மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -10

யுதிஷ்டிரனுக்கு அர்ஜுனன் கற்றுக்கொண்ட ஆற்றல் வாய்ந்த தெய்வீக அஸ்திர சாஸ்திரங்களையும் அவற்றை உபயோகிக்கும் முறையையும் தெரிந்து கொள்ளும் ஆவல் உண்டாயிற்று. ஆகவே அர்ஜுனனிடம் அதைப் பற்றி விளக்கமாக கூறுமாறு கேட்டுக் கொண்டான். அர்ஜுனன் தான் கற்றுக்கொண்ட தெய்வீக அஸ்திர சஸ்திர வித்தைகளையும் அதை உபயோகிக்கும் முறையையும் அதன் சக்திகளையும் விளக்க ஆயத்தமானான். அப்பொழுது அங்கு நாரத மகரிஷி பிரசன்னமாகி ஓர் எச்சரிக்கை செய்தார்.

இயற்கையின் வல்லமைகள் அனைத்தையும் மண்ணுலகவாசிகள் அறிந்தவர்கள் அல்லர். அப்படி அறிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. வலிமையற்ற மனிதன் ஒருவனிடம் இந்த அஸ்திர சாஸ்திரங்களின் வல்லமை விளக்கப்பட்டால் அவன் அவைகளை முறையாக கையாள இயலாமால் தவிப்பான். அல்லது அந்த சக்திகளை துஷ்பிரயோகம் செய்வான். தெய்வீக ஆயுதங்கள் மன சக்தியை அடிப்படையாகக் கொண்டவை. அவை மண்ணுலக்கு உரியவைகள் அல்ல. அந்த அஸ்திரத்தில் அமைந்திருக்கும் சக்தி அளப்பரியதாகும்.
அந்த ஆயுதங்களின் வேகத்தை தங்குவதற்கு ஏற்ற வலிமை மண்ணுலகில் இல்லை. வெறும் பயிற்சி முறையில் அவைகளை கையாண்டு பார்த்தாலும் மண்ணுலகம் தாங்காது. ஆகையால் தான் அவைகளின் பயிற்சி பெறுவதற்கு என்று அர்ஜுனன் மண்ணுலகில் இருந்து பிரித்தெடுத்து தேவேந்திரன் விண்ணுலகிற்கு அழைத்துச் சென்றான். இத்தகைய தெய்வீக அஸ்திரங்களுக்கு உரியவனாக அர்ஜுனன் ஒருவன் மட்டுமே உள்ளான். முற்றிலும் அவசியம் ஏற்பட்டாலொழிய அந்த அஸ்திரங்களை அவன் கையாளலாகாது. முற்றிலும் சுதாரிக்கக்கூடிய சாதாரண சந்தர்ப்பங்களில் அவைகளை பிரயோகிக்கும் எண்ணமே அர்ஜுனனின் உள்ளத்தில் உதயம் ஆகாது. அத்தகைய மன உறுதி படைத்தவன் அர்ஜுனன். ஆகையால் இந்த தெய்வீக அஸ்திரங்களை பற்றி பேச வேண்டாம் என்று அவர் நாரதர் எச்சரிக்கை செய்தார்.

பாண்டவர்கள் வனவாசத்தில் பிரவேசித்து பத்து ஆண்டுகள் ஆகியது. கஷ்ட நேரம் என கருதப்பட்ட இந்த பத்து ஆண்டு வனவாசத்தை பாண்டவர்கள் ஆத்ம பலத்தை பெருக்குவதற்கு நன்கு பயன்படுத்தி கொண்டார்கள். அதன் அறிகுறியாக பத்து ஆண்டுகள் விரைவாக சென்றது. பத்ரிகாஸ்ரமத்தின் மகிமையும் எழிலும் அவர்களின் உள்ளத்தை கவர்ந்தது. ஆகையால் அந்த இடத்தை விட்டு காலி செய்துவிட்டு வேறு இடம் செல்ல அவர்களுக்கு மனம் வரவில்லை. ஆயினும் செய்து முடிக்க வேண்டிய ஏனைய முக்கியமான காரியங்கள் பாக்கி இருந்ததால் எஞ்சி இருக்கும் இரண்டு வருடங்களை போக்குவதற்கு அவர்கள் காம்யக வனத்திற்கு திரும்பிப் வந்தார்கள்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -9

பீமன் குரங்கிடம் நீங்கள் சாதாரண குரங்கு அல்ல. நான் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன், உங்கள் முன் நான் மண்டியிடுகிறேன் என கூறி குரங்கின் முன் வீழ்ந்து வணங்கினான். பாண்டவ சகோதரர்களில் ஒருவன் நான். நீங்கள் யாரென்று தயவு செய்து கூறுங்கள் என்று கேட்டான். அதற்கு குரங்கு வாயு பகவானுடைய அனுக்கிரகத்தால் அஞ்சனா தேவிக்கு மகனாகப் பிறந்தவன் நான். சிறிது நேரத்திற்கு முன் அனுமனைப் பற்றி கூறினாயே அந்த அனுமன் நான் தான். நான் ராமதாசன். நீ எனக்கு தம்பி என்று கூறி தன் சுய ரூபத்தை அடைந்த அனுமன் பீமனுக்கு ஆசி வழங்கி பீமனை கட்டித் தழுவினார். அதன் விளைவாக தன்னிடத்தில் புதிய ஆற்றல் வந்ததை போல் பீமன் உணர்ந்தான். பீமனுக்கு அனுமான் வரம் ஒன்று கொடுத்தார்.

