மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -3

துரோணர் கூறியதை கேட்ட யுதிஷ்டிரன் ஆச்சாரியாரே தங்களை யாரும் யுத்தம் செய்து வெல்ல முடியாது. அப்படி இருக்க நாங்கள் எப்படி இந்த யுத்தத்தில் தங்களை வெற்றி பெறுவோம் என்று கேட்டார். நீ சொல்வது சரியானதே. ஆயுதம் தாங்கி போர் புரிந்து கொண்டிருக்கும் போது என்னை யாரும் வெல்ல முடியாது. ஆனால் என்னை துக்கத்தில் ஆழ்த்தும் செய்தி ஏதேனும் சத்தியம் தவறாதவன் சொல்ல கேட்டு நான் மனம் குழம்பினால் அப்போது என்னுடைய ஆயுதங்கள் எனக்கு பயன்படாது போய் விடும். அப்போது நான் தோற்கடிக்கப்படுவேன் என்று கூறினார். யுதிஷ்டிரன் மீண்டும் தரையில் விழுந்து வணங்கினான். அதுபோலவே கிருபரிடமும் யுத்தம் செய்ய அனுமதி வேண்டிப் பெற்றான். பிறகு தமது இடம் சென்று போர்க்கோலம் பூண்டு யுத்தத்திற்கு தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டான்.

தவிர்க்க முடியாத யுத்தம் தொடங்கியது. முதலாம் நாள் போர் சங்குல யுத்தம் என அழைக்கப்படுகிறது. ஓர் ஒழுங்குக்கு உட்படாமல் ஒருவனோடு ஒருவன் முறை இல்லாமல் போரிடுவது சங்குல யுத்தம் ஆகும். இருதரப்பு படைகளும் மோதின. கடலில் உருண்டோடி வருகிற ஒரு அலை மற்றொரு அலையின் மீது மோதுவது போன்று இரண்டு பக்கங்களிலும் உள்ள சேனைகள் ஒன்றை ஒன்று தாக்கிக் கொண்டன. அதனால் விளைந்த ஆரவாரம் மிகப்பெரியதாக இருந்தது. வீரர்கள் சிங்கம் போல கர்ஜித்தனர். யானைப்படையும் குதிரைப்படையும் மூர்க்கத்தனமாக மோதிக் கொண்டன. ஒளிர்கின்ற வால் நட்சத்திரங்கள் போன்று அம்புகள் பறந்தன. அதனால் எழுந்த தூசு விண்ணை மறைத்தது. வீரர்கள் ஈட்டி, கத்தி, கதை, வளைதடி, சக்கரம் கொண்டு போரிட்டனர். குடும்ப பந்த பாசங்களை மறந்துவிட்டு அவரவர்கள் சுற்றத்தாரை எதிர்த்துப் போராடினார்கள்.

பீஷ்மர் வீராவசத்தோடு போர் புரிந்து எண்ணற்ற வீரர்களைக் கொன்றார். இவருடைய ரதம் சென்ற இடங்களிலெல்லாம் சேனைகள் அணியணியாக வீழ்ந்தது. யுத்தத்தில் பாண்டவர்கள் பக்கம் அர்ஜுனுடைய மைந்தனாகிய அபிமன்யு பாராட்டத்தக்க முறையில் எதிரிகளைத் தாக்கினன். விராடனுடைய மைந்தனாகிய உத்தரனும் சல்லியனும் ஒருவரோடு ஒருவர் போர் புரிந்தார்கள் அதன் விளைவாக உத்தரன் கொல்லப்பட்டான். அதனால் கோபமடைந்த அவனுடைய தம்பி சுவேதன் சல்லியன் மீது விரைந்து சென்று தாக்கினான். அவனுடைய பராக்கிரமத்தை இரு அணியினரும் வியந்து பாராட்டினார்கள். ஆனால் பீஷமர் சுவேதனை ஒரே அடியில் வீழ்த்தினார். சுவேதன் மரணம் பாண்டவ வீரர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. கௌரவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். முதல் நாள் யுத்தத்தில் ஆயிரக்கணக்கான வீரர்கள் மடிந்து போனார்கள். அந்த யுத்தம் கௌரவர்களுக்கு ஆறுதல் தருவதாகவும் பாண்டவர்களுக்கு ஏமாற்றத்தை உண்டு பண்ணுவதாகவும் முடிவடைந்தது. யுத்தத்தில் நடந்தவைகள் அனைத்தும் சஞ்சயன் மூலமாக திருதராஷ்டிரர் தெரிந்து கொண்டர்.

