அஷ்டதிக் பாலகர்கள்

இந்திரன், அக்னி தேவன், எமன், நிருதி பகவான், வருண பகவான், வாயு பகவான், குபேரன், ஈசானன் ஆகிய எட்டுபேரும் அஷ்ட திக் பாலகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவார்கள். வலது கை கீழேயும் இடது கை மேலேயும் வைத்து நடுவில் வாஸ்து புருஷன் இருக்கிறார். இடம் ஹளேபிடு ஹொய்சலேஸ்வரர் கோவில் கர்நாடகா.

1. கிழக்கு திசை அதிபதி இந்திரன் தனது மனைவி இந்திராணியுடன் தனது வாகனமான ஐராவத யானை மீது அமர்ந்திருக்கிறார்.

2. தென்கிழக்கு திசை அதிபதி அக்னி தனது மனைவி சுவாஹா தேவியுடன் தனது வாகனமான ஆட்டுகிடா மீது அமர்ந்திருக்கிறார்.

3. தெற்கு திசை அதிபதி எமன் தனது மனைவி குபேரஜாயையுடன் தனது வாகனமான எருமை மீது அமர்ந்திருக்கிறார்.

4. தென்மேற்கு திசை அதிபதி நிருதி தனது மனைவி கட்கியுடன் தனது வாகனமான பிரேதம் வாகன மீது அமர்ந்திருக்கிறார்.

5. மேற்கு திசை அதிபதி வருணன் தனது மனைவி வருணியுடன் தனது வாகனமான மகரத்தின் மீது அமர்ந்திருக்கிறார்.

6. வடமேற்கு திசை அதிபதி வாயு மனைவி வாயுஜாயையுடன் தனது வாகனமான மான் மீது அமர்ந்திருக்கிறார்.

7. வடக்கு திசை அதிபதி குபேரன் தனது மனைவி யட்சியுடன் தனது வாகனமான நரன் மீது அமர்ந்திருக்கிறார்.

8. வடகிழக்கு அதிபதி ஈசானம் மனைவி ஈசானஜாயையுடன் தனது வாகனமான காளை மீது அமர்ந்திருக்கிறார்.

குருநாதர் கருத்துக்கள் #56

கேள்வி: பல இடங்களில் பலர் சித்தர்களை நாடி அவர்களை பல கேள்விகளைக் கேட்டு அதற்கு அவர்கள் அளித்த விடை தெளிவாகப் புரிவதில்லையே ஏன்?

பொதுவாக சித்தர்களின் பரிபாஷை (பேசும் மொழி) என்பது வேறு ஒரு அகராதியாகின்றது (மொழி இலக்கணம்). பொதுவாக மக்களின் குறை தீர்க்கவோ தவம் செய்யவோ சித்தர்கள் கீழ் இறங்கவில்லை என்பதேயாகும். அவரவர் தம் சுய மார்க்கம் அதாவது இறைவனை அடைவது அவர் நோக்கமாகும். சித்தர்களைக் கண்டு குறை கூறுவோர் தங்களுக்குச் சாதகமாக விடைகள் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். இத்தகைய நிலையில் தொட்டும் தொடாது பட்டும் படாத ஓர் பாஷையில் விடையளிக்கின்றனர். இவ்விடை புரிந்து கொள்கின்றவர்களின் திறமையை பொருத்ததாகின்றதால் இதனை யாம் நம்பிக் கெட்டோம் என்கின்ற மனப்பான்மை வேண்டாம் அன்பர்களே. ஏனெனில் இதில் ஓர் பெரிய அர்த்தம் அடங்கியுள்ளது. சித்தர்கள் கூறுகின்றதில் வருத்தம் காணாது சித்தர்களும் துறவிகளும் ஜோதிடர்கள் அல்ல என்கின்றதை நீங்கள் உணர வேண்டும். சித்தர்கள் ஜோதிடத்தை அறிந்தவர்கள் என்பதில் குழப்பம் வேண்டாம். அதற்கும் மேலான காரியங்களை அறிந்தவர்கள் என்பதிலும் குழப்பம் இல்லை. முற்பிறவி, கர்ம நிலைகள், கர்ம பாக்கிகள், ஜென்மாந்திர பாவங்கள், தோஷங்கள், சாபங்கள், என்பதெல்லாம் அறிந்தவர் ஆவர். இருப்பினும் அவர் அளிக்கக்கூடியது தகுந்த பாத்திரத்தினர்களுக்கே (தகுதி உள்ளவர்களுக்கே). இதுவே உண்மை நிலையாகும். இருப்பினும் விடாது அவர்களை வேண்டிவர தமது நிலைகளை உணர சக்தி உண்டாகும் என்பதிலும் சந்தேகம் இல்லை. அதன்வழி பல நல்காரியங்கள் நடைபெறும் என்பதிலும் குழப்பம் இல்லை. கற்றோர்கள் அருகாமையில் நாம் அமர்ந்திருக்க நாமும் சிறிது கற்றுக் கொள்ளலாம் அல்லவா? இத்தகைய நிலையில் சித்தர்களுடன் பழகும் காலத்தில் நாம் பெறுவது ஞானமாகும் அறிவாகும் அதன்வழி அமைதியும் முன்னேற்றமும் ஆகும்.

