விட்டீர்கள். நீங்கள் விரும்பினால் இப்போது எனக்கு சாபம் கொடுக்கலாம் அது பலிக்கும் என்றார்.

சுதீவர் தனது செய்கைகளினால் வெட்கமடைந்தார். தனக்கு அறிவைப் புகட்டிய மாதவனுக்கு நன்றி கூறிவிட்டு மவுனமாக தன் குருவைத் தேடிச் சென்றார். வரும் வழியில் தான் சாபமிட்டவர்கள் மறுபடியும் தன் நிலைக்கு மாறி இருப்பதை அவர் கண்டார். தனது குரு சுசாந்தரிடம் நடந்தவற்றைக் கூறி அதற்கு விளக்கம் கேட்டார். தவத்தினால் பல சக்திகளை அடையலாம். ஆனால் தன் கடமையைச் சிறப்பாக செய்பவனும் பிறருக்கு உதவி செய்வதையே லட்சியமாகக் கொண்டவனுமான ஒரு மனிதன் ஒரு தவயோகியை விட அதிகப் புண்ணியம் செய்தவன் ஆகிறான் என்றார். சுதீவர் மேலும் ஒரு சந்தேகம் வந்தது. தனது குருவிடமே கேட்க முடிவு செய்தார். குருவே இப்போது மாதவன் தான் செய்த புண்ணியத்தை தானம் செய்து விட்டான். ஆகையால் அவனுடைய சக்தியும் குறைந்து விடும் அல்லவா? என்று கேட்டார். மற்றவர்களுக்காகத் தன் புண்ணியத்தையே தானம் செய்தால் அதுவே பெரிய புண்ணியம். மாதவனின் சக்தி குறையவில்லை. முன்னைவிட இப்போது அதிகமாகி விட்டது என்றார் சுசாந்த முனிவர். குருவே முன்னைவிட என் தவவலிமையை அதிகமாக்குவேன். நான் மீண்டும் காட்டுக்குத் தவம் புரியச் செல்கிறேன் என்று கூறி விடை பெற்றார் சுதீவர்.

மனம்

ஒருவர் ஐம்புலன்களையும் அடக்கி ஆள வேண்டும் என்ற முடிவோடு ஒரு ஆற்றங்கரைக்கு சென்று அமைதியாக அமர்ந்தான். அப்போது அந்தப் பக்கம் அழகான ஒரு பெண் நடந்து சென்றாள். இவரும் எதேச்சையாக திரும்பி பார்த்தார். அந்த அழகை ரசித்தார். சிறிது நேரத்தில் இன்று இந்த கண் நம்மை ஏமாற்றி விட்டதே என்று எண்ணி வீட்டிற்கு வந்தார். ஐம்புலனில் முதலில் கண்ணை அடக்க வேண்டும் என்ற முடிவோடு அடுத்த நாள் ஆற்றங்கரைக்கு சென்று கண்ணை துணியால் கட்டி கொண்டு அமைதியாக அமர்ந்தார். சிறிது நேரத்தில் அதே பெண் தலையில் வாசனை மிக்க மலர்களை வைத்துக் கொண்டு சென்றாள். மலரின் வாசனை மூக்கை துளைத்தது. நேத்து வந்த அதே பெண்ணாக இருக்குமோ என்று தன் கண்ணைத் திறந்து பார்த்து அந்த அழகை ரசித்தார். இன்று இந்த மூக்கு நம்மை ஏமாற்றி விட்டதே என்று எண்ணி வீட்டிற்கு வந்தார். ஐம்புலனில் கண்ணோடு மூக்கையும் அடக்க வேண்டும் என்ற முடிவோடு அடுத்த நாள் ஆற்றங்கரைக்கு சென்று கண்ணை துணியால் கட்டி கொண்டு மூக்கையும் மூடிக்கொண்னு அமைதியாக அமர்ந்தார். சிறிது நேரத்தில் சலக் சலக் என்று ஒரு சலங்கை ஒலி. இவருக்கு நேற்று வந்த பெண்ணாக இருக்குமா என்று பார்த்து ரசித்து விட்டு காது நம்மை ஏமாற்றி விட்டதே என்று எண்ணி வீட்டுக்கு வந்தார். அடுத்த நாள் ஆற்றங்கரையில் கண் மூக்கு காது அனைத்தையும் கட்டிக் கொண்டு அமைதியாக அமர்ந்தார். சில நிமிடங்கள் சென்றது அவருக்குள் ஒரு கேள்வி எழுந்தது. இப்போது அந்த பெண் இந்தப் பக்கமாக நடந்து போய் இருப்பாளா இல்லையா என்று சிந்திக்க ஆரம்பித்தது அவரது மனம். இப்போது தான் அவருக்கு ஒன்று புரிந்தது. இந்த கண் காது மூக்கு வாய் உணர்வு என்று சொல்லக்கூடிய ஐம்புலன்களும் வெறும் அடியாட்கள் தான். இவற்றை அடக்கி உபயோகம் இல்லை. முதலில் அடக்க வேண்டியது மனதை தான் என்று உணர்ந்து கொண்டு அதற்கேற்ற பயிற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தார்.

