அஷ்ட புஜ சரஸ்வதி

கல்விக்கு தெய்வமான சரஸ்வதி எட்டு ஆயுதம் கொண்டு அருள்பாலிக்கிறாள். பிரம்மா ஒரு அரக்கனுக்கு கொடுத்த வரத்தின் சக்தியினால் அரக்கன் இந்த உலகத்தை கட்டி வைத்தான். உலகம் இயங்காமல் நின்றது. உலகை மீட்டெடுக்க விருப்பப்பட்ட தெய்வங்கள் சக்தி வாய்ந்த எட்டு தெய்வீக ஆயுதங்களை சரஸ்வதிக்கு கொடுத்தார்கள். ஒரு புலி மீது சென்ற சரஸ்வதி அரக்கனை தோற்கடித்து உலகத்தின் மீதிருந்த கட்டை அவிழ்த்து அரக்கனை அழித்தாள். இடம் கட்சபேஸ்வரர் கோவில், பெரிய காஞ்சிபுரம்.

குருநாதர் கருத்துக்கள் #35

கேள்வி: ஆன்மீகம் இல்லை தெய்வத்தை நாடி செல்லும் காலங்ளில் உடலை அடக்க வேண்டுமா?

ஆம் அடக்க வேண்டியது உடலே என்றும் கூற இயலும். ஏனெனில் உணர்ச்சிகள் பொதுவாக ருசி கண்கள் வழியே காணுதல் காது வழி கேட்டல் ஸ்பரிசம் (தொடு உணர்ச்சி) உணர்வுகள் அனைத்தும் அடக்குதல் வேண்டும். இருப்பினும் இவையாவும் அடங்குவதற்கு எது உபயோகம் என சிந்தித்தால் மனமே என நன்கு உணர்தல் வேண்டும். மனமதை முழுமையாக அடக்குதல் வேண்டும். ஓர் பொருள் உட்கொள்ள தகாது என உணர்ந்தும் நாக்கின் ருசிக்கு அடிமையாகி அதை சாப்பிடுகின்றோம். அதன் விளைவுகளை அனுபவிக்கின்றோம். குறிப்பாக கொழுப்பு சக்தி அதிகமா இருக்கும் நபர் இதை நன்கு உணர்வார். வேண்டாம் என மனம் கூறிய பின்பும் மீறி ருசிக்கு அடிமையாகி சாப்பிடுகின்றனர். மனதில் திடமிருந்தால் இது நேரிட்டிருக்காது இந்நிலை காண மனதை உறுதிப்படுத்த வேண்டும். மனதை திடப்படுத்த வேண்டும் மனம் நம் வசம் இருத்தல் வேண்டும் நம் மனம் கட்டுக்குள் அடங்கி விட்டால் உடல் நம் கட்டுக்குள் அடங்கி விடும்.

யோக தட்சிணாமூர்த்தி

சிவபெருமான் உத்கடாசன தோரணையில் குருவாக தட்சிணாமூர்த்தி வடிவில் வந்து மௌனத்தில் ஞானத்தை அளித்து அறியாமையை போக்கி அருள்பாலிக்கும் சிற்பம். ஆற்காடு காவிரிப்பாக்கத்தை சேர்ந்த சிற்பம் தற்போது சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது.

குருநாதர் கருத்துக்கள் #34

கேள்வி: ஏகன் என்றால் என்ன? ஏகனை அடைய என்ன வழி? அதாவது ஏகனுக்குள் செல்ல என்ன வழி?

இதற்கு விடையானது வினாவைப் போல் எளிதாகவும் கடினமாகவும் உள்ளதாம். ஏனெனில் ஏகன் என்னவென வினாவிட்டால் அதற்கு விடை எளிதாக ஒன்று கூறுவோம். இவ்வொன்று என்பது என்னவென்றால் இது கடினமான விடையும் ஆகின்றது. ஒன்று ஏகம் என்பது பரம்பொருள் பரம்பொருள் என்பது என்னவென வினாவிட்டால் அது சத்தியம் அதுவே தூய்மை அதுவே மாசற்றது என்பதெல்லாம் விளக்கிக் கொண்டே போக இயலும். இருப்பினும் கேள்வி இதல்ல. ஏகனை அடைய என்ன வழி என்பதேயாகின்றது.

