சித்தர்கள்

சித்தர்கள்

சித்தர்கள் என்பவர்கள் யார்?. அவர்கள்து நோக்கம் என்ன? நாமும் சித்தராக முடியுமா? இது அவ்வப்பொழுது சிலருக்குத் தோன்றும் கேள்விகள் தான். சித்தர்கள் என்பவர்கள் யார்? சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். சுருக்கமாகச் சொன்னால் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர். மனிதன் முயன்றால் சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில் சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால் இக்கலிகாலத்தில் அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம். சித்தராவதற்கு முதற்படி தன்னையும் இந்த உலகையும் இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும். இதைத் தான் திருமூலரும்…

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே.

என்கிறார். இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும்.

அகத்தியரும்..

மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே.

என்கிறார். ஆக முதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு. மிகக் கடினமான இந்த முறையைப் பின்பற்ற முடியாத நிலையில் வாழ்பவர்கள் என்ன செய்வது? வாழ்வில் ஏற்படும் துன்பங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் நம்மை எவ்வாறு காத்துக் கொள்வது? யார் உதவுவார்கள்? ஏனெனில் அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்பது விதி. அதனை நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன. சாந்தி பரிகாரம் போன்றவை செய்தாலும் சில சமயங்களில் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால் அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்குமானால் அவ்வகைத் துன்பங்களிலிருந்து தப்பிப்பது எப்படி?. யார் உதவி செய்வார்கள்? இது மாதிரி நேரத்தில் மனிதனுக்கு உதவி செய்வது சித்த புருஷர்கள் மட்டுமே. சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்லஎண்ணம், நல்லசெயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும். வெறும் 18 பேர் மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர்.

சித்தர்களை வெறும் தமிழர்கள் இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயலக் கூடாது. பூனைக்கண்ணர் எகிப்து இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்ற நம்பிக்கை உண்டு. போகர் சீனர் என்று சொல்லப்படுகிறது. யாக்கோபுச் சித்தர் அரேபியாவைச் சேர்ந்தவர் என்ற கருத்து நிலவுகிறது. ரோமரிஷி ரோம் நகரைச் சேர்ந்தவர் என்றும் சொல்கிறார்கள். இப்படி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள் இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சித்தர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே. அவர்களின் கடைக்கண் பார்வைபட்டால், திருக்கரத்தால் ஆசிர்வதித்தால், மனிதனிடமிருந்து ஏதேனும் பொருளை வாங்கிக் கொண்டால் மனிதனின் கர்மவினையை அவர்கள் ஏற்றுக் கொண்டு மாற்றுகிறார்கள் என்பது பொருள். அதன் பின் அம்மனிதனின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். ஆனால் ஒன்று. அத்தகைய சித்தர்களின் அருளைப் பெற மனிதனுக்கு முதலில் வேண்டியது நல்ல தகுதி. தகுதியற்றோருக்கும் நல்லெண்ணம் இல்லாதவர்களுக்கும் சித்தர்கள் உதவ மாட்டார்கள். சித்தர்களைத் தியானித்தால் அவர்களின் திருவருள் கிடைத்தால் அவர்கள் நமக்கு குருமுகமாக உபதேசித்தால் கீழ்கண்ட சந்தேகங்களுக்குத் தெளிவான விடை கிடைக்கும்.

சராசரி மனிதனின் நிலையும் இறைநிலை நோக்கி உயரும். ஆத்மா என்பது தான் என்ன? மனித உடலில் அதன் இருப்பிடம் யாது? மனிதன் ஏன் பிறந்து இறந்து மீண்டும் பிறக்க வேண்டும்? ஒவ்வொரு மனிதனையும் அவனை அறியாமலே ஆட்டி வைக்கும் சக்தி எது? தியானம் என்பது என்ன? ஏன் அதனைச் செய்ய வேண்டும்? ஏழு உலகங்களுக்கும், மனித உடலின் ஏழு சக்கரங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? கனவுகள், ஆவிகள், தேவதைகள் இவற்றிற்கெல்லாம் உள்ள தொடர்பு என்ன? மனிதன் எப்படித் தெய்வநிலைக்கு உயர்வது? தூல உடல், சூக்கும உடல், காரண உடல், அவற்றின் பயணம் கர்மவினையை வெல்வது எப்படி? இது போன்ற சாதாரணமாக நம்மால் அறிந்து கொள்ள முடியாத கேள்விகளுக்கெல்லாம் விடைகளை சித்தர்கள் திருவருளால் உணரலாம்.

சித்தர்கள் இறைவன் என்பவன் யார் அவனை அடையும் மார்க்கம் என்ன பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவது எப்படி? ப்ரம்மம் என்பது என்ன? இறப்பிற்குப் பின் மனிதன் என்னவாகின்றான்? உலகிற்கு அடிப்படையாகவும் உயிர்களின் இயக்கத்திற்கு ஆதாரமாகவும் இருப்பது எது? உடல் தத்துவங்கள் உயிர்க் கூறுகள் அவற்றின் இரகசியங்கள், இறவாமல் இருக்க, உணவு உண்ணாமல் இருக்க என்ன வழி, இரசவாதம், காயகல்பம், முப்பூ, மூலிகை இரகசியங்கள், அஷ்டமாசித்திகள், யோகம், ஞானம், மந்திரம், தந்திரம், சோதிடம், தன்னறிவு, ஜீவன்முக்தி, பரவாழ்க்கை, தேவதைகள் என அனைத்தினையும் பல ஆண்டுகள் தவம் செய்து பலபிறவிகள் எடுத்து கூடுவிட்டுக் கூடு பாய்ந்து என பலவற்றை அனுபவப்பூர்வமாக ஆராய்ந்து பார்த்தவர்கள். உணர்ந்தவர்கள். சொல்லப்போனால் சித்தத்தை அடக்கி தாங்களும் சிவமாய் இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள். உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும். ஆனால் அதற்கான கொடுப்பினை நல்வினை நமக்கு இருக்க வேண்டும். ஆகவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து நற்செயல்கள் செய்து நமது தகுதியை நாம் உயர்த்திக் கொள்ளுதல் மிக அவசியம். சித்தர்கள் பாதத்தைச் சரணடைவோம். சீரும் சிறப்புமாய் வாழ்வோம்.

காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை

காசியில் (வாரணாசி) பல்லிகள் ஒலிப்பதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. ராமர் ராவணவதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டு வரும்படி தெரிவித்தார். அனுமன் காசியை அடைந்தார். எங்கும் லிங்கங்கள். எது சுயம்புலிங்கம் என்று தெரியாமல் விழித்தார். அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான். பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புக்களினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமன் அந்தச் சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துப் புறப்பட்டார்.

காசியின் காவலாகிய காலபைரவர் அது கண்டு கோபித்தார். என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம்? என்று கூறித் தடுத்தார். பைரவருக்கும் அனுமனுக்கும் கடும் போர் நடந்தது. அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி உலக நன்மைக்காக இந்த சிவலிங்கம் தென்னாடு போகிறது அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார்கள். பைரவர் சாந்தியடைந்து சிவலிங்கத்தைக் கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனாலும் தம் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்குத் துணை புரிந்த கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும் பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக் கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார். அந்தச் சாபத்தின்படி இன்னும் காசி நகர எல்லைக்குள் கருடன் பறப்பதில்லை பல்லிகள் ஒலிப்பதில்லை.