அன்பு

ஒரு நாள் குருவும் அவரது சீடர்களும் ஒரு குளக்கரையில் அமர்திருந்தார்கள். அப்போது ஒரு சீடன் எழுந்து குருவிடம் ஒரு கேள்வி கேட்டான். குருவே சுயநலமிக்க அன்பிற்கும் சுயநலமில்லாத அன்பிற்கும் வித்தியாசம் என்ன? எனக்கு விளக்கமாக சொல்லுங்கள் என்றான். குரு சீடனுக்கு சுற்றிலும் பார்த்தார். ஒரு இளைஞன் குளக்கரையில் தூண்டிலைப் பிடித்துக் கொண்டு அமர்திருந்தான். அவனருகில் கூடையில் அவன் பிடித்துப் போட்ட மீன்கள் துடித்துக் கொண்டிருந்தது. குரு அந்த இளைஞனிடம் பேச்சு கொடுத்தார். தம்பி மீன் என்றால் ரொம்ப பிடிக்குமோ? என்றார். அவனும் ஆமாம் ஐயா மீன் என்றால் எனக்கு உயிர் பிடித்து வைத்த மீன்களையெல்லாம் இன்றிரவு என் மனைவியை சமைக்கச் சொல்லி ஒரு பிடி பிடிக்கப் போகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். குளத்தில் நிறைய மீன் கிடைக்கிறது என்றான். குருவோ எனக்கு வேண்டாம் தம்பி என்று புன்சிரிப்புடன் கூறி மறுத்து விட்டார். நடப்பதையெல்லாம் சீடன் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். அந்த இளைஞனும் சற்று நேரத்தில் மீன் பிடித்து விட்டு கிளம்பிவிட்டான்.

ஒரு வயது முதிர்ந்த பெரியவர் குளக்கரையை நோக்கி வருவதை குரு பார்த்து விட்டார். அவர் கையில் ஒரு வெள்ளை நிறப்பை இருந்தது. அதில் மீன்களின் உணவான பொரி இருந்தது. அந்த பெரியவர் குளக்கரையில் வந்து அமர்ந்தார். பையிலிருந்த பொரியை எடுத்து தண்ணீரில் தூவினார். நூற்றுக்கணக்கான மீன்கள் பொரி இருக்கும் இடத்தை எறும்புகள் போல மொய்த்தன. குரு அவரிடமும் பேச்சு கொடுத்தார். என்ன பெரியவரே மீன் என்றால் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? என்று சற்று முன் அந்த இளைஞனிடம் கேட்ட அதே கேள்வியை பெரியவரிடம் கேட்டார். பெரியவரும் ஆமாம் ஐயா மீன் என்றால் எனக்கு உயிர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வந்து இங்குள்ள மீன்களுக்கு உணவளிப்பேன் என்றார். குரு அவரிடம் பேசி முடித்து விட்டு சீடனின் பக்கம் திரும்பினார். பார்த்தாயா இருவரும் மீனின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார்கள் என்பது அவர்கள் மீனென்றால் உயிர் என்று கூறும் போதே தெரிந்திருக்கும். அந்த இளைஞன் மீன்களிடம் இருக்கும் ருசி என்னும் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டான். அவன் தன்னுடைய சந்தோஷத்தில் மட்டுமே கவனம் செலுத்தினான். ஆனால் அந்த பெரியவர் மீன்கள் பசியாறுவதற்கு சுயநலமில்லாமல் உணவளித்தார். இருவருக்கும் மீன்கள் பிடித்திருந்தது ஆனால் இருவரின் நோக்கம் வேறு. மொத்தத்தில் அன்பில் சுயநலம் இருந்தால் அது அன்பே இல்லை சுயநலமில்லாத அன்பு தான் உண்மையானது நிரந்தரமானது என்று சொல்லி முடித்தார்.

துறவியை மிஞ்சிய வேடன்.

ஆசைகள் நிறைந்த துறவி ஒருவர் காட்டில் இருந்தார். வாய்க்கு ருசியாக சாப்பிடுவதில் விருப்பம் உடையவர். அந்தக் காட்டில் வேடன் ஒருவன் இருந்தான் இந்தப் பிறவியில் எப்படியாவது இறைவனை அடைந்து விட வேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தான். வேடன் துறவியை சந்தித்து அடிபணிந்து சுவாமி நான் இறைவனிடம் செல்ல வேண்டும் எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்று கேட்டான். துறவி அவனைப் பார்த்துச் சிரித்து உனக்கும் உபதேசத்திற்கும் வெகு தூரம். அதுபற்றி அப்புறம் யோசிப்போம். நீ காட்டில் கிடைக்கும் தேன் பல வகையான பழங்கள் கிழங்குகள் இவைகளைக் கொண்டு வந்து எனக்குக் கொடு என்றார். வேடனும் துறவி கேட்ட பொருள்களைக் கொண்டு வந்து கொடுத்து வந்தான். ஒரு நாள் வேடன் துறவியிடம் தினமும் நீங்கள் கேட்ட பொருள்களைக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு உபதேசம் கொடுங்கள் என்றான். துறவி அப்போது மாம்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சாப்பிட்டு முடித்ததும் மாங்கொட்டையை வேடன் கையில் தந்து இது தான் சிவலிங்கம். இறைவனின் உருவம் இதற்கு பூஜை செய் என்றார். துறவியின் வாக்கை அப்படியே நம்பிய வேடன். குருவே நீங்கள் கூறியபடியே செய்கிறேன் என்று துறவியை விழுந்து வணங்கி மாங்கொட்டையை தன் இருப்பிடத்திற்கு கொண்டு வந்தான்.

