பரமாத்மா

அந்தக் காலத்தில் புனித யாத்திரையாக கங்கையிலிருந்து காவடியில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு வந்து ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாதருக்கு அபிஷேகம் செய்வார்கள். பின் ராமநாதபுரத்தின் கடற்கரை மண்ணை எடுத்துக் கொண்டு போய் காசியில் சேர்ப்பார்கள். ஏகநாதர் சில பிராமணர்களுடன் கங்கா ஜலத்தைக் காவடியில் எடுத்துக்கொண்டு ராமநாதபுர மாவட்டத்தை நோக்கி இரண்டாயிரம் மைல் வரை வந்து விட்டார். ராமநாதபுரம் இன்று மாதிரியே அந்த காலத்திலும் தண்ணீரில்லாமல் வெறும் மணல்வெளியாக பாலைவனமாகத்தான் இருந்தது. அங்கே ஒரு கழுதை வெயில் தாங்க முடியாமல் தண்ணீர் தாகத்துடன் தண்ணீருக்காக வாயை ஆ வென்று திறந்து கொண்டு மணலில் புரண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

ஏகநாதர் தன்னுடைய காவடியில் இருக்கிற கங்கா ஜலத்தை எடுத்து அந்தக் கழுதையின் வாயில் ஊற்றி கழுதையின் தாகத்தை தீர்த்து அதனை காப்பாற்றினார். அவருடன் வந்தவர்கள் நீ மகாபாவி எங்களுடைய கூட்டத்திலிருந்து உன்னை விலக்கப் போகிறோம். ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்ய அவ்வளவு தூரத்திலிருந்து கொண்டு வந்த தீர்த்தத்தை ஒரு கழுதைக்குக் கொடுத்து விட்டாயே என்று திட்டினார்கள். அதற்கு ஏகநாதர் உங்களுக்கு இன்னும் அஞ்ஞானம் போகவில்லை. நான் எந்த ராமநாதேஸ்வரரைத் தேடி வந்தேனோ அவர் நான்கு மைல் முன்னாலேயே வந்து என்னிடம் இருக்கிற கங்கைத் தீர்த்தத்தை வாங்கிக் குடித்தார் கடவுள் இல்லாத வஸ்து உலகத்தில் எதுவுமே இல்லை. உலகத்தில் உள்ள எல்லாமும் எல்லோரும் பரமாத்மாதான் என்றார்.

அமைதி

பாண்டுரங்கனின் பக்தரான ஏகநாதர் ஒரு நாள் கங்கையில் நீராடி கரைக்கு வந்தார். அவர் மீது வெறுப்பு கொண்ட முரடன் ஒருவன் வம்புக்கு இழுக்க எண்ணினான். ஏகநாதர் மீது வெற்றிலை எச்சிலை உமிழ்ந்தான். ஆனால் ஏக நாதர் கோபம் கொள்ளவில்லை. விட்டல விட்டல என்று பாண்டுரங்கனின் நாமத்தை ஜெபித்தபடி கங்கையில் மீண்டும் நீராடச் சென்றார். இப்படி ஒரு முறை இரு முறை அல்ல. கணக்கு வழக்கில்லாமல் தொடர்ந்து செய்தான். ஆனால் ஏகநாதர் திரும்ப திரும்ப குளிக்கவே கங்கையில் இறங்கினார். ஒரு கட்டத்தில் அவரது பொறுமை கண்டு மனம் திருந்தி சுவாமி என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லி காலில் விழுந்தான். அதற்கு ஏகநாதர் நான் ஏன் உன்னை மன்னிக்க வேண்டும் கங்கையில் பல முறை நீராடும் வாய்ப்பு உன்னால் அல்லவா கிடைத்தது. அதனால் உனக்கு நான் தான் நன்றி சொல்வேன் என்று பதிலளித்தார். இதனை கவனித்து வந்த ஒரு மனிதர் ஏகநாதரிடம் சென்று சுவாமி உங்களால் எப்படி இப்படி அமைதியாக எதிலும் பாதிக்கப்படாமல் இருக்க முடிகிறது இதன் ரகசியம் என்ன என்று கேட்டார்.

