பிரேமா பாய்

ஸ்ரீரங்கநாதரின் சன்னிதியில் அர்ச்சகராகப் பணியாற்றி வந்தவர் கிருஷ்ண பட்டர். இவரது இல்லத்தில் சில நாட்கள் தங்கியிருந்த புரந்தரதாசர் கிருஷ்ண பட்டரின் மகள் பிரேமாவுக்கு இசையை கற்றுக் கொடுத்தார். இதன் பின்னர் கர்நாடக சங்கீதத்தில் சிறந்து விளங்கிய பிரேமா கோயிலில் ஆழ்வார் பாசுரங்களைப் பாடி வந்தாள். அவள் பாடுவதைக் கேட்கும் அனைவரும் மெய் மறப்பார்கள். இந்த நிலையில் ஏழ்மை நிலையில் இருந்த கிருஷ்ணபட்டர் தனது மகளை தூரத்து உறவுக்காரப் பையன் ஒருவனுக்கு திருமணம் முடித்துக் கொடுத்தார். அவன் நல்லவன் இல்லை என்பதை தாமதமாக உணர்ந்தார் பட்டர். இதனால் அவர் மனம் தவித்தார். பிரேமா மனம் தளராமல் ஸ்ரீகிருஷ்ணரிடம் அளவற்ற பக்தியுடன் ராமாயணம் பாகவதம் ஆகியவற்றைத் தொடர்ந்து படித்து வந்தாள். அவளுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு ராமகிருஷ்ணன் எனப்பெயரிட்டு வளர்த்தாள். இந்த நிலையில் மது போதையில் காவிரி வெள்ளத்தில் சிக்கி இறந்தான் அவன் கணவன். மகளின் நிலை குறித்த கவலையால் மனம் உடைந்து போன கிருஷ்ணபட்டர் இறந்து போனார். கணவனையும் தந்தையையும் இழந்த பிரேமா ஸ்ரீரங்கத்தில் இருக்கப் பிடிக்காமல் குழந்தையுடன் வாரணாசிக்குச் சென்றாள். அங்கு தர்மசத்திரம் ஒன்றில் தொண்டாற்றி வந்தாள்.

காசியில் அனைவரும் அவளை பிரேமா பாய் என்றே அழைத்தனர். அப்போது அவளின் மகன் ராமகிருஷ்ணனுக்கு வயது பத்து. தமிழ் இந்தி ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசுவதில் திறன் பெற்றிருந்தான் அவன். தனது தாயிடம் கர்நாடக சங்கீதமும் கற்று வந்த ராமகிருஷ்ணன் உபன்யாசம் கலாட்சேபம் போன்றவற்றைக் கேட்டு ஸ்ரீகிருஷ்ண பக்தனாகவும் விளங்கினான். ஒருநாள் சத்திரத்துக்கு அடியார்கள் சிலர் வந்தனர். அவர்களை பக்தியுடன் வரவேற்றாள் பிரேமா பாய். இவர்களுக்கு உணவளித்து உபசரித்தால் கங்கைக் கரையில் தினமும் நடக்கும் பாகவத உபன்யாசத்தைக் கேட்க முடியாது. உபன்யாசத்திற்கு சென்றால் அடிவர்களை உபசரிக்க முடியாது. என்ன செய்வது? என்று தவித்தாள். சிறிது நேரம் யோசித்தவள். அடியவர்களுக்கு தாம் உணவளிக்கலாம். பாகவதம் கேட்க மகன் ராமகிருஷ்ணனை அனுப்பி விடலாம். பிறகு அவனிடம் விவரமாய் தாம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தாள். அதன்படி ராமகிருஷ்ணனை பாகவதம் கேட்க அனுப்பினாள்.

