தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 33 திருநாரையூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 32 வது தேவாரத்தலம் திருநாரையூர். மூலவர் சௌந்தரநாதர். இறைவன் சந்நிதி விமானம் அர்த்த சந்திர வடிவில் இரண்டு கலசங்களுடன் உள்ளது. சிவன் அம்பிகையை தனக்குள் ஐக்கியப்படுத்தி இருக்கிறார் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அவளுக்கும் சேர்த்து இரண்டு கலசங்கள் உள்ளது. அம்பாள் திரிபுரசுந்தரி. தலமரம் புன்னாகம். தீர்த்தம் காருண்ய தீர்த்தம், செங்கழுநீர்.

கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் சுமார் 5.5 ஏக்கர் நிலப்பரப்புடன் ஆலயம் அமைந்துள்ளது. கோவில் முகப்பு வாயிலுக்கு வெளியே கிழக்கில் காருண்ய தீர்த்தம் உள்ளது. முகப்பு வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் சிறிய விநாயகரும் நந்தி மண்டபமும் உள்ளன. கொடி மரம் இல்லை. இறைவன் கருவறைச் சுற்றில் மேற்குப் பிரகாரத்தில் ஸ்ரீசுப்பிரமணியர் சந்நிதியும், வடமேற்கில் ஸ்ரீகஜலட்சுமி சந்நிதியும், வடக்குப் பிரகாரத்தில் ஸ்ரீ திருமூலநாதர் சந்நிதியும், ஸ்ரீசண்டிகேஸ்வரர் சந்நிதியும், தலவிருட்சமான புன்னை மரமும் உள்ளன. வடகிழக்கில் ஸ்ரீபைரவர், சூரியன்,சந்திரன், நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. சுவாமி சந்நிதி வெளிப்புற கோஷ்ட மூர்த்திகளாக ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றார்கள். நடராஜருக்கும் இத்தலத்தில் தனிச்சன்னதி இருக்கிறது. சிவன் கோயில்களில் ஒரு சண்டிகேஸ்வரர் இருப்பார். இங்கு ஒரே சன்னதியில் அடுத்தடுத்து இரண்டு சண்டிகேஸ்வரரை தரிசிக்கலாம். மூலவர் சவுந்தரேஸ்வரருக்கு ஒருவர் பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கும் திருமூலநாதருக்கு ஒருவர் என இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர் இருக்கின்றனர். பிரகாரத்தில் ஒரே இடத்தில் மூன்று பைரவர்கள் காட்சிஅளிக்கின்றனர்.

முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கோயிலில் இடது பக்கம் உள்ள பொல்லாப்பிள்ளையார் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும். திருவண்ணாமலை, விருத்தாச்சலம், திருக்கடையூர், மதுரை, காசி ஆகியவை பிற தலங்களாகும். இத்தலத்திலுள்ள ஆலயம் சிவாலயமாக இருந்தாலும் இங்கு விநாயகருக்கே முக்கியத்துவம் அதிகம். இவர் பொள்ளாப் பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். பொள்ளா என்றால் உளியால் செதுக்கப்படாத என்று அர்த்தம். இந்தப் பிள்ளையார் உளியார் செதுக்கப்படாமல் சுயம்புவாக தானே தோன்றி அருள்பாலிக்கிறார்.

நம்பியாண்டார் நம்பியின் தந்தை அனந்தேசர் இங்குள்ள பிள்ளையாருக்கு தினமும் நைவேத்யம் செய்வார். அவருடன் தினமும் வரும் நம்பியாண்டார் நம்பி இதைப் பார்ப்பார் அப்பா வைக்கும் நைவேத்தியத்தை பிள்ளையார் சாப்பிடுவாரா என அவருக்கு திடீரென சந்தேகம் வந்தது. தன் தந்தைக்கு பின் நம்பி கோயிலுக்கு பூஜை செய்யும் காலம் வந்தது. அப்போது தன் தந்தையைப்போல் பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்து பிள்ளையாரை சாப்பிடும்படி வற்புறுத்தினார். பிள்ளையாரோ அமைதியாக இருந்தார். மனம் வருந்திய நம்பி பிள்ளையாரின் மடியில் முட்டி அழுதார். உண்மையான பக்திக்கு மகிழ்ந்த பிள்ளையார் சாப்பிட்டார்.

ஸ்ரீநம்பியாண்டார் நம்பியின் சிறப்புகள் ராஜ ராஜ சோழனின் காதுகளுக்கு எட்டியது. சைவ திருமுறைகளின் இருப்பிடம் தேடி அவற்றைத் தொகுக்கும் மாபெரும் பணியை முடித்துவிட வேண்டும் என்ற அவனது நெடுநாளைய ஆசைக்கு ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையாரின் ஆசி வேண்டி வந்தான். ராஜ ராஜ சோழனின் காணிக்கைகளையும் நைவேத்தியங்களையும் நம்பியின் வேண்டுதலுக்குச் செவி சாய்த்து ஏற்றார் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார். திருமுறை இருக்கும் இடம் காட்டி அருள வேண்டும் என்று ராஜ ராஜனும் நம்பியும் வேண்ட தில்லை ஸ்ரீ நடராஜர் ஆலயத்தின் தென்மேற்கு மண்டபத்தில் சுவடிகள் கிடைக்கும் என தெய்வவாக்கு ஒலித்தது. ராஜ ராஜன் தில்லைவாழ் அந்தணர்களிடம் சென்று திருமுறை தொகுக்க அனுமதி கேட்டான். அவர்கள் சொல்படி சைவ மூவர் சிலைகளை வடித்து வைத்து பூஜித்து அவற்றின் முன்னிலையில் திருமுறைச் சுவடிகள் இருந்த அறையை திறக்கச் செய்தான். திறந்தவுடன் ஏடுகள் புற்றால் மூடியிருக்கக் கண்டு திடுக்கிட்டு உள்ளம் நொந்தனர். இக்காலத்துக்குத் தேவையானவற்றை மட்டும் வைத்துப் பிறவற்றைச் செல்லரிக்கச் செய்தோம் என்ற திருவள்ளுவர் தெய்வவாக்கு ஒலித்தது. வாக்கால் ஒருவாறு அமைதிப்பெற்றனர்.

திருநாரையூர் நம்பியைக் கொண்டு அவற்றை பதினோரு திருமுறைகளாய்த் தொகுக்கச் செய்தான் ராஜ ராஜ சோழன். தொகுத்த தேவாரப் பதிகங்களுக்கு பண்முறை அமைக்க விரும்பிய நம்பியும் அரசனும் திருஎருக்கத்தம்புலியூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வேண்டினார்கள். (திருஎருக்கத்தம்புலியூர் என்னும் ஸ்தலம் தற்போது ராஜேந்திரப்பட்டினம் என வழங்கப்படுகிறது, இத்தலம் விருத்தாசலத்திற்கு அருகில் அமைந்துள்ளது. நம்பி மற்றும் அரசனின் வேண்டுகொளுக்கு இணங்க திருநீலகண்ட பெரும்பாணன் மரபில் பிறந்த ஒரு பெண்ணுக்கு (பாடினி) பண்களை அருளினோம். இத்தலத்திலுள்ள அப்பெண்ணை அழைத்துச் சென்று பதிகங்களுக்குப் பண்முறை அமைக்கச் செய்வீர் என்று தெய்வவாக்கு கிடைத்தது. (இப்பிறவியிலேயே வாய் பேச முடியாதவள். இப்பெண்ணிற்கு இறைவன் அருள் புரிந்து பதிகங்களுக்கு பண்முறை அமைக்கச் செய்து அப்பண்னோடு திருமுறை பாட அருள் புரிந்தார்) மனம் மகிழ்ந்த மன்னனும் நம்பியும் அத்தலத்திலுள்ள அந்த பெண்ணைக் கண்டறிந்து தில்லை கனகசபைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எல்லோரது முன்னிலையிலும் அப்பெண்ணைக் கொண்டு தேவாரப் பதிகங்களுக்கு பண்முறைகளை முறையாக அமைக்கச் செய்தனர். இன்று தேவாரப் பதிகங்கள் தக்கப்பண்களுடன் நமக்கு கிடைக்க ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி ராஜ ராஜ சோழன் இவர்கள் இருவர் மூலமாக அருளியவர் திருநரையூர் ஸ்ரீ பொள்ளப் பிள்ளையார்.

ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி திருநாரையூர் விநாயகர் மீது திரு இரட்டை மணிமாலை தவிர சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் மீது கோயில் திருப்பண்ணியர் விருத்தம் திருத்தொண்ட தொகை, திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் மீது திருவந்தாதி, திருச்சண்பை விருத்தம், திருமும்மணிக்கோவை, திருவுலாமாலை, திருக்கலம்பகம், திருத்தொகை. மற்றும் திருநாவுக்கரசு சுவாமிகள் மீது திருவேகாதசமாலையும் பாடியருளினார். தாம் அருளிச்செய்த இந்த பத்து நூல்களையும் சோழ மகாராஜா வேண்டுகோளின்படி பதினோராந் திருமுறையிலேயே சேர்ந்தருளினார். திருமுறைகளை கண்டெடுத்த காரணத்தால் சோழ மன்னனும் திருமுறை கண்ட சோழன் என சிறப்பு பெயர் பெற்றார். இந்தப் பிள்ளையார் சந்நிதிக்கு எதிரில் ராஜராஜ சோழ மன்னனுக்கும் நம்பியாண்டார் நம்பிக்கும் சிலை உள்ளது. கோவிலுக்கு வெளியே சற்று தூரத்தில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி அவதரித்து வசித்து வந்த பவித்ரமான இடத்தில் தற்போது சிறிய மண்டபத்தில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி சிற்ப வடிவில் நமக்கு அருள்பாலிக்கின்றார்.