நவபாஷாண பைரவர்

சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கம் என்ற ஊரில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது சுகந்தவனேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் சமீபவல்லி. இக்கோயிலில் தனி விமானத்துடன் கூடிய சன்னதியில் காசிபைரவர் இருக்கிறார். பைரவர் தன்னுடைய எட்டு கரங்களிலும் ஆயுதங்கள் மற்றும் கபால மாலை ஏந்தி காட்சி தருகிறார். இந்த பைரவர் நவபாஷாணத்தால் ஆனவர். இச்சிலையை போகர் பழனிமலை தண்டாயுதபாணிக்கு முன் பிரதிஷ்டை செய்தார். இந்த பைரவர் சிலையை போகர் தான் செய்தார் என்பதற்கு வலு சேர்க்கும் வகையில் பைரவருக்கு பின்புறம் தீபாராதனை காட்டும் சமயத்தில் முன்புறத்தில் பழனி ஆண்டவரின் உருவத்தில் காட்சியளிக்கார் பைரவர். இந்த பைரவருக்கு இரண்டு முகங்கள் உண்டு. பக்தர்கள் பைரவரின் பின்புற முகத்தை மனிதர்களால் காண முடியாது. அந்த முகத்தை கோயிலின் தல மரமாக இருக்கும் வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் சனீஸ்வரருக்கு மட்டும் காட்சி தருகிறார் என்று கோயிலின் தல வரலாறு சொல்கிறது.

பைரவர் அருகில் மூன்று பேர் வணங்கியபடி இருக்கின்றனர். உடன் நாய் வாகனத்தை பிடித்தபடி பாலதேவர் இருக்கிறார். இவரது சன்னதி முன்மண்டபத்தில் மற்றொரு பைரவரும் காட்சி தருகிறார். காசி பைரவரின் சிலை அதிக சக்தியுடைய நவபாஷாணத்தால் ஆனவர் என்பதற்கு சான்றாக பைரவருக்கு அபிஷேகம் செய்யும் நீரும் வடை மாலையும் சில மணி நேரங்களில் விஷம் போல் நீல நிறமாக மாறி விடுகிறது. ஆகையால் தீர்த்தமோ வடை மாலையோ இங்கு பிரசாதமாக தருவது கிடையாது. இதன் மருத்துவ சக்தியை தாங்கும் வலிமை மனிதர்களுக்கு இருக்காது என்பதன் அடிப்படையில் இவருக்கு அணிவிக்கப்படும் மலர் மாலைகள் படைக்கப்படும் வடை மாலை உள்ளிட்ட நைவேத்தியங்கள் சன்னிதியின் கூரை மீது போடப்படும். வடைகளை பறவைகள் கூட சாப்பிடுவதில்லை. பைரவருக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம் கூட பக்தர்கள் தொட முடியாதபடி கோவிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது.

குருநாதர் கருத்துக்கள் #55

கேள்வி: தானங்கள் எனக் கூறினால் அன்னம், வஸ்திரம், கல்வி, மாங்கல்யம், இறுதிச் சடங்குகள் என்றெல்லாம் கூறினீர்களே இதற்கும் மேலான தானங்கள் ஏதும் இருக்கின்றதா?