வியாக்ரபாதர்

புலிக்கால் முனிவர் என்பவர் மத்யந்தனர் என்பவரின் மகனும் சிறந்த சிவ பக்தரும் ஆவார். இவருடைய இயற்பெயர் மழன் என்பதாகும். இவர் வியாக்ரபாதர் என்றும் அழைக்கப் படுகிறார் .மத்யந்தனர் என்ற முனிவருக்கு மகனாகப் பிறந்த மழன் தனது தந்தையிடமே வேதங்களைக் கற்றுக் கொண்டான். அவன் ஒரு நாள் தந்தையிடம் மனிதனாகப் பிறந்தவர்கள் இறைவனை அடையத் தவம் செய்தால் மட்டும் போதுமா? என்று கேட்டான். அதற்கு அவர் தவம் செய்தால் சொர்க்கம் மட்டுமே கிடைக்கும். சிவ வழிபாடு செய்பவர்கள் தான் மறுபிறவி இல்லாத உயர்ந்த நிலையை அடைவார்கள். நீ சிவனை வழிபட்டுச் சிறந்த நிலையைப் பெற முயற்சி செய் என்றார். அதன் பிறகு மழன் சிவ வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டினான். அவனுடைய பக்தி மிகுந்த சிவ வழிபாட்டைக் கண்ட முனிவர்கள் பலரும் அவனை மழமுனிவர் என்று அழைக்கத் தொடங்கினர். இதையடுத்து மழமுனிவர் பிற இடங்களுக்கும் சென்று சிவ வழிபாடு செய்வது என்று முடிவு செய்தார்.

அவருடைய வழிபாட்டுப் பயணத்தில் தில்லைவனம் எனும் பகுதிக்கு வந்து சேர்ந்தார். அந்தப் பகுதியில் உயரமாக வளர்ந்திருந்த மரங்களில் பூத்துக் கிடந்த பூக்கள், அவரை மிகவும் கவர்ந்தன. தான் வழிபட இருக்கும் சிவலிங்கத்தை அந்த அழகிய பூக்களைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். சிவ வழிபாட்டிற்காக பறிக்கும் பூக்கள் தேன் குடிக்க வரும் வண்டுகளால் எச்சில்பட்டு விடக்கூடாது என்பதற்காக அதிகாலை நேரத்திலேயே அந்த மரங்களில் ஏறி பூக்களைப் பறித்துக் கொண்டு வந்தார். மரம் ஏறுவதில் அனுபவமில்லாத அவருக்குக் கைகளிலும் கால்களிலும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டன. அந்தக் காயங்களிலிருந்து வழிந்த இரத்தத் துளிகள் அவர் பறித்து வந்த சில பூக்களில் ஒட்டிக் கொண்டிருந்தன. அது மட்டுமில்லாமல் சூரிய வெளிச்சமில்லாமல் இருட்டாக இருந்த அதிகாலை நேரத்தில் பூக்களைப் பறித்து வந்திருந்ததால் அவர் பறித்து வந்த பூக்களில் சில அழுகிய பூக்களும் இருந்தன. இதனால் வருத்தமடைந்த அவர் எளிதில் மரம் ஏறுவதற்கு வசதியாகப் புலியின் கால்களும் இருட்டிலும் தெளிவாகக் காணும் நல்ல பார்வையும் வேண்டுமென்று நினைத்தார். அவர் இறைவன் சிவபெருமானை நினைத்துத் தனக்குப் புலியின் கால்களும் தெளிவான பார்வையும் தந்தருளும்படி வேண்டினார். அவரின் வேண்டுதலைக் கேட்ட சிவபெருமான் அவருக்கு நேரில் காட்சியளித்து வேண்டிய வரத்தை வழங்கினார். அதன்பிறகு முனிவரின் கால்கள் புலிக்கால்களாக மாற்றமடைந்தன. கைகளும் புலியின் கால்களைப் போன்று மாறின. அவருக்கு இருட்டிலும் தெளிவாகக் காணும் பார்வையும் கிடைத்தது. சமஸ்கிருதத்தில் வியாக்ரம் என்பது புலியைக் குறிப்பதனால் வியாக்ரபாதர் என்று அழைக்கப்பட்டார். இதற்குப் புலிக்கால்களை உடையவர் என்று பொருளாகும். தமிழில் புலிக்கால் முனிவர் என்றும் அறியப்படுகிறார்.
புலியின் கால்களைக் கொண்டவர் என்பதால் அவர் வியாக்ரபாத முனிவர் என்று அழைக்கப்பட்டார்.

தன்னுடைய வழிபாட்டை மேலும் சிறப்பாக செய்ய நினைத்த வியாக்ரபாத முனிவர் துர்வாச முனிவரிடம் சீடராகச் சேர்ந்தார். துர்வாச முனிவர் வியாக்ரபாதருக்கு சிவ வழிபாடு மட்டுமின்றி விஷ்ணு வழிபாடு அம்பாள் வழிபாடு பிரம்மன் வழிபாடு உள்ளிட்ட பல்வேறு இறை வழிபாடுகளையும் அதற்கான வழிபாட்டு முறைகளையும் கற்றுக் கொடுத்தார். திருப்பிடவூர் என்ற தலத்தில் அருள்பாலித்து வந்த இறைவனை பூஜித்து வந்தார் புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர். ஒரு முறை இத்தலத்தில் இருந்த நீர்நிலை வறண்டு போனது. இதனால் இறைவனை அபிஷேகம் செய்து வழிபட நீரின்றி தவித்தார் புலிக்கால் முனிவர். அந்த சமயத்தில் இந்திரன் தனது வெள்ளை யானையுடன் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று கொண்டிருந்தான். கயிலாயத்திலிருந்து வெள்ளை யானையில் நீர் எடுத்து வந்து ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று அபிஷேகம் செய்து வழிபடுவது இந்திரனின் தினசரி வழக்கம். அதற்காகத்தான் வான்வழியாக இந்திரன் சென்று கொண்டிருந்தான். வெள்ளை யானையின் மீது அமர்ந்து இந்திரன் தீர்த்தத்துடன் செல்வதைக் கண்ட வியாக்ரபாதர் வெள்ளை யானையிடம் சிவனுக்கு பூஜை செய்ய கொஞ்சம் தீர்த்தம் கொடு என்று கேட்டார். அதற்கு வெள்ளை யானை என்னால் தீர்த்தம் தர முடியாது என்று கூறி மறுத்துவிட்டது. இதைக் கேட்ட முனிவருக்கோ கோபம் தலைக்கு ஏறியது. தனது புலிக்கால் நகங்களால் தரையைத் தோண்டினார். உடனே சிவபெருமானின் தலையில் இருந்த கங்கை கீழே இறங்கி வந்தது. ஊற்று உற்பத்தியாகி தண்ணீர் பெருகியது. அந்த நீரைக் கொண்டு முனிவர் சிவபூஜையைச் செய்தார். அந்த நீர் ஊற்று திருக்குளமாக மாறி அதுவே புலிபாய்ச்சி தீர்த்தம் என்று தற்போது அழைக்கப்படுகிறது.

முனிவரிடம் தர்க்கத்தில் ஈடுபட்டதால் வெள்ளை யானை திருவானைக்காவலுக்கு தாமதமாக வந்தது. தாமதத்திற்கு என்ன காரணம் என்று ஜம்புகேஸ்வரர் வினவ முனிவர் தண்ணீர் கேட்ட விவரத்தையும் தான் அவருக்கு தண்ணீர் தர மறுத்த விவரத்தையும் இறைவனிடம் கூறியது வெள்ளை யானை. உடனே முனிவருக்கு தண்ணீர் கொடுத்து விட்டு வரும்படி ஜம்புகேஸ்வரர் பணிக்க வெள்ளை யானை மீண்டும் திருப்பிடவூர் திரும்பி தீர்த்தம் எடுத்துக் கொள்ளும்படி முனிவரிடம் கூறியது. ஆனால் கோபத்துடன் இருந்த முனிவர் வேண்டாம் என மறுத்து விட்டார். வெள்ளை யானை தன்னிடமிருந்த தீர்த்தத்தை சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தது.