உபன்யாசம் முடிந்து வீடு திரும்பிய ராமகிருஷ்ணனிடம் உபன்யாசத்தில் இன்று பவுராணிகர் என்ன சொன்னார்? என்று ஆவலுடன் கேட்டாள். அம்மா கிருஷ்ண பரமாத்மாவின் பிறப்பு வளர்ப்பு லீலைகள் ஆகியவற்றைப் பற்றிக் கூறும் தசம ஸ்கந்தம் பற்றி விளக்கினார். குழந்தை கண்ணன் புழுதியில் விளையாடியது வெண்ணெயைத் திருடி உண்டது யசோதா துரத்தியும் பிடிபடாமல் ஓடியது ஆகியவற்றை விவரித்தார். கோலைக் கையிலெடுத்து அடிக்கப் போவதாய் யசோதா பயமுறுத்துகிறாள். குழந்தைக் கண்ணன் அழத் தொடங்குகிறான். ஏதேனும் ஒரு வகையில் கண்ணனைத் தண்டிக்க எண்ணி அவனை உரலோடு பிணைத்துக் கட்டுகிறாள் யசோதா. ஆனால் குறும்புக்காரக் கண்ணனோ கட்டிய உரலையும் சேர்த்து இழுத்தபடி வீட்டின் பின்புறம் சென்று ரெட்டையாக நின்ற மருத மரங்களுக்கு இடையே புகுந்தான் என்று நிறுத்திவிட்டு உபன்யாசத்தில் இன்று இதைத்தான் சொன்னார் என்றான். இதைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்ட பிரேமாபாய் மெய் மறந்தாள். தான் கண்ணனின் காலத்தில் இருப்பதாகவே எண்ணிக் கொண்டாள். கண்ணா உன்னையா உரலில் கட்டிப் போட்டார்கள்? கயிறு இறுக்கி உன் வயிறு வலிக்குமே நீ மர இடுக்குகளில் நுழைந்து செல்லும் போது ஏதாவது பூச்சிகள் உன்னைக் கடித்தால் என்னாவது? என்னால் இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. இப்போதே கயிறை அவிழ்த்து விடுகிறேன் என்றவாறு கங்கையை நோக்கி ஓடினாள்.

அம்மா அம்மா என்று கூவியபடி சிறுவன் ராமகிருஷ்ணனும் அவளது பக்தியைக் கண்டு வியந்த அடியவர்களும் அவளைப் பின்தொடர்ந்தனர். பிரேமா பாய் கங்கை நதியில் குதித்தாள். அவள் விழுந்த இடத்தில் இருந்து ஓர் ஒளிப் பிழம்பு விண்ணை நோக்கிச் சென்றது. ஜோதி வடிவாகச் செல்லும் பிரேமா பாயை அனைவரும் வணங்கினர். தந்தையைக் காவிரியிலும் தாயை கங்கையிலும் இழந்த ராமகிருஷ்ணன் தான் பிறந்த பூமியான ஸ்ரீரங்கத்துக்கு வந்தான். அங்கு அரங்கன் சன்னிதியில் கிருஷ்ண சைதன்ய மகாபிரபு பக்தர்களுடன் ஆடிப்பாடி ஆனந்த நிலையில் இருப்பதைக் கண்டு பரவசமுற்றான். நாடெங்கும் போய் பக்தியைப் பரப்பிய மகானான சைதன்ய மகாபிரபுவுடன் இணைந்து அவரைப் பின்தொடர்ந்தான். மொகாலய படையெடுப்பின் போது பெர்ஷியா நாட்டுக்குச் சென்று மறைந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபோது பெர்ஷியன் சங்கீதத்தைக் கற்றுத் தேறிய ராமகிருஷ்ணன் திரும்பி வந்ததும் குருவின் ஆணைப்படி பிருந்தாவனத்தை அடைந்து ஸ்ரீகிருஷ்ண நாம சங்கீர்த்தனம் பாகவத சேவை என்று தனது வாழ்நாளைக் கழித்தான். இந்த ராமகிருஷ்ணனே பிற்காலத்தில் தீட்சை பெற்று ஸ்வாமி ஹரிதாஸ் என்ற பெயரில் புகழ்பெற்றார். இவர் உருவாக்கியதே ஹிந்துஸ்தானி சங்கீதம். அக்பர் சபையில் ஆஸ்தான வித்வானாகத் திகழ்ந்த தான்சேன் இவரிடம் தான் சங்கீதம் பயின்றார்.

குருநாதர் கருத்துக்கள் #51

கேள்வி: கொடுத்த வாக்கு காப்பாற்ற இயலாதவர் வாக்கானது நீரில் எழுதியது போல் என்பார்கள் இதன் பொருள் என்ன? இதற்கு உள் அர்த்தம் உண்டா?

