ராமாயணம் பால காண்டம் பகுதி -17

ரீசிக முனிவரிடம் இரண்டு பிரசாதங்களையும் வாங்கிக்கொண்டு சத்யவதி தன் தாயை சந்திக்க சென்றாள். நடந்த அனைத்தையும் தன் தாயிடம் தெரிவித்தாள். சில நொடிகள் யோசித்த சத்யவதியின் தாய் நான் ஒன்று சொன்னால் நீ வருத்தப்படக்கூடாது சத்யவதி பொதுவாக எல்லா தந்தைகளும் தன் மகன் தான் சிறந்தவனாக இருக்கவேண்டும் என்று எண்ணுவார்கள். ஆகையால் நீ சாப்பிட வேண்டும் என்று உன் கணவர் கூறிய அந்த பிரசாதத்திற்கு தான் சக்தி அதிகமாக இருக்கும். ஆகையால் அதை நீ எனக்கு கொடுத்துவிட்டு எனக்காக கொடுத்ததை நீ சாப்பிடு. மரத்தையும் அதற்கேற்றாற் போல நாம் மாற்றி சுற்றிக்கொள்வோம். எனக்கு பிறக்கப்போகும் உன்னுடைய சகோதரனுக்காகவும் இந்நாட்டின் எதிர்கால அரசனுக்காகவும் இதை நீ செய்வாயா என்றார். சத்யவதியும் சிறிது நேரம் யோசித்துவிட்டு சரி என்று கூறிவிட்டாள். அதன் பிறகு பிரசாதத்தை இருவரும் மாற்றி சாப்பிட்டு விட்டு மரத்தையும் மாற்றி சுற்றினர்.

சில நாட்களில் சத்யவதியும் அவள் தாயும் கர்ப்பம் அடைந்தனர். சத்யவதியின் உருவ மாற்றத்தை கவனித்த முனிவர் பிரசாதம் உண்பதில் ஏதோ குளறுபடி நடந்துள்ளது என்பதை தன் ஞான திருஷ்டியால் அறிந்தார். பெரும் தவறு செய்துவிட்டாயே சத்தியவதி நான் ஒரு அந்தணன் என்பதால் உனக்கு பிறகும் குழந்தை அந்தணனாக இருக்கவேண்டும் என்றும் உன் தந்தை சத்ரியன் என்பதால் உன் தாய்க்கு பிறகும் குழந்தை சத்ரியனாக இருக்கவேண்டும் என்று நான் பிரசாதம் அளித்தேன். இப்போது நீங்கள் இருவரும் பிரசாதத்தை மாற்றி சாப்பிட்டதால் உன் தாய்க்கு பிறக்கும் குழந்தை அந்தணனுக்கு உரிய குணத்தோடு எப்போதும் தவம் செய்துகொண்டிருக்க விரும்புவான். உனக்கு பிறக்கப்போகும் குழந்தையோ போர் குணத்தோடும் அனைவரையும் கொன்று குவிக்கும் வலிமையோடும் பிறக்கப்போகிறான் என்றார். இதை கேட்டு அதிர்ந்த சத்யவதி நான் செய்த தவறை மன்னித்து இதை எப்படியாவது மாற்றுங்கள் சுவாமி என கதறி அழுதாள்.