வசிஷ்டர் தன் குடும்பத்துடன் சிதம்பரம் திருக்களாஞ்செடிகள் சூழ்ந்த சிங்காரத்தோப்பில் தவம் செய்து கொண்டிருக்கின்றார். தம்மை வந்து தரிசித்த வியாக்ரபாத மகரிஷிகளைக் கண்டு மகிழ்ந்தார். வியாக்ரபாதரின் தவ சிரேஷ்டத்தைக் கண்டு வியப்புற்று தன்னுடைய தங்கை ஆத்ரேயினை வியாக்ரபாதருக்கு மணம் முடித்து வைத்தார். வசிஷ்டரின் தங்கையும், வியாக்ரபாதரும் தம்பதி சமேதராக நடராஜப் பெருமானை வழிபட்டுவந்தனர். இருவரின் குடும்ப வாழ்க்கைக்குச் சான்றாக சூரியனையொத்த பிரகாசத்துடன் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு உபமன்யு என்று பெயரிட்டனர். உபமன்யு வசிஷ்டரின் ஆசிரமத்தில் அருந்ததியின் அரவணைப்பில் தெய்வப்பசுவாகிய காமதேனுவின் பால் அருந்திக் கொண்டு வனப்புடன் வளர்ந்துவந்தான். சில காலம் சென்று உபமன்யுவையும் அவன் தாயையும் அருந்ததி வியாக்ரபாதரின் இல்லம் கொண்டு சேர்ப்பிக்கின்றாள். இங்கு வந்த குழைந்தைக்கு வியாக்ரபாதர் தனது ஆசிரமத்திலிருந்த பசுவின் பால் தர தெய்வப்பசுவாகிய காமதேனுவின் சுவைமிக்க பால் அருந்திய அந்த பாலகன் வியாக்ரபாதர் தந்த பாலைத் துப்பிவிட்டு காமதேனுவின் பால் தான் வேண்டும் என அடம்பிடித்து பசியால் துடிக்க செய்வதறியாது திகைத்த வியாக்ரபாதர் நடராஜரை வேண்ட தன் பக்தனின் துயர் துடைக்க குழந்தை குடிப்பதற்காக பால் அலையென அடித்துவரும் வகையில் பாற்கடலையே உண்டாக்கினார். அதை உண்ட உபமன்யு திருப்தியடைந்து தந்தையிடம் பாடங்கள் பயின்று பெரும் ஞானியானார். உபமன்யு கிருஷ்ணருக்கு பஞ்சாக்ஷர உபதேசம் செய்வித்து கிருஷ்ணருக்கு ஏற்பட்ட தோஷங்களை நீங்கச் செய்தார். இவரின் சரிதத்தை சிவரஹஸ்யம் மிக விரிவாக விளக்குகின்றது.

பாலுக்குப் பாலகன் வேண்டியதிடப் பாற்கடல் ஈந்த பிரான் என்று திருப்பல்லாண்டிலும், அப்பர் தேவாரத்திலும் இச்சம்பவம் இடம்பெறுகின்றது. இந்த வரலாறு நடந்த இடம் திருபட்டூர் என்ற தலம். ஊரின் புராணப் பெயர் திருப்பிடவூர் என்பதே. ஆனால் அதுவே காலப்போக்கில் திருப்பட்டூர் என்று மாறிவிட்டது. நடராஜரால் ஏற்படுத்தப்பட்ட திருப்பாற்கடல் கோயில் வடதிசையில் அமைந்திருக்கின்றது. புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்படும் வியாக்கரபாத முனிவரின் ஜீவசமாதி இங்கு உள்ளது.


ராமாநுஜரும் கூரத்தாழ்வாரும் காஷ்மீரில்

சுமார் 950 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் ஸ்வாமி ராமாநுஜரும் அவரின் முதன்மைச் சீடர் கூரத்தாழ்வாரும் அன்றைய கால கட்டத்தில் அங்கிருந்தோரின் எதிர்ப்பையும் சூழ்ச்சியையும் சமாளித்து விசிஷ்டாத்வைதக் கோட்பாட்டை நிலைநாட்டினார். கல்விக்கு தேவதையான ஸ்ரீ சரஸ்வதி தேவியே ராமானுஜரை மெச்சி ஸ்ரீ பாஷ்யகாரர் என்னும் பட்டம் சூட்டியுள்ளார்.

ராமானுஜரின் மானசீக குரு ஶ்ரீ ஆளவந்தார் தம் காலத்தில் நிறைவேற்ற முடியாத 3 ஆசைகளை ராமானுஜர் முடித்து வைக்கப் பிரதிக்ஞை எடுத்துக் கொண்டார். முதல் ஆசையான வேத வியாசரின் பிரம்ம சூத்திரத்துக்கு விரிவான வியாக்யானம் எழுத வேண்டும். அதை மிக விரைவில் முடிக்க வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார். பிரம்ம சூத்திரத்துக்கு ஏற்கனவே போதாயான மஹரிஷி என்னும் வேதவியாஸரின் சிஷ்யர் எழுதியுள்ள போதாயன விருத்தி என்னும் பாஷ்யத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அதைப் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்தார். போதாயன விருத்தி மூலம் 2 லட்சம் படிகளை உடையது. ஆனால் அந்தக் கிரந்தம் எங்கும் கிடைக்க வில்லை. அதனுடைய சுருக்கம் ஒன்று காஷ்மீரத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டார். காஷ்மீரில் இருந்த சுருக்கம் 25000 படிகளை மட்டுமே கொண்டது. உடனே கூரத்தாழ்வாருடன் ஶ்ரீரங்கத்திலிருந்து காஷ்மீருக்குப் புறப்பட்டார். மூன்று மாதங்கள் நடந்து சென்று காஷ்மீரை அடைந்தனர்.

காஷ்மீர் மன்னரிடம் அங்குள்ள சரஸ்வதி பீடத்தில் வைக்கப் பட்டிருக்கும் போதாயன விருத்தி கிரந்தத்தைத் தருமாறு கேட்டார். மன்னர் இசைந்தாலும் அங்கிருந்த பண்டிதர்கள் ஒரு முறை மட்டுமே படிக்க அனுமதித்தனர். ராமானுஜர் கூரத்தாழ்வாரை அரசவையில் படிக்கச் சொல்லிக் கேட்டார். மன்னர் நீங்கள் கேட்டதின் சாராம்சத்தை எழுதிக் கொடுங்கள். அதை சரஸ்வதி தேவி ஒப்புக் கொண்டால் நீர் கிரந்தத்தை எடுத்துச் செல்லலாம் என்றார். ராமானுஜர் அப்பொழுதே சாராம்சத்தை மட்டுமல்லாது தமது தத்துவார்த்த விளக்கத்தையும் ஓலைச் சுவடிகளில் எழுதிக் கொடுத்தார். மன்னர் அந்த ஓலைச் சுவடியை சரஸ்வதியின் காலடியில் சமர்ப்பித்து கோவிலைப் பூட்டி விடும்படி பணித்தார். மறுநாள் காலை மன்னர் பண்டிதர்கள் ராமானுஜர் கூரத்தாழ்வார் ஆகியோர் கோவிலைத் திறந்து பார்த்த போது சரஸ்வதியின் திருவடியில் வைத்த ராமானுஜரின் ஓலைச் சுவடிகள் சரஸ்வதியின் திருமுடியில் இருந்தது கண்டு அனைவரும் பிரமித்தனர்.

