எண்ணங்கள்

கடவுளிடம் பக்தி கொண்ட ஒருவர் தான் கடவுளை உணரமுடியாததால் அது குறித்து கேட்க ஒரு மகானிடம் சென்றார். கடவுள் எங்கு இருப்பார்? எப்படி இருப்பார்? அவரை உணர்வது எப்படி? என்று அந்த மகானிடம் அவர் கேட்டார். அதற்கு அந்த மகான் கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். சர்வ ஞானமும் பெற்ற அழியாத பேரின்பம் நிறைந்த வடிவம் தான் கடவுள். நீயும் கடவுள் தான் என்றார். அதற்கு பக்தர் அப்படியானால் ஏன் என்னால் உணர முடியவில்லை என்று கேட்டான். அதற்கு அந்த மகான் உன் எண்ணங்களில் அவர் இருக்கிறார். ஆனால் உன் எண்ணம் உலகத்தில் நடக்கும் விஷயங்களில் சூழ்ந்திருப்பதால் அவரை உணர முடியவில்லை என்று பதிலளித்தார். இப்படி பல வழிகளில் அந்த மகான் உண்மையை புரிய வைக்க முயன்றார். அனால் அந்த பக்தரோ அதை புரிந்துகொள்ளமுடியாமல் தவித்தார். இறுதியாத அந்த பக்தரை ஹரித்வாருக்கு செல்லும்படி அந்த மகான் கூறினார். அங்குள்ள கங்கை நதியில் ஒரு அபூர்வமான வண்ணத்தைக் கொண்ட ஒரு மீன் இருக்கின்றது மனிதர்கள் போலவே பேசும் குரல் அதற்கு இருப்பதால் உன் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும் என்றும் சொன்னார். உடனடியாக மகானின் பாதங்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று ஹரித்வாருக்குப் புறப்பட்டார்.

அபூர்வமான மீனின் வருகைக்குக் காத்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அந்த மீன் அங்கு வந்து எங்கிருந்து வந்திருக்காய் என்று கேட்டது. அதற்கு அந்த பக்தர் மகான் ஒருவர் உன்னிடமிருந்து கடவுளைப் பற்றித் தெரிந்து கொள்ள அனுப்பி வைத்தார் என்று கூறினார். அதற்கு அந்த மீன் எனக்கு ஏழு நாட்களாக ஒரே தாகம். எங்கு தண்ணீர் கிடைக்கும் என்று கேட்டது. அதற்கு பக்தர் பைத்தியக்கார மீனே உன்னுடைய வலது இடது மேலே கீழே என்று எல்லாப் பக்கங்களிலும் தண்ணீர் தானே இருக்கிறது என்று பதிலளித்தார். உடனே மீன் கொஞ்சம் கடுமையாக நீ தேடிக் கொண்டிருக்கும் கடவுளும் அப்படிதான். எல்லா பக்கங்களிலும் இருக்கிறார் என்று மிக அழகாகக கூறியது. அந்த பதிலைக் கேட்டுத் திருப்தி அடைந்த போதிலும் ஒரு சந்தேகத்தை முன் வைத்தான். அப்படியானால் கடவுளை உணர முடியாமல் ஏன் இப்படித் தவிக்கின்றேன் என்று கேட்டான். அதற்கு அந்த மீன் இதே கேள்வி தான் எனக்கும் தண்ணீரால் சூழ்ந்திருக்கும் எனக்கு ஏன் தாகம் தணியவில்லை என்பது தான். மீனின் வடிவமைப்பு குறித்து அந்த பக்தன் நன்கு அறிந்திருந்தான். ஆகையால் மீன் எப்படி நீந்தினால் அதன் வாயில் தண்ணீர் சென்று அதன் தாகம் தணியும் என்பதை அவன் மீனிற்கு எடுத்துரைத்தான். உடனே மீன் எப்படி நீந்தினால் என் தாகம் தணியும் என்று நீங்கள் கூறியது போல கடவுளை உணர அதற்கு உண்டான வழியில் நீங்கள் முயற்சி செய்தால் நீங்கள் கடவுளை உணரலாம். ஆசைகளை திசை திருப்பி கடவுளின் மேல் செலுத்த வேண்டும். உலக விஷயங்கள் மேல் இருக்கும் எண்ணங்களைக் கடவுள் மேல் திருப்பினால் கவலைகளுக்குத் தீர்வு கிடைக்கும். பக்தரும் அப்படியே செய்து உண்மையை புரிந்து கொண்டார்.