காயத்திரி மந்திரம்

மன்னரும் அவரது மந்திரியும் ஒரு நாள் மாறுவேடம் அணிந்து நகர் சோதனை செய்து வந்தனர். அப்போது ஒரு பிச்சைக்காரன் எதிர்பட்டான். அவனைப் பார்த்த மன்னர் இந்த இனத்தவர்களுக்குப் பிச்சை எடுப்பது தவிர வேறு பயனுள்ள தொழிலேதும் செய்யத் தெரியாதா என்று கேட்டார். மந்திரியின் மனத்தில் முள்ளெனத் தைத்தன அந்த வார்த்தைகள். பிறகு மந்திரி அந்தப் பிச்சைக்காரனைச் சந்தித்துக் கேட்டபொழுது தன்னுடைய பெரிய குடும்பத்தைக் காப்பற்ற வேறு வழி புலப்படாததால் பிச்சையெடுக்க முற்பட்டதாகவும் இதன் மூலம் நாளொன்றுக்கு 25 காசுகள் கிடைக்கின்றன என்றும் கூறினான். அதைச் கேட்ட மந்திரி அவன் பிச்சையெடுப்பதை விட்டு விட்டு தினந்தோறும் காலையில் ஸ்நானம் செய்துவிட்டு 10 தரம் காயத்திரி ஜபம் செய்வதாக இருந்தால் அன்றாடம் அவனுக்கு 50 காசுகள் தருவதாகக் கூறினார். அந்த ஏழையும் பிச்சை எடுப்பதை நிறுத்திவிட்டு மந்திரி சொன்னபடி ஜபம் செய்து வந்தான்.

அவன் முகத்திற்கு ஒரு அசாதரணமான சக்தி ஏற்பட்டது. இதை அறிந்த மந்திரி அந்த ஏழையை அணுகி தினம் 108 தடவை காயத்திரி ஜபம் செய்தால் அவனுக்கு மாதம் 1000 ரூபாய் தருவதாகச் சொன்னார். அதற்கும் ஒப்புக்கொண்டு அந்த ஏழையும் தீவிரமாக ஜபம் செய்தார். பயனெதுவும் கருதாமல் நாள் பூராகவும் காயத்திரி ஜபம் செய்து வந்ததால் ஒரு நாள் அவனுக்கு அஞ்ஞான இருள் நீங்கியது. அவனுக்கு ஆன்மீக வளர்ச்சியும் தெய்வீக ஒளியும் ஏற்பட்டு தினந்தோறும் திரளான மக்கள் அவனை நாடி வணங்கி அருள் பெற்று வந்தனர். ஒரு மாதம் ஆனதும் அந்த ஏழை பணம் வாங்க வராததால் மந்திரியே அவன் வீட்டிற்கு வந்து பணம் கொடுத்தார். ஆனால் அவன் பணிவுடன் அதைப் பெற்றுக்கொள்ள மறுத்து அவனுக்குச் சிறந்த ஆன்மீக வழியைக் காட்டியதற்காக மந்திரிக்கு நன்றி தெரிவித்தான்.