வரத்தின் படி போர் களத்தில் பீமன் சிங்கமாக உறுமும் போது அனுமானின் குரலும் சேர்ந்து கொள்ளும். அதனால் பாண்டவர்களின் சேனையில் பலமும் கௌரவர்கள் சேனையில் குழப்பமும் உண்டாகும். நான் அர்ஜுனனின் ரதத்தில் உள்ள கொடியில் இருப்பேன். நீ ஜெயம் கொள்வாய் என அனுமான் ஆசி அளித்தார். இப்போது கௌரவ சகோதரர்களுடன் இனி நிகழும் போராட்டத்தில் வென்று விடக்கூடிய வல்லமை பீமனுக்கு வந்தது. சௌகந்திகா மலரை பறிக்க தான் நீ வந்திருக்கிறாய் என எனக்கு தெரியும். நீ மலர்களை எடுக்க போகும் பாதையில் ஆபத்து இருக்கிறது. இது ஆண்டவர்களுக்கான பாதையாகும். மானிடர்களுக்கு இது பாதுகாப்பானது அல்ல. ஆதனால் உன்னை எச்சரிக்கவே நான் வந்தேன். இந்த மலர் இருக்கும் குளத்தை நான் உனக்கு காண்பிக்கிறேன். உனக்கு வேண்டிய பூக்களை எடுத்து கொண்டு செல் என கூறினார். பீமனும் பூக்களை எடுத்து வந்து திரௌபதியிடம் அளித்தான். அர்ஜூனன் சென்று நீண்ட நாட்கள் ஆகிவிட்ட படியால் அர்ஜூனனுடைய வரவிற்காக பாண்டவ சகோதரர்கள் பத்ரிகாஸ்ரமத்தில் காத்துக்கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் வானத்தில் மிகவும் பிரகாசத்துடன் இந்திரனுடைய மேன்மை தாங்கிய ரதம் நிலவுலகை நோக்கி வந்தது. அது பூமியில் வந்து இறங்கிய உடன் அர்ஜுனன் அதிலிருந்து குதித்து இறங்கினான். தேவலோகத்து தந்தை கொடுத்திருந்த ஆயுதங்களையும் கீரிடத்தையும் அவன் அணிந்திருந்தான். வந்தவன் தனது மூத்த சகோதரர்களான யுதிஷ்டிரனையும் பீமனையும் வணங்கினான். அந்த சந்திப்பில் பூரிப்பு நிறைந்திருந்தது. அர்ஜுனன் சிவனோடு கொண்ட இணக்கம் இந்திரலோகத்தில் வாழ்ந்த வாழ்வு அங்கு பெற்ற பயிற்சிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கினான் அவன் வாழ்ந்து வந்த வாழ்வின் விவரங்கள் அனைத்தையும் விரிவாக அறிந்து கொள்ள சகோதரர்கள் விரும்பினார்கள் அவர்கள் விரும்பியபடி அனைத்தையும் அர்ஜுனன் சளைக்காது அவர்களுக்கு எடுத்துக் கூறினான்.

இலங்கையில் கண்டி கதிர்காமத்தில் போகர் பெருமானுடைய இயந்திரம்

விக்கிரங்களோ அல்லது சிலையோ எதுவுமே இல்லாத ஆகம விதிகள் பிரகாரம் கட்டப்படாத ஒரு முருகன் கோவில் கதிர்காமம். இக்கோவிலின் ரகசியம் இங்கு உள்ள இயந்திரம் அடங்கிய பெட்டி மட்டுமே. இந்த இயந்திரம் 10000 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்தது. தமிழில் ஓம் எழுத்துடன் கூடிய ஒரே இயந்திரம்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 213 பெண்ணாகடம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 213 வது தேவாரத்தலம் பெண்ணாகடம். புராணபெயர் தூங்கானை மாடம். மூலவர் சுடர்கொழுந்தீசர், பிரளய காலேஸ்வரர், கடந்தை நாதர். இங்கு இறைவன் சதுர ஆவுடையாரக மீது உயர்ந்த பாணத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் ஆமோதனாம்பிகை, கடந்தை நாயகி. தீர்த்தம் கயிலை தீர்த்தம், பார்வதி தீர்த்தம், இந்திர தீர்த்தம், முக்குளம், வெள்ளாறு. தலமரம் செண்பகம். முகப்பு வாயிலைக் கடந்து சென்றால் நேரே பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் இருப்பதைக் காணலாம். அதையடுத்து 5 நிலை இராஜகோபுரம் உள்ளது. கருவறையைச் சுற்றிலும் மூன்று பலகணிகள் அமைக்கப்பட்டுள்ளதால் மூலவரை மூலஸ்தானத்திற்கு வெளியே எந்த திசையில் நின்றாலும் வணங்கலாம். தேவகன்னியர்களாகிய பெண், காமதேனுவாகிய ஆ, வெள்ளை யானையாகிய கடம் (பெண்-ஆ-கடம்) இங்கு பூஜை செய்ததால் இத்தலம் பெண்ணாகடம் ஆனது. தற்போது பெண்ணாடம் என அழைக்கப்படுகிறது.