பொதுவாக பூஜா பலன்களை தானமளிப்பது ஒரு சிறந்த தானமாகும். இருப்பினும் இதனை செய்வோர் குறைவாக உள்ளனர். ஏனெனில் பலன் பெறுதல் வேண்டும் என ஒரு சுயநலம் அங்கு இருக்கின்றது. இதற்கென யாம் ஒரு வழியும் இங்கு கூறுவோம் மாதம் முழுவதும் செய்யும் பூஜைகளில் ஒரு முறை ஏதாவது ஒரு நாளில் பூஜா பலன்களை நோய் நொடி கண்டோருக்கு தானமாக அளித்திட அவர்கள் உறுதியாக நலம் பெறுவார்கள். இத்தகைய ஒரு தானத்தை எவராலும் எளிதாக மனதில் இருந்தவாறே செய்ய முடியும் ஏனெனில் இதற்கு முதலீடுகள் யாவும் தேவையற்றது. இத்தகைய தானத்தை செய்ய அனைவரும் பழகிக் கொள்ளுங்கள்.

அறியாமை மனம்

சிவாலய வளாகத்துக்கு அருகே ஒரு நாய் எப்போதுமே சுற்றிக் கொண்டே இருக்கும். கோயிலை சுற்றி உள்ள வீடுகளில் போடப்படும் எச்சில் இலை உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்து வந்தது. அப்போது அந்த ஊரின் சிவாலயத்தில் 11 நாட்கள் தொடர் திருவிழா தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு அந்த ஊரில் அனைவருமே தாங்கள் சாப்பிடும் உணவை இறைவனுக்கு படைத்து விட்டு சாப்பிட்டார்கள். இறைவனுக்கு படைத்தது என்பதால் கீழே போடக்கூடாது என்று மீதம் இல்லாமல் சாப்பிட்டார்கள். யார் வீட்டிலுமே எச்சில் இலைகளை தூக்கி வெளியே போடவில்லை. நாய்க்கு எச்சில் இலை உணவு கிடைக்காததால் பசி தாங்க முடியாமல் கோயிலின் ஓரத்தில் வந்து படுத்து கிடந்தது. அப்போது அந்த சிவாலயத்தில் இராமாயணம் பற்றி பேச்சாளர் ஒருவர் பிரசங்கம் செய்தார். ராமர் பூஜை பிரதிஷ்டை செய்த லிங்கம் உள்ள இராமேஸ்வரம் தல மகிமையை விளக்கமாக பேசினார். அனைத்தையும் அந்த நாயும் காது கொடுத்து கேட்டது. இராமேஸ்வரத்தில் உள்ள கோயிலில் உள்ள சிறப்பை கேட்டதும் மக்கள் அனைவரும் திருவிழா முடிந்ததும் அக்கோயிலுக்கு செல்ல வேண்டும் புண்ணியம் சேர்க்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள். நாய் சிந்தித்தது. நாமும் இப்படியே எச்சில் இலையை பொறுக்கித் தின்றே காலத்தை கழித்து விடக் கூடாது. இராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று புண்ணியம் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்தது. திருவிழா முடியும் வரை கோயிலின் அருகே இருந்து இவரது சொற்பொழிவுகள் அனைத்தையும் கேட்டு மேலும் இறைவனைப் பற்றி தெரிந்து கொள்வோம். பின் கிளம்பலாம் என்று நாய் முடிவு செய்து திருவிழா முடியும் நாளுக்காக காத்திருந்தது. கோயிலில் நடக்கும் பிரசங்கங்களை தினமும் கேட்டு நாளடைவில் அதற்கு இராமேஸ் வரத்தின் மீதான பக்தி அளவு கடந்து அதிகமானது. சாப்பிடாமல் விரதம் இருந்ததால் வைராக்கியம் அதிகரித்தது. திருவிழா முடிந்ததும் இராமேஸ்வரம் போயே தீருவது என்று உறுதியாக இருந்தது,