மனம் மாறிய முனிவர் ஒரே ஒரு வழி இருக்கிறது. உனக்கு பிறக்கும் குழந்தை அந்தணனாக பிறப்பான். ஆனால் உன் தாய்க்கு பிறக்கும் குழந்தை சத்ரியனாக பிறந்தாலும் சில காலத்திற்கு பிறகு அவன் அந்தணன் போல மாறிவிடுவான் என்று கூறி அதற்கான வரத்தையும் அளித்தார். அதன்படி சத்யவதிக்கு பிறந்த குழந்தையே பிற்காலத்தில் ஜமதக்னி முனிவர் என்றழைக்கப்பட்டார். அவளின் தாய்க்கு பிறந்த குழந்தை தான் அரசனாக இருந்து பின் முனிவராக மாறிய விசுவாமித்திரர் ஆவார். அவருக்கு கௌசிகன் என்று பெயர் வைத்தார்கள். தனது தந்தைக்கு பிறகு அரசனான கௌசிகன் ஒரு நாள் காட்டிற்கு தன் படை பலத்துடன் வேட்டையாட சென்றார். காட்டில் இருந்த வசிஷ்டரின் ஆசிரமத்தை கண்ட கௌசிகன் அங்கு சென்றார். வந்த அனைவரையும் வரவேற்ற வசிஷ்டர் அனைவருக்கும் உணவு கொடுத்து உபசரித்தார். தனிமையில் காட்டில் இருக்கும் ஒரு முனிவரால் உடனடியாக இவ்வளவு பெரிய படைக்கு எப்படி உணவு இவரால் கொடுக்க முடிந்தது என்று கௌசிகன் ஆச்சரிப்பட்டு தெரிந்து கொள்ள முயற்சித்தான். வசிஷ்டரிடம் இருந்த கேட்டதை கொடுக்கும் நந்தினி என்னும் காமதேனு பசுவால் வசிஷ்டர் அனைவருக்கும் விருந்தளித்தார் என்பதை தெரிந்து கொண்டு வசிஷ்டரிடம் இருந்து நந்தினி காமதேனு பசுவை எப்படியாவது கொண்டு சென்றுவிடவேண்டும் என்று எண்ணினார்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -16

குசநாபர் காதி என்றொரு அரசன் இருந்தான். அவனுக்கு ஒரு அழகிய மகள் இருந்தாள் அவள் பெயர் சத்யவதி. அவளை நல்ல வசதியான ஒரு இடத்தில் மணம் முடித்து தரவேண்டும் என்று விரும்பினான் காதி. அதற்கான வேலைகளிலும் அவன் தீவிரமாக இறங்கினான். அந்த சமயம் அரசனை தேடி அரண்மனைக்கு வந்த ரிசீகர் என்ற முனிவர் சத்யவதியின் நர்குணங்களை கண்டு வியந்தார். அவளை மனம் முடிக்கவேண்டும் என்று விரும்பினார். தன்னுடைய ஆசையை அவர் அரசனிடம் தெரிவித்தார். இதை கேட்ட அரசனுக்கு என்னசொல்வதென்றே தெரியவில்லை. முடியாது என்று சொன்னால் முனிவரின் சாபத்திற்கு ஆளாகிவிடுவோம் என்று எண்ணினான். முனிவரை எப்படியாது தட்டி கழிக்க வேண்டும் என்று முனிவரிடம் எனக்கு உங்களிடம் சிறிய வேண்டுகோள் உள்ளது. அதை நீங்கள் நிறைவேற்றினால் என் மகளை உங்களுக்கு மணம் முடித்து தருகிறேன் என்றான் அரசன். அது என்ன வேண்டுகோள் என்றார் முனிவர். ஒரு காது கருப்பாகவும் உடல் முழுவதும் வெள்ளையாகவும் உள்ள 1000 குதிரைகளை நீங்கள் எனக்கு தரவேண்டும் என்றான். அரசனின் வேண்டுகோளை ஏற்று குதிரைகளோடு வருவதாகக் கூறி சென்றார் முனிவர். இது போன்ற 1000 குதிரைகளை முனிவர் எங்கு தேடி கண்டுபிடிப்பார். அவரால் அதை தரவே முடியாது. ஆகையால் அவர் சத்தியவதியை மணக்கும் விருப்பத்தை விட்டுவிடுவார் என்று நினைத்தான் அரசன்.

அரசனின் வேண்டுகோளை பூர்த்திசெய்ய முனிவர் வருணபகவானிடம் வேண்டினார். வருணபகவானும் அவர் கேட்டதுபோல 1000 குதிரைகளை தந்தருளினார். அதை அரசனிடம் ஒப்படைத்தார் முனிவர். இப்போது அரசனுக்கு வேறு வழி இல்லை. ஆகையால் தன் மகளை ரிசீகர் முனிவருக்கு மனம் முடித்து கொடுத்தார். ரிசீகரும் சத்யவதியும் நல்ல ஒரு தம்பதிகளாகவே வாழ்ந்துவந்தனர். ஒருநாள் ரிசீகர் சத்யவதியை அழைத்து நான் உனக்கு ஒரு வரம் தர ஆசைப்படுகிறேன் என்ன வேண்டுமோ கேள் என்றார். நான் எனக்கான வரத்தை இன்னொரு நாள் கேட்கிறேன் என்றாள் சத்யவதி. ரிசீகரும் அதற்கு சம்மதித்தார். ஒருநாள் சத்யவதி தன் தாய் வீட்டிற்கு சென்றாள். அங்கு தாயும் மகளும் அனைத்து விஷயங்களை பற்றியும் பேசினர். அப்போது சத்யவதி தன் கணவர் தனக்களித்த வரம் குறித்து தன் தாயிடம் தெரிவித்த அவள் உங்களுக்கு ஏதாவது ஆசை இருந்தால் கூறுங்கள் அம்மா நான் அதை என் கணவரிடம் கேட்கிறேன் என்றாள் சத்யவதி. உடனே அந்த தாய் இந்த நாட்டை ஆள்வதற்கு தனக்கொரு ஆண் மகன் பிறந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினாள். சில மணி நேரங்களுக்கு பிறகு சத்யவதி தன் தாய் வீட்டில் இருந்து புறப்பட்டு தன் இல்லத்தை அடைந்தாள்.