ஒருமுறை தேவலோகத்தில் சிவபூஜை செய்ய பூலோகத்து பூக்கள் தேவைப்பட்டது. இந்திரனின் பூசைக்காக மலர்களைப் பறிக்க வந்த பூலோகம் வந்த தேவகன்னியர் இத்தலத்து இறைவனைக் கண்டு மகிழ்ந்து வழிபாடு செய்து இங்கேயே தங்கி விட்டனர். மலர் கொண்டு வரச்சென்ற தேவகன்னியர் திரும்பி வாராததால் இந்திரன் காமதேனுவை அனுப்ப தானும் இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்து இறைவனை வழிபட்டு இங்கேயே தங்கி விட்டது. காமதேனுவைத் தேடிச்செல்லுமாறு இந்திரன் தன் வெள்ளை யானையை அனுப்ப யானையும் இறைவனை வணங்கி திறந்த வெளியில் இருக்கும் இறைவனை மறைத்து வெயில் படாமல் பார்த்துக்கொண்டு இங்கேயே தங்கிவிட்டது ஒன்றும் புரியாத இந்திரன் தானே புறப்பட்டுத் தேடிவந்து பெருமானை வழிபட்டான். ஒருமுறை உலகம் சிவபெருமானால் அழிக்கப்பட்டது. அப்போது இத்தலம் தவிர அனைத்து இடங்களும் வெள்ளத்தால் மூழ்கியது. இதையறிந்த தேவர்கள் இங்கு வந்து உயிர்களை இத்தலத்தில் வைத்து காக்கும்படி வேண்டினர். சிவனும் நந்தியிடம் வெள்ளத்தை தடுக்க ஆணையிட்டார். சிவனைப் பார்த்திருந்த நந்தி ஊரை நோக்கி திரும்ப வெள்ளத்தை திசை மாற்றி பூமியை காத்தது. எனவே இங்குள்ள இறைவன் பிரளயகாலேஸ்வரர் என அழைக்கப்பட்டார்.

வெள்ளத்திலிருந்து பூமியை காப்பதற்காக அன்று திசை திரும்பிய நந்தி இன்றும் வாசலை நோக்கி திரும்பியே இருக்கிறது. 63 நாயன்மார்களில் ஒருவரான கலிக்கம்பநாயனார் இவ்வூரில் வாழ்ந்தவர். தன் மனைவியுடன் இணைந்து வீட்டிற்கு வரும் சிவனடியார்களுக்கு பாத பூஜை செய்து வந்தார். ஒருமுறை அவரது மனைவி, சிவனடியார் ஒருவருக்கு பாத பூஜை செய்ய மறுத்து விட்டார். இதனால் கோபம் கொண்ட கலிக்கம்பர் மனைவியின் கையை வெட்டி விட்டார். கருணைக்கடலான் ஈசன் அந்த பெண்ணின் கையை மீண்டும் தந்தார். சோழமன்னன் ஒருவன் இறைவனை தரிசிக்க இத்தலம் வரும்போது ஆற்றில் வெள்ளம் வந்தது. ஆற்றின் கரையில் இருந்தபடி சிவனை வேண்டிய போது அவனுக்காக தன் இருப்பிடத்தை உயர்த்தி கரையில் இருந்தபடியே தரிசனம் கிடைக்க செய்தார். இப்போதும், 30 மீட்டர் உயரத்தில் உள்ள கட்டு மலைக்கோயில் என்ற மேட்டுப்பகுதியில் சௌந்தரேஸ்வரர் சந்நிதி கோயிலுக்குள் உள்ளது. தனிக்கோபுரத்துடன் கூடிய கோயில் ஏறுதற்குப் படிகள் உள்ளன. கட்டுமலைக் கோயிலின் கீழ்ப்பகுதியில் பிரளயகாலேஸ்வரி அம்பாள் தனியாக உள்ளார். திருநாவுக்கரசர் தூங்கானைமாடம் தலத்திற்கு வந்தபோது தான் சமணநெறியில் ஈடுபட்டு சிலகாலம் இருந்ததை நினைத்து வருந்தினார். சமண நெறியிலே வாழ்ந்து வந்த இந்த உடம்புடன் வாழ விரும்பவில்ல என்றும் சிவபெருமானுடைய அடையாளங்களை என் உடம்பிலே இட்டால் நான் வாழ்வேன் என்றும் வேண்டிக்கொண்டு திருப்பதிகம் ஒன்று பாடினார். தன் உடலில் திரிசூல முத்திரையும், ரிஷப முத்திரையும் பொறிக்க வேண்டினார். இவரது வேண்டுகோளை ஏற்ற சிவன் இத்தலத்தில் அவருக்கு முத்திரையை பொறித்தார். கலிக்கம்பநாயனார், மெய்கண்டார் அவதரித்ததும், மறைஞான சம்பந்தர் வாழ்ந்ததும் இங்கு தான். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளனர்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -8

பாண்டவர்கள் தெய்வீகம் நிறைந்த பல இடங்களைப் பார்த்த பிறகு கைலாச கிரியை அடைந்தனர். சாந்திக்கு உறைவிடமாக அந்த இடம் திகழ்ந்து கொண்டிருந்தது. பத்ரிகாஸ்ரமம் என்னும் புண்ணிய ஸ்தலம் அந்த வட்டாரத்தில் இருந்தது. அந்த இடம் நரன் நாராயணன் என்னும் ரிஷிகள் பண்டைய காலத்தில் தவம் செய்த இடம். அங்கு சில காலம் தங்கினார்கள்.