ஏகநாதர் அவரையே உற்றுப் பார்த்து விட்டு நீ உன் கையைக் காட்டு என்றார். அந்த மனிதரும் தன் கையை நீட்டினார். அவரது ரேகைகளை ஆராய்ந்த ஏகநாதர் உனக்கு இன்னும் ஏழு நாட்கள் ஆயுள் தான் பாக்கி இருக்கிறது பின்பு இறந்து விடுவாய் என்றார். அந்த மனிதருக்கு அதிர்ச்சி மனம் நொந்தார். ஏகநாதரின் அமைதியின் ரகசியம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை விட அதிகமாய் உயிர்பயம் அவருக்குள் வந்தது. ஞானிகள் எக்காலத்தையும் அறிய வல்லவர்கள் என்பதால் அவருக்கு ஏகநாதர் சொன்னதில் எந்த சந்தேகமும் இல்லை. அவசரமாக வீட்டுக்குச் சென்றார். மனைவி மக்களிடம் தகவலைச் சொன்னார். குடும்பம் அழுதது. அவரும் வருத்ததில் ஆழ்ந்தார். ஆனால் அழுது புலம்பி எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்த அந்த மனிதர் வருத்தத்தை எல்லாம் சீக்கிரமே மூட்டை கட்டி வைத்து விட்டு சாவதற்குள் செய்து முடிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்ய ஆரம்பித்தார்.

ஏகநாதர் சரியாக ஒரு வாரம் கழித்து அந்த மனிதரை அவர் வீட்டில் சந்தித்தார். அந்த மனிதர் மிகுந்த அமைதியுடன் இருந்தார். நான் செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டு மரணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார் அவர். ஏகநாதர் சொன்னார். நீ இப்போது எந்த மனநிலையில் இருக்கிறாயோ அதே மனநிலையில் நான் எப்போதும் இருக்கிறேன். மரணம் வரும் எல்லாம் முடிந்து போகும் என்ற உண்மையை உணர்வதால் கிடைக்கும் அமைதியே அலாதியானது. அதற்கு பிறகு எதுவும் பெரிய விஷயமாகத் தோன்றுவதில்லை. எதுவும் அதிகமாக பாதிப்பதில்லை. இதைச் சொன்னால் புரியாது அனுபவத்தில் மட்டுமே உணர முடியும் என்பதற்காகத் தான் நான் உன் கேள்விக்குப் பதிலாக உன்னிடம் ஏழுநாட்கள் மட்டுமே ஆயுள் பாக்கி உள்ளது என்றேன். உண்மையில் உனக்கு தீர்க்காயுள் இருக்கிறது. நீ நீண்ட காலம் வாழ்வாய் என்று சொல்லி விட்டு வாழ்த்தி விட்டு சென்றார்.

உயர்ந்த எண்ணம்

ஓர் ஊரில் ஒரு திருடன் இருந்தான். நள்ளிரவில் வீடுகளில் புகுந்து திருடுவது அவன் வழக்கம். திருடித் திருடி அவன் திருட்டுத் தொழிலில் தேர்ந்தவனாகி விட்டான். எல்லா வீட்டிலும் திருடியவன் அரண்மனையில் அரசனிடத்தில் ஏதாவது திருடிவிட வேண்டும் என்று ஒரு நாள் தோன்றியது. அரண்மனையில் புகுந்து யாரிடமும் அகப்படாமல் அரசனுடைய பொருளைத் திருடிக்கொண்டு வந்துவிட்டால் தான் பெரிய திறமைசாலி என்று சொல்லிக் கொள்ள முடியும் என்று அவன் நினைத்தான். திட்டமிட்டபடி அவன் ஒரு நள்ளிரவில் அரண்மனைக்குள் புகுந்தான். எப்படியோ அரண்மனைக் காவலாளிகள் கண்ணில் படாமல் உள்ளே நுழைந்து விட்டான். அரசனுடைய படுக்கையறை அருகிலும் சென்று விட்டான். அப்போது அரசன் அரசியுடன் பேசிக்கொண்டிருந்தான். பேசி முடித்து உறங்கட்டும் என்று திருடன் வெளியே ஓர் இருட்டு மூலையில் ஒளிந்து காத்துக் கொண்டிருந்தான்.