கோபக்காரரான துர்வாச முனிவர் சிவனை நோக்கி கடும் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது கந்தர்வன் ஒருவன் ஆகாய வழியே சென்று கொண்டிருந்தான். அப்போது அவன் சாப்பிட்ட ஒரு பழத்தின் கொட்டையை கீழே போட்டான். அது அங்கு தவம் செய்து கொண்டிருந்த துர்வாச முனிவர் மீது விழுந்தது. தவம் கலைந்த மகரிஷி தனது தவத்திற்கு இடையூறு செய்த கந்தர்வனை நாரையாகும்படி சாபமிட்டார். கந்தர்வன் தவறை மன்னிக்கும்படி வேண்டினான். முனிவர் மறுத்து விட்டார். எனவே இத்தல சிவனிடம் முறையிட்டு கதறினான். சிவன் அவனிடம் தினமும் காசியிலிருந்து இத்தலத்துக்கு தீர்த்தம் கொண்டு வந்து தன்னை வழிபட்டால் சாபவிமோசனம் கிடைக்கும் என்றார். நாரை வடிவிலிருந்த கந்தர்வனும் தன் சக்தியால் அதிவேகத்தில் பறந்து சென்று தீர்த்தத்தை அலகில் சுமந்து வந்து அபிஷேகம் செய்தான். சாபம் அடைந்த நாரை ஒருநாள் சுவாமியை வழிபட வந்தபோது இறைவனின் சோதனையால் புயலுடன் கடும்மழை பிடித்துக் கொண்டது. காற்றை எதிர்த்து பறந்ததில் அதன் சிறகுகள் ஒவ்வொன்றாக விழுந்தன. அப்போது வாயில் இருந்த தீர்த்தத்திலிருந்து சில துளிகள் பூமியில் விழுந்தன. இது ஒரு குளமாக மாறியது. இதற்கு காருண்ய தீர்த்தம் என்று பெயர். இத்தீர்த்தம் கோயிலுக்கு வெளியில் உள்ளது. நாரையின் சிறகு முறிந்து விழுந்த இடம் சிறகிழந்தநல்லூர் என்று பெயர் பெற்றது. இந்த சிறகிழந்தநல்லூர் என்ற ஊர் இங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு தேவார வைப்புத்தலமான ஞானபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இதன்பிறகு சிவன் நாரைக்கு முக்தி கொடுத்தார்.

திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் இத்தல இறைவனை வழிபடுவதால் வாக்கு, மனம், காயம் ஆகியவற்றால் விளைந்த பாவங்கள் தீரும். உடலால் செய்யப்பெறும் குற்றம் அவ்வுடலைப்பற்றிய பிணி நோய்களும் கெடும். தீவினையால் உலகில் பிறந்து அடையும் துன்பங்கள் அகலும். உடல் நீங்கும் காலத்தில் உயிர் எடுக்க வரும் எமன் மிகவும் அஞ்சுவான். ஆகையால் நீர் நறுமணமுள்ள மலர்களைத் தூவி திருநாரையூர் இறைவனை கை கூப்பித் தொழுது வழிபாடு செய்வீர்களாக என்று பாடியிருக்கின்றார். நம்பியாண்டார் நம்பி நாரை வழிபட்டுள்ளனர். கி.பி.11 ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட கல்வெட்டுகள் நான்கு உள்ளன. திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 32 திருக்கானாட்டுமுள்ளூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 32 வது தேவாரத்தலம் திருக்கானாட்டுமுள்ளூர். புராண பெயர் கானாட்டம்புலியூர். கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள இக்கோயிலுக்கு மதூகவனம் என்றும் பெயருண்டு. மூலவர் பதஞ்சலிநாதர். கருவறையில் சிவன் சிறிய லிங்கமாக இருக்கிறார். மூலவர் மீது தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதத்தில் 3 நாட்கள் சூரியன் தன் ஒளி படுகிறது. உற்சவர் சோமாஸ்கந்தர். அம்பாள் கானார்குழலி, அம்புஜாட்சி, கோல்வளைக்கையாள். அம்பாள் கோல்வளைக்கையம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். சுந்தரர் தனது பதிகத்தில் அம்பாளைக் குறித்தும் பாடியுள்ளார். தலமரம் வெள்ளெருக்கு. (தற்போது இல்லை) தீர்த்தம் சூரிய தீர்த்தம்.

கோவில் கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரத்துடன் விளங்குகிறது. கோபுரத்திற்கு வெளியே எதிரில் சூரிய தீர்த்தம் உள்ளது. கோபுர வாயிலை கடந்து உள்ளே சென்றால் முன்னுள்ள மண்டபத்தில் பலிபீடமும் நந்தியும் உள்ளனர். வலதுபுறம் அம்பாள் கானார்குழலி அம்மையின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. அம்பாளின் சன்னதிக்கு வலப்புறத்தில் சனீஸ்வரர் தனிச்சன்னதியில் இருக்கிறார். கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கஜலட்சுமிக்கும் தனி சந்நிதி உள்ளது. கருவறைச் சுற்றில் காசி விஸ்வநாதர், காசிவிசாலாட்சி, நிருதிவிநாயகர் ஆகியோரும் தனி சந்நிதிகளில் அருள் பாலிக்கின்றனர். கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்திக்கு மேல் கல்லால மரம் இல்லை. நடராஜர் சந்நிதிக்கு எதிரே நால்வருடன் விநாயகரும் பதஞ்சலி முனிவரும் உள்ளனர். கோயில் அமைப்பு கோஷ்டத்தின் பின்புறம் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் இருக்கிறார். இவருக்கு நேரே இருக்கும் முருகனும் வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். இதில் வள்ளி காதில் மூதாட்டிகள் அணியும் பாம்படம் (தண்டட்டி) அணிந்த கோலத்தில் இருக்கிறார். இங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு மேல் கல்லால மரம் இல்லை. பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், காசிவிசாலாட்சி, நிருதிவிநாயகர், கஜலட்சுமிக்கு சன்னதிகள் உள்ளது. முன்மண்டபத்தில் இரண்டு நாகங்களுக்கு நடுவே கிருஷ்ணனும் அருகே நாகங்களுக்கு நடுவே லிங்கமும் இருக்கிறது.

இங்குள்ள நடராஜர் தனது இடது காலை முன்புறமாக தள்ளி தூக்கி நிறுத்தி உடலை பின்புறமாக சாய்த்தபடி இருக்கிறார். பதஞ்சலிக்காக சிவன் மகிழ்ந்து நடனமாடியதால் இவ்வாறு காட்சியளிக்கிறார். பதஞ்சலி நடராஜர் சன்னதிக்கு எதிரே நால்வருடன் சேர்ந்து இருக்கிறார். தண்டகாரண்ய முனிவர்கள் இங்கு சிவனை வழிபட வந்தபோது மணல்கள் எல்லாம் லிங்கங்களாக அவர்களுக்கு தெரிந்ததால் வெளியில் இருந்தே சிவனை தரிசித்துவிட்டு சென்றார்கள்.

பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் மகாவிஷ்ணுவை தாங்கும் ஆதிசேஷன் சிவனின் நடன தரிசனம் காணவிரும்பி பதஞ்சலி முனிவராக அவதாரம் செய்தார். சிவன் அவருக்கு சிதம்பரத்தில் தன் நடனக்காட்சி காட்டியருளினார். ஒருசமயம் பதஞ்சலி நடராஜரை தரிசித்தபோது அவரை இத்தலத்திற்கு வரும்படி கூறவே இத்தலத்திற்கு வந்தார் பதஞ்சலி சிவனை வேண்டி தவம் செய்தார். அவருக்கு சிவன் தன் நடனத்தை காட்டி அருள் செய்தார். அப்போது சிவன் பதஞ்சலியிடம் என் தாண்டவங்களை கண்டு மகிழ்ந்தீரா இப்போது திருப்தி தானே என கேட்டார். தங்கள் நடனம் என்றும் எனக்கு சலிக்காதது. அந்நடனத்தை நான் என்றும் தரிசித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். பதஞ்சலிக்கு சிவன் அவர் விரும்பியபடியே பல தலங்களில் தான் தரிசனம் தருவதாக கூறினார். மேலும் அவருக்கு மரியாதை செய்யும்விதமாக அவரது பெயரையே தனக்கும் பெயர் பெற்று பதஞ்சலீஸ்வரர் என்று அருள்பாலிக்கிறார்.