தன்னுடைய இருப்பிடத்தில் தனியாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து சுத்தம் செய்து அங்கு மாங்கொட்டையை வைத்து தண்ணீரால் அபிஷேகம் செய்து பால் பழம் தேன் தினை மாவு வைத்து இறைவனே சாப்பிடுங்கள் என்றான். வெகு நேரம் கேட்டும் அவை அப்படியே இருந்ததால் வேடன் தன் உயிரைப் போக்கிக் கொள்ள எண்ணிக் கத்தியை எடுத்தான். வேடனின் உண்மையான நம்பிக்கையையும் அன்பையும் கண்டு உணவுப் பொருள்களை மறைத்து அருளினார் இறைவன். தினமும் இப்படியே வேடனின் பூஜை நடந்து வந்தது. ஒரு நாள் குருவைக் காண ஆவல் கொண்டு வேடன் தான் வணங்கி வரும் மாங்கொட்டைச் சிவலிங்கத்தையும் குருவுக்கு பிடித்த பழங்களையும் எடுத்துச் சென்றான். குருவை வணங்கித் தான் பூஜை செய்யும் விபரங்களையும் சொன்னான். வேடன் சொன்னதை எல்லாம் நம்பாத குரு பால் பழம் இறைவன் உண்ணுகிறானா எங்கே என் முன் செய்து காட்டு என்றார். குரு முன் தன் பூஜையைச் செய்தான் வேடன். நிவேதனப் பொருள்கள் மறைந்தன. பூஜை முடிந்தது என்ற சீடன் மாங்கொட்டையை எடுக்கச் சென்றான். அப்போது மாங்கொட்டை ஆகாயத்தில் பறக்கத் தொடங்கியது இதனைக் கண்ட வேடன் இறைவா என்னை விட்டு எங்கே செல்கிறீர்கள் என்று உள்ளம் உருகி மாங்கொட்டையை பிடித்துக் கொண்டான். அவனையும் தூக்கிக் கொண்டு மாங்கொட்டை மேலே உயர்ந்தது. மாங்கொட்டையுடன் வேடன் சொர்கத்திற்கு செல்கிறான் என்பதை உணர்ந்த குரு தானும் சொர்க்கம் செல்ல எண்ணி வேடனின் காலை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அப்போது மாங்கொட்டையில் இருந்து அசீரிரியாக இறைவன் பேச ஆரம்பித்தார். வேடன் காட்டிற்குள் இருந்து நிறைய பழங்கள் உனக்காகவும் அவனுக்காகவும் கொண்டு வந்திருக்கிறான். அதில் உள்ளவற்றில் உனக்கு எவ்வளவு வேண்டும் என்று கேட்டார். அதற்கு சாப்பிடுவதில் விருப்பம் கொண்ட துறவி இரண்டு கைகளையும் பெரிதாக விரித்து இவ்வளவு வேண்டும் என்று காண்பித்தார். வேடனின் கால்களில் இருந்து விடுபட்ட துறவி பூமியில் விழுந்து மண்ணைக் கவ்வினார்.இறைவனிடம் செல்ல வேண்டும் என்று விரும்பிய வேடன் சொர்க்க லோகம் சென்றான்.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

அரசன் ஒருவன் கோவிலில் தன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான். அவனது கிழிந்த உடைகளையும் குளிக்காத அழுக்கு உடலையும் பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றார்கள். இதை உணர்ந்த அந்த ஏழை இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நிற்போம் அனைவரும் அன்னதானம் பெற்றச் சென்ற பிறகு நாம் வாங்கிக் கொள்வோம் என்று தள்ளி நின்றான். நேரம் போய்க்கொண்டே இருந்தது. இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள். சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள். இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம். எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? எவ்வளவு போராட்டம்? எவ்வளவு இழிசொல்? சென்ற ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ இப்படி தவிக்கிறோமே? என்று தன் விதியை நொந்துகொண்டான். நீண்ட நேரம் காத்திருந்தான் இறுதியில் உணவு அனைத்தும் தீர்ந்து விட்டது. சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல அப்பனே ஆண்டவா என்ன தவறு செய்தேனோ தெரியவில்லை இப்படி ஒரு இழி பிறவியில் பிறந்து விட்டேன். எனக்கு ஏதேனும் நன்மை செய்யப்பா என்று கோவில் கோபுரத்தை பார்த்து வேண்டிக் கொண்டு கோவில் அருகே உள்ள குளத்தங்கரையில் அமர்ந்தான்.