ரிசீக முனிவரிடம் தனக்கான வரம் குறித்த பேச்சை தொடங்கினாள் சத்யவதி. முனிவரும் என்ன வரம் வேண்டும் கேள் என்றார். சுவாமி எனக்கொரு மகன் வேண்டும் என் தாய்க்கும் ஒரு மகன் வேண்டும் என்றாள் சத்யவதி. அப்படியே ஆகட்டும் என்று கூறிய முனிவர் சில மணி நேரம் தியானத்தில் அமர்ந்தார். பின் இரு பிரசாதங்களை அவர் சத்யவதியிடம் கொடுத்தார். ஒரு பிரசாதத்தை குறிப்பிட்டு இதை நீ உண்ணவேண்டும் மற்றொன்றை உன் அன்னை உண்ணவேண்டும். அடுத்த நாள் இருவரும் குளித்து விட்டு நீ அத்தி மரத்தையும் உன் தாய் அரச மரத்தையும் சுற்ற வேண்டும் என்றார்.

புத்தர்

கடுங்குளிரில் வந்த வயது முதிர்ந்த ஒருவருக்கு புத்த விஹாரத்தில் தங்க இடம் கொடுக்கப்பட்டது. அன்று இரவு கடுங்குளிர் முதியவரால் குளிரைத் தாங்க முடியவில்லை. மரத்தால் செய்யப்பட ஒரு புத்தர் சிலையை எடுத்து அதை எரித்து குளிர் காய ஆரம்பித்தார். மரம் எரியும் சப்தம் கேட்ட விஹாரத்தின் குரு ஓடிவந்து புத்தர் சிலை எரிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். முதியவரிடம் நீங்கள் என்ன செய்கிறீர்கள் உங்களுக்கு பைத்தியமா தெய்வத்தையே எரித்து விட்டீர்களே என்று கோபத்தில் கதறினார். உடனே முதியவர் ஒரு குச்சியைக் கொண்டு சாம்பலைக் கிளறினார். அவர் என்ன கிளருகின்றீர்கள் என்று குரு கேட்டதற்கு முதியவர் புத்தரை எரித்து விட்டதாக சொன்னீர்களே அவரின் எலும்புகளைத் தேடுகிறேன் என்றார். புத்தரை எரித்து விட்டு இப்படி செய்கின்றீர்களே என்று கோபத்துடன் குரு அவரை மடத்தை விட்டு வெளியே தள்ளி விட்டார். மறுநாள் காலை முதியவர் என்ன ஆனார் என்று வெளியே சென்று பார்த்தார்.

முதியவர் இரவு எரிந்த மரபுத்தர் சாம்பல் மீது பூக்களைத் தூவி புத்தம் சரணம் கச்சாமி என்று பிரார்த்தனை செய்து கீழே விழுந்து வணங்கி வழிபாடு செய்து கொண்டிருந்தார். குரு அவர் அருகே சென்று என்ன செய்கிறீர்கள் இப்போது சாம்பலை வழிபாடு செய்து கொண்டிருக்கின்றீர்கள். இரவு வணங்க வேண்டிய புத்தரை எரித்து விட்டீர்கள். உங்களுக்கு மனநிலை சரியில்லையா என்று கேட்டார்.