கடவுளை அடைய வேண்டும் என்றால் எண்ணங்களை அவர் மீது வைக்க வேண்டும். பார்க்கும் எல்லாப் படைப்புகளிலும் அவரை உணர வேண்டும்.

கடவுளை அதிகம் சிந்திப்பவர்

அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் இல்லத்துக்கு ஒரு முனிவர் வந்தார். அப்போது அபிமன்யு வீட்டில் இல்லை. அவனது மனைவி உத்தரையைச் சந்தித்து ஆசி வழங்கிய அவர் ஒரு வித்தியாசமான கண்ணாடியைப் பரிசாக அளித்தார். அந்தக் கண்ணாடியில் பார்ப்பவர் முகம் தெரியாது. யார் நமக்கு பிரியமானவரோ அவரது முகம் தெரியும். உத்தரை கண்ணாடியை உற்றுப் பார்த்தாள். அவளது இதயத்தில் வீற்றிருக்கும் அவளது கணவன் அபிமன்யு தெரிந்தான். சற்றுநேரத்தில் வீட்டுக்கு வந்த அபிமன்யு அந்தக் கண்ணாடியைப் பற்றிய விபரமறிந்து வியந்தான். அதை அவன் பார்த்தபோது அவனது மனைவி உத்தரை தெரிந்தாள். இருவரும் மனமொத்த தம்பதியராக இருப்பது கண்டு மகிழ்ச்சியில் மிதந்தனர். இந்நேரத்தில் அபிமன்யுவின் தாய்மாமன் கிருஷ்ணர் அங்கு வந்தார்.

கண்ணாடியைப் பார்த்து கணவனும் மனைவியும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே என்ன விஷயம் என்று கேட்டார் கிருஷ்ணர். மாமா இந்தக் கண்ணாடியைப் பாருங்கள். இதில் நீங்கள் தெரியமாட்டீர்கள். உங்களுக்கு பிரியமானவர் தெரிவார். உங்கள் மனதைக் கவர்ந்தது எனது அத்தை ருக்மிணியா பாமாவா மற்ற அத்தைகளா என்று பார்க்கிறேன் என வேடிக்கையாகச் சொன்னான் அபிமன்யு. யாராவது ஒரு மனைவியை அடையாளம் காட்டி இன்னொருத்தியிடம் மாட்டிக்கொள்வானா அந்த மாயவன் கிருஷ்ணர் கண்ணாடியைப் பார்த்தான். அதில் சகுனி தெரிந்தான். இதென்ன விந்தை என அபிமன்யு கேட்டான். அபிமன்யு என்னை வணங்குபவர்கள் கூட காரியம் ஆக வேண்டுமென்றால் தான் என்னை நினைப்பார்கள். ஆனால் சகுனி தூக்கத்தில் கூட என்னைக் கொன்றே தீர வேண்டுமென துடிக்கிறான். எப்போதும் அவனுக்கு என் நினைவு, அதனால் எனக்கும் அவன் நினைவு என்றார். நோக்கம் எதுவானாலும் பக்தர்களை விட நாத்திகர்கள் தான் கடவுளை அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.

மிகப்பெரிய அனந்தசயன பெருமாள்

வைணவ ஆலயங்களில் மகாவிஷ்ணுவை நின்ற இருந்த கிடந்த கோலங்களில் நாம் தரிசிக்கலாம். திருமால் எழுந்தருளியிருக்கும் 108 திவ்ய தேசங்களில் 24 தலங்களில் 10 வகையான சயனக் கோலத்திலேயே மகாவிஷ்ணு சேவை சாதிக்கிறார். இத்தகைய சயனங்களில்

  1. ஜல சயனம் என்னும் அனந்த சயனம்
  2. தல சயனம்
  3. புஜங்க சயனம் (சேஷசயனம்)
  4. உத்தியோக சயனம்
  5. வீர சயனம்
  6. போக சயனம்
  7. தர்ப்ப சயனம்
  8. பத்ர சயனம்
  9. மாணிக்க சயனம்
  10. உத்தான சயனம் என்று 10 வகைக் கோலங்களில் தரிசனம் கொடுக்கின்றார்.