பத்ரிகாஸ்ரமம் இருக்கும் காட்டில் இயற்கை எழிலுடன் இருந்தது. ஒரு நாள் காலையில் தரையில் முளைத்திருந்த செடிகளில் மலர்ந்திருந்த விதவிதமான நிறங்களை உடைய மலர்களை பார்த்து திரௌவுபதி மகிழ்வுற்று இருந்தாள். அப்பொழுது வடகிழக்கு திசையிலிருந்து அடித்த காற்றானது ஓர் அற்புதமான மலரை அங்கு கொண்டுவந்து போட்டது. அந்த மலர் மிக்க அழகுடனும் நறுமணத்துடனும் இருந்தது. திரௌபதி அதை எடுத்து பீமனிடம் காட்டி இந்த மலர் வளர்ந்து இருக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடித்து சில மலர்களை கொண்டு வந்து கொடுக்கும்படி அவள் அவனிடம் வேண்டிக் கொண்டாள். அவளுடைய விருப்பத்தை நிறைவேற்றி வைக்க பீமனும் உற்சாகமாய் காட்டிற்குள் புறப்பட்டுப் போனான். யானை ஒன்று புதர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு சஞ்சரிப்பது போன்று இருந்தது பீமனுடைய நடை. அவன் போன போக்கை முன்னிட்டு பறவைகளும் விலங்குகளும் நாலா பக்கமும் பரந்து ஓடின.

பருத்த மேனியுடன் குரங்கு ஒன்று காட்டு வாழை மரங்கள் நிறைந்திருந்த இடத்தில் படுத்திருப்பதை பீமன் பார்த்தான். பெரிய அந்த குரங்கை தூங்கத்தில் இருந்து எழுப்ப இடி இடித்தார் போல் பீமன் கத்தினான். உறக்கத்திலிருந்த குரங்கு ஒரு கண்ணை சிறிது திறந்து பார்த்தது பண்புள்ள ஒரு பெருமகன் போன்று நீ தோன்றுகின்றாய். ஆனால் ஒரு பாமரன் போன்று வனத்தில் வசித்து வரும் உயிரினங்களை நீ உபத்திரவப் படுத்துகிறாய். அனைத்து உயிர்களிடத்திலும் ஒழுங்காக நடந்து நடந்து கொள்வதே அறச்செயல் என்று குரங்கு கூறியது. அதற்கு பீமன் நீ சொல்வது எனக்கு புரிகிறது. ஆனால் நான் அவசரமாக போய்க் கொண்டிருக்கிறேன். தயவு செய்து நான் செல்வதற்கு எனக்கு வழி விடு என்று கூறினான். அதற்கு குரங்கு நான் மிகவும் களைத்துப் போய் அரைத்தூக்கத்தில் இருக்கிறேன். என்னால் எழுந்து கொள்ள இயலாது. என்னை குதித்து தாண்டி கொண்டு நீ போகலாம் என்று அனுமதி கொடுத்தது.

என்னை விட நீ வயதில் முதிர்ந்தவனாக இருக்கின்றாய். உன்னை தாண்டி செல்வது மரியாதை ஆகாது. நீ என்னை விட இளையவனாக இருந்தால் அனுமன் கடலைத் தாண்டியது போன்று நான் உன்னை தாண்டி இருப்பேன். ஆனால் என்னால் இப்பொழுது அப்படி செய்ய இயலாது என்று கூறினான். அப்படியானால் ஒரு பக்கம் எனது வாலை ஒதுக்கி தள்ளி வைத்துவிட்டு உனக்கு தேவையான பாதையை அமைத்துக் கொண்டு செல் என்று குரங்கு கூறியது. ஒரு வயது முதிர்ந்த குரங்குக்கு வரம்பு கடந்த மரியாதை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று பீமன் எண்ணிக்கொண்டு அந்த குரங்கின் வாலை தன் இடக்கையால் தூக்கி வைக்க அவன் முயன்றான். ஆனால் குரங்கின் வாலை தூக்க அவனால் இயலவில்லை. பிறகு இரண்டு கைகளாலும் தூக்க முயன்றான். தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தினான். வால் அசையவில்லை. பீமனுக்கு தன்னுடைய வாழ்நாளில் ஏற்பட்ட முதல் தோல்வி இது.

தொடரும்……….

திருமூலர் காட்டும் லிங்கங்கள்

லிங்கம் என்பதற்கு மூன்று பொருள்கள் சொல்லப்படுகின்றன.

  1. லிம் என்பது லயத்தையும் (ஒடுங்குதல்) கம் என்பது வெளிவருதலையும் குறிக்கும். பிரளய காலத்தில் பிரபஞ்சங்கள் அனைத்தும் எந்த இடத்தில் ஒடுங்கி பின்னர்ப் படைப்புக் காலத்தில் மீண்டும் உற்பத்தியாகின்றனவோ அதுவே லிங்கம் எனப்படுகிறது.
  2. லிங்கம் என்பது சித்தரித்தல் எனப் பொருள்படும். சிவபெருமான் படைப்பு முதலான ஐந்தொழில்களால் பிரபஞ்சத்தைச் சித்தரிப்பதால் சிவலிங்கம் எனப் பெயர் ஏற்பட்டது என்று வருணபத்தி எனும் நூலில் சொல்லப்பட்டுள்ளது.
  3. லிங்கம் ஒரு பொருளின் சிறப்பியல்பின் அடையாளத்தை உணர்த்தும். சிவலிங்கம் என்பது சிவத்துக்கு அடையாளம் எனலாம்.