மன்னர் மிக வியந்து ராமானுஜரின் மகத்துவத்தை உணர்ந்து அவருக்குத் தண்டம் சமர்ப்பித்து கிரந்தத்தை ராமானுஜர் எடுத்துச் செல்வதற்கு அனுமதித்தார். ஆனால் அங்கிருந்த பண்டிதர்கள் ராமானுஜர் புதிய விளக்கவுரை எழுதினால் தங்கள் முக்கியத்துவம் பறி போய்விடும் என்று அஞ்சினர். எனவே ராமானுஜரும் கூரத்தாழ்வாரும் திரும்பிச் சென்ற வழியில் ஒர் இரவு தங்கியிருந்த இடத்திலிருந்து அந்த ஓலைச் சுவடிகளைக் கவர்ந்து கொண்டு சென்று விட்டனர். சுவடிகளைப் பறிகொடுத்த ராமானுஜர் கலக்கமடைந்து கூரத்தாழ்வாரிடம் இனி என்ன செய்வது? என்று சோகப்பட கூரத்தாழ்வார் சுவாமி அடியேன் ஒரு முறை படித்து விட்டதால் அப்படியே பதத்துக்குப் பதம் நினைவிருக்கிறது இங்கேயே சொல்லவா? ஸ்ரீரங்கத்தில் சொல்லவா என விண்ணப்பித்தார். எத்தகைய சீடரைப் பெற்றிருக்கிறோம் என்று பெருமைப்பட்டார் ராமானுஜர். ஶ்ரீரங்கம் வந்து சேர்ந்த பின் பிரம்ம சூத்திரத்திற்கு அற்புதமான வியாக்யான உரை எழுதி முடித்தார். ராமானுஜர் சொல்லச் சொல்ல கூரத்தாழ்வார் ஓலைச் சுவடிகளில் எழுதினார். அந்த உரையே ராமானுஜர் இயற்றிய கிரந்தங்களில் மிக முக்கியமான ஶ்ரீ பாஷ்யம் எனப்படுகிறது.

ராமாநுஜர் தம் இரண்டாவது காஷ்மீர் விஜயத்தில் ஶ்ரீ சரஸ்வதி தேவியை வழிபட சரஸ்வதி பீடத்துக்குச் சென்றார். அவரை சரஸ்வதி தேவியே பீடத்திலிருந்து இறங்கி வந்து வரவேற்றார். இவரது ஸ்ரீபாஷ்ய கிரந்தத்தைத் தம் சிரசால் வகித்து தன் கையை நீட்டி உடையவர் திருக்கையைப் பிடித்துக் கொண்டு போய் இது பிரஷிப்தமன்று சுத்தமாயிருந்தது என்று அங்கீகரித்து இவருக்கு ஶ்ரீ பாஷ்யகாரர் என்று திருநாமம் சாத்தினார். மேலும் ஶ்ரீ சரஸ்வதிதேவி தாம் வணங்கி வந்த லக்ஷ்மிஹயக்கிரீவர் விக்ரகத்தையும் ராமானுஜருக்குத் தந்தருளினார்.

இந்த வைபவத்தைக் கேள்வியுற்ற காஷ்மீர் மன்னர் ராமானுஜரின் பரம சீடராகி அவருடைய அருளுரைகளைத் தினமும் கேட்டு வந்தார். இதனால் பொறாமையடைந்த அரசவைப் பண்டிதர்கள் மந்திர தந்திரங்களால் ராமானுஜரைக் கொல்லத் தீர்மானித்து அதற்கான ஷூத்ர ஜபங்களில் இறங்கினார்கள். ஆனால் விபரீதமாக சூன்யம் வைத்தவர்கள் மீதே அந்த ஷூத்ர தேவதைகள் திரும்ப அரசவைப் பண்டிதர்கள் திடீரெனத் தெருக்களில் பைத்தியக்காரர்களாக நிர்வாணமாகத் தலை முடியைப் பிய்த்துக் கொண்டு ஓடினார்கள். ஒருவர் கழுத்தை இன்னொருவர் பிடித்துப் புரண்டனர்.

இதைப் பார்த்த மன்னர் ராமானுஜர் திருவடிகளில் மண்டியிட்டு இந்த பண்டிதர்களை மன்னித்து அருளவேண்டும் என்றார். மன்னா அடியேன் இவர்களை ஒன்றும் செய்யவில்லை. ஷீத்ர தேவதைகளை இன்னொருவர் மீது ஏவும் போது அணுக வேண்டியவர் அவை அணுக முடியாத சுத்தன் ஆக இருந்தால் அவைகள் ஏவியவர் மீதே திரும்பி விடும் என்றார். ராமானுஜர் மன்னரின் வேண்டுகோளை ஏற்று அவர்கள் மீது தம் ஶ்ரீபாததீர்த்தத்தைப் தெளிக்க அவர்கள் சித்த ஸ்வாதீனமடைந்து ராமானுஜரைச் சரணடைந்தனர். ராமானுஜரைக் கண்டு பிரமிப்பும் மரியாதையும் அடைந்த மன்னர் அவருக்கும் அவருடன் வந்த சீடர்களுக்கும் உயர்ந்த மரியாதைகள் செய்து அவர்களுடன் பல மைல்கள் நடந்து வந்து வழியனுப்பி வைத்தார்.

சரஸ்வதி கோவில் (சாரதா பீடமும் இது தான்) இன்றைய நிலை சரஸ்வதி கோவில் இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதியில் நீலம் நதிக்கரையில் சாரதா என்னும் குக்கிராமத்தில் (ஶ்ரீநகரிலிருந்து 70 மைல் கடல் மட்டத்திலிருந்து 11000 அடி உயரத்தில்) மிகச் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. பூஜைகள் ஆராதனைகள் எதுவும் நடைபெறுவதில்லை. 2007 ல் பாகிஸ்தான் அரசின் அனுமதி பெற்று இங்கு சென்ற காஷ்மீர் பண்டிதர்களையும் கோவில் வளாகத்துள் விடவில்லை. பண்டைக் காலத்தில் இந்த ஊர் பெரு நகரமாக சர்வ ஞான பீடம் ஆகத் திகழ்ந்தது. இங்கிருந்து சாரதா பண்டார் என்னும் நூல் நிலையம் உலகின் மிகப் பெரிய நூல் நிலையமாக பல அரிய ஓலைச் சுவடிகளின் பெட்டகமாகத் திகழ்ந்தது. பல நாடுகளிலிருந்தும் பல சமயங்களைச் சேர்ந்த அறிஞர்களும் பண்டிதர்களும் இங்கு வந்து ஞானம் பெற்றுச் சென்றுள்ளனர். ஆன்மீகம் அறிவுடமை அமைதி விளைந்த மண் உலகமே நிமிர்ந்து பார்த்த உன்னத இடம் வேதத்தை எதிர்ப்போர் பயங்கரவாதிகள் மண்டிக் கிடக்கும் இடமாக மாறி விட்டது. காஷ்மீர் மீண்டும் பழைய பொலிவுடன் கலாசார பீடமாக மலர ஶ்ரீ லக்ஷ்மிஹயக்கிரீவரையும் ஶ்ரீ சரஸ்வதி தேவியையும் ஸ்ரீராமாநுஜரையும் நெஞ்சம் நெகிழப் பிரார்த்திப்போம்.


நிழல்

ஒரு குருவும் அவரது சீடர்களும் யாத்திரை சென்று கொண்டிருந்தனர் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால் ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி இளைப்பாறினர் அப்போது சீடர் ஒருவர் குருவிடம் குருவே தினமும் கோவிலுக்கு பூஜை செல்கின்றவர்கள் இறைவனை வழிபடாமல் கோயில் பக்கம் வராதவர்கள் யாருக்கு கடவுளின் அருள் அதிகமாக கிடைக்கும் என்று கேட்டான்.