அந்த அரசன் தெய்வபக்தியுடையவன். தெய்வபக்தியைக் காட்டிலும் அவனுக்கு சிவனடியார் பக்தி அதிகம். தெய்வத்தை வணங்குகின்ற பக்தர்களை அந்த அரசன் தெய்வமாகவே எண்ணி வணங்குவான். அந்த அரசனுக்கு ஓர் அழகான மகள் இருந்தாள். இளவரசியான அந்த மகள் திருமண வயதை அடைந்தாள். அதனால் அவளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று அரசி ஆசைப்பட்டாள். அன்று இரவு தன் மகள் திருமணத்தைப் பற்றி அரசனிடம் பேசத் தொடங்கினாள். அரசே நம் மகள் திருமண வயதையடைந்துவிட்டாள். விரைவில் அவளுக்கு நல்ல மாப்பிள்ளை ஒருவனைப் பார்க்க வேண்டும் என்றாள் அரசி. நம் மகளுக்கு நாம் பார்க்கும் மாப்பிள்ளை ஒரு தெய்வ பக்தராக இருக்க வேண்டும். நம் ஊர் ஆற்றங்கரையிலே சாமியார்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவருக்கு நம் மகளைத் திருமணம் செய்து வைக்க வேண்டும். தெய்வத்தின் அருளால் பிறந்த நம் மகளைத் தெய்வபக்தர் ஒருவருக்குக் கொடுக்கவே விரும்புகிறேன் என்றான் அரசன். தங்கள் விருப்பமே என் விருப்பம் என்றாள் அரசி. நாளையே நான் ஏற்பாடு செய்கிறேன் என்றான் அரசன்.

அதற்குப் பிறகு அவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு உறங்கி விட்டார்கள். வெளியில் ஒளிந்திருந்த திருடன் அவர்கள் பேச்சைக் கேட்டு ஒரு திட்டம் போட்டான். இளவரசியை மணம் புரியும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. நாளை ஆற்றங்கரைக்குப் போய் சாமியார்களோடு சாமியாராய் உட்கார்ந்துவிடலாம். வாய்ப்பு இருந்தால் இளவரசியின் கணவன் ஆகிவிடலாம். அதனால் அரசருக்கு வாரிசும் ஆகிவிடலாம் என்று எண்ணிக்கொண்டே திருடன் அங்கிருந்து கிளம்பிதந்திரமாய் அரண்மனையை விட்டு வெளியேறி விட்டான்.

மறுநாள் அவ்வூர் ஆற்றங்கரையில் சாமியார் வேடத்துடன் போய் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டான். அரண்மனை அதிகாரிகள் வந்தார்கள். ஆற்றங்கரையில் மரங்களின் அடியில் ஆங்காங்கே உட்கார்ந்து இறைவனை நோக்கித் தொழுதுகொண்டிருந்த ஒவ்வொருவரிடமாகச் சென்றார்கள். ஐயா தாங்கள் எங்கள் அரசன் மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்கள். குடும்ப வாழ்க்கையே வேண்டாம் என்று வந்திருந்த அந்த உண்மையான சாமியார்கள் இளவரசியைத் திருமணம் செய்துகொள்ள மறுத்து விட்டார்கள். அதிகாரிகள் அரசருடைய விருப்பத்தை எவ்வளவோ எடுத்துக்கூறியும் அந்தச் சாமியார்கள் ஒப்புக் கொள்ளவில்லை. சாமியார் வேடத்தில் இருந்த திருடனிடம் வந்தார்கள். மற்ற சாமியார்கள் மறுத்துவிட்டதைக் கவனித்த திருடன் தான் உடனே ஒப்புக்கொண்டால் ஐயம் தோன்றக் கூடும் என்று எண்ணி முதலில் மறுத்து விட்டான். ஆனால் அதிகாரி மேலும் மேலும் வேண்டியபோது இப்பொழுது ஒப்புக் கொள்ளலாமா இன்னும் சிறிது நேரங்கழித்து ஒப்புக்கொள்ளலாமா என்று நினைத்துக் கொண்டே பதில் பேசாமல் இருந்தான்.