அரசன் அன்னதானம் கொடுத்து முடித்து அந்த படித்துறையில் நடந்து வந்தார். அப்போது பரம ஏழை அரசனின் கண்ணில் பட்டான். என்னப்பா சாப்பிட்டாயா என்று அந்த ஏழையிடம் கேட்டார். தலை குனிந்து இருந்த ஏழை அரசனின் முகத்தைப் பார்க்காமல் கேட்பது அரசன் என்றும் தெரியாமல் ஊரே சாப்பிட்டது என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியுள்ளது என்று விரக்தியாக பதில் சொன்னான். அவன் சொன்ன பதில் ராஜாவின் மனதை உருக்கியது. என் பிறந்த நாளில் ஊர் மக்கள் யாரும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது என்று தானே அன்னதானம் ஏற்பாடு செய்தோம் ஒரு அப்பாவி ஏழை இப்படி விடுபட்டுள்ளானே என்று அவன் அருகில் சென்று அவன் தோளில் கை வைத்து உனக்கு பசிக்கிறதா எனக்கு உணவு கிடைக்கவில்லை என்றால் அது என் தவறு என்னை மன்னித்து விடப்பா என்றார். தன்னை தொட்டவரை திரும்பிப் பார்த்த பரம ஏழை தலையில் கிரீடம் காதல் குண்டலம் சுற்றிலும் பாதுகாவலர்கள் என்று அரசன் நிற்பதைக் கண்டு திடுக்கிட்டு எழுந்தான். அரசே நீங்கள் என்று தெரியாமல் அமர்ந்து கொண்டே பதில் சொல்லிவிட்டேன் மன்னிக்க வேண்டுகிறேன் என்று பதறி எழுந்தான். அரசர் சிரித்தபடியே என்னுடன் வா இன்று நீ என்னோடும் ராணியோடும் விருந்து உண்ணப்போகிறாய் என்று அவனை பேசவிடாமல் அரண்மணைக்கு அழைத்துச் சென்றார். தன்னுடைய புதிய ஆடைகளில் ஒன்றை அவனுக்கு கொடுத்தார். பரம ஏழை குளித்து புத்தாடை அணிந்தது வந்தான். அறுசுவை விருந்து கொடுத்தார். சாப்பிட்டு முடித்து அவன் கையில் ஒரு குடம் நிறைய பொற்காசுகளை கொடுத்தார். இன்றிலிருந்து நீ ஏழை இல்லை இந்த பணத்தை வைத்து நீ விரும்பும் தொழிலை நேர்மையாக செய்து கௌரவமாக வாழ்ந்து கொள் என்று வாழ்த்தினார்.

அரசரின் முன் இதுவரை அமைதியாக இருந்த ஏழையின் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. இதனை கண்ட அரசர் ஏனப்பா அழுகிறாய் என்று கேட்டார். அதற்கு பரம ஏழை நான் இது நாள் வரை பிறவி ஏழை என்று மட்டும்தான் நினைத்திருந்தேன். இப்போது நான் ஒரு பிறவி முட்டாள் என்று புரிந்து கொண்டேன் என்று சொன்னான். திடுக்கிட்ட அரசன் ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று கேட்டார். வாழ்க்கையில் இன்று தான் முதல் முறையாக கோவிலின் கோபுரத்தை பார்த்து எனக்கு ஏதேனும் நன்மை செய்யப்பா என்று ஆண்டவனிடம் வேண்டினேன் கேட்ட சில நிமிடங்களில் உங்களை அனுப்பி என் தலையெழுத்தையே இறைவன் மாற்றி விட்டான். இத்தனை வருடங்கள் இந்த கோவிலில் அமர்ந்திருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட கோபுரத்தை கண்டு வணங்கியதில்லை. கோபுர தரிசனத்தை கண்டு வேண்டியதற்கே இறைவன் என் வாழ்க்கையை மாற்றி விட்டார் என்றால் கோவிலின் உள்ளே சென்று கடவுளிடம் கேட்டால் முக்தியையே கொடுத்திருப்பார் என்று இதுவரை புரியாமல் ஒரு முட்டாளாகத்தானே இருந்துள்ளேன் என்று சொல்லி அழுதான்.