திரூமூலர் கூறும் லிங்க வகைகள்

  1. அண்ட லிங்கம்
  2. பிண்ட லிங்கம்
  3. சதாசிவ லிங்கம்
  4. ஆத்ம லிங்கம்
  5. ஞான லிங்கம்
  6. சிவ லிங்கம்

1.அண்ட லிங்கம்

அண்டம் என்றால் உலகம். லிங்கம் என்பது அடையாளம். அண்டலிங்கம் என்பது உலகமே சிவனது அடையாளம் என்பதே. உலகினைப் படைக்க விரும்பிய சதாசிவம் தன்னை விட்டு நீங்காத சக்தியின் துணை கொண்டு உலகத்தைத் உற்பத்தி செய்தான். குண்டலினி சக்தியின் ஆற்றலால் உலகம் உருவமாகக் காட்சியளிக்கிறது. சிவசக்தியினாலேயே அவை உலகில் வெவ்வேறு அறிவுடையனவாகக் காணப் பெறுகின்றன. (திருமந்திரம் 1713) இறைவனது திருவடிகள் கீழுலகமாகும். திருமுடி ஆகாயத்திற்கு அப்பாற்பட்டதாகும். திருமேனி ஆகாயமாகும். இதுதான் சிவபெருமான் உலகமே உருவமாகக் கொண்ட திருக்கோலமாகும். (திருமந்திரம் 1724) நிலம் – ஆவுடையார், ஆகாயம் – இலிங்கம், கடல் – திருமஞ்சனமாலை, மேகம் – கங்கை நீர், நட்சத்திரங்கள் – ஆகாயலிங்கத்தின் மேலுள்ள மாலை, ஆடை – எட்டு திசைகள் என்று லிங்கத்தின் அடையாளமாகக் குறிப்பிடலாம். (திருமந்திரம் 1725)

2.பிண்ட இலிங்கம்

மனித உடலையே சிவலிங்க வடிவமாகக் காண்பது பிண்ட இலிங்கம். மக்களின் உடலமைப்பே சிவலிங்கம், சிதம்பரம், சதாசிவம், அருட்பெருங்கூத்து ஆகியவைகளாக அமைந்திருக்கின்றன.

மானுட ராக்கை வடிவு சிவலிங்கம்
மானுட ராக்கை வடிவு சிதம்பரம்
மானுட ராக்கை வடிவு சதாசிவம்
மானுட ராக்கை வடிவு திருக்கூத்து. (திருமந்திரம் 1726)

என்று திருமூலர் கூறுகின்றார். மக்கள் தலை – பாணம், இடைப்பட்ட உடல் – சக்தி பீடம், கால் முதல் அரை வரை – பிரமபீடம் எனக் கொண்டால் மானுட ராக்கை வடிவு சிவலிங்கமாகத் தோன்றும். பிண்டத்தைச் சிவலிங்கமாகக் காண்பது இவ்வுடலைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

3.சதாசிவ லிங்கம்

லிங்கத்தைச் சக்தியும் சிவமும் இணைந்த உருவமாகக் காண்பது. சிவனுக்கு இருதயம் – ஞானசக்தி, தலை – பராசக்தி, தலைமுடி – ஆதிசக்தி, கவசம் – இச்சா சக்தி, நேத்திரம் – கிரியா சக்தி, சக்தியின் வடிவமே சிவனது வடிவமாகும். (திருமந்திரம் 1744) சதாசிவம் உருவமும் அருவமுமாக இருந்து உயிருக்கு உதவி செய்யும். (திருமந்திரம் 1734) சதாசிவ லிங்கம் சிவமும் சக்தியும் பிரிப்பற்றது என்ற உண்மையை உணர்த்துகிறது.

4.ஆத்ம லிங்கம்

அனைத்து உயிர்களையும் இறைவனாகக் காண்பது ஆத்ம லிங்கம் எனப்படுகிறது. இறைவன் உயிருக்குள் உயிராக இருக்கிறார். ஒளியும் ஒலியும் கலத்தலே ஆன்மலிங்கம் (திருமந்திரம் 1954) என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.

5.ஞான லிங்கம்

உள்ளம், உரை, செயலைக் கடந்து நிற்கும் இறைவனின் நிலை உணர்தல். இது இறைவனின் சொரூப நிலையை உணர்த்தும். இதற்கு எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும் முந்தவுரைத்து முறைசொல்லின் ஞானமாம் (திருமந்திரம் 1770) என்று திருமூலர் ஞானத்திற்கு விளக்கம் தருகிறார்.

6.சிவலிங்கம்

அனைத்துமாக விளங்கும் சிவனை ஒரு அடையாளத்தின் இடமாக எழுந்தருளச் செய்து வணங்கும் முறையை உணர்த்துகிறது. உருவம் இல்லாத ஒன்றை உயிர்கள் மனத்தால் நினைத்து வழிபடுவது கடினம். பக்குவத்தை தேடும் உயிர்களுக்கு மனத்தை ஒருமுகப்படுத்தி தியானம் செய்து இறைவனை உணர ஓர் உருவம் தேவைப்படுகிறது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் சிவலிங்க உருவமாக எழுந்தருளியுள்ளான். இவ்வுண்மையை உணர்ந்து வழிபடாத மக்களின் இயல்பைத் திருமூலர்

குரைக்கின்ற வாரிக் குவலய நீரும்
பரக்கின்ற காற்றும் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை
வரைத்து வலஞ்செயு மாறறி யேனே. (திருமந்திரம் 1773)

என்று கூறுவதை நினைவில் கொண்டு இறைவனை லிங்க வடிவில் வழிபட்டு நற்பேறுகளைப் பெருவோம்.