பொது அறிவின் வழியில் இதை சிந்திக்க நீரில் எழுதியது அவ்வடிவத்தில் நிலைப்பதில்லை என்றும் உடனடியாக மறைந்து விடுவதாக நாம் அறிகின்றோம். அத்தகைய நிலை தான் பொய்யரின் வாக்கும் இந்த வினாவின் விளக்கம் எளிதாகின்ற போதிலும் மறு விளக்கம் ஒன்று அளிக்க உள்ளோம். இத்தகைய நீர் என்கின்ற போதிலும் திருவருள் என்பது அதனுடன் சேர திருநீரில் எழுதியது அனைத்தும் நற்பலனைத் தரும். உலகத்தில் லட்சக்கணக்கான பூஜ்யங்கள் இருந்த போதிலும் இறையருள் என்கின்ற ஒன்று அதனுடன் சேர்ந்திடவே எண்ணிக்கை உண்டாகின்றது. இதனை மனதில் நிறுத்தி சிந்தித்து செயல்படுவதும் நன்றே ஏனெனில் திருவருள் இன்றி எதுவும் இல்லை திருவருள் இன்றி அனைத்தும் சூன்யமே என்ன வடிவங்களில் இறைவனை நீங்கள் வணங்கிய போதிலும் முடிவானது அனைத்தும் பிரம்மமே என்பதாகின்றது.

பூதப்ருத் நம

திருவரங்கத்தில் ஓர் ஏழை வைணவர் வாழ்ந்து வந்தார். அவருக்குப் பதினாறு குழந்தைகள். திருவரங்கநாதன் கோயிலில் பிரசாதம் வழங்கப்படும் போதெல்லாம் அதைப் பெற்றுக்கொள்ள முதல் ஆளாக வந்து நின்றுவிடுவார். தான் ஒருவனுக்கு மட்டுமின்றித் தன் குடும்பம் முழுமைக்கும் பிரசாதம் வேண்டுமெனக் கேட்பார். அரங்கனுக்கு அன்றாடம் தொண்டுசெய்யும் அடியார்களெல்லாம் அரங்கனின் பிரசாதத்தில் ஒரு துளி கிட்டுவதே பேரருள் என எண்ணிப் பெற்றுச் செல்ல இவர் எந்தத் தொண்டும் செய்யாமல் பிரசாதம் மட்டும் நிறைய வேண்டுமெனக் கேட்பதைக் கோயில் பணியாளர்கள் விரும்பவில்லை. உரத்தகுரலில் அர்ச்சகர்கள் இவரை விரட்டுவதால் தினமும் கோயிலில் கூச்சல் குழப்பம் ஏற்ப்படும். ஒருநாள் பிரசாதம் பெற்றுக்கொள்ளத் தன் பதினாறு மெலிந்த குழந்தைகளுடன் வரிசையில் வந்து நின்று விட்டார் அந்த வைணவர். கோயில் பணியாளர்கள் அந்த வைணவரை விரட்டிக் கொண்டிருந்தார்கள். அச்சமயம் அங்கே வந்த ராமாநுஜர் அக்காட்சியைக் கண்டார். அந்த வைணவரை அழைத்து நீர் கோயிலில் ஏதாவது தொண்டு செய்துவிட்டுப் பிரசாதம் பெற்றுச் சென்றால் யாரும் உம்மைக் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால் நீர் பிரசாதம் பெற வேண்டும் என்பதற்காகவே இரவு பகலாக இங்கே கோயிலில் வந்து நின்றிருப்பதால் தானே இத்தகைய கூச்சல் குழப்பம் ஏற்படுகிறது? என்றார் ராமானுஜர். அதற்கு வைணவர் அடியேன் வேதம் கற்கவில்லை திவ்யப் பிரபந்தங்களும் கற்கவில்லை. எனவே பாராயண கோஷ்டியில் இணைய இயலாது. விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் தான் ஓரிரு வரிகள் தெரியும். இப்படிப்பட்ட நான் என் பதினாறு குழந்தைகளுக்கு உணவளிக்க வேறென்ன வழி? என்று ராமானுஜரிடம் கேட்டார்.