அப்போது குரு இப்போது நீ இளைப்பாறிக் கொண்டிருக்கும் இந்த மரத்திற்கு ஏதாவது தண்ணீர் ஊற்றுகின்றயா என்று கேட்டார் இல்லை குருவே என்றான் சீடன் பின் எப்படி உனக்கு இந்த நிழல் கிடைத்தது என்று கேட்டார். நிழல் தருவது மரத்தின் இயல்புதானே. மரம் நிழல் கொடுப்பதற்கு வேண்டியவர் வேண்டாதவர் என்று ஒருபோதும் மரம் பார்ப்பதில்லை. அது போலத்தான் கடவுளும் தன்னை வணங்குபவர் யார் வணங்காதவர் யார் என்றெல்லாம் கடவுள் பார்க்கமாட்டார். அதற்கு இந்த மரமே சாட்சி என்றார்.

Image result for குரு சீடன்

வைத்தீஸ்வரன் கோவில்

டில்லியை நவாப்கள் ஆண்ட கால சமயத்தில் அங்கிருந்து பெரும் படைகளுடன் புறப்பட்டு வழிநெடுக ஆங்காங்கே கோயில்களில் இருக்கும் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களை கொள்ளையடித்துக் கொண்டே வந்தனர். அப்படி வரும்பொழுது, தமிழகத்திலும் புகுந்து, சிதம்பரத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலை நெருங்கியது. அப்போது படைத்தளபதிக்கு திடீரென கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. பல்வேறு வைத்தியம் செய்தும் வலி குறையவில்லை.

இந்நிலையில் வைத்தீஸ்வரன் கோவிலில் எழுந்தருளியுள்ள செல்வ முத்துக்குமார சுவாமியின் ஆபரணங்களை பாதுகாத்து வந்த சரவணபிள்ளை முத்துக்குமரா கொடியவன் நெருங்கி விட்டார்களே அருள் வடிவான உன் மகிமை அறியாமல் உன் ஆபரணங்களை அள்ளிக் கொண்டு போய் விடுவார்களே என்று முறையிட்டு அழுதார். அப்படியே தரையில் படுத்து தூங்கி விட்டார். அவர் கனவில் முருகப்பெருமான் எழுந்தருளி சரவணா வருத்தங்கொள்ளாதே அத்தளபதிக்கு கடுமையான வயிற்றுவலியை உண்டாக்கியுள்ளது. நாளை காலை இப்பொட்டலத்திலுள்ள மருந்தை அவருக்கு கொடுத்து அவனை விழுங்கச் செய் என்று கூறி மறைந்தார். கண்விழித்துப் பார்த்த சரவணப்பிள்ளையின் கையில் ஒரு பொட்டலம் இருந்தது.

விடிந்ததும் தளபதி இருந்த முகாமிற்கு சென்று காவலர்களிடம் உங்கள் தளபதியின் வயிற்று வலியை தீர்க்க என்னிடம் மருந்து உள்ளது என்றார். அவரை அழைத்துச் சென்று தளபதியிடம் விஷயத்தை கூறினர். ஐயா என் வயிற்று வலியை உங்கள் மருந்து தீர்த்து வைத்தால் உங்களுக்கு தகுந்த சன்மானம் அளிப்பேன் என்றார் தளபதி. தன் கையில் இருந்த பொட்டலத்தைப் பிரித்தார் சரவணப்பிள்ளை. அதில் வைத்தீஸ்வரன் கோவில் பிரசாதமான திருச்சாந்து உருண்டை இருந்தது. அதை தளபதியிடம் கொடுத்து உண்ண சொன்னார். சாப்பிட்ட மறுநொடி தளபதியின் வயிற்றுவலி காணாமல் போனது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்த தளபதி வேண்டியதைக் கேளுங்கள் என்றார். சரவணபிள்ளையும் முருகப்பெருமான் தன் கனவில் சொன்னதை விவரித்துக் கூறினார். இதைக் கேட்டதும் மெய் சிலிர்த்தான் தளபதி. தன்னிடம் இருந்த முத்துப்பந்தல், ஆலவட்டம், தண்டு, குடை, கொடி மற்றும் சாமரம் ஆகியவற்றுடன் ஏராளமான செல்வத்தையும் முருகப்பெருமானுக்கு சமர்ப்பித்தார். இதை நினைவுறுத்தும் விதமாகத் தான் இன்றும் செல்வ முத்துக் குமார சுவாமிக்கு தீபாராதனை நடைபெறும் காலங்களில் தண்டு, குடை, கொடி, ஆல வட்டம் மற்றும் சாமரம் ஆகியவற்றைக் கொண்டு உபச்சாரம் நடைபெறுகிறது.

பக்தி

ஆன்மிக நாட்டம் அதிகம் உள்ள ஒரு முதிய செல்வந்தர் ஒரு புனிதத் தலத்திற்கு பாலைவன வழியில் பயணித்துக் கொண்டு இருந்தார். வழியில் தங்கி இளைப்பாற இடமோ உணவு உண்ண வழியோ இல்லாமல் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாவதைக் கவனித்தார். இறைவனை நாடிப் போகும் பக்தர்கள் இப்படி அவதியுறுகிறார்களே என்று இரக்கப்பட்ட அவர், அவர்கள் குறை போக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினார். புனிதத் தலத்தில் இறைவனைத் தொழுது விட்டுத் திரும்பிய பின் அவர் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தார். பாலைவனத்தில் ஒரு பெரிய கூடாரத்தைக் கட்டி அந்த வழியாகப் புனிதப் பயணம் செல்லும் பக்தர்களுக்கு உண்ண உணவும் இளைப்பாறிச் செல்ல வசதியும் ஏற்படுத்தித் தர முடிவு செய்தார். அதையும் தானே அங்கு தங்கிச் செய்ய நினைத்த அவர் மகன்களிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்து விட்டுத் தன் செல்வத்தில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

பாலைவனத்தின் மத்தியில் அந்தப் பெரியவர் பெரிய கூடாரம் இட்டுக் கொண்டு அதில் சில வேலையாட்களுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார். புனித யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு அவர் இலவசமாக நீர் மற்றும் உணவும் இளைப்பாற வசதிகளும் தந்தார். ஆனால் வருபவர்கள் தொழுகை நடத்தி இறைவனை வணங்கிய பின்னரே அவர்களுக்கு உணவு வழங்கப் பட்டது. அதை ஒரு கொள்கையாகவே அவர் வைத்திருந்தார். பாலைவன வழியாக பயணித்த அனைவருக்கும் அவர் சேவை பெரிய உபகாரமாக இருந்தது. புனிதத் தலத்திற்குச் செல்லாமல் மற்ற இடங்களுக்குச் செல்லும் பயணிகளும் அவர் கூடாரத்திற்கு வந்து தொழுகை நடத்தி சாப்பிட்டு இளைப்பாறி விட்டுத் திருப்தியுடன் சென்றார்கள். அந்தப் பெரியவரும் அந்தப் பயணிகளுக்கு உதவ முடிந்ததில் பெரும் திருப்தியை உணர்ந்தார். பசியுடனும் களைப்புடனும் கூடாரத்திற்குள் நுழையும் மக்கள் திருப்தியுடனும், உற்சாகத்துடனும் கிளம்புவதைக் காணும் போது இறைவனின் அடியார்களுக்குச் செய்யும் சேவை இறைவனுக்கே செய்யும் சேவை போல் அவருக்கு நிறைவைத் தந்தது. அவரும் ஒரு ஆளிற்காவது உணவளிக்காமல் உணவருந்தியதில்லை. அவர் தொழுது முடித்தாலும் கூட யாத்திரீகர்களில் ஒருவராவது வந்து தொழுகை நடத்தி முடிக்கும் வரை காத்திருந்து அவருடன் சேர்ந்து தான் அவரும் உண்பார்.