மறுநாள் மந்திரி மன்னரை அந்த ஏழை வீட்டிற்கு அழைத்து வந்தார். அவன் முகத்தில் தென்பட்ட தேஜஸையும் அங்கு அருள் பெற வந்த மக்களையும் பார்த்து மன்னர் மிக ஆச்சரியப்பட்டார். அரசரும் அவர் காலில் விழுந்து அருள் புரியுமாறு வேண்டினார். சில மாதங்களுக்கு முன் நீங்கள் இகழ்ந்து பேசிய அதே பிச்சைக்காரன் தான் இவர் என்று சக்கிரவர்த்தியின் காதில் கிசு கிசுத்தார் மந்திரி. சக்கரவர்த்தி நம்பாமல் அந்த ஏழையின் இந்த மாற்றத்திற்கான காரணத்தைக் கேட்டார். அவனும் நடந்ததைச் சொல்லி காயத்திரி ஜபம் செய்ததால் வந்த பெருமை என்று மந்திரி விளக்கினார். காயத்திரி ஜபத்தினால் பட்ட மரம் தழைக்கும் வாழ்வில் நிம்மதியின்றித் தவிப்பவர்கள் நிம்மதியும் மனச் சாந்தியும் பெறுவார்கள். சத்ருக்கள் (எதிரிகள்) நாசமடைவார்கள் பாபங்கள் நீங்கிப் பிறவித்துயர் நீங்கும். வேதசாரமான இந்த மஹா மந்திரம் நம் ரிஷிகளின் அருளினால் நமக்குக் கிடைத்தது

ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்

பொருள்: மூவுலகத்திலும் மிகப்பெரிய சக்தியாய் விளங்கும் அந்த பரம ஜோதியை நாம் தியானிக்கின்றோம். அந்த பரம சக்தி நமது இருளை நீக்கி புத்தியை வெளிச்சப்படுத்தட்டும் என்பதே இந்த மந்திரத்தின் பொதுப்பொருள்.

அமெரிக்காவின் ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர் ஒன்றிணைந்து உலக நாடுகள் பலவற்றில் உள்ள பல்வேறு மந்திரங்களை ஆய்விற்கு உட்படுத்தினர். அப்போது காயத்திரி மந்திரம் ஒலிக்கும்போது மட்டும் நொடிக்கு சுமார் 1,10,000 ஒலி அலைகளை எழுப்புவதை கண்டு அவர்கள் ஆச்சர்யப்பட்டுள்ளனர். தங்கள் ஆய்வின் முடிவில் காயத்திரி மந்திரமே அதிக ஓலி அலைகளை எழுப்பும் உலகின் தலை சிறந்த மந்திரம் என்பதை தெரிவித்தனர். இந்த ஆய்விற்கு பின்பு அமெரிக்காவின் பிரபல ரேடியோ ஸ்டேஷன் ஒன்றில் தினமும் இரவு 7 மணிக்கு தொடர்ந்து 15 நிமிடங்கள் காயத்திரி மந்திரம் ஒளிபரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -2

அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் மனித பிறப்பின் கடமைகள், வாழ்க்கையின் தத்துவம், யோக தத்துவங்கள், கர்மங்கள் ஆகிய பலவற்றை எடுத்து விளக்கினார். இவை அனைத்தும் பகவத்கீதை என்று பெயர் பெற்றது. கிருஷ்ணர் கூறிய அனைத்து தத்துவங்களையும் கேட்ட அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் தனது விஸ்வரூப தரிசனத்தையும் கொடுத்து அர்ஜூனனின் மனக்குழப்பத்தை போக்கினார். தெளிவடைந்த அர்ஜூனன் யுத்தம் புரிய சம்மதித்தான்.

போர் துவங்கும் நேரத்தில் யுதிஷ்டிரர் தேரிலிருந்து இறங்கினார். தன் போர்க்கருவிகளைக் கீழே வைத்தார். போருக்குரிய கவசங்களை நீக்கினார். எதிரணியிலிருந்த பீஷ்மரை நோக்கிப் போனார். இதைப் பார்த்தவர்கள் வியந்தனர். பீஷ்மரிடமும் குருவானவர்களிடமும் ஆசி பெறவதற்க்காக யுதிஷ்டிரர் செல்கிறான் என்று கிருஷ்ணருக்கு புரிந்தது. துரியோதனன் பக்கம் இருந்தவர்கள் தங்களுடைய படைகளை பார்த்து யுத்தம் புரிய பயந்து யுதிஷ்டிரர் சரணடைய வருவதாக எண்ணினர்.