No photo description available.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -7

பாண்டவர்கள் நால்வரும் திரௌபதியும் தீர்த்த யாத்திரையை கிழக்குப் பகுதியிலும் தெற்குப் பகுதியில் முடித்துக்கொண்டு மேற்கு கடற்கரை மார்க்கமாக விருஷ்ணிகள் வாழும் இடத்திற்கு அருகாமையில் இருக்கும் பிரபாஸை என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்தார்கள் அவர்களுடைய வருகை பற்றிய செய்தி விருஷ்ணிகளுக்கு எட்டியது. பலராமனையும் கிருஷ்ணனையும் தலைமையாகக் கொண்டு விருஷ்ணிகள் தீர்த்த யாத்திரை செய்து கொண்டிருந்த தங்களுடைய உறவினர்களை சந்திக்க விரைந்து சென்றனர். சந்திப்பு இருதரப்பினருக்கும் பெரும் மகிழ்வை ஊட்டியது. தன்னுடைய தோழன் அர்ஜுனன் இந்திரலோகத்தில் தெய்வீக அஸ்திர சாஸ்திரங்களையும் இன்னிசை பயிற்சியும் பெற்று வருவதை கேட்டு கிருஷ்ணன் பெருமகிழ்வுற்றான்.

அப்போது பலராமன் துரியோதனன் திருட்டுத்தனமாக பாண்டவர்களின் ராஜ்யத்தை அபகரித்து அதை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றான். இந்த ராஜ்யத்துக்கு சொந்தக்காரர்கள் காட்டில் எங்கெங்கோ அலைந்து திரிந்து கொண்டிருக்கும் பொழுது துரியோதனன் பட்டாடை அணிந்து கொண்டு சுகவாசியாக இருக்கின்றான். பாண்டவர்கள் போதாத உணவு அருந்தி தவித்துக் கொண்டிருக்கும் பொழுது துரியோதனன் ராஜபோகத்தில் மூழ்கி இருக்கின்றான். தர்மம் கஷ்டதிசையில் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது அதர்மம் தலைதூக்கி வருகிறது. பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்டவளின் உறவினர்களாகிய நாம் வலிமையற்றவர்களாக இருந்து இந்த அக்கிரமங்களை சகித்துக் கொண்டு வருகின்றோம் என்றும் இந்த சூழ்நிலை தமக்கு பிடிக்கவில்லை என்றும் கூறினான்.

பலராமன் கூறியதை கேட்ட சாத்யகி கோபத்துடன் கௌரவர்கள் செய்யும் அனைத்து செயலுக்கும் நாம் அனுமதி தருவது சரியாகாது. கொடுமை வாய்ந்த கௌரவர்களை அறவே தோற்கடிக்கும் வல்லமை விருஷ்ணிகளிடத்தில் இருக்கிறது. நாம் படையெடுத்துச் சென்று அபகரிக்கப்பட்ட ராஜ்யத்தை மீட்டெடுத்து அபிமன்யுவை அதற்கு தற்காலிக மன்னனாக நியமித்து வைப்போம். தான் கொடுத்துள்ள வாக்குகள் அனைத்தையும் பூர்த்தி செய்த பிறகு யுதிஷ்டிரன் திரும்பி வரும் வரையில் அவனுக்கு வாரிசாக இருக்கின்ற அபிமன்யு மன்னன் ஸ்தானத்தில் இருக்கட்டும் என்றாள்.

கிருஷ்ணர் புன்னகையுடன் பாண்டவர்களுக்கும் நமக்கும் உள்ள உறவு யாராலும் அழிக்க முடியாது. இது யுதிஷ்டிரன் பொறுமையோடு காத்திருக்கும் பொழுது அவனுடைய திட்டத்தில் நாம் அவசரப்பட்டு நுழைந்து அதற்கு கேடு ஏதும் செய்யலாகாது. அவருக்கு நாடாள்வதை விட மேலானது சத்தியவிரதம். இப்பொழுது அவர் வலிமையற்று இருப்பவர் போன்று தென்படுகிறார். தக்க காலம் வருகிற பொழுது அவர் திறமையை வெளிப்படுத்துவார். அப்போது நாம் அனைவரும் அவரோடு சேர்ந்து கொள்வோம் என்றார். யுதிஷ்டிரனுக்கு பெருமகிழ்வு உண்டாயிற்று. ஏனென்றால் அவன் எண்ணத்தை கிருஷ்ணன் சரியாக அறிந்து கொண்டிருந்தான். விருஷ்ணிகளோடு சிறிதுகாலம் உறவாடிய பிறகு பாண்டவர்கள் பிரபாஸை விட்டு புறப்பட்டு வடதிசை நோக்கிச் சென்றனர்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -6