அதிகாரிகள் அரசனிடம் திரும்பிச் சென்றார்கள். மன்னவா எந்தச் சாமியாரும் இளவரசியைத் திருமணம் புரிய ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் இளம் வயதுடைய ஒரு சாமியார் இருக்கிறார். தாங்களே நேரில் வந்து கேட்டுக்கொண்டால் ஒருவேளை அவர் ஒப்புக்கொள்ளக் கூடும் என்றார்கள். இதைக் கேட்ட அரசன் உடனே ஆற்றங்கரைக்குப் புறப்பட்டான். அதிகாரிகள் சுட்டிக்காட்டிய சாமியார் வேடத்தில் இருந்த திருடனிடம் வந்தான். தன் விருப்பத்தை எடுத்துக் கூறினான். திருடன் அப்பொழுது சிந்தித்தான். சாமியார் வேடத்தில் இருக்கும் என்னை அரசனே வந்து கெஞ்சுகிறான். வேடத்தில் இருக்கும்போதே இவ்வளவு பெருமையிருந்தால் உண்மையான சாமியாராக இருந்தால் எவ்வளவு பெருமையுண்டாகும். அரசன் மகள் எனக்கு வேண்டாம். இன்று முதல் நான் உண்மையான சாமியாராகவே ஆகிவிடுகிறேன். இனி எனக்கு எல்லாம் கடவுளே என்று மனந்திருந்திய திருடன் அரசன் மகளை மணக்க மறுத்து விட்டான். அரசன் திரும்பச் சென்று விட்டான். அந்தத் திருடனோ உண்மை பக்தனாகி பிற்காலத்தில் ஒரு பெரிய மகான் ஆகிவிட்டான்.

நீதி: உயர்ந்தவர்களைப் போல் வேடம் போடுபவர்களுக்கு சில சமயங்களில் உயர்ந்த எண்ணங்களும் உண்டாகும். உயர்ந்த எண்ணங்கள் ஒருவனை உயர்நிலைக்குக் கொண்டு செல்லும்.

கர்மவினை

ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலருக்கும் தானம் அளிப்பதில் பெரும் விருப்பமுடைய நல்ல மன்னன். குறிப்பாக, பிராமணர்களுக்கு அன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன். ஒரு நாள் அதே போல அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான். அவன் செய்து கொண்டிருந்த இடத்துக்கு மேலே ஒரு கழுகு ஒரு பாம்பைக் கொன்று அதைத் தன் அலகில் பிடித்தவாறு பறந்து கொண்டிருந்தது. மன்னன் உணவளிக்கும் பாத்திரத்தைக் கடந்த நேரத்தில் கழுகின் அலகிலிருந்த செத்த பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி கடுமையான விஷம் அந்தப் பாத்திரத்தில் இருந்த உணவுக்குள் விழுந்தது. சரியாக அந்த விஷம் இருந்த உணவைப் பெற்று உண்ட ஒரு பிராமணன் அதனால் இறந்து போனான்.

இறந்த பிராமணன் யமலோகத்தில் சித்திரகுப்தன் முன்பு கொண்டு செல்லப்பட்டான். சித்திரகுப்தனுக்கு அந்த அந்தணன் இறந்ததற்கான கர்மவினையை யார் மேல் சுமத்தி அதற்கான தண்டனையை வழங்குவது என்று புரியவில்லை. பாம்பின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது இறந்து போயிருந்தது. கழுகின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது தன் உணவை சுமந்து கொண்டு பறந்து கொண்டிருந்தது. சரி அடுத்தது மன்னன். மன்னன் தானம் கொடுக்கும் புண்ணிய மனம் படைத்தவன். அவன் உணவில் விஷம் கலந்தது தெரியாமல் அதை அந்தணனுக்கு வழங்கினான். அப்படியானால் இந்தப் பாவம் யாரை சேரும்? குழம்பிப் போன சித்திரகுப்தன் யமதர்மனிடம் சென்று தன் சந்தேகத்தை கேட்டான். யமதர்மனும் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தான். அதன் பின் சித்திரகுப்தா இதைப் பற்றி நீ பெரிதாக எண்ணாதே இந்தக் கர்ம வினையின் தண்டனையை யாருக்கு வழங்க வேண்டுமென்று சிறிது காலத்தில் தானாகவே உனக்குத் தெரிய வரும் என்றான். சரி என்று சித்திரகுப்தனும் திரும்பினான்.

அந்த நாட்டிற்கு நான்கு அந்தணர்கள் அரண்மனையைத் தேடி வந்து கொண்டிருந்தனர். வழி தெரியாமல் அங்கு பானை விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அரண்மனைக்கு செல்லும் வழியைக் கேட்டனர். அந்தப் பெண்ணும் சரியான வழியை விரலை நீட்டிக் காட்டினாள். அத்துடன் அவள் அந்த அந்தணர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். இந்த மன்னன் அந்தணர்களை சாகடிப்பது போலத் தெரிகிறது என்றும் சொன்னாள். அந்தக் காட்சியைக் கண்ட சித்திரகுப்தன் தன் சந்தேகத்துக்கு விடை கிடைத்து விட்டதென்று மகிழ்ந்து அந்தப் பானை விற்கும் பெண் மேல் அந்தக் கர்ம வினையை ஏற்றி விட்டான்.