யுதிஷ்டிரர் பீஷ்மரிடம் சென்று அவரை வலம் வந்து தரையில் வீழ்ந்து வணங்கி போற்றுதற்குரிய பாட்டனார் அவர்களே தங்களை எதிர்த்துப் போர் புரியும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் தர்மம் எப்பக்கம் இருக்கிறது என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். தாங்கள் அனுமதித்தால் நான் தங்களை எதிர்த்து போர் புரிகிறேன் என்று யுதிஷ்டிரர் கூறினார். அதற்கு பீஷ்மர் சரியான வேளையில் நீ என்னிடம் வந்ததை குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய முழு வல்லமையையும் கையாண்டு கௌரவர்களுக்காக சண்டை போட நான் இசைந்திருக்கிறேன். ஆயினும் இந்த யுத்தத்தில் நீ வெற்றியடைவாய். ஏனென்றால் தர்மத்தின் ஆதரவு உனக்கு எப்பொழுதும் உண்டு. மேலும் கிருஷ்ணன் உன்னை காப்பாற்றி வருகிறான் என்று தனது அனுமதியை கொடுத்தார், அதற்கு யுதிஷ்டிரன் தங்களை யாராலும் தோற்கடிக்க இயலாது அப்படியிருக்க நாங்கள் எவ்வாறு தங்களை வெல்வது என்று யுதிஷ்டிரர் கேட்டான் அதற்கு பீஷ்மர் இந்த ரகசியத்தை வெளியிடுவதற்கான காலம் இன்னும் வரவில்லை. என்னை எதிர்த்து துணிந்து போர் புரிவாயாக வெற்றி உனக்கு நிச்சயம் என்று கூறி ஆசிர்வதித்தார். அர்ஜூனன் மீண்டும் ஒரு முறை பீஷ்மர் காலில் விழுந்து வணங்கி அவரிடம் இருந்து விடைபெற்று துரோணரிடம் சென்றான்.

குரு தேவா போற்றி ஆராதனைக்குரிய ஆச்சாரியாரே தங்களை எதிர்த்துப் போர் புரியும் எண்ணம் எனக்கு இல்லை. ஆயினும் என் கடமையை நான் செய்தாக வேண்டுமென்று தர்மம் என்னை உந்தித் தள்ளுகிறது. அதற்கு அனுமதி பெற தங்களை நாடி வந்திருக்கிறேன் என்றார். அதற்கு துரோணர் என்னை எதிர்த்துப் போர் புரிய என்னுடைய அனுமதியை கேட்டபதன் வாயிலாக நீ நல்ல பாங்கில் நடந்து கொண்டுள்ளாய். என்னை எதிர்த்து போர் புரியும்படி சூழ்நிலை உன்னை தூண்டுகிறது. என் கடமையை நிறைவேற்றுவதில் நான் எனது ஆற்றல் முழுவதையும் நான் கையாண்டாக வேண்டும். ஆனாலும் நீ வெற்றி பெறுவாய் ஏனென்றால் தர்மம் உனக்கு துணையாய் இருக்கிறது. அதற்கு மேல் கிருஷ்ணன் உன்னை காத்து வருகிறார் என்று துரோணர் கூறினார்.

விருதாச்சலம் விருதகிரிஸ்வரர் வன்னிமரம்

வன்னிமரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முத‌ல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது. விருதாச்சலம் விருதகிரி ஆலயத்தில் பழமையான வன்னி மரம் இருக்கிறது. இந்த வன்னி மரத்தின் இலைகளைப் பறித்து தான் அந்தக் கோயிலைக் கண்டினார்கள் என்று தலபராணம் சொல்கிறது. அங்கு விபசித்தி முனிவர் என்று ஒருவர் இருந்தார். அந்த முனிவர் அங்கேயே வாழ்ந்து அங்கேயே ஒரு கோயிலைக் கட்டிவிட்டு ஜீவ சமாதியும் அடைந்திருக்கிறார். அவர் தினசரி காலையில் இருந்து மாலை வரை வேலை பார்த்த வேலையாட்களுக்கு அந்த வன்னி மரத்தின் கீழ் உட்கார்ந்து வன்னி இலைகளை உருவி கொடுப்பார். அவர்கள் எந்த அளவிற்கு உழைத்தார்களோ அந்த அளவிற்கு அது தங்கமாக மாறும். ஒன்றுமே உழைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தால் தங்கமாக மாறாமல் இலையாகவே இருக்கும். கடினமாக வேர்வை சிந்தி அனைத்து வேலைகளையும் செய்தவர்களுக்கு அத்தனையும் தங்கமாக மாறும். இது வரலாற்றுச் சான்றுகளில் இருக்கிறது. கல்வெட்டுச் சான்றுகளில் இருக்கிறது.