செங்கல்லாலான கோயில் மிகவும் பழமையானது. விக்கிரம சோழன் காத்திய கல்வெட்டில் இத்தலம் விருதராச பயங்கர வளநாட்டு கீழ்க்கானாட்டுமுள்ளூராகிய திருச்சிற்றம்பல சதுர்வேதி மங்கலம் என்று குறிக்கப்பட்டுள்ளது. பதஞ்சலி முனிவர் வழிபட்டுள்ளார். சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 31 ஓமாம்புலியூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 31 வது தேவாரத்தலம் ஓமாம்புலியூர். புராண பெயர் உமாப்புலியூர், திருவோமாம் புலியூர். மூலவர் பிரணவ வியாக்ர புரீஸ்வரர், துயர்தீர்த்தநாதர், பிரணவபுரீஸ்வரர். மூலவர் சுயம்பு மூர்த்தியாக சதுர பீடத்தில் உயர்ந்த பாணத்துடன் காட்சித் தருகிறார். அம்பாள் புஷ்பலதாம்பிகை, பூங்கொடி நாயகி. தலமரம் வதரி (இலந்தை). தீர்த்தம் கொள்ளிடம், கௌரிதீர்த்தம். திருநாவுக்கரசர் தனது பாடலில் இவ்வூரில் எப்போதும் ஹோமங்கள் நடந்தது என்றும் ஹோம புகையால் சூழப்பட்டதால் இவ்வூர் ஓமாப்புலியூர் என்று பெயர் பெற்றதாக கூறுகிறார். உமாதேவி அருள் பெற்ற தலம் என்பதால் உமாப்புலியூர் என்ற பெயர் ஓமாப்புலியூர் என மாறிவிட்டதாகவும் செய்திகள் உள்ளது. காவிரியின் வடகரையில் 63 சிவ ஸ்தலங்கள் உள்ளன இவற்றில் தட்சிணாமூர்த்திக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அமையப்பெற்ற 31 வது ஸ்தலம் ஓமாப்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோயிலாகும். ஆலய முகப்பு வாயிலுக்கு எதிரிலுள்ள கெளரி தீர்த்தத்தின் அக்கரையில் வடதளி என்று ஓர் சிறிய ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் இறைவன் பெயர் நாகவல்லி சமேத வடதளீஸ்வரர்.

கிழக்கு நோக்கிய இக்கோயில் மதிற்சுவருடன் கூடிய ஒரு வாயிலுடன் அமைந்துள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடத்தையும் நந்தி மண்டபத்தையும் காணலாம். அடுத்துள்ள ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. பிராகாரத்தில் ஆறுமுகப் பெருமான் சந்நிதி உள்ளது. சுவாமி சந்நிதியில் ஒருபுறம் சலந்தரனை அழிக்கத் திருமாலுக்குச் சக்கரம் வழங்கிய சிற்பமும் மறுபுறம் ஐந்து புலியூர்களில் வழிபடப்பட்ட ஐந்து சிவலிங்கங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இறைவன் சந்நிதியில் வலதுபுறம தெற்கு நோக்கி உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி உயர்ந்த பீடத்தில் சிலாரூபத்தில் காட்சி தருகின்றார். ஓமாம்புலியூர் தலத்தில் சிவாகம ரீதியாக கருவறை தெற்கு கோஷ்டத்தில் ஒரு தட்சிணாமூர்த்தியும் இறைவன் சந்நிதிக்கும் அம்பாஈள் சந்நிதிக்கும் இடையில் மகாமண்டபத்தில் தனி மூலஸ்தானத்தில் ஞானகுருவாக இன்னொரு தட்சிணாமூர்த்தியும் அருளுகின்றனர். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை \ உள்ளனர். பிராகாரத்தில் ஆறுமுகப் பெருமானுக்கும் தனி சந்நிதி உள்ளது. குருவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்தலத்தில் மற்ற நவக்கிரகங்கள் கிடையாது என்பதும் குறிப்படத்தக்க அம்சமாகும்.

உமாதேவியார் ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை அறிந்து கொள்வதற்காக சிவனிடம் உபதேசம் கேட்டார். சிவன் அதற்குரிய விளக்கத்தை சொல்லிக் கொண்டிருக் கும்போது அவரது கவனம் திசை திரும்பவே அவளை மானிடப் பிறப்பு எடுக்கும்படி சிவன் தண்டனை கொடுத்து விட்டார். அதன்படி பார்வதிதேவி பூமிக்கு வந்து ஓமாப்புலியூரில் தங்கியிருந்து இத்தலத்து சரஸ்வதி தேவியை வணங்கி சிவனை நினைத்து இலந்தை மரத்தின் அடியில் கடுந்தவம் மேற்கொண்டாள். அம்பாளின் தவத்தினை மெச்சி இறைவன் தேவி விரும்பியபடி இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி வடிவில் உமாதேவிக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்ததார். உபதேசம் செய்யும்போது இடையூறு வரக்கூடாது என்பதற்காக நந்திகேஸ்வரரை வாசலில் காவலுக்கு வைக்கிறார். அப்போது முருகப் பெருமான் அங்குவர நந்தி தடுக்கிறார். முருகப் பெருமான் வண்டு உருவம் எடுத்து அபிஷேக தீர்த்தம் வரும் கோமுகம் வழியாக உள்ளே சென்று அம்பாள் தலையில் சூடியிருக்கும் பூவில் உட்கார்ந்து குரு தட்சிணாமூர்த்தியாக இறைவன் அம்பாளுக்கு உபதேசம் செய்வதைக் கேட்டுக் கொள்கிறார். (சுவாமிமலையில் முருகப் பெருமான் தந்தைக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்தது ஓமாம்புலியூரில் அம்பாளுக்கு உபதேசம் செய்யும் போது கேட்டுத் தெரிந்து கொண்டதால் தான்). சிவன் தட்சிணாமூர்த்தியாக உபதேசித்ததால் இது குருமூர்த்தி ஸ்தலமாக கருதப்படுகிறது. குருவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்தலத்தில் மற்ற நவக்கிரகங்கள் கிடையாது. குரு சன்னதி பொதுவாக கோயில் பிரகாரத்தில் தெற்கு நோக்கி இருக்கும். ஆனால் இந்த தலத்தில் சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் மத்தியில் மகாமண்டபத்தில் தட்சிணாமூர்த்தி அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

தில்லையில் நடராஜ பெருமானின் திருநடனத்தை காணும் முன்பு வியாக்ரபாத முனிவர் ஓமாப்புலியூர் வந்தார். சிதம்பரத்தில் நடராஜரின் திருநடனத்தைக் காண தனக்கு அருள்தர வேண்டும் என வேண்டினார். வியாக்ரபாதரால் பூஜிக்கப்பட்டதால் இவ்வூர் இறைவன் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டார். வியாக்ர பாதருக்குக் காட்சி தந்த நடராசரின் வடிவம் சிலாரூபமாக கருவறை கோஷ்டத்தில் உள்ளது.

சோழர் காலக் கல்வெட்டு ஒன்றும் பல்லவர்கள் காலத்தவை ஐந்தும் ஆக ஆறு கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன. மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டில் இத்தலம் வடகரை விருதராசபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டுப் பிரமதேயம் ஓமாம்புலியூராகிய உலகளந்த சோழசதுர்வேத மங்கலம் என்றும் இறைவன் பெயர் வடதளி உடையார் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்) அம்பிகை வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் பாடலில் ஓமமாம்புலியூர் என்று குறிப்பிடுகிறார். திருநாவுக்கரசர் தனது பாடலில் ஓமாம்புலியூர் என்று குறிப்பிடுகிறார். இருவரும் வடதளி என்றும் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். திருஞானசம்பந்தர். திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 30 இலுப்பைப்பட்டு

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 30 வது தேவாரத்தலம் இலுப்பைப்பட்டு. புராணபெயர் பழமண்ணிப்படிக்கரை, திருமண்ணிப்படிக்கரை. மூலவர் நீலகண்டேஸ்வரர், முத்தீஸ்வரர், பரமேஸ்வரர், மகதீஸ்வரர், படிக்கரைநாதர். இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் அமிர்தவல்லி, மங்களநாயகி. தலமரம் இலுப்பை. தீர்த்தம் பிரமதீர்த்தம், அமிர்ததீர்த்தம். சிவனார் ஆலகால விஷத்தை பருகியபோது உமையம்மை சிவனாரின் கழுத்தை தன் கரங்களால் அழுத்தி அவ்விஷத்தை தொண்டையிலேயே நிற்கச் செய்த தலம். இலுப்பை மரங்கள் நிறைந்த பகுதி என்பதால் இத்தலம் இலுப்பைபட்டு என்றும் மண்ணியாற்றின் கரையில் அமைந்ததனால் திருமண்ணிப்படிக்கரை என்றும் அழைக்கப்படுகிறது.

கோவிலின் கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது. பிரகாரத்தில் திரௌபதி வழிபட்ட வலம்புரி விநாயகர் இருக்கிறார். இவருக்கு அருகிலேயே இடம்புரி விநாயகரும் இருக்கிறார். கோயிலுக்கு எதிரே வெளியில் விஜய விநாயகர் இருக்கிறார். இங்கு தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட பஞ்சலிங்கங்கள் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். உற்சவர் வில்லேந்திய வடிவில் எழுந்தருளியுள்ளார். இத்தலத்திலுள்ள முருகப் பெருமானை திருப்புகழில் அருணகிரிதாதர் பாடியுள்ளார். பொதுவாக சிவன் கோயில்களில் ஒரு மூலவர் மட்டுமே இருப்பார். அரிதாக சில தலங்களில் இரண்டு மூலவர்கள் இருப்பர். இக்கோவிவில் சிவன் ஐந்து தனித்தனி சன்னதிகளில் இருக்கிறார்.

பாற்கடலை கடைந்தபோது வாசுகி பாம்பு களைப்பில் விஷத்தை கக்கியது. தேவர்களை காப்பதற்காக விஷத்தை சிவன் விழுங்கினார். அவ்விஷம் சிவனின் உடம்பில் சேராமல் இருப்பதற்காக அம்பாள் சிவனுக்கு பின்புறமாக இருந்து அவரது கண்டத்தை (தொண்டைக்குழி) பிடித்து நிறுத்தினாள். விஷம் கழுத்திலேயே தங்கியது. இதன் அடிப்படையில் இத்தலத்தில் சிவன் சன்னதிக்கு பின்புறம் அமிர்தவல்லிக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. அமிர்தத்தில் கலந்திருந்த விஷத்தை நிறுத்தியவள் என்பதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறாள். இவள் தன் இடது கையால் பாதத்தை காட்டியபடி அருளுகிறாள்.

பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்தபோது இங்கு சிலகாலம் தங்கியிருந்தனர். சிவபூஜை செய்ய விரும்பிய அவர்கள் இங்கு தேடிப்பார்த்தும் லிங்கம் கிடைக்கவில்லை. எனவே அவர்கள் ஐந்து பேரும் ஒரு இலுப்பை மரத்தின் அடியில் இலுப்பைக்காயில் விளக்கேற்றி சிவனை மானசீகமாக மனதில் நினைத்து வணங்கினர். சிவன் அவர்கள் ஐந்து பேருக்கும் தனித்தனி மூர்த்தியாக காட்சி தந்தார். அவர்கள் சிவனிடம் தங்களுக்கு அருளியதைப்போலவே இங்கிருந்து அருள் செய்ய வேண்டுமென வேண்டிக்கொண்டனர். சிவனும் ஐந்து மூர்த்திகளாக எழுந்தருளினார். தற்போதும் இக்கோயிலில் ஐந்து லிங்கங்கள் தனித்தனி சன்னதியில் இருக்கிறது. தர்மர் வழிபட்ட சிவன் நீலகண்டேஸ்வரர். அர்ஜுனன் வழிபட்ட சிவன் படிகரைநாதர். பீமனால் வழிபடப்பட்டவர் மகதீஸ்வரர். நகுலன் வழிபட்டவர் பரமேஸ்வரர். சகாதேவன் வழிபட்டவர் முத்துகிரீஸ்வரர் என்ற பெயர்களில் அருளுகின்றனர். பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்ட போது சித்திரை பெளர்ணமி நாளில் இத்தலம் வந்து பஞ்ச லிங்கங்களையும் வழிபட்டதாக வரலாறு உள்ளது. திரௌபதி வலம்புரி விநாயகரை வழிபட்டுள்ளார். இவர்களில் நீலகண்டேஸ்வரர் படிகரைநாதருக்கு அம்பிகை சன்னதி உண்டு. படிகரைநாதர் சன்னதியிலேயே மங்களாம்பிகை தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். பீமன் வழிபட்ட சிவன் சோடஷலிங்கமாக 16 பட்டைகளுடன் இருக்கிறார். ஐந்து மூர்த்திகளும் மூலவராக இருந்தாலும் நீலகண்டேஸ்வரர் படிகரைநாதர் இருவரும் பிரதான மூர்த்திகளாக வணங்கப்படுகின்றனர். இவர்களுக்கு எதிரில் மட்டுமே நந்தி இருக்கிறது. சகாதேவன் வழிபட்ட முத்துகிரீஸ்வரர் தெற்கு நோக்கி இருக்கிறார்.

துரியோதனன் பஞ்சபாண்டவர்களைக் கொல்ல இங்குள்ள தீர்த்தத்தில் விஷத்தைச் சேர்த்தான். அம்பிகை அவ்விஷத்தைத் தன் கையிலிருந்த அமுதத்தால் முறித்து பிறகு அந்நஞ்சை இறைவன் சிவபெருமான் உண்டார். அதனாலேயே இத்தலத்து இறைவன் நீலகண்டர் எனப் பெயர் பெற்றார். அமிர்தத்தைத் தன் கையில் வைத்திருந்த காரணத்தால் இறைவி அமிர்தகரவல்லி எனப் பெயர் பெற்றார் என்றும் புராண வரலாறு உள்ளது. சனிபகவானால் பிடிக்கப்பட்ட நளமகாராஜன் ஏழரைச்சனியின் முடிவு காலத்தில் சிவதலங்களுக்கு சென்று தரிசித்து வந்தார். திருக்கடையூர் செல்லும் முன்பு அவர் இத்தலத்தில் பஞ்சலிங்கங்களை தரிசனம் செய்தார். அப்போதே தனக்கு சனியின் ஆதிக்கம் குறைந்திருப்பதை உணர்ந்து கொண்டார். இத்தலத்திற்குரிய தலபுராணம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களால் பாடப்பட்டுள்ளது. இந்திரன், விபாண்டகர், துந்து, பாண்டவர்கள், பிரமன், மாந்தாதா, நளன் வழிபட்டுள்ளனர் சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 29 திருவாழ்கொளிப்புத்தூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 29 வது தேவாரத்தலம் திருவாழ்கொளிப்புத்தூர். புராணபெயர் திருவாள்ஒளிப்புற்றூர். மூலவர் மாணிக்கவண்ணர், இரத்தினபுரீஸ்வரர், இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். உற்சவர் சோமாஸ்கந்தர். அம்பாள் வண்டமர் பூங்குழலி, பிரமகுந்தளாம்பாள். அம்பாள் வண்டமர்பூங்குழல் நாயகி தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் பார்ப்பதற்கு வண்டுகளை கவரும் மலரை போன்ற அழகுடன் இருப்பதால் இப்பெயர் பெற்றாள். தலமரம் வாகை. முற்காலத்தில் இப்பகுதி வாகை மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. தீர்த்தம் பிரம்மதீர்த்தம். திருவாழ்கொளிப்புத்தூர் தற்போது திருவாளப்புத்தூர், வாளொளிப்புத்தூர் என்று அழைக்கப்படுகிறது.

கோவில்வகிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலின் முன் ஆலயத்தின் பிரம தீர்த்தம் அமைந்துள்ளது. இத்தலத்து இறைவன் திரிதள விமானத்தின் கீழ் அருளுகிறார். தலவிநாயகராக நிருதி விநாயகர் உள்ளார். தட்சிணாமூர்த்தி சிம்ம மண்டபத்தில் காட்சி தருகிறார். கருவறைக்கு எதிரே இருப்பதைப்போல இவருக்கு எதிரே ஒரு நந்தியும். பின்புறத்தில் மற்றொரு நந்தியும் இருக்கிறது. இவரது சன்னதிக்கு நேர் எதிரே மெய்க்கண்டநாயனாருக்கு சன்னதி இருக்கிறது. பிரகாரத்தில் அஷ்ட நாகங்கள் இருக்க அதன் மத்தியில் விநாயகர் இருக்கிறார். புற்றிற்கு அடியில் சிவன் வெளிப்பட்ட தலம் என்பதால் விநாயகர் சன்னதியும் புற்றிற்குள் இருப்பதை போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. உட்பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, சரஸ்வதி, நால்வர், பைரவர் சந்நிதிகள் உள்ளன. நால்வர் சந்நியும் உள்ளது. நடராஜர் சபையும் உள்ளது. இங்குள்ள நடராஜரின் காலுக்கு கீழே முயலகனும் நாகமும் இருக்கிறது. லிங்கோத்பவருக்கு அருகில் திருமால் பிரம்மா இருவரும் வணங்கியபடி இருக்கின்றனர். கோயில் முகப்பில் சனீஸ்வரர் கிழக்கு பார்த்தபடி இருக்கிறார். பிரகாரத்தில் சுப்பிரமணியர் இருக்கிறார். கஜலட்சுமி, சரஸ்வதி இருவரும் அடுத்தடுத்த சன்னதிகளில் இருக்கின்றனர். பவுர்ணமிதோறும் மகாலட்சுமி பூஜை நடக்கிறது.

ருதுகேதன் எனும் மன்னன் இப்பகுதியை ஆட்சி செய்தபோது நாட்டில் கடும்பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் பசியில் வாடினர். மக்களை காத்தருளும்படி மன்னன் வேண்டவே சிவன் மாணிக்க மழையை பொழிவித்தார். எனவே இவருக்கு மாணிக்கவண்ணர் என்று பெயர் வந்தது. திருமால் மாணிக்க லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்ட தலம். மாணிக்க கல் வைத்து பூஜிக்கப்பட்டவர் என்பதாலும் இப்பெயரில் அழைக்கப்படுகிறார் என்றும் புராண வரலாறு உள்ளது. வாசுகிக்கு ஆண்டுதோறும் அபிஷேகம் நடைபெறுகிறது. தேவர்கள் பாற்கடலை கடைந்த போது மத்தாக பயன்பட்ட வாசுகி பாம்பு பலவீனமடைந்தது. களைப்பில் தன்னையும் மீறி விஷத்தை உமிழ்ந்து விட்டது. சிவன் விஷத்தை எடுத்து உண்டுவிட்டார். பின் தேவர்கள் அமிர்தத்தை எடுத்துக் கொண்டனர். தன் செயலுக்கு வருந்திய வாசுகி இத்தலத்தில் மாணிக்ககல்லை உமிழ்ந்து சிவனை வேண்டி பூஜை செய்தது. அவருக்கு காட்சி தந்து மன்னித்தருளிய சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். மகிஷாசுரமர்த்தினியாக அவதரித்த துர்க்கை மகிஷாசுரனை சம்ஹாரம் செய்த பிறகு இத்தலத்தில் சிவனை வணங்கி ஆசிபெற்றாள். இவள் எட்டு கைகளுடன் சிம்மவாகனத்துடன் இருக்கிறாள். இவளது இடது கீழ் கையில் கிளி இருப்பதும் ஆயுதங்களுடன் இருந்தாலும் சாந்த துர்க்கையாக அருளுகிறாள்.

பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்ட போது அர்ஜுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அர்ஜுனன் இத்தலம் வழியாக சென்றபோது தாகம் எடுத்தது. எங்கு தேடியும் நீர் கிடைக்கவில்லை. ஓரிடத்தில் களைப்பில் அமர்ந்து விட்டான். அப்போது அங்கு முதியவர் ஒருவர் வந்தார். அர்ஜுனன் அவரிடம் தாகமாக இருப்பதால் நீர் தரும்படி கேட்டான். முதியவர் அர்ஜுனரிடம் ஒரு தண்டத்தை கொடுத்து அருகிலிருக்கும் ஓரிடத்தை சுட்டிக்காட்டி அங்கு தோண்டினால் நீர் வரும் என்றார். அர்ஜுனன் தான் வைத்திருந்த வாளை முதியவரிடம் கொடுத்துவிட்டு அவர் கூறிய இடத்திற்கு சென்றான். முதியவரோ அருகிலிருந்து புற்றில் வாளை மறைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டார். அர்ஜுனன் நீர் அருந்திவிட்டு திரும்பியபோது முதியவரை காணவில்லை. அவன் தேடியபோது பாத தடம் இருந்ததைக் கண்டு பின்தொடர்ந்தான். அவை அருகிலிருந்த புற்றில் முடிந்தது. அந்த புற்றினுள் வாள் இருந்ததைக் கண்ட அர்ஜுனன் அதனை எடுத்த போது சுயம்புலிங்கம் இருந்ததைக் கண்டான். சிவன் அவனுக்கு காட்சி தந்து தானே முதியவராக வந்ததை உணர்த்தினார். பின் இவ்விடத்தில் கோயில் எழுப்பி வழிபட்டான் அர்ஜூனன். அர்ஜுனனின் வாளை ஒளித்து வைத்தவர் என்பதால் இத்தலம் வாளொளிப்புற்றூர் என்று பெயர் பெற்றது. பிரம்மன், இந்திரன், துர்வாசர், அஞ்சகேது, விப்ரவணிகன் திருமால், அர்ச்சுனன், துர்க்கை, வண்டு, வாசுகி வழிபட்டுள்ளனர். சுந்தரர், திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 28 திருக்குரக்குக்கா

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 28 வது தேவாரத்தலம் திருக்குரக்குக்கா. புராணபெயர் திருக்கரக்காவல். மூலவர் குந்தளேஸ்வரர், குந்தளநாதர், குண்டலகர்ணேஸ்வரர். சிவன் சுயம்பு மணல் லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் குந்தளாம்பிகை. தலமரம் வில்வம். தீர்த்தம் கணபதிநதி. சுவாமி அம்பாள் விமானங்கள் ஏகதள உருண்டையமைப்பில் உள்ளன. குரங்கு வழிபட்டதால் இத்தலம் திருக்குரக்குக்கா என்று பெயர் பெற்றது. இன்றும் சித்திரை மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுகிறது.

கோவிலுக்கு ராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்து சென்றால் பலிபீடம் நந்தி உள்ளன. கொடிமரம் இல்லை. வெளிப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள் உள்ளன. முன்மண்டபத்தில் வலதுபுறம் பைரவர், சூரியன், அனுமன் மூர்த்தங்கள் உள்ளன. வாயில் முகப்பில் அனுமன் சுவாமியைப் பூசிப்பதுபோல வண்ண ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. முன் மண்டபம் வழியே உள்ளே சென்றால் நேரே சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியும் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும் உள்ளன. சிவன் சந்நிதி கருவறை வாயிலில் ஆஞ்சனேயர் கைகூப்பி நிற்கும் மூர்த்தம் உள்ளது. அனுமனுக்கு தனி சந்நிதி இவ்வாலயத்தில் உள்ளது. இக்கோவிலை ஆஞ்சனேயர் உருவாக்கி சிவனை பூஜித்தார் என்று தலபுராணம் கூறுகிறது. இராமேஸ்வரத்தில் சீதை பிரதிஷ்டை செய்த மணல் லிங்கத்தை தன் வாலினால் கட்டி அகற்ற முறபட்ட போது அனுமனின் வால் அறுந்து போயிற்று. சிவஅபராதம் நீங்க இராமர் அறிவுரைப்படி ஆஞ்சனேயர் இத்தலத்திற்கு வந்து ஒரு லிங்கத்தை நிறுவி இறைவனை பூஜித்தார். இத்தலத்தின் பிரசித்தி பெற்ற மூர்த்தி இந்த அனுமனே. ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரது சன்னதியில் ஹோமம் நடக்கிறது.

பிரகாரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகன், வனதுர்க்கை, கிராம தேவதையான செல்லியம்மன் ஆகியோர் உள்ளனர். ஆஞ்சநேயர் சன்னதி, சிவன் சன்னதி எதிரே அமைக்கப்பட்டுள்ளது. திருமால் ராமாவதாரம் எடுத்தபோது அவருக்கு உதவுவதற்காக சிவனே ஆஞ்சநேயராக வந்தார். எனவே ஆஞ்சநேயர் சிவஅம்சம் ஆகிறார். அவ்வகையில் இத்தலத்தில் சிவனே தன்னை வழிபடும் கோலத்தில் இருக்கிறார். எனவே இவரை, சிவஆஞ்சநேயர் என்றும் சிவபக்த ஆஞ்சநேயர் என்றும் அழைக்கிறார்கள். இவரே இத்தலத்தில் பிரசித்தி பெற்ற மூர்த்தியாவார். ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரது சன்னதியில் ஹோமம் நடக்கிறது. இக்கோயிலில் தட்சிணாமூர்த்தி சற்று வலதுபுறமாக திரும்பியுள்ளார். சேதுக்கரையில் (ராமேஸ்வரம்) சிவபூஜை செய்ய எண்ணிய ராமர் லிங்கம் கொண்டு வரும்படி ஆஞ்சநேயரை அனுப்பினார். ஆஞ்சநேயரும் லிங்கம் எடுத்து வரச் சென்றார். இதனிடையே சீதாதேவி கடல் மணலில் லிங்கம் சமைக்கவே ராமர் அந்த லிங்கத்திற்கு பூஜை செய்தார். அதன்பின்பு லிங்கத்துடன் வந்த ஆஞ்நேயர் ராமர் சிவபூஜை செய்துவிட்டதை அறிந்து கோபம் கொண்டார். மேலும் மணல் லிங்கத்தை தனது வாலால் உடைக்க முயன்றார் முடியவில்லை. சிவ அபச்சாரம் செய்ததால் மன்னிப்பு வேண்டிய அவர் இத்தலத்தில் சிவபூஜை செய்தார். அப்போது சிவனுக்கு மலருடன் தான் காதில் அணிந்திருந்த குண்டலத்தையும் படைத்து வணங்கி மனஅமைதி பெற்றார். ஆஞ்சநேயர் குண்டலம் வைத்து வழிபடப்பட்டவர் என்பதால் இத்தல சிவன் குண்டலகேஸ்வரர் என்றும் பெயர் பெற்றார்.

குரக்குக்காவில் உள்ள இறைவனை வழிபடும் அடியார்களுக்கு துயரம் இல்லை என்றும் இத்தல இறைவனை போற்றிப் புகழ்பவர்கள் வினை நாசமாகும் என்றும் குரக்குக்காவில் விருப்பமாய் இருப்பவர்களுக்கு இடர்கள் இல்லை என்றும் குரக்குக்கா தலத்தில் வாழ்பவர்களுக்கு பாவம் இல்லை என்றும் குரக்குக்காவிலுள்ள வரம் அருளும் இறைவனை துதிப்போர் வானுலகை ஆள்வர்கள் என்று திருநாவுக்கரசர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார். திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 27 திருக்கருப்பறியலூர் (தலைஞாயிறு)

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 27 வது தேவாரத்தலம் திருக்கருப்பறியலூர் (தலைஞாயிறு). புராணபெயர் கர்மநாசபுரம், மேலைக்காழி, கருப்பறியலூர். கோவிலின் பெயர் கொகுடிக்கோயில். கொகுடி முல்லையைத் தலக்கொடியாக கொண்டதால் இப்பெயர் ஏற்பட்டது. மூலவர் குற்றம் பொறுத்தநாதர், அபராதசமேஸ்வரர். இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார், அம்பாள் கோல்வளை நாயகி, விசித்ர பாலாம்பிகை. தலமரம் கொகுடி முல்லை. தீர்த்தம் இந்திர தீர்த்தம், சூரிய புஷ்கரிணி, பொற்றாமரை. இத்தல விநாயகர் சித்தி விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். சீர்காழி சட்டை நாதர் கோயில் அமைப்பை போலவே இக்கோயிலும் மலைக்கோயில் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. எனவே இத்தலத்திற்கு மேலைக்காழி என்றும் பெயர். கோவிலின் முதல் தளத்தில் உமா மகேஸ்வரரும் இரண்டாவது தளத்தில் சட்டைநாதரும் அருள்பாலிக்கின்றனர். சண்டிகேஸ்வரர் மனைவியுடன் வீற்றிருக்கிறார். கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கோவில் அமைந்துள்ளது. உள்மண்டபம் வெளவால் நெத்தி மண்டப அமைப்பில் காணப்படுகிறது. தோணியப்பர் சந்நிதியை இத்தலத்தில் கர்ப்பஞானேஸ்வரர் கர்ப்பஞானபரமேஸ்வரி சந்நிதி என்று அழைக்கின்றனர். தலமரமான கொகுடிமுல்லை லிங்கோத்பவருக்கு எதிரில் காணப்படுகிறது.