ஒடிஷா மாநிலத்தில் தென்கானல் மாவட்டத்தில் பிராமணி ஆற்றங்கரையில் சாரங்கா என்ற இடத்தில் 51 அடி நீளம், 23 அடி அகலம், இரண்டரை அடி கனமும் கொண்ட மிகப்பெரிய வடிவில் அனந்தசயனக் கோலத்தில் பெருமாள் ஆற்றைத் தொட்டவாறு சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்திருக்கும் வகையில் அருள்பாலிக்கிறார். வெட்ட வெளியில் பாறையில் பிரமாண்டமாக அந்த மூர்த்தி வடிவமைக்கப்பட்டுள்ளார். கோயில் அமைப்பு ஏதும் இன்றி வெட்ட வெளியில் சயனித்திருக்கும் இந்த மூர்த்தியின் பின்னிரு கரங்களில் சங்கும், சக்கரமும் முன் இருகரங்களில் கதையும் தாமரை மலரும் காணப்படுகின்றன. ஐந்து தலை ஆதிசேஷன் குடை பிடிக்க அனந்தசயன மூர்த்தி சயனித்த நிலையில் முன் இடக்கையை இடது தொடை மீது வைத்து பின் இடக்கையில் சக்கரம் ஏந்தியுள்ளார். வலக்கரங்கள் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளன. வலக்காலை இடக்காலின் மீது மடித்து வைத்திருக்கிறார். அனந்த சயனம் என்பது மகாவிஷ்ணு ஆதிசேஷன் மீது பாற்கடலில் பள்ளி கொண்ட காட்சியைக் காட்டுவதாகும். இவர் 8 முதல் 9 ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டவராக இருக்கலாம் என்று ஆய்வலர்கள் கருதுகிறார்கள்.

ஸ்ரீமகாகாலேஸ்வரர்

இந்த காணொளி உஜ்ஜயினியில் உள்ள ஸ்ரீமகாகாலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் நடுஇரவு பூசையின் போது எடுக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் இரவில் மயானத்தில் எரிந்து கொண்டிருக்கும் உடலில் இருந்து பெறப்படும் சாம்பலைக் கொண்டு அபிஷேகம் நடைபெறும். பாசம்ஆரத்தி என்று இந்த பூசைக்கு பெயர். இந்தியாவில் இந்த ஒரு கோவிலில் மட்டுமே இந்த பூசை நடைபெறுகிறது. இந்த அபிஷேகத்தைக் காண முன்பதிவு செய்வது அவசியம். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப் படுவார்கள்.

கண்ணீர் விட்டழுத கிருஷ்ணர்

மகாபாரத போரில் அர்ஜுனனின் மகன் அபிமன்யு இறந்ததை எண்ணி அர்ஜுனன் மிகவும் கண்ணீர் வடித்துக் கொண்டு இனி நான் என் உயிர் வாழ வேண்டும் என்று அழுதுகொண்டு இருந்தான். அப்பொழுது அவன் தலையில் எதோ நீர்த்துளிகள் விழவே மேலே நோக்கி பார்த்தான். கீதையை உபதேசித்த கிருஷ்ணர் அங்கு அழுதுகொண்டு நின்றிருந்தார். அப்பொழுது அர்ஜுனன் கிருஷ்ணரை பார்த்து நான்தான் சாதாரண மனிதன் மரணம் இன்பம் துன்பம் போன்ற உலக நிலைகளில் இருந்து விடுபடாதவன் எனது மகனை இழந்ததால் அழுகிறேன். ஆனால் நீங்கள் தெய்வமாயிற்றே இதை எல்லாம் கடந்தவர் அல்லவா நீங்கள் ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டான். அதற்கு கிருஷ்ணர் இப்பொழுதுதான் உனக்கு பல மணிநேரம் செலவு செய்து கீதையை உபதேசம் பண்ணினேன். உலகில் உள்ள எல்லாமே மாயை எதுவும் யாருக்கும் சொந்தமில்லை இன்று உன்னுடையதாக இருப்பது நாளை இன்னொருவருடையது ஆகும். எனவே எதற்காகவும் எந்த ஒரு இழப்பிற்காகவும் நாம் கண்ணீர் சிந்த வேண்டிய அவசியம் இல்லை என்று மிக சிரமபட்டு போதித்தேன். இவ்வளவு சீக்கிரத்தில் அது பயனற்று போய்விட்டதே. அனைத்தையும் நேரடியாக கேட்ட நீயே அதை உடனே மறந்துவிட்டு உன் மகனுக்காக இவ்வளவு கண்ணீர் வடிக்கிறாயே இந்த மனிதகுலத்தை எப்படி திருத்த என்பதை எண்ணித்தான் நான் அழுகிறேன் என்றார்.

