விதுரரும் சஞ்சயனும் திருதராஷ்டிரனை சமாதானப்படுத்த பெருமுயற்சி எடுத்துக் கொண்டனர். அஸ்தினாபுரம் துக்கத்தில் மூழ்கி இருந்தது. உற்றார் உறவினர் என அனைவரையும் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் மடிந்து போனதை குறித்து பெண்கள் அழுது கொண்டிருந்தனர். போரில் எண்ணிக்கையில் அடங்காத வீரர்கள் அழிந்து போனதற்கு திருதராஷ்டிரன் தான் காரணம் என்று சஞ்சயன் எடுத்துரைத்தான் இதைக் குறித்து பெரியோர்கள் எச்சரிக்கை செய்தபொழுது திருதராஷ்டிரன் அதை ஏற்கவில்லை. பின்பு அதன் விளைவை அனுபவித்தே ஆகவேண்டும் என்று விதுரர் கூறினார். அப்போது வியாச பகவான் அங்கு பிரசன்னமாகி திருதராஷ்டிரருக்கு ஓரளவு ஆறுதலும் உறுதிப்பாடும் கூறினார். அம்மன்னன் போர்க்களத்திற்குச் சென்று தன்னுடைய புதல்வர்களின் சடலங்களை தகனம் செய்ய வேண்டும் என்றும் அழிந்து போனவர்களுக்கு ஈமக் கடன்களைச் செய்து முடிக்க வேண்டும் என்றும் வியாசர் புத்திமதி புகட்டினார். திருதராஷ்டிரன் தன் தம்பியின் பிள்ளைகளாகிய பாண்டவர்களை தன் பிள்ளைகளாக ஏற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினார் வியாசர்.
அஸ்தினாபுரத்தில் இருந்தவர்கள் கும்பல் கும்பலாக புறப்பட்டு போர்க்களம் நடந்த இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் நடந்து போன அதே பாதையில் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு திரௌபதி அழுது கொண்டு வனத்திற்குச் சென்றான். தமக்கு வந்த துயரம் நாளடைவில் அஸ்தினாபுரத்து மகளிருக்கு வந்தமையும் என்று கூறி இருந்தாள். திரௌபதி அப்பொழுது கூறியது இப்போது நடந்தது.
பதிமூன்று வருடத்திற்கு முன்பு வனவாசம் போன பாண்டவர்கள் இப்போது தங்களுக்கூறிய ராஜ்யத்தை மீட்டெடுத்து வெற்றி வீரர்களாக அஸ்தினாபுரத்திற்கு திரும்பி வந்தார்கள். அஸ்தினாபுரம் நுழைந்த உடனேயே பெரியப்பா திருதராஷ்டிரரோடு இணைந்து இருக்க பாண்டவர்கள் முயன்றனர். பாண்டவர்கள் மீது கோபத்திலும் சோகத்திலும் மூழ்கிக் கிடந்தான் திருதராஷ்டிரன்.
அரண்மனைக்கு வந்த பாண்டவர்களில் யுதிஷ்டிரனை கிருஷ்ணன் முதலில் திருதராஷ்டிரருக்கு அறிமுகப்படுத்தினார். அவனை அன்புடன் கட்டித் தழுவிக் கொண்டார். இரண்டாவது பீமனை அறிமுகப்படுத்துவதாக இருந்தது. பீமன் பெயரை கேட்டதும் திருதராஷ்டிரனுக்கு கோபம் அதிகமாக வரும் என்று கிருஷ்ணர் எதிர்பார்த்தார். அதை சமாளிக்க பீமனுக்கு பதிலாக அவனைப் போன்றே செய்யப்பட்ட பொம்மை ஒன்றை திருதராஷ்டிரன் முன் நிறுத்தி பீமன் என்று அறிமுகப்படுத்தினான். துரியோதனனையும் ஏனேய அனைத்து புதல்வர்களையும் கொன்றதை எண்ணிய திருதராஷ்டிரர் சினத்தை வளர்த்து அதை வெளிப்படுத்தும் வழியாக வெறுப்புடன் இறுகத் தழுவினான். அதன் விளைவாக அந்த பொம்மை நொறுங்கிப்போனது. திருதராஷ்டிரனும் மயங்கி தரையில் விழுந்தான். திருதராஷ்டிரனை சஞ்சயன் தேற்றுவித்தார். தெளிந்து எழுந்த மன்னன் தன் செயலை குறித்து வருந்தினார். பீமனை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய முறையை கிருஷ்ணன் எடுத்துரைத்தார். பீமன் மீது இருந்த வெறுப்பு தற்பொழுது திருதராஷ்டிரருக்கு விறுப்பாக மாறி அமைந்தது. அன்பு படைத்தவனாக திருந்தி தன் தம்பியின் பிள்ளைகள் ஐவரையும் தனக்கு உரியவர்கள் என அன்புடன் ஏற்றுக்கொண்டான்.