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -1

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் உரிய சேனைகள் குருசேத்திரப் போர்க்களத்தில் சந்தித்து யுத்த நியதிகளை தங்களுக்கு தாங்களே நியமித்துக் கொண்டார்கள்.

சூரிய அஸ்தமனத்தில் அன்றைய சண்டை முடிவுக்கு வர வேண்டும். இரவில் விரோதத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். விருப்பப்பட்டால் அவர்களுக்கிடையில் நட்பு இணக்கும் வைத்துக்கொள்ளலாம். ஒரு போர்வீரன் மற்றொரு போர்வீரனோடு சண்டை போடும்போது அவர்களுக்கிடையில் ஆயுத பலம் சமமாக இருக்க வேண்டும். போர்க்கான அறநெறியில் இருந்து யாரும் பிசகலாகாது. போர்க்களத்திலிருந்து பயந்து ஓடுபவர்களை ஒருபோதும் கொல்ல கூடாது. ரதத்தில் ஊர்ந்து வரும் ஒருவன் எதிர்க்கட்சியில் உள்ள ரதத்தில் வருபவருடன் மட்டுமே சண்டை போட வேண்டும். குதிரையில் வருபவனுடன் குதுரையில் வருபவன் மட்டுமே சண்டை போட வேண்டும். இம்முறையில் யுத்தம் சம வல்லமை படைத்தவர்களுக்கு இடையில் நிகழ்தல் வேண்டும். தஞ்சம் புகுந்தவர்களை பாதுகாத்தல் வேண்டும். ஓர் எதிரியோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கும் ஒருவனை யாரும் இடையில் புகுந்து தாக்க கூடாது. யுத்தத்திற்கு தயாராகாதவனையும் ஆயுதங்கள் இழந்து இருப்பவனையும் பின்வாங்கி ஒடுபவனையும் கொல்ல கூடாது. முரசு அடிப்பவர்களையும் சங்கநாதம் செய்பவர்களையும் தேரோட்டுபவர்களையும் குதிரைகளையும் போர்வீரர்களுக்கு ஆயுதங்கள் சுமந்து வருபவர்களையும் காயம் அடைந்த போர்வீரர்களுக்கு உதவி செய்பவர்களையும் கொல்ல கூடாது. இத்தகைய சட்டதிட்டங்களை இரு தரப்பினரும் சேர்ந்து தங்களுக்கு தாங்களே யுத்த நியதிகளை அமைத்துக்கொண்டனர்.

பயங்கரமான போர் துவங்கும் நிலைக்கு வந்துவிட்டது. அப்பொழுது அஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரன் முன்னிலையில் வியாசர் பிரசன்னமானார். நடக்கும் யுத்தத்தை திருதராஷ்டிரன் காண விரும்பினால் அவனுக்கு கண் பார்வை தர வியாசர் முன்வந்தார். ஆனால் தன்னுடைய உற்றார் உறவினர் ஒருவரை ஒருவர் கொன்று அழித்துக்கொல்லும் காட்சியை காண கண் பெறுவதில் தனக்கு விருப்பம் இல்லை என்று திருதராஷ்டிரன் மறுத்துவிட்டார். ஆயினும் நடக்கும் யுத்தத்தை யாராவது எடுத்து விளக்கினால் அவற்றை கேட்டு அறிந்து கொள்வதில் தனக்கு தடையேதும் இல்லை என்று கூறினார். அப்பொழுது சஞ்சயனுக்கு ஞானக்கண்ணை அளித்து யுத்தகளத்தில் நடப்பவற்றை இருக்கும் இடத்தில் இருந்தே அறிந்து கொள்ள வியாசர் சஞ்சயனுக்கு அனுக்கிரகம் செய்தார்.