ஏகன் எங்கு இருக்கின்றான் என்பதை முதன்மையில் உணர்தல் வேண்டும். ஏகன் அனைத்திலும் உள்ளான் என்பதை உணர்ந்து அத்தகைய ஏகன் நமக்குள்ளும் உள்ளான் என்பதை உறுதியாக நம்புதல் வேண்டும் என்பதே முதல் படியாகின்றது. அந்த உள்ளிருக்கும் ஏகனை அடைதல் வேண்டுமென்றால் நாம் எங்கு செல்ல வேண்டுமென சிந்தித்தால் உள்ளுக்குள் செல்லுதல் வேண்டும் என விடையும் எளிதாக கிடைக்கின்றது. இதுவரைக்கும் எளிதாகவே உள்ளது இதற்கும் மேலாகவே கடினம் எவ்விதம் அடைகின்றது என்பது இதற்கு எளிதான வழிகள் இல்லை என்பதும் இங்கு யாம் எடுத்துரைக்கின்றோம். உள் செல்லுதல் வேண்டும் மனம் முழுமையாக உள்தனில் நிலைத்தல் வேண்டுமென்றல் நம் எண்ணம் வெளியாக செல்லுதலாகாது என்பதே இதற்கு விளக்கமாகின்றது. எண்ணம் வெளியாக செல்லுதல் வேண்டாம் என்றால் கட்டுப்பாடு வேண்டும் என்றும் வெளியாக நாம் கண்பது அநித்யமானது (உண்மையில்லாதது) என்றும் நித்யமாக நிலைப்பது ஏகன் மட்டுமே என்றும் மனதில் உறுதியாக நிறுத்தி இயன்ற அளவிற்கு மனமதை உள் நிறுத்தல் வேண்டும் என்றும் விளக்கமாக இங்கு அளித்தோம்.

சந்தான கோபாலகிருஷ்ணன்

இராமாயண இதிகாசத்துடன் தொடர்புடைய ஆதி ஜகந்நாதர் கோவிலில் உள்ள சந்தான கோபாலகிருஷ்ணன் சந்தனா என்ற சொல்லுக்கு குழந்தை என்று பொருள். குழந்தைகளை விரும்பும் தம்பதிகளுக்கு அருள் பாலிக்கிறார். இடம் திருப்புல்லாணி கோவில், ராமநாதபுரம் மாவட்டம்

குருநாதர் கருத்துக்கள் #33

கேள்வி: ஆன்மீக பாதையில் செல்லும் காலத்தில் அன்பு காட்டுவது விடுதல் வேண்டுமோ?

அடிப்படையாக கூறுவது அன்பே சிவம் என்று அனைத்தும் அன்புக்குரியதாம். குடும்பத்தில் அன்பு காட்ட வேண்டாம் என்று யாம் கூறியதில்லை. குடும்பத்தில் காட்டும் அன்பை உலகத்தில் காட்டுவாய் என்றே கூறுகிறோம். அனைத்து ஜீவராசிகளுக்கும் அன்பு காட்டுதல் வேண்டும். குறுகிய குடும்பத்தில் காட்டிய அன்பு வெளியில் உள்ள படைப்புக்கு அணைத்திற்கும் காட்டுதல் வேண்டும் என்பதே உண்மையான ஆன்மீக நிலை. இதனை உணராமல் அன்பு காட்டுவது தவறு. அன்பு காட்டாதிருந்தால் ஆன்மீக வளர்ச்சி உண்டாகும் என எண்ணிக் கொண்டால் இது பாதாளத்திற்கே செல்ல வேண்டிய நிலை உண்டாகும். அன்பு அன்பு அன்பு ஏனெனில் நாம் இன்று இங்கு நிலைப்பதே இறைவனின் அன்பின் விளைவாகும் என்பதை மறவாது அவ்அன்பினை பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும் அனைத்து ஜீவராணிகளும் உமது அன்பை பெறுதல் வேண்டும் என்பதே ஓர் நோக்கமாகக் கொண்டால் அதுவே ஜெயம் என கூறுகின்றோம்.