ஒரு நாள் தட்பவெப்ப நிலை மோசமாக இருந்தபடியால் பாலைவனத்தில் நீண்ட நேரம் யாரும் காணவில்லை. பெரியவர் ஒருவராவது வரட்டும் என்று உணவருந்தாமல் காத்திருந்தார். நீண்ட நேரம் கழித்து ஒரு பயணி களைத்துப் போய் வந்தான். அவனைப் பார்த்தவுடன் பெரியவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. அவனை மனமார வரவேற்று உபசரித்த பெரியவர் சொன்னார். வாருங்கள். கை கால் கழுவி விட்டு இறைவனைத் தொழுங்கள். உணவு தயாராக இருக்கிறது, இறைவனைத் தொழுவதா? நானா? என்றான் அவன். அவர் ஆச்சரியத்தோடு கேட்டார். ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்? நான் இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்று நம்புவதில்லை. நான் இது வரை ஒரு முறை கூட இறைவனைத் தொழுததும் இல்லை, பெரியவர் வருத்தத்தோடு சொன்னார். நான் இங்கு வசிப்பதையும், இந்த வழியாகப் புனிதத் தலத்திற்குப் பயணிக்கும் இறை உணர்வாளர்களுக்கு உணவு தந்து உபசரிப்பதையும் இறை பணியாகவே செய்து வருகிறேன். அதனால் இறைவனைத் தொழாதவருக்கு நான் உணவு தருவதில்லை. அவன் உறுதியாகச் சொன்னான். இறைவனைத் தொழுதால் தான் உணவு கிடைக்கும் என்றால் எனக்கு தங்கள் உணவு தேவை இல்லை, அவர் எவ்வளவோ சொல்லியும் அவன் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. அவரும் அவன் தொழாமல் உணவு பரிமாற சம்மதிக்கவில்லை. கடைசியில் அவன் பசியோடே அங்கிருந்து வெளியேறினான்.

பசியோடவே இருந்தாலும் இருப்பேனே தவிர இறைவனை வணங்க மாட்டேன் என்று அவன் பிடிவாதமாக இருந்தது அவருக்கு திகைப்பாக இருந்தது. அன்று முழுவதும் வேறு யாரும் அந்த வழியாக வரவுமில்லை. அவரும் உணவருந்தாமலேயே இரவு வரை காத்திருந்து விட்டு உறங்கச் சென்றார். இரவில் அவரது கனவில் இறைவன் குரல் ஒலித்தது. என்னை வணங்காத அவனுக்கு ஒவ்வொரு வேளையும் நான் இருபத்தைந்து வருடங்களாக உணவு அளித்து வந்திருக்கிறேன். ஆனால் நீ என்னை அவன் வணங்கவில்லை என்பதாக ஒரு வேளை உணவு கூட அளிக்க மறுத்து பட்டினியாக அனுப்பி விட்டாயே, பெரியவருக்கு சுருக்கென்றது. கருணை மயமான இறைவன் தன்னை வணங்கினாலும், வணங்கா விட்டாலும் எல்லோரையும் காத்து வருகிறார் என்று எண்ணி மறு நாளில் இருந்து அவர் இறைவனைத் தொழுதால் தான் உணவு என்ற கொள்கையைக் கைவிட்டு விட்டார். வணங்குபவன், வணங்காதவன், வாழ்த்துபவன், நிந்திப்பவன், நம்புபவன், நம்பாதவன் முதலான பாகுபாடுகள் இறைவனுக்கு இல்லை, அவன் படைத்த உலகில் எல்லோருக்கும் இடம் இருக்கிறது, அவனை வணங்காதவர்களும், நிந்திப்பவர்களும், நம்பாதவர்களும் கூட எல்லாம் வல்ல இறைவன் அருள் இருக்கின்றது.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 35 திருப்பந்தணைநல்லூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 35 வது தேவாரத்தலம் திருப்பந்தணைநல்லூர். புராணபெயர்கள் தென்கயிலை, கோவூர், கொன்றைவனம், விஷ்ணுபுரி, இந்திரபுரி, கணவராச்சிரமம், வாலிநகர், பானுபுரி, ஆவூர், கந்துகபுரி என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள். மூலவன் பசுபதீஸ்வரர். சுயம்பு லிங்க உருவில் குட்டையான பாணத்துடன் தரிசனம் தருகிறார். புற்றில் பால்சொரிந்து சொரிந்து வெண்மையாகியதால் லிங்கத் திருமேனி வெண்ணிறமாக உள்ளது மூலவர் புற்றால் ஆனவர் என்பதால் குவளை (கவசம்) சார்த்தியே அபிஷேகம் நடைபெறுகின்றது. ஆவணி மாதம் 19, 20, 21 தேதிகளில் இறைவன் திருமேனியில் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் படுகின்றன. அம்பாள் வேணுபுஜாம்பிகை, காம்பனதோளியம்மை. அம்பாள் தவம் செய்யும் கோலத்தில் உள்ளதால் இருபுறமும் ஐயனாரும் காளியும் காவலாக உள்ளனர். தலமரம் சரக்கொன்றை. தீர்த்தம் சூரியதீர்த்தம். சிவன் பசுவின் பதியாக வந்ததால் பசுபதீஸ்வரர் என பெயர் பெற்றார்.

கோவில் 5 நிலை ராஜகோபுரத்துடன் இரண்டு பிரகாரங்களுடன் உள்ளது. சுவாமி கிழக்கு நோக்கியும் அம்மன் வடக்கு நோக்கி தவக்கோலத்திலும் உள்ளனர். நுழைவு வாயிலில் கோட்டை முனியாண்டவர் அருள்பாலிக்கிறார். உள்பிரகாரத்தில் நவலிங்கங்கள், முருகன், கஜலட்சுமி, அன்னபூரணி, சரஸ்வதி, சட்டைநாதர், தட்சிணாமூர்த்தி, நேர்கோட்டில் நவகிரகங்கள் உள்ளன. சுவாமி சந்நிதி நுழைவாயிலுக்கு திருஞானசம்பந்தர் திருவாயில் என்று பெயரிடப்பட்டுள்ளது. இருபுறங்களிலும் தலப்பதிகங்கள் பதித்த கல்வெட்டுக்கள் உள்ளன. கோவிலுள் பிரமன் வாலி வழிபட்ட லிங்கங்கள் உள்ளன. கோயிலுக்கு எதிரில் நடுவில் நீராழி மண்டபத்துடன் ஆலயத்தின் தீர்த்தமான சூரிய தீர்த்தம் உள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் விசாலமான ஒரு மண்டபம் உள்ளது. மண்டபத்தில் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். இத்தல விநாயகர் நிருதி கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். சுவாமியின் திருமணத்தை நவகிரகங்கள் நேர்கோட்டில் நின்று தரிசிப்பதால் அனைவரும் அனுக்கிரக மூர்த்திகளாக உள்ளனர். நடராஜருக்கு இங்கு தனி சபை கிடையாது. விஷ்ணு தனி கோயிலில் பரிமளவல்லித் தாயாருடன் ஆதிகேசவப்பெருமாள் வீற்றிருக்கின்றார். இவர் உமையுடன் ஆயனாக வந்து இங்கு ஆதிகேசவப்பெருமாளாக அருள்பாலிக்கிறார்.