தகுதி

ஒரு ஊரில் ஒரு ஞானி இருந்தார் அவரிடம் இறந்தவர்களை உயிர்ப்பிக்க வைக்கும் மந்திரம் இருப்பதை தெரிந்து கொண்ட ஒருவன் அதனை எப்படியாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அவரிடம் வந்து சீடனாக சேர்ந்து அவருக்கு சேவை செய்தான். பல நாட்களுக்கு பிறகு ஞானி சீடனை அழைத்து உனது சேவையில் மகிழ்ச்சி அடைந்தேன் உனக்கு என்ன வேண்டும் சொர்க்கம் வேண்டுமா பிறவியில்லதா நிலை வேண்டுமா இறப்பில்லாத நிலை வேண்டுமா என்ன வரம் வேண்டும் கேள் தருகிறேன் என்றார். அதற்கு சீடன் எனக்கு சொர்க்கமும் வேண்டாம். இறப்பில்லா நிலையும் வேண்டாம். பிறவியில்லா நிலையும் வேண்டாம் தங்களுக்கு தெரிந்த இறந்தவரைப் பிழைக்க வைக்கும் மந்திரத்தை மட்டும் கற்றுத் தாருங்கள் என்று கேட்டான். அதற்கு ஞானி இந்த மந்திரத்தை உனக்கு சொல்லிக் கொடுத்தால் அந்த மந்திரத்தை வைத்து நீ என்ன செய்வாய். நீ இறந்தால் உன்னை நீயே உயிர்பித்துக் கொள்ள முடியாது. உனக்கு உபயோகப்படாது மேலும் உனக்கு ஆபத்தையும் விளைவிக்கலாம். மற்றவர்களை உயிர்ப்பிப்பதால் உனக்கு எந்த உபயோகமும் இல்லை. ஆகையால் உனக்கு உபயோகமாக வேறு எதேயாவது கேட்டு பெற்றுக் கொள் என்றார். அதற்கு சீடன் என்னுடைய மரணத்தைப் பற்றி நான் கவலைப் படவில்லை இறந்தவர்களை உயிர்ப்பிக்க வைக்கும் மந்திரத்தை அறிவதில்தான் எனக்கு ஆர்வம் உள்ளது. ஆகையால் அதனை எனக்கு சொல்லிக் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டான்.

ஞானி சீடனுக்கு எவ்வளவோ புத்திமதி கூறினார். சீடர்கள் கேட்பதாக இல்லை. மந்திரத்தை சொல்லிக் கொடுங்கள் இல்லை என்றால் எதுவும் வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்தான். இறுதியில் ஞானி அவனுக்கு அந்த மந்திரத்தை கற்றுக்கொடுத்தார். உடனே சீடன் அங்கிருந்து புறப்பட்டு அருகில் இருக்கும் கிராமத்திற்கு சென்றான். அன்றைய தினம் அந்த கிராமத்தில் இறந்தவர்கள் ஒருவரும் இல்லை. காட்டு வழியில் அடுத்த கிராமத்திற்கு சென்றான். காட்டுப் பகுதியில் செல்லும் போது ஒரு எழும்புக்கூடு கிடந்தது. மந்திரம் எவ்வாறு வேலை செய்யும் என்ற ஆர்வ மிகுதியில் இந்த எலும்புக் கூட்டிற்கு உயிரூட்டிப் பார்க்கலாம் என்று மந்திரத்தை உச்சரித்தான். அது ஒரு சிங்கத்தின் எழும்புக்கூடு மந்திரத்தின் வலிமையால் சிங்கம் உயிர் பெற்று சீடனை அடித்துக் கொன்றது.

கருத்து: ஏராளமான ஞானம் மறைத்துப் புதைக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் அது தவறானவர் கையில் கிடைத்து விடக்கூடாது என்பதற்காகத்தான். அவை தகுதி படைத்தவர்களுக்கே கிடைக்கும்.

நாக்கு

குரு ஒருவர் தன் குருகுலத்தில் தனக்கு தெரிந்த கலைகள் அனைத்தையும் மாணாக்கர்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். குரு குலத்தில் இருக்கும் மாணவர்கள் அனைவரையும் ஒரு நாள் பேச அழைத்தார். உங்களில் ஒருவரை தலைமை சீடனாக அறிவிக்கப் போகிறேன். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு எனக்கு தெரிந்த மேலும் பல சூட்சுமமான கலைகளை சொல்லிக் கொடுப்பேன். அதற்கான தகுதி உங்களில் யாருக்கு இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக 2 பரீட்சை வைக்கப் போகிறேன் என்று கூறி முதல் போட்டியை அறிவித்தார். உங்களுக்கு தெரிந்த உலகிலே இனிமையான ஒரு பொருளை கொண்டு வாருங்கள் என்று அறிவித்தார். மறு நாள் அனைவரும் ஆளுக்கொரு பொருளை கொண்டு வந்தார்கள். ஒருவன் தேனைக் கொண்டு வந்தான். இன்னொருவன் கரும்பைக் கொண்டு வந்தான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு இனிப்பான பொருளைக் கொண்டு வந்திருந்தார்கள். இறுதியாக வந்த ஒரு சீடன் தான் கொண்டு வந்திருந்த சிறிய பெட்டியை திறந்து காட்டினான். அதனுள் ஒரு ஆட்டின் நாக்கு இருந்தது. அதை பார்த்த குரு என்ன இது எதற்காக இதை இங்கே கொண்டு வந்தாய். இதுவா உனக்கு தெரிந்த இனிமையான பொருள் என்று கேட்டார். அனைவரும் இந்த சீடனைப் பார்த்து சிரித்தார்கள். சீடன் குருவே நீங்கள் உலகிலேயே இனிமையான பொருளை கொண்டு வர சொன்னீர்கள். நாவை விட உலகில் சிறந்த பொருள் வேறு ஏதுவும் எனக்கு தெரியவில்லை. மனிதனுடைய நாவை கொண்டு வர முடியவில்லை. அதனால் தான் மனிதனுடைய நாக்கின் குறியீடாக ஆட்டின் நாக்கை கொண்டு வந்தேன். நாவில் இருந்து தான் இனிமையான சொற்கள் வருகின்றன. அதை சோகத்தில் இருப்பவன் கேட்டால் மகிழ்ச்சி அடைகிறான். கோபத்தில் இருப்பவனும் சாந்தமடைகிறான். நோயாளி கேட்டால் குணம் அடைகிறான் என்றான். சீடனின் பதிலில் திருப்தி அடைந்த குரு இதில் நீ வெற்றி அடைந்தாய். வாழ்த்துக்கள் என்று கூறினார். மாணவர்கள் அடுத்த கேள்வி என்ன என்று கேட்டார்கள்.