கோயிலில் திருவிழா முறைப்படி நிறைவாகி கொடியை இறக்கினார்கள். நாயும் இராமேஸ்வரம் புறப்படத் தயாராகி நடை பயணத்தை தொடங்கியது. முதல் அடி எடுத்த வைத்தது. அப்போது ஒரு வீட்டின் பின் பக்கத்தில் இருந்து பொத் என்று ஒரு சத்தம் கேட்டது. நாய் திரும்பிப் பார்த்தது. எச்சில் இலையில் நிறைய உணவு இருந்தது. அதனைப் பார்த்ததும் பசியுடன் இருந்த நாயின் வாயில் எச்சில் ஊறியது. என்ன மணம் நல்ல கறி விருந்தாக இருக்கிறது என்று சாப்பிட்டது. நல்ல வேளை இந்நேரம் இராமேஸ்வரம் போயிருந்தால் இந்த கறி விருந்து கிடைத்திருக்காது என்று நினைத்து அடுத்த எந்த வீட்டில் இலை விழும் என்று பார்க்க தொடங்கி இராமேஸ்வரத்தை மறந்தது.

இந்த நாயின் மனம் போலத்தான் ஒரு மனிதனின் மனம். இந்த மனம் இருக்கிறதே மகிழ்ச்சியில் அனுபவிக்க எது கிடைத்தாலும் நன்றாக அனுபவித்து ஆட்டம் போடும். மகிழ்ச்சிக்கு எதுவும் கிடைக்காத பொழுது ரொம்ப அடக்கமாகவும் சுவாமி மீது பக்தி பண்ணுவது போலவும் நம்மை போல பக்திமான் யாரும் இல்லை என்னைப் போல் நல்லவன் யாரும் இல்லை என்று எண்ணிக் கொண்டு நல்லவன் போலவே கபட வேஷம் போடும். ஆனால் பணம் சேர்க்க பொருள் சேர்க்க தவறு செய்யும் போதும் நாக்கு சுவை தேடி புலால் உண்ணவும் மது உண்ணவும் என்று வாய்ப்பு கிடைத்ததும் கோயிலாவது சாமியாவது புண்ணியமாவது அதுக்கெல்லாம் இன்னும் வயது இருக்கிறது. இப்பவே சாமியார் மாதிரி உத்திராட்சம் போட்டு திருநீறு பூசி காசி இராமேஸ்வரம்னு போகனுமா? வாழ்க்கையை இந்த வயதில்தான் அனுபவிக்க வேண்டும் என்று ஆட்டம் போட மனம் ஆரம்பித்து விடும். துக்கம் வந்தால் சாமி சாமி என்பதும் துக்கம் தொலைந்ததும் ஆட்டம் போடுவதும் மனிதனின் பிறவித் துன்பத்திற்கு மூல காரணமாகவே இருக்கிறது. இதனை அறியாத மனிதன் நான் எனது என்னுடையது என்று ஆட்டம் போட்டபடியே அறியாமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

சனிபகவான்

கொடுமுடி மகுடேசுவரர் கோயில் என்றும் திருப்பாண்டிக் கொடுமுடி கோயில் என்றும் அழைக்கப்படுகின்ற சிவன் கோயில் ஈரோட்டில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் கொடுமுடியில் உள்ளது. இத்தல சிவன் மீது திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் மூவரும் பாடல்கள் பாடியுள்ளார்கள். இக்கோயிலில் சனிபகவான் காகத்தின் மேல் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்த கோலத்தில் வலது கையில் திரிசூலத்தை ஏந்திய நிலையில் எழுந்தருளி அருள்கிறார்.