விசித்திராங்கன் என்ற மன்னன் தன் மனைவி சுசீலையுடன் குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்தான். இறைவன் அருளால் அவனுக்கு குழந்தை பிறந்தது. இதனால் மகிழ்ந்த மன்னன் இத்திருக்கோயிலை அழகுற கட்டினான் என்பது வரலாறு. சூரியபகவான் இத்தலத்தில் வழிபட்டதால் தலைஞாயிறு என்றும் ஆதித்யபுரி என்றும் வழங்கப்படுகிறது. இத்தலத்தில் செய்யும் அறச்செயல்கள் ஒன்றுக்கு பத்தாக பெருகும் என்பதை பிரம்மன் வசிஷ்டருக்கு கூறினார். அதனால் வசிஷ்டர் இங்கு லிங்கம் அமைத்து வழிபட்டு மெய்ஞானம் பெற்றார் என தல புராணம் கூறுகிறது. 72 மகரிஷிகள் இங்கு வழிபாடு செய்து முக்தி பெற்றுள்ளனர். இத்தலத்தில் வந்து வழிபடுபவர்கள் அடுத்த ஜென்மத்தில் தாயின் கருவில் தங்கமாட்டார்கள். எனவே தான் இத்தலம் கருப்பறியலூர் என வழங்கப்படுகிறது. அவர்களுக்கு அடுத்த ஜென்மம் கிடையாது. பிறவி இல்லாமல் சிவனின் பாதத்தில் சேர்ந்துவிடுவார்கள்.

ராவண யுத்தத்தில் ராவணனை கொன்ற தோஷம் நீங்க ராமர் ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்ய நினைத்தார். எனவே அனுமனிடம் இரண்டு நாழிகைக்குள் ஒரு சிவலிங்கம் கொண்டு வா என்றார். உத்தரவை ஏற்ற அனுமன் வட திசை நோக்கி சென்றான். குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுமன் வராததால் ராமர் மணலால் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவரது பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது. ராமர் பூஜை செய்த தலம் ராமேஸ்வரம் ஆனது. தான் வருவதற்குள் லிங்கம் பிரதிஷ்டை செய்ததை அறிந்த அனுமன் வருந்தினான். அத்துடன் அந்த லிங்கத்தை தன் வாலினால் கட்டி இழுத்தான். ஆனால் முடியவில்லை. இப்படி செய்ததால் அனுமனுக்கு சிவஅபராதம் ஏற்பட்டது. சிவனை குறித்து தவமிருந்தால் சிவ அபராதம் நீங்கும் என ராமர் அனுமனுக்கு யோசனை கூறினார். அனுமனும் அவ்வாறே செய்ய சிவன் தோன்றி அனுமனே நீ கன்மபுரம் எனப்படும் தலைஞாயிறு சென்று வழிபாடு செய்தால் இந்த தோஷம் விலகும் என அருள்பாலித்தார். அனுமனும் அதன் படி தலைஞாயிறு வந்து வழிபட்டு தோஷம் நீங்க பெற்றார். அதன் பிறகு சிவனின் கருணைக்கு வியந்து இத்தலத்தின் வடகிழக்கில் தன்பெயரால் ஒரு லிங்கம் அமைத்து அதை வழிபாடு செய்ய ஆரம்பித்தார். இத்தலம் தற்போது திருக்குரக்கா என வழங்கப்படுகிறது.

ராவணனின் மகன் மேகநாதன் இந்திரனை போரில் வென்றதால் இவனுக்கு இந்திரஜித் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு முறை இந்திரஜித் வானத்தில் புஷ்பக விமானம் மூலம் பறந்து கொண்டிருந்தான். வழியில் விமானம் தடைபட்டு நின்றது. கீழே பார்த்தபோது சிவாலயத்தின் மீது பறந்ததை உணர்ந்தான். இதனால் இந்த தடை ஏற்பட்டது என அறிந்தான். இதனால் வருந்திய இந்திரஜித் இத்தல தீர்த்தத்தில் நீராடி இறைவனை பூஜித்தான். இவனது கவலை நீங்கி விமானம் மறுபடியும் பறந்தது. இப்படிப்பட்ட அற்புத லிங்கத்தை இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்றான். அது முடியாமல் போனதால் மயங்கி விழுந்தான். இந்த செய்தியை கேட்ட ராவணன் இத்தல சிவனின் திருவடியில் விழுந்து தன் மகனின் குற்றத்தை பொறுத்து அருளுமாறு வேண்டினான். இறைவனும் அருள் செய்தார். எனவே இத்தல இறைவன் குற்றம் பொறுத்த நாதர் எனப்படுகிறார். அதே போல் ஒருமுறை இந்திரன் இறுமாப்புடன் கயிலைக்குச் சென்றான். அப்பொழுது இறைவர் பூதவடிவாய் அவன்முன் தோன்றினார். இந்திரன் தன் முன் நிற்பது இறைவன் என்றறியாமல் அவர் மீது வச்சிராயுதத்தை எறிந்தான். அதன்பின் இறைவர் என்று அறிந்து தன்பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டினான். இறைவனும் இந்திரனின் குற்றத்தைப் பொறுத்தருள் செய்தமையால் குற்றம் பொறுத்த நாதர் என்று இத்தல இறைவனுக்கு பெயர் ஏற்பட்டது என்று தலவரலாறு கூறுகிறது. வசிஷ்டர், ஆஞ்சநேயர், இந்திரன் ஆகியோர் வழிபட்டடுள்ளனர், இக்கோவிலில் சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. திருஞானசம்பந்தர், சுந்தரர் இருவருமே தங்கள் பதிகங்களில் இக்கோவிலை கொகுடிக்கோயில் என்று குறிப்பிட்டுள்ளனர். திருஞானசம்பந்தர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 26 கொருக்கை

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 26 வது தேவாரத்தலம் கொருக்கை. புராணபெயர் திருக்குறுக்கை. யோகீசபுரம், காமதகனபுரம், கம்பகரபுரம் என வேறு பெயர்களும் உள்ளது. மூலவர் வீரட்டேஸ்வரர். சதுர ஆவுடையார் உயர்ந்த பாணமாக சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். மன்மதன் இறைவனை மீது எறிந்த ஐந்து அம்புகளுள் ஒன்றான பத்மம் (தாமரை) பதிந்துள்ள அடையாளம் சுவாமி பீடத்தின் முன்புறத்தில் நடுவில் உள்ளது. உற்சவர் யோகேஸ்வரர். அம்பாள் ஞானாம்பிகை. தலமரம் கடுக்காய் மரம், அரிதகிவனம். தீர்த்தம் திரிசூல் கங்கை, பசுபதி தீர்த்தம்.

ஐந்து நிலைகள் கொண்ட இக்கோவில் மேற்கு நோக்கி உள்ளது. நுழைவாயிலில் அமைந்துள்ள கோபுரத்தில் பைரவர், காமதகனர் சுதைச் சிற்பங்கள் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன. நுழைவாயில் எதிரில் வெளியே இத்தலத்து தீர்த்தம் சூலகங்கை ஒரு தடாக வடிவில் அமைந்துள்ளது. கோபுர நுழைவாயில் உட்சென்று வலம் வந்து மகாமண்டபம் அடைந்தால் அதன் வடபுறத்தில் தெற்கு நோக்கியவாறு இறைவி ஞானாம்பிகை சந்நிதி உள்ளது. இதனையடுத்து காமதகனமூர்த்தி எழுந்தருளியுள்ள சபை உள்ளது. சிவபெருமான் வீரச்செயல்கள் புரிந்த அட்ட வீரட்டத்தலங்களில் ஒன்றான இங்கு காமனை எரித்துள்ளார். எனவே இறைவன் காமதகனமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். காம தகன மூர்த்தி இடக்காலை மடித்து வலக்காலைத் தொங்கவிட்டு வலக்கை அபய முத்திரையுடன் இடக்கையை மடக்கிய கால் மீது வைத்து அமர்ந்த நிலையில் யோகமூர்த்தியாக வீற்றிருக்கிறார். சிவபெருமானைச் சுற்றி சனகாதி முனிவர்கள் உள்ளனர். இங்கு சிவன் யோக மூர்த்தியாக இருப்பதால் நினைத்தவுடன் சென்று எளிதாக பார்க்க இயலாது. எப்படியாவது தடங்கல் வந்து விடும். அதையும் மீறி சுவாமியை தரிசிப்பவர்களுக்கு யோக நிலை கைகூடும். ரதி மன்மதன் உற்சவத் திருமேனிகள் இத்தலத்தில் உள்ளன.

ராஜகோபுரத்தில் உள்ள சிற்பங்களில் பன்றி, யானை, நரசிம்மம், மனிதன் ஆகிய நான்கு முகங்களையுடைய ஒரு மூர்த்தியின் சிற்பம் உள்ளது. நடராச சபையில் சிவகாமி மாணிக்கவாசகர் திருமேனிகள் உள்ளன. இச்சபை சம்பு விநோத சபை காமனங்கநாசனி சபை என்ற பெயரில் உள்ளது. இத்தல விநாயகர் குறுங்கை கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள குறுங்கை கணபதிக்கு மட்டும் இங்கு கஜபுஷ்ட விமானம் இருக்கும். விநாயகர் சதுர ஆவுடையாரில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு இருதேவியருடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். உற்சவர் வில்லேந்திய கோலத்தில் காட்சி தருகிறார்.இத்தல முருகப்பெருமானை அருணகிரிநாதரின் lனது திருப்புகழில் பாடல்கள் பாடியுள்ளார்.