முதியவர் குருவை பார்த்து நீங்கள் தானே இரவு இவர் புத்தர் என்று சொன்னீர்கள் ஆகையால் அவரை வழிபட்டுக் கொண்டிருக்கின்றேன் என்றார். இரவு மரத்தில் புத்தராக இருந்தார் இப்போது சாம்பலாக இருக்கின்றார் அவ்வளவு தானே வித்யாசம் என்றார். புத்தர் உருவ வழிபாடு வேண்டாம் என்றார். இன்று நீங்கள் அவரின் உருவத்தை வைத்து வணங்கி இறுதியில் அவரின் கொள்கைகளை விட்டுவிட்டீர்கள். நேற்று நான் புத்தர் சிலையை எரித்து குளிர் காய்ந்தது என்னுள் இருக்கும் புத்தரைக் காப்பாற்றத்தான். அந்த மரச்சிலைகள் உயிரற்றவை. அந்த மரத்திலான புத்தரை எரித்ததற்காக நீங்கள் உயிருள்ள புத்தரை வெளியே துரத்தி விட்டீர்கள் என்றார். குருவுக்கு தலையில் சம்மட்டி கொண்டு அடித்தது போல் இருந்தது.

ராமாயணம் பால காண்டம் பகுதி -15

கௌதம மகரிஷி அகலிகையின் உபசரிப்பை ஏற்றுக்கொண்ட பின் ராமர் லட்சுமனனுடன் விஸ்வாமித்ரர் தனது சீடர்களுடன் கிளம்பி மிதிலையை அடைந்தார்கள். மிதிலையில் ஜனகரின் மாளிகை வழியே சென்ற போது சீதை மாளிகையின் மாடத்தில் நின்று கொண்டிருந்தாள். ராமர் செல்வதை சீதையும் சீதை மாடத்தில் இருப்பதை ராமரும் பார்த்துக்கொண்டார்கள். பார்த்த உடனே சீதை ராமரின் தோளகை கண்டு ஒவியம் போல் திகைத்து நின்றாள். ராமரும் சீதையின் அழகில் மயங்கினார். பார்த்த உடனே ஒருவரை ஒருவர் மனதால் கவரப்பட்டு ராமரின் உள்ளத்தில் சீதையும் சீதையின் உள்ளத்தில் ராமரும் புகுந்தனர். விஸ்வாமித்ரருடன் மாளிகையை கடந்த ராமர் அவளின் கண்களில் இருந்து மறைந்தார். இவரை தான் மணக்க வேண்டும். அதற்கு சிவதனுசு தடையைக இருக்கிறதே. இவரை மணந்து இவர் தூணைவனாக வந்தால் காட்டில் இவருடன் வாழ்வதாக இருந்தாலும் பரவாயில்லை அதற்கும் தான் தயாராக இருப்பதாக எண்ணிக்கொண்டாள் சீதை.

மிதிலையில் யாகம் செய்வதற்காக பரந்த இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தினர்களின் அந்தஸ்திற்கு ஏற்ப தங்கும் இடங்கள் கொட்டகைகள் அமைக்கப்பட்டிருந்தது. விஸ்வாமித்ரரும் அவரது கூட்டத்தினரும் ராம லட்சுமனனுடன் முகாமிற்கு உள்ளே நுழைந்தார்கள். ஜனக மகாராஜா தன் நடத்தும் வேள்வியின் தலைமை புரோகிதரான சதாநந்தரோடு விரைந்து வந்து முனிவரை வரவேற்றார். தன்னுடைய யாக மண்டபத்திற்கு வந்திருந்த விஸ்வாமித்ரரை வணங்கி அவரின் வருகைக்கு நன்றி செலுத்தினார். அனைவரும் ஜனகர் சபையை அடைந்தபின் சதாநந்தரின் தாய் அகலிகை ராமரினால் சாபவிமோசனம் பெற்றதையும் அவரது தந்தையாருடன் இணைந்து விட்டதையும் கூறினார். இதனைக்கேட்ட சதாநந்தர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.