ராமானுஜர் வைணவரைப் பார்த்து உமக்குத் தான் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் தெரியும் என்று சொல்கிறீர்களே அதைச் சொல்லுங்கள் கேட்கிறேன் என்றார். உடனே வைணவர் விச்வம் விஷ்ணுர் வஷட்காரோ என்று சொல்லத் தொடங்கி பூதப்ருத் என்ற ஆறாவது திருநாமத்தைத் தாண்டி அவருக்குச் சொல்லத் தெரியவில்லை. மீண்டும் விச்வம் விஷ்ணுர் வஷட்காரோ எனத் தொடங்கி பூதப்ருத் என்ற திருநாமத்துடன் நிறுத்தி அடியேனை மன்னிக்க வேண்டும் என்று ராமானுஜரின் திருவடிகளில் விழுந்தார். அந்த ஏழையின் மேல் கருணைகொண்ட ராமானுஜர் பூதப்ருத் நம என்ற ஆறாவது திருநாமத்தை அறிந்திருக்கிறீர்கள் அல்லவா? அதுவே போதும். பூதப்ருதே நம என்று தொடர்ந்து ஜபம் செய்து வாருங்கள். உணவைத் தேடி நீங்கள் வரவேண்டாம். உணவு உங்களைத் தேடிவரும் என்றார். அடுத்தநாள் முதல் அரங்கனின் கோயிலில் அந்த ஏழை வைணவரைக் காணவில்லை. அவர் எங்கு சென்றார் எனக் கோயில் பணியாளர்களிடம் ராமானுஜர் விசாரித்த போது வேறு எங்காவது அன்னதானம் வழங்கியிருப்பார்கள். அங்கு சென்றிருப்பார் என கூறினார்கள். அன்று முதல் கோயிலில் ஒரு விசித்திரமான திருட்டு நிகழத் தொடங்கியது. அரங்கனுக்குச் சமர்ப்பிக்கப்படும் பிரசாதத்தில் ஒரு பகுதி மட்டும் தினமும் காணாமல் போக ஆரம்பித்தது. இத்தனைப் பணியாளர்கள் இருக்கையில் யாருக்கும் தெரியாமல் உணவைத் திருடிச் செல்லும் அந்த மாயத்திருடன் யார் என யாருக்கும் புரியவில்லை. இச்செய்தி ராமானுஜருக்கு தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த ராமானுஜர் எவ்வளவு நாட்களாக இது நடக்கிறது? என கேட்டார். நீங்கள் அந்த ஏழையைக் கோயிலுக்கு வரவேண்டாம் என்று சொன்ன நாள் தொடங்கி இது நடக்கிறது. வைணவரையும் அன்று முதல் காணவில்லை. எனவே அந்த வைணவருக்கும் இதற்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும் என்றார்கள் கோயில் பணியாளர்கள். அந்த வைணவர் இப்போது எங்கிருக்கிறார் எனத் தேடிக் கண்டறியுங்கள் என உத்தரவிட்டார் ராமாநுஜர். கோயில் பணியாளர்களும் அவரைத் தேடத் தொடங்கினார்கள்.

சிலநாட்கள் கழித்துக் கொள்ளிடத்தின் வடக்குக் கரைக்கு ராமானுஜர் சென்ற போது அந்த வைணவரும் அவரது பதினாறு குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்துடன் அங்கே ஒரு மரத்தடியில் குடியிருப்பதைக் கண்டார். ராமானுஜரைக் கண்டதும் அந்த வைணவர் ஓடி வந்து அவர் திருவடிகளை வணங்கி சுவாமி அந்தப் பையன் தினமும் இருமுறை என்னைத் தேடிவந்துப் பிரசாதம் வழங்கிக் கொண்டிருக்கிறான். நானும் பூதப்ருதே நம என தினமும் ஜபம் செய்து வருகிறேன் என்றார். எந்தப் பையன்? என்று வியப்புடன் கேட்டார் ராமானுஜர். அவன் பெயர் அழகிய மணவாள ராமானுஜதாசன் என்று சொன்னான் என்றார் அந்த ஏழை. கோயிலுக்கு அருகில் இருந்து இறைவனுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று இவ்வளவு தூரம் தள்ளி வந்து இந்த மரத்தடியில் தங்கினேன். ஆனால் உங்களது தெய்வீகப் பார்வை என் இருப்பிடத்தைக் கண்டறிந்து விட்டது. தினமும் பிரசாதம் என்னைத் தேடி தினமும் வருகிறது என்றார். அழகிய மணவாளன் எனப் பெயர் பெற்ற அரங்கன் தான் சிறுவன் வடிவில் சென்று பிரசாதம் வழங்கியுள்ளான் என உணர்ந்து கொண்டார் ராமானுஜர். நான் உங்களுக்கு உணவு கொடுத்து விடவில்லை. பூதப்ருத் என்ற திருநாமத்துக்கு எல்லா உயிர்களுக்கும் உணவளிப்பவன் என்று பொருள். பூதப்ருத் நம என ஜபம் செய்த உமக்கு பூதப்ருத் ஆன அரங்கன் தானே வந்து சத்துள்ள உணவளித்து மெலிந்திருந்த உங்களை இன்று நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வைத்திருக்கிறான் என்று அந்த ஏழையிடம் சொல்லி அரங்கனின் லீலையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் சிந்தினார் ராமானுஜர்.

