மூன்று அம்சங்களுடன் தட்சிணாமூர்த்தி

உட்குடிகாசனத்தில் அமர்ந்தபடி அருளுவதால் யோக தட்சிணாமூர்த்தி என்றும் கையில் வீணை வைத்திருப்பதால் வீணா தாரா தட்சிணாமூர்த்தி என்றும் கையில் வியாக்யான முத்திரையில் இருப்பதினால் வியாக்யான தட்சிணாமூர்த்தி என்றும் மூன்று அம்சங்களின் கலவையாக அருள்பாலிக்கிறார். நான்கு கரங்களில் முன் வலது கை வியாக்யான முத்திரையினையும் பின் வலது கை அக்ஷரமாலையும் முன் இடது கையில் ஏடுகளை ஏந்தியும் பின் இடது கையில் வீணை ஏந்தியுள்ளார். தலையில் சடாமுடி தரித்து சடையின் மீது ஊமத்தம் பூ அணிந்திருக்கிறார். இடது காதினில் சங்கபத்ர குண்டலமும் வலது காதினில் குண்டலமும் அணிந்துள்ளார். இடம் மைசூர் சாம்ராஜ் நகர் ஷம்புலிங்கேஸ்வரர் மலை. காலம் 9 ஆம் நூற்றாண்டு.

குருநாதர் கருத்துக்கள் #25

கேள்வி: வாழ்வுதனில் இறைநாட்டம் கொண்டும் இவ்வாழ்வில் இறைவனை அடையவும் சித்திகள் வேண்டுமா? இது உதவுமா?

சித்திகள் கிடைக்க ஓர் அளவிற்கு ஓரிரு படிகள் முன்னேற உதவும் என்பது மட்டுமல்லாது சித்திகள் மற்றொன்றிற்கும் ஆகாது என்றும் இங்கு முன்னதாக கூறியுள்ளோம். பறக்கும் திறன் இருந்தால் இறைவனை அடையலாம் என்று இருந்தால் பறவைகள் யாவும் முக்தி அடைந்திருக்க வேண்டும். நீரில் வாழ்ந்தால் இறைவனை அடையலாம் என்று இருந்தால் நீரில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் முக்தி அடைந்திருக்கும். ஆடையில்லாமல் திரிந்தால் இறைவனை அடையலாம் என்று இருந்தால் காட்டில் வாழும் பிராணிகள் அனைத்தும் முக்தி அடைந்திருக்கும். இவையாவும் முக்தி அடையவில்லையே. இவையாவும் இறைவனை அடைய உதவாது. இறைவனை அடைய வேண்டுமென்றால் அசையாத நம்பிக்கையும் அன்றாட வழிபாடும் சதா அவன் நினைவும் இருக்க வேண்டும் என்பது விதியாகும். அர்ஜீனன் பெரும் பூஜைகள் செய்தும் ஓர் அளவிற்கு கர்வம் வந்த போது கிருஷ்ணன் அவனை கூட்டிச் சென்று பீமன் மானசீகமாக வில்வத்தை அளித்து உருவாக்கிய ஓர் வில்வ மலையை காட்டினார். இதன் வழியாக அர்ஜீனனின் அகந்தையை ஒழித்தான் என்பது மட்டுமல்லாது மானசீக பூஜையின் முக்கியத்துவத்தை இங்கு எடுத்துரைத்தோமே.

ஹரிஹரன் சங்கரநாராயணன்

ஹரி என்றால் திருமால் ஹரன் என்றால் சிவன். சிவனும் விஷ்ணுவும் வேறு வேறு அல்ல என்பதை குறிக்கும் சங்கர தாராயாண சொரூபம். பாதி திருமால் என்றழைக்கப்படும் விஷ்ணு. பாதி சிவனும் ஆக ஒரே உருவத்தில் ஒன்றிணைந்தத் தோற்றம் ஹரிஹரன் ஆகும். இடம் குன்றக்குடி முதல் குடைவரை கோவில் சிவகங்கை மாவட்டம்.

குருநாதர் கருத்துக்கள் #24

இங்கு இறைநாமம் பாடிட பலர் பயப்படுகின்றனர். இங்கு இறைநாமம் கூற பலர் பயப்படுகின்றனர். அனைவரின் மனதிலும் பயம் உள்ளது பயத்தைவிட நாணமே (வெட்கமே) அதிகம் உள்ளது.

நல்துணை என்பது இறைநாமமே. நல்துணை என்பது நமச்சிவாயமே. நல்துணை என்பது இறையருளே. நல்துணை இதையன்றி வேறு ஒன்றுமில்லையே. இறைவனுக்கு கூட்டு பிரார்த்தனை செய்யும் காலங்களில் தியானம் செய்தல் வேண்டாம். தியானம் செய்ய வேறு நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். தியானம் செய்ய நேரம் தனியாகவும் பூஜை செய்யும் நேரம் தனியாகவும் பிரித்துக் கொள்ளுங்கள். இவ்வாறு சொல்வது உங்கள் மனது வருத்தப்பட அல்ல. நீங்கள் அனைவரும் மேன்மை அடைவதற்க்காக உங்கள் நாணத்தை போக்கிடவே அனைவரும் நலம் பெறுவதற்கே.