திருக்குறுக்கை என்ற ஊரைச் சுற்றியுள்ள ஊர்கள் பெயர்கள் இத்தலத்து வரலாற்றோடு சம்பந்தப்பட்டவை. சிவபெருமானின் தவத்தை கலைக்க மன்மதன் தன் கையில் கங்கணம் கட்டிக் கொண்ட இடம் கங்கணம் புத்தூர். பால் சாப்பிட்ட இடம் பாலாக்குடி. வில் எடுத்த இடம் வில்லினூர். குறி பார்த்த இடம் காவளமேடு. தன்னோடு வந்தவர்களோடு ஐவநல்லூரில் கூடி இங்கிருந்து வில் விடு என்று கூறினார்கள். அந்த இடம் சரியாக இல்லை என்று கூறி மேட்டுக் கொற்கை என்ற இடத்துக்கு வந்து நின்று குறி பார்க்கையில் பின்பக்கமிருந்தும் இல்லாது முன்பக்கமிருந்தும் இல்லாது ஒரு ஓரமாக நின்று மன்மதன் கணை விட்டார். இங்கு சிவன் யோக மூர்த்தியாக இருப்பதால் நினைத்தவுடன் சென்று எளிதாக பார்க்க இயலாது. எப்படியாவது தடங்கல் வந்து விடும். அதையும் மீறி நாம் சுவாமியை தரிசித்து விட்டால் நமக்கு யோக நிலை கைகூடும். சுவாமி அனுக்கிரக மூர்த்தியாக இருப்பதால் தெரியாமல் தவறு செய்பவர்கள் இவரை வணங்கினால் நமது தவறை மன்னித்து அனுக்கிரகம் புரிகிறார்.

சூரபன்மன், தாரகன் ஆகிய அசுரர்களின் தொல்லைகளை தீர்க்க சிவபெருமான் ஒரு குமாரனைத் தோன்றச் செய்ய வேண்டும் என்று தியானம் செய்து கொண்டிருந்தார். அவரது தியானத்தால் உலகம் வெப்பத்தால் தகித்தது. இதை உணர்ந்த தேவர்கள் மன்மதனிடம் சென்று எப்படியாவது அவரது தியானத்தை கலைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதன்படி மன்மதன் நடக்கப்போவது தெரியாமல் தனது அறியாமை மேலிட தன்னிடம் உள்ள வில்லை எடுத்து சர்வேசுவரன் மீது தன் கணைகளைத் தொடுத்தார். கணையோ புஷ்பமாக மாறி வந்து விழுகிறது. உடனே ஈசுவரன் மன்மதன் இருக்கும் இடம் நோக்கி ஒரு பார்வை பார்த்தார். அவ்வளவு தான். எம்பெருமானின் நெற்றிக்கண் மன்மதனை சுட்டு எரித்து விட்டது. பஸ்பமாகிப் போய்விட்டார். அதன்பின் ரதி ஈசனிடம் என் கணவரை மீட்டுத்தர வேண்டும் என்று கேட்க தான் பூலோகத்தில் பார்வதியை மணம் புரிந்து கொள்ளும் போது மன்மதனுக்கு சாபவிமோசனம் கிட்டும் என்று அருள் புரிந்தார். இன்றும் காமனைத் தகனம் செய்த இடம் விபூதிக்குட்டை என்ற பெயரில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது. இக் குட்டையில் எங்கெடுத்தாலும் மண்ணானது விபூதியாகவே உள்ளது.

புராண காலத்தில் தீர்த்தவாகு என்ற முனிவர் சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஆலயங்களுக்குச் சென்று இறைவனுக்கு ஆகாய கங்கை நீரைக் கொண்டு அபிஷேகம் செய்யும் இயல்புடையவர். கோவிலின் நுழைவு வாயிலுக்கு முன் இருக்கும் சூல தீர்த்தம் கங்கையை விட புனிதமானது. இதன் பெருமை அறியாது தீர்த்தவாகு முனிவர் இத்தலத்தை அடைந்து கங்கையைக் கொண்டுவர விரும்பி தன் நீண்ட கைகளை உயரத் தூக்க அக்கைகள் குறுகிவிட்டன. தன்னால் பிழை நேர்ந்தது என்றெண்ணி தன் தலையை பாறை மீது மோதமுற்பட்டார் அப்போது இறைவன் காட்சி தந்து அவர் உடற்குறையைப் போக்கினார். இவர் குறுங்கை முனிவர் என்று இவர் பெற்றார் இவர் பெயரால் குறுக்கை என்று அழைக்கப்பட்டு நாளடைவில் கொருக்கை என்று ஆனது. குறுங்கை விநாயகர் சந்நிதியில் குறுங்கை முனிவரின் உருவம் உள்ளது.

திருநாவுக்கரசர் தனது பாடல்களில் இறைவன் மார்கண்டேயருக்கு அருள் புரிந்தது. சண்டேசருக்கு அருளியது. முற்பிறப்பில் சிலந்தியாக இருந்தபோது செய்த தொண்டிற்காக மறுபிறப்பில் கோச்செங்கட் சோழனாக பிறப்பெடுக்கச் செய்தது. திருமால் ஆயிரம் மலர்கள் கொண்டு சிவனை பூஜிக்க ஒரு நாள் மலர்களில் ஒன்று குறைய தன் கண்ணையே பறித்து திருமால் அர்ச்சிக்க அவருக்கு அருள் செய்தது. தினந்தோறும் கல்லால் அடித்து பூஜை செய்த சாக்கிய நாயானாருக்கு அருளியது. கண்ணப்ப நாயானாருக்கு அருளியது. திருமறைக்காட்டில் அணைந்து போகும் நிலையில் இருந்த விளக்கை தன் மூக்கால் தூண்டி பிரகாசமாக எரியச் செய்த எலியை மறுபிறப்பில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறக்கச் செயது அருளியதை எல்லாம் குறிப்பிட்டு வீரட்டனாரை சிறப்பித்துப் பாடியுள்ளார். லட்சுமி, திருமால், பிரமன், முருகன், ரதி வழிபட்டுள்ளனர். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பாடியுள்ள தலபுராணம் உள்ளது, சோழ, விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன. திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 25 திருமணஞ்சேரி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 25 வது தேவாரத்தலம் திருமணஞ்சேரி. புராணபெயர் மணஞ்சேரி, கீழைத்திருமணஞ்சேரி. மூலவர் உத்வாக நாதசுவாமி, அருள்வள்ளல் நாயகர், கல்யாண சுந்தரேஸ்வரர். இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் யாழினும் மென்மொழியம்மை, கோகிலாம்பாள். சிவனும் பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். மூலஸ்தானத்தில் அம்பாள் தனியாக மணக்கோலத்தில் மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் உள்ளார். தலமரம் கருஊமத்தை, வன்னி, கொன்றை. தீர்த்தம் சப்த சாகரதீர்த்தம். ஏழு கடல்களும் மாலையாக இறைவன் திருமணத்திற்கு வந்தது அதுவே சப்த சாகரதீர்த்தம் என பெயர் பெற்று தல தீர்த்தமாக இருக்கின்றது.

கிழக்கு நோக்கியிருக்கும் இக்கோவில் ராஜ கோபுரம் 5 நிலைகளை உடையது. ராஜ கோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்தால் கொடிமர கணபதி காட்சி தருகிறார். அடுத்து கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. 3 நிலை 2 வது கோபுரத்தைத் தாண்டி உள்ளே நுழைந்தவுடன் கருவறையில் கிழக்கு நோக்கி இத்தலத்து இறைவன் உத்வாகநாதர் அழகுற அருட்காட்சி தருகிறார். கருவறையின் முன் மண்டபத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கியவாறு இத்தலத்து இறைவி கோகிலாம்பாள் அமர்ந்த நிலையில் திருமணப் பெண் போன்றே அருட்காட்சி தருகிறாள். கருவறையின் இடதுபுறம் நிருத்த மண்டபத்தில் இவ்வாலயத்தின் உற்சவமூர்த்தியான கல்யாணசுந்தரர் அம்பிகை கோகிலாம்பாளுடன் கல்யாண கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். மற்றும் நடராஜர், சுப்பிரமணியர், தட்சினாமூர்த்தி, பிரம்மா, ராகு பகவான், துர்க்கை, மகாவிஷ்ணு சந்நிதிகள் இவ்வாலயத்தில் இருக்கின்றன. இங்கு நவகிரகங்கள் கிடையாது.

சிவபெருமானும் உமாதேவியும் கயிலாயத்தில் இருக்கும் போது ஒருநாள் உமை ஈசனை வணங்கி மற்றொரு முறை தங்களை திருமணம் செய்து இன்புற வேண்டும் என்று வரம் கேட்க தாராளமாக என்றார் ஈசன். ஆனால் எப்போது எங்கே என்று ஈசன் சொல்லாமல் இருந்ததால் நாட்கள் நகன்று கொண்டே இருந்தது. இதனால் அம்மையும் கோபத்தால் ஈசனிடம் சற்று அலட்சியமாக நடக்க ஆரம்பித்தார். இதனால் சினம்கொண்ட சிவபெருமான் உமா தேவியை பூலோகத்தில் பசுவாக பிறக்க செய்து விட்டார். தேரழந்தூரில் அம்பிகைக்கு பசு சாபத்தினால் அக்காட்டில் அம்பிகை பசு உருவம் ஏற்றார். கோமலில் திருமால் பசு மேய்ப்போனாக உருவெடுத்து பசுக்களை பராமரித்து வந்ததார். பின் சாப விமோசனம் வேண்டி பல இடங்களில் பசுவாக அலைந்து திரிந்து ஈசனை வழிபடலானார். ஒருநாள் அம்பிகை பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்றும் குளம்பின் ஸ்பரிசத் தழும்பும் பெற்று மகிழ்ந்த சிவபிரான் உளம் கனிந்து அம்பிகை விரும்பியவாறு திருமணம் புரிந்து கொள்ளவும் சம்மதித்து பரத மகரிஷி நடத்திய யாக வேள்வி குண்டத்தில் தோன்றி உமையாளை திருமணஞ்சேரியில் திருமணம் செய்து அருளினார்.