தன்னை எதிர்த்துப் போர் வந்த வீரர்கள் யார் என்று பார்க்க அர்ஜுனன் விரும்பினான். தன் விருப்பத்தை கிருஷ்ணரிடம் தெரிவித்தான். அர்ஜுனனுக்கு சாரதியாக பணிபுரிய முன்வந்த கிருஷ்ணன் ரதத்தை பீஷ்மர் துரோணர் கௌரவர் படைகளுக்கு முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தினார். போற்றுதலுக்குரிய பாட்டனார் பீஷ்மரையும் ஆராதனைக்குரிய ஆச்சாரியார் துரோணரையும் பார்த்தபிறகு அர்ஜுனனுக்கு மனதில் குழப்பம் வந்தது. வந்தனைக்குரிய முதியோர்களை எதிர்த்துப் போர் புரிய அவன் விரும்பவில்லை. இந்த நெருக்கடியில் அர்ஜுனனுக்கு வாழ்க்கை தத்துவத்தை எடுத்து விளக்க கிருஷ்ணர் கடமைப்பட்டார்.

அம்பர்நாத் கோவில் மத்தியப் பிரதேசம்

அம்பர்நாத்தின் ஷிவ் மந்திர் இந்தியாவில் மகாராஷ்ட்ராவில் உள்ள மும்பைக்கு அருகில் உள்ள அம்பார்நாதில் 11 ஆம் நூற்றாண்டு இந்து கோவிலாகும். அம்பாரேஸ்வரர் சிவன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. 1060 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. ஹேமத்பந்தியின் பாணியில் கட்டப்பட்ட அழகிய கல். ஷிலஹரா மன்னர் சித்தாரஜால் இது கட்டப்பட்டது, அது அவரது மகன் முமுனிவால் மீண்டும் கட்டப்பட்டது. இறைவன் 20 அடி கீழே தரையில் உள்ளார்

Image may contain: sky and outdoor
Image may contain: drink, plant and indoor
Image may contain: fire, table and indoor

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -15

அஸ்தினாபுரத்தின் சபையில் துரியோதனன் பாட்டனாராகிய பீஷ்மரை அணுகி அவர் கௌரவ சேனையின் சேனாதிபதியாக வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அதற்கு பீஷ்மர் இயற்கையின் பாங்குகள் அனைத்தையும் உலக மக்கள் எல்லோரும் அவரவருக்கு ஏற்றவாறு பயன்படுத்துகிறார்கள். இயற்கையோ நல்லார்க்கும் பொல்லார்க்கும் பொதுவாக எப்பொழுதும் பயன்பட்டு வருகிறது. இந்த இயற்கை தாயின் போக்கையே நானும் பின்பற்றி வருகிறேன். என்னிடதில் உள்ள பேராற்றல் பேரறிவு ஆகிய அனைத்தையும் எனக்காக நான் எப்பொழுதும் பயன்படுத்தில்லை. என்னிடத்தில் யார் எதைக் கேட்டாலும் அதை நான் தவறாமல் வழங்கிக் கொண்டே இருக்கிறேன். நான் உனக்கு கொடுத்த வாக்குப்படி நடந்து கொள்கின்றேன். என்னுடைய வீரியம் அனைத்தும் உனக்கு சொந்தமாகி விடுகிறது. ஆயிரக்கணக்கான வீரர்களை நான் கொல்வேன். ஆனால் பாண்டவர்களை மட்டும் நான் கொல்லமாட்டேன். நீயும் உன் சகோதரர்களும் என் அன்புக்கு உரியவர்களாக இருப்பது போன்றே பாண்டவர்களும் என் அன்புக்கு உரியவர்களே.

மற்றுமொரு விஷயத்தையும் உன்னுடைய கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். மீண்டும் சொல்கிறேன் நான் யுத்தத்தை ஆமோதிக்கிறவன் அல்ல. உன்னுடைய தோழனாகிய கர்ணன் எப்போதும் எனக்கு உபத்திரத்தை உண்டு பண்ணுபவனாக இருக்கின்றான். நான் சேனாதிபதியாக இருக்கும் சமயத்தில் அவன் போர் புரிவது இல்லை என்று உறுதி கூறி இருக்கின்றார். ஆகையால் அந்த சேனாதிபதி பொறுப்பை நீ முற்றிலும் கர்ணன் வசம் ஒப்படைக்கலாம். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. நான் அவன் சொல்படியே என்னுடைய கடமையை நன்கு நிறைவேற்றுவேன் என்றார். துரியோதனன் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பீஷ்மரை கௌரவப்படைகளுக்கு தலைமை சேனாதிபதியாக தன் விருப்பப்படியே நியமித்தான். பீஷ்மரின் தலைமையில் கௌரவப்படைகள் போர்களம் செல்ல துவங்கினார்கள்.