சங்கில் சிவலிங்கம் நந்தி

சங்கில் சிவலிங்கம் நந்தி மற்றும் கணபதி வடிவமைக்கப்பட்டது. நுணுக்கமாக பொறிக்கப்பட்டுள்ள யாளியும் உள்ளது. தற்போது அமெரிக்கா நாட்டின் நியூயார்க் மாநகரின் மிகப் பெரிய அருங்காட்சியகமான பெருநகரக் கலை அருங்காட்சியகத்தில் (MET – The Metropolitan Museum Of Art) உள்ளது.

குருநாதர் கருத்துக்கள் #23

கேள்வி: பிள்ளைக்கு மேலாம் தென்னங்கன்று என்று அக்காலத்தில் உள்ள பழமொழிக்கு விளக்கம் என்ன?

பிள்ளைகள் ஈன்றிட பின்பு பருவமடைந்தும் தனியாக வாழ்வது பெற்றவர்களுக்கு உபயோகம் உள்ள நிலையோ அற்ற நிலையோ என்பதை இறைவன் அறிவான் என்பதே விடையாம். மாறாக தென்னங்கன்று உறுதியாக வளர்ந்து விட்டால் இளநீர் முதல் தேங்காய் மற்றும் அதன் ஒவ்வோரு பாகமும் மனிதனுக்கு உபயோகமாகின்றது. இதன் உள் அர்த்தத்தை நன்கு ஆராய்ந்தால் நாம் படைத்ததை விட இறைவனின் படைப்பே மேலானது என்பதே பொருளாகும்.

முஞ்சி கேசர் முனிவர்

சிவபெருமானின் கழுத்தில் இருக்கும் கார்கோடகன் எனும் பாம்பு ஒரு நாள் சிவனின் கையிலேயே விஷத்தை கக்கி சிவனின் சாபத்தைப் பெற்றது. தனது தவறை உணர்ந்து வருந்தி திருந்திய கார்கோடகன் ஈசனிடம் மன்னிப்பு கேட்க சாபத்துக்கு பிராயச்சித்தமாக நீ பூலோகம் சென்று பல சிவன் கோயில்களை வழிபட வேண்டும். நிறைவாக திருவாலங்காட்டில் எம்மை நோக்கித் தவமிருக்கும் சுனந்த முனிவர் என்பவரை நீ பணிந்து வணங்க வேண்டும். அவரது ஆசியும் கடைக்கண் பார்வையும் உன் மீது பட்ட அந்த நொடியில் உனது சாபம் நீங்கும். அந்த நொடியில் நான் அங்கு தோன்றுவேன் என்று சிவபெருமான் சொல்ல அதன்படி கார்கோடகன் ஒரு முனிவராக இந்த பூமிக்கு வந்து பல சிவன் கோயில்களை வழிபட்டார். கார்கோடகன் வழிபட்ட இடம்தான் கோடன் பாக்கம் ஆகி அதுவே பின்னர் கோடம்பாக்கமாக (சென்னை) மாறியது. நிறைவாக திருவாலங்காடு வந்த கார்கோடகனுக்கு சுனந்த முனிவரின் ஆசி கிடைத்து அவனது சாபமும் நீங்கியது.

சுனந்த முனிவர் கடுந்தவம் புரிந்தார். அதனால் அவரது தலை மீது முஞ்சிபுல் எனப்படும் ஒருவகை புல் படர்ந்து வளர்ந்தது. இதன் காரணமாகத்தான் அவர் முஞ்சிகேசர் எனப் பெயர் பெற்றார். கேசம் என்றால் முடி. சிவனுக்கும் காளிக்கும் நடைபெற்ற தாண்டவப் போட்டியை நேரடியாகக் கண்டவர் முஞ்சிகேச முனிவர். மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்த பொழுது அவருக்கு நடந்த உபநயன சடங்கில் முஞ்சிகேச முனிவர் கலந்து கொண்டார். கார்கோடகனுக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கிய அந்த முஞ்சிகேச முனிவர் இவர் திருவாலங்காட்டில் முஞ்சிகேச முனிவராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். பஞ்ச சபைகளில் மூத்த சபையான திருவாலங்காடு ரத்தின சபை சிவன் கோயில் அருகே இவரது ஜீவசமாதி தனிக் கோயிலாக அமைந்துள்ளது. இந்த ஜீவசமாதி சுமார் பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறியப்படுகிறது. தமிழகத்தில் சுமார் பத்திலிருந்து பதினைந்து பழைமையான சிவன் கோயில்களில் முஞ்சிகேச முனிவருக்கு சன்னிதி உண்டு. ஸ்ரீ கச்சாலீஸ்வரர் எனும் பழைமையான கோயில் சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் கோயில் அருகே உள்ளது. இங்கும் முஞ்சிகேசர் முனிவருக்கு சன்னிதி உள்ளது.