குருநாதர் கருத்துக்கள் #54

இக்காலத்தில் காரியங்கள் நல்வழியில் செல்லும் காலங்களில் இறைவனுக்கு நன்றி கூறுவது குறையாக உள்ளது. இருப்பினும் காரியங்கள் நல்வழியில் செல்லா காலங்களில் ஏன் எமக்கு இறைவன் எதுவும் செய்வதில்லை என குறை காண்பது இயல்பானாது என்கின்ற போதிலும் ஆன்மிக பாதையில் வர வேண்டுவோர் அனைத்தும் அவன் செயல் என உறுதியாக எண்ணுதல் வேண்டும். இவ்விதம் இல்லை என்றால் ஆன்மிக பாதையில் நடப்பது கடினமாகும். அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பது உண்மையானால் நடப்பது அனைத்தும் அவன் விருப்பமே. ஏன் இப்பிரபஞ்சமே அவன் விருப்பத்தால் படைத்தான் என்பதே உண்மையாகின்றது. அதிலிருக்கும் ஜீவராசிகளும் அவன் விருப்பத்திற்கே இயங்குகிறது என்பதும் உண்மையானதே. இத்தகைய நிலையில் நமக்கு நடைபெறுகின்ற ஒவ்வொன்றும் அவன் விருப்பம் என்பது மட்டுமல்லாது நம் முன் ஜென்ம வினைகளை தீர்க்கும் வழிகளே என்றென மனதில் உறுதிப்படுத்த வேண்டும். இதனை யாம் மீண்டும் மீண்டும் இங்கு கூறுகிறோம். ஏன் என்றால் ஆன்மிக பாதையில் செல்லுதல் வேண்டுமென பலர் ஆர்வம் கண்டுள்ளனர். இருப்பினும் தியாகம் செய்திடும் நிலையில் இல்லை என்கின்றதே ஓர் பெரும் குறையாகின்றது. இக்குறையை தயவு செய்து நீக்கிடுவீர்களாக. அனைத்தும் அவன் செயல் என வாயால் கூறினால் போதுமானதல்ல நடைமுறையில் செயல்படுத்த வேண்டும், இதனைக் குறையாக கூறவில்லை அறிவுரையாக எடுத்துக் கொள்வீர்களாக. இல்லையென்றால் ஓர் ஆன்மிக தோற்றம் உண்டாகுமே ஒழிய முழுமையான ஆன்மிகமாகாது. இதனை ஆங்கிலத்தில் கூறினால் உறுதியாக உணர்வீர்கள் என்பதற்காக PSEUDO SPIRITUALITY என்றும் கூறுவோம். இதனை தவிர்த்தல் வேண்டும். கற்றது கைமண் அளவாக உள்ள போதிலும் அதனை முழுமையாக கற்றுக் கொண்டு செயல்படுங்கள் என்பதே எமது அறிவுரையாகும். இவ்வாழ்கையில் ஆன்மிகம் முழுமையாக அடைய இயலாது என்கின்ற போதிலும் அதற்கு வருத்தம் வேண்டாம். மீண்டும் மீண்டும் பிறவி உண்டு ஏதோ ஓர் ஜென்மத்தில் பிறவி இல்லா நிலை அடையக்கூடும். இது மனிதனின் விதி என்பதை எடுத்துரைக்கின்றோம்.

சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட 5 வகை குளியல்கள்

  1. வாருணம் – குளம் ஆறு போன்றவற்றில் முங்கிக் குளித்தல் வாருணம் ஆகும். இதில் கழுத்து மற்றும் இடுப்பு வரை குளித்தலுக்கு கௌணம் என்று பெயர்
  2. பஸ்மோத்தூளனம் – விபூதி பூசிக் கொள்வது. விபூதி குளியல் என்று எடுத்துக் கொள்ளலாம். இதற்கு ஆக்நேயம் என்று பெயர். அக்னி சம்பந்தமுடையது என்று பொருள். அக்னியின் வெப்பத்தால் கிடைக்கும் சாம்பலை பூசிக் கொள்வது.
  3. வாயவ்யம் – பசுக்கள் கூட்டமாகச் செல்லும் போது அதன் கால் குளம்பு மண் புனிதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு கோ தூளி என்று பெயர். ஸ்ரீகிருஷ்ணன் இந்தப் பசுக்களின் கால் குளம்பு பட்ட மண்ணை சந்தனப் பொடி தூவினதுபோல தனது உடம்பில் படிந்தபடி இருப்பாராம். இதனால் அவருக்கு கோதளி தூஸரிதன் என்ற பெயர் ஏற்பட்டது. காற்றினால் பறக்கும் மண் தூசி என்பதால் இதன் பெயர் வாயவ்யம் எனப் பெயர்.
  4. திவ்யம் – திவ்யம் என்ற சொல்லுக்கு மேன்மைய்யானது தெய்வீகத் தன்மை கொண்டது என்று பொருள். பகலில் சில நேரங்களில் வெய்யில் அடிக்கும் போதே மழையும் பொழியும். இவ்வாறான மழை நீர் தேவலோகத்திலிருந்து வரும் தீர்த்தத்துக்கு சமம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் குளிப்பது மிகவும் நன்மை பயக்கும் என்பதால் திவ்யக் குளியல் என்று பெயர்.
  5. ப்ராஹ்ம ஸ்நானம் – ப்ரம்ஹம் என்றால் வேதம் மற்றம் வேத மந்திரம் என்று ஒரு பொருள். கலச நீர் வைத்து மந்திரம் சொல்லி யாகம் செய்தபின் அந்த கலசத்தில் உள்ள மந்திர நீரை தெளிப்பார்கள். வேத மந்திரத்தால் புனிதப் படுத்தப்பட்ட தீர்த்த நீரை தெளித்துக் கொள்ளுதலுக்கு ப்ராஹ்ம ஸ்நானம் என்று பெயர்.