பிருஹதஸ்வரர் என்னும் மாமுனிவர் வனவாசத்தில் இருந்த யுதிஷ்டிரனை பார்க்க காம்யக வனத்திற்கு வந்தார். யுதிஷ்டிரன் அவருக்குத் தக்க மரியாதையுடன் வழிபாடுகள் செய்து வரவேற்றான். சூதாட்டத்தில் இறங்கி தனக்குத் தானே கேடுகளை வரவழைத்துக் கொண்ட மன்னர்களில் மிகவும் கடைபட்டவன் நான் தான் என்று முனிவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அதற்கு முனிவர் சூதாட்ட செயலில் இறங்கி தனக்குத் தானே கேடுகளை வரவழைத்துக்கொண்ட நளனுடைய நிலைமை இதைவிட பரிதாபகரமானது என்றார். பிருஹதஸ்வரர் முனிவர் கெட்டுப்போன நளமகாராஜன் பற்றியும் தமயந்தி மகாராணியை பற்றியும் அவர்களின் வரலாற்றை விரிவாக எடுத்து விளக்கி சொன்னார். பிறகு தன் சொந்த முயற்சியாலேயே நளன் ராஜ்யத்தை மீட்டெடுத்த வரலாற்றைப் பற்றியும் அவர் விளக்கினார். நளனுடைய வீழ்ச்சி கொடியதிலும் கொடியது. அத்தகைய நளனுக்கு விமோசனம் கிடைத்தது என்றால் தனக்கு ஏன் விமோசனம் கிடைக்காது என்று யுதிஷ்டிரன் யோசித்தான். பிருஹதஸ்வரர் நளனைப்பற்றி கூறிய கருத்துக்கள் யுதிஷ்டிரனுக்கு மிகவும் ஊக்கம் தந்தது. தனக்கும் தன் சகோதரர்களுக்கும் நல்ல காலம் வரும் காலத்தை ஆவலோடு எதிர்பார்த்தான். பிருஹதஸ்வரர் யுதிஷ்டிரனிடம் இருந்து விடைபெற்றார்.

அர்ஜுனன் தங்களை விட்டு பிரிந்து போய் நெடு நாட்கள் ஆயிற்று என்று பாண்டவ சகோதரர்கள் அவனைக் குறித்து ஏக்கம் கொண்டனர். அவன் எங்கே போயிருக்க கூடும் என்று அவர்கள் எண்ணிக்கொண்டு இருந்த போது இந்திரனால் அனுப்பப்பட்ட ரோமச மஹரிஷி பாண்டவர்கள் முன் தோன்றினார். தான் இந்திரலோகத்தில் சென்றிருந்த வரலாற்றை விளக்கினார் விண்ணுலகில் அர்ஜுனன் அடைந்து வந்த முன்னேற்றங்கள் அனைத்தையும் தெளிவாக விளக்கினார். அதைக்கேட்ட பாண்டவ சகோதரர்களுக்கு மட்டில்லா மகிழ்ச்சி உண்டாயிற்று. புதிய ஊக்கம் அவர்களிடத்தில் உருவெடுத்தது. நெடுநாள் தங்களை விட்டுப் பிரிந்து போயிருந்த சகோதரனைப் பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ள அவர்கள் ஆவலுடன் ரோமச மஹரிஷியிடம் கேள்விகள் கேட்டனர். கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் விடை கொடுத்தார் ரோமச மஹரிஷி. இந்திரலோகத்தில் அர்ஜுனன் அடைந்து வந்த பயிற்சிகள் யாவும் பூர்த்தியானவுடன் அவன் திரும்பி தங்களுடன் வந்து சேர்வான். அதற்குள்ளாக நிலவுலகில் பாண்டவ சகோதரர்கள் தீர்த்த யாத்திரை செய்வது நன்மை பயக்கும் என்று விண்ணுலக வேந்தன் இந்திரன் சொல்லி அனுப்பிய செய்தியும் அவர்களுக்கு ரோமச மஹரிஷி கூறினார். தலயாத்திரை போகின்ற அவர்களுக்கு அரிய பெரிய மேலான கருத்துக்கள் உள்ளத்தில் இடம் பெறும் நல்ல எண்ணங்கள் உள்ளத்தை விட்டு அகன்று போவதில்லை. ஆகவே புண்ணிய ஷேத்திரங்கள் தீர்த்த யாத்திரை போகின்ற கருத்தை யுதிஷ்டிரன் மிகவும் வரவேற்றான்.

புண்ணிய பூமியாகிய பாரதத்தில் புண்ணிய க்ஷேத்திரங்கள் ஏராளமாக அமைந்திருக்கின்றன. முனிவர்கள் தவம் செய்த இடம். யோகம் செய்வதற்கு ஏதுவாக இருந்த தபோவனங்கள். ஆத்ம சாதனைகள் பல புரிந்து இறைவனை அடைவதற்கு பயன்பட்ட ஆசிரமங்கள் புண்ணிய நதிக்கரைகள் மலைகள் கோவில் ஆகிய இடங்களுக்கு பாண்டவ சகோதரர்கள் கடினமான விரதம் இருந்து பக்திபூர்வமாக தீர்த்த யாத்திரை செய்தார்கள்.

தென்னாடுடைய சிவனே போற்றி

தென்னாடுடைய சிவனே போற்றி அப்படினா வடநாட்டு சிவன்? ஏன் அப்படிச் சொல்கிறார்கள்.

தென்னாட்டு சிவன் தான் அசல். வடநாட்டு சிவன் அப்படியல்ல. ஏனெனில் வடநாட்டு சிவன் ருத்திரனாக மட்டுமே பாவிக்கப்படுகிறார். தென்னாட்டின் முக்கிய சிவன் கோவில்கள் அனைத்தும் ஆகம விதிப்படி கட்டப்பட்டவை. வடநாட்டில் அப்படி அல்ல. இங்கு கோவில் கருவறையில் லிங்கத்தை தொட்டு வழிபட உரிமையில்லை. வடநாட்டில் தொட்டு வழிபடலாம். காசியில் உள்ள சிவன் கோவில் உட்பட. அதற்கு அங்கு தீண்டாமை இல்லை என்று அர்த்தமல்ல. சிவனே அங்கு தீண்டாதவர். ஏனெனில் படைப்புத்தொழிலை பிரம்மாவும், காக்கும் தொழிலை விஷ்ணுவும், அழிக்கும் தொழிலை சிவனும் செய்வதாக கூறுவது வடநாட்டு மரபு.