சிவனும் பார்வதியும் கைலாயத்தில் அமர்ந்திருந்தபோது பார்வதிக்கு பந்து விளையாடும் ஆசை ஏற்பட்டது. இதனால் சிவன் 4 வேதத்தையும் 4 பந்துகளாக மாற்றி பார்வதியிடம் கொடுக்கிறார். பார்வதியும் தொடர்ந்து விளையாடுகிறாள். இவள் விளையாடுவதால் சூரியன் மறையாமல் வெளிச்சம் தருகிறார். இருட்டே இல்லாமல் போனது. இதனால் மாலை வேளையில் முனிவர்கள் சந்தியாவந்தனம் செய்ய இயலாமல் போனது. அனைவரும் சூரியனிடம் செல்ல பார்வதியின் கோபத்திற்கு நான் ஆளாக மாட்டேன் என கூறிவிடுகிறார். எனவே அனைவரும் சிவனிடம் சென்று முறையிடுகின்றனர். சிவன் பார்வதியிடம் செல்கிறார். இவர் வந்ததை பார்வதி கவனிக்கவில்லை. கோபம் கொண்ட சிவன் பார்வதியை பசுவாக சபிக்கிறார். வருந்திய பார்வதி சாபவிமோசனம் வேண்டுகிறார். சிவன் பந்தை காலால் எத்த அது பூமியில் சரக்கொன்றை மரத்தின் அடியில் விழுகிறது. இந்த மரத்தின் அடியில் உள்ள சிவலிங்கத்திற்கு பால் சொரிந்து அபிஷேகம் செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்றார். பந்து அணைத்த தலம் ஆதலால் பந்தணை நல்லூர் ஆனது. பசுவுக்குப் பதியாக வந்து ஆண்டுகொண்டமையால் சுவாமி பசுபதி என்று பெயர் பெற்றார்,

பார்வதியை காப்பாற்ற மகாவிஷ்ணு இடையர் வடிவில் அப்பசுவை அழைத்துக்கொண்டு இத்தலம் வருகிறார். பகல் பொழுதில் பசுவை மேய விட்டு மாலையில் அருகிலுள்ள கன்வ மகரிஷி ஆசிரமத்தில் பால் கொடுத்து வந்தார். ஒரு நாள் பசு புற்றிலிருந்த லிங்கத்தை பார்த்து அதன் மேல் பாலை சொரிந்து விடுகிறது. அன்று மாலை மகரிஷிக்கு பால் இல்லை. இதற்கான காரணம் அறிய பசுவின் பின்னால் விஷ்ணு செல்கிறார். புற்றின் மீது பால் சொரிவதை கண்டவுடன் பசுவை அடிக்கிறார். பசு துள்ளி குதித்து புற்றில் காலை வைக்க அதன் ஒருகால் குளம்பு புற்றின் மீது பட இறைவன் ஸ்பரிசத்தால் உமாதேவி தன் சுயவுருவம் அடைந்து சாபவிமோசனம் நீங்கி அருள் பெற்றாள். மூலவரின் சிரசில் பசுவின் குளம்புச்சுவடு பதிந்திருப்பதை இன்றும் காணலாம். பசுவும் இடையனாக வந்த விஷ்ணுவும் சுய உருவம் பெருகின்றனர். சாப நிவர்த்தி பெற்றவுடன் தன்னை திருமணம் செய்ய சிவனிடம் வேண்டுகிறார். அதற்கு சிவன் வடக்கு நோக்கி தவமிருந்து என்னை வந்து சேர் என்கிறார். அதன்படி செய்து அம்பாள் சிவனை திருமணம் செய்கிறார். சிவன் மூலஸ்தானத்தில் கல்யாண சுந்தரராக அருள்பாலிக்கிறார்.

திருக்கோவிலில் காம்பீலி மன்னனின் மகன் பார்வை பெற்று திருப்பணிகளையும் செய்து வழிபட்டு இருக்கிறார் என புராண வரலாறு உள்ளது. இது தொடர்பாகவே இங்குள்ள திருக்குளம் இன்றும் காம்போச மன்னன் துறை என்றழைக்கப்படுகிறது. சோழர், விசயநகரர் காலத்திய கல்வெட்டுக்களில் இத்தலத்து இறைவன் பசுபதிதேவர் என்றும் முதலம் ராசராசன் கல்வெட்டில் இத்தலம் பந்தணைநல்லூர் என்றும் குறிக்கப்படுகின்றது. இங்குள்ள கல்வெட்டொன்று முதலாம் ராசராசன் அரியணையேறிய 11-ஆம் ஆண்டில் செம்பியன்மாதேவி ஒருவிளக்குக்குப் பன்னிரண்டு கழஞ்சு பொன் வீதம் மூன்று விளக்குகளுக்கு பொன் அளித்த செய்தியைத் தெரிவிக்கின்றது. காமதேனு, திருமால், கண்வமகரிஷி, வாலி, இந்திரன், பிரம்மா, சூரியன் வழிபாடு செய்துள்ளனர். அருணகிரிநாதர் தன் திருப்புகழில் இத்தல முருகனை பாடியுள்ளார். ராமலிங்க அடிகளாரும் பட்டீஸ்வரம் மவுன குருசாமியும் பாடியுள்ளனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 34 மேலக்கடம்பூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 34 வது தேவாரத்தலம் மேலக்கடம்பூர். புராணபெயர் திருக்கடம்பூர், கடம்பைக் கரக்கோயில். மூலவர் அமிர்தகடேஸ்வரர். இங்குள்ள சிவலிங்கம் நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாகும். பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. ஐப்பசி அன்னாபிஷேகத்தின் போது இரவில் சந்திர ஒளி சுவாமி மீது விழுகிறது. உற்சவர் சோமஸ்கந்தர். அம்பாள் சோதிமின்னம்மை, வித்யூஜோதிநாயகி. தலமரம் கடம்பமரம். தீர்த்தம் சக்தி தீர்த்தம். கருவறை தேர் சக்கரங்களுடன் குதிரை இழுப்பதைப் போன்று தேர் வடிவில் அமைந்துள்ளது.

கோவில் 3 நிலை ராஜ கோபுரத்துடன் உள்ளது. கோபுரம் வழியே உள்ளே நுழைந்தால் நேரே உள்ள முன் மண்டபத்தில் நந்தியும், பலிபீடமும் இருக்கக் காணலாம். கொடிமரமில்லை. முன்மண்டபத்தில் நின்று பார்த்தால் நேரே மூலவர் சந்நிதியும் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும் உள்ளன. கருவறை வெளிப்புறம் முழுவதும் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. சனீஸ்வரருக்கு ஆரம்ப காலத்தில் கழுகு வாகனமாக இருந்தது. ராமரின் தந்தையான தசரதர் அவருக்கு கழுகுக்கு பதிலாக காகத்தை கொடுத்தார். இங்குள்ள சனீஸ்வரர் கழுகு வாகனத்துடன் காட்சி தருகிறார். எனவே இவர் ராமாயண காலத்திற்கும் முற்பட்டவர் ஆகின்றார்.

குஞ்சிதபாத நடராஜர் சற்றே பின்புறமாக சாய்ந்தபடி சிவகாமியுடன் இருக்கிறார். கோஷ்ட சுவரில் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு சிற்பமாக உள்ளது. வலப்பக்க சுவரில் அர்த்தநாரீஸ்வரர் நந்தியுடன் இருக்கிறார். அவருக்கு கீழே ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கிறார். பின்புற சுவரில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இவர் கையில் சிவலிங்கத்தை வைத்தபடி காட்சி தருகிறார், இவருக்கு அருகில் ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர் ஆகிய மூவரும் இருக்கின்றனர். இவருக்கு எதிரே முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவரை அருணகிரியார் திருப்புகழில் பாடியிருக்கிறார். கோஷ்டசுவரிலேயே கங்காதரர், ஆலிங்கனமூர்த்தி இருக்கின்றனர். விமானத்தில் தட்சிணாமூர்த்தி புல்லாங்குழல் வீணையுடன் இருக்கிறார். இத்தல விநாயகரின் திருநாமம் ஆரவார விநாயகர்.