குருநாதர் கருத்துக்கள் #50

உறுதியாக எதுவும் நிலைப்பதில்லை என்பதை அனைவரும் அறிதல் வேண்டும். கர்ப்பவாசம் கண்ட அனைத்திற்கும் அழிவுண்டு என்பதையும் உறுதியாக மனதில் வைக்க வேண்டும். இதற்கு விதிவிலக்கு இல்லை என்றும் வந்தவர் செல்லுதல் வேண்டும் மத்தியில் ரோகங்கள் நோய்கள் என்பதெல்லாம் காணுதல் வேண்டும் என்பது இறைவனின் விதி மட்டுமல்லாது அவனின் லீலையும் ஆகும். ஏனெனில் கடினங்கள் கொடுத்து பிறவி அறுக்கும் சூட்சுமத்தை காட்டுகின்றான் என்பதை உணர வேண்டும். இவ்விதமிருக்க சென்றவர்களுக்கு நல்ல பிறவி கிடைக்க வேண்டும் என இறைவனை வேண்டுவீர்களாக.

குருநாதர் கருத்துக்கள் #49

கேள்வி: நீலன் (சனிஸ்வர பகவான்) அவன் கொடியவன் என பலரும் கூற நீலன் கொடிய காரியங்களை மட்டும் செய்கின்றவன் அவனை நேரக நின்று வணங்கக் கூடாது சாய்ந்து வணங்க வேண்டும் என்றெல்லாம் கூறுகின்றனர் இதன் நிலை என்ன விளக்க வேண்டும்?

நீலன் (சனிஸ்வர பகவான்) தீயவன் அல்ல கெட்டவன் அல்ல. கிரகங்களில் அவன் ஞானகாரகன் என பட்டம் பெற்றவனும் ஈஸ்வரன் என கூட்டு பெயரும் கிரகங்களில் அவனுக்கு மட்டுமே. நீங்கள் செய்த பூர்வ ஜென்மதீய கர்மங்களின் பாக்கியை நீக்கவே இவன் ஜாதகத்தில் வருகை தருகின்றான். இது சிந்தித்தோமானால் நலம் தருபவர் என்று புரியும். தீயதல்ல என்று அறிதல் வேண்டும். மேலும் இதனை விளக்கிட வீணாக அவன் பெயரை பலர் அழைப்பதும் கண்டோம். மற்றவர்களை திட்டும் போது அவன் பெயரில் ஈஸ்வரன் நீக்கி விட்டு முன்பாகம் மட்டும் கூறுகின்றனர் இது பெரும் தவறாகின்றது. ஏனெனில் அவன் நாமத்தை கூறியவுடன் அவன் பார்வை உங்கள் மீது திரும்புகின்றது. கருணை வடிவமான அவன் மேலும் சில கடினங்களை கொடுத்து கர்மத்தை தீர்க்கின்றான். இவ்விதமிருக்க தேவையற்ற காலங்களில் மற்றவர்களை திட்டுவதற்கும் ஈஸ்வரனின் நாமத்தை கூறாதீர்கள்.

குருநாதர் கருத்துக்கள் #48

கேள்வி: சமீப காலங்களில் கொடிய நோய்களினால் பலர் மாண்டு (இறந்து) விடுகின்றனர். இதில் குறிப்பாக குழந்தைகளும் சிசுக்களும் எப்பாவமும் அறியாதவர்களும் மாண்டு விடுகின்றனர்களே இது ஏன்? இவ்விதம் நடந்திட இறைவன் கருணையற்றவனா?