குரு உலகிலேயே கசப்பான ஒரு பொருளை கொண்டு வாருங்கள் என்று கூறினார். மறுநாள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கசப்பான பொருளை கொண்டு வந்தார்கள். ஒருத்தன் வேப்பங்காயை கொண்டு வந்தான் இன்னொருவன் எட்டிக்காயை கொண்டு வந்தான். இறுதியாக இந்த சீடன் வந்தான். அவன் கையில் அதே பெட்டி இருந்தது. அதை திறந்து காட்டினான். அதே ஆட்டின் நாக்கு இருந்தது. இதனைக் கண்ட குரு என்ன இது இனிமையான பொருளை கேட்டேன் நேற்று காட்டிய அதே நாக்கை மீண்டும் கொண்டு வந்திருக்கிறாய். கசப்பான பொருளை கேட்டதற்கும் நாக்கை கொண்டு வந்திருக்கிறாயே இதன் அர்த்தம் என்ன என்று கேட்டார். சுற்றி இருந்த மாணவர்கள் மீண்டும் சிரித்தார்கள். சீடன் அமைதியாக பதில் சொல்ல ஆரம்பித்தான் தீய சொற்களை பேசும் நாக்கை போல கசப்பான பொருள் உலகில் எனக்கு தெரிந்து இல்லை அதில் இருந்து வரும் சொற்களைக் கேட்டால் மகிழ்ச்சியாய் இருப்பவனும் துயரம் கொள்கிறான். நட்பாக இருப்பவனும் பகையாக மாறுகிறான். எனவே நாக்கு தான் உலகிலேயே கசப்பான பொருள் என்று கூறினான். சீடனின் அறிவைக் கண்டு வியர்ந்த குரு தலைமை சீடனாக அறிவித்து தனக்கு தெரிந்த சூட்சுமமான கலைகளை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்.

நாக்கு சொர்கத்தின் திறவு கோலும் அது தான். நரகத்தின் வாசல் படியும் அது தான்

ஜடபரதன்

பரதன் என்ற ஒரு நாட்டு அரசன் காட்டில் தவ வாழ்வு மேற்கொள்ள நாட்டைத் துறந்தான். தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒரு நிறைமாத கர்பிணியாய் இருக்கும் மான் ஒன்று ஆற்றில் நீர் அருந்துவதை பார்க்கிறார். மான் அதன் தாகம் தீர்ந்தவுடன் கரையேற முற்படும் போது ஒரு சிங்கத்தின் கர்ஜனையை கேட்டது. மானுக்கு குலை நடுங்கி விட்டது. இதனால் தண்ணீருக்குள்ளேயை தன் குட்டியை ஈன்றது. அந்த மான் குட்டி ஆற்றின் நீரிலேயே விழுந்து மிதந்து போனது. தன் கண்ணெதிரே கன்று மிதந்து போவதை பார்த்து தாய் மான் கலங்கி உருகி வருந்தியது. சிங்கம் மானை துரத்த ஆரம்பிக்க சிங்கத்திடம் இருந்து தப்பிக்க வேறு வழியில்லாமல் காட்டிற்குள் ஓடி விட்டது. நீரில் சென்ற குட்டி மானை பார்த்த பரதன் அதன் மீது ஈரக்கம் கொண்டு அதனை காப்பாற்றி அன்புடன் வளர்க்க ஆரம்பித்தார். ஆசிரமத்தின் அருகாமையில் இருந்த இளம்புற்களை மேய்ந்து கொண்டும் புலியைக் கண்டால் பயந்து ஆசிரமத்துக்கு ஓடி வந்து ஒளிந்து கொண்டும் காலையில் புறப்பட்டு மேய்ந்து விட்டு மாலையில் ஆசிரமத்திற்குத் திரும்பி வந்து தங்கிக் கொண்டும் அந்த மான் வளர்ந்து வந்தது. அந்த மான் ஓடி விளையாடுவதைக் கண்ட பரதரின் மனம் மானின் மீது பற்றும் பாசமும் உண்டானது. ராஜ்யம் மக்கள் முதலிய பந்த பாசங்களை விட்டு தவம் செய்ய வந்த பரதன் மான் மீது மிகவும் அபிமானம் கொண்டிருந்தார். மாலை தனது இருப்பிடம் மான் வரவில்லை என்றால் நம்முடைய மான்குட்டியைக் காணவில்லையே? அதைச் புலி அடித்து சாப்பிட்டு விட்டதோ சிங்கம் அடித்து சாப்பிட்டு விட்டதோ இன்னமும் வரவில்லையே? என்ன செய்வேன்? என்று வருந்துவார். மான் குட்டி மேய்ச்சலுக்கு சென்று திரும்பும் வரை அதன் நினைவாகவே இருந்து தவவாழ்வினை மறந்தார். இந்நிலையில் அவருக்கு மரண காலமும் நெருங்கியது.