விஸ்வாமிரருடன் வந்திருந்த ராமரின் உருவம் ஜனகரை கவர்ந்தது. இதனை கவனித்த விஸ்வாமித்ரர் தனது ஆசிரமத்தில் உலக நன்மைக்காக செய்த வேள்வியை காத்து அசுரர்களை அழித்த ராம லட்சுமனனின் வீரத்தை ஜனகரிடம் தெரிவித்தார். வீரம் செறிந்த இளைஞர்கள் இருவரும் தங்கள் மாளிகையில் வைக்கப்பட்டிருக்கும் சிவதனுசை காண்பது முற்றிலும் அவசியம் ஆகவே இவர்களை அழைத்து வந்தேன் என்று ஜனகரிடம் விஸ்வாமித்ரர் கூறினார். இதன் உட்பொருளை உணர்ந்த ஜனகர் அனைவரும் சிறிது ஒய்வெடுக்குமாறு கேட்டுக்கொண்டார். ஒய்வெடுக்க அனைவரும் படுத்ததும் ராமருக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. ஐனகரின் மாளிகையில் நின்று கொண்டிருந்த பெண்ணின் அழகை பார்த்ததும் ரசித்துவிட்டோமே. எந்த பெண்ணை பார்த்தாலும் தனது தாயான கௌசலையை பார்ப்பது போலவே பார்ப்போம். இந்த பெண்ணை பார்க்கும் போது அந்த எண்ணம் தோன்றவில்லையே இது வரை குற்றம் செய்யத நமது மனம் குற்றம் ஏதும் செய்திருக்காது என்று எண்ணி தனக்கு தானே ஆறுதல் செய்து கொண்டார். அடுத்த நாள் அனைவரும் காலை வேள்விசாலையை அடைந்தார்கள்.

ஜனக மகாராஜாவின் தலைமை புரோகிதரான சதாநந்தர் வேள்விக்கு வந்திருந்த விஸ்வாமித்ரரை பற்றியும் அவரது பண்புகளும் அவரின் வரலாற்றையும் ராமரிடம் எடுத்துச்சொல்ல வேண்டிய கடமை இருந்தது. எனவே விஸ்வாமித்ரரின் வரலாற்றை ராமரிடம் எடுத்துக்கூற ஆரம்பித்தார் சதாநந்தர்.

மகாலக்ஷ்மி கோவில்

மகாராஷ்டிரா  மாநிலத்தில் உள்ள கோலாப்பூர் மகாலக்ஷ்மி

சூரியக் கதிர்கள் கோலாப்பூர் மஹாலக்ஷ்மியின் கோவிலின் வாசல் வழியாக மெதுவாகப் பயணித்து மகாலக்ஷ்மியின் கால் முதல் தலை உச்சி வரை அவள் மீது படர்ந்து தனது வழிபாட்டை செய்தது.

நீரினில் மூழ்கியிருக்கும் சிவலிங்கம்

புதுக்கோட்டையில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது உலகப் புகழ்பெற்ற சித்தன்னவாசல். இங்கு குகைக் கோயிலும் ஓவியமும் உள்ள அறிவர் கோயில் மலை உச்சியில் நவால்சுனை என்ற ஒரு சுனை உள்ளது. இந்த சுனையானது சுமார் 10 அடி ஆழம் கொண்டது. இதன் அடியில் ஒரு பக்கத்தில் குடவறையில் சிவலிங்கம் உள்ளது. இந்த சுனையில் எப்போதும் தண்ணீர் இருப்பதால் இந்த சிவலிங்கம் தண்ணீரிலே மூழ்கிய நிலையிலேயே இருக்கும். மலையை குடைந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சுனையின் உள்ளே தண்ணீருக்குள் ஒரு மண்டபத்தில் சிவலிங்க திருமேனியாய் காட்சியளிக்கும் இறைவனுக்கு 28 வருடத்திற்கு ஒருமுறை பூஜை நடத்தபட்டு வருகிறது.