நீதி: சம்பந்தம் இல்லாத ஒருவரைப் பற்றி துன்பம் இழைக்காதவரைப் பற்றி சரியான உண்மையை அறியாமல் இன்னொருவரிடம் புரளி பேசாக்கூடாது.

சூரியன் அவதரித்த கதை

பிரம்ம தேவன் படைப்புத் தொழிலை செய்வதற்குத் துணையாக ஏழு ரிஷிகளைப் படைத்தார். அவர்களை சப்த ரிஷிகள் என்று அழைப்பார்கள். அவர்கள் மரீஷி, சுத்ரி, அங்கிரஸர், புலத்தியர், புலகர், கிருது, வசிஷ்டர் என்பவர் ஆவர். இவர்களுள் மரீஷி சம்பூதி என்பவளை மணந்தார். அவர்களுக்கு ஒரு பிள்ளை பிறந்தான். அவன்தான் கச்யபர் எனப்பட்டார். மகா பண்டிதரான கச்யபர் எல்லாச் சாத்திரங்களையும் வேதங்களையும் நன்கு ஆழ்ந்து கற்று தேர்ச்சி பெற்று ஞான பண்டிதராகத் திகழ்ந்தார். இவருடைய மனைவியின் பெயர் அதிதி. கற்புச் செல்வி. கணவனே கண்கண்ட தெய்வம் என்பதை என்பதை உலகுக்கு உணர்த்திய உத்தமி. தர்மதேவதை இவள் பெருமையை உலகுக்குக் காட்ட நினைத்த இளைவன் ஒரு நாடகம் ஆடினார்.

அதிதி கருவுற்றிருந்த நேரம். அந்த நிலையிலும் அவள் கணவனுக்குப் பணிவிடை செய்வதில் ஆர்வம் காட்டினாள். ஒரு நாள் அதிதி தன் கணவன் கச்யபருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். அந்த நேரம் வாசல் பக்கத்தில் இருந்து தாயே பிச்சை போடு என்ற குரல் கேட்டது. தர்ம தேவதை மாறு வேடத்தில் வந்திருந்தான். குரல் கேட்டது என்றாலும் கணவனுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த காரணத்தால் அதிதியால் உடனே சென்று உபசரிக்க இயலவில்லை. கணவன் உணவு உண்டு எழுந்தபின் அன்னமும் கையுமாக விரைந்தாள் அதிதி. அவள் வந்திருந்த நபரிடம், ஐயா பொறுத்தருள்க என்று மன்னிப்புக் கேட்டு அன்னமிட முயன்றாள். வந்தவன் அதிதியைக் கோபத்துடன் நோக்கினான்.

அதிதி என்று பெயர் வைத்துக் கொண்டால் போதுமா? வந்தவரை எப்படிக் கவுரவிக்க வேண்டும் என்பது உனக்குத் தெரியாதா? சுவாமி கணவனுக்குப் பணிவிடை செய்ததால் வர காலதாமதமாகி விட்டது. நானோ கருவுற்றிருக்கிறேன். என்னால் இந்த நிலையில் வேகமாக நடக்கவும் முடியவில்லை நீங்கள் மன்னிக்க வேண்டும் என்றாள். உனக்குக் கணவன்தான் முக்கியம் அதைவிட உன் வயிற்றிலிருக்கும் கருவும் முக்கியம். உன் வீடு தேடி வந்த நான் மொத்தத்தில் அலட்சியப்படுத்தப்பட்டேன். எனவே சாபமளிக்கிறேன் உனது கரு மிருதம் ஆகக் கடவது என்று கடுமையான சாபம் தந்தார் மாறுவேடத்தில் இருந்த தர்ம தேவதை. இதனை கேட்ட அதிதி மயக்கமுற்றாள். விரைந்து வந்த கச்யபர் நடந்ததைப் பார்த்து ஞான திருஷ்டியால் உண்மையை அறிந்து கொண்டார். மனைவியின் மயக்கத்தை தெளிவித்தார். உண்மையை விவரித்தார். கரு அழியட்டும் என்று அவன் இட்ட சாபமானது அற்புதம் தான். புதல்வன் அற்புதமாகப் பிறப்பான் என்பதை அறிவிக்கக் கூடியது என்ற தெளிவினை மனைவிக்குத் தந்தார். மிருது பிண்டமாகாது. அண்டமாக மாறும் அந்த அண்டம் பிளக்கும். அதிலிருந்து ஒரு மகன் பிறப்பான். அவன் மார்த்தாண்டன் எனப்படுவான். விஷ்ணுவைப் போல வல்லமையுடன் இருப்பான். நவக்கிரகங்களுக்குத் தலைமை ஏற்பான் என்றார் கச்யபர். மனம் தெளிந்தாள் மனைவி அதிதி.