நந்தி பகவான் தன் சக்தியுடன் மனித உருவில்

நந்திகேஸ்வரரும் நந்திகேஸ்வரியும் மனித உருவில் சிவபெருமானின் மீது அசையாத பக்தியுடன் பாதுகாவலர்களாக கச்சபேஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கிறார்கள். புராணத்தின் படி சிவபெருமான் இந்த உலகத்தில் திருநடனம் ஆடிய போது அதனைக் காண்பதற்கு நந்தி பகவான் மனித ரூபத்தில் காண விருப்பம் கொண்டு தனது சக்தியுடன் வந்து தரிசனம் செய்தார். இடம் பெரிய காஞ்சிபுரம்.

குருதாநர் கருத்துக்கள் #32

கேள்வி: இறைவன் கொடியவனா நம்மை தண்டிக்க?

தண்டிப்பது இறைவன் அல்ல நீங்களே உங்களை தண்டிக்கிறீர்கள். ஏனெனில் இறைவன் நல்வழியில் நமக்குள் இயங்குகின்றான் என உணர்ந்து கொண்டால் நாம் தவறு செய்ய மாட்டோம் அல்லவா! இவ்விதம் உணர்ந்து தவறுகள் செய்திட அதன் விளைவு நம்மை தண்டிக்கின்றது. இறைவன் வெறும் சாட்சியாக நிற்கின்றான் என்பதை நன்கு உணருதல் வேண்டும். தண்டனைகளை தவிர்த்திட எப்பொழுதும் இறைவன் உள்ளிருந்து நம்மை இயக்குகின்றான் இறைவனை சட்சியாக நிற்கும் போது தீயவை யாதும் செய்தல் கூடாது என்று மட்டுமல்லாது தீயவை சிந்தித்தல் கூடாது என்பதை மனமதில் நிறுத்தி செயல்பட அனைத்தும் நல்வழியில் நீங்கும் பின்பு தண்டனை இல்லை.

முக்கண் பைரவர்

உத்திரபிரதேசம் பரேலி மாவட்டம் அஹிச்சத்ரா என்னும் ஊரில் 3 ஆம் நூற்றாண்டில் சூலத்துடன் அருள்பாலித்த இந்த முக்கண் பைரவர் தற்போது அமெரிக்க நாட்டில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள LACMA அருங்காட்சியகத்தில் உள்ளார்.

குருநாதர் கருத்துக்கள் #31

கேள்வி: மகான்களுக்கு ஜெயந்தியும் (பிறந்த நாள்) ஆராதனையும் (முக்தி அடைந்த நாள்) நல்வழியில் கொண்டாடப்படுகிறது இதில் எது முக்கியத்துமானது?

பொதுவாக ஆதியில்லாது அந்தம் இல்லை. அந்தம் இல்லாமல் ஆதியும் இல்லை என்பது விதியாகும். இவ்விதம் பார்க்க இரண்டும் முக்கியமாகும். இருப்பினும் முக்கியத்துவம் காண்பது பிறப்பே ஆகும். பிறப்பு என்பது மானிடப் பிறப்பாகும். மானிடனாகப் பிறந்து பல பிறவி கண்ட பின்பே முக்தி நிலை அடைய முடிகிறது என்பதால் ஜெயந்தியே முக்கியத்துவம் ஆகும். அந்நாளில் மகான்களிடம் பெறும் வாழ்த்துக்களும் ஆசிகளும் பெருமளவில் நலம் தரும். ஆராதனை என்பதும் முக்தி என்பதும் ஓர் சாதனையின் நாளில் பக்தர்களும் மக்களும் முக்தி பெற்றவர்களை மட்டுமல்லாது அவரின் சாதனையையும் போற்றுகின்றனர். இந்நிலையில் முதன்மையில் வந்தது பிறப்பு, பின்பு வந்தது முக்தி என்பதால் முக்கியத்துவம் காண்பது முதலில் வந்த பிறப்பு ஆகும். சாதனையில் முக்தி பெரிதாக தோன்றினாலும் பிறவி இல்லையெல் முக்தி இல்லை.