குருநாதர் கருத்துக்கள் #53

கேள்வி: நகைச்சுவை தரும் வினா ஒன்றும் ஒருத்தர் வினாவிட்டார். உலகில் நாய் என்பது அவ்வளவிற்கு கேவலமானதா? அதில் ஈஸ்வரன் இல்லையா?

இக்கேள்விக்கு மூல காரணம் ஓர் பழமொழியே. நாயைக் கண்டால் கல்லை காணவில்லை கல்லை கண்டால் நாயை காணவில்லை என்பதே அப்பழமொழியாகும். நாயைக் கண்டவுடன் அடித்தல் வேண்டுமோ இது என்ன எண்ணம். அவ்விதமில்லை இதற்கு விளக்கமாவது ஓர் நல்ல கல்லால் உருவாக்கிய நாய் பொம்மை ஒன்றை குழந்தை கண்டால் அதனை நாயாகவே காணும். கல்லின் தரத்தை குழந்தை காண்பதில்லை. மாறாக சிற்பியோ கல்லின் தரமும் அதன் மெருகும் மட்டும் காண்கின்றான். சிற்பி நாயை காண்பதில்லை இதற்கு ஈடாகவே திருமந்திரத்தில் மரத்தில் மறைந்தது மாமதயானை என்னும் பாடல் உள்ளது. இதன் விளக்கம் இதுவேயன்றி கண்டவுடன் நாயை அடித்தல் வேண்டும் என்பதல்ல.

குருநாதர் கருத்துக்கள் #52

கேள்வி: ஆத்ம ஞானம் நாடும் பொழுது நிராகரிப்பு (எதுவும் வேண்டாம் என்பது) வேண்டுமோ?

எதார்த்த நிலையில் இறைவனை நாடி ஆத்ம நிலை உணர வேண்டும் என எண்ணுவோர் கட்டுப்பாட்டுடன் இருத்தல் வேண்டுமே ஒழிய நிராகரிப்பு அவசியமற்றதாகும். மாற்றாக முழுமையாக துறவம் கண்டோன் நிராகரிப்பு செய்தல் வேண்டும் என்கின்ற விதியும் உண்டு. ஆச்சார்யம் எனும் நிலை கண்டால் அங்கு முழுமையாக நிராகரிப்பு இல்லை என்பதே கருத்தாகின்றது. இதற்கு சான்றாக கோத்திர ரிஷிகள் இருந்தார்கள். இக்காலத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் குறித்தே இவ்வினா எழும்பி உள்ளது. எது எவ்விதம் இருந்த போதிலும் மற்றவர்களை வழி நடத்துவோர் தான் செல்லும் பாதை முதன்மையில் சீராக்குதல் வேண்டும் தாம் அடுத்தவர்க்கு கூறுவதை தாமே பின்பற்ற வேண்டும் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து ஆன்மீக பாதையில் செல்ல விரைவில் ஆத்ம ஞானங்கள் உண்டாகும்.