கேள்வி கேட்கின்றவர் வெறும் மாயையின் பிடியினால் இப்படி கேட்கின்றார். பிறப்பு என்றால் இறப்பு உண்டு. பெற்றவர்கள் அவர்கள் செய்த கர்ம வினைகளை அனுபவித்துக் கொள்கின்றனர். ஏதோ ஜென்மத்தில் மற்றவரின் குழந்தைகளை அபகரித்தோ பிரித்தோ வேதனையளித்த காரணத்தால் இன்று அக்குழந்தைகளின் பெற்றோர் பட்ட வேதனைகளை அனுபவிக்கின்றனர். யாம் கூறுவது கொடுமையாகவே உங்களுக்குத் தோன்றும் இருப்பினும் உண்மை நிலை இதுவே. எந்த அளவிற்கு இந்த பூமியும் தாங்கும் என்பதை சிறிது சிந்தித்துக் கொள்ளுதல் வேண்டும். மாயைப் பற்றி எமக்கு யாதும் தெரியாது யாம் ஒரு சராசரி மனிதன் என்றெல்லாம் கூறிவிட்டால் உண்மையான நிலையை நீ உணரவில்லை என்பதே பொருளாகின்றது. விதிவிலக்கு இங்கு இல்லை. நீ பார்ப்பது ஆத்மாவை அல்ல வெறும் உடலை என்று வருத்தத்துடன் யாம் கூறுகின்றோம். இருப்பினும் இது துக்கம் தரும் நிலை என யாம் எடுத்துரைப்போம். இதிலிருந்து மீள என்ன வழி என்பதை நாம் சிந்தித்தல் வேண்டும். மற்றவை அனைத்து வீண் வாக்கு வாதத்தில்தான் செல்லும்.

குருநாதர் கருத்துக்கள் #47

கேள்வி: கடைத் தேங்காய் வழிப்பிள்ளையாருக்கு என்ற வாக்கியத்திற்கு முழு அர்த்தம் என்ன?

மற்றவர்கள் பொருட்களை அபகரித்து தெய்வத்திற்கு அளிப்பது சிறந்ததல்ல என்பதே கருத்தாகின்றது. தன் உழைப்பில் சேமித்ததை தெய்வத்திற்கு அளிப்பதே சிறப்பாகின்றது. பல தவறுகள் செய்த பின் இறைவன் காப்பான் என எண்ணம் பலருக்கு உண்டு. கலியுகத்தில் இவ்விதம் ஓர் தோற்றமும் காணக்கூடும். இதைக் கண்டு மற்றவர்களும் தீயோருக்குரிய காலம் அவர்களே வாழ்கின்றனர் என கூறுகின்றனர். இது அவ்விதம் இல்லை நவீன கால அசையும் படங்களில் (சினிமா) நீங்களும் வசனங்களை கேட்டிருப்பீர்கள் தீயோரை ஆண்டவன் கைவிடுவான் என்பதும் உறுதியாக நல்லோரை சோதிப்பான் கைவிடமாட்டான் என்பதே இதன் பொருளாகின்றது. இவ்விதமிருக்க தீமை வழியில் சென்றால் லாபங்கள் உண்டாகும் என இளைஞர்கள் எண்ணுதல் தவறாகும் இவ்விதம் சென்றிட நஷ்டங்களே நேரிடும்.

பஞ்ச பைரவர்கள்

கும்பகோணத்தை அடுத்துள்ள வலங்கைமான் அருகில் உள்ளது ஆவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில். இறைவன் பசுபதீஸ்வரர். இறைவி பங்கஜவல்லி. வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற பசு இறைவனை பூஜித்து சாப விமோஷனம் பெற்றதால் இத் தலம் ஆவூர் ஆனது. இந்த ஆலயத்தில் ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள். இவர்கள் அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், கால பைரவர் மற்றும் உன்மத்த பைரவர் என்று அழைக்கப்படுகிறார்கள். கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் இக்கோயிலும் ஒன்று.

குருநாதர் கருத்துக்கள் #46

கேள்வி: முக்தி பெறுதல் வேண்டும் என்கின்ற எண்ணம் எவ்வகைகள் உண்டு?