பரதனை அவரது அன்பு மகன் பார்ப்பதைப் போல அந்த மான் குட்டியானது கண்ணில் கண்ணீர் ததும்ப பார்த்துக் கொண்டிருந்தது. அதுபோலவே பிரியமான மகனைத் தந்தை பார்ப்பது போல பரதரும் கண்ணீர் ததும்ப மான்குட்டியைப் பார்த்துக் கொண்டே தன் உடலை விட்டார். அதனால் மறுபிறவியில் அவர் கங்கைக் கரையில் ஒரு மானாகப் பிறந்தார். ஆனாலும் தன் தவத்தின் பயனால் பூர்வ ஜன்ம ஞானமுடையவராக இருந்தார். மான் மீது வைத்த பற்றினால் தன்னுடைய தவ வாழ்க்கையை இழந்து விட்டோமே என்று எண்ணி வருத்தப்பட்ட அவர் தான் முன்பு வாழ்ந்த இடத்திற்கு வந்து அங்குள்ள உலர்ந்த புற்களையும் சருகுகளையும் தின்று மானாகப் பிறக்க காரணமான கர்மங்களைக் கழித்து அங்கேயே மரணமடைந்தார். பிறகு அந்த ஊரிலேயே பிராமணர் குலத்திலே பூர்வ ஜன்ம வாசனையோடு பிறந்தார். பூர்வ புண்ய ஞானத்தால் சகல சாஸ்திரங்களின் உண்மையை உணர்ந்தவராய் எல்லாவிதமான ஞானத்திலும் தேர்ச்சி பெற்றார். ஆத்ம ஞானியாக இருந்ததால் எந்தவொரு செயலையும் செய்யாமல் அழுக்கு நிறைந்த உடம்போடும் அழுக்கேறிய கந்தை ஆடைகளோடும் காண்பவர்கள் அருவருத்து அவமதிக்கும்படி நடந்து கொண்டார். யாரேனும் அருகில் வந்தால் அவர்கள் மீது பற்று வந்து மீண்டும் பிறவி எடுக்க வேண்டி வருமோ என்று எண்ணி இது போல் நடந்து கொண்டார். மூடனைப் போலவும் பித்தனைப் போலவும் நீண்ட ஜடாமுடியுடன் சுற்றி திரிந்து கொண்டிருந்த இவரை ஊரார் ஜடபரதர் என்ற பெயர் கொடுத்தார்கள்.

ஜடபரதன் ஒரு ஆத்ம ஞானி என்பதை அறிந்து கொண்ட சவ்வீர ராஜன் என்பவன் இவரை காளிக்கு இவரை பலியிட்டால் பல சக்திகள் கிடைக்கும் என்று எண்ணி அவரைக் காளிக்கு நரபலியிட நிச்சயித்து இரவில் அவரைப் பிடித்துக் கொண்டு சென்றான். பலியிடுவதற்குரிய அலங்காரங்களை எல்லாம் அவருக்குச் செய்து காளியின் திருக்கோயிலின் எதிரே கொலை செய்யும் இடத்தில் கொண்டு நிறுத்தினான். காளியானவள் இவர் மகாயோகி என்பதையறிந்து அவரைப் பலியிட வந்த அந்தக் கொடியவனையே தன் கத்தியினால் வெட்டினாள்.