மொக்கணீஸ்வரர் ஆலயம்

வியாபாரி ஒருவர் தினமும் சிவதரிசனம் செய்த பின்பே சாப்பிடுவார். ஒருமுறை தன் நண்பருடன் வியாபார விஷயமாக வெளியூர் சென்றார். பயணக் களைப்பால் ஒரு காட்டில் தங்கி கண்ணயர்ந்தனர். வியாபாரிக்கு முன்பாகவே எழுந்த நண்பர் ஓடையில் குளித்து விட்டு கட்டுசாதத்தை சாப்பிட்டார். தன் நண்பர் சிவதரிசனம் செய்யாமல் சாப்பிடமாட்டார். இந்த காட்டுக்குள் சிவன் கோவிலுக்கு எங்கே போவது என்று யோசித்த நண்பர் ஒரு சாக்கில் மண்ணை நிரப்பி சிவலிங்கம் போல் வடிவமைத்து காட்டுப்பூக்களால் அலங்கரித்து ஓரிடத்தில் மண்ணைத் தோண்டி நட்டு வைத்தார். பார்ப்பதற்கு அசல் சிவலிங்கம் போலவே இருந்தது. வியாபாரி எழுந்ததும் மாமா நீங்கள் சிவதரிசனம் செய்யாமல் சாப்பிட மாட்டீர்கள். உங்கள் பக்கத்திலேயே ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அதை வணங்கியபின் சாப்பிடுங்கள் என்றார். எங்கும் சிவமயம் என்று மகிழ்ந்த வியாபாரியும் தன் நண்பர் காட்டிய சிவலிங்கத்தை தரிசித்து பின் சாப்பிட்டார்.

அப்போது நண்பா சிவதரிசனம் செய்யாமல் சாப்பிடமாட்டீர்கள் என்பதற்காக ஒரு சாக்குப்பையில் மண் நிரப்பி நிஜலிங்கமென உங்களை நம்ப வைத்து விட்டேன். உங்கள் உடல்நலம் கருதி செய்த இந்த தவறை மன்னிக்க வேண்டும் என்றார். என்ன சொல்கிறீர்கள் நண்பரே நான் பார்த்தது நிஜமான லிங்கத்தை தான். என் சிவனையே லிங்க வடிவில் தரிசித்தேன் என்றார் உறுதியாக. சாக்குப்பையில் மண்ணை போட்டு நட்டு வைத்தது நான் தான் என்ற நண்பர் அங்கே சென்று சாக்குப்பையை எடுக்க முயன்றார். ஆனால் அசையக்கூட இல்லை. அங்கே நிஜமான லிங்கம் எழுந்தருளி இருந்ததைக் கண்ட நண்பர் மூச்சடைத்துப் போனார். அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அவரும் சிவபக்தரானார். இந்த லிங்கத்தின் பெருமையை மாணிக்கவாசகர் மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி என்று தனது பாடலில் போற்றுகிறார்.

மூலவர் மொக்கணீஸ்வரர். அம்பாள் மீனாட்சி. தலமரம் வில்வம். மிகச்சிறிய கோயில். அம்பாள் மீனாட்சி தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் அருளுகிறாள். முன்மண்டபத்தில் மாணிக்கவாசர் இருக்கிறார். கொள்ளு வைக்கும் சாக்குபைக்கு மொக்கணி என்ற பெயர் உண்டு. எனவே சிவன் மொக்கணீஸ்வரர் என்று பெயர் பெற்றார். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சிவசூரியன் காட்சி தருகிறார். சிதிலமடைந்த பழைய கோயில் மண்டபத்தில் மாணிக்கவாசகர் அமர்ந்த கோலத்தில் கைகளை கூப்பி வணங்கியபடி இருக்கிறார். இத்தல விநாயகர் மூத்த விநாயகர் என அழைக்கப்படுகிறார்.

அக்னி நட்சத்திரம் குறித்த மகாபாரதக் கதை

யமுனை ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள காட்டின் பெயர் காண்டவவனம். இந்திரனின் பாதுகாப்பில் உள்ள அவ்வனத்தில் உள்ள அரிய மூலிகைகள் செழித்து வளர அவ்வப்போது மழை பெய்ய செய்தான் இந்திரன்.