இந்த சுனையில் 2018 ம் ஆண்டு முழு கொள்ளளவு நீரையும் மின் மோட்டார் மூலம் நீர் முழுவதும் வெளியேற்றபட்ட பின்பு சிவலிங்க திருமேனியாய் காட்சியளிக்கும் இறைவனுக்கு பூஜைகள் நடைபெற்றது. பூஜை வழிபாடு ஆரம்பித்தவுடன் பாதாளத்தில் இருக்கும் இறைவனின் மீது சூரிய ஒளி பட ஆரம்பித்தது. பல நூற்றாண்டுகளாக நீரினில் மூழ்கியிருக்கும் இந்த இறைவனின் சிவலிங்கத் திருமேனியானது துளி கூட பாசியடையாமல் இருந்தது. சுற்றெங்கிலும் இருக்கும் பாறை மலை எல்லாம் பாசிபடர்ந்துள்ள நிலையில் இந்த சுனையின் உள்ளே இருக்கும் சிவலிங்க திருமேனி மட்டும் புதிதாக காட்சியளிக்கிறது. பூஜைகள் முடிந்து அடுத்த சிறிது நேரத்தில் மழை பெய்து சுனை தண்ணீரில் நிரம்பி சிவலிங்கம் மறைந்தது. குடவறை சிவலிங்கம் 1876 ம் ஆண்டு புதுக்கோட்டை மன்னரின் மனைவி சுனை நீரை இறைத்து வழிபட்டதாக கல்வெட்டு உள்ளது. அதன் பிறகு யாரும் நார்த்தாமலை குடவறை சிவலிங்கத்தை பார்த்து வழிட்டதாக கல்வெட்டுகள் இல்லை. இதன் ஒரு பக்கத்தில் குடவறையிலேயே ஒரு சிவலிங்கம் உள்ளது. இந்த குடவறையும் அதில் மலையையே குடைந்து சிவலிங்கம் வட்ட வடிவத்தில் அமைக்கப்பட்டிருப்பதையும் பார்க்கும் வரலாற்று ஆய்வாளர்கள் இது பல்லவர்கள் அல்லது முத்தரையர் மன்னர்களால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

விஷ்ணு சிலை

பாந்தவ்கர் தேசிய பூங்காவில் உள்ள விஷ்ணு சிலை

மத்திய பிரதேசத்தின் உமாரியா பகுதியில் உள்ள பாந்தவ்கர் தேசிய பூங்கா புராண மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த தேசிய பூங்காவின் காட்டுப்பகுதியில் விஷ்ணு கிழக்குப்பக்கம் தலை வைத்து மிகவும் அமைதியான முறையில் படுத்துக் கொண்டிருக்கிறார். விஷ்ணுவின் சிலை 12 மீட்டர் நீளத்துடன் ஒற்றை பாறையில் செதுக்கப்பட்டது. 1000 ஆண்டுகள் பழமையான இந்த விஷ்ணு படுத்த நிலையில் ஒரு காலை நீட்டிய படியும் ஒரு காலை மடக்கி வைத்தபடியும் இருக்கிறார். விஷ்ணுவின் தலைக்கு பின்புறம் சிவலிங்கம் ஒன்று உள்ளது.

ராமாயண இதிகாசத்தில் இந்தப் பகுதியைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. இலங்கை போருக்குப் பிறகு இந்த இடம் ராமரால் லட்சுமணனுக்கு பரிசளிக்கப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளது. புராண நூல்களின் படி திரேதா யுகம் காலத்திலிருந்தே இந்த இடத்தில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். மேலும் அந்தக் காலங்களில் உள்ள நாகரிகங்களின் எடுத்துக்காட்டுகளாக நிறைய குகை ஓவியங்கள் மற்றும் பிற அடையாளங்கள் உள்ளன. பூங்காவின் உள்ளே உள்ள கோவில் கட்டமைப்புகள் அக்காலத்தில் விஷ்ணு வழிபாடுகளும் சிவலிங்க வழிபாடுகளும் ஒன்றாகவே இருந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ராமாயண கதைகளின் சிற்பங்கள் மற்றும் பந்தாவதீஷ் கோவில் கருவூலம் விஷ்ணுவின் அவதாரமான வராக அவராதம் மீன் அவதாரம் ஆமை அவதாரம் ஆகிய மூர்த்திகள் உள்ளது. பூங்கா மற்றும் பூங்காவைச் சுற்றியுள்ள கிராமங்களில் பெரும்பாலும் ராமாயண காலத்திலிருக்கும் சிற்பங்களாக உள்ளது.

மன உறுதி

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன. ஒரு நாள் மாலை பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும் நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி அப்படியே கீழே விழுந்துவிட்டார்.

நண்பர் அவர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால் விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார். பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர்.

விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் கீழே இருந்து எழுந்தார். சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும் சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது என்று முடித்தார்.

கருத்து: பிரச்சனைகள் வரும் போது நாம் அதை கண்டுகொள்ளாமல் நமது வேளையை மட்டும் செய்தோமானால் அது நம்மை விட்டு ஓடிவிடும்.