ஒரு பிரபவ ஆண்டு மகா சுக்ல சப்தமியில் விசாக நட்சத்திரத்தில் அதிதியிடமிருந்து தோன்றிய அண்டத்திலிருந்து ஒளி தோன்றியது. பன்னிரண்டு புதல்வர்கள் அவதரித்தார்கள். சரவணப் பொய்கையில் தோன்றிய ஆறு குழந்தைகள் ஒன்று சேர்க்கப்பட்டு ஸ்கந்தனானது போல் பன்னிரண்டு பிள்ளைகள் ஒன்று சேர்க்கப்பட்டு சூரியன் என்ற பெயரில் ஆயிரம் கிரணங்களோடு உலா வந்தான். இவர்கள் தனித்தனியே 12 மாதங்களுக்கு ஆதித்யர்கள் ஆனார்கள். இவ்வாறு சூரியனின் அவதாரப் பெருமையை சாம்ப புராணம் என்னும் நூல் விளக்குகிறது.

சூரியனின் பெற்றோர்: காஷ்யப முனிவர், அதிதி.
சகோதரர்கள்: கருடன், அருணன்
மனைவியர்: உஷா, பிரத்யுஷா (சாயாதேவி)
மகன்கள்: எமதர்மன், சனீஸ்வரர், அஸ்வினி தேவர்கள், கர்ணன், சுக்ரீவன்.
மகள்கள்: யமுனை, பத்திரை.

தாபனீய உபநிஷத் என்னும் நூலில் நரசிம்மருக்கு மூன்று கண்கள் உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் வலக்கண் சூரியன், இடக்கண் சந்திரன், நடுக்கண் அக்னியாக விளங்குகிறது. புருஷ சூக்தம் என்ற நூல், விஷ்ணுவின் கண்களில் இருந்து சூரியன் உண்டானதாகச் சொல்கிறது. சூரியனை வணங்காமல் சாப்பிடுவது கூடாது என வேதம் கூறுகிறது. சூரியவழிபாடைத் தவறாமல் செய்தால் வாக்குவன்மை ஆரோக்கியம் உண்டாகும். சூரியனைக் காணாத நாள் ஒவ்வொன்றும் வீண்நாளே என்கிறார் காஞ்சிப் பெரியவர்.

குரு எதற்கு

துறவி ஒருவர் குடில் ஒன்று அமைத்து பல சீடர்களுக்கு ஞான உபதேசம் செய்து வந்தார். சாஸ்திரங்களை நன்றாக கற்றிருந்த அந்த குருவால் வாழ்க்கைத் தத்துவங்களை புரிந்து கொண்ட சீடர்கள் ஆன்மிகப் பாதையில் சென்றனர். அந்த துறவியிடம் ஒரு சீடனுக்கு பிடிப்பு இல்லாமல் போனது. சாஸ்திரங்களைப் படித்து அதில் இருப்பதைத்தானே குரு நமக்கு கற்றுத்தருகிறார். சாஸ்திரங்களைப் படித்து நாமே அதைக் கற்றுக்கொள்ளலாமே இடையில் குரு எதற்கு என்ற எண்ணம் அந்த சீடனுக்குத் தோன்றியது. அவனது எண்ணத்தை மறுநாளே செயல்படுத்தினான். குருகுலத்தை விட்டு வெளியேறினான். தனியாக குடில் அமைத்து சாஸ்திர நூல்களைப் படிக்கத் தொடங்கினான். பசிக்கும்போது துறவிகளைப் போலவே கிராமத்திற்குள் சென்று யாசகம் பெற்று உணவு உண்பான்.