தென்னாட்டில் எல்லாத்தொழிலையும் (முத்தொழில்) சிவனே செய்கிறார் என்று நம்புவது தென்னாட்டு சைவ சித்தாந்த மரபு. இங்கு படைத்தல், காத்தல், அழித்தல் போக மேலும் இரண்டு தொழிலை சிவன் செய்கிறார். அது மறைத்தல்,அருளல். எனவே தென்னாட்டு சிவன் ஐந்தொழில் செய்பவராக இங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளார். இந்த ஐந்தொழிலை ஆற்றுவதை விளக்குவது தான் சிதம்பரம் கோவில் நடராஜர் வடிவம். நடனத்தின் அரசனாக சிவனை பார்ப்பது தென்னாட்டில் மட்டுமே.

எனவே தென்னாடுடைய சிவனே போற்றி.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -5

இந்திரன் அர்ஜூனனிடம் தெய்வீக ஆயுதங்களை உபயோகிக்கும் முறையை கற்றுக்கொள்ள ஐந்து வருட காலம் இந்திரலோகத்தில் இருந்து பயிற்சி பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அர்ஜூனனும் தனது சகோதரர்களுக்கு தாம் இங்கு பாதுகாப்பாக இருப்பதை தெரியப்படுத்தி விட்டால் ஐந்து வருடகாலம் இங்கு இருப்பதாக உறுதியளித்தான். மேலும் லலித கலைகள் மற்றும் நடனம் சங்கீதத்திலும் அவன் பயிற்சி பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தேவலோகத்தில் கலைகள் யாவற்றிலும் சிறந்தவரான சித்திரசேனன் என்பவரிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில் இந்திரலோகத்தில் அர்ஜுனன் நலமாக இருக்கிறான் என்ற செய்தியை பாண்டவர் சகோதரர்களுக்கு தெரிவிப்பதற்காக லோமஸ ரிஷி இந்திரனால் மண்ணுலகிற்கு அனுப்பப்பட்டார். ஐந்து வருடகாலம் பயிற்சிகள் யாவும் முற்றுப் பெற்ற பிறகு சித்திரசேனன் அர்ஜுனனை ஒரு நெருக்கடியான சோதனைக்கு ஆளாக்கினார்.

ஊர்வசி என்பவள் தேவலோகத்துப் பெண் அவள் எப்பொழுதும் தேவலோகத்தில் இருப்பவள். அவளுடைய அசாதாரணமான அழகை கண்டு விண்ணவர்களையும் மண்ணுலகத்தவரையும் காம வலையில் மயக்கி அவர்களை சோதனைக்குள்ளாக்குவது அவளது வேலை. அர்ஜுனனை காதல் வலையில் அகப்படும் தூண்டுதல் வேலைக்கு அந்த தேவலோக பெண் நியமிக்கப்பட்டாள். அவளும் அதற்கு இசைந்தாள். ஆனால் அர்ஜுனன் அவளை தன் அன்னையாக போற்றி வழிபட்டான். அதனால் அவளுடைய திட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்தது. இத்தகைய தோல்வி அவளுக்கு நிகழ்ந்தது இதுவே முதல் தடவை ஆகவே அவள் மிகவும் கோபத்திற்கு ஆளானாள். அத்தகைய கோபத்துடன் அவள் அர்ஜுனனை ஒரு பேடுவாக மாறிப்போகும் படி சாபமிட்டாள். பெண்களுக்கு முன்னிலையில் அவன் நடனம் புரிந்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்ய வேண்டும். இதுவே அப்பெண் அர்ஜுனனை கிட்ட சாபமாகும்.

அர்ஜுனன் திகைத்துப் போனான். தன்னுடைய தந்தையான இந்திரனிடம் தனக்கு நிகழ்ந்த பரிதாபகரமான நிலையை தெரிவித்தான். இந்திரன் ஊர்வசியை தன் முன்னிலைக்கு வரவழைத்தான். அவளின் சாபம் வீண் போகாமல் சாபத்தில் ஒரு சிறிய மாறுதலை அமைக்கும்படி இந்திரன் வேண்டினான். அதன் விளைவாக ஒரு திருத்தம் செய்தாள். சாபத்திற்கு ஆளான அர்ஜூனன் தேவை ஏற்படும்பொழுது அந்த சாபம் அவனை ஒரு ஆண்டுக்கு மட்டும் வந்து பிடித்துக் கொள்ளும். அதன் பிறகு மீண்டும் பழைய உருவத்திற்கு அர்ஜூனன் மாறி விடுவான். இந்த சாபத்தை அக்ஞான வாசத்தின் போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இந்திரன் அர்ஜுனனுக்கு ஆறுதல் கூறினான். இது சாபம் போன்று தென்பட்டாலும் ஒரு வருட அக்ஞான காலத்தில் மறைந்திருக்க நல்ல வாய்ப்பு என்று கருதி அர்ஜூனன் ஏற்றுக்கொண்டான். முற்றிலும் பரிபக்குவம் அடைந்திருக்கும் ரிஷிகளிடத்தில் காணப்படும் தெய்வீகத் தன்மை வாய்ந்த புலனடக்கத்தை பெற்றுருப்பதாக இந்திரனும் சித்திரசேனனும் அர்ஜூனன் பெரிதும் பாராட்டினர்.