குருநாதர் கருத்துக்கள் #22

மாற்றான் குழந்தைக்கும் யாம் உணவு அளிக்க நமது குழந்தை தானென வளரும் என்பதற்கு பொருள் என்ன?
(ஊரார் பிள்ளை ஊட்டி வளர்க்க தன் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழிக்கு அர்த்தம் என்ன?)

பொதுவாக அன்னதானம் சிறப்பானது பொதுவாக மற்றவர்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு அன்னம் அளித்திட நமது குழந்தைகள் செல்வங்களோடு இருப்பார்கள் என்ற கருத்து உண்டு. இருப்பினும் இது முழுமையான அர்த்தம் ஆகாது. மாற்றான் குழந்தைக்கு உணவு நன்கென அளித்தால் என்பது கர்ப்பம் தரித்துள்ள பெண்ணுக்கு (மனைவிக்கு) நாம் நன்கென உணவு அளித்தால் நம் குழந்தை நன்றாக செழிக்கும் என்பதே பொருளாகின்றது. அதாவது நம் வீட்டில் இருக்கும் கர்பிணிக்கு (மனைவிக்கு) நன்றாக உணவு அளித்தால் நம் குழந்தை வயிற்றில் நன்றாக வளரும் என்பதே பொருளாகும். இதை மற்ற குழந்தைக்கு உணவளித்தால் நம் குழந்தை செழிக்கும் என ஒப்பிட்டு உள்ளனர். இதில் தவறில்லை என்கின்ற போதிலும் உண்மையான அர்த்தம் முன்பு கூறியது ஆகும்.

இறைவன் அனைத்தும் அறிவான் நாம் அவனை ஒன்று வேண்டும் என்று கேட்பதோ வேண்டுவதோ தவறாகுமா?

பொதுவாக பத்து குழந்தைகள் இருக்கும் இடத்தில் அழுகின்ற குழந்தையை நாம் தூக்குவோம் இல்லை என்ன என்று கேட்போம். ஓர் வீட்டில் இந்நிலை என்றால் இத்தனை குழந்தைகள் வைத்திருக்கும் இறைவனை யாம் வேண்டுதல் நன்றே தவறாகாது.

தசபுஜ துர்க்கை

தச புஜ துர்க்கை வெட்டப்பட்ட எருமையின் உடலில் இருந்து வெளிவரும் அரக்கனின் கழுத்தைப் பிடித்து சூலத்தினால் மார்பைப் பிளக்கும் காட்சி. வாள் கேடயம் அம்பு வில் வஜ்ரம் மணி ஆகிய ஆயுதங்களை வலது இடது கரங்களில் ஏந்தி வலது காலை மகிஷாசுரனின் மேல் வைத்து இடது காலை கீழே வைத்துள்ளார். மடிந்த மகிஷாசுரனின் எருமைத் தலை தனியே துண்டாக கீழே கிடக்க துர்கையின் சிம்ம வாகனமும் பின்னால் இருந்து கடித்து குதற சீறிப் பாய்ந்து வருகிறது. இடம் ஜோத்பூர் மாவட்டம். ராஜஸ்தான்

குருநாதர் கருத்துக்கள் #21

அகங்காரம் என்பது தனித்தனி மனிதர்களுக்கு மட்டும் அல்லாது நடுகளுக்கு இடையையும் உள்ளது. இதற்கு மூலகாரணம் தனிப்பட்ட மனிதனின் அகங்காரமே. விளைவு போர்கள். இதுமட்டுமல்லாது அக்னி பூமியில் அதிகமாக காணக்கூடும். பெரிதாக நம்நாட்டில் பாதிக்கா போதிலும் மற்ற நாடுகளில் சேதம் உண்டாக வாய்ப்புகள் பெரிதாக உள்ளது. இந்த அகங்காரத்தை நீக்கிட வேண்டுமென்றால் இயன்ற அளவிற்கு அன்னம் அளிக்க வேண்டும் என்கின்ற விதி உண்டு. அன்னம் அளிப்பதோடு அதன் பலனை உலக நன்மைக்கு சமர்பிப்பது நலம் தரும். இது எவ்விதம் செய்வது என்றால் வழி எளிது அன்னதானங்கள் செய்த பின்பு நீர் எடுத்து அப்புண்ணியத்தை எங்கும் செல்லட்டும், நாடு நலம் பெறட்டும் என்று பூமிக்கு செலுத்த வேண்டும். இதுவே இதற்கு சிறந்த வழி ஆகும். அனைவருக்கும் சினம் உண்டு யாதேனும் ரூபத்தில் அது பதுங்கி உள்ளிருக்கும் என்பது பொது அறிவாம் இதனை ஓங்காது தடுத்தல் வேண்டும். ஏனெனில் வருகின்ற ஆண்டில் பிரச்சனைகள் நேரிட்டால் அதற்கு காரணம் வீண் சினமும் அகங்காரமே ஆகும்.