ஒரு நாள் சீடன் சாஸ்திர நூல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தான். அந்த நூலில் எச்சில் பரிசுத்தம். வாந்தி பண்ணினது பரிசுத்தம் இறந்தவன் போர்வை பரிசுத்தம் என்ற வாசகங்கள் இருந்தது. அதை அப்படியே மனதில் பதிய வைத்துக்கொண்டான். ஒரு நாள் அவன் யாசகம் பெறுவதற்காக கிராமத்திற்குள் சென்றான். அப்போது அங்கு ஒரு வீட்டில் சுப நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு உணவு விருந்து அளிக்கப்பட்டது. உணவு சாப்பிட்ட அனைவரும் எச்சில் இலைகளை கொண்டு போய் குப்பை தொட்டியில் வீசி எறிந்து விட்டுப் போனார்கள். இதைக் கண்ட சீடன் கோபமுற்றான். சாஸ்திரம் தெரியாத முட்டாள்கள் என்று மனதுக்குள் திட்டியபடியே ஓடோடிச் சென்று குப்பையில் கிடந்த எச்சில் இலைகளை கையில் எடுக்க முற்பட்டான். அப்போது அவனை ஒரு பெரியவர் தடுத்து நிறுத்தினார். ஏனப்பா பார்ப்பதற்கு ஒரு தபஸ்வி போல் இருக்கிறாய். நீ போய் எச்சில் இலைகளை எடுக்க முயற்சிக்கிறாயே என்று விசாரித்தார்.

உங்களுக்கு சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று தெரியாது. அதனால்தான் என்னைத் தடுக்கிறீர்கள். எச்சில் பரிசுத்தம் என்று சாஸ்திரம் சொல்கிறது தெரியுமா என்று தனக்கு எல்லாம் தெரிந்தது போல் கூறினான் சீடன். முதியவர் குழம்பிப் போனார். அதன் பிறகு அவனிடம் முழுமையாக விசாரித்தார். அப்போது சாஸ்திரத்தில் தான் படித்த வார்த்தைகளை அவன் தெரிவித்தான். இப்போது அந்த முதியவருக்கு புரிந்து விட்டது இவன் ஒரு அரைகுறை என்று. சீடன் படித்த வாக்கியங்களுக்கான முழு அர்த்தத்தையும் அவனுக்கு எடுத்துச் சொன்னார். எச்சில் பரிசுத்தம் என்பது நீ நினைப்பது போன்று இல்லை. கன்று வாய் வைத்து பால் குடித்த பிறகே பசுவின் மடியில் பால் கறப்பார்கள். ஆனாலும் கூட அந்தப் பால் பரிசுத்தமானது. அதைத்தான் இறைவனுக்கு பாலாபிஷேகம் செய்வதற்கும் பயன்படுத்துவார்கள். அதனால்தான் எச்சில் பரிசுத்தம் என்று சொல்லியிருக்கிறார்கள் என்று விளக்கினார்.

சீடனின் மனதில் பெரிய குழப்பம். அப்படியானால் வாந்தி பண்ணினது பரிசுத்தம். இறந்தவன் போர்வை பரிசுத்தம் என்பதற்கு என்ன பொருள் என்று வினவினான். முதியவர் புன்னகைத்துக் கொண்டே அவனுக்கு பதிலளித்தார். தேனீக்களின் வாயில் இருந்து சுரக்கும் தேனைத்தான் அப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்கள். கடவுளுக்கு தேனைக் கொண்டும் அபிஷேகம் செய்வார்கள். அதனால்தான் அப்படி கூறப்பட்டிருக்கிறது. பட்டுப்பூச்சிகள் இறந்ததும் அதிலிருந்து பட்டு நூலைப் பிரித்தெடுத்து ஆடை தயாரிப்பார்கள். அந்தப் பட்டாடைகளையும் பரிசுத்தமாகக் கருதி இறைவனுக்குச் சாத்தி வழிபடுவோம். அதையே இறந்தவன் போர்வை பரிசுத்தம் எனச் சொல்லியிருக்கிறார்கள் என்று விளக்கம் கொடுத்தார். சீடனுக்கு சாஸ்திரத்தில் கூறியிருந்ததன் அர்த்தம் இப்போது தான் முழுமையாக புரிந்து குருவை தேடிச்சென்றான்.