கிருஷ்ணருடைய பாதுகாப்புக்கு நிகராக வேறு ஏதும் இல்லை என்பது அர்ஜூனனுடைய கொள்கையாக இருந்தது. அர்ஜுனன் கிருஷ்ணனுடைய அருளை நம்பி இருந்தான். துரியோதனன் கிருஷ்ணனுடைய சேனைப் படைகளையும் ஆயுதங்களையும் நம்பி இருந்தான். அடுத்தபடியாக பலராமனுடைய உதவியை துரியோதனன் நாடிச் சென்றான். பலராமன் துரியோதனனிடம் விராட நகரிலேயே தீவிரமாக அனைத்தையும் எடுத்து விளக்கினேன். ஆனால் கிருஷ்ணனோ முற்றிலும் பாண்டவர்களுக்கு சகாயம் பண்ணுவதில் தீவிரமாக இருக்கின்றான். என் சகோதரனை எதிர்த்து போர் புரியும் எண்ணம் எனக்கு இல்லை. ஆகையால் இரண்டு கட்சிகளுக்கும் நான் நடுநிலை வகிப்பவனாக இருந்து கொள்கிறேன் என்றார். துவாரகைக்கு வந்து முற்றிலும் பயன்பட்டது என்று துரியோதனன் உறுதியாக நம்பினான்.
நகுலனுக்கும் சகாதேவனுக்கும் தாயாக இருந்தவள் காலம் சென்ற மாத்ரி. அவளுடைய சகோதரன் சல்லியன் மத்ர தேசத்தை ஆண்டு வந்தான். வரப்போகும் யுத்தத்தில் தங்களுக்கு உதவி புரிய வேண்டும் என்று சல்லியனை பாண்டவர்கள் வேண்டிக் கொண்டனர். தன்னுடைய சகோதரியின் செல்வர்களுக்கு தக்க முறையில் உதவி தர வேண்டும் என்று சல்லியன் தீர்மானித்தான். ஒரு பெரிய சேனையை திரட்டிக்கொண்டு அவன் பாண்டவர்கள் முகாம் அமைத்து இருந்த உபப்பிளவிய நகரை நோக்கி விரைந்து போய்க்கொண்டிருந்தான். சல்லியனின் தீர்மானத்தையும் போக்கையும் அறிந்த துரியோதனன் சூழ்ச்சி ஒன்றை கையாண்டான். சல்லியன் பெரும் படையுடன் வரும் பாதையில் தங்கப் போகும் இடங்கள் அனைத்திலும் அவர்கள் வருவதற்கு முன்பே துரியோதனன் அருமையான கொட்டகைகளை அமைத்து வைத்திருந்தான். சல்லியனுக்கு வழிநெடுக உபசாரங்களும் உணவும் வழங்கப்பட்டது. இத்தகைய அரிய பெரிய ஏற்பாடுகள் வசதிகள் எல்லாம் தன்னுடைய சகோதரியின் செல்வன் யுதிஷ்டிரன் செய்து வைத்திருந்தான் என்று சல்லியன் எண்ணினான்.
பணிவிடை செய்தவர்களிடம் எனக்கு பணிவிடை செய்வதில் எத்தனை சிரமம் எடுத்துக் கொண்ட உங்கள் அனைவருக்கும் தக்க முறையில் சன்மானம் செய்தாக வேண்டும். இதற்கான அனுமதியை உங்களுடைய அரசரிடம் தயவுசெய்து பெற்று வாருங்கள் என்றான். வேலையாட்கள் ஓடிச்சென்று துரியோதனனிடம் எடுத்துரைத்தார்கள். இத்தகைய சூழ்நிலை ஏற்பட வேண்டும் என்று துரியோதனன் ஏற்கனவே திட்டம் போட்டிருந்தான். அவனுடைய திட்டப்படியே நடந்தமையால் மகிழ்ந்த துரியோதனன் சல்லியனை அணுகி என்னுடைய உபசாரத்தை நீங்கள் மனமுவந்து ஏற்றுக் கொண்டதே முன்னிட்டு நான் பெருமகிழ்வு அடைகிறேன் உங்களால் நான் கண்ணியப்படுத்தப்பட்டவன் ஆகின்றேன்என்றான். இத்தகைய அரிய பெரிய உபசாரங்கள் எல்லாம் எதிர்க்கட்சி மன்னனிடம் இருந்து வந்தது என்று அவன் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இதற்கு கைமாறாக நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்து சொல் துரியோதனனிடம் சல்லியன் கேட்டான். துரியோதனனுடைய சூழ்ச்சி முற்றிலும் வெற்றிபெற்றது. அக்கணமே நீங்களும் உங்களுடைய பெரிய சேனையும் இனி வரப்போகும் யுத்தத்தில் தயவு பண்ணி என்னுடன் சேர்ந்து யுத்தம் செய்ய வேண்டும் இதுவே தங்களிடம் வேண்டுகின்ற சன்மானம் ஆகும் என்று துரியோதனன் சல்லியனிடம் கூறினான்.