ஜடபரதன் இருந்த நாட்டின் சௌவீரன் என்ற மன்னன் கபிலர் என்ற ரிஷியிடம் துக்கமயமான சம்சாரத்தில் எது உயர்ந்தது என்ற தனது சந்தேகத்தை போக்கிக் கொள்ள வேண்டும் என்று அவரை சந்திக்க தனது பல்லக்கில் சென்று கொண்டிருந்தான். பல்லக்கு தூக்குவதில் ஒருவனுக்கு உடல் சரியில்லாமல் போனது. பல்லக்கு தூக்குவதற்கு ஒருவரை மன்னனது சேவகர்கள் தேடினார்கள். அருகில் இருந்த ஜடபரதரை கண்ட அவர்கள் அரசனுடைய பல்லக்கை தூக்குமாறு கட்டளையிட்டார்கள். சகல ஞானமும் உணர்ந்தவராக ஜடபரதர் இருந்தாலும் தமது முற்பிறவிப் பாவங்களைத் தொலைக்க அவர் பல்லக்கை தூக்கி நடக்க ஆரம்பித்தார். பல்லக்கு தூக்கும் மூவரும் ஒரே வேகத்தில் நடக்க இவரது வேகம் சற்று வித்தியாசப்பட்டது. இதனால் பல்லக்கு நிலையின்றி தடுமாறி சென்றது. இதனைக் கண்ட மன்னன் பல்லக்கு சரியாக செல்லாததற்கு காரணம் ஜடபரதர் என்று எண்ணினார். என் பல்லக்கைச் சிறிது தூரம் தானே நீ சுமந்திருக்கிறாய் அதற்குள் உடல் களைத்து விட்டதோ? உடல் பருத்திருக்கும் உன்னால் மன்னனான என்னை வைத்து இந்த பல்லக்கை தூக்க முடியவில்லையா? என கோபமாக கேட்டார். அதற்கு ஜடபரதர் நீங்கள் மன்னரும் இல்லை. நான் பருத்தவனும் அல்ல. உனது பல்லக்கை நான் சுமக்கவும் இல்லை. அதனால் நான் களைப்படையவும் வில்லை என்றார். இந்த வார்த்தைகளைக் கேட்டு வியப்படைந்த அரசன் பல்லக்கிலிருந்து இறங்கி அம்மனிதனைப் பார்த்தான். என்னை மன்னித்து விடுங்கள் ஞானியான அந்தணரை அவமதித்த பாவம் என்னைச் சேரும் என அஞ்சுகிறேன். தங்கள் பேச்சுக்கள் என் மனத்தில் ஐயங்களை எழுப்பியுள்ளன. தாங்கள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் என் கண்ணால் கண்டவற்றை மறுக்கின்றன. தயவு செய்து தங்கள் வார்த்தைகளின் உள்ளர்த்தம் என்னவென்பதை விளக்குங்கள் என்று பணிவுடன் வேண்டினான்.

ஜடபரதன் பேச ஆரம்பித்தார். உடல் வேறு உள்ளிருக்கும் ஆத்மா வேறு உடல் ஒவ்வொருவருக்கும் மாறிக் கொண்டே இருக்கும். குழந்தைப் பருவம் இளமைப் பருவம் முதுமைப் பருவம் என்ற கட்டங்களைக் கடந்து முடிவில் பஞ்சபூதங்களில் கலந்து விடும். நிலையில்லாத இந்த உடலைப் பார்த்து நீங்கள் பருத்தவன் என்று சொன்னீர்கள். அதனால் நான் பருத்தவன் இல்லை என்றேன். ஆனால் உடலுக்குள்ளிருக்கும் ஆத்மா அழிவற்றது. எப்போதும் மாறாதது. என்னையும் என் உடலையும் பல்லக்கையும் அதில் அமர்ந்துள்ள உங்களையும் இந்த பூமி சுமக்கிறது பூமியை யார் சுமக்கிறார்கள்? அறிவியல் ரீதியாக அணுக்கள் சுமக்கின்றன எனலாம். ஆனால் ஜடப்பொருளான அணு தானாக இயங்காது. அதை இயக்குபவன் அணுவைக் காட்டிலும் நுண்ணியதாக இருந்து இறைவன் இயக்குகின்றான். ஓர் உயிருக்கு இறைவன் வேறு இந்த உலகத்தில் வாழும் உயிர்கள் வேறு என்ற எண்ணம் அவனது கர்மங்களால் உண்டாகிறது. தவத்தின் வழியாக இந்த கர்மங்களை நீங்கியதும் இந்த வேறுபாடு நீங்கி விடும் அதன் பிறகு இந்த உலகத்தில் வாழும் உயிர்களுக்குள் இருக்கும் ஆத்மாக்கள் அனைத்திற்கும் ஒருவருகொருவர் உருவத்தில் வேற்றுமை கிடையாது. அனைத்திற்கும் மூலமாக இருப்பது பரமாத்மாவான இறைவனே என்று உணர்ந்து கொள்ளலாம் என்றார்.

ஜடபரதன் தொடர்ந்து பேசினார். அடுத்து நீங்கள் மன்னன் இல்லை என்றேன். உண்மையே நீங்கள் இந்த நாட்டுக்கு மட்டும் மன்னன். உங்களை விடப் பெரிய அரசர்கள் உள்ளனர். அவர்களை விட பெரிய அரசர்களும் உள்ளார்கள். அனைவரையும் ஆளும் அரசன் ஒருவன் இருக்கிறான் அவனே இறைவன். பந்தம் பாசத்தினால் உறவு என்ற எண்ணத்தில் நிலையில்லாத ஒரு உடலின் மீது பற்று வைத்துக் கொண்டு நாம் ஆசைகளை வளர்த்துக் கொண்டு துன்பங்களுக்கு ஆளாகிறோம் என்றார் ஜடபரதர். இந்த ஞானத்தை எப்படி பெறுவது என்று மன்னன் கேள்வி கேட்டான். அதற்கு ஜடபரதன் பார்க்கும் உயிர்கள் மற்றும் அசையும் பொருள் அசையா பொருள் அனைத்துமே இறைவனே என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் இந்த ஞானத்தை விரைவில் பெறலாம் என்றார். மன்னன் தெளிவடைந்து ஆன்மீக மார்க்கத்தில் பயணிக்க ஆரம்பித்தான்.