மூன்று விதங்கள் உண்டு ஒன்று முதலில் முக்தி அடைதல் வேண்டும் என்கின்ற எண்ணம் மட்டும் நிலைக்கும். அதற்கான முயற்சி இருக்காது அது சாதாரண நிலை. இரண்டாவது முக்தி காணுதல் வேண்டும் என்றும் அதற்கான சிறு சிறு பயிற்சிகள் செய்வதும் இதுவும் ஓர் சாதாரண நிலையே. மூன்றாவது முக்தி அடைதல் வேண்டும் என்று அக்னி போல் எண்ணமும் செயல்பாடும் இது உறுதியாக முக்தி அளிக்கும். இதற்கும் மேலாக இதனை விளக்க இயலாது. ஏனெனில் முக்தி அடைவதும் பிறவியிலிருந்து விடுதலை பெறுவதும் அவரவர் முயற்சியால் வருவது. இத்தகைய நிலையில் எவ்வளவிற்கு தீவிரம் கொள்கின்றோமோ அவ்வளவிற்கு வெற்றியும் உண்டு என அறிவோம் உழைப்போம்.

பெரிய பாவம் எது? ஏன்?

ஒரு ஞானியிடம் இரண்டு பேர் வந்து தங்களின் பிறவித் துன்பத்திலிருந்து விடுதலை அடைய வழி காட்டுமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டார்கள். ஒருவன் ஞானியிடம் சுவாமி நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன். என் மனம் அதை நினைத்து தினமும் துடிக்கிறது. நான் செய்த பாவத்துக்கு பரிகாரம் உண்டா? இந்த பிறவித் துன்பத்திலிருந்து விடுபட ஏதேனும் வழிகள் இருக்கிறதா? என்று வருத்தத்தோடு கேட்டான்.

அடுத்தவன் ஞானியிடம் நான் இவர் அளவுக்குப் பெரிய பாவம் எதுவும் செய்யவில்லை. சின்னச் சின்னப் பொய்கள் சிறு ஏமாற்றுக்கள் இப்படி நிறைய செய்துள்ளேன். என்னை தண்டிக்கும் அளவுக்கு இவை ஒன்றும் பெரிய பாவங்கள் இல்லை. ஆகவே எனக்கு விரைவில் பிறவித் துன்பத்தில் இருந்து விடுபட வழி சொல்லுங்கள் என்று தான் தவறு செய்து விட்டோம் என்ற வருத்தம் கூட இல்லாமல் கேட்டான்.

ஞானி முதல் கேள்வி கேட்டவனிடம் நீ போய் பெரிய பாறை ஒன்றைத் தூக்கி வா என்றார். இரண்டாவது கேள்வி கேட்டவனிம் நீ போய் ஒரு கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கி வா என்றார். இருவரும் அவ்வாறே செய்தனர். முதல் நபர் ஒரு பெரிய பாறையைத் தூக்கி வந்தான். அடுத்தவன் கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கிக் கொண்டு வந்தான். இப்போது ஞானி இருவரிடமும் தாங்கள் இந்த கற்களை எங்கிருந்து கொண்டு வந்தீர்களோ சரியாக அந்த இடத்திலேயே திரும்பப் போட்டு விட்டு வாருங்கள் என்றார். முதல் நபர் பாறையை எடுத்துக் கொண்டுபோய் எடுத்த இடத்தில் வைத்து விட்டுத் திரும்பினான். இரண்டாமவன் தயக்கத்துடன் இவ்வளவு கற்களை நான் எப்படி சரியாக அவை இருந்த இடத்திலேயே வைக்க முடியும்? என்று கேட்டான்.

ஞானி சொன்னார். இந்த காரியம் முடியாதல்லவா? அவன் பெரிய தவறு செய்தான். அதற்காக வருந்தி அழுது மன்னிப்புக் கேட்டு அவன் மாற்றுப் பரிகாரம் கேட்டு வந்திருக்கிறான். கல்லை எடுத்த இடத்திலேயே போட்டு விட்டு வந்தது போல அதற்கான வழியை செய்து விரைவில் பிறவித் துன்பத்தில் இருந்து விடுபடுவான். நீ சின்னச் சின்னதாக ஆயிரம் தவறுகள் செய்தும் அவை பாவம் என்று கூட உணராதவன். யாரெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள் என்பது கூட உனக்கு நினைவிருக்காது. செய்த தவறை உணர்ந்து வருத்தப்பட்டு அந்த தவறுக்கும் மேலான நன்மைகளை செய்தால் மட்டுமே உனக்கு நன்மை நடக்கும். அதுவரை உனக்கு பிறவித் துன்பத்தில் இருந்து விடுதலை என்பது மிகவும் கடினம் என்றார்.