சூரனை அழிக்கச்செல்லும் முன் முருகன் இங்கு அம்பாளை வணங்கி வில் வாங்கிச்சென்றார். எனவே இங்குள்ள உற்சவர் முருகன் கையில் வில்லுடன் இருக்கிறார். செவ்வாய் கிரகம் தனக்கு அதிபதியான முருகனை இத்தலத்தில் வழிபட்டுள்ளார். இதன் அடிப்படையில் இங்கு செவ்வாய் கிரகம் உற்சவராக இருக்கிறார். அருகிலுள்ள துர்க்கை கட்டை விரல் இல்லாமல் சிம்ம வாகனத்துடன் இருக்கிறாள். இவளுக்கு கீழே மேரு மலை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த சக்கரம் இருக்கிறது.

நவக்கிரகங்கள் ஒவ்வொருநாளும் தங்களுக்கான நாளில் இங்கு சிவனை வழிபடுகின்றனர். இதன் அடிப்படையில் சிவன் ஒவ்வொருநாளும் அந்தந்த கிரகங்களுக்கு உகந்த நிறங்களில் வஸ்திரம் அணிந்து தரிசனம் தருகிறார். அம்பாள் சன்னதிக்கு எதிரே நவக்கிரக சன்னதி இருக்கிறது. அம்பாள் காலையில் வீணை ஏந்தி சரஸ்வதியாகவும் உச்சிக்காலத்தில் யானையுடன் லட்சுமியாகவும் மாலையில் சூலாயுதத்துடன் துர்க்கையாகவும் காட்சி தருகிறாள். இதனால் இவளை வித்யஜோதிநாயகி (வித்யா – சரஸ்வதி, ஜோதி – லட்சுமி, நாயகி – துர்க்கை) என்று அழைக்கப்படுகிறாள். இவளுக்கு ஜோதிமின்னம்மை என்றும் பெயரும் உண்டு.

ரிஷபதாண்டவர் இத்தலத்தில் ரிஷபதாண்டவமூர்த்தி நந்தி மீது நடனமாடிய கோலத்தில் 10 கைகளுடன் உற்சவராக இருக்கிறார். இவருக்கு பிரதோஷத்தின் போது சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று ஒருநாள் மட்டுமே இவரை தரிசிக்க முடியும். இவருக்கு கீழே பீடத்தில் பார்வதி, திருமால், பைரவர், வீரபத்திரர், விநாயகர், நாரதர், நந்திதேவர், பிருங்கி, மிருகண்ட மகரிஷி, கந்தர்வர் மற்றும் பூதகணங்கள் இருக்கின்றன. பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி நந்தியின் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். கோஷ்ட சுவரில் உள்ள பிரம்மா சிவனை பூஜித்தபடி இருக்கிறார். இவருக்கு இருபுறமும் எமதர்மன் சித்திரகுப்தர் இருக்கின்றனர் அருகில் பதஞ்சலி முனிவர் இருக்கிறார். இவரது தலை மீது நடராஜரின் நடனக்கோலம் உள்ளது. நடராஜரின் நடனத்தை கண்ட மகிழ்ச்சியில் அவரை தன் தலை மீது வைத்துக் கொண்டாடினார் பதஞ்சலி. இதனை இச்சிற்பம் விளக்குகின்றது.

பாற்கடலில் அமுதம் கடைந்த தேவர்கள் விநாயகரை வணங்காமல் அதனை பருகச்சென்றனர். இதைக்கண்ட விநாயகர் தேவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி அமுதகலசத்தை எடுத்துச் சென்று விட்டார். அவர் கடம்பவனமாக இருந்த இத்தலத்தின் வழியாக சென்றபோது கலசத்தில் இருந்த அமிர்தத்தில் ஒரு துளி தரையில் விழுந்தது. அவ்விடத்தில் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். தன் தவறை உணர்ந்த இந்திரனும், தேவர்களும் இங்கு வந்து விநாயகரிடம் தங்களது செயலை மன்னித்து அமுதத்தை தரும்படி வேண்டினர். அவர் சிவனிடம் வேண்டும்படி கூறினார். அதன்படி இந்திரன் சிவனை வேண்டினான். அவர் இந்திரனுக்கு அமுத கலசத்தை கொடுத்து அருள்புரிந்தார். இங்கேயே தங்கி அமிர்தகடேஸ்வரர் என்ற பெயரும் பெற்றார். தேவர்களின் தாயான அதிதி தன் மக்களுக்கு அமிர்தம் கொடுத்து அருள் செய்த அமிர்தகடேஸ்வரரை தொடர்ந்து வணங்கி வந்தார். அவர் இதற்காக தினசரி தேவலோகத்திலிருந்து இங்கு வருவதை இந்திரன் விரும்பவில்லை. எனவே இங்குள்ள சிவனை கோயிலோடு இந்திரலோகத்திற்கு எடுத்துச் செல்ல எண்ணி கோயிலை தேர் வடிவில் மாற்றினான். கோயிலை இழுத்துச் செல்ல முயன்றான்.

அப்போது விநாயகர் தேர்ச்சக்கரத்தை தன் காலால் மிதித்துக் கொண்டார். இந்திரன் எவ்வளவோ முயன்றும் ஒரு அடிகூட நகர்த்த முடியவில்லை. விநாயகரின் செயலை அறிந்த அவன் அவரிடம் தான் தேரை எடுத்துச் செல்ல வழிவிடும்படி வேண்டினார். விநாயகர் அவனிடம் கோடி லிங்கங்களை பிரதிஷ்டை செய்தால் தேரை கொண்டு செல்லலாம் என்றார். இந்திரன் ஆணவத்துடன் லிங்கம் செய்தான். ஆனால் எல்லா லிங்கங்களும் பின்னப்பட்டன. தவறை உணர்ந்த இந்திரன் அமிர்தகடேஸ்வரரை வணங்கினான். அவர் ஆயிரம் முறை தன் நாமம் சொல்லி ஒரு லிங்கத்தை செய்யும்படி கூறினார். அதன்படி இந்திரன் ருத்ரகோடீஸ்வர லிங்கத்தை செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து தான் இங்கேயே இருக்க விரும்புவதாக சொல்லி அதிதிக்கு பதிலாக நீயே இங்கு வந்து என்னை தரிசிக்கலாம் என்றார். இந்திரனும் ஏற்றுக்கொண்டு தன் தவறுக்கு மன்னிப்பு பெற்றான். தற்போதும் தினசரியாக இங்கு இந்திரன் பூஜை செய்து கொண்டு இருக்கிறார். இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு ஆரவார விநாயகர் என்று பெயர். அமிர்த கலசத்தை தூக்கிச்சென்றும் தேர் சக்கரத்தை மிதித்தும் ஆரவாரம் செய்ததால் இவருக்கு இந்த பெயர் வந்தது. இவர் தலையை இடதுபுறமாக சாய்த்தபடி கோப முகத்துடன் காட்சி தருகிறார். தேர் வடிவில் அமைந்த கோயில் இது. விநாயகர் சக்கரத்தை மிதித்தன் அடையாளமாக இடது பக்க சக்கரம் பூமியில் பதிந்து இருக்கிறது. கி.பி. 1110-ல் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட கோவில். முருகப் பெருமான் இந்திரன் வழிபட்டுள்ளனர். திருநாவுக்கரசர் என் கடன் பணிசெய்து கிடப்பதே என்று இத்தலத்தில்தான் பதிகம் பாடினார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளனர்.