சிவபெருமானின் தியானத்தை கலைக்கும் பொருட்டு அவரது கோபத்துக்கு ஆளாகி அவரது நெற்றிக்கண்ணால் திருக்குறுக்கை என்ற தலத்தில் மன்மதன் எரிந்து போனான். அறியாமை மேலிட்டதால் மன்மதன் சர்வேசுவரன் மீது தன் கணைகளைத் தொடுக்க அதனால் அவரது நெற்றிக்கண் தீக்கு இலக்கான மன்மதன் தன் தவறுணர்ந்ததும் மனம் நொந்து திருந்தி ஈசனைத் துதிக்க எம்பெருமானும் மனமிறங்கி மன்மதன் இத்தலத்தில் பேறு பெற்றன். இது நித்திய கல்யாண ஷேத்திரம். ராகு தோச நிவர்த்தி தலம். ராகு பகவான் இங்கு முழு உருவில் உள்ளார். மனித உருவத்தில் கவச குண்டலத்தோடு காட்சி தருகிறார். இத்தலத்தில் ஆமை பூஜித்து மனித உருப்பெற்றது. மன்மதன் ஆமை வழிபட்ட தலம். இத்தலத்தில் இருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் உள்ள திருவேள்விக்குடி என்ற தலத்தில் தான் சிவபெருமான் உமாதேவி திருமணத்திற்கான வேள்விகள், யாகம் மற்றும் இதர கல்யாண சடங்குகள் நடைபெற்றன. சோழ மன்னன் கண்டராதித்யனின் மனைவியான செம்பியன் மகாதேவியால் இந்த ஆலயம் திருப்பணி செய்யப்பட்டது என்று இந்த ஆலயத்திலுள்ள கல்வெட்டுக்களில் இருந்து தெரிய வருகிறது. சோழர் காலத்துக் கல்வெட்டுகள் 28 படி எடுக்கப்பட்டுள்ளன. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 24 மேலைத்திருமணச்சேரி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 24 வது தேவாரத்தலம் மேலைத்திருமணச்சேரி. புராணபெயர் எதிர்கொள்பாடி. மூலவர் ஐராவதேஸ்வரர், மதயானேஸ்வரர். அம்பாள் சுகந்த குந்தளாம்பிகை, மலர்க்குழல் நாயகி, மலர்குழல்மாது. மிகச்சிறிய திருமேனி சுகாசனத்தில் அம்பாள் அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.தலமரம் கொடிமரம். தீர்த்தம் ஐராவததீர்த்தம். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோவில் 3 நிலை கோபுரத்துடன் கிழக்கு நோக்கியுள்ளது. ராஜகோபுரம் பண்டைக் காலத்தில் மல்லப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. உள்பிராகாரத்தில் நால்வர், பிட்சாடனர், பாலகணபதி, நடராசர், தக்ஷிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, ராகு, துர்க்கை, கங்காவிசர்ஜனர் ஆகியோர் உள்ளனர். இக்கோவிலில் பிரம்மோற்ஸவம் கிடையாது. பரத முனிவர் வழிபட்ட பரதலிங்கம் பிரகாரத்தில் இருக்கிறது. சுவாமி சன்னதியில் தாமரை பீடத்தின் மீது துர்க்கை காட்சி தருகிறாள். விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, ஞானசரஸ்வதி, பைரவர், சனீஸ்வரர், துணைவந்த விநாயகர் சந்நிதிகள் உள்ளன.

இங்கிருந்து 2 கி.மீ., தூரத்தில் உள்ள திருமணத்தலமான திருமணஞ்சேரியில் கல்யாண சுந்தரருக்கு சித்திரை மாதம் திருக்கல்யாணம் நடக்கும். மாப்பிள்ளை கோலத்தில் இக்கோவிலில் எழுந்தருள்வார். அவரை கோயில் அர்ச்சகர் தன்னை அம்பாளின் தந்தையாகப் பாவித்து பூர்ணகும்ப மரியாதை கொடுத்து வரவேற்பார். மருமகனுக்குரிய நியாயமான சீரும் தருவார். இந்த உபசரிப்பை ஏற்றபின்பு சுவாமி திருமணஞ்சேரிக்கு மீண்டும் சென்று அம்பிகையை மணந்து கொள்வார்.

சிவனுக்கு அணிவிக்கப்பட்ட தாமரை மலரை சிவனை பூஜித்து துர்வாச முனிவர் பிராதமாக பெற்று கைகளில் ஏந்தியபடி தேவலோகத்தில் துர்வாச முனிவர் வந்தார். அசுரர்களை வென்ற இந்திரனுக்கு பரிசாக அளித்தார். இந்திரன் அம்மலரை தன் வாகனமான ஐராவதத்தின் தலை மீது வைக்க அது அம்மலரை கீழே போட்டு தன் காலால் மிதித்து அம்மலரை அவமரியாதை செய்தது. இதனால் கோபம் கொண்ட முனிவர் பாண்டிய மன்னன் எறியும் கைவளையால் இந்திரனின் முடி சிதறுமாறு சாபமிட்டார். யானையும் பூமியில் பிறக்குமாறு சாபமிட்டார். பதறிப்போன இந்திரன் மன்னிப்பு கேட்க இந்திரனின் தலைக்கு வருவது தலைமுடியோடு போகும் என்று சாபவிமோசனம் தந்தார். துர்வாசரால் சபிக்கப்பட்ட யானை பூமிக்கு வந்து பல இடங்களில் சுற்றி திரிந்தது. பல தலங்களில் பூஜையும் செய்தது. கடைசியாக இத்தலத்திற்கு வந்து இறைவனை பூஜித்து துயரம் நீங்கியது. எனவே இங்குள்ள இறைவன் ஐராவதேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

திருவேள்விக்குடியில் பரத முனிவர் சிவபார்வதி திருமணத்தை நடத்தி வைத்தார். மணம் முடிந்ததும் தான் குடியிருக்கும் மேல திருமணஞ்சேரிக்கு வர இறைவனுக்கு அழைப்பு விடுத்தார். இறைவனும் ஒப்புக் கொண்டார். இறைவனும் இறைவியையும் வரவேற்க பிரமாதமான வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து விட்டார். மணக்கோலத்தில் வந்த தெய்வத்தம்பதியினரை பரதமுனிவர் எதிர்கொண்டு அழைத்தார். இதனால் இத்தலம் எதிர்கொள்பாடி என அழைக்கப்பட்டது. தற்போது மேலக்கோயில் என்று அழைக்கிறார்கள்.

பரத்வாஜ மகரிஷி தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். அவருக்கு பார்வதியே குழந்தையாகப் பிறந்தாள். மணப்பருவம் அடைந்த போது சிவனிடம் அவளை மணந்து கொள்ளும்படி வேண்டினார் மகரிஷி. சிவனும் அம்பிகையை மணக்க பூலோகம் வந்தார். வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வெளியே வந்து வரவேற்பது நம் கலாசாரம் பரத்வாஜரும் மாப்பிள்ளையாக வந்த சிவனை பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்றார். பரத்வாஜரின் மரியாதையை ஏற்ற சிவன் அவரது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். பரத்வாஜர் எதிர்கொண்டு அழைத்ததால் சுவாமிக்கு திருஎதிர் கொள்பாடி உடையார் என்றும் பெயர் உண்டானது. ஐராவதம் என்னும் இந்திரனின் யானை வழிபட்டதால் ஐராவதேஸ்வரர் என்ற பெயர் பிற்காலத்தில் உண்டானது.

சுந்தரர் தனது பதிகத்தில் மதத்தையுடைய யானையின் மீது ஏறி சிற்றரசர்கள் புடைசூழ உலாவருகின்ற பேரரசர்களே நீங்கள் இறந்தால் அப்போது உங்களோடு துணையாய் வருபவர்கள் இவர்களுள் ஒருவரும் இல்லை இறைவன் ஒருவனே உங்களுக்குத் துணையாய் வருவார் என்றும். இவ்வுலகில் பிறந்தோர்க்கு இறப்பும் ஒருநாள் உண்டு. அதற்கிடையில் வரும் இல்வாழ்க்கையும் துன்பம் தருவதே ஆகும். உலகியலில் உழன்று மாவடுவின் வடிவைக் கொண்ட கண்களையுடைய மாதரது மயக்கத்தில் மயங்காது இருக்கவும். மணம் நிறைந்த கூந்தலையுடைய மகளிரது வஞ்சனையையுடைய மனைவாழ்க்கையில் உள்ள ஆசையைத் துறந்து இருக்கவும். எக்காலத்திற்கும் நமக்குத் துணையாய் வருபவர் இறைவன் ஒருவனே என்றும் கூறி 10 பதிகம் பாடியுள்ளார். எதிர்கொள்பாடி இறைவனை வணங்கி தனது திருபதிகத்தின் 10 பாடல்களையும் பாடி வழிபடுபவர்கள் இறைவனின் திருவடியை அடைந்து வணங்கியிருப்பர் என்று சுந்தரர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார். சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.