யமுனை நதியில் கண்ணன் மற்றும் அர்ஜுனன் தங்களுடைய தோழர்களுடன் நீராடி மகிழ்ந்தனர். பின் அவர்கள் கரையேறும் போது அங்கு வந்த அந்தணர் ஒருவர் கண்ணனையும் அர்ஜுனனையும் பார்த்து உங்களை பார்த்தால் கருணை மிக்கவர்களாக தெரிகிறீர்கள். என் பசிக்கு உங்களால் தான் உதவ முடியும். இவ்வனத்தில் என் பசிப்பிணியை தீர்க்கும் மருந்து உள்ளது. நான் இவ்வனத்திற்குள் பிரவேசிக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று வேண்டினார். அந்தணரை உற்றுப் பார்த்த கண்ணன் அக்னி தேவனே ஏன் இந்த வேடம் நேரிடையாகவே உன் பசிப்பிணிக்கு உணவு கேட்கலாமே என்று சொன்னதும் தன் வேடத்தை கலைத்த அக்னி தேவன் உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் பரமாத்மாவே தங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை சுவேதசி என்ற மன்னனுக்காக நுாறாண்டுகள் தொடர்ந்து யாகம் நடத்தினார் துர்வாச முனிவர். யாகத்தின் விளைவால் அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு ஆளானேன். அதனால் மந்த நோய் என்னை தாக்கி விட்டது. அந்நோய்க்கான மூலிகைகள் இவ்வனத்தில் உள்ளன. அவற்றை நான் கபளீகரம் செய்தால் மட்டுமே என் பிணி தீரும் என்றார். நான் இவ்வனத்திற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் போதெல்லாம் மழை பெய்ய மேகங்களுக்கு உத்தரவிட்டு என் தீ நாக்குகளை அணைத்து என் முயற்சியை தடுத்து விடுகிறான் இந்திரன் என்றார். ஆகவே நான் எரிக்கும் போது மழையை தடுத்து உதவி செய்யுங்கள் என்று கேட்டார்

இதைக்கேட்ட அர்ஜுனன் அக்னி தேவனே நாங்கள் உனக்கு உதவுகிறோம். ஆனால் இங்கு நாங்கள் நீராட வந்ததால் எங்களிடம் ஆயுதங்கள் இல்லை. அதனால் இந்திரன் மழை பெய்வித்தால் தடுப்பதற்கு அம்பறாத் துாணியும் அம்புகளும் வில்லும் தேவை என்றான். உடனே அர்ஜுனனுக்காக சக்தி மிக்க காண்டீப வில் அம்புகள் மற்றும் அம்பறாத் துாணி என எல்லாவற்றையும் தந்தார் அக்னி பகவான். அப்போது கிருஷ்ணர் அக்னி தேவனிடம் உன் பசி பிணியை தீர்த்து கொள்வதற்காக 21 நாட்கள் மட்டும் இக்காட்டிற்குள் பிரவேசிக்கலாம். அச்சமயத்தில் இந்திரன் மழை பொழியாமல் பார்த்துக் கொள்கிறோம் என்றார் கிருஷ்ணர். அக்னி தேவன் வனத்திற்குள் பிரவேசித்து வனத்தை எரிக்கத் துவங்கினான். இதைக் கண்ட இந்திரன் மழை பெய்விக்க காளமேகத்திற்கு உத்திரவிட்டான். வானில் மேகங்கள் கூட்டம் கூட்டமாக வருவதை கண்ட அர்ஜுனன் அவ்வனத்தில் மழை பொழியாமலிருக்க தன்னிடம் உள்ள அம்புகளால் சரக்கூடு ஒன்றை கட்டி தடுத்தான். அக்னியும் முதல் ஏழு நாட்கள் வனத்தில் உள்ள மூலிகை பகுதிக்குள் நுழைந்து கபளீகரம் செய்தார். அடுத்த வந்த ஏழு நாட்கள் சுற்றியிருக்கும் அரிய மரங்களை உணவாக கொண்டார். அடுத்த வந்த ஏழு நாட்கள் மிதமாக உண்டு இறுதியில் இருவரிடமும் விடைபெற்றார் அக்னி தேவன். காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னி நட்சத்திரம் என்று கூறுகிறது புராணம்.