கிருஷ்ணனுடைய தமையன் பலராமன் குருஷேத்திரப் போர் களத்திற்கு வந்து பார்த்தான். எண்ணிக்கையில் அடங்காத போர் பட்டாளங்கள் ஒன்றையொன்று அழித்துத் தள்ளக்கூடிய பாங்கில் இருப்பதைப் பார்த்தான். பலராமன் பீமனுக்கும் துரியோதனனுக்கும் கதை யுத்தம் சொல்லிக்கொடுத்தவன். ஆகையால் இருவரையும் அவன் ஒரே பாங்கில் நேசித்தான். பலராமனுடைய விருப்பத்திற்கு மாறாக அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் மாய்த்துக்கொள்ள முடிவு கட்டியிருந்தார்கள். அத்தகைய தன் மனதுக்கு ஒவ்வாத போராட்டத்தை பார்க்க பலராமன் விரும்பவில்லை. ஆகையால் அவன் அவ்விடத்தைவிட்டு தீர்த்த யாத்திரைக்குப் புறப்பட்டுபோனான்.

உத்தியோக பருவம் இந்த பகுதியுடன் முற்றியது. அடுத்து பீஷ்ம பருவம்.

எறும்புகளைப் போல மனிதர்கள்

ஒருமுறை கோவிலுக்குப் போன ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் அங்குள்ள அந்தணர்கள் ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம் எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்துவிடுகின்றன. கடவுளுக்கும் படைக்க முடியவில்லை பக்தர்களுக்கும் கொடுக்க முடியவில்லை என்று முறையிட்டனர். இதைக்கேட்ட பரமஹம்சர் சொன்னார்.

கோவில் வாசலிலே ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைத்துவிடுங்கள். அப்புறம் எறும்புகள் உள்ளே வராது. அதேபோல கோவில் வாசலிலே சர்க்கரையைப் போட்டதும் எறும்புகளெல்லாம் அந்தச் சர்க்கரையை மொய்த்துவிட்டு அப்படியே திரும்பிப் போய்விட்டன. உள்ளே விதவிதமாக பிரசாதங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த எறும்புகள் வாசலில் இருக்கிற சர்க்கரையை மட்டும் மொய்த்துவிட்டுத் திரும்பிப் போய்விட்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். எறும்புகளும் மனிதர்களும் ஒன்றுதான். மனிதர்களும் வாழ்க்கையில் இறைவனை அடைய வேண்டும் என்ற உயரிய லட்சியமெல்லாம் வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் நடுவிலே கிடைக்கிற அற்ப சந்தோஷத்துக்கு மயங்கி முன்னேறாமல் அங்கேயே இருந்து விடுவார்கள் என்று சிரித்தபடி சொன்னார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -14

கிருஷ்ணரால் தூண்டப் பெற்ற குந்திதேவி கர்ணனை தனியாக சந்தித்து பேசினாள். கர்ணன் அவளுக்கு எப்படி மைந்தன் ஆனான் என்ற உண்மையை விளக்கினாள். கர்ணன் தன்னுடைய சொந்த சகோதரர்களாகிய பாண்டவர்களோடு வந்து சேர்ந்து கொள்ள வேண்டும் என்று தாய் குந்தி கர்ணனை வற்புறுத்தி வேண்டினாள். ஆனால் கர்ணன் அதற்கு சிறிதும் இணங்கவில்லை. கிருஷ்ணரிடம் தெரிவித்த அதே கருத்தை குந்திதேவியிடம் தெரிவித்து எக்காரணத்தை முன்னிட்டும் தான் பூண்டிருந்த தீர்மானத்தில் இருந்து பின்வாங்க ஆயத்தமாக இல்லை என்றும் தெரிவித்தான்.

குந்தி தேவி கிருஷ்ணரின் ஆலோசனையின் படி 2 வரங்களை கர்ணனிடம் கேட்டு வாங்கினாள். அதன்படி கர்ணன் அர்ஜுனனை தவிர மற்ற சகோதரர்கள் 4 பேரையும் எதிர்த்து ஆயுதம் ஏந்தி போர் புரிய கூடாது. கர்ணன் வைத்திருக்கும் நாகாஸ்திரத்தை அர்ஜூனன் மீது ஒரு முறைக்கு மேல் பிரயோகப்படுத்தக்கூடாது என்ற வரத்தை வாங்கினாள். கர்ணன் குந்தி தேவி கேட்ட வரத்தை தர சம்மதித்து ஒரு விண்ணப்பம் வேண்டினான். அதன்படி அர்ஜுனனை கர்ணன் கொல்ல வேண்டும். அல்லது அர்ஜுனனால் கர்ணன் கொல்லப்பட வேண்டும் இரண்டில் ஒன்று நிச்சயம். யுத்தத்திற்கு பிறகு அவன் உயிர் பிழைத்திருந்தால் அவனை தன் தலை மகன் என்று குந்தி பகிரங்கமாக அறிவிக்கலாம். அப்படி அல்லாது போர்க்களத்தில் கர்ணன் இறந்தபிறகு அவன் தலையை குந்திதேவி தனது மடியில் வைத்துக் கொண்டு தன்னுடைய மகன் இவன் என்று உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும். அதுவரையில் அவனைப் பற்றிய மர்மம் யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்று குந்திதேவிடம் அவன் விண்ணப்பம் வைத்தான். குந்திதேவியும் அதற்கு சம்மதித்து அங்கிருந்து கிளம்பினாள்.

கிருஷ்ணன் உபப்பிளவியாவிற்கு திரும்பிவந்து அஸ்தினாபுரத்தில் நிகழ்வுகளையெல்லாம் மற்றவர்களுக்கு எடுத்து விளக்கினான். யுத்தம் புரிவதைத் தவிர வேறு உபாயம் ஏதும் அவர்கள் கைவசம் இப்போது இல்லை. இனி காலதாமதம் செய்யாமல் அவர்கள் யுத்தத்திற்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டார்கள்.

துருபத மன்னன், அவன் மகன் திருஷ்டத்யும்னன், விராட வேந்தன், சிகண்டி, சாத்யகி, சேகிதானன். பீமன் ஆகியோரை தங்கள் வசமிருந்த ஏழு அக்ஷௌஹினி படைகளுக்கும் சேனாதிபதியாக நியமித்தார்கள். அர்ஜுனனும் கிருஷ்ணனும் ஆலோசித்து திருஷ்டத்யும்னனை அனைவருக்கும் தலையாக சேனாதிபதியாக நியமித்தார்கள். துருபத மன்னனுடைய வீரியமான மகன் திருஷ்டத்யும்னன் ஆவான். அவன் தன்னுடைய சகோதரி திரௌபதியை அர்ஜுனனுக்கு மணமுடித்து கொடுத்தவன். திரௌபதியே கௌரவர்கள் சபை நடுவே வைத்து அவமானப்படுத்தியது பாண்டவர்கள் 13 வருடங்களாக காட்டில் வசித்தது அகியவற்றை அவன் மனதில் வைத்திருந்தான். இதற்கு பழிக்குப்பழி வாங்கும் சந்தர்ப்பம் இப்பொழுது அவனுக்கு வாய்த்தது. பாண்டவர்களின் படைகள் அனைத்திற்கும் திருஷ்டத்யும்னன் தலையாய சேனாதிபதியாக பொறுப்பெடுத்துக் கொண்ட பொழுது வீரர்கள் அனைவரும் ஏகோபித்து கர்ஜித்தனர். சங்க நாதங்கள் முழங்கின. யானைகள் பிளிறின. பாண்டவப் படைகளை ஒருசேர போர்களம் செல்ல